Friday, January 20, 2023

கருஞ்சட்டை தோழர்களும் அய்யப்ப பக்தர்களும்

 


பெரியாரே கருப்பு சட்டையுடன் வந்தாலும்

அவரும் அய்யப்பன் பக்தராகிவிடுவார்!
கருஞ்சட்டை தோழர்கள் என்னை மன்னிக்கவும்.
விமான நிலையத்தில் கொஞ்சம் அளவுக்கு மீறிய மரியாதையுடனும் புன்னகையுடனும் என்னைப் பார்ப்பதாக நினைத்தேன்.
போர்டிங்க் காத்திருப்புக்கு நுழைவதற்கு முன் பாதுகாப்பு சோதனை செய்த பெண்மணி நான் போர்த்தி இருந்த சால்வையை எடுக்கச் சொன்னார்.
அய்யப்பன் கோவில் போயிட்டு வரீங்களா
என்று கேட்டார்.
என் டுயூப் லைட் வழக்கம்போல எரியல.
ஏன் அப்படி கேட்கறீங்கனு ட்டப்போதான்
அப்பெண் என் சந்தேகத்தை தீர்த்தார்.
கருப்பு கலர் சால்வை போர்த்தி இருப்பதைதான்
அவர் அப்படியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.
அது அவர் குற்றமல்ல.
அன்று விமானம் தாமதமாக வேறு கிளம்பியது.
எங்குப்பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள்.
கருப்பு சட்டைப் போட்டுக்கொண்டு
தந்தை பெரியாரே வந்தாலும்கூட
இனி,
சாமியே சரணம் அய்யப்பாதான்.
இப்படி ஒரு கற்பனையில் நானும்
கருப்பு சால்வையைப் போர்த்திக்கொண்டு.
புத்தமத அடையாளங்களை
இந்துமதம் தனக்கானதாக்கிக் கொண்டதாக
படித்திருக்கிறேன்.
இன்றும் அதெல்லாம் தொடர்கிறது.
இது தந்தை பெரியாரின் தோல்வி அல்ல.
பெரியார் அங்கீகாரம் பெற்றுள்ள அதே நேரத்தில்
அவர் தகர்க்க விரும்பிய பலவும் இன்றும் நிலவுவதை
பெரியாரியத்தில் தோல்வியாக கருத முடியாது.
அவர் பெயரை மட்டுமே பயன்படுத்திக்கொண்டு
அவர் கருத்துகளை புறக்கணித்துவிடும் இன்றைய
சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவரைப் பொறுப்பாக்க
முடியாது.
சமூக அரசியலில் கிராம்சி சொல்வதுதான் சரி,
“மரபு வழிபட்ட நிலைபாடுகளுக்கு எதிரான
புதிய நிலைபாடுகளை பெருமக்கள் திரள்
தக்க வைத்துக்கொள்ளும் என்று நம்ப முடியாது”
20.10.1945 நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் கருஞ்சட்டைப்படை
குறித்த அறிவிப்பை எடுத்து வாசிக்கிறேன்.
திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் படை மாநாடு
11.05.1946, 12.05.1946 ஆகிய நாட்களில் மதுரையில்
நடைபெற்றபோது மாநாட்டுப் பந்தல்
வன்முறையாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
திராவிடர் கழகக் கொடிகள் கொளுத்தப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்றோர் மீது
வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன.
கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் தோழர்
நிர்வாணமாக்கப்பட்டார்.
கருப்பு ஆடை அணிந்தவருக்கு இதுவும் நடந்திருக்கிறது!
எதையும் முழுமையாக எதிர்த்து நிற்கமுடியவில்லையா
அதையே தனதாக்கி கொள்வதன்மூலம்
அதன் அடையாளத்தை துடைத்துவிடமுடியும்..
இப்போது நானும்..இதை நம்புகிறேன்.
என் வாழ்நாளில் நடந்து கொண்டிருக்கும்
இந்த சமூக அரசியலின்
நான் பார்வையாளர் மட்டும் தானா?!

Wednesday, January 4, 2023

சிவன் ஓர் இலுமனாட்டி

 தேவதைகளும் அரக்கர்களும்

Is lord shiva a illumanaty?!


டான் ப்ரெளவுன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எல்லாம் 'டாவின்சி கோட் ' மட்டும் தான். அவர் எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம் 'angels and demons'.  தேவதைகளும் அரக்கர்களும்.

புனைவுகள் என்ற பெயரில் அவர் நடத்தி இருக்கும் அறிவியல் சாகசங்களை இப்புத்தகத்தில் காணலாம்

கலிலீயோ ஒரு இலுமனாட்டி என்று ஆரம்பிக்கிறார் டான் ப்ரெளவுன். சமயமும் அறிவியலும் ஒரெ உண்மையைப் பேசும் இருவேறு மொழிகள் என்று சொலவதோடு நிற்கவில்லை கலிலீயோ! தன் தொலைநோக்கு ஆடியில் பிரபஞ்சத்தின் கோள்கள் சுழல்வதைக் கண்டதுடன் அதற்கு நடுவில் இறைவனின் இசை ஒலி கேட்பதாக சொன்னார். (பக் 50, 51). ஆனால் இலுமனாட்டிகளின் அறிவுலகம் தங்களுக்கு ஆபத்து என்பதால் மதபீடம் அதையும் ஏற்கவில்லை.

கலிலீயோவும் paradise lost எழுதிய ஜான் மில்டனும் சமகாலத்தவர்கள். அவர்கள் சந்தித்து இருக்கிறார்கள்.அக் காட்சிகள்

ஓவியங்களாக இருக்கின்றன என்கிறார் டான் பிரவுன்.


அறிவியலும் சமயமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அறிவியலாளர்களை கொலை செய்தும் புதைத்தும் மத பீடங்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டன அச்சுழலில் அறிவியலின் ஒரு சாரார் அறிவியலும் சமயமும் ஒரே உண்மையை வெவ்வேறு பார்வையில் பேசுகின்றன. இயங்கியல் சக்தி தான் படைப்பின் பிதா.

Physics gods nature law என்றார்கள்.

நம் பேச்சு வழக்கில் அறிந்தோ அறியாமலோ "இவ/ இவன்  பெரிய இலுமினாட்டி " என்று சொல்லுவதுண்டு. தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்பவர்களை இலுமினாட்டி என்ற வசை சொல்லால்

நக்கலாக பேசுகிறோம். இலுமினாட்டி என்ற சொல் புத்திஜீவி , ஞானம் பெற்றவன்,  enlightment என்பதுடன் தொடர்புடையது . நம் உலகின் அனைத்து கண்டுபிடிப்புகளின் பிதாமகன்கள் இலுமினாட்டிகள்.

இவர்கள் பிரபஞ்சத்தின் இயங்கு விசையை மாபெரும் சக்தி என்றார்கள். 

ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்ற சங்க இலக்கியத்தின் ஆதித்தமிழன் கண்ட அறிவியல் உலகம் இங்கே நமக்கு நினைவுக்கு வரும்.


எல்லாமும் கடவுள்தான் உருவாக்கினார் என்ற மதபீடங்களில் நம்பிக்கையை தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் தகர்த்தவர்கள் இலுமனாட்டிகள்.

குறியீடூ மொழிகளில் இவர்களின் ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.

எகிப்தின் பிரமிடுகள் முதல் மயன் வழிபாடுகள் வரை குறியீடுகள் மூலம் தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் குறியீடு ஒற்றைக்கண் என்பதை அரக்கனுக்கு ஒற்றைக்கண் என்று இலுமனாட்டிகளை அரக்னாக்கியது அதிகார பீடம். இப்படித்தான் ஞானக்கண் , சாத்தானின் கண்ணாக கீழிறக்கம் செய்யப்பட்டது. இந்திய தத்துவத்தில் ஞானக்கண் நெற்றிக்கண்ணாக வளர்த்தெடுக்கப்பட்டது.

சிவன் ஒரு இலுமினாட்டி. இலுமினாட்டிகள் தங்கள் ரகசியங்களை பனி மலைகளில் புதைத்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை. அதனால் தானோ என்னவோ சிவனையும் பனிமூடிய இமயத்தில் கொண்டு உட்கார வைத்திருக்கிறோம். 

இந்த நெற்றிக்கண்ணும் காமமும்

ஒன்றே ஒன்று எதிர்த்தும்  ஈர்த்தும் இயங்கும் உயிரிகள் என விளக்க பல்வேறு கதைகளைக் கொண்டு புனைந்து இலுமினாட்டியை புனைவுக்குள் புதைத்துவிட்டோம் நாம்!!

இப்புனைவுகளின் உச்சம், அவன் காதலியின் மூன்றாவது முலையோடு நெற்றிக்கண்ணை கொண்டு பொருத்தி இருக்கும் ஆண்மைய அதிகாரப் புனைவு.!!


இலுமினாட்டிகள் எப்போதும் தங்கள் அறிவின் திறவுகோல் கொண்டு மூடநம்பிக்கைகள் , அதிகார பீடங்களுக்கு எதிராக உலகம் எங்கும் கருத்தியல் பரப்புரை நடத்தியவர்கள்.அப்போதும் இப்போதும்

அதிகாரபீடத்திற்கு இலுமினாட்டிகள் என்றால் அச்சம்தான்.

இலுமனாட்டிகளை இப்போது அவர்கள் கொலை செய்வதில்லை! கொலை ஆயுதங்கள் மாறிவிட்டன. அவ்வளவுதான்.

நம்மிடம் டான் பரெளவுன் எழுத்துகள் இல்லை. காரணம் இங்கே எழுத்துலகம் தன்னை ஆண்டபரம்பரையின் எச்சிலாக இருப்பதில் பெருமை கொள்கிறது!  இங்கே நடப்பதெல்லாம் அதிகார பீடம் கட்டி அணைத்து வெளிப்படுத்தும் திருதராஷ்டிர ஆலிங்கனம்.

#புதியமாதவி_2023புத்தகவாசிப்பு1

#puthiyamaadhavi_2023bookreview1


Monday, January 2, 2023

தமிழ் இலக்கிய அரசியல்

 இன்று மனம் திறக்கிறேன். இது ஒரு தலைமுறையின் மௌனம் வெடித்துச் சிதறும் தருணம். எனக்கு வேண்டிய அன்பு உள்ளங்களையும் இது காயப்படுத்தலாம். ஆனால் என் வலியும் காயங்களும் சீழ் வடியும் போது எதைக் கொண்டும் மூடி மறைத்து விட முடியவில்லை.


இந்திய மண்ணில் மும்பையின் புலம் பெயர் வாழ்க்கை தனித்துவமானது . இந்த வரலாறு பிறந்த ஊரில் நீங்கள் வாயில் திணித்த   ' பீ'  தின்ன முடியாமல் ஓடி வந்த தமிழ்ச்சாதியின் வரலாறு. எனவே எங்கள் வாசம் உங்களுக்கு குமட்டலாம். இலக்கிய பீடங்களின் தீண்டாமைக்கு இதுவும் காரணமா என்றால் அதற்கு

நாங்கள் பொறுப்பல்ல! 

மன்னித்து விடுங்கள்.


நாங்கள் கூலிகள்தான். சுயமரியாதையை ஆடையைப் போல அடிக்கடி நிறமாற்றிக் கொள்ளும் அறிவு ஜீவிகள் அல்ல நாங்கள். 

அது எங்களுக்கு 

எங்கள் அடித்தோலின் 

உள்ளடடுக்காக இருப்பது 

உங்கள் நாகரிக மரியாதையை கேள்விக்குறியாக்கியதற்கு நாங்கள் பொறுப்பல்ல. 

மன்னித்து விடுங்கள்.


எங்களுக்கு அரசியல் உண்டு. அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் அவலம் 

எங்கள் அரசியல் உலகில் இல்லை. 

எங்களிடமும் கட்சிகள் உண்டு. ஆனால் எங்கள் எழுத்தும் வாழ்க்கையும் எந்த ஒரு சிபாரிசு கடிதம் கேட்டும் உங்கள் எவரின் கதவுகளையும் தட்டியது இல்லை. 

எங்கள் தலைமுறை இட ஒதுக்கீடுகள் அறியாது. நாங்கள் சுயம்புவாக எழுந்தோம். எங்கள் வாழ்வும் எங்கள எழுத்தும் சுயம்புவானது.

இதைப் புரிந்து கொள்ள உங்கள் இலக்கிய அரசியல் பக்குவப்படவில்லை.!


உங்கள் கருப்பு , சிவப்பு, 

கருப்பு சிவப்பு , 

நீலம்,  

பச்சை....நிறங்கள்..

எங்கள் வெள்ளாவி அடுப்பில்

வெளுத்துப் போகின்றன!

வெட்கப்படுகிறேன்.


முற்போக்கு பிற்போக்கு வகையறா 

இயல் நாடக விளக்கு வகையறா

மதுரை கோவை நெல்லை இலக்கிய தொகை வகையறா

தலைநகர் சென்னை இலக்கிய சங்கம வகை தொகை வகையறா

 வலது,  இடது, சாரி, பைஜாமா..

இத்துடன்

உள்ளூர் வெளியூர் வெளிநாடு

கார்ப்ரேட் வகையறா..

இத்தியாதி சகல வகையறாவும்

எங்களை விலக்கிவைப்பதில்

தங்கள் ஒளிவட்டத்தை

தலையில் சுமந்தலைகிறார்கள்.

தமிழக அரசு என் வீட்டுப்பத்திரம் கேட்கிறது.

இல்லாத வீட்டுக்கு யார் தருவார்

முகவரி.! ?

உதவித்தொகையோ விருதோ எதாக இருந்தாலும் நானும் என் எழுத்தும் 

அகதியாக வெளியில் தள்ளப்படுகிறோம்!


இலக்கிய பீடத்தின்

மீசையில் வளரும் மயிரு

சிரைத்தாலும் வளரும் திமிரா?

அட போடா..

நீங்களும் உங்கள் ஆட்டமும்!


நிராகரிப்புக்கு வரையறை உண்டு.

விதிகள் உண்டு.காரணம் உண்டு.

உதாசீனப்படுத்தலுக்கு!!!!


இதோ,.இதுவரை நடந்ததும்

இனி நடக்க இருப்பதும் கூட

என்னை வாசித்துவிட்டு

நீங்கள் எழுதிய

மதிப்புரை அல்ல.

வாசிக்காமலேயே 

நீங்கள் விலக்கிய

இலக்கியசாதி பிரஷ்டம்

டமில் வால்க.

வழற்க.


இதோ... இதை எழுதி முடித்த

இத்தருணம்...

அனைத்திலிருந்தும் 

விட்டு விடுதலையாகி நிற்கிறேன்.

.....

புதியமாதவி

மும்பையிலிருந்து.

20230102

இரவு 23.15


#புதியமாதவி_இலக்கியஅரசியல்

#tamilliterature_politics