Wednesday, September 27, 2017

அஸ்தினாபுரம் - ஜோ டி குருஸ்

Image result for அஸ்தினாபுரம் நாவல்

ஒரு நாவலும் கதை மாந்தர்களும் ஒன்றுடன் ஒன்றாகக் கலந்திருப்பார்கள்.
அந்த குறிப்பிட்ட நாவலில் அக்கதை மாந்தர் இல்லை என்றால் அந்த நாவல் இல்லை., கதையின் ஜீவனாக அக்கதை மாந்தர்களே இருப்பார்கள். ஒருவகையில் அக்கதை மாந்தர்களைச் சுற்றியே கதைக்களமும் கதையும் நிகழ்வுகளும் பின்னிப் பிணைந்திருக்கும்.
காலமும் களமும் அக்கதை மாந்தரின் ஜீவனுக்கு உயிரூட்டும் ரத்தமும் சதையுமாக கதையுடன் கலந்திருக்கும். இப்படியான கதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.
ஆனால் இப்புரிதல்களைத் தாண்டி அண்மையில்
இன்னொரு தளத்திற்கு என்னை அழைத்துச் சென்றதில்
 அஸ்தினாபுரத்தின் ஜோ டி குருஸ் மிக முக்கியமானவர்.
குருஸ் அவர்களின் மூன்றாவது நாவல்.

 இத்தலைப்புக்கும் நாவலுக்கும் எதாவது
நேரடி தொடர்பு இருக்கிறதா என்று கவனித்தால்
அப்படி வெளிப்படையாக எதுவும் தென்படவில்லை,
ஆனால் ஒட்டுமொத்த வாசிப்புக்குப் பிறகும் கடலோடி சமூகமும்
அவர்களின் வாழ்வும் அஸ்தினாபுரமாக விரிகிறது.
 அவர்கள் தன் கவசக்குண்டலத்தையும்
தானமாகக் கொடுக்கும் கர்ணனின் எச்சமாக வாழ்க்கையை தானமாகக் கொடுத்துவிட்டு கடலலையில் மிதந்து தவிக்கிறார்கள்.

எந்த ஒரு கதைப்பாத்திரத்தின் கம்பீரமோ நெகிழ்வோ
 கட்டமைப்போ இல்லை.
கடல் சார் வாழ்க்கையின் அடுத்த நகர்வாக இருக்கும்
 "கார்கோ" ஏற்றுமதி இறக்குமதி
துறைமுக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும்
கதைப்பாத்திரமாக கம்பீரமாக கதையில் நடமாடும்
மனிதர்களையும் கடந்த ஜீவனாக கடலலையில் மிதக்கிறது.
லோட் ஏற்றும் கனரக லாரிகளும் லாரி ஓட்டுநர்களும்
 பாலங்களும் அவை சார்ந்த அறிவும் தெளிவும் .. 
என்று வாசகன் அறியாத சில பக்கங்களில்
வெளிச்சத்தைப் பீச்சுகிறது அஸ்தினாபுரத்தின் கண்டெய்னர்கள்.

கிரனெட் ஏற்றுமதி இறக்குமதியிலும் சரி, ராட்சத
காற்றாடிகளின் கப்பலில் ஏற்றுவதிலும் சரி ஏற்படும்
 உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் வரை கதை அலசுகிறது.
Non-fiction தரவுகளை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நாவல்
 ஆங்காங்கே எழுத்தாளரின் சுய அனுபவங்கள் துணுக்குகளாக 
ஒட்டியும் ஒட்டாமலும் கலந்திருக்கின்றன. எடுத்தவுடன் வாசித்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்க
வேண்டும் என்ற பதட்டத்தை அஸ்தினாபுரம் தரவில்லை.
 சில பக்கங்களைப் புரட்டி விட்டு போகலாம்.
 சில பக்கங்களை விட்டு விடலாம்.
எப்படி விருப்பமோ  அப்படி வாசிக்கலாம்!
கார்கோவில் கருவாடு தான் மணக்க வேண்டும் என்பதில்லையே.
கிரனெட் கற்களும் ஏறத்தான் செய்கின்றன  யோ யோ கிரேன்களின்
இணைப்பு உதவியுடன்.

Saturday, September 23, 2017

உன்னால் முடியும் தம்பி ..ஒரிஜினலும் சினிமாவும்

உன்னால் முடியும் தம்பி தம்பி..
Image result for எம் எஸ் உதயமூர்த்தி
எம்.எஸ். உதயமூர்த்தியின் தாரகமந்திரம்.
தன்முனைப்பு கருத்துகளை உள்ளடக்கிய
அவருடைய கட்டுரைகள் தொடராக வார இதழ்களில் வெளிவந்தன.
இவர் எழுதிய "எண்ணங்கள் " என்ற புத்தகம்
அந்தக் காலத்திலேயே 10 இலட்சம் பிரதிகள்
விற்றது  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இவர் கருத்துகளுக்கு அக்காலத்தில்
இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
 நதிகளின் இணைப்பு என்ற குரல் பொதுஜன ஊடகத்தில்
பரவலாக பேசப்பட்டதற்கு  முக்கியமான காரணமாக இருந்தார்.
அரசியல் சாக்கடை அல்ல, நல்லவர்கள் ஒதுங்கி இருப்பதால்
 ஏற்பட்ட அவலம் தான் இன்றைய கேடுகெட்ட அரசியலுக்கு
காரணம் என்று இளைஞர்களிடம் எடுத்துரைத்தார்.
" மக்கள் சக்தி " என்ற இயக்கம் கண்டார்.
மதுரை மத்திய தொகுதியில் தன் இயக்கம் சார்பாக
தேர்தலில் நின்றார். தன் தேர்தல் பிரச்சாரத்தில்
"என்னிடம் நிறைய பணம் இருக்கிறது
ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன்,
என்னிடம் உள்ள ஆற்றலை, அறிவை உங்களுக்கு
 செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை.
 என்னைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் ஒரு நேர்மையாளனை
 தேர்ந்து எடுக்கிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம்
 நதிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற குரலை
 வலுப்படுத்துகிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம்
 இந்த நாட்டிற்கு நல்ல பல இளைஞர்களை வருவதற்கான
 பாதையை அமைத்து தருகிறீர்கள்" என்று பேசினார்.
வழக்கம் போல நம் வாக்காளர் பெருமக்கள்
அவரைத் தோற்கடித்தார்கள்.
தமிழக அரசியல் தலைவர்களான அறிஞர் அண்ணா,
கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன்
இணக்கமான தொடர்பை வைத்திருந்தார்.
------
என் திடீர்னு எம் எஸ் உதயமூர்த்தி ?
நினைவுக்கு வந்திட்டாருனு கேட்காதீர்கள்.
பெரிசா ஒன்னுமில்ல. நேற்று ராஜ் டிவியில்
கமலஹாசன் உதயமூர்த்தி என்ற பெயரில்
நடித்த பாலசந்தரின்  "உன்னால் முடியும் தம்பி" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. எப்படியோரிமோட் அதில்
மாட்டிக்கொண்டதால் உதயமூர்த்தி நினைவுக்கு வந்துவிட்டார்.
இப்போ இருக்கிற நிலையில கமலின்
 "உன்னால் முடியும் தம்பி" திரைப்படத்தைக் காட்டுவது
 ஏதேச்சையாக நடந்ததா.. இல்ல ..
வேறு எதுவும் காரணத்தோட நடக்குதா..!
ரஜினி அரசியல் பிரவேசத்தைக் கொண்டாடிய மக்களுக்கும்
கமலின் அரசியல் டுவிட்டர்களைக் கொண்டாடும் கூட்டத்திற்கும்
 நிறைய வேறுபாடு இருக்கிறது  என்பது அடிக்கடி
என் நினைவில் வருகிறது. தவிர்க்க முடியவில்லை.


அண்ணாவின் தம்பிகள்
கலைஞரின் உடன்பிறப்பே
எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களே
இதே வரிசையில் போகிறதா..
உன்னால் முடியும் தம்பி, தம்பி...
கருப்புக்குள் காவியும் அடக்கம் என்று
விளக்கெண்ணெய் அரசியல் பேசும்
உலகநாயகனுக்கு ஊடகங்கள் ஏன் வெண்சாமரம் வீசுகின்றன!?

Wednesday, September 20, 2017

தேவியும் காமட்டிபுரமும்

Image result for navratri durga paintings

காமட்டிபுரத்தின் கதவுகள் திறந்துவிட்டன.
நவகன்னியர்கள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்
தேவியின் சிலைகள் கொட்டும் மழையில்
ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படுகின்றன
ஆடை அலங்காரங்களுடன் பவனிவரும் அவள்
 கருப்பை மண்ணில் காமட்டிபுரத்தின்
 இரவுகள் விழித்திருக்கின்றன.
நிர்வாணமாய் விரியும் அவள் படுக்கை அறையிலிருந்து
எட்டிப் பார்க்கிறது தேவியின் சூலம்.
காமாட்டிபுர அழகிகளின் கைப்பிடி மண்ணுக்காக
விரதங்களுடன் கழிகிறது உங்கள் நாட்கள்.
தேவி அங்கிருந்துதான் புறப்படுகிறாள்.
தேவி , அங்கிருந்துதான் புறப்படுகிறாள்.
-----
நவராத்திரி தேவியின் சிலைகள் செய்வதற்கு பிடிமண்
 காமாட்டிபுரத்தைப் போல சிவப்புவிளக்கு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களிடமிருந்து
பெறப்படுகிறது என்ற செய்தியை முதன் முதலில்
 இந்தி திரைப்படங்கள் மூலமாக அறிந்து
அதன் பின் அது குறித்த தேடலில் பல்வேறு சுவையான
 தகவல்களை நம் அன்னையர் சமூகத்தின்
வாழ்வியல் எச்சங்களைக் கண்டடைந்தேன்.

நம் சமூகத்தில் அன்னை மட்டுமே தலைமைப் பொறுப்பில்
இருந்தக் காலத்தில்,  வேட்டைச் சமூகத்தில் ஏற்பட்ட உயிரழப்புகளை ஈடு செய்யும் சக்தியாக பெண் மட்டுமே பார்க்கப்பட்ட காலத்தில்
அவள் வழிபாட்டுகுரியவள். சக்தி பீடம் அவள்.
குழந்தைப் பேறுக்கு அவள் மட்டும் பொறுப்பல்ல
 என்ற ஏதோ ஒரு புரிதலில் ஆண் வேட்டைச்சமூகத்தின்
 தலைவனாகிறான். அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத
 பெண்கள் விலகி நின்றதும் விலக்கப்பட்டதும் நடந்தது. அப்படி விலக்கப்பட்டவர்களில் ஆடல் பாடல் கலைகளில் வல்லவர்களான பெண்கள்  தனித்து நின்றார்கள். இப்படித்தான் தேவதாசிகள்
உருவானர்கள். அதன் பின் அதுவே பிறப்பின் வழி அடையாளமாகி மணிமேகலைகள் உருவான  கதை நிகழ்ந்தது. அந்தப் பெண்களின் தலைமைத்துவ கலாச்சாரத்தின் எச்சமாகத்தான்
அவள் கைப்பிடி மண்ணில் தேவி வலம் வருகிறாள்.
 இதைத்தான் வங்க மொழியில்
"ஒதுக்கி வைக்கப்பட்ட பிரதேசத்தின் புண்ணிய மண்" என்று சொல்லுகிறார்கள்.
(The soil is known as ‘punya mati’ and the place where a prostitute resides is known as ‘nishiddho pallis’ in Bengali meaning forbidden territories.)

இன்னொரு சாரார், பாலியல் தொழில் செய்யும் பெண் வீட்டுக் கதவைத் தட்டும் போது அந்த ஆண்களின் புண்ணியங்கள் எல்லாம் அவள் வீட்டு வாசலில் விடைபெறுகின்றன.!
அதனால் தான் அவளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்
அவளிடம் கைநீட்டி கைப்பிடி மண்ணை பிச்சையாகக்
கேட்கிறார்களாம் ஆண்கள்! இந்த ஆண்களின்
புண்ணியக்கதையில் ஆணாதிக்கத்தின் இன்னொரு முகம்தான்
 புனைவாக மாறி இருக்கிறது.

நவராத்திரியில் ஒன்பது வகையான கன்னிப்பெண்களை வழிபடுவது என்பதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நடனமங்கை, மண்டை ஓட்டை வழிபடும் தாந்திரிகி, பாலியல்தொழிலாளி, துணி வெளுப்பவள், சிகை அலங்காரம் செய்பவள், பிராமணப்பெண், சூத்திரப்பெண், யாதவகுலப் பெண், தோட்டவேலை செய்பவள்... இந்த  நவகன்னியர்களை வழிபாடு செய்தால் தான்
துர்க்காபூஜை  நிறைவுப் பெறும். இந்த வழக்கமே இன்று 9 கன்னிப்பெண்களை
வழிபடுவதாக மாறி இருக்கிறது.
națī kapālikā veśyā rajakī nāpitāńganā | brāhmaņī śudrakańyā ca tathā gopālakańyakā || mālākārasya kańyā ca nava kańyā prakīrtitā ||"(Guptasadhana Tantra 1:12)

வடநாட்டில் கொண்டாடப்படும் துர்க்காவும்
தமிழ்நாட்டின் கொற்றவையும்
வேறு வேறு பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு
 "சக்திவழிபாடு" என்ற ஒற்றைப் புள்ளியில் கலந்தவை
என்பது இன்னொரு தனி வரலாறு. (இது குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரை
சில ஆண்டுகளுக்கு முன்  புதுவிசை இதழில் வெளிவந்ததிருந்தது. )

தமிழ் நாட்டில் 99% அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி
அமர்ந்த்திருக்கிறது என்றும் அதன் காரணத்தையும் விளக்குகிறார் தொ.பரமசிவம் அவர்கள்.   பழைய தமிழகம் எனபது கேரளத்தையும்
 சேர்த்து அமைந்தது. நம் மண்ணைச் சுற்றி மூன்று பக்கமும் கடலால் சூழ்ப்பட்டது. ஆபத்து என்று ஒன்று வந்தால் அது வடக்கு இருந்துதான் வரவேண்டும். தெய்வம் வடக்கு  திசை நோக்கி தன் மக்களை காக்க
 ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பது தொல்வரலாற்று உண்மை என்கிறார்.
பொதுவாக அம்மன் போன்ற தாய்தெய்வ வழிப்பாடுகளில் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரே பூசாரியாக உள்ளனர்.
உலகம்மன், முத்தாரம்மன், மாசானி அம்மன், லோக நாயகி
 என வட்டாத்திற்கு வட்டாரம் தெய்வங்கள் மாறுபடும்.
இருந்தாலும் தாய்த்தெய்வத்திற்கு தனித்தன்மைகள் உண்டு.
 வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல்,
 பெரிய பொட்டு, மிரட்டும் விழி. வழிப்பாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாடலும், இரத்தப்பலியும்
 இவற்றின் தனிக்கூறுகளாகும்.
காவல் தெய்வமாக இருந்த தாய்வழிபாடு
 போர்த்தெய்வ வழிபாடாக மாற்றம் பெறுவதை
 கலிங்கத்துப் பரணியில் காணலாம். ..

தேவியர் இங்கிருந்து தான் புறப்படுகிறார்கள்.
பெண்ணியத்தின் உடல்மொழி நவராத்திரியின் சடங்குகளுக்குள் புதைக்கபப்ட்டுவிட்டது.

Tuesday, September 19, 2017

"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்

"நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இரண்டு தமிழ்நாடு இருக்குங்கேன்.
ஒன்று செந்தமிழ்நாடு.. இதில் தமிழ் தவிர மற்றவை அனைத்தும்
சீரும் சிறப்புமாக இருக்கும்.
கட்டணம் கட்டி அனைத்து வசதிகளுடனும் இளைய சமுதாயம்
தன்னை நுழைவு/போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளும்.
இன்னோரு கொடுந்தமிழ் நாடு. இந்த மக்களிடம் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் அவர்கள் செத்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி என்ற பெயரில்
தரமில்லாத கல்வியும் மனப்பாடக் கல்வியும் கற்பிக்கப்படும்.
அவர்களுக்கு நுழைவு/போட்டித் தேர்வுகள் தேவையில்லை
என்று மாநில அரசும் மத்திய அரசும் தீர்மானித்து விட்டது.
நமக்கும் அவர்களைப் பற்றி கவலை இருந்ததே இல்லை.
ஆனால்  நம்ம பிள்ளைக அனைத்து வசதிகளுடன் இருக்கும்
 பள்ளிக்கு பெருந்தொகையை கட்டணமாகக் கட்டி
பொறந்து அம்மானு சொல்றதுக்கு
முன்பே நுழைவு/போட்டித் தேர்வுக்கு தயாராக்கும்
வித்தையை செய்யும் மந்திரக்கோலை எப்படியும்
வாங்கி விடுகிறோம். நமக்கு இதில் வெட்கமில்லை.
இப்போது ... நம்மைப் போராளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக
"நீட் அனிதா " போஸ்டர்களுடன் அலைகிறோம்.

1976ல் நெருக்கடி நிலைமை காலத்தில் கல்வி
மாநிலப்பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு
வந்தப் போது நமக்கு அதைப் பற்றி கவலைப்பட நேரமில்லை.
மாநில சுயாட்சி பேசிய அரசியல் கட்சிகளுக்கு மாநிலங்களின் இறையாண்மையை, மாநில மக்களின் உரிமையை
மத்திய அரசு தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருகிறது
என்ற துளி அளவு கூட சலனம் ஏற்படவில்லை!

கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதை நியாயப்படுத்தும் வகையில்
ராஜீவ் காந்தி அரசு 1986-ல் ‘அரசே கல்விச் சுமையை ஏற்க முடியாது.
தனிநபர்களும் பங்கேற்கும் வண்ணம் உயர்கல்வி நிறுவனங்களை
உருவாக்குவதே அரசின் லட்சியம்’ என்ற புதிய கல்வி கொள்கையைக் கொண்டுவந்தப் போது
நம் பொதுவுடமை தோழர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை!

அரசு நடத்தும் பள்ளிகளில் 1400 பெண்கள் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
4000 ஆண்கள் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை.
40% பள்ளிகளில் மேற்கூரை இல்லை
77% பள்ளிகளில் பயிற்சிக்கூடங்கள், அதாவது லேப்ஸ் , மற்றும் கணினி வசதிகள் இல்லை.
2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 20 மாணவர்களுக்கும் குறைவாகவே இருக்கிறார்கள்.
பல பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் 1600 அரசாங்கப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
 இதே வேகத்தில் போனால் வரும் 3 ஆண்டுகளுக்குள்
 2000க்கும் மேற்பட்ட அரசாங்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா
 நடக்கப்போகிறது.
இவ்வளவும் நடந்தப் போது நம் சமூகத்தில்
 எந்தச் சலனமும் ஏற்படவில்லை.

இப்போது நாம் "நீட் அனிதா" போஸ்டர்களுடன் அலைந்து கொண்டிருக்கிறோம்.




Saturday, September 16, 2017

தந்தை பெரியார் உற்சவங்கள்

Image result for தந்தை பெரியார்

பெரியார் உற்சவத்தில் பெரியார் சிலைகள்

திராவிடம் என்று பேசியவர்கள்
 பெரியாருக்கு காவடி எடுத்தார்கள்.
விழாக்கால உற்சவத்தில் தமிழகம் எங்கும்
 பெரியார் சிலைகள்.
சிலை உடைப்புப் பாரம்பரியத்தை ஒரு போராட்ட
ஆயுதமாக்கிய பெரியார்
 சிலையாக , ஒரு காலக்கட்டத்தின் கனவாக,
ஏன் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பிம்பமாக
 சிலரின் அரசியல் ஆசைகளுக்கும் வெற்றிகளுக்கும்
 பயன்படும் ஆகக்சிறந்த அடையாளமாக (லேபிள்)
 மாற்றப் பட்டிருக்கிறார்.
பெரியாரின் கருத்துகளை நீர்த்துப் போகச்செய்ததன் மூலம்
பெரியாரை நம் கடந்தகாலத்தின் குறியீடாக மாற்றும்
முயற்சிகள் தான் பெரியார் உற்சவங்கள்.
 இன்றைய நவீன அரசியல் முதலாளிகளின்
வழிபாட்டு கடவுளாக தந்தை பெரியார்  ..
பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறார்.. ..
என்று அடிக்கடி சொல்கிறவர்களுக்கு
பெரியார் என்ற சொல் வெறும் அடையாளமா
அல்லது செயல்பாடா?
பெரியார் உற்சவத்தில் பெரியாரின் சிலைகள் மாலைகளுடன்.

Friday, September 8, 2017

பா.ரஞ்சித் VS அமீர்

Image result for பா ரஞ்சித் அமீர்

பா. ரஞ்சித் சொன்னதற்கு அக்கூட்டத்தில் இருந்த 
அமீர் சொன்னதை  ஏன் அனைவரும் "மோதல்" என்று சொல்லி 
இருவரையும் எதிரெதிர் திசையில் நிறுத்துகிறார்கள் ? 
அனிதாவை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளமாகவும்
 தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே 
சமூக நீதிக்கான தற்கொலைகள் தொடர்கின்றன 
என்ற நிதர்சனமான உண்மையை ரஞ்சித் பேசியது நியாயமானது
அவருடைய அனுபவத்திலிருந்தும் காயங்களிலிருந்தும்
 வெளிவந்த வார்த்தைகள் அவை.
 அதே நேரத்தில் அதைக் கேட்டுக்கொண்டிருந்த அமீர்
அனிதா ஒரு சாதியின் அடையாளம் மட்டுமல்ல, 
அவள் தமிழ்ச்சமூகத்தின் அடையாளம் என்று சொன்னது
இன்றைய அரசியல் சூழ்நிலையில் ,  அத்தருணத்தில்
 மிகவும் சரியான பார்வை. 
அப்படி அமீர் சொல்லி இருக்கவில்லை என்றால் தான்
 அது வருத்தத்திற்குரியது. 
தமிழ்ச் சாதி வெட்கப்பட  வேண்டியது.
ரஞ்சித் , அமீர்... இருவேறு துருவங்கள் அல்ல.
உயிருடன் வாழும் போதே அனிதாக்களுக்கு
சாதி அடையாளங்கள் ஒழிந்து 

தமிழச்சி என்ற அடையாளம் கொடுக்கப்பட வேண்டும். 
அதுமட்டுமே
ரஞ்சித் , அமீர் குரலுக்கான பாதையாக இருக்கும்.

 இருக்க வேண்டும் ..

கவலைக்கிடமான தமிழக அரசியல்


கவலைக்கிடமான தமிழக அரசியல்..
உண்மையில் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம்
 ஏற்பட்டிருக்கிறது  என்பதை
நேரில் கண்டேன். அரசு நிர்வாகத்தில் ஒரு நிரந்தரமற்ற
 சூழல் காரணமாக செயல்படாத அரசு அலுவலகங்கள்,
  வறட்சியான சூழல்.. நிராசையான வாழ்க்கை.
தண்ணீர் மற்றும் மின்சார மேலாண்மையில் தோற்றுப்போன
 தமிழத்தின் ஆட்சி
எல்லாவற்றையும் அரசியலாக்கி அதில் சுயலாபம்
 அடைய துடிக்கும் அரசியல் வாதிகள்..
பொதுமக்களுக்கு எல்லாம் தெரிகிறது..
எல்லோரையும் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கை
வெற்றிடமாகவே இருக்கிறது.
அதிமுக அரசின் எடப்பாடி, பன்னீர், தினகரன் வகையறாக்கள்
 அடித்த லூட்டி மக்களுக்கு அவர்கள் மீது இருந்த
 துளி நம்பிக்கையும் துடைத்து எடுத்துவிட்டது.
திமுகவின் தலைவர்களை விட அதன் அடிப்பொடிகள்
 அடுத்து அவர்கள் தான் ஆட்சிக்கு வரப்போவதாக இப்போதே திட்டமிட்டுவிட்டார்கள்.
 ஒரு காலத்தில் நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்போது
 அவர் மீது இருந்த நம்பிக்கை கூட
இன்றைய திடீர் அரசியல் நாயகர்களாக வர நினைக்கும் 
உலகநாயகனுக்கோ சூப்பர் ஸ்டாருக்கோ இல்லை,
 இல்லை, இல்லவே இல்லை!
மக்கள் இவர்களின் அரசியல் டிவிட்டர்களையும்
 சந்திப்புகளையும் இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் ஊடகங்கள் அவர்களை எப்படியும்
பெரிய போஸ்டர்களில் காட்டி பிரமாண்டப்படுத்திவிடலாம்
 என்று நினைக்கின்றன.

திமுக வைப் பொறுத்தவரை சிறையிலிருக்கும் சசிகலா மீது வெறுப்பு அரசியல் இல்லை என்பதை அவர்களில் சிலருடன் பேசிய போது
என்னால் புரிந்து கொல்ள முடிந்தது.
அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்களும் ஏற்புடையது தான்.
சென்னையைப் பொறுத்தவரை அதிமுக வுக்கு மாற்றாக
 அடுத்த தேர்தலில் திமுக தான் வரும் என்று உறுதியாக  நடுத்தர வர்க்க
மக்களும் சொல்லவில்லை.  அதைவிட முக்கியமானது செய்தி..
.. சென்னை பயணத்தில்
இது திமுக தலைவரின் குடும்பத்தில் இன்னாரின் சொத்து,
இது இன்னாரின் சொத்து
என்று ஓர் ஆட்டோ , கார் டிரைவர்கள் கூட நமக்கு அடையாளம் காட்டுகிறார்கள்!
எனக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
 தங்கள் வாரிசுகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டாயம் கொண்டுவர வேண்டிய நிலை திமுகவுக்கு வந்துவிட்டது.
ஆனால் அதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா ..?
 என்பது மில்லியன் டாலர் கேள்வி.

மாநில அரசியலையும் மாநில அரசியல் கட்சிகளின்
தலைவர்களையும் சிபிஐ  வட்டத்தில்
சிக்க வைப்பதில் மோதி அரசு எதையும் செய்யும்
 என்ற அச்ச உணர்வு அனைத்து கட்சிகளின்
தலைவர்கள், இரண்டாம் மூன்றாம் நிலை தலைவர்களிடம்
இருக்கிறது. அதுவே அவர்கள் வெளிப்படையான
 எதிர்ப்பைக் காட்ட முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி இருப்பதை
அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.
அவர்களின் விவரிப்புகளை அனுபவங்களை அமைதியாகக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
எங்கிருந்து மோதி அரசுக்கு இந்த அளவுக்கு துணிச்சல்
வந்திருக்கும்?
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகும் அனைத்தையும்
துடைத்துவிட்டு மாபெரும் தேசியத்தலைவரில்
ஒருவராக வலம் வருவதின் பின்னணியில் தான்
மோதி அரசியலையும் அதிகாரத்தையும் புரிந்து
கொள்ள வேண்டும். 

Thursday, September 7, 2017

மகேந்திரமலையும் நானும்


Image result for windmills at kanyakumari
வறண்ட பூமி..

மழைப்பொய்த்த வானம்
கனவாகிக் கலைந்துப் போகும் கருமுகில்கள்
வாடிப்போன கறிவேப்பிலை கன்றுகள்
வெறிச்சோடிப் போயிருக்கும் மாட்டுத்தொழுவங்கள்
இலவச டிவியில் பசி மறக்கும் எம் சனங்கள்
காற்றுக்கு மட்டும் ஆவேசம் அடங்கவில்லை
புழுதிவாரி தூற்றிக்கொண்டிருக்கிறது
மண்ணை  அள்ளி சாபமிடுகிறது
ஆவேசமாக இரவும் பகலும்  அலைமோதுகிறது.
களையிழந்த குமரிக்கடல் காற்றுடன் கைகோத்து
ஓங்காரமிடுகிறது.. ஒப்பாரி வைக்கிறது..
தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய வியாபாரம்.
அவள் வருகிறாள்... போகிறாள்.. வருகிறாள்
பத்திரகாளியும் இசக்கியும் மூன்றுயுகம் கொண்டாளும்
வாடிய அவள் பூக்களின் சாட்சியாக .
இராட்சதக் காற்றாடிகள் எம்மைக் கண்காணிக்கின்றன.
தேசவிரோதி, தீவிரவாதி, தமிழினத்துரோகி..விருதுகள்
எமக்காகக் காத்திருக்கின்றன.
கையறுநிலையில் என்னைப் போலவே மகேந்திரமலையும்.
--------
இனி ஒரு உலகமகாயுத்தம் வரும் என்றால் அது தண்ணீருக்கானதாகவே
இருக்கும் என்பதை உறுதி செய்கிறது எம் தெருக்கோடி தண்ணீர்க்குழாய்கள்.
தென்னை மரத்தை பனை மரம் போல மாறிக்கொள் என்று சொல்லுகிறேன்.
வாடிப்போன மரங்களுக்கும் செடிகளுக்கும் அடுத்தவர் தோட்டத்தில்
அத்துமீறி நுழைந்து திருடிக்கொள் உனக்கான உன் தண்ணீரை.. அது உன் உரிமை என்று சொல்லி இருக்கிறேன். கேட்குமோ இல்லை என்னைப்
பார்த்து நகைக்குமோ.. ? ! வாடிய தோட்டத்தின் காட்சி .. வறண்ட நிலத்தின்
மக்கள்.. 
ஏரிகள் நிரம்பி வழியும் மும்பை பெருநகரில் பெருமூச்சுடன் கழிகிறது
என் நாட்கள். 




Wednesday, August 23, 2017

மணல் கடிகை

Image result for மணல் கடிகை

மணல் கடிகை
அண்மைக் காலத்தில் நம் கண் முன்னாலேயே எத்தனையோ
 மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
தொலைதூரை தொலைபேசி தொடர்புகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் வரிசையில் காத்திருந்து பேசிய காலம் ஒன்றிருந்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அறிவியல் தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையில் நூற்றாண்டு
 கால மாற்றங்களை ஒரு சில ஆண்டுகளில் புரட்டிப்போட்டு செய்து விடுகின்றன. மாற்றங்களின் விளைவுகளைப்
பற்றி நாம் யோசிப்பதற்குள் நம் வாழ்க்கையில் அதன் தாக்கங்கள்
பல்வேறு இடங்களில் புகுந்துவிட்டதை காலம் கடந்து தான் நாம் உணர்கிறோம்.
மும்பை நகரத்தைப் பெருநகரமாக்கிய நூற்பாலைகள்
 மராட்டிய சமூகத்தில் ஏற்படுத்திய
மாற்றங்கள் சமூகநீதி தளத்தில் மிக முக்கியமானவை.
இன்னும் சொல்லப்போனால்,
இந்திய இலக்கிய வரலாற்றில் தலித்திய இலக்கியத்தின்
 தோற்றுவாயாக இந்த ஆலைகளும்
ஆலைகளில் வேலை செய்வதற்காக கிராமங்களிலிருந்து வந்த விளிம்புநிலை மக்களும்.
இந்த ஆலைகள் 1980 வாக்கில் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்தன.
தனியார்மயம் உலகமயம் அவர்களைத் தின்று துப்பி
குப்பைத்தொட்டிகுள் வீசியது.
இதுவும் நடந்தது. நடந்துக்கொண்டிருக்கிறது.
வான் பொய்த்ததோ.. மண்ணின் அரசு பொய்த்ததோ
 இரண்டும் சேர்ந்து செய்த சதியில் விவசாயிகள் தற்கொலையும் அனாதைகளாக பெருநகரத்தின் சாலைகளில்
 அன்றாடக் கூலிகளாக அலையும் நிலையும் ஏற்பட்டது. இத்தனை மாற்றங்களும் சற்றொப்ப ஒரு கால்நூற்றாண்டுக்குள்
 என் கண் முன் நிகழ்ந்துவிட்டன. இந்த மாற்றங்கள் சமூகத்தளத்தில்
 ஆண் பெண் உறவுகளையும் குடும்பம் என்ற நிறுவனத்தின்
 தூண்களையும் ஆட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
நெகிழ்ச்சி தன்மை இருந்தால் மட்டுமே
இருத்தல் இனி சாத்தியப்படும் என்ற நிலைக்கு
மனித உறவுகளைத் தள்ளிவிட்டது.

இப்படியான பின்புலத்தில் எழுதப்பட்ட ஒரு நாவல்
 அண்மையில் நான் வாசித்த "மணல் கடிகை"
தமிழினி பதிப்பகம் மீதும் பதிப்பகத்தின் வசந்தக்குமார் மீதும்
 எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை இப்புதினம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. நாவலாசிரியர்  எம்.கோபாலகிருஷ்ணன் இந்த நாவல் மூலமாக மட்டுமே என் வாசிப்ப்புக்கும் அறிமுகத்திற்கும்
வந்திருக்கிறார்.
திருப்பூர் என்ற தொழில்நகரமே இந்த நாவலின் முதன்மையான கதைப்பாத்திரம். தறி நெய்து கொண்டிருந்த திருப்பூர் எப்படி
 "டாலர் சிட்டியாக" மாற்றம் பெறுகிறது..
தறியில் சட்டைப்போடாமல் வியர்வை நாற்றத்துடன்
இருக்கும் ஆணின் உடலை கலவியில்
வெறுக்கும் பெண்ணுடல் கதையின் ஆரம்பப்புள்ளி. கதை ஓட்டத்தில் கதைக்களமும் கதைக்காலமும்  கதை நிகழ்வுகளைத்
தீர்மானிக்கின்றன. அந்த சூத்திரத்தை மிகவும் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறது இப்புதினம்.
 சமகால அரசியல் கதைக்கருவுக்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது.
 எம் ஜி ஆர் என்ற நிஜக்கதை நாயகன், அக்காலத்தில் வாழ்ந்தப்
பெண்களின் உணர்வுநிலையை எந்தளவுக்குப் பாதித்திருந்தார்
 என்பதை மிகவும் கூர்மையாக
பதிவு செய்திருக்கிறது. புணர்ச்சியில் கண்களை
மூடிக்கொண்டிருக்கும் அவள்களில் மனக்கண்ணில்
 எம்ஜிஆர் மட்டுமே ஆண்மகனாக எப்போதும் இருக்கிறார்.
 அவள்களைத் தொடும் கணவனாகட்டும் காதலனாகட்டும்
 அவள்களின் மனக்கண்ணில் எம்ஜிஆராக மட்டுமே
இருப்பதால் அவன்களின்சுயம் காயப்படுகிறது.
 லிங்கமையவாதம் உடைபடுகிறது.
ஆண் உடலின் ஆதிக்கத்தை பெண்ணின் மவுனங்களே சிதைக்கின்றன.
தொழில் நகரத்தில் இயங்கும் பொதுவுடமை
 இயக்கமும் இலக்கியப் போக்குகளும் கதைப் பாத்திரங்களின் உரையாடல்களின் வழி விவதாங்களை முன் வைக்கின்றன.
"பேசும் போதெல்லாம் புரிகிற  மாதிரி பேசும் நண்பன்,
எழுதும்போது மட்டும் ஏன் இப்படி எழுதுகிறான்"
என்று தன் எழுத்தாள நண்பன்  சண்முகம் (பரதேசி )பற்றி நண்பர்கள்
நினைக்கிறார்கள்.

தெருவிலும் வீடுகளிலும் ஓடிக்கொண்டிருந்த தறிகள்
காணாமல் போகின்றன.
ஆண்களும் பெண்களும் பனியன் கம்பேனிக்கும்
 பிரா கம்பேனிக்கும் வேலைக்குப் போகிறார்கள்.
சனிக்கிழமை சம்பளம் வாங்கியவுடன் கிராமத்திலிருந்து
 வந்த அவர்களுக்கு சில கனவுகள் நனவாகின்றன.
சினிமா தியேட்டருக்கு இரண்டாவது காட்சி படம் பார்க்கப்
போகிறார்கள். இரவும் பகலும் ஆணும் பெண்ணும் இணைந்து வேலைப்பார்க்கும் இடங்களில் பெண்ணுடலின் அருகாமை
ஆணுடலின் அவஸ்தை இரு உடல்களும் தம்தம் பசியைத்
தீர்த்துக் கொள்ளும் தருணங்கள், அதில் காணாமல் போகும் கற்பு
கத்தரிக்காய் தூய்மைவாதங்கள் , திருமணத்திற்கு முன் சகஜமாக எவ்விதமான குற்றவுணர்வுமின்றி ஆண் பெண் உடலுறவு
கொள்ளும் நிலை
 இதனால் விளையும் ஆணின் உளவியல் சிக்கல்கள்
என்று கதை மிகவும் கனமுள்ளதாக  ...

ஆனால் கதை முழுக்கவும் ஆண்களின் பார்வையில் மட்டுமே  ..விரிகிறது.
அதனால் தான் ஆண் தொட்டவுடன் பெண் அவனுடன்
படுத்துவிடுகிறாளோ என்னவோ.. !
இம்மாதிரியான சில சினிமாத்தனமான கற்பனைகளும்
கதையில் உண்டு.

ஒரு தொழில் ஆரம்பம் என்னவெல்லாம் மாற்றங்களைக்
 கொண்டுவரும் என்பதை மிகவும் துல்லியமாக இப்புதினம் பேசுகிறது. பனியன் கம்பேனிகள், அதை ஏற்றுமதி செய்யும்
ஏற்றுமதியாளர்கள், துணி கழிவுகளை வாங்கி மறுசுழற்சி
 செய்பவர்கள்,   சாயபப்ட்டறைகளின் கழிவுகள் கலந்து ஒரு நதிநீரே பாழாகிப்போன அவலம், சிறுசிறு கம்பேனிகளுக்கு
நிதி உதவி அளிக்கும் லேவாதேவி பிசினஸ்,
மாதச்சம்பளக்காரனுக்கு அதீத ஆசையை உருவாக்கும்
சிட்பண்ட்ஸ், சிட்பண்ட் ஏமாற்றுகள், சாலையொர தேநீர்க்கடைகள்,
அங்கே போடப்படும் ஆம்லெட், ஆம்லெட் தேவைக்கான முட்டை,
கோழி வளர்ப்பு .., சிறுதொழில் முதலாளிகள்
பெரும்பணக்காரர்கள் ஆவதும், அவர்கள் தங்கள் அந்தஸ்த்தைக் காட்ட விலையுயர்ந்த கார்களை லோன் போட்டு வாங்குவது, அவர்களுக்கு லோன் கொடுக்க இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிகளின் கிளைகளும் திருப்பூரைத் தேடி வருதல், இந்த மாற்றங்களில் ஒட்டமுடியாமல்
தனித்துவிடப்படும் மனம் ஆன்மிகம் பேசி ஆசிரமம் நிறுவி ..
ஒன்றிலிருந்து ஒன்றாக திருப்பூரைச்
சுற்ரிய மணல் கடிகை.
நாவல் விரும்பி வாசிக்கும் வாசகர்கள்
கட்டாயம் வாசிக்க வேண்டிய புதினத்தில் ஒன்று மணல் கடிகை.
வாழ்த்துகள் நாவலாசிரியர் எம். கோபாலகிருஷணன் அவர்களுக்கு
வெளியீடு : தமிழினி பதிப்பகம்
பக்: 544
விலை ரூ 400.




Sunday, August 20, 2017

கருமுகிலின் நர்த்தனம்

Image result for birds on rainy days

ஆகாயப்பெருவெளி எங்கும்
கருமுகில்கள் உடையும் சப்தம்
கண்களில் வெறியுடன்
காளியின் நர்த்தனம் ஆரம்பித்துவிட்டது.
கழுத்து மாலையின்
மண்டையோடுகள் கூச்சலிடுகின்றன
மின்சாரக்கம்பிகள் அறுந்து  தொங்கும்
இருளின் வெளிச்சத்தில்
தண்டவாளங்கள் தடம் புரள்கின்றன.
உடல்களின் பயணம் முடிந்துவிடுகிறது.
மழைத்துளிகளின் பெருமூச்சில்
மரக்கிளைகள் ஒடிந்து சரிகின்றன.
கிளைகளில் கூடுகட்டியிருந்த பறவைகளைக்
காணவில்லை.
எங்காவது பத்திரமாக பறந்துப் போயிருக்கும்.
இருண்ட வானத்திலிருந்து இறங்கிவந்த
மழைத்துளிகள்
என் கூடாரத்தின் இமைகளை எரிக்கிறது.
எங்கோ கண்ணாடிக் கதவுகள்
நொறுங்கி விழும் ஓசை.
பேய்மழை பேரிரைச்சல்
ஊழிக்கூத்துக்கான ஒத்திகை நடக்கிறது.
கம்பளிப்போர்வையை எடுத்து
இழுத்து மூடிக்கொள்கிறேன்.
எப்போதோ நீ புகைத்த பீடி வாசனையும்
உன் வேர்வையின் நெடியும்
போர்வைக்குள்ளிருந்து..
என் மீது கவிகிறது.
வான் மழைப் போற்றுதும்..
வான்மழைப் போற்றுதும்.

Friday, August 18, 2017

திமுக வின் எதிர்காலம் அதிமுக கையில்...

திமுக வின் எதிர்காலம் அதிமுக கையில் !
அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இரண்டு வகையில் உண்டு.
ஒன்று ஆளுமை மிக்க தலைவர்./ தலைமை வழிபாடு
இன்னொன்று: அரசியல் சித்தாந்தம்.
காங்கிரசில் நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி என்ற பிம்பங்கள்
 தலைமை வழிபாட்டு தளத்தில் இருந்தவர்கள். 
அதன்பின் அந்த இடத்தை ராகுல்காந்தியால் அடைய முடியவில்லை.
 காங்கிரசின் பின்னடைவுக்கு இதுவே மிக முக்கியமான காரணம்.
பிஜேபியைப் பொறுத்தவரையில் நாம் விரும்பாவிட்டாலும் நாம் விரும்பாத
சில அரசியல் சித்தாந்தங்கள்..கொண்டவர்கள். அதாவது
 இந்துத்துவா கோட்பாடுகள் உண்டு. அவர்களிடம் பிற  அரசியல்
கட்சிகளுடன் ஒப்பிடும் போது தலைமை வழிபாடு குறைவு தான்.
. இன்று மோதி மோதி என்று கூட்டம் அலைமோதினாலும்
 நாளையே கூட வாஜ்பாய் அவர்கள்  இன்று இருப்பது போல 
மோதியும் ஒதுங்கி இருக்கும் காலம் வரலாம். 
அப்படி ஒருநிலை வந்துவிடக் கூடாது என்று 
மோதி தனிப்பட்ட முறையில் தன் தலைமையை
ஆகச்சிறந்த பிஜேபி ஆளுமையாகக் காட்டுவதில் முனைப்பாகவும்
 கவனமாகவும் இருக்கிறார். (இதுவும் கவனிக்கப்பட வேண்டியதுதான்)

இடது வலதுசாரித் தோழர்களுக்கு தலைமை வழிபாடு இல்லை.
 தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சிகளை விட தனிமனித
 தலைமை பிம்பங்களுக்கே முக்கியத்துவம் உண்டு. மரியாதை உண்டு.
 திமுக வின்  அறிஞர் அண்ணா, அதன் பின் கலைஞர் கருணாநிதி,
அதிமுக வில் எம்ஜிஆர், ஜெயலலிதா ,
 திராவிட அரசியலுக்கு முன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராச்ர்
.. இவர்கள் அனைவருமே தாம் சார்ந்த அரசியல் கட்சியின்
 மூலம் நுழைந்தவர்கள் தான் என்றாலும் அவர்களுக்கென்று
 தனிப்பட்ட ஆளுமையை வளர்ந்துக் கொண்டவர்கள்.
தனி மனித பிம்பங்களாக சமூகத்தில் கொண்டாடப்பட்டவர்கள். 
அவர்களுடைய பிம்பங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு 
அவர்களின் கட்சி அவர்களின் பிம்பங்களின் சாயலாக இருந்தது.
இப்போது இந்த பிம்பங்களின் இடம் தான் ஒட்டுமொத்தமாக
 காலியாக இருக்கிறது.
திமுக வின் செயல்தலைவர் ... உண்மையில் திமுக வின் 
தலைமைத்துவ பிம்பமா இல்லையா என்பது அவருக்கே 
சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. வாரிசு அரசியலில் அவருடைய இடத்தை வருங்காலம் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
அதிமுக வைப் பொறுத்தவரையில் "ஜெ"வின் மறைவுக்குப் பின்
 தலைமை பிம்பம் .. அந்த இடம் ..  காலியாக இருக்கிறது. 
இனி அந்த இடத்திற்கு எவரும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. 
அதிமுக அரசியல் தன் கட்சிக்கு விசுவாசிகளை வளர்த்த அளவுக்கு
 தலைமைகளை உருவாக்கவில்லை அல்லது உருவாகும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை.
அரசியல் சித்தாந்தங்களைப் பொறுத்தவரை... 
அதிமுக , திமுக இரு கட்சிகளுக்கும் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பது
 என்பதை விட்டால் வேறு என்ன பெரிய அரசியல் சித்தாந்தங்கள் தற்போது 
 நடைமுறையில் இருக்கின்றன என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.
அப்படி ஒன்று இருந்தால் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். 
எனவே தான் திமுக எதிர்ப்பு என்பதை முன்வைத்து அரசியலுக்கு வந்த
 அதிமுக கட்சி அந்த திமுக எதிர்ப்பை விட்டுவிட்டால்
அது என்னவாக இருக்கும்???
எதிர்ப்பதற்கு அதிமுக இல்லை என்றால் திமுக காரர்கள் என்ன செய்வார்கள்?
எதை வைத்து அரசியல் நடத்துவார்கள்?!!

காங்கிரசு அல்லது பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்யலாம். 
செய்வார்களா..?
ஊழல் வழக்குகள், அது இதுனு தலைக்கு மேல் நிறைய சுருக்கு கயிறுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அதாவது தேசியக்கட்சிளாக காங்கிரசும் பிஜேபியும் தமிழகத்தில்
 காலூன்ற முடியாமல் இருந்ததற்கு காரணம் 
தமிழகத்தின் திராவிட அரசியல் மட்டுமல்ல,
 திராவிட அரசியல் கட்சிகள் உருவாக்கிய வலிமையான
 தலைமை பீட வழிபாடுகள் மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கின்றன.

தலைமை பீட வழிபாடுகள் (HERO WORSHIP) தவறு
 என்று நாம் சித்தாந்தம் பேசலாம்.
ஆனால் அவர்கள் தான் தமிழக அரசியலில் தேசியக்கட்சிகள் 
நுழைவதற்கு இடம் கொடுக்காத தடுப்புச் சுவர் போல
 இருந்திருக்கிறார்கள்.
இன்று சுவர்கள் எல்லாம் இடிந்துப் போய்விட்டன.
இடிந்த சுவர்களின் நிழலில் கழுதைகள் இளைப்பாறிக் 
கொண்டிருக்கின்றன ..!
அதனால் தான் ரஜினிகாந்தும் கமலஹாசனும் 
எப்போதும் நடக்காத ஊழல் என்னவோ இப்போது நடந்துவிட்டதாக
 தூய்மைவாத அரசியல் பேசுகிறார்கள்... 
எம்ஜிஆர் ஆகிவிடலாம் என்ற நப்பாசையில் தான்.

அதிமுகவின் எடப்பாடி அணிக்கோ ஓபிஎஸ் அணிக்கோ
 தினகரனுக்கோ ஏன் சிறையில் செக்கிழுக்கும் சின்னம்மாவுக்கோ 
அதிமுக கட்சி தேவைப்படுவதை விட திமுக வுக்குத் தான் அதிமுக கட்சி பெரும் தேவையாக இருக்கிறது.

Tuesday, August 15, 2017

இந்தியா வாங்கிய நகைக்கடன்

இந்தியா வாங்கிய நகைக்கடன்
நம்ப சித்தி ராதிகா அடிக்கடி விளம்பரத்தில் வந்து 
அடகுவைத்த நகையை மீட்டு உடனே பணம்பெறும்
 மாயஜாலத்தைப் பற்றி சொல்லும் போது அந்தக் கணக்கு
 எப்படினு தெரியாமல் கணக்குப் போடுவதையே
 நிறுத்திவிட்டேன்.🙄

இந்தியா வாங்கிய உலக வங்கிக்கடன், வட்டிக்கடன் ,
 வட்டியில்லாத கடன் இத்தியாதி
அனைத்து கடன் விவகாரத்திலும் எனக்குப் புரியாத 
இன்னொரு புதிரான கடன் 1980ல் இந்தியா வாங்கிய நகைக்கடன்
. அதாவது சற்றொப்ப அமெரிக்கா டாலர் 450 மில்லியன் 
மதிப்புள்ள தங்கக்கட்டிகளை அடமானம் வைத்த
 வாங்கிய கடன். அப்போது தங்கக்கட்டிகளை 
லண்டனுக்கு இந்தியாவிலிருந்து ரிசர்வ் பேங்க் கையில்
 எடுத்துச் சென்றது.!
(the situation forceed RBI to raise a loan of USD 450 million
 by pledging its gold reserves and physically transferring it to London)

எப்படி அவ்வளவு தங்க கட்டிகளை எடுத்துச் சென்றிருப்பார்கள்? 
விமானத்திலா அல்லது கப்பலிலா..? 
இதுதான் எனக்கு இன்று வரைப் புரியாத புதிராக இருக்கிறது!
கவலையாகவும் இருக்கிறது.. இப்படி அடமானம் வைத்த தங்கக்கட்டிகளை
திருப்பிவிட்டார்களா.. அல்லது கடனில் முங்கிவிட்டதா..!??
யாருக்காவது தெரியுமா நண்பர்களே...

Sunday, August 13, 2017

சீனியர் ரெய்மண்ட் எம்.டி., இன்று வாடகைவீட்டில்


'Penniless' Vijaypath Singhania says rich son Gautam is 'driving him out'

ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருந்தவர் இன்று வாடகை வீட்டில். 
அதிலும் அவருடைய ஒரே மகன் அவரை இந்த நிலைக்குத் தள்ளி 
இருக்கிறார்.RAYMONDS ஆடைகள் இன்றும் அந்தஸ்தின் 
அடையாளமாக இருக்கின்றன. 
அந்த நிறுவனத்தை இந்தளவுக்கு உருவாக்கியவர் 
விஜய்பட் சிங்கானியா (RAYMOND MD).தன் ஓய்வுபெறும் வயது 
வந்தவுடன் தன் பெயரிலிருந்த சற்றொப்ப ரூ 1000 கோடி
 பங்கு சந்தை மதிப்பை தன் ஒரே மகன் கெளதம் சிங்கானியாவுக்கு
 மாற்றிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். 
அது தான் அவர் செய்த ஒரே தவறாக முடிந்தது.
 78 வயதான அவர் இன்று தெற்கு மும்பை பகுதியில் 
அபார்ட்மெண்ட் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார்.
 ஒரு காரோ காரை ஓட்டுவதற்கு ஓட்டுநரோ கொடுக்கவும் 
அவருடைய ஒரே வாரிசான மகன் மறுத்துவிட்டார்.
நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதால் தங்கள் குடும்பச் சொத்தாக
 இருந்த ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தனக்கான உரிமையைக் 
கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். 
வீட்டுக்கதை இப்படியாக தெருவுக்கு வந்ததால் ஊடகங்கள் மூலம் 
இச்செய்தி பரவி இருக்கிறது. பெரிய வீட்டுக்கதைகளில் 
இன்னும் மர்மங்கள் இருக்கலாம்!.
காசு பணம் துட்டு துட்டு..
.பெரிசுகள் இப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் 
கொடுத்திடக்கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.. 
எப்போதும் ரிமோட்டை தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்
 என்ற பெரிசுகள் தத்துவத்தை தமிழ்நாட்டு அரசியலில் இருந்தாவது
சிங்கானியா சீனியர் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்...

Friday, August 11, 2017

முரசொலி பவளவிழாவில் வாசிக்காத பக்கங்கள்

Image result for murasoli first edition

முரசொலி பவளவிழா அனைத்து ஊடகங்களிலும் பக்பாஸ் ஆனதாக
பரபரப்பாக செய்திகள், லைவ் பார்க்கவில்லை என்றவுடன் அதை அப்படியே
அனுப்பி வந்த நண்பர்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்.
* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் ஹேர் ஸ்டைல் கவனித்தீர்களா ?
   -அப்படியா.. மிஸ் பண்ணிட்டேனே.. இட்ஸ் ஒகே. எனக்கு இதிலெல்லாம்
உங்க அளவுக்கு டேஸ்ட் கிடையாது -
* கவனித்தீர்களா.. முரசொலி மாறனைப் பற்றி எதுவுமே பேசலையே..
- அப்படி எல்லாம் இருக்காது தோழி, தயாநிதி மாறன் கலந்து கொண்டதாக பத்திரிகையில் வாசித்தேனே.. அவருக்கு நினைவுக் கேடயம் கூட வழங்கி சிறப்பித்தாகிவிட்டதே ..
* எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எப்படி எல்லாம் திட்டமிட்டு தங்கள் விழாக்கள் நடத்தி மக்களைத் திசைத் திருப்புகிறார்கள், பாருங்கள்..
_ (மனசுக்குள்.. அடப்பாவிகளா.. இதைச் சொல்வதற்கு அதிமுக காரர்களுக்கு அருகதை இருக்கிறதா என்ன? ) ச்சே ச்சே தேவை இல்லாம கற்பனை செய்து கொள்ளாதீர்கள் தோழர்..
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக ஒற்றுமையாக உங்களைக் கொண்டாட வேண்டாம் என்று யார் சொன்னது..?
* முரசொலி பவள விழாவில் முரசொலி பத்திரிகை பற்றி அதில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி யாருமே எதுவுமே பேசவில்லையே ... கவனித்தீர்களா..
- (ஆங் .. இது சரியான கேள்வி..) முரசொலி வாசித்தவர்களை அழைத்து பேச வைக்கவில்லையோ என்னவோ.. சரி தோழர்.. உங்களுக்காகவும் உங்களைப் போன்றவர்களுக்காகவும் இதோ என் பதிவு..
 ஏதோ என்னால் முடிந்தது இவ்வளவு தான்.

முரசொலியில் நான் ரசித்த இதழ்கள்
எமர்ஜென்சி காலத்தில் வெளியான பக்கங்கள்.
ஒவ்வொரு பக்கமும் தணிக்கைக்கு உள்ளாகி
அதன் பின்னரே அச்சுக்கு வரும் நிலை
கலைஞரை மிகவும் எரிச்சலூட்டியது . எனவே அவர்
 "விளக்கெண்ணெய் சூட்டைத் தணிக்கும்"
என்றும்
 "அரைமணிநேரத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா போகலாம் " 

என்றும்  எழுதினார். இன்றுவரை என் ரசனைக்குரிய பக்கங்கள் அவை. 

Wednesday, August 2, 2017

ஆடிப்பெருக்கு பழங்கதையாய்


நாளை ஆடிப்பெருக்கு..ஆக 3.
பிஸ்லரி பாட்டில் தண்ணீரை ஒரு சொம்பில் நிறைத்து
அதில் மலரிதழ்களைத் தூவி .. கற்பூரம் காட்டி
தேங்காய் உடைத்து.. தமிழர் மரபை எப்படியும்
காப்பாற்றிவிடலாம்.
அடியே .. பைத்தியக்காரிகளா..
மழைப் பொய்த்ததோ நம் மன்னவன் பொய்த்தானோ
புதுவெள்ளம் கனவாகி நீ வெறும் மணலாகி
மணல்கொள்ளையில் எல்லாம் இழந்துநிற்கிறாய்.
உன் பிச்சைப்பாத்திரத்தில் அன்னமிட
ஆபுத்திரன் மீண்டு வரட்டும்.
மஞ்சள் கயிறு கட்டாத மணிமேகலைகள் காத்திருக்கிறார்கள்.
உன் பெருமூச்சு தாங்காத நிலமெல்லாம்
பாளம் பாளமாக வெடித்து கிடக்கிறது.
புதுமணத்தம்பதியர் திரைப்படம் பார்க்க
கிளம்பிவிட்டார்கள்.வசதியான வீட்டுப்பிள்ளைகளுக்கு
கட்டணவசதி கொண்ட் நீச்சல் குளங்கள் காத்திருக்கின்றன.
மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை.
வாழாவெட்டி தங்கைக்கு சீர்வரிசை கேட்டு
வெட்கங்கெட்ட ரங்கநாதர் படித்துறைக்கு வரலாம்.
டில்லிக்கு கடிதம் எழுதியிருப்பதாக சொல்லி
எப்படியும் சமாளித்துவிடுவார்கள் நம் மந்திரிமார்கள்.
பாட்டியின் பழங்கதைகளில் வரும்
எட்டுத்தலை நாகம், ஒன்றரைக்கண் அரக்கன்,
பச்சைக்கிளி, இளவரசி, பறக்கும் போர்வை
இந்த வரிசையில் நீ ஆடிப்பெருக்கு கதைகளையும்
சேர்த்துக் கொள்.
நதியாம்.. வெள்ளப்பெருக்காம்..
வழிபாடாம்.. அதுவும் இந்த ஊரில் இதெல்லாம்
நடந்துச்சாம்... ஆஹ்ஹா..
அவர்கள் உன் கதையை நம்பமறுக்கலாம்.
ஆனால் கூகுள் குலதெய்வத்தில் அருளால்
ஆடிப்பெருக்கு காட்சிகளைக் காட்டி
இதெல்லாம் எங்கள் வாழ்க்கை, எங்கள் நதிக்கரை
நாகரிகம்., எங்கள் மண், எங்கள் இயற்கை வழிபாடு,
எங்கள் விவசாயம்னு... சொல்லிட்டே இரு..
செய்தி:
நிலத்தடி நீரை விற்று காசு பார்க்கும் தொழில் தமிழகத்தில் கனஜோராக நடக்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1200 குடிநீர் விற்கும் நிறுவனங்களில் சரிபாதி 600க்கும் அதிகமான நிறுவனங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.தமிழகத்தில் 800 குடிநீர் நிறுவனங்கள் சட்ட விரோதமானவை என பசுமைத் தீர்ப்பாயம் முன்பு பொதுப்பணித்துறையே ஏற்றுக்கொண்டது.
அடப்பாவிகளா... எல்லாத்தையும் மொத்தமா கடந்தகால வாழ்க்கையாக்கிடாதீங்கடா..

Monday, July 31, 2017

இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ 1402,680,000,000/

இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ. 1402,680,000,000/
The Indian rupees 1.4 trillion plan to destroy india's agriculture
அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய தொகை..
அதாவது இந்திய அரசு  தன் ஓராண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து நம் விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
என்ன மாதிரியான மாஸ்டர் கில்லர் பளான்.. .
. ஹாலிவுட் படங்களில் தான் இம்மாதிரியான கற்பனைகளைக்
காட்டுவார்கள் என்றால் நம்ம ராஜாங்கத்தின்
மந்திரிமார்களும் அவர்களின் திட்டங்களும் ..
 எப்படி எல்லாம் வினையாற்றிக் கொண்டிருக்கின்றன
என்பதை அறிய வரும் போது அருவருப்பாக இருக்கிறது .
. இவ்வளவு கீழ்த்தரமாக... ச்சே..
இப்படியும் ஒரு மக்கள் நல அரசு  செயல்படுமா ? என்ன!


இந்தப் புள்ளிவிவரங்களை ஏன் எந்த ஓர் எதிர்க்கட்சியும்
 நாடாளுமன்றம், மேல்சபைகளில் பேசுவதே இல்லை!
 ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நம் ஊடகத்துறையில்
  கமலஹாசன் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே நம்
 தலையாய பிரச்சனையாக பேசப்படுகிறது.
இதெல்லாம் ஏன்? ஏன்? விவாதத்திற்கே வருவதில்லை!
அறியாமை என்று சொல்லாதீர்கள்.
ஏற்க மறுக்கிறது என் மனம்.
பொதுமக்களின் பார்வைக்கும் இக்காட்சிகளும்
உண்மை நிலவரங்களும் வந்துவிடக் கூடாது என்பதில் எல்லோருமே
 கூட்டுக் களவாணிகளாக செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
இனி, சில விவரங்கள்.. (நீண்ட பதிவு என்றாலும் வாசிக்கவும் பகிரவும். )
1) கடந்த 2015-16 நிதிநிலை ஆண்டில் இந்தியா உணவு பொருட்கள் (தானியங்கள், பழங்கள், எண்ணெய்) இறக்குமதி தொகை தான் மேலே குறிப்பிட்ட ரூ  1.4 டிரில்லியன் . இந்த இறக்குமதி
தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாகாவோ உதவித்தொகையாகவோ வழங்கப்பட்டிருந்தால் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்திருக்கமாட்டான்.
2) வெள்ளைக்காரன் எதை எல்லாம் செய்து இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தானோ அதையே தான் இந்திய அரசு தன் வெளியுறவுக் கொள்கை, இறக்குமதி சட்டங்கள் மூலம் தன் சொந்த நாட்டின் மக்களிடமும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது
இந்திய அரசு இந்திய விவசாயத்தை அவுட்சோர்ஸ்  கொடுக்க முன்வந்துவிட்டது.
இனி விவசாயிகள் இந்தியாவுக்குத் தேவையில்லை! என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் தான் அண்மைக்காலங்களில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளின் போராட்டங்களையும்
பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.
3) கடந்த  இரு ஆண்டுகளில் (2014-15 முதல் 2016-17 வரை) இந்தியா இறக்குமதி செய்திருக்கும் கோதுமை, மைதா, பாசுமதி அரிசி தவிர்த்த பிற அரிசிகள் மட்டும் 6600 % விழுக்காடு அதிகம்!
ஆனால் இந்த இறக்குமதிக்கான தேவை இருந்ததா என்றால் இல்லை,
 இது ஒரு திட்டமிட்ட விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமை, வன்கொலை.. என்றுதான் சொல்ல வேண்டும்.

4) இந்திய விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குவதை விட ஆஸ்திரேலியாவிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வது பெருமுதலாளிகளுக்கு கொள்ளை இலாபம் தருவதாக இருக்கிறது.
 காரணம் இறக்குமதி வரிச் சலுகைகளும்
இந்திய அரசின் இறக்குமதி கொள்கைகளும்.
5) கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது
 என்று அதிரடியாக அறிவித்த மோதி  அரசு தன் அதிரடி நடவடிக்கையால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லி புறவாசல் வழியே இறக்குமதி வரியை  ரத்து செய்தும் குறைத்தும்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உணவுதானியங்களை இந்திய சந்தையில் பரப்பியது.
6) இம்மாதிரியான அத்துமீறிய இறக்குமதி சலுகைகளால் இந்திய விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் . ஒவ்வொரு விளை பொருளுக்கும் அரசாங்கம் ஒரு குறைந்த பட்ச
கொள்முதல் விலையை நிர்ணயித்திருக்கிறது .
( MSP - MINIMUM SUPPORT PRICE)
இப்படி நிர்ணயித்திருக்கும் விலையை விட
இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருளின்
விலை குறைவாக இருந்தால் உணவுதானியங்களை
விளைவித்த விவசாயி என்ன செய்வான்?
7) இது கற்பனையோ அரசுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமோ அல்ல.
 இதுதான் உண்மை நிலவரம்.
எ.கா. மராட்டிய மண்ணில் பருத்தி, கரும்பு விவசாயிகள் மிக அதிகமாக தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன்? பருத்தியோ கரும்போ விளைச்சலில்லை என்பதா காரணம்?
இந்திய அரசின் ஒழுங்கற்ற இறக்குமதி சட்டங்கள் தான் காரணம்
என்கிறார்  இந்திய சுகர் மில் அசோஷியன் டைரக்டர் ஜெனரல்  அபினாஷ் வர்மா. கடந்த 6 ஆண்டுகள் இந்தியாவில் உற்பத்தி ஆகும் சர்க்கரையின் அளவு இந்திய தேவைக்கும் அதிகமாகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஆனால் இந்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்தது. ! அப்படி இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை உள்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விட விலை குறைவாக இருந்தது.
அதை இறக்குமதி செய்யும் கார்ப்பரேட்டுகள் மால்களில் கடை விரித்தார்கள்.
இனிப்பு  தரமில்லாத பார்க்க பள பளப்பாய் இருக்கும் அந்த சர்க்கரையை நாமும் வாங்க ஆரம்பித்தோம். விளைவு..? கரும்பு விளைவித்த விவசாயிகளின் கடன் தொகை 22000 கோடியாக
பயமுறுத்தியது. தற்கொலைகள் அரங்கேறின.
8) இதே நிலைதான் 2015--16ல் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் விதைகள் , சிறுதானியங்கள் விவசாயத்திலும் நடந்தது. 2015-16 ஆண்டில் எண்ணெய் விதைகளின் விளைச்சல் அபரிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு தந்திரமாக ( கேவலமாக) அறுவடைக்கு முன் சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை மிகவும் குறைத்தது.
சர்க்கரையின் அதே விளைவு தான்
எண்ணெயிலும் வந்துவிடிந்தது. பாமாயில், சோயா ஆயில், அரிசி ஆயில் என்று பல்வேறு எண்ணெய் பாக்கெட் பாக்கெட்டாக மிகக்குறைந்த விலையில் நம் சந்தைகளில் விலைக்கு வந்தன. நாமும் அதை எல்லாம் வாங்க ஆரம்பித்தோம். இலவசம், குறைந்த விலை இவைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலோ நம் கழுத்துக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் தற்கொலை கயிறோ நம் கண்களுக்குத் தெரிவதில்லை!
சிறுதானியங்களின் விளைச்சல் இருந்த போதும் 2016-17ல் 5.9 மில்லியன் டண் தானியங்களை 25,600 கோடிக்கு இந்திய அரசு இறக்குமதி செய்தது ஏன்?
9) இன்னும் 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி ஜோராக நடக்கப்போகிறது. மொசம்பியா, பிரேசில், மியான்மார் நாடுகளிலிருந்து உணவுதானியங்கள், பழங்கள், சமையல் எண்ணெய் இத்தியாதிகளை
டண் கணக்கில் இந்தியா இறக்குமதி செய்யப்போகிறது. விளைவுகள் இன்னும் மோசமாகும்.
10) நீர்மேலாண்மை அறியாத மாநில அரசுகள், மழை இன்மை, நதிநீர்ப்பங்கீடு இத்தியாதி இன்னும் சில பிரச்சனைகளால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
விளைந்தாலும் சரி, விளையாவிட்டாலும் சரி..
 இனி இந்திய அரசுக்கு விவசாயம் தேவையில்லை
விவசாயிகளும் தேவையில்லை. 

T Haque , former head of the commission for Agricultural Costs and Prices , says
India's agrarian policies over the years have lacked coherence. Despite domestic production, we inexplicably keep promoting import. To get our agriculture out of this vicious cycle,
first we need to set our foreign trade policies in order.
 ref : July 1- 15 , 2017, edition of Down to earth


Sunday, July 30, 2017

லா.ச.ரா அலைகள்

Image result for south indian women hairstyles pattu kunjamலா.ச.ராவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே வாசித்த கதைகள் தான் என்றாலும்
 எப்போது வாசித்தாலும் என்னை வசீகரிக்கும் மொழிநடை ..
 லா.ச.ரா ஒரே கதையைத்தான் வெவ்வேறு விதமாக
 சொல்லிக்கொண்டே இருக்கிறாரோ என்று தோன்றும். ஆனாலும் அலுப்புத்தட்டாது.
அந்த நதிக்கரை, நுரைப்பொங்கி  ஓடும் ஆற்றுவெள்ளம், ,
குளத்தங்கரை , கிணற்றங்கரை, துணி துவைக்கும் கல், வீட்டு கொல்லைப்புறத்தில்  வாழை மரம், மணக்கும் காஃபியும்
 வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
லா.ச.ராவின் படைப்புலத்தை.
அந்த கதைக்களம் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையுடன்
பயணித்த தருணங்கள் உண்டு.
 கதை மாந்தர்கள் மட்டுமின்றி இப்படியாக கதை நமக்குள்
 இன்னொரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டே இருக்கும்.
இம்முறை இந்த மீள்வாசிப்பில் எனக்குத் திடீரென
இன்னொரு பெரிய்ய்ய்ய்ய கவலை வந்து விட்டது.
. லா.ச.ரா சிருஷ்டித்திருக்கும் படைப்புலகின் களம் பற்றி
எதுவுமே அறியாத எம் பிள்ளைகள் லா.ச.ராவை எப்படி அணுகுவார்கள்?
வெறும் கதையும் கதைமாந்தர்களின் உரையாடலும்
மட்டுமா லா.ச.ரா??
அதிலும் லா.ச.ரா அடிக்கடி பட்டுக்குஞ்சம் பற்றிப் பேசுவார்,
 மென்மைக்கும் பளபளப்புக்கும் பட்டுக்குஞ்சம் வந்துவிடும்
அவர் கதைகளில். பட்டுக்குஞ்சம்
சடையில் கட்டி ... ம்ம்ம்.. இதெல்லாம் எம் பொண்ணுக்கோ அவள் பொண்ணுக்கோ தெரியாதே..
லா.ச.ரா  இம்முறை எனக்குள் இம்மாதிரி ஓர் இனம்புரியாத
 கவலையின் அலைகளை எழுப்பிவிட்டார்.
மழைக்காலத்தின் அலைகள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக
தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன.
என்னை மன்னித்துவிடுங்கள் லா.ச.ரா.



Monday, July 24, 2017

அத்வானியின் அரசியல் குற்றம்


modi-advani-kovind-1.jpg (660×440)
அத்வானி ஏன் பிஜேபியால் ஓரங்கட்டப்பட்டார்?
அவருக்கு திறமை இல்லையா?
அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையா?
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கலவரம் மட்டும்தான்
அத்வானியின் அரசியல் தகுதிக்கு களங்கம் கற்பித்ததா?
அத்வானிக்கு ஏன் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை?
அத்வானி செய்த தவறுகள் என்ன?
1) அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை.

2) அத்வானி தன் குஜராத் ரதயாத்திரையில் இனம் கண்ட
     நரேந்திரமோதி என்ற தேரோட்டி கிருஷ்ண பரமாத்மா

3) தேரோட்டி அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு வரக்கூடும்
    என்பதை யும்
     மகாபாரதக் கதையில் இம்மாதிரி திருப்பங்கள் ஏற்படலாம்
   என்பதையும்     அறியத்தவறிய அத்வானி.

4) குஜராத் கோத்ரா மதக்க்கலவரத்திற்குப் பின் ராஜதர்மப்படி
     அன்றைய பிரதமர் வாஜ்பாய் தண்டனை கொடுக்க முன்வந்ததையும்
     நரேந்திரமோதியை கட்சியை விட்டு விலக்கி வைக்க முன்வந்ததையும்
   ஆதரிக்காமல் மவுனம் சாதித்து மோதிக்கு ஆதரவாக இருந்த  அத்வானியின்
   ராஜதர்ம குற்றம்.

5) அரசியலுக்கு அவருடைய வாரிசுகள் வருவதற்கு விருப்பம்
 தெரிவித்தப்பின்    " நான் உயிருடம் இருக்கும் வரை அது நடக்காது, நான்  வாரிசு அரசியலுக்கு     எதிரானவன் " என்று அவர்களைத் தடை செய்தது.

6) இவை எல்லாவற்ரையும் விட அவர் செய்த மன்னிக்க முடியாத குற்றம்
     (பிஜேபி & சங்பரிவார் பார்வையில் )
     தான் பிறந்த மண்ணைப் பார்க்க பாகிஸ்தான் பயணித்தப்போது
    'முகமதுஅலி ஜின்னா - மதசார்பற்றவர் " என்று சொன்னது.


Saturday, July 22, 2017

அப்பாவின் புதல்வர்கள்

அப்பாவைப் போலவே பிள்ளைகளும் இருப்பது நல்லதா ?
அதிலும் அப்பா பிரபலமான தலைவராகவோ நடிகராகவோ
இருந்துவிட்டால் பிரச்சனைதான்.
எப்போதும் பிரபலமான அப்பாவுடன் மகனை ஒப்பிடும்போது
மகனின் ரேட்டிங் என்னவாக இருக்கும்?!!
மகன் அப்பாவை அப்படியே காப்பி ரைட் எடுத்துக்கொண்டு
காரியத்தில் இறங்கினால் தோற்றுத்தான் போவான்.
நான் இன்னாரின் மகன் தான்.
ஆனால் எனக்கு என்று தனிவழி ஒன்றுண்டு, அதுதான் நான்.
. என்று ஒரு தனித்துவத்தைக் காட்டியாக வேண்டும்.
அப்படிக் காட்டத்தவறினால் அந்த மகன் எப்போதுமே
அப்பா நிலைக்கு உயரவும் முடியாது என்பதுடன்
 தன் இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது
 என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட உறவு
அப்பா- மகன் தான்.
அப்பா - மகள் உறவு ஒப்பீட்டளவில் அதிகமாகப்
 பாதிப்புக்குள்ளாவதில்லை. (இதுவும் ஒருவகையில் ஆணாதிக்க
வாரிசு, சொத்துடமை சமூக சிந்தனைதான்)

அபிஷேக்பச்சன், பிரபு .. ஏன் தமிழ்நாட்டில் திமுக வின் செயல்தலைவர்
திரு. மு.க .ஸ்டாலின் வரை இது பிரச்சனை தான்.
இதை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள்,
 கையாண்டு கொண்டிருக்கிறார்கள்
என்பதைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால்
சில நேரங்களில் சிரிப்பு வருகிறது.
 பல நேரங்களில் எரிச்சலும் வருகிறது.
இன்னும் சில நேரங்களில் பார்க்க ரொம்ப
 "ப்பாவமா" இருக்கு!


Wednesday, July 19, 2017

தேனருவி தொகுத்து வழங்கும் கமலஹாசன்

மும்பைவாசி கேட்கிறார்  ,
 எப்படிங்க பிக்பாஸ் கூட அரசியல் களமா மாறியிருக்குனு!
அமிதாப்பச்சன், சஞ்சீவ் தத், சல்மான்கான் போன்ற பாலிவுட்
 சூப்பர் ஸ்டார்கள் கூடத்தான் பிக்பாஸ் ஹோஸ்டாக
இருந்திருக்கிறார்கள். ஏன் கன்னடத்தில் சந்தீப்பும் தெலுங்கில்
ஜூனியர் என் டி ஆரும் ஒலிபரப்பில் இருக்கும் பிக்பாஸ் ஹோஸ்ட்.. அங்கெல்லாம் இத்துணை பரபரப்பு, ஆர்ப்பாட்டம், அரசியல் இல்லை
. உங்க தமிழ்நாட்டில் மட்டும் எப்படி , இப்படி னு கேட்கிறாக.
..அவுகளுக்கு என்னத்த சொல்லிப் புரிய வைக்கிறதுனு
தெரியல.
எங்க ஊரில தேனருவி பாடல்களை கமலஹாசன் 
தொகுத்து வழங்கினால் கூட
இப்படி எல்லாம் ஆகத்தான் செய்யும்னு!

ஓட்டப்பந்தயத்தில் இப்போ என்னவோ
 ரஜினியை முந்திக்கிட்டு உலகநாயகன் ஓடற
மாதிரி இருக்கு..
ரஜினிக்கு அடித்தட்டு மக்களின் ஆதரவு இருப்பதாகவும்
கமலுக்கு இன்டலெக்சுவல் ஆதரவு இருப்பதாகவும்
 சிலர் சொல்கிறார்கள்.
அப்போ அடித்தட்டு மக்கள் இன்டலெக்சுவல் இல்லையானு
 கேட்கப்பிடாது.
எனக்கு இந்தப் பகுப்பாய்வு தெரியல.
ஆனால் இதன் பின்னால் இருக்கும்
இன்னொரு அரசியல் தெரிகிறது.
கமலு எப்படி பார்த்தாலும் பார்க்க சிவப்பா அழகாதான்  இருக்காரு.
ஊறுகாய் மாதிரி நாயக்கரைத் தொட்டுப்பாரு. நாத்திகம் கூட பேசுவாரு.
அப்படியே ஆப்கானிஸ்தான் போயி தீவிரவாதிகளைச்
 சுட்டுத்தள்ளுவாரு.
நல்லா பரதநாட்டியம் வேறு ஆடுவாரு.
வெளிநாட்டு பல்கலை கழகத்திற்கெல்லாம் போயி
பேசிட்டு வந்திருக்கார்னா
அவரு பெரிய்யா ஆளா தானே இருக்கனும்!

பாவம் ரஜினி.. மொட்டையும் சொட்டையுமா.. !
வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லிக்கிட்டே நாளையும் பொழுதையும்
கடத்திட்டா இப்படித்தான் ஆகிடும்..
சரி .. சரி.. போகிற  போக்கில் வெளியில் இருந்து கமலுக்கு ஆதரவுனு சொல்வாரோ என்னவோ.!!

வடிவேலு மைண்ட் வாய்ஸ் இப்போ பார்த்து ..
சிவப்பா அழகா இருக்கிறவங்க என்ன சொன்னாலும்
எது செய்தாலும்
அது அறிவாளித்தனமாத்தான் இருக்கும்..

சிவ சிவா.. தாங்க முடியலடா சாமீ..