Thursday, October 27, 2011

ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை –

பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள் இலத்தீனமெரிக்க-ஆப்ரிக்க பெண் போராளிகளின் கவிதைத் தொகுதிகள் உலக மொழிகளில் நிறைய வெளியாகி இருக்கின்றன. மிகச் சிறு வட்டங்களில், குறுகிய சுற்றில் மட்டுமே இதுவரை இருந்துவந்த ஈழவிடுதலைப் பெண் போராளிகளின் கவிதைகள் முதன் முதலாக ஒரே தொகுப்பாக வெளியாகி இருக்கிறது. 160 பக்கங்களில் பெண்ணிய இணைய சஞ்சிகையான ஊடறுவும், தமிழகத்தின் புகழ்வாய்ந்த பதிப்பகமான விடியலும் இணைந்து பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் பெயரில் இந்நூலினைப் பதிப்பித்திருக்கிறார்கள். சொல்லாத சேதிகள் துவங்கி பெயரிடாத நட்சத்திரங்கள் வரை ஈழக் கவிதைகளின் பன்முகத் தோற்றங்களும் வளர்ச்சியும் குறித்ததாக 21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி அமைந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த யமுனா ராஜேந்திரன் – கருத்தாளர்களாக பங்கு கொண்ட றஞ்சி – ஆழியாள் – புதியமாதவி ஆகியோரின் குரல்களை கேட்க இங்கே அழுத்துங்கள்.

http://www.youtube.com/watch?v=NCGj891pMVU

http://www.youtube.com/watch?v=z4UPpiFnYxI

http://www.gtntv.net/?p=6825

Sunday, October 23, 2011

ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)

பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சிற்பி.

பிற்காலத்தில் தேடலை நோக்கிய பயணத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் அபரிதமான ஒலிச்சேர்க்கை நெருடலாகிப் போனது. அப்போது வானம்பாடிக் கவிஞர்களும் எங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை. எனினும் சிற்பி என்ற கிராமத்து நதி விளை நிலங்களை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டதும் எண்ணற்ற கிளைநதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான ஜீவநதியாக வற்றாத நீருடன் இலக்கிய உலகில் வளம் சேர்த்துக்கொண்டிருப்பதும் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருமைச் சேர்க்கும் உன்னதச் சரித்திரம்.

அண்மையில் சிற்பியின் பவளவிழா (ஜூலை 2011) மிகச்சிறப்பாக கோவையில் கொண்டாடப்பட்டிருக்கிறது. விழாவை ஒட்டி நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கவிஞர் சிற்பி பவளவிழா மலர், கவிஞர் சிற்பி பவளவிழா நிகழ்வுகள் பதிவுகள், சிற்பி அகமும் புறமும், சிற்பியின் நெஞ்சம் என்று மிக நேர்த்தியான புத்தகவடிவில். புத்தகங்களைப் புரட்டியுவுடன் கவிஞர் சிற்பி மீது ஏற்கனவே இருந்த பிரமிப்பு இரட்டிப்பானது என்றுதான் சொல்ல வேண்டும்.

கவிஞர் சிற்பின் படைப்புகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன் என்றோ கவிஞர் சிற்பியுடன் எனக்கு இலக்கிய வட்டத்தில் தொடர்புகள் இருக்கிறது என்றோ சொல்லிக்கொள்ளும் படி எதுவுமில்லை. 2006ல் என் கவிதை தொகுப்பு நூல் ‘நிழல்களைத் தேடி’ சிற்பி கவிதைச் சிறப்பு பரிசு பெற்றது. அப்போது விருதை நேரில் சென்று வாங்கும்படியாக எனக்கு வேண்டிய நண்பர்கள் அறிவுரை சொன்னார்கள். நானும் என் வருகையை கவிஞர் சிற்பியுடன் தொலைபேசியில் உறுதி செய்தேன்.

விருது வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றதும் சிற்பியுடன் சேர்ந்து சிற்பியின் குடும்பத்தாரின் விருந்தோம்பலும் வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் இனிய அனுபவமாக அமைந்தது. அதன்பின் சிற்பியின் அந்தப் பிரமாண்டம் மேற்கொண்டு சிற்பியுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு தடையாக இருந்ததோ என்று இப்போதும் நினைக்கிறேன்.! சிற்பியை அன்னாந்துப் பார்த்து அதிசயிக்கும் ஒரு குழந்தையாக மட்டுமே … இப்போதும் நான்…

மகாகவி பாரதிக்கு கிடைக்காத வாய்ப்பும் வசதியும் சிற்பிக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். வானம்பாடிக் கவிஞர்களின் கனவுகளை எட்டிப்பிடித்த நட்சத்திரம் சிற்பி. இதெல்லாம் அடையவும் அடைந்ததை தக்கவைத்துக்கொள்வதும் சமூக சூழலில் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அரிதினும் அரிதான அந்த வானத்தை வசப்படுத்திய ஆற்றல் இந்த வானம்பாடியின் வெற்றியின் ரகசியமா? சாதிக்க முடியாத அனைத்தையும் சாதித்துக் காட்டும் வல்லமை சிற்பிக்கு மட்டும் எப்படி சாத்தியமானது?

சிற்பியைப் பற்றிய சிலரின் பதிவுகள் இக்கேள்விகளுக்கான பதில்களாய் அமைந்திருக்கின்றன.

கோவையில் நான் மிகவும் மதிக்கும் இரு எழுத்தாளர்களின் சிற்பி குறித்து சில உண்மை சம்பவங்களை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள்.

கோவை ஞானி:
——————
மார்க்சியவாதியான எழுத்தாளர் ஞானி தனக்கும் சிற்பிக்குமான கருத்து வேறுபாடுகளைப் பற்றிய பதிவில்

‘கவிஞர் சிற்பி அவர்களும் கவிதைக்கும் கவித்துவத்திற்கும் முதன்மை தரும் நோக்கில் மார்க்சியத்தை ஓரத்திற்கு ஒதுக்கியதோடு மார்க்சியப்பார்வையிலிருந்து கவித்துவத்தை மேலெடுக்க முடியாது என்பது போல கருதினார் ‘ என்கிறார். சிற்பியின் கருத்து சரிதான் என்பதை (அறிந்தோ/அறியாமலோ?) அய்யா ஞானி அவர்களின் அடுத்த வரிகள் உறுதி செய்கின்றன.

“வானம்பாடி இயக்கக் காலத்தில் கவிஞர் சிற்பி அவர்கள் எழுதிய கவிதைகளைவிட வானம்பாடி இயக்கச் செயல்பாடு நின்ற பிறகு சூரியநிழல் தொடங்கி கிராமத்து நதி முதலிய தொகுப்பில் உள்ள கவிதைகளை அவர் இயற்றிய காலத்தில் அவரது கவித்துவ ஆற்றல் சிறப்பாகவும் மேலோங்கியும் வெளிப்பட்டதை என்னால் உணர முடிந்தது. தமிழ்ச் சூழலில் மார்க்சியமும் இருத்தலியலும் எங்கோ ஓரிடத்தில் இணைந்தன் விளைவாக பிரபஞ்ச இயக்கம் தொடங்கி மனித வாழ்வியல் பற்றித் தீவிரமான கேள்விகள் நமக்குள் எழுந்தன என்பதையே இதற்குக் காரணமாகக் கூறமுடியும். இவ்வகைக் கவிதைகள் கவிதைக்குத் தேவையான அழகியல் என்பதையும் கடந்து மெய்யியல் தளத்தை உள்வாங்குவதன் விளைவாக கவிஞர்களுக்குள் கவித்துவம் உச்சம் பெறுகிறது” என்கிறார்.

இக்கருத்து மார்க்சியவாதிகளுக்கு மட்டுமானதல்ல. இயக்கம் சார்ந்த இசம் சார்ந்த தளத்தில் இயங்கும் அனைத்துப் படைப்பாளருக்குள்ளும் நிகழும் ஒரு மாற்றம் என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ப்வர்களும் அதை நோக்கிய தங்கள் அடுத்தக் கட்ட பயணத்தைத் தேடும் படைப்பாளர்களின் தேடல் உன்னதமான படைப்புகளுக்கான முகவரிகளாக மாறுகின்றன.

மனிதர்களைக் கையாளுவது என்பது ஒரு கடினமான செயல். அதற்கான பயிற்சி வகுப்புகள் நான் வேலைப்பார்த்த பன்னாட்டு வங்கியில் எங்களுக்கு அடிக்கடி நடத்தப்படும். அவர்கள் சொல்லும் ஒரு கருத்து ‘வின் வின் பாலிஸி’ WIN WIN POLICY யாருக்கும் ஏமாற்றமோ தோல்வியோ கிடையாது இந்த ஆட்டத்தில் என்பது தான் மிகவும் முக்கியம். இலக்கிய வட்டத்தில் இந்த சூத்திரத்தை காண்பது மிகவும் அரிது. ஆனால் சிற்பி இந்த சூத்திரத்தின் சூத்திரதாரியாக இருக்கிறார் என்பதை பலரின் பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

எனினும் மதக்குருமார்கள், முதலாளிகளுடன் வானம்பாடி சிற்பியும் என்பது நெருடலாகதான்
இருக்கிறது என்பதை மறுப்பதற்க்கு இல்லை.


எழுத்தாளர் ஞானி அவர்கள் சொல்வது போல “எத்தனையோ தளங்களில் சிற்பி தொடர்ந்து இயங்கியிருக்கிறார். எந்த ஒரு கருத்தரங்கிலும் சிற்பியின் நீண்ட அழகிய இனிய உரை அனைவரது மரியாதைக்கும் உரியதாகவே இருக்கும். இதனால் பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் ஆய்வுநிறுவனங்களும் சிற்பியை விரும்பி அழைக்கின்றன. சிற்பி தமிழ்ச்சமூகத்தின் அனைத்துவகை மனிதர்களோடும் பெரியவர்களோடும் நெருக்கமான உறவு கொண்டிருக்கிறார். சைவமதத் துறவியரும் அவரை மதிக்கின்றனர். முதலாளிகளோடும் அவருக்கு முரண்பாடு இல்லை. மார்க்கியக் கட்சியனரும் அவ்ரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிற்பி அவர்களோடு சில காரணங்களுக்காக நான் மாறுபட்ட போதிலும் கோவை வட்டாரத்தில் எந்த ஒரு தமிழயக்கத்தையும் மையத்தில் சிற்பி இல்லாமல் நடத்த இயலாது” என்ற பதிவு இக்கருத்தை உறுதி செய்கிறது.

நாஞ்சில் நாடன்:
——————-

இன்னொரு முக்கியமான பதிவாக நாஞ்சில் நாடன் அவர்களின் கருத்து. தமிழ் இலக்கிய வட்டத்தில் நடக்கும் குடுமிப்பிடி சண்டைகள், டாஸ்மார்க் கடையிலிருந்து நேரடியாக விழா மேடைக்கு வந்து சண்டை போடத் தயாராக இருப்பவர்கள், குழுச்சண்டைகள், வாக்குவாதங்கள், இலக்கிய விமர்சனங்கள் தனிமனித வாழ்க்கையின் அவதூறுகளாக மாறும் அவலம்…. இத்தியாதி நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் சின்னதாக ஓர் அற்ப சந்தோஷம் ஏற்படும். அம்மாதிரியான சூழலிலிருந்து ஒதுங்கி ஒதுக்கப்பட்டு வாழும் வாழ்க்கை.

இச்சூழலில் வாழும் சிற்பியின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாக ‘சிறியன சிந்தியாதான்” என்பதை விளக்க வரும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் எழுதுகிறார்…”சாகித்திய அகாதமியின் தமிழ்ப்பிரிவின் செயல்பாடுகளை என்னைவிடக் கடுமையாக விமர்சனம் செய்த இன்னொரு படைப்பாளி தமிழில் இல்லை. சுந்தரரமாசாமி மறைவுக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த முதல் இரங்கல் கூட்டம் கோவை விஜயா பதிப்பகம் நடத்தியது. அன்று சிற்பியுடன் நானும் மேடையில் இருந்தேன். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அன்று நான் கரை கடந்து பேசினேன். சிற்பி காயப்படும்படியாகவும் என்னுடைய ஆதங்கம், சுந்தரராமசாமிக்கு சாகித்திய அகதெமி விருது வழங்கப்படவில்லை என்பது.
அது போல விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கோவையில் ஆ.மாதவனுக்கு விருதளித்தபோது நான் பேசியதும் தொடர்ந்து எனக்கு விருது அறிவிக்கப்பட்ட பின்பு நான் பேசிய மேடைகளும், அளித்த செவ்விகளும் என் இயல்புப்படிக் காட்டமானவை. சிற்பி ஒரு முறைக்கூட என்னிடம் முகம் கறுத்துப் பேசியதில்லை, எது குறித்தும்.
மேலும் எனக்கு வலிக்காமல் அடிக்கவும் தெரியாது. நண்பர் வேனிலிடம், சிற்பின் எதிர்வினை, “நாஞ்சில் அப்படித்தானயா பேசுவாரு… அப்படிப் பேசலேன்னா
அது நாஞ்சில் இல்லே..!”

சிற்பி…. உங்களைச் சுற்றி இருக்கும் பால்வீதியின் ரகசியம் இப்போது புரிகிறது
எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக…!

சூரியநிழல்:
————–

சிற்பி உங்கள் கவிதைகளில் சூரியநிழல் என்னை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

உங்கள் சூரியநிழல் கவிதையில்..

“யாருடைய
நிழல் நான் ?
அப்பா.. தாத்தா
என் முப்பாட்டனார்/
எண்ணத் தொலையாத
என் மூதாதையரின்
முனை முறியாச் சங்கிலி?

யாருடைய நிழல் நான்?
என் கிராமத்து புழுதி?
ஏகாந்தத் தவமிருக்கும்
ஒற்றைப் பூவரசு?
தலை தெறிக்க ஓடி
நுரை கக்கும் ஆறு?
சில் வண்டு ரீங்கரிக்கும்
மகாவிருட்ச வனங்கள்?
காடுகளின் சங்கீதமான
அருவிகள்?

யாருடைய நிழல் நான்?

உங்கள் கவிதை வெளிவந்தது 90களில் நான் வாசித்தது 95களில்.
என் கவிதை நிழல்களைத் தேடி (2006) தொகுப்பில் 10 கவிதைகள்
சூரிய நிழலின் தொடர்ச்சியாகவே என்னையும் அறியாமல்
எழுதப்பட்டிருந்ததும் அந்தப் புத்தகத்திற்கே சிற்பியின் பரிசு
கிடைத்ததும் ரொம்பவும் தற்செயலாக நடந்ததை என்னவென்று
சொல்லட்டும்?!

என் கவிதையிலிருந்து சில வரிகள்:

என்னுடன் பிறந்ததா என் நிழல்?
என் தாயின் கருவறையில்
என்னைத் தாங்கியிருந்த
பனிக்குடமா என் நிழல்?
…..

நிழல்
என் சாயலில்லாத என் நிழல்
நிழல்
எனக்குச் சொந்தமில்லாத என் நிழல்

நிஜமிலலாமல் வாழ்ந்துவிட முடிகிறது
நிழலில்லாமல் வாழ்வது மட்டும்
நிழல்களுக்கும் சாத்தியமில்லை.
நிஜங்கள் களைத்துக் கண்மூடித் தூங்கும்
நிழல்கள் எப்போதும் விழித்தே இருக்கும்
நிஜங்களைக் காக்கும் காவலனாய்
நிஜங்களுடன் வாழ்க்கை நடத்தும் காதலனாய்.
….

நிஜங்களுக்குத்தான்
ஆடைகள், அணிகள், அலங்காரங்கள்
நிழல் எப்போதும் உண்மையாய்
அலங்காரமில்லாமல்
நிர்வாணமாய்க் கடைசிவரை
நிஜங்களின் இருத்தலை
நிச்சயப்படுத்திக்கொண்டு…

என்று காலமெல்லாம் நிழலை ரசிக்கவும் நிழலுடன் வாழவும்
நிழலுடன் நிழல் யுத்தம் நடத்தவும் எனக்கும் வழிகாட்டிய
உங்கள் சூரியநிழலுக்கு நன்றியுடன்…….

(நன்றி : திண்ணை)

Monday, October 10, 2011

தாழ்த்தப்பட்ட மக்களை காந்தி அரிஜன் என்று அழைத்து சரிதானே?தோழர் மதிமாறனுக்கு என் விளக்கங்கள்


அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?

காந்தி குறித்த மேற்கண்ட பதிவை அண்மையில் வாசித்தேன்.
தோழர் மதிமாறனின் பதில் ஒரு வகையில் சரியானது தான் என்றாலும்
அந்தப் பெயரின் பின்னால் இருக்கும் வரலாற்றையும் காந்தி திட்டமிட்டே
நன்கு அறிந்தே தலித்துகளை இழிவுப்படுத்தும் ஒரு அடையாளப்பெயரைக்
கொடுத்தார். சிவஜன், விஷ்ணுஜன் என்ற வாதங்களை எல்லாம் தாண்டி
அவர் உண்மையில் என்ன செய்தார்? என்பதை வெளிக்கொண்டுவருவது
கணம் மதிப்பிற்குரிய மகாத்மா அவர்களின் அடையாளத்தை எல்லோரும்
புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

24-09-1932ல் புனா ஒப்பந்தத்திற்குப் பின் இதைச் செய்திருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்சகனாக தன்னைக்
காட்டிக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் ... "என்னை எதிர்த்தாயா...
இரு இரு உன்னை உன் மக்களை என்ன செய்கிறேன் பார்!" என்ற
மகாத்மாவின் ஆணவம்... இந்தப் பெயரை வேண்டுமென்றே அவர்
தேர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்க வேண்டும்!
30-09-1932 அகில இந்திய தீண்டத்தாகதவர்கள் சங்கத்தை ஆரம்பித்தார்.
பின் அந்தச் சங்கத்தின் பெயரை 'தீண்டத்தகாதவர்களின் சேவகன் 'என்று
அழைத்தார். மீண்டும் அதே சங்கத்தை "ஹரிஜன் சேவா சங்க்"
என்றழைக்கத் தொடங்கினார். 11-02-1933ல் 'ஹரிஜன்' என்ற
பெயரில் வாத இதழ் ஒன்றையும் ஆரம்பித்தார்.

எங்கிருந்து இந்தப் பெயரைக் காந்தி தேர்ந்தெடுத்தார்? அவர் அடிமனதில்
தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள்/ விஷ்ணுஜன் என்ற
எண்ணம் உண்டாகியது என்றால் உண்மையிலேயே அதற்காக காந்தியைப்
பாராட்டுவதில் அப்படி ஒன்றும் பெரிய குற்றமில்லை.
அவர் ஏன் சிவஜன், அல்லாஜன், ஏசுஜன் என்றெல்லாம் அழைக்கவில்லை
என்பதைக்கூட மன்னித்துவிடலாம் தான்!
ஆனால் தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்த இந்து மதத்துறவி
பார்ப்பன சமூகத்தைச் சார்ந்ட நர்ஸி மேத்தா தன் பாடலில் இச்சொல்லை
முதன்முதலில் கையாளுகிறார். இந்துக்கோவிலின் பிராமண பூசாரிக்கு
தேவதாசிகள் மூலமாகப் பிறந்தக் குழந்தைகளுக்கு இந்து சமூகம்
தந்தையின் அடையாளத்தைக் கொடுப்பதில்லை. அவர்களைத்தான்
நர்ஸி மேத்தா தன் பாடலில் "ஹரிஜன்" என்ற சொல்லால் அடையாளப்படுத்தினார்.
அந்தச் சொல்லைத்தான் தலித்துகளை அடையாளப்படுத்த காந்தி தேர்ந்த்தெடுத்துக்கொண்டார்.
இப்போது புரிகிறதா... அவர் தலித்துகளுக்கு மட்டும் இந்தப் பெயரைக் கொடுத்ததன்
காரணம்?!!!
இந்த வரலாறெல்லாம் காந்திக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
அவரே சத்தியவாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்!
"குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞர் தன் பாடலில் பயன்படுத்திய இச்சொல்
தலித்துகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதுவதால் பயன்படுத்தியதாகவும்
ஒத்துக்கொள்கிறார். (on the strength of its having been used by the first known poet
saint of gujarat, i felt it to be acceptable and started using it)

இந்துக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காந்திக் கொடுத்த அடையாளம் இது.
இந்த வரலாற்றை அம்பேத்கரியக்க வாதிகள் வெளிச்சப்படுத்த வேண்டும்.
தலித்துகள் கடவுளின் குழந்தைகள் என்றால் தலித் அல்லாதவர்கள் எல்லாம்
சைத்தானின் குழந்தைகளா? என்று எதிர் கேள்வி கேட்க வேண்டும்.

Ref.:

DHANANJAY KEER, AMBEDKAR 'LIFE AND MISSION ' ps 301-302
P. MOHAN LARBEER ' AMBEDKAR ON RELIGION' p 130
Dr. MURUGU DORAI, "Ambethkar Kaappiyam",
Epic of Dr Babasaheb Ambedkar's Biography (in Tamil), Part 3. ps 497-501

Saturday, October 8, 2011

தேவபிரசன்ன ராஜ்யம்


தடுக்கி விழுந்தால் தங்கச் சுரங்கங்கள், ஓடைகள் எங்கும் வைரக்கற்கள்
என்று எங்குப் பார்த்தாலும் செல்வம் கொட்டிக்கிடக்கும் ராஜ்யம் தான்
தேவபிரசன்ன ராஜ்யம். அந்த ராஜ்யத்தில் தான் உலகிலேயே
அதிகமாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். கல்வி அறிவில்லாதவர்களே
கிடையாது என்பது ராஜ்யத்தின் இன்னொரு சிறப்பு.
ராஜ்யத்தின் பெண்கள் ரொம்பவும் அழகானவர்கள்.
கனத்த முலைகளுடன் இறுகக்கட்டிய கச்சை.மாராப்பு அணியாத
தாமரைக்கூட்டங்கள் அந்தப் பெண்கள். இதுவே ராஜ்யத்தின்
பெண்களுக்கான தேசிய உடை. கணினி, அது இது என்று பல்வேறு ராஜ்யங்களுடன்
ஏற்பட்ட தொடர்புகளால் இப்போதெல்லாம் பெண்கள் ராஜ்யத்தின் தேசிய
உடைகளை எப்போதும் அணிவதில்லை.

ராஜாங்க காரியங்கள், விசேஷங்கள், கோவில் விழாக்கள், திருமண வைபவங்கள்
தவிர மற்ற நாட்களில் எல்லாம் மாராப்பு போட்டு மறைத்துக் கொள்ளும்
உடைகளையே மற்ற ராஜ்யத்தின் பெண்களைப் போல அணிகிறார்கள்.
இதனால் தான் இப்போது பெண்ணியம் சார்ந்த பலப் பிரச்சனைகள் வந்துவிட்டதாக
சில சமூகவியாலார் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள்.\
அந்தக் காலத்தில் பெண்டுகள் மாராப்பு அணிவதில்லை என்பதால் அவர்களை
நேரில் சந்திக்கும் எவரின் பார்வையும் நேரடியாக அந்த இடத்தில் தான் விழும்.
பிறகென்ன..? வேறு எங்கும், மேலும் கீழும் பார்வை பயணிக்க சந்தர்ப்பமே
இருக்காது. 'தோள்கண்டார் தோளே கண்டார் மார்பு கண்டார் மார்பே கண்டார்'
என்று அந்தப் பெண்டிரிடம் கண்டதைத் தான் பிற்காலத்தில் காவியங்களில்
எழுதி வைத்திருக்கிறார்கள். அது தெரியாமல் இப்போது மாராப்பு போட்டதால்
உடம்பில் மற்ற அங்கங்களுக்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்
வந்துவிட்டது. அதனால் ஜிம், முகத்தை வசீகரமாகக் காட்டும் அழகுச் சாதானங்கள்:
என்று என்னவெல்லாமோ வந்துவிட்டது என்றும் இதுவும் உலகமயமாதலின்
தாக்கம் என்றும் மின்னிதழில் ஒருவர் எழுதி இருந்தார்.

முதலில் ராஜ்யத்துக்கு ஏன் தேவபிரசன்ன ராஜ்யம் என்ற பெயர் வந்தது?
என்பது ரொம்பவும் சுவராஸ்யமானக் கதை. தேவபிரசன்னம் என்பது கோவிலில்
சாமியின் முன்னால் குறிபார்த்து சொல்வது. அதாவது சோழி, வெற்றிலை, கண்ணாடி
போன்றவற்றைப் பயன்படுத்தி கோவிலின் கிழக்கு வாசலில் கோவிலின் தந்திரி
ராஜாங்கத்தின் பிரபலமான ஜோதிடர்கள் முன்னிலையில் சோழியை உருட்டி பார்ப்பார்கள்.
இது ஒருவகையில் எண் ஜோதிடம், கிளி ஜோதிடம் மாதிரிதான். இதிலிருந்து தான்
இன்றைக்கு மேனாட்டினர் பெருமையாகப் பேசும் TAROT CARD READING ஜோதிடமெல்லாம்
வந்தது என்பது உண்மைதான்.

ராஜியத்தின் எல்லா முடிவுகளையும் தீர்மானிப்பது மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும்
மந்திரிசபையோ அல்லது நீதிபதியோ அல்ல. அவர்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம்
தேவபிரசன்னத்திற்கு உண்டு. மந்திரிமார்கள், கனம் நீதிபதிகள், கல்வியாளர்கள்,
பத்திரிகை மேதாவிகள் எவராலும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளையும்
ராஜாங்கத்தில் தேவபிரச்சன்னம் பார்த்து தீர்த்துக் கொள்வார்கள். .
எதற்கெடுத்தாலும் போராட்டம், பேரணி, கதவடைப்பு என்று கலகக்குரல் கொடுக்கும்
"காசே தூங் ' கட்சிக்காரர்கள் கூட தேவபிரச்சன்னம் என்று சொல்லிவிட்டால்
போதும் கப்சிப். அப்புறம் அவர்களின் ஆ ஓ எல்லாம் புஸ்வானமாகிவிடும்.
அந்த விசயத்தை விட்டுவிட்டு வேறு எதையாவது கையில் எடுத்துக் கொண்டு
கூட்டம் போட ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படித்தான் ராஜாங்கத்தின் கடற்கரையில் சுனாமி வந்து ரொம்பவும் சேதம் அடைந்துவிட்டது.
ராஜ்யத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம். தேவபிரசன்னம் பார்த்ததில் பழைய ஏடு பக்கம் 888ல்
பார்க்கும் படி வந்தது. பழைய ஏடு முழுசாக யாரிடமும் இல்லை. இருப்பதும் கிழிந்து
நைந்துப்போய் தொட்டால் அப்படியே பொடிப்பொடியாகிவிடும் நிலையில் இருந்தது.
கணினி மேதாவிகள் நிறைந்த அந்த தேசத்தில் அதை அப்படியே ஒளித்தகடாக
மாற்றிவிடலாம் என்று சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் பழைய ஏட்டின் முதல் பக்கத்திலேயே
அதை நகல் எடுக்கவோ பிரதிகள் செய்யவோ கூடாது, மீறினால் என்று பத்துப் பக்கத்திற்கு
எழுதி வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது என்ன செய்வது?
அதுவும் 888 ஆம் பக்கம் என்றால் பழைய ஏட்டில் கடைசி அத்தியாயமாக இருக்கும்
என்றார் வயதான கோவில் தந்திரி.
ராஜாங்கத்தில் பெரிய குழப்பமே வந்துவிட்டது. தேவபிரசன்னம் பார்த்துவிட்டால்
அதில் வருகிறபடி கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லை என்றால் அதுவே
ராஜாங்கத்திற்கு சாபமாகிவிடும் என்று எல்லோரும் கவலைப்பட்டார்கள்.
இதையே சாக்காகப் பயன்படுத்தி இம்மாதிரியான காரியங்களுக்கு தேவபிரசன்னம்
பார்ப்பது சரியாகுமா? என்று 'காசே துங்' கட்சிக் காரர்கள் வரிந்து கட்டிக்கொண்டு
எழுதவும் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
வலைத்தளங்கள், மின்னிதழ்கள், ஃபேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ்,ஆர்க்குட் என்று உலகம்
பூரா இந்தச் செய்திப் பரவியது.
எப்படியொ இலண்டனில் இருக்கும் ஒரு ஆய்வு மாணவர் பழைய ஏட்டின் 888 ஆம்
பக்கத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுப்பிடித்து மை ஸ்பேஸில்
போட்டுவிட்டார். இலண்டன் லைப்பரரியில் அவர் வாசித்ததையும் பழைய ஏட்டின்
ஒரு பிரதி அங்கிருப்பதையும் அந்த ராஜாங்கத்தினரும் ஒத்துக்கொண்டார்கள்.

மை ஸ்பேஸ் என்ற கணினி சமூக தளம் பெரும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அதில் வேலைப்பார்த்தப் பலர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
மை ஸ்பேஸின் எதிர்காலம் என்ன? என்று அமெரிக்காவில் எல்லா பத்திரிகைகளும்
எழுதிக்கொண்டிருந்தன. இந்த பழைய ஏட்டின் செய்தி மை ஸ்பேஸ் மூலமாகப்
பரவியதிலிருந்து ஏகப்பட்ட ஜனங்கள் மை ஸ்பேஸில் புழங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தக் கம்பேனி இந்தியாவுக்கு அனுப்பிய சாஃப்ட்வேர் எஞ்சினியர்களை எல்லாம்
திருப்பிக்கூப்பிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அப்படி அந்த 888ஆம் பக்கத்தில் சொல்லப்பட்டிருந்தப் பரிகாரம் என்ன?
தீயர், சாணார், முக்குலர் இனத்தைச் சார்ந்த தலைப்பிள்ளையாகப் பிறந்த
குழந்தைகள் 2 வய்து முதல் 5 வயதுக்குள் இருக்கும் பால்குடி மாறாதக்
குழந்தைகள் 15 பேரின் கழுத்தில் அமாவாசை அன்று பூஜையில் வைத்திருந்த
மாந்திரித்த செப்பேடுகளைக் கட்டி தேசத்தின் நான்கு திசைகளிலும் திசைக்கு
4 வீதம் உயிருடன் புதைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும்.
15வது குழந்தையை ராஜாங்கத்தின் ராஜ்ய காரியங்கள் நடக்கும் ராஜதானி
வாசலின் முன்னால் புதைக்க வேண்டும். இப்படி செய்தால் ராஜாங்கத்திற்கு
ஏற்பட்டிருக்கும் ஜலகண்டம் நிவர்த்தி அடையும். பத்து நூறு வருடங்களுக்கு
ராஜாங்கத்திற்கு எவ்விதமான தண்ணீரால் ஏற்படும் அழிவும் வராது
என்று எழுதப்பட்டிருந்தது. 1746ல் பூத்தாண்ட கர்மாவின் ஆட்சியில்
பெருமழைப் பொழிந்து ஏரிகள் எல்லாம் உடைந்து பேரழிவு வந்தப்போது
இந்தப் பரிகாரம் செய்யப்பட்டது என்று பழைய சரித்திரத்திலிருந்து
பலர் ஆதாரங்களுடன் எழுதினார்கள். இப்போது இந்தப் பரிகாரத்தைச் செய்தார்களா?
என்பது தெரியவில்லை.
ஆனால் பல்வேறு கிராமங்களில் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில்
அதிகமாகக் காணாமல் போனதாகச் செய்திகள் வந்ததைத் தயவுச்செய்து
யாரும் இத்துடன் தொடர்புப் படுத்திப் பார்க்க வேண்டாம்.
அது வேறு இது வேறு ... என்று காவல்துறை ரொம்பவும் கறாராக
சொல்லிவிட்டது. இந்த மாதிரி எல்லாம் யோசிப்பதும் எழுதுவதும்
தீவிரவாதத்தை வளர்க்கும் என்று மந்திரிசபையும் கொஞ்சம் கடுமையாக
பேசியதால் டிவிக்காரர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

தேவபிரசன்னம் என்று ராஜாங்க காரியங்களுக்குப் பார்ப்பது போலவே தான்
அந்த ராஜியத்தில் மற்ற காரியங்களுக்கும் பிரசன்னம் பார்ப்பார்கள்.
அஸ்தமங்கள பிரசன்ன ஜோதிடம் என்று சொல்லுவார்கள்.
பிறந்த ஜாதகமெல்லாம் தேவையில்லை. அஸ்த என்றால் எட்டு. மங்கள என்றால்
மங்களகரமானப் பொருட்கள். குங்குமம், கண்ணாடி, தங்கம். மலர்கள், நெல் அல்லது அரிசி,
பழவகைகள், வெற்றிலை, தேங்காய் என்ற எட்டு மங்களகரமான பொருட்களைக்
கொண்டு சொல்லும் ஜோதிடம்.
இதன் கிளைகளாக தாம்பூல பிரசன்னம், நிமித்திக பிரசன்னம், பூ பிரசன்னம்
இத்தியாதிகள் வந்தது. இப்படித்தான் அந்த ராஜியத்தில் பிரசன்னங்கள் பிரசித்திப்
பெற்றன. எல்லாவற்றிலும் பிரசன்னம் பார்த்து செயல்படுவது அவர்களுக்கு
நம்பிக்கை என்று சொல்வதை விட அதுவே வாழ்க்கையாக இருந்தது.

ராஜாங்கத்தில் கணினி வல்லுநர்கள் அமெரிக்காவில் எல்லாம் போய் நிறைய சாதித்தார்கள்.
நாட்டில் நல்ல பணப்புழக்கம் இருந்தது. அவர்கள் எதற்கும் பிரசன்னம் பார்த்து செய்வது தான்
இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று மற்றவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக
நம்ப ஆரம்பித்தார்கள். அமெரிக்காவின் நாசாவில் கூட தேவபிரசன்ன ராஜாங்கத்தின்
விஞ்ஞானிகள் அதிகமாக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
ராக்கெட்டை அனுப்புவதற்கு முன் அந்த டீமிலிருந்து நம்பிக்கையான ஒருவர்
ரொம்பவும் ரகசியமாக தங்கள் ராஜ்யத்திற்கு வந்து அஷ்ட மங்கள பிரசன்னம் பார்த்து
ராசியான காரியவெற்றி தரும் நேரத்தைக் கணித்துவிட்டு போவாராம்.

தேவபிரசன்ன ராஜாங்கத்தின் இந்தப் பெருமையை அறிந்த இந்தியர்கள்
அதிலும் நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒலிம்பிக்
விளையாட்டில் மல்மாடி செய்த கசமாலம், பூதர்ஷவழக்கில் மாட்டிக்கொண்ட
ஆளும்கட்சி, சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம்
இத்தியாதியான பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேவபிரசன்னம்
பார்த்தால் என்ன? என்று ஒரு பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருக்கிறது.
டுடா, ரம்பானி எல்லாரும் இதற்கு ஒத்துக்கொண்டாலும் அது என்னவோ
சிறையில் இருக்கும் காஜா மட்டும் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்று
மக்கீரன், கீபோர்ட் வகையாறாக்கள் அவரவர் ஊகங்களை எழுதிக்
கொண்டிருந்தார்கள். அப்படியே தேவபிரசன்னம் நடந்து பழமொழி
வெளியில் வந்துவிட்டால் "சிறையில் ஒரு தேவிபிரசன்னம்"
என்று தான் சிறையில் எழுதிய கவிதைகளை தலைப்பிட்டு வெளியிடலாம்.தேவபிரசன்ன ராஜாங்க வனப்பகுதி ரொம்பவும் அடர்த்தியானது. அங்கிருக்கும்
ஆதிவாசிகள் ராஜாங்க தேவபிரசன்னம் நடக்கும் போது மட்டும் வருவார்கள்.
பூவும் பழமும் தேங்காயும் புதுநெல்லும் வெற்றிலையும் அவர்கள்தான்
எடுத்துவந்து தேவபிரசன்னத்திற்கு வைப்பார்கள். காலம் காலமாய் இதுதான்
வழக்கம். தேவபிரசன்ன வனப்பகுதியில் பாக்சைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகத்திலேயே அதிகமான பாக்சைடு இந்த வனப்பகுதியில் தான் இருக்கிறது
என்று சொன்னார்கள். வல்லரசுகள் எல்லாம் போட்டிப்போட்டுக்கொண்டு
தேவபிரசன்ன ராஜாங்கத்துடன் தொழில் வளர்ச்சி ஒப்பந்தங்கள் செய்யப்
போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஓடி வந்தன.
எந்த தேசத்துடன் ஒப்பந்தம் செய்துக் கொள்வது என்று ராஜாங்கம் ரொம்பவும்
குழம்பிப்போனது. வழக்கம்போல தேவபிரசன்னம் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள்.

"நீங்கள் தூங்கும் போது விழித்திருக்கும் ஓரு வல்லரசு ராஜ்யம் ஒரு பெண்ணை
உங்களுடன் பேச அனுப்புவார்கள். அந்தப் பெண் பெயர் ர, ரா, ரி, ரீ என்ற
ஏதாவது ஓர் எழுத்தில் முடியும். அவர்களுடன் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு
ஒப்பந்தம் செய்யலாம்" என்று கணித்து சொன்னார்கள்.

தேவபிரசன்னம் இதில் அப்படியே பலித்துவிட்டது. தேவபிரசன்ன ராஜியத்தில்
இரவு என்றால் அமெரிக்காவில் பகல். அங்கிருந்து ஹிரல்ராரிரீ என்ற பெண்மணி
வந்தார். தேவபிரசன்னத்தில் சொல்லிய எல்லாம் அவருக்கு மட்டுமே
ஒத்துப்போனதால் மேள தாளங்கள் முழங்க வெண்கொற்றக்குடைப் பிடித்து
பெண்கள் எல்லாம் மராப்பு போடாத தேசிய உடை அணிந்து வரிசையாக
நின்று மலர்த்தூவி யானைகளின் அணிவரிசை முன்னே செல்ல
நிமித்திகர் அஸ்த மங்கல பிரசன்னம் ஜோதிடம் கணித்த ஒரு நல்ல நேரத்தில்
ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டார்கள்.

இதுதான் தேவபிரசன்ன ராஜாங்கத்தின் சரித்திரம்..
இப்போது இந்த ராஜாங்கம் வறண்ட நிலமாக இருக்கிறது. மக்களுக்கெல்லாம்
பெயர் தெரியாத வியாதிகள் வேறு. என்ன குற்றம் என்று தெரியவில்லை.
சரி பரிகாரம் கண்டுப்பிடிக்க தேவபிரசன்னம் பார்க்கலாம் என்றால்
பழங்களோ, பூக்களோ, வெற்றிலையோ, சந்தணமோ, தேங்காயோ எதுவுமே
அந்த ராஜாங்கத்தில் இப்போது கிடைப்பதில்லை. அதாவது விளைவதில்லை.
இதெல்லாம் இல்லாமல் எப்படி பிரசன்னம் பார்ப்பது?
லண்டன் லைப்ரரியில் இருக்கும் அவர்களின் பழைய ஏட்டில் இதெல்லாம்
இல்லாமல் தேவபிரசன்னம் பார்க்கும் வழி ஏதாவது சொல்லப்பட்டிருந்தால்
தயவுச் செய்து தெரியப்படுத்தவும்.

-----------------------கதைக்கான சில பின்புலங்கள்:

*1746ல் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சியில் மேற்கண்ட 15 குழந்தைகளைப்
பலியிட்ட சம்பவம் உண்மையான வரலாறு.

*தங்கம், வைரம் இருந்தவரை வல்லரசுகள் ஆட்கொள்ளாத ராஜியத்தை
பாக்சைடு இருப்பது தெரிந்தவுடன் ஆட்கொண்டதும் அழிப்பதும்
நடக்கப்போகும் வரலாறு.
*இந்திய மண்ணில் பாக்சைடு கண்டுபிடிக்கப்பட்ட வனப்பகுதிகள் தான்
இன்றைக்கு இந்திய தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் மாவோயிஸ்டுகளின் போராட்டக்களம்.