Thursday, February 23, 2012

ஒருநாள் சாய் காஃபி செலவு ரூபாய் 48,000...!அந்த மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, மண் வளமில்லை,
வறண்ட பூமி.. அதுமட்டுமல்ல... இந்தக் காரணங்களாலேயே அந்த மாநில
அரசு டைரியோ குறிப்பேடோ ( diary or directory)வெளியிடுவதில்லை. அவ்வளவு
வறுமையாம். அதனால் எளிமையாம்! போனால் போகிறது என்று
அந்த மாநில முதல்வர் அவரைப் பார்க்க வருகிறவர்களுக்கு கூட
காந்தி டைரி தான் கொடுப்பார். அந்த காந்தி டைரியிலும் மாநில
அரசு குறித்தோ அதிகாரிகள் பற்றிய குறிப்ப்களோ அரசு துறைகளின்
தொலைபேசி எண்களோ இத்தியாதி எந்தவிதமான குறிப்புகளும்
கிடையாது.
அப்படிப்பட்ட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் தான் முதல்வர்
அசோக் ஹெக்லட் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களுக்கு
ஏப்ரல் 1, 2009 முதல் ஜனவரி 16, 2012 வரை , சற்றொப்ப
மூன்று வருடங்களில் 4.86 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம்.
அவருக்கு முன் ராஜஸ்தானின் முதல்வராக இருந்த சிந்தியா
அரண்மனை அரசி வசுந்தாராவை விட இது அதிகம். அரசி
2004 முதல் 2007 வரை செலவு செய்தது வெறும் 2.2 கோடிதான்.
கணக்குப் பார்த்தால் இன்றைய முதல்வர் ஒரு நாள் சாய் காஃபிக்கு
செலவு செய்யும் தொகை ரூ.48,000. சொச்சம்...!

நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று
யாருக்காவது தெரியுமா..? வேறொன்றுமில்லை, சாய் காஃபிக்கு
ராஜஸ்தானுக்குப் போகலாமா இல்லை நம்ம ஊருனு தமிழ்நாட்டுக்கே
வந்துட்டுப் போகலாமானு தெரியலே...கொஞ்சல் விசாரிச்சு சொல்லுங்க.

(செய்தி ஆதாரம்: இந்தியா டுடே பிப், 20, 2012)

Monday, February 20, 2012

பசித்தவனின் பயணம் - நாஞ்சில் நாடன் சிறுகதைகள்நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க
முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார்
என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர்
கதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே
அவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது.

நாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும்
மரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த
மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில்
வெளியான அவர் சிறுகதையை வாசித்துவிட்டு கழிவறைக் காகிதம்
அதாவது டிஷ்யு பேப்பர் என்று விமர்சித்த காலக்கட்டம் இருந்தது
என்பதை அவர் மறந்திருக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியவில்லை.
அடுத்ததாக விருதுகள் பரிசுகள் குறித்து மிகத் தீவிரமாக தன் கருத்துகளை
முன்வைத்த ஒரு நேர்மையான எழுத்தாளராக படைப்புலகம் அவரைக்
கண்டது. அவருடைய அந்த அறச்சீற்றம் அவர் படைப்புகளையும் தாண்டிய
ஒரு வாசகர் வட்டத்தை அவருக்கு உருவாக்கியது என்பது மற்ற எவருக்கும்
வாய்க்காத ஒரு பெரும்பேறு என்றுதான் நினைக்கிறேன்.

இன்று, நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்கு
சென்ற ஆண்டில் 2010ல் சாகித்திய அகதெமி விருது கிடைத்தப் பின்
விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த
விருதுகளும் தங்களுக்கான தகுதிகளை நினைவுபடுத்திக் கொள்வதாகவே
நினைக்கிறேன். இந்த விருதுக்குப்பின் இதுவரை சாகித்திய அகதெமி
விருது பெற்ற எந்த ஒரு படைப்பாளருக்கும் கிடைத்திராத ஊடக
கவனிப்பும் கணினி இணைய வாசல்கள் எங்கும் நாஞ்சில் நாடனின்
தோரணங்கள் அலங்கரித்திருக்கும் காட்சியும் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும்
அந்த ஆரவாரமான கொண்டாட்டங்களுக்கு நடுவில் சின்னதாக ஓர் இனம்புரியாத
அச்சம் என் போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தருணம் இது.

இந்தச் சூழலில் தான் நாஞ்சில் நாடனின் சிறுகதைகளை மறுவாசிப்பு
செய்தேன். விருது பெற்ற சூடிய பூ சூடற்க கதைகளையும் வாசிக்கும்
அனுபவம் கிடைத்தது. ஒருவகையில் என் முதல் கவிதை தொகுப்பு
'சூரிய பயணம் ' தொகுதிக்கு ஓர் அறிமுகமாக ஓர் அணிந்துரை தந்தக்
காரணத்தாலேயே ஆசான் என்று சொல்ல வரவில்லை! ஆனால் இன்றைக்கு
கும்பமுனி தான் எம் பாட்டன், எம் சொத்து, எம் சித்தன், எனக்குத் தெரியாத
என் வயக்காட்டையும் சூடடிப்பையும் என் மாட்டையும் என் மனுசர்களையும் அட
எனக்கு கெட்ட வார்த்தைகளையும் கூட போகிற போக்கில் வசவாகவும்
வர்ணனையாகவும் குசும்பாகவும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்
ஆசான். ஆமாம் ஆசாந்தான். கும்பமுனி என் கட்டைவிரலை காணிக்கையாகக்
கேட்க மாட்டார் என்ற நம்பிக்கையில் தான் மும்பை வாழ் தமிழர்களே!
உங்கள் முன்னிலையில் உங்கள் சாட்சியாக கும்பமுனி எனக்கு மட்டுமல்ல,
மும்பை தளத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கு மிதவையில் ஒரு
பரிசில் ஓட்டி சதுரங்க குதிரையில் காய்நகர்த்தி ஆட்டம் சொல்லிக்கொடுத்து
தலைகீழ் விகிதங்கள் வாழ்க்கையில் விதிவிலக்கல்ல என்பதைப் புரிய வைத்த
ஓர் ஆசான்.
அடுத்து அவர் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நான் அவருடைய
நல்ல வாசகர். இதில் 'நல்ல 'என்பது எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும்
அடைமொழி. அவர் பார்த்த அனுபவித்த அதே மண்ணும் அதே மும்பை
மனிதர்களும் எனக்கும் பார்க்கவும் அனுபவிக்கவும் கிடைத்திருப்பது
எனக்கும் என் எழுத்துகளுக்கும் கிடைத்திருக்கும் பாக்கியமோ துரதிருஷ்டமோ
யானறியேன் பராபரமே. இன்றைக்கு கட்டுரைகள் பக்கம் அவர் உதிர்க்கும்
அனைத்து statements களுடன் ஒத்துப்போவது என்பது என் போன்றவர்களுக்கு
சாத்தியமில்லை என்பதும் முரண்தொடையாக இருப்பதை மறைப்பதற்கில்லை.

இவ்வளவு பீடிகையும் இப்போது எனக்குத் தேவைப்படுகிறது. ஆய்வுரை என்று
சொன்னதாலேயே புரிந்த புரியாத சரியாக உச்சரிக்க கூட தெரியாத எந்த
இசங்களையும் மேற்கோள் காட்டி அந்தச் சட்டத்துக்குள் நாஞ்சில் நாடனின்
சிறுகதைகளை அளந்துப் பார்க்கும் அதிமேதாவி அறிவுஜீவித்தனம் எனக்கு
உடன்பாடல்ல. கொடுக்க கொடுக்க குறையாத அமுதசுரபியும் அந்த ஆபுத்திரன்
கதையும் பிற எந்த மொழியிலும் காணக்கிடைக்காத தமிழனின் அசல்
கதை. தமிழனின் மூலக்கதை. தமிழ் மரபின் கனவு, கற்பனை. தமிழ் பண்பாட்டின்
உச்சம், தமிழன் இந்த உலக மானுட குலத்திற்கே கொடுத்த ஓர் உன்னதமான
பண்பாடு. தமிழ் தொன்மங்களை நன்கு படித்தவர் , தெரிந்தவர், புலமை மிக்கவர் என்பதுடன்
அந்தச் சாலச்சிறந்த தொன்மத்திலிருந்து எடுத்துச் சொல்ல எத்தனையோ இருப்பதினால்
இன்றைய நவீன படைப்புலக விலாசத்தில் மேனாட்டு வாந்தி எடுப்புகளுக்கெல்லாம்
தனிக் கவனிப்பு இருப்பதைக் கண்டும் கேலியும் கிண்டலுமாக அதைக் கடந்து
தொடர்ந்து எழுத்துலகில் தன் பயணத்தைத் தொடர்வதை அவர்
சிறுகதைகளின் போக்கு நமக்கு உணர்த்துகிறது.


'கவிதை எழுதுவதில் உள்ள கவுரவம் நிலத்தை உழுவதிலும் இருக்கிறது என்பதைப்
புரிந்து கொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது ' என்று அடிக்கடி
முழுங்குகின்ற மார்க்சிய மேடைகள் , பேரணிகள், இன்குலாப் ஜிந்தாபாத்
கோஷங்கள் கற்பிக்காத அல்லது காட்டாத எம் நிலத்தையும் வாழ்க்கையையும்
இவர் சிறுகதைகள் காட்டி இருக்கின்றன என்பது உண்மை.

'வயல் அறுவடையின் போது ஏராளமான நெல்மணிகள் வயலில் உதிர்ந்து போய்
வீணாகின்றன. இப்படி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய
விஞ்ஞானிகள் வழி கண்டு பிடிக்க கூடாதா? என்று ஒரு சிறுவன் தன்
அப்பாவிடம் கேட்கிறான். 'இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட
மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்?
நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மைச் சுத்தி காக்கா,
குருவி, எலி, பாம்பு , தவளை, விட்டில், புழு, பூச்சி எல்லான் சீவிக்கணும்.
அதை மறந்திரப்பிடாது' என்கிறார் அவன் அப்பா. அந்தச் சிறுவன் தான்
எழுத வரும்போது அவன் கண்ட அந்த விவசாய உலகம் அவன் படைப்புலகமாக
விரிகிறது. விவசாயத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அறிந்தவர் என்பதால்
அந்தப் பின்புலம் அவர் சிறுகதைகளின் ஆளுமையாக தனித்துவமாக இருக்கிறது.

வாய் கசந்தது என்ற சிறுகதையில் சூடடிக்கும் காட்சி விலாவரியாக அவர்
எழுதிச் சென்றிருக்கிறார். அரிசி மரத்தை ஊருக்குப் போனபோது தோட்டத்தில்
தேடிய மும்பை குழந்தைகள் பலருண்டு. இதைச் சொல்லும் போது வேதனை தான்
மிஞ்சுகிறது. இந்தக் கதையின் இந்த விவரங்கள் கூட நாளைய நம் தலைமுறைக்கு
ஓர் ஆவணமாகிவிடுமோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது. இக்கதையை
நான் சொல்ல வருவதற்கு காரணம் இக்கதையின் உத்தியோ கருப்பொருளோ
ஏன் ஆவணமாக்கியிருக்கும் விவசாயக்காட்சியோ அல்ல. இக்கதையின் ஊடாக
அவர் வைக்கும் ஒரு நுண்ணிய அரசியல். இந்த அரசியலில் எவ்விதமான
ஆரவாரமும் இல்லை.

வயலில் விளைந்த நெல்லை கூலியாக அளந்து கொடுக்கும்போது அளக்கின்ற
மரக்கால் வேறாகிவிடுகின்ற காட்சி, இரவு ஒன்றரை மணிக்கு எழுந்து சூட்டடிக்கப்
போன ஐயப்பனுக்கு கிடைக்கின்ற கூலியின் மதிப்பு 2 ரூபாயும் இருபது பைசாவும்.
க்தைக்கு த்லைப்பு வாய் கசந்தது. இந்த மரக்கால் மாறுவதும் கூலியும்
காலம் காலமாக விவசாய பெரும்புள்ளிகள் நடத்தும் சுரண்டல் தான்.
ஆனால் ஐயப்பனின் தாத்தாவோ அப்பனோ புரிந்து கொள்ளாததை அல்லது
ஏற்றுக்கொண்டதை இவனால் மட்டும் அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள
முடிய்வில்லை? அவன் படிக்கிற பையனாக இருப்பதாலா?
உழைப்புக்கும் உழைப்புக்கான கூலிக்குமான
விகிதாச்சார கணக்கு வாய் கசக்க வைக்கிறது. ஐயப்பனுக்கு.
வாசிப்பவனுக்கும் வாய்க்கசக்கும் அனுப்வத்தை
கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்துவிட முடிகிறது நாஞ்சில் நாடனால்.

நாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்து கடுமையான இன்னொரு விமர்சனம் வைக்கப்படுவதை
நானறிவேன். அதுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழ். அதாவது
வெள்ளாளர் எழுத்து என்று. மொக்கையான விமர்சனம்.
இவை குறித்து நாஞ்சில்நாடன் அவர்களே அதிகமாக பேசி இருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் அவருடைய 'சில வைராக்கியங்கள்'
சிறுகதை என் நினைவுக்கு வரும். குமரி மாவட்ட வேளாளர் மாநாடு நடக்கிறது.
மேடையில் வேளாளர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்
என்று பேசுகிறார் தலைவர்.பூதலிங்கம் பிள்ளை. மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற
.கதை மாந்தர்களான பரமசிவம் பிள்ளைக்கு அவர் பேச்சு ரசிக்கிறது. சங்கரலிங்கம் பிள்ளை
முகத்தில் சுரத்தில்லை.
அவன் ஏன் பேச மாட்டான்? அவனுக்கென்ன? நிமுந்தா வானம், கவுந்தா பூமி! பேசுதான்!
என்கிறார் சங்கரலிங்கம் பிள்ளை.
"ஏன் பேசுவதிலே என்ன தப்பு? உள்ளதத் தானே சொன்னாரு! இந்தக் காலத்தில் சாதீகீதி எல்லாம்
ஏது ஓய்? எல்லாம் ஒண்ணுதாலா? எல்லார் ஒடம்பிலேயும் ரெத்தம் சிவப்புதாலா?
புல்லறுக்கிறவளைத் தூக்கி வரப்பிலே கெடத்தும் போது சாதி எங்கே ஓய் போச்சு?...
..................................காலத்துக்கு ஏத்தாப்பிலே மாறாண்டாமா நாமளும்?..."
என்று ப்ரமசிவம் பிள்ளை பொரிந்தார் என்று ஒரு காட்சி. அடுத்த காட்சி அவர்
வீட்டில் மகளுக்கு வரன் துப்பு கொண்டு வந்து காத்திருக்கிறார் அவர்
மைத்துனர். விசாரிக்கும் போது தெரியவருகிறது பையன் யாரென்பது.

யாருண்ணா கேக்க? அவன் மருமக்கவழிக்காரம்லா? ஒனக்கு புத்தி ஏண்டே
இப்படிப் போகணும்?'
என்ற பரமசிவத்திடம் 'அதெல்லாம் பாத்துக்கிட்டிருந்தா முடியுமா? இந்தக் காலத்தில?
என்கிறார் மைத்துனர்.
பரமசிவம் பிள்ளை இடைவெட்டினார். 'சரிதான், சோலியைப் பாத்துக்கிட்டு போடே!
மாப்பிள்ளை பாக்கான் மாப்பிள்ளை!"
என்று முடியும் கதையில் தான் சாதியம் இன்றுவரை நிலைத்திருப்பதற்கான
அடிப்படைக் காரணமான அகமண முறை அம்மனமாக்கப்பட்டிருக்கும!
இந்தியாவில் சுயசாதி அடையாளத்தை துறந்தவர் எவருமில்லை.
எழுத்தாளன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அந்த சாதிக்குள்ளெ
பிறந்து வளர்ந்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி
தன் படைப்புகளில் சாதிய முள் வேலிகளை உடைத்துக்கொண்டு
திமிறிக்கொண்டு காயங்களுடனும் ரத்தம் சொட்டவும் வெளிவர
தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டுதான் இருக்கிறான்.


நாஞ்சில் நாடன் சிறுகதைகளின் பெருவெளியாக இருப்பது தீராதப் பசி.
'சின்னஞ்சிறு வயதில் ஆறோ ஏழோ படிக்கின்ற போது ஊரில் நடந்த திருமண வீட்டில்
மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடன் அனுமதி பெற்று ஒன்றரை மைல் ஓடிவந்து
பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது , உடை கண்டு, பொருளாதர நிலை கண்டு,
பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும்
மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின் பலகணிகள் மூலமாகச்
சுற்றியிருந்த உலகைப் பார்த்தேன் " என்று அவரே பதிவு செய்துமிருக்கிறார்.
அந்தப் பசியின் முகத்தை ஆரம்பகால கதைகள் முதல் அண்மையில் வெளிவந்திருக்கும்
கதைகள் வரை அப்படியே கோட்டோவியாமாக வாசகனுக்கு கொடுத்துக்கொண்டே
இருக்கிறார். 1975களில் எழுதிய விரதம் கதையில் சின்னத்தம்பியா பிள்ளைக்கு
திருமணமான தன் இரு மகள்களிடமும் விரதச்சாப்பாடு சாப்பிட வ்ந்திருப்பதை
பசித்திருக்கும் நிலையிலும் சொல்ல முடியாமல் சுய கவுரவம் தடுக்கிறது.
பசியோடு வெந்நீரை வாங்கி குடித்துவிட்டு சாப்பிட்டாகிவிட்டது என்பதை
காட்டிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இருள்கள் நிழல்களல்ல கதையில்
திருமண வீட்டில் பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து காத்திருக்கும் பண்டாரம்,
பிசைந்த சோற்றைப் பிச்சை வாங்கித் தின்பதா? என்று காத்திருக்கும் காட்சி,
விலக்கும் விதியும் கதையில் எண்ணெய்த் தேய்த்து குளித்துவிட்டு வரும்
பரமக்க்ண்ணு கருவாட்டுக்குழம்பை நாய் நக்கியதைப் பார்த்து விடுகிறான்.
நாய் தின்ற மிச்சத்தைத் தின்பதா? எங்கெல்லாம் வாய் வைத்துவிட்டு வந்ததோ?
என்று நினைத்தாலும் பசியின்சுரண்டல் ஜெயிக்கிறது. இப்படியாக அவர் கதை நெடுக
அவரை பல்வேறு விதமாக துரத்தும் பசி தனிமனித உணர்வாக இருக்கும் வயிற்றுப் பசி
ஒரு சமுதாயப் பண்பாட்டின் எச்சமாக படைப்பின் உச்சத்தை எட்டிப்பிடித்திருப்பது
அவருடைய 'யாம் உண்பேம்' சிறுகதையில் தான். நாஞ்சில் நாடனின் பசி குறித்த
மேற்சொன்ன கதைகளில் எல்லாம் ஏற்படாத ஓர் உணர்வின் உச்சம் அவருடைய
'யாம் உண்பேம்' சிறுகதை மூலமாக நான் உணர்ந்தேன். சூடிய பூ சூடற்க
கதை தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அச்சிறுகதையை வாசித்தவுடன்
ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது எனக்கு.
இந்தக் கதையை வாசிக்கும் முன் இந்தக் கதைக்கான பின்புலத்தை மிகவும்
தெளிவாக அருந்ததிராயின் புரோக்கன் ரிபப்ளிக் கட்டுரைகளும் அதற்கு முன்பே
எழுத்தாளர் இந்திரன் மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கும் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் நாம்'
என்ற ஆதிவாசிகளின் கவிதைகளும் எனக்கு கொடுத்திருந்ததும் ஒரு காரணமாக
இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
நம் ஆரண்யகாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, காட்டையும்
கழநியையும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு பிச்சை கேட்கவே
தெரியாது. அதை அவன் அறிந்திருக்கவே இல்லை. பெற்ற மகன் குடும்பத்துடன் செய்து
கொண்ட தற்கொலை அவனை அவன் இடத்திலிருந்து விரட்டுகிறது. பசியின் விரட்டல்
வேறு.
"எதிரே இருப்பவன் ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் வாய்க்கு கொண்டு போகும்
நேரம், பாபுராவின் உயர்த்திய கையை , முதிய தோல் சுருங்கிய நாத்ரேயின் கை எட்டிப்
பிடித்து வெட வெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து
பார்த்தான்.

'அமி காணார்.... அமி காணார்..'

எனக்குத் தா என்றல்ல , நான் தின்பேன் என்றல்ல, நாம் உண்போம் என.
தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் யாம் உண்பேம் என.

கண்கள் கசிந்திருந்தன. பிடித்த கரம் நடுங்கியது. மீண்டும் பதற்றம் பரவ,
அமி காணார்... அமி காணார்...

நண்பர்களே... இந்த இடத்தில் தான் நான் உடைந்து சுக்குநூறாகி ஓவென
கதறி அழுதேன்...

உண்டா லம்மவிவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே......
[புறநானூறு: 182]

என்று சொன்னானே 2500 ஆண்டுகளுக்கு முன் ஒருவன்

இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன்கை வண்மையே
(புறம் 134)

என்று சொர்க்கம் நரகத்திற்கு அஞ்சாமல் வாழ்ந்தானே ஒரு இனக்குழு தலைவன்.

தனியொருவனுக்கு உணவில்லை எனில்
இச் ஜகத்தினை அழித்திடுவோம்

என்று ஆவேசப்பட்டானே நம் பாரதி...
இதை எல்லாம் தன் பண்பாடாக கொண்டு வாழ்ந்தவனால்தான்
அந்த 'அமி காணார் அமி காணார் ' என்ற குரலில் ஒலித்த
அவலத்தைப் புரிந்து கொள்ள முடியும். இந்தக் குரலில் ஒலித்த
பசி தனி மனிதன் ஒருவனின் பசி மட்டுமல்ல, இது இந்த நாட்டின்
பண்பாட்டைச் சுரண்டுகின்ற பசி, இது ஒரு தனிமனித அவலம் அல்ல,
ஒரு சமூக அவலம். அவமானம், ஏன் ஆபத்தும் கூட!
இக்கதை நாஞ்சிலாரின் சொந்த அனுபவம் தான்
என்பதை அவருடைய நக்கீரன் நேர்காணல் வழி அறிந்து கொண்டேன்.
அமி காணார் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவரும் அழுதிருக்கிறார்.
வாசித்தவனையும் அழ வைத்திருக்கிறது அக்கதை. இந்தக் கதையின் நிஜம்
நம்மைச் சுடுகிறது. தன் அனுபவத்தை வாசகனின் அனுபவமாக்குவதில்
வெற்றி காண்பது தான் ஒரு சிறந்த படைப்பு . விமர்சன பிதாமகன்கள்
இதற்கு என்னவெல்லாமோ பெயர் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக
எழுதிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கட்டும்.
என்னளவில் இதுவே ஒரு படைப்பாளனின் வெற்றி என்று கருதுகிறேன்.
ஹேட்ஸ் ஆஃப் நாஞ்சில்!
நாஞ்சில் நாட்டு வாழ்க்கை பின்னணியில் எழுதப்பட்டவை, மும்பை நகர வாழ்க்கை
தந்த அனுபவங்களின் ஊடாக அறிந்ததும் அனுபவித்ததும் இந்த இரண்டு வாழ்க்கையையும்
இணைக்கும் அவருடைய பயணங்கள், பயணங்கள், அந்தப் பயணங்கள் கற்றுக்கொடுத்த
பரந்து பட்ட இன்னொரு உலகம், பசியின் துரத்தல் ஆகிய வட்டங்களைச் சுற்றி சுற்றியே
எழுதப்பட்டிருக்கிறது நாஞ்சிலாரின் சிறுகதைகள். சிறுகதையில் உத்தி, மொழி நடை,
வர்ணனை இவற்றில் கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் சொல்வதற்கில்லை.
ஆனால் 2000க்குப் பிறகு அவர் எழுதியிருக்கும் கதைகளின் மொழி உத்தி
ஆகியவற்றில் கும்பமுனி கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.
கட்டுரைகள் அதிகம் எழுதிக்கொண்டிருக்கிற காரணத்தினாலோ என்னவோ
இக்கதைகள் கட்டுரைப் பாங்கான ஒரு மொழிநடையைக் கொண்டிருப்பதும்
கும்பமுனியின் கேலியும் கிண்டலும் குசும்பும் தான் கட்டுரைகளை கதைகளாக்கி
இருப்பதில் பெரும்பங்காற்றி இருக்கின்றன என்றும் சொல்லலாம்.


நாஞ்சிலார் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் என்று அவர் நாவல்களை
முன்வைத்து நான் ஏற்கனவே பதிவு செய்திருப்பதிலிருந்து சிறுகதைகள்
எவ்விதத்திலும் மாறவில்லை. சொல்லப்போனால் சிறுகதைகள் பெரும்பாலும்
ஆண் கதை மாந்தர்களைச் சுற்றி சுற்றியே வருகின்றன. ஒன்றிரண்டு
சிறுகதை விதிவிலக்காக 'உபாதை ' சிறுகதையைச் சொல்லலாம்.
சில கதைகளில் 'சும்மா' வந்து தலையைக் காட்டிவிட்டு போகும்
பெண்கள்.. பல கதைகளின் அதுதானும் கிடையாது !

நாஞ்சிலாரின் படுவப்பத்து கதையை வாசிக்கும் போது புதுமைபித்தனின் புதிய கந்தபுராணம்
சிறுகதை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழ் இலக்கிய விமர்சனங்களில் ஒப்பீட்டாய்வு என்ன காரணத்தினாலோ பெரும்பாலும்
ஒதுக்கப்பட்டே வந்திருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகளுடன் நாஞ்சிலாரின் சிறுகதைகளை
ஒப்பீட்டாய்வு முறையில் அணுகுவது விமர்சன உலகில் ஆரொக்கியமான ஒரு சூழலை
உருவாக்கும்..

தொன்மங்களை புராணங்களை அறிந்த படைப்பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்
நாஞ்சிலார். தான் தமிழுக்கு எழுத வந்ததன் காரணகர்த்தாக்களில் ஒருவராக
அன்றைய பம்பாய் தமிழ்ச் சங்கம் நடத்திய இராமயண வகுப்பும் வகுப்பெடுத்த
ரா.பத்மநாபன் என்று ......... குறிப்பிடும் நாஞ்சிலார் இன்றுவரை புராணங்களின் தொன்மத்திலிருந்து
கதைகள் எழுதியதாகத் தெரியவில்லை! (அப்படி எதுவும் எழுதப்பட்டிருந்தால் அதை
நான் வாசிக்கும் அனுபவம் கிட்டவில்லை என்று ஈண்டு பொருள் கொள்க!)

ராமாயணம் படிச்சா ப்டிச்சிருக்குனு சொன்னா உடனே சீதையைப் பத்தி எழுதித்தான் ஆகணுமா,
எழுதாட்டி என்ன? எழுதுனதை விமர்சிக்கலாம், இதை ஏன் எழுதலை, நீ அதை ஏன் எழுதலைனு
விமர்சனங்கிற பேர்லே சொல்லிக்கிட்டே போகுது பாருங்க... இதுகளுக்கெல்லாம் நான் என்னத்தைச்
சொல்லட்டும் இன்னும் என் பாட்டன் கோவணத்தையே எழுதி முடிக்கலை, அதுக்கப்புறமில்ல
படிச்சதும் பிடிச்சதும்னு ..... கும்பமுனியின் அடுத்தக் கதையில் வரலாம்
சரி இருக்கட்டும்... இப்போதெல்லாம் நாஞ்சிலாரின் கட்டுப்பாட்டுக்குள்
கும்பமுனி இல்லை என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள், உண்மையா நாஞ்சில் சார்?

நன்றி.

(12-2-2012 ஞாயிறு மாலை மும்பை தமிழ்ச் சங்கத்தில் மும்பையின் பல்வேறு
அமைப்புகள் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில்
நாஞ்சில் நாடன் சிறுகதைகள் குறித்த என் (ஆய்வுரை) உரை ..
.

Tuesday, February 14, 2012

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்
ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால்
திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு
இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு.

இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும்.
ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க
முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க
அவன் மட்டும் தான் காரணமா?

உண்மையான குற்றவாளிகள் யார்?

*பள்ளி நிர்வாகம்*
. எப்போதும் 100% மாணவர்கள் தேர்ச்சி இருந்தே ஆகவேண்டும்
என்று ஆணையிடும் பள்ளி நிர்வாகம். அதற்காக நிர்பந்திக்கப்படும் ஆசிரியர்களும்
வகுப்பறைகளும். பாடப்புத்தகம் படிப்பது தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தினால்
மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற தவறான கருத்து பரப்புரை.
எனக்குத் தெரிந்த ஒரு பள்ளி கூடத்தில் மாணவ மாணவியர் இரவில்
பள்ளி கூடத்தில் தங்கியாக வேண்டும். காலையில் 7 மணிக்கு வீட்டுக்கு
வந்து குளித்து உடைமாற்றி சாப்பாடு எடுத்துக்கொண்டு மீண்டும்
வகுப்புகளுக்குப் போக வேண்டும். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மீது
அவ்வளவு அக்கறை அந்த பள்ளி கூடத்துக்கு!

சில ஆசிரியர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளின்
வடிகாலாக "நான் ரொம்பவும் கண்டிப்பான டீச்சராக்கும்!" என்ற போர்வையில்
நடத்தும் அதிகார துஷ்பிரயோகங்கள்.

குடும்பம்
----------

அம்மா அப்பாவுக்கு எப்படியும் தன் பிள்ளை எஞ்சினியர் ஆகிவிட வேண்டும் என்பதுதான்
ஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் பெருகிவரும் பொறியியல் கல்லூரிகள், அங்கே நடக்கும்
பி.இ. டிகிரி விற்பனை சந்தை ரொம்பவும் லாபகரமான தொழிலாக கொடி கட்டிப் பறப்பது
இதனால் தான். நடுத்தர குடும்பத்தில் இப்போதெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு
மேலிருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் தங்கள் குழந்தைகளின்
மீது சுமைகளாக ஏற்றி வைக்கும் செயல். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின்
வாரிசுகள் தான் என்றாலும் பெற்றோர்களின் நகல்கள் அல்ல. இந்தப் புரிதலை
அதிகம் படித்த பெற்றோர்களும் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தங்கள்
வாரிசுகளை நினைத்து அச்சம், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சம்,
நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் எஞ்சினியராகிவிட்டால், தங்கள் குழந்தையும்
எப்படியும் எஞ்சினியர் ஆகியே தீரவேண்டும். இல்லையென்றால்,
அந்த ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே
முடியாது, அந்த அச்சமும் எதிர்பார்ப்பும் பல நேரங்களில் அளவுகடந்துப் போய்விடுவதாலும்
நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களைத் துரத்திக் கொண்டே இருப்பதாலும்
அவர்களும் தங்கள் குழந்தைகளை அலைக்கழிக்கிறார்கள். விளைவு..?
ஒரு குழந்தைக்கு தன் ஆசைகளை, தன் இயலாமைகளை தன் தோல்விகளை,
பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும்
எரிகிற வீட்டில் பெட்ரோலை ஊற்றிவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.
90 விழுக்காடுக்கு குறைவாக தங்கள் பிள்ளை மதிப்பெண் எடுத்திருந்தால்
விரக்தியின் உச்சத்திற்கே போய்விடும் பெற்றோர்களை மட்டுமே
இப்போது நாம் பார்க்கிறோம்.
அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போய்வரும் சூழலில் 10 ஆம் வகுப்பு
வந்தவுடன் இருவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து வீட்டிலிருந்து
அந்தக் குழந்தையைக் கவனிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு
நடத்தும் நாடகம் இருக்கிற்தே அது நம் கற்பனைக்கு எட்டாதது.

கோச்சிங் க்ளாஸ்
-----------------
ஒரு காலத்தில் கோச்சிங் க்ளாஸ் போவது என்பது அந்த மாணவனுக்கு மட்டுமல்ல
அவன் படிக்கும் பள்ளி கூடத்துக்கும் தரக்குறைவான ஒரு செயலாக பார்க்கப்பட்டது.
இன்று? பள்ளி நிர்வாகம், வீடு குடும்பம் இதெல்லாம் போதாது என்று கோச்சிங்
க்ளாஸ்கள்.... ஒரு வீதிக்கு ஒன்றிரண்டு.. நம் பிள்ளைகள் பாஸாகிவிடுவார்கள்
அதுவும் 80 முதல் 90 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து என்ற உத்திரவாதத்துடன்!
இந்தக் கோச்சிங் க்ளாஸ்களின் கால அட்டவணையைப் பார்த்தால் த்லைச் சுற்றும்.
ஒரு கோச்சிங் க்ளாஸ் டாய்லெட் கதவுகளில் கணக்கு சூத்திரங்களை ஒட்டி
வைத்திருக்கும் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு கொடுத்திருந்தார்கள் என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன். அதாவது மாணவர்கள் கக்கூசிலிருக்கும் போது கூட
நேரத்தை வீணாக்காமல் கணக்குப் பாடம் படிக்கச் சொல்லிக் கொடுக்கிறார்க்ளாம்!
காலையில் எழுந்து பல் துலக்குவதிலிருந்து இரவு எத்தனை மணிக்குத் தூங்க
வேண்டும் என்பதை அட்டவணைப் போட்டு மாணவர்களுக்கும் அதைக்
கண்காணிக்க பெற்றோர்களுக்கும் கொடுத்திருக்கும் புகழ்பெற்ற பள்ளி கூடங்களையும்
கோச்சிங் க்ளாஸ்களையும் நானறிவேன்.

விளைவுகள்
-----------------

மாணவன் ஆசிரியரைக் கொன்றது சரியா தவறா என்று பட்டிமன்றம் நடத்துவதை
விடுத்து சமூக சூழல்களையும் இதெற்கெல்லாம் யார் யார் பொறுப்பு என்பதையும்
சமூக அக்கறையுடன் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
கொலை செய்யப்பட்டது அந்த ஆசிரியர் மட்டுமல்ல, அந்த மாணவனும் கூடத்தான்.
நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்தாக வேண்டும் என்ற
அபாயச் சங்குதான் இம்மாதிரி சம்பவங்கள்.
யோகா, நடனம், இசை, கராத்தே என்று மாணவர்களுக்கு இளம் வயதில்
கட்டாயப்பாடமாக்க வேண்டும்.
கொலைவெறி பாடலை ரசிக்கச் சொல்லிக்கொடுத்து விட்டு அந்தச் செயலை
மட்டும் விமர்சிக்கும் தகுதி இந்தச் சமூகத்திற்கு கிடையாது.

(சென்னையில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் ஆண்கள் பள்ளியில்
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களை, திட்டமிட்டு
தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 14 இடத்தில் குத்தி கொடூரமாக கொலை
செய்திருக்கிறான். அந்தச் செய்தியின் தாக்கம் தான் இக்கட்டுரை. செய்தியில் இடம் பெற்ற ஆசிரியை, மாணவர்,
பள்ளிகூடம் , அவர் குடும்பம் இத்தியாதி தனிப்பட்ட எவர் மீதும் குற்றம் சுமத்துவது என்
நோக்கமல்ல. ).