Thursday, December 22, 2022

தெய்வம் தொழாஅள் ..யார் இவள்?



 ஆண் பெண் உறவில் பெண்ணை இழிவுப்படுத்தி அதைக்கொண்டுபோயி பெய்யற மழையோட தொடர்புபடுத்தி எழுதப்பட்ட உரைகள்தான் தமிழ் இலக்கிய உலகில் புனைவுகளின் பித்தலாட்டம்."

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் எண் – 55.
அறத்துப்பால், இல்லறவியல், வாழ்க்கைத் துணைநலம்.
திருக்குறளில் காலமெல்லாம், அனைத்து உரையாசிரியர்களும்
தவறாகப் பொருள் கண்ட திருக்குறள் இதுதான்.
இதில் அதிசயமாக உரை எழுதிய பெண்களும்
விதிவிலக்கல்ல,

பெண்ணின் கற்புக்கும் பெய்யும் மழைக்கும்
தொடர்புண்டு என்று சொன்னதுதான்
தமிழ் இலக்கியத்தில் ஆகப்பெரிய புனைவு.
பித்தலாட்டம்.
மழை அறிந்தவன் வள்ளுவன்.
மழை நேரமும் காலமும் அறிந்தவன்,
நட்சத்திரங்களின் இருப்பை அறிந்தவன்,
அரசனுக்கு நேரம் கணித்து சொன்னவன்
வானவியல் அறிவுடன் வாழ்ந்தவன் வள்ளுவன்.
அவன் “பெய்யெனப் பெய்யும் மழை” என்று
எதைச் சொல்லி இருப்பான்?

இக்குறளில் ஏன் : தெய்வம் தொழாஅள்” என்றான்?
யார் இந்த தெய்வம்?
ஓர் இல்லறவியல் பெண்ணை அடையாளம் காட்டுபவன்
எதற்காக “தெய்வம் தொழாஅள்” என்று உச்சமான
ஒர் அடையாளத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறான்?
“கணவன் திரும்பிவர பொய்கையில் புனித நீராடலுக்கு
புண்ணிய ஸ்தலங்களுக்கு அழைத்தப்போது
பீடன்று” என்று சொன்ன சிலப்பதிகாரம்
பெண்ணின் பீடு எது? என்று சொல்கிறது!
தினமும் தெய்வத்திற்கு பூஜை,
விரதம். கோவில் கோவிலாக சுற்றி வருவது..
இதெல்லாம் அறத்துப்பாலின் இல்லறவியல் அல்ல,
இல்லறவியலின் வாழ்க்கைத்துணை நலமும் அல்ல.
இதெல்லாம் வேண்டாம் இல்லறவியலுக்கு
என்று சொன்னவன் வள்ளுவன்.
உன்னோடு வாழ்கிறவனைக் கொண்டாடு.
அதுபோதும், அப்படி ஒரு துணை கிடைத்துவிட்டால்
அந்த வாழ்க்கைத்துணை நலம் என்பது
“பெய்யெனப் பெய்யும் மழை”
அவ்வளவுதான்..!
வெரி சிம்பிள். வெரி லாஜிக்.
இதை விட்டுட்டு அடேங்கப்பா…
கற்பரசி சொல்லிட்டா மழைவரும்னு சொல்லி
சொல்லியே மழையை வரவிடாம பயமுறுத்தி
.. நீங்களும் உங்கள் உரைகளும்..பித்தலாட்டங்கள்.
மழைனா பெய்ய வேண்டிய இடத்தில பெய்யனும்.
அன்பும் மரியாதையும் பூஜையும் நம்பிக்கையும்
இருக்க வேண்டிய இடத்தில இருக்கனும்.
அதுதான்டா இல்லறவியல்.
அப்படி இருந்திட்டா…
ஆஹா.. அவள் பெய்யெனப் பெய்யும் மழை..
எல்லா மழையும் வாழ்விப்பதில்லை.
பெய்கிற மழை எல்லாம் அறத்துப்பால் பேணுவதில்லை.
இப்படி ஒரு பெண் உனக்கு வாழ்க்கைத்துணையா
இருந்தா அவ “பெய்யென பெய்யும் மழை” மாதிரிடா.
காட்சி 1
என்ன இசக்கியம்மா வயக்காடு நட்டாச்சா?
எங்க நட, குளத்தில தண்ணி நிரம்பலியே
நாத்து நடறதுக்கு யோசனையா இருக்கு..
கிணறு இருக்குல்ல, ஒரு வயலையாவது நட்டுப்போடு,
நாறப்பய மழ ..பெய்ய வேண்டிய இடத்தில பெய்யாம
சம்சாரி பொழப்பக் கெடுக்குது..!”
ஊரில் கனமழை என்று தொலைக்காட்சியில் செய்திகள்
ஓடிக்கொண்டிருந்தப்போதுதான் இப்படி ஒரு காட்சியை நான் பார்த்தேன்.
மழை மலையடிவாரத்தில் பெய்யவில்லை.குளம் நீர் நிலைகள் நிரம்பாது.
ஊரில் பெய்து என்ன பயன்?
எங்கே மழை வேண்டுமோ அங்கே பெய்திருந்தால்தான்
மழையும் இனிது. இல்லை என்றால் மழையால் என்ன பயன்!
மழைன்னா அது ‘பெய்யெனப் பெய்யும் மழை”யா இருக்கனும். இதுதான் வாழ்க்கை.
காட்சி 2..
வானம் கருக்கிறது. வறண்ட பூமி, மழை வருமா என்று
காத்திருக்கும் ஊர்.. ( லகான் திரைப்படத்தில் மழைப்பாடல்)
அப்போது கொட்டுகிறது பாருங்கள் வானம்.
ஊரே கூடி ஆடிப்பாடி .. கொண்டாடும்.
பெய்யெனப் பெய்யும் மழை
அது மகிழ்ச்சியின் உச்சம்.
நேரம் கணித்து சொல்லும் வள்ளுவனையே
அவன் அறிவையே இம்புட்டு கேவலப்படுத்த முடியும்னா
அதில பெருமைப்பட்டுக்க என்னடா இருக்கு?!

Sunday, December 18, 2022

ஆண் பெண் உறவு .. ஓர் அரசியல்

 ஆண் பெண் உறவு.. அது ஓர் அரசியல்..

அரசு ஒப்பந்தங்களைவிட வலுவானது!
இதில் பெண்ணின் சம்மதம் தேவைப்பட்டதில்லை.
அப்புறம் என்னடா காதலும் கத்தரிக்காயும் !
எல்லாம் கைகூடிய பிறகு மனசும் உடம்பும்
அடங்கிவிடுகிறது ஆணுக்கு. அதிலும் குறிப்பாக
அதிகாரபீடத்தின் ஆணுக்கு.
கலிங்கத்து வெற்றிக்குப் பின் சக்கரவர்த்தி அசோகன்
மனம் மாறிபவுத்தம் தழுவினார் என்பதை கற்பித்த
நம் சரித்திரப்பாடம் எனோ அவர் பாட்டனார்
சந்திரகுப்த மெளரியர் தன் 58வது வயதில்

ஜைன துறவியானதை சொல்லவே இல்லை.
அதுவும் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்.
சாணக்கியரின் மாணவன்,
அலெக்சாண்டரின் படைத்தளபதி செலுக்கஸ் நிக்கோதரின்
மகள் ஹெலினாவை திருமணம் செய்து கொண்டவன்.
அலெக்சாண்டரின் தளபதியை தோற்கடித்து
அந்த ஒப்பந்தத்தில் இந்த விநோதமான திருமணமும்
உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஹெலினாவை திருமணம் செய்யும்போது
அவளுக்கு 15 அல்லது 16 வயது.
சந்திரகுப்த அரசனுக்கு வயது 40 ஐ கடந்து விடுகிறது.
பாவம் அந்தப்பெண் ஹெலினா…
திருமண உறவைப் பாதுகாத்துக்கொள்ள
அவள் இந்திய மொழியையும் இந்திய இசையையும்
கற்றுக்கொள்கிறாள். அரசனுக்கு ஓர் ஆண்மகவையும்
பெற்றெடுக்கிறாள்.. ஆனால் இரண்டு ஆண்டுகளில்
அரசனுக்கு ஞானோதயம் வந்துவிடுகிறது.
ஜைனத்துறவியாகிவிடுகிறான்.

இன்றைய கர்நாடக சரவணபெல்கோலாவில்
ஜைனத்துறவியுடன் தங்கிவிடுகிறான்.
அரசன்,பேரரசன், ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்,
கிரேக்க மாசிடோனிய அழகியை மணந்தவன்,
சாணக்கியனின் அரசியலைக் கொண்டாடியவன்.
நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவன்…
எல்லாத்தையும் விட்டுட்டு.. வந்துவிடுகிறான்.
கடைசி இரண்டு ஆண்டுகள் சமணத்துறவிகளின்
உண்ணா நோன்பிருந்து சமாதி நிலை அடைகிறான்.
இத்தனையும் நடந்திருக்கிறது. காலம் கிமு. 322 – 299.

சந்திரகுப்தர் - ஹெலினா காதலஜீலம் நதிக்கரையில் ஆரம்பித்ததாக
கவித்துவமான காதல் கவிதைகள்
நாடகங்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள்
நிறைய வந்துவிட்டன.
தங்கள் அரண்மனை பெண் வாரிசுகளை
திருமணம் செய்து கொடுத்து இரண்டு பேரரசுகளின்
உறவைத் தொடர்கதை ஆக்குவதை
இவர்தான் தொடங்கிவைத்திருக்கிறார்.
இதை தங்கள் அரசவை அதிகார உத்தியாக
பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் சோழர்கள்.
குறிப்பாக, ராஜராஜ சோழ வம்சத்தினர்.
எப்படி ஹெலினாவின் திருமண உறவு மூலம்
பல இந்திய ஆண்கள் கிரேக்க பெண்களை திருமணம்
செய்து கொண்ட கிரேக்க உறவு ஆரம்பித்ததோ
அதுபோலவே தான் வென்ற இடங்களில் எல்லாம்
சோழ வம்சத்து பெண்வழி உறவுகளை
விட்டு வந்திருக்கிறோம். !!
ஆண் பெண் உறவு என்பது வெறும் காதல் மட்டுமல்ல,
குடும்பம் என்ற நிறுவன உறவு மட்டுமல்ல,
அது அரசாங்க ஒப்பந்தமாக இன்றும் தொடர்கின்றது.
அதிகாரத்தில் இருப்பவர்கள்
பெண் எடுத்தும் கொடுத்தும் தங்கள் அதிகாரத்தை
பரவலாக்கி கொண்டும் வலிமைப்படுத்திக்கொண்டும்
தொடர்வதற்கு பெயர் திருமண அரசியல்.!