Saturday, May 29, 2021

வைரமுத்து ONV விருது சர்ச்சைகள்

வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கும் பதிவல்ல.

(யாரும் அப்படி திசை திருப்பி விடாதீர்கள்)
அதை ஒட்டி எழுந்திருக்கும் உரையாடல் வெளியை
முன்வைக்கும் பதிவு..
ஆண் பெண் உறவு நிலையில் குடும்பம் என்ற
நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட ஒழுக்கவிதிகளை
யாருமே மீறியதில்லை என்று சொல்லமுடியுமா?
கலைஞன், கவிஞன் என்றால் அவர்களுக்கு
லைசன்ஸ் உண்டு.. என்று பொதுப்புத்தி ஏற்றுக்
கொண்டிருக்கும் ஆண்மைய கருத்துருவாக்கங்களால்
ஆனது நம் சமூகம. பொம்பள வேண்டாம்னா வேணும்னு அர்த்தம் என்று படுக்கையறை மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றமுடியாது!
எப்போதும் .. NO MEANS NO தான்.
வேண்டாம், முடியாது என்று
பெண் சொல்வதை ஆண் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
தன் செல்வாக்கு அதிகாரம் பணபலம் ஆள்பலம் என்று
எதைக் கொண்டும் அதை மீறுவது தலைகுனிவைத்தான்
ஏற்படுத்தும்.
தன் சுயலாபங்களுக்காக ஆணைப் பயன்படுத்திக்
கொள்ளும் பெண்களும் உண்டு,
இதுவும் இந்த நாணயத்தின் இன்னொரு பக்கம்.
தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டவுடன் கொதித்தெழும்
மேல்தட்டு வர்க்க பெண்கள், சாதியின் பெயரால்
பெண்ணுடல் அனுபவிக்கும் வன் கொடுமைக்கு எதிராக
என்றைக்காவது ஒருமித்த குரலில் பேசி இருக்கிறார்களா?
என்று கேட்டால்..
அதற்கு மவுனம் தான் என் பதில்.
ஆனால் அதைப் பேசவில்லை என்பதாலேயே அவர்கள்
இன்று பேசும் எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை
என்ற முடிவுக்கு வருவது.. அபத்தம்.
நம் சமூகம் சாதி சமூகம் தான்.
பெண்களும் அதில் விதிவிலக்கல்ல
என்ற புரிதலுடன் அதையும் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
“கண்ணதாசனுக்கு பல பெண்களுடன் தொடர்பிருக்கவில்லையா?”
“நீங்கள் போற்றும் அண்ணா நடிகை பானுமதி குறித்து
சொன்னது நினைவில்லையா?”
நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள்.
ஆனால் கண்ணதாசனும் அண்ணாவும்
சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பமின்றி
நடந்து கொண்டார்களா… ?
என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
ONV அமைப்பு வைரமுத்துவுக்குக்கான விருது அறிவிப்ப
மறுபரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துவிட்ட
நிலையில் வைரமுத்து விருதை திருப்பி அளிப்பதாக
அறிவித்துள்ளார்..
“விருது பெறாமலேயே விருதை திருப்பி அளிப்பதாக
அறிவித்த வைரமுத்து…” என்று ஆனந்த விகடன்
எழுதுகிறது!
வைரமுத்து கவிதைகள் பிடிக்குமா?
வைரமுத்து மீதிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்..
இவை எல்லாவற்றையும் தாண்டி…
இந்த விருது தமிழை எழுதியதால்..
தமிழில் எழுதியதால்..
வந்த விருது என்ற வகையில்..
தமிழும் தான் தலைகுனிந்து விட்ட தாக
கண்ணீர்விடும் கவிதைகளுக்கு
துடைத்துக் கொள்ள கர்சீப் கொடுக்கலாம்.
அவ்வளவுதான்.

1 comment

Wednesday, May 26, 2021

மகாத்மா காந்தி.. India's first corporate Agent


 

இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஏஜெண்ட்

என்று மகாத்மா காந்தியைப் பற்றி அருந்ததிராய்

கிண்டலடிக்கிறார்.

காந்தியை மகாத்மாவாகக் கொண்டாடுபவர்களுக்கு
அருந்ததிராயின் வாசகம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
காந்தியை மனிதனாக மதிப்பவர்களுக்கு அவர்
பிர்லாவுடனும் வைத்திருந்த உறவு
இன்னும் சில புரிதல்களை ஏற்படுத்தும்.
காந்தி பேசிய கிராமப்புற பொருளாதரம் முதல்
அவருடைய சத்தியாகிரக போராட்டம் வரைக்கும்
பிர்லாவின் பணம் தேவைப்படுகிறது.
வெறும் கையால் முழம்போட முடியாது என்ற
யதார்த்தம் அறிந்தவர் தான் காந்தி.
பிர்லாவின் மாளிகையில் தங்கிக்கொண்டே பிர்லாவுடன்
கருத்து முரண்பாடுகளையும் தொடர்ந்து வைத்தவர்.
பிர்லாவின் எந்த ஓர் அரசியல் ஆலோசனைகளையும்
காந்தி தன் அரசியலில் ஏற்றுக்கொள்ளவில்லை.
காந்தியின் சுதேசி இயக்கம் இந்திய உற்பத்திகளுக்கு
ஆதரவாக இருக்கும் இந்திய தொழில் முனைவோரின்
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது
பிர்லாவின் எதிர்ப்பார்ப்பாக இருந்தாலும்
அவை முழுமையடையவில்லை.
பிர்லா டில்லியில் கட்டிய லஷ்மி நாராயண் கோவிலை
1938ல் காந்திதான் திறந்துவைத்தார்.
- (பிர்லா கட்டிய கோவில்கள் எல்லாம் கடவுளின் பெயரால்
அழைக்கப்படாமல் இன்றும் அவர்கள் கட்டுகிற
கோவில்கள் எல்லாம் பிர்லா கோவில்கள் தான்!)

இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள் ஒருபக்கம்
இருந்தாலும் பிர்லாவுக்கு அதில்தான் லாட்டரி அடித்தது
என்றுதான் சொல்லவேண்டும். பிர்லா, டாடா , பஜாஜ்
என்று அன்றைய கார்ப்பரேட்டுகள் அனைவரும்
காந்தியுடன் தொடர்புடையவர்கள்.
காந்தி இவர்களுடன் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே
இவர்களின் நிதி உதவியுடன் செயல்பட்டார் என்ற முரண் ..
அன்றைய பொதுவுடமைவாதிகளுக்குப் புரியாதப்
புதிராக இருந்தது.
Mukund Iron and steel works கம்பேனி நஷ்டத்தில் ஓடியது.
கம்பேனி உரிமையாளர் முகுந்த லாலாவுக்கு காந்தி
உதவ நினைத்தார். பஜாஜ் கம்பேனி முதலாளியின்
5வது மகனிடம் நஷ்டத்தில் ஓடும் கம்பேனியை வாங்கச்
சொன்னார். காந்தியின் சொல்லைத் தட்டமுடியாமல்
பஜாஜின் மகன் , முகுந்த் அயர்ன் ஸ்டீலை வாங்கினார்.
இப்படியாக காந்தி அன்றைய கார்ப்பரேட் உலகத்தின்
மெய்க்காப்பாளராக செயல்பட்டிருப்பது தெரிகிறது.
காந்தி பல்வேறு அறக்கட்டளைகளின் பணத்தை
பஜாஜ் வங்கியில் தான் ( நாக்பூர் வங்கி )போட்டுவைத்திருந்தார்.
பஜாஜ்க்கு நிதி நிலை மோசமானதும் சிலர் அந்த
வங்கியிலிருந்து பணத்தை எடுத்துவிடும்படி
காந்திக்கு ஆலோசனை சொல்லியும் காந்தி
அதற்கு செவிமடுக்கவில்லை.காரணம்,
பஜாஜ் மீது காந்தி வைத்திருந்த நம்பிக்கை தான்.
இன்று நாம் பேசும் corporate social responsiblities என்ற
கருத்துருவாக்கத்தை காந்தி அவர் காலத்தில்
வாழ்ந்த கார்ப்பரேட்டுகளுக்கு எழுதிய கடித த்திலிருந்து
பிழிந்து எடுத்துக்கொள்ளலாம்.
பிர்லா மாளிகையில் தங்கினார்.
பிர்லாவின் புல்வெளியில் மாலை தியானங்கள்
நடத்தினார். பிர்லா கொடுப்பதாக சொன்ன பணம்
தமாதமானால் ஏன் கொடுக்கவில்லை இன்னும் என்று
விசனப்பட்டுக்கொண்டார்.. பிர்லாவின் கார்ப்பரேட்
உலகத்தில் காந்தி இப்படித்தான் தாமரை இலைத் தண்ணீராக .. முரண்பட்டுக்கொண்டே...
விந்தைகள் நிறைந்தது காந்தியின் உலகம் மட்டுமல்ல
காந்தியின் முரண்பாடுகளை சகித்துக்கொண்டு வளர்ந்த
இந்திய முதலாளித்துவ உலகமும் தான்.

Monday, May 24, 2021

பரவசமும் பரிதவிப்பும்




புரட்சிக்கவியில் புரட்சிக்கவி சொன்ன சொக்கவெள்ளிப் பால்குடம் எப்படி இருக்கும்? காலை விடியலில் கடலில் மூழ்கி சிவப்பு மங்கி மஞ்சளாகி வெளிச்சமாகும் அக்கணம்.. காதலுக்குப் பூரண பொற்குடம் வைத்து இரவுக்கு நன்றி சொல்லும் பொழுதாக இருக்குமோ…?

பொற்குடமாம்.. அதிலும் பூரண பொற்குடமாம்.. அள்ள அள்ள குறையாத ஓளி மங்காதப் பொற்குடம். பொற்குடம் நிரம்பி பூமி எங்கும் மரங்களாக பூக்களாக பறவைகளாக அவனுக்குள் அவள் பொற்குடமாகும்போது காதல் மட்டுமல்ல வாழ்க்கையும் பூரணத்துவம் பெறுகின்றது. அதனால் தான் மனித இனம் தேச இன மொழி எல்லைகளைக் கடந்து எப்போதும் காதலைக் கொண்டாடுகிறது, . 

வாழ்தல் என்பது உண்டு உறங்கி காமப்பசி தீர்க்க தின்று முடிவதல்ல. காதலிருக்கும் வாழ்க்கை மட்டுமே பூரணத்துவம் பெறும். . அவள் பூரண பொற்குடமாய், அவன் வாழ்வில் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை..

 அவள் யார் என்பதைச் சொல்லவரும்போது அவன் சொற்களின் வனத்தில் மாட்டிக்கொண்ட திசையறியாத பயணியைப் போல அலைகிறான்.

சொற்களிலிருந்து தப்பிக்கவும் ஒருசொல் தான் தேவை உன் பெயரைப் போல (பக் 57) என்று அறிந்து கொள்ளும் போது அவள் பறவையாகிவிடுகிறாள். 

என்ன இது… அவன் உள்ளங்கை நீல வானமாகிவிடுகிறதே.. 

ஒரு பறவையைப் போல உனை விடுவித்தேன். என் அகங்கை முழுவதும் ஆகாய நீலம். (பக் 40) அவன் உள்ளங்கையே ஆகாயமாக்கியவள் எங்கு சென்றாள்..! 

சிறகுகளால் திசைகளை உதறிவிட்டு நீலவெளியில் ஏன் கரையவேண்டும்?” (பக் 18) அசைவின்மையை முகர்ந்தபடி இருக்கிறது தும்பி. அவள் விரல்பிடித்து சாலையைக் கடக்கிறது நத்தை. அவனோ கவிஞன்…

வானும் இல்லை 

பூமியும் இல்லை 

அந்தரத்தில் ஒன்றாகப் பயணிக்கின்றன 

பரவசமும் பரிதவிப்பும்.” (பக் 76)

 அவன் என்ன செய்வான்? மரத்தில் காற்றில் பனித்துளியில் சிறகுகளின் படபடப்பில் அவன் அவளுடனேயே பயணிக்கிறான். தூரிகை, எழுதுகோல், மயிலிறகு, மலர்ப்படுக்கை எதைக்கொண்டு அவளை அலங்கரிப்பது? “பொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது..” 


இரைை தேட சென்ற அவன் திரும்பவில்லை என்றால் அவள் இறந்துவிடுவாள்… அவனின்றி அவள் இல்லை. இருவாச்சி பறவைகளின் வாழ்க்கையை அறிந்தவள் அவள்… அதனால் தான் அவள்

 “ பறந்து கொண்டிருக்கும் போதே இறந்துவிட வேண்டும்” என்று துடிக்கிறாள். .

 “இரத்தம் வழிய கைகளில் ஏந்துவதைத் தவிர கண்ணாடிக்கோப்பைகள் உடையும் போது அவனால் என்ன செய்ய முடியும்? 

அவன்் கவிஞன். சொற்களற்ற பாடலை அவனில் எழுதிக் கொண்டிருப்பவள் அவள் தான் .. அவன் கவிதை இன்னும் முடியவில்லை. “

வந்து சேராத ஒருசொல் காத்திருக்க வைத்திருக்கிறது எல்லாச் சொற்களையும். (பக் 64) … 

இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அவன் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை மையமாக அவளே இருக்கிறாள்

இரு கண்களாலும் 

காணண இயலாத 

நெற்றியின் மத்தியில்

 நின்றெரிகிறாள் “ 

எரியட்டும். ….

 கவிஞர்பழநிபாரதிக்கு வாழ்த்துகள் 

கவிதைை நூல்: பூரண பொற்குடம்

 கவிஞர் பழநிபாரதி.. 

கொன்றை வெளியீடு:

 விற்பனை உரிமை: தமிழ்வெளி 

கைபேசி: 9094005600

Wednesday, May 19, 2021

CPI (M) மாநிலக்கட்சியாகிறதா?

 

CPI (M ) மாநிலக்கட்சி ஆகிறதா..
நிறம் மாறும் காட்சிகள்
கேரளாவில் மட்டுமே பொதுவுடமை அரசியல்..
ஒருவகையில் இன்றைய அரசியல் களத்தில்
கேரளாவில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும்
பொதுவுடமைக் கட்சி அகில இந்திய கட்சியிலிருந்து
மா நில கட்சியாக இறங்கி இருக்கிறது.
இந்த இறக்கத்தில் இன்னும் சில சரிவுகள்
வெளிப்படையாகத் தெரிகின்றன.
எல்லா முடிவுகளுக்கும் அதிகாரத்திற்கும் பொலிட் பீரோ
முடிவு செய்யும் என்று தங்கள் ஜன நாயக கட்டமைப்பை
உரக்கப்பேசும் தோழர்கள்.. இன்று கேரள முதல்வர்
பினராயி விஜயனின் சில முடிவுகளைப் பற்றி
மவுனம் சாதிக்கிறார்கள்.
பொலீட் பீரோவாவது.. உங்கள் ஆலோசனையாவாது…
பினராயி ஒரு சூப்பர் மேனாக
தன்னைக் காட்டிக் கொள்கிறார்.
அதற்கு முதல் பலிகாடானது சைலஜாதான்!
அப்படி என்ன சைலஜா செய்துவிட்டார்?

அவர் சுகாதரத்துறை அமைச்சராக இருந்தப்போது
மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அவரைப் பாராட்டி
வாஷிங்க்டன் போஸ்ட் எழுதியதை
எல்லாம் தோழர்கள் கொண்டாடினார்கள்.
நிஃபா புயல் அழிவை மிகத் திறமையாக எதிர்கொண்டார்
என்று ஐரோப்பா விருது கொடுத்தது..
நடந்து முடிந்த தேர்தலிலும் மிக அதிகமான ஓட்டு
வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறார்.
இவ்வளவும் தோழர் சைலஜாவின் செயல்பாடுகள்.
ஆனாலும் அவருக்கு பினராயின் மந்திரிசபையில் இடமில்லை!

கட்சியின் அகில இந்திய செயலாளர்களாக இருக்கும்
சீதாரம் யெச்சூரியும் பிருந்தா கரத்தும் புதிய அமைச்சரவையில்
தோழர் சைலஜா டீச்சர் விலக்கப்பட்டிருப்பதை எதிர்த்து குரல்
கொடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் பினராயின் முடிவு தான் இறுதியானது.
இப்போது சைலஜாவுக்கு “கொறாடா” பதவி..
இது சைலஜாவுக்கு இறக்கமா
அல்லது சிபிஎம்மிற்கா?
தோழர்கள் தான் அறிவார்கள்.
அப்புறம் இதிலே போய் பெண்ணியம், பெண்ணின் அரசியல்,
சமவாய்ப்பு, சம உரிமை இத்தியாதி எல்லாம்
நான் பேசவில்லை. .தோழர்களே.

(தகவல்கள் : மின்னம்பலம். நன்றி TSS மணி)

காலம் இப்படித்தான் நைனா... (கி..ரா.. )


 எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி

நாலு வார்த்தை உங்களுக்குப் பேச வரலியோ...

அந்த அறிஞர் அண்ணாவின் அரசியல் உங்களுக்கு
அரசு மரியாதையோடு வழியனுப்பி வைத்திருக்கிறது.
நைனா... காலம் இப்படித்தான்!
**
திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத்
தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான்
காரணம்- கி.ரா. பேட்டி.
திராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு
தொடர்ந்து இலக்கிய மேதாவிகளால் இருட்டடிக்கப்படுகிறது.
அப்படியே யாராவது திராவிட இயக்கத்தின் கலை
இலக்கியப் பங்களிப்பு என்று பேச ஆரம்பித்தால்
அப்படிப் பேசுபவரின் கலை இலக்கியப் பங்களிப்பையே கேள்விக்குட்படுத்தி’விடுவார்களோ என்ற அச்சத்தில்
பலர் இன்றும் வாய்த்திறக்காமல் மவுனமாக இப்பக்கங்களைப் புரட்டிவிடுகிறார்கள்.
இதற்கான காரணங்களை மூத்த எழுத்தாளர்
கி. ராஜநாராயணனின் நேர்காணல் மிகத் தெளிவாக
முன்வைக்கிறது.
கி.ராவும் தன் மவுனத்திற்கான காரணத்தை ஒற்றைவரியில் சொல்லிச் சென்றிருப்பதும் இன்னும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.
இந்து பத்திரிகையிலிருந்து சமஸ் கேள்வி:
(மாபெரும் தமிழ்க்கனவு.. பக். 270)
தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை
சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப்
புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன.
நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார்
சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும்
இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால்
தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும்
இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல.
தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை
உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ்
இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது.
நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை.
ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன்.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள்
இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான
இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம்
இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது
என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால்,
இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது.
திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது.
இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை
எப்படிப் பார்க்கிறீர்கள்?
கி.ராவின் பதில்:
சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க,
அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு.
அது ‘மணிக்கொடி’ ஆட்கள்கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது.
நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப்
பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும்
இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா,
பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.
மேலும் இதே நேர்காணலின் இறுதியில் கிராவின் வாக்குமூலமாக
வெளிவரும் சொற்கள் …” எங்களால ‘மணிக்கொடி’ பக்கமும்
போக முடியல, ‘திராவிட நாடு’ பக்கமும் போக முடியல.
ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு. ……
நாம இதை ரெண்டையுமே சொல்லக்கூடிய நிலையில இல்லை.
சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான்
உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட
நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!...
***
மும்பை இலக்கிய கூடம் நிகழ்வில் இணையம் வழி கலந்துகொண்ட
கி.ரா.விடம் இதைப்பற்றி நான் கேட்டபோது அவர்.. மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் கடந்து சென்றதும் நினைவுக்கு வருகிறது.
***
என்ன சொல்ல நைனா...
காலம் இப்படித்தான்..
எந்த அறிஞர் அண்ணாவைப் பற்றி
நாலு வார்த்தை உங்களுக்கு பேச வரலியோ...
அந்த அறிஞர் அண்ணாவின் அரசியல் உங்களுக்கு
அரசு மரியாதையோடு வழியனுப்பி வைத்திருக்கிறது.
நைனா... காலம் இப்படித்தான்!
(கி.ராவின் கதைகள் எனக்கும் பிடிக்கும். ஆனாலும்
எழுத்துலகின் அரசியல் கதைப் பிடிக்கலை!)

Sunday, May 16, 2021

காதலும் கம்யுனிசமும் ( தோழர் கவுரியம்மாவை முன்வைத்து)

 காதலும் கம்யுனிசமும் இரண்டும் மிகவும் நெருக்கமானவை.

ஒவ்வொரு இட துசாரிக்குள்ளும் ஒரு தீவிரக்காதல்

உள்ளம் காதலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு பெண்ணின் அரசியல் வாழ்வும் அவள் காதல் வாழ்வும்
இரண்டும் இணைந்து பயணிக்க முடிவதில்லை!
கவுரிக்கும் அதுதான் நடந்த த து.
கம்யுனிஸ்டு கட்சி CPI , CPM என்று இரண்டாகப் பிரிந்த நிலையில்
கவுரியம்மாவின் கணவர் டி.வி. தாமஸ் CPI கட்சியிலேயே
தங்கிவிட கவுரியம்மா மட்டும் CPM புதிய கட்சியில் இணைகிறார்.
அவர் அரசியல் பயணம் தொடர்கிறது.
அதில் தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்,
ஏமாற்றங்கள்
நிரகாரிப்புகள்..
ஒரு சூழல் வருகிறது. கணவர் தாமஸ் புற்று நோயால்
பாதிக்கப்பட்டு பம்பாய் மருத்துவமனையில் உயிருக்காகப்
போராடிக் கொண்டிருக்கிறார்.
கவுரி … அவரைச் சந்திக்க தன் கட்சியின் அனுமதியைப் பெறுகிறார்.
அனுமதி பெற்று சந்திக்கிறார். இரு வாரங்கள் அவருடன் இருக்கிறார்.
தாமஸ் கண்ணீருடன் விடை கொடுக்க தன் கட்சிக்கு திரும்புகிறார்.
அதுவே அவர்களின் கடைசி சந்திப்பு!!!!
கவுரியின் படுக்கை அறையில் கவுரியும் தாமஸும்
இணைந்து வாழ்ந்த காலத்தில் எடுத்தப் புகைப்படங்களும்
அவர்களின் பொதுவுடமைக் கட்சி
முன் நின்று நட த்திய திருமண நிகழ்வும் புகைப்படங்களாக
அப்பெண்ணுடன் கடைசிவரை வாழ்ந்திருக்கின்றன.
அரசியல் இணைந்து வாழ தடையாக இருந்திருக்கிறது.
ஆனால் நினைவுகளில் வாழ்ந்துவிட யார் தடை செய்ய
முடியும்? எந்த இயக்கத்திற்கு அந்த சக்தி இருக்கிறது!.
கம்யினிசம் ஆண் பெண் உறவில் இருவரும் ஒரே குழுவில்
இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறதா ?
ஆண் பெண் உறவு நிலையில் பொதுவுடமை அரசியல்
முன்வைக்கும் ஒழுங்குமுறைகள் என்ன?
இதை இன்னும் விரிவாக பேச வேண்டி இருக்கிறது.
அதற்கு கவுரியம்மாவின் வாழ்க்கை ஓர் உதாரணமாக
இருக்கிறது.
பொதுவுடமை அரசியலில் இருந்து விலகி தனிக்கட்சி
ஆரம்பித்த கவுரியம்மாவால் அக்கட்சியை முன் நிறுத்தி
பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. அவருடைய
சாதனைகள் என்று அவர் மறைவுக்குப் பின் பேசப்பட்டவை கூட
அவர் CPM அரசியலில் இருந்து செயல்பட்ட காலத்தின்
செயல்பாடுகளாகவே இருக்கின்றன.
இதையும் பெண்ணிய அரசியல் நோக்கில் உரையாட
வேண்டியதாக இருக்கிறது.
நேற்று 1990 களில் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் பார்த்தேன்.
அதில் கவுரியம்மா, டி. கே தாமஸ், வர்க்கீஸின் காதல்
எல்லாமும்

கட்சியின் பின்புலத்துடன் இணைந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மலையாள கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு ,
கவுரியம்மா குறித்து
1995 களில் எழுதிய கவிதை வரிகள்..
கவுரி அழமாட்டாள் கலங்கமாட்டாள்
அவள் பத்ரகாளி
அவள் கதைகளைக் கேட்டே வளர்ந்தோம்
எங்கள் பயங்களை நாங்கள் துறந்தோம்..
Karayatha Gouri, thalaratha Gouri
Kalikondu ninnal aval bhadrakaali
Ithukettu konde cherubalyam ellam
Pathivayi njangal bhayamaatti vannu
கவுரி தாமஸ் காதலும்
அவர்கள் இருவரும் பொதுவாழ்வில்
ஏற்றுக்கொண்ட அரசியல் சித்தாந்தமும்
கவுரி என்ற பெண்ணின் அகமும் புறமுமாக
முரண்பாடுகளுடன் பயணித்திருக்கிறது.

Tuesday, May 11, 2021

MADAM CM VS 1 (NUMBER ONE) VS POWER

 


1 (one) vs madam CM in power house

இரண்டு திரைப்படங்கள். 1 நம்பர் ஒன் தான் ம ம்முட்டி யின்   நடிப்பில்

நிமிர்ந்து நிற்கும் மலையாள திரைப்ப டம். முடிவெட்டும் அப்பாவுக்கு

மகனாகப் பிறந்த கடக்கல் சந்திரன் கேரளாவின் முதல்வராகி தன்

அரசியல் கனவுகளில் என்னவெல்லாம் செய்கிறார், எதைச் செய்ய

முடியாமல் போகிறது என்பதை முன்வைக்கும் கதையோட்டம்.

அச்சு அசலில் நம் அரசியல் வாதிகள் சிலரின் உடல்மொழியைக்

கொண்டுவந்திருக்கிறார் ம ம்முட்டி. அது ரசனைக்குரியதாகிறது.

எந்த ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரும் அவருடைய ஜன நாயக க்

கடமையை அதாவது தொகுதி மக்களின் மேம்பாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அவர்களை பதவியிலிருந்து இறக்கும்

துருப்புச்சீட்டும் அதாவது உரிமையும் அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய

தொகுதி மக்களுக்கு உண்டு. தொகுதியில் 50% விழுக்காடு மக்கள் அவர் மீது

அதிருப்தி காட்டினால் அவர் பதவி விலக வேண்டும். இது right to recall உரிமை. அரசியலில் பகை, தனி மனித தாக்குதல்கள், பணத்திற்கு விலை

போகும் தொகுதி மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக ஓட்டுகளை முடிவு

செய்யும் சுயசாதி அபிமானம்… இதெல்லாம் இருக்கும் இந்திய அரசியலில்

கடக்கல் சந் திரம் ஒரு கனவு.

இனிமையான கனவு. கனவுகள் நிஜமானால் இனிமையாக இருக்கும்

என்ற இன்னொரு கனவுக்குள் நம்மைத் தள்ளும் 1, the only one

கதையில் நிறைய ஓட்டைகள். இருந்தாலும் இந்தக் கனவு நமக்கு இன்று

தேவைப்படுகிறது.

     அரசியலில் யதார்த்தம் என்னவாக இருக்கிறது? MADAM, CHIEF MINISTER

இந்தி திரைப்படம். இதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் தலைமை.

ஆனால் பெரிய வேறுபாடு இவர் பெண், அதுவும் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் தலித் பெண். இவருடைய அரசியல் பயணம்,

தாராவாக நடிக்கும் ரிச்சா சட்டாவின் பாப் கட், கதை, கதையில் வரும்

மாஸ்டர் இவை எல்லாம் உத்திரபிரதேசத்தின் மாயாவதி, கன்சிராம் இருவரையும் நினைவூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்படுகிறது.

அதிகாரத்திற்கு வரும் வரை பேசக்கூடிய சமூக அறங்களை ஆட்சி

அதிகாரத்திலிருக்கும் போது கடைப்பிடிக்க முடிவதில்லை!

அதிகாரத்தின் மாற்றமுடியாத குணாதிசியம் இதுதான்.

இக்கதையில் ஆட்சி அதிகாரத்தில் அமர்பவள் பெண், அதிலும் தலித்

பெண். அவளும் என்னவாகிறாள்? அதிகாரத்தை தொடர்ந்து வசப்படுத்த

அதிகாரத்தின் இரத்தப்பசிக்கு தீனி போட வேண்டி இருக்கிறது.

அவள் அதைச் செய்கிறாள்..



முதல் பட த்தின் இனிமையாக கனவுகள் இதிலில்லை.

நிஜங்கள் கனவுகளைப் போல இனிமையானதாக இருப்பதில்லை.

இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்த்தேன்.

இரண்டு படங்களும் அரசியல் டிராமா கதைகள்.

ஒன்று இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறது.

இப்படித்தான் இருக்கிறது என்று இன்னொன்று சொல்கிறது.

 

MADAM cm இந்திய அரசியலைக் காட்டி என் முகத்தில் அறைகிறது.

மெல்ல மெல்ல அதை மறக்க நினைக்கிறேன்.

மம்முட்டியின் கனவுகள்.. விரிகின்றன.

கனவுகள் தான் இனிமையானவை.

 

Tuesday, May 4, 2021

கழுதைப்பாதையில் ...

 

பொதி சுமக்கும் கழுதைகளும் மனிதர்களும்




கழுதைகளும் மனுஷனைப் போலத்தான் என்பது நிஜமான வார்த்தை.

முதல்லே அது சொல்ற பேச்சை நாம கேட்டாத்தான் நாம்மோட பேச்சை அது கேட்கும்…. கழுதை உடம்பில எங்க தொட்டா என்ன நடக்கும்னு தெருஞ்சு வச்சிருக்கனும். கழுதையும் மனுஷன் மாதிரிதாண்டா

மூவண்ணா சொல்லியதை சுப்பண்ணா நினைத்துக்கொள்ளும் இட த்திலிருந்து கழுதைப்பாதை ஆரம்பமாகிறது.

 சுப்பண்ணா சொல்வது போல கழுதைகள் மனிதர் குளிப்பாட்டி

சுகம் கண்டபின் மனிதன் சொல்லைக் கேட்டு பாரத்தை சுமந்துகொண்டு மலையேறுவதும் மலைச்சரிவில் பாரத்துடன் இறங்குவதுமாக

வாழ்க்கையை சுமந்தலைகின்றன. கழுதையை ஒட்டிக்கொண்டு

ராவும் பகலும் கழுதையோடு கழுதையாக பயணிக்கும்

மக்களும் அவர்களின் வாழ்க்கையும் மலையிலும் தரையிலும்

மாறி மாறி கழுதைகளைச் சுற்றி சுற்றி வருகின்றன.

 கண்ணாலத்திற்கு முந்தியே வேட்டைக்குப் போய்விட்டு வருவது தான்

முதுவாக்குடி ஆண்களுக்குப் பெருமை.. இந்த வேட்டை காட்டு விலங்களை

வேட்டையாடும் வேட்டை அல்ல, தனக்குப் பரிசம் போட்டிருக்கும் பெண்ணை திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் பெண்ணின் தோழியர் அவளை மறைத்து வைத்திருக்கும் இட த்தை தேடி அவளைத் தூக்கி வந்துஅவளும் விரும்பியே வருகிறாள்அவனும் அவளும் ஆசைத்தீர உடலுறவு கொள்ளும் இரவாக மாறுகிறது. இந்த வேட்டையை அனுமதிக்கும் அதே முதுவாக்குடி ஜனங்கள் தான் தரைக்காட்டு காரியை முதுவாக்குடியில் சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை! முதுவாக்குடியின் கட்டுப்பாடுகளையும் மீறி திருமணம் செய்து கொண்டு குடிசைப்போட்டு வாழ்ந்த ராக்கப்பன் கங்கம்மா கழுத்து அறுபட்டு இறக்கிறார்கள். அவர்களின் குடிசை தீக்கிரையாகிறது. கங்கம்மா சிலையாகி தெய்வமாகி .. கனவில் வந்து ஆட்சி செய்கிறாள். செவ்வந்தி கதையாக அதைச் சொல்லி திரிகிறான்.

     ராக்கப்பன் கங்கம்மாவின் காதல் திருமணத்தில் முடிந்தாலும்

அவர்கள் கணவன் மனைவியாக வாழவில்லை.. கணவன் மனைவியாக

வாழ்பவர்களின் ஆண் பெண் உறவு சொல்ல முடியாத வலிகளையும்

ஏக்கங்களையும் சுமந்து அலைகிறது.

மூவண்ணா தன் எதிரே கால்நீட்டி அமர்ந்திருந்த அங்கம்மாளின் கையை ஆசையாக எட்டிப் பிடித்து இழுத்தார். அங்கம்மாள் கோபத்துடன்ஆமா பகல்ல ஏத்துனாலும் ரவையில ஏத்துனாலும் வெளக்கு எரியவா போகுது?’ என்றதும் மூவண்ணாவுக்கு முகம் வாடியது. உள்ளமும் உடம்பும் அந்தப் பேச்சால் பொசுங்கிக் கருகின. சுடுமணலில் சுமையுடன் நடைக்குத் தவிக்கும் கழுதையின் வேதனையைப் போலானது(பக் 134)

இந்த அங்கம்மாவும் அவள் தங்கை தங்கம்மாவும் அவர்களின் கணவன்மார்

மூவண்ணா , சுப்பண்ணாவுக்கு செய்யும் செய்யும் துரோகத்தின் சுவடாக

கதையின் இறுதிப்பகுதிவரை சுமையை இழுத்துச் செல்கிறது கழுதை.

அங்கம்மாவின் குழந்தை ஆசை, அதற்கு உடன்படும் தங்கம்மா தன்

புருஷனை அவனறியாமல் அங்கம்மாவை உடலுறவு கொண்ட இரவும்

அதை உணர்ந்த தருணமும்அந்த உணர்வுகளும் அங்கம்மாவின் அலறலும்

சுப்பண்ணாவின் சாபமும்.. நாவலின் இறுதியில் கழுதைகளுடன் சேர்ந்து

அந்த கழுதைப்பாதையில் எரிந்து சாம்பாலாகிவிடுகிறது.

கதை நெடுகவும் ஆண் பெண் உறவுகளும் அதில் பெண்களின் ஏக்கம்,

தாய்மைக்காக ஏங்கித் தவிக்கும் இரவுகள், அதனால் ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும் மன உளைச்சல்கள், தான் விரும்பிய

ஆண் கிடைக்கவில்லை என்றவுடன் அவன் திருமண நாளில் தற்கொலை

செய்து கொள்ளும் பெண், காதலனை பொருளாதர வசதிக்காக மறந்துவிட்டு

அதன் பின் அதே குழந்தை ஏக்கத்தில் அவனை நினைத்து தேடி அலையும்

நாகுஎர்ராவூ காதல்..

செல்வம் என்னை விட்டுட்டுப் போனது மாதிரி நீயும் போயிடாதே.

ஏம் பக்கத்திலேயே இரு. அதுபோதும் எனக்கு. கல்யாணமெல்லாம் வேணாம். நீயும் நானும் கடைசிவரைக்கும் இப்படியே இருப்போம் : என்று தன் படுக்கையில் படுத்திருக்கும் தாயின் முன்னால் கதறி அழும் கோமதி..

இப்படியாக  இந்த நாவலில் பாதை நெடுக மனிதர்களும் அவர்களின்

ஒவ்வொரு கதையும் ஒரு மாலையில் கோர்த்திருக்கும் பூக்களைப் போல

ஒவ்வொன்றாக கண்ணியில் இணைகின்றன.

     மலைக்காடும் காட்டுப்பாதையில் பாரத்தை தரைக்கும் மலைக்கும்

சுமந்து செல்லும் கழுதைகளும் கழுதை ஓட்டிகளும்.. அவர்கள் வாழ்க்கையில் எட்டிப்பார்க்கும் காலத்தின் மாற்றங்களுடன் கதை

பயணிக்கிறது. மலைக்காட்டு மனிதர்கள் டிரெயினில் ஏறி பயணிக்கும்

காலம் வந்துவிடுகிறது. அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளை நாலு

எழுத்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

வெள்ளைக்கார ர்களின் மிசினரி பள்ளிக்கூடங்கள் வந்துவிடுகின்றன.

மருதுவும் சன்னாசியும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில்

சேர்க்க வ ந்திருப்பதாக முதலாளியிடம் சொல்கிறார்கள்.

போடிப்பட்டி பள்ளிக்கூட த்தல சேர்த்துக்கோ. வீடு பிடிச்சி உன் பொம்பளைங்க இங்க தங்க கூடாதுஎன்று ஆணையிடுகிறார்.

குடும்பத்தோடு காப்பிக் காட்டில் வேலை செய்ய ஒத்துக்கொண்டவர்கள் அவர்கள். அதை மீறும் அதிகாரம் அவர்களுக்கில்லை என்பதை நினைவூட்டுகிறார்.

பள்ளிக்கூட த்தின் இடம் கட்டிடம் சூழல் அதை அப்படியே எழுத்தில்

கொண்டு வந்திருக்கும் செந்தில்குமார்இது ஒரு காலத்தின் கதையாக

மாறுகிறது. இந்திய வரலாற்றில் கிறித்தவ மிஷினரி பள்ளிக்கூடங்களின்

வளர்ச்சியும் பங்களிப்பும் கதையோடு கதையாக கதையுடன் சேர்ந்து

எழுதப்பட்டிருக்கிறது.

நம்மள மாதிரி மலங்காட்டில கஞ்சிக்குத் தவதாயப்படாம பிள்ளைகளாவது

வேலைக்கு வயித்துக்குத் தின்னுக்கிட்டு இங்கே இருக்கட்டும்என்று சன்னாசி சொன்னான். அதைக் கேட்ட மருது  நம்ம பிள்ளைகள நாலு காசு சம்பாதிச்சி கொண்டுட்டு வர்ற துட்டில திங்கற சோறுதான் நம்ம உடம்பில

தங்கும். அதுவரைக்கு உசிரக் கையில பிடிச்சிட்டு மலங்காட்டில வேல செய்யனும்: (பக் 287)

 காட்டுத் தீயில் முவண்ணாவின் 300 கழுதைகளும்

எரிந்துப் போகும் காட்சி கழுதைகள் தாயா பிள்ளையா சேர்ந்து  நின்று

ஒன்றாகவே தீக்கிரையாகி இருக்கின்றன .. மூவண்ணா தன் கழுதைகளின்

மரணத்தை தன் மனைவி அங்கம்மா செய்த துரோகம் தான் தன் கழுதைகள்

தீயில் மாட்டிக்கொண்டு இறந்துவிட காரணமாக இருந்தன என்று

சொல்லி சொல்லி அடிக்கிறார். அந்தப் பெண்கள் அடியை வாங்கிக்

கொள்கிறார்கள். அவர்களும் அதையே நம்புகிறார்கள்.

காடு தரை மலை கழுதை ஆடு மாடு.. எல்லா வாழ்க்கையிலும்

பாதை நெடுக பெண்களின் பாதங்களில் முட்செடிகள்.. அவள்

கழுதைபாதைக்கு தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதி சுமக்க வேண்டும். மலை ஏற வேண்டும். சரிவில் இறங்க

வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெறாத அவள் வாழ்க்கை

அர்த்தமிழந்த வாழ்க்கையாகிவிடுகிறது. பெண் என்றால்

அவள் அவன் வாரிசுகளின் விளை நிலமாக இருக்க வேண்டும்.


நிலம்  தரிசாக இருந்தாலும்

மழைமேகத்தை யாரும் குற்றம் சொல்வதில்லை.

தரிசு நிலத்தைத்தானே கட்டாந்தரை என்று சொல்கிறார்கள்.

கழுதைப்பாதையில் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்

இல்லை என்றாலும் அவர்களின் ஏக்கமும் தேவையும் குழந்தையைப்

பெற்றெடுப்பதாகவே இருக்கிறது. இனக்குழு ரெஃப்ட்க்  எவ்ஃப்வ்வாழ்க்கையில்

பெண்ணின் இடம்வாரிசு காய்க்கும் மரம்.. கழுதைபாதையும் விதிவிலக்கல்ல,

 

 நாவல் : கழுதைப்பாதை

எழுத்தாளர் : எஸ். செந்தில்குமார்.

வெளியீடு; எழுத்து – பிரசுரம்

பக் 319 விலை ரூ 375/