Wednesday, July 28, 2021

சார்பட்டா பரம்பரை தலித் படமா?



 சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்காக பா.ரஞ்சித்

அவர்களுக்கு நானும் வாழ்த்து சொல்கிறேன்.

என் வாழ்த்தும் விமர்சனமும் அவருக்கு முக்கியமா இல்லையா

என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை.

வாழ்த்துவதில் மகிழ்ச்சி. நமக்கு மகிழ்ச்சி தரும்

சின்ன சின்ன விஷயங்களையும் உடனுக்குடன்
செய்துவிட வேண்டும். அதுதானே முக்கியம்.

அப்புறம்… சார்பட்டா பரம்பரை தலித் படம் என்று சொல்கிறார்கள்.
அப்படியா..? அப்படித்தான் என்றால் இன்னும் அதிகமாகத்தான் கொண்டாடவேண்டும்.
இருந்தாலும் எனக்கு இந்த வகைப்படுத்தல் புரியவில்லை.
சாதிப்பெயரோடு திரைப்படங்கள் வந்திருக்கின்றன.
சாதிப்பெயரின் பெருமையைக் கொண்டாடும்
திரையிசைப் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.
அப்போதெல்லாம் ,
அந்தப் படங்களுக்கெல்லாம்
இல்லாத சாதி அடையாளம் இந்தப் பட த்திற்கு மட்டும்
கொடுக்கப்படுகிறது!!
அந்தப் படங்கள் எல்லாம் கிராமத்தின்
மண்வாசனை வீசும் படங்கள் என்றும்
ஏன் தமிழ்க்கலாச்சாரத்தை பிரதிபலித்த
யதார்த்தமான கதைகள் என்றும் சொல்லப்பட்டன.
நாங்களும் அப்படித்தான் என்று ஏற்றுக்கொண்டோம்..
ஆனால் சார்பட்டா பரம்பரை மட்டும் தமிழ்ச் சமூகத்தின்
கதையாக இல்லாமல் தலித் கதையாக மாறுகிறது..
இது நல்லா இருக்கு…
பா ரஞ்சித் மிகவும் நுணுக்கமாக வைத்திருக்கும் காட்சிகள்..
அதில் காட்டப்படும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், நீல நிறம்
இதிலெல்லாம் இருப்பது அந்த மக்களின் வாழ்க்கை அடையாளம்.
அந்த மக்கள் தலித்மக்கள் என்பதால் இது தலித் படம்..
இப்படியாக பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..
இதில் உண்மை இருக்கிறது. ஆனால் இதுமட்டுமல்ல உண்மை.

விளிம்புகள் மையத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன.
கதையின் களமும் காட்சிகளும் சமகால அரசியலின்
புனைவுகளைக் கடந்து நிஜங்களுடன் வருகின்றன.
இந்த மாற்றத்தை கையாண்டிருப்பதில்
பா. ரஞ்சித் வெற்றி பெற்றிருக்கிறார்.
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இனி, சார்பட்டா கதையின் நாயகனாக நடிக்கும் ஆர்யாவை விட துணைப்பாத்திரங்கள் ஓவர்டேக் செய்துவிடுகின்றன.
அது என்னவோ தெரியவில்லை.. ஆர்யா இந்த வாய்ப்பை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ
என்று ஓர் எண்ணம் வருகிறது... ..
சம்திங்க் இஸ் மிஸ்ஸிங்க் இன் ஆர்யா..
ஆர்யாவின் உடல்வாகு ஒத்துழைத்த அளவுக்கு
நடிப்பு ஒத்துழைக்கவில்லை..! இந்தப் படத்திற்கான
பிரத்யோகமான நடிப்பை அவர் தரவில்லை.


Saturday, July 24, 2021

அவள்மொழி - திருவந்தாதி

 கையறு நிலையில் கடவுள் தேவைப்படுகிறார்.



இங்கே தேவைகள் மட்டுமே
அதன் இருத்தலைத் தீர்மானிக்கின்றன.
தேவை ஏற்படவே இல்லை என்றால்
தேவன் எதற்கு? தேவி எதற்கு?
அவர்கள் குடியிருக்க கோவில் எதற்கு?
நேற்று தேவைப்படாத கடவுள்
இன்று தேவைப்படுகிறான்.
இன்று தேவை இல்லை என்பதால்
நாளைய தேவையை தீர்மானிக்க முடிவதில்லை.
இதில் உருகி உருகிக் கரையும் பெண்ணுக்கு
இறுதிப்புகலிடமாக இறைவனடி இருப்பதுதான்
ஆபத்தில்லாத முடிவு.
பெண்ணை ஒவ்வொரு காலக்கட்ட த்திலும்
அந்த முடிவை நோக்கி இச்சமூகம்
துரத்திக்கொண்டே இருக்கிறது.
எல்லா வாசல்களையும் அடைத்துவிட்டு
காவலுக்கு ஆயிரம் அறம்பாடி நிறுத்திவிட்டு
அவளைத் துரத்துகிறது.
அடிபட்டு அடிபட்டு கதறித்துடித்து
அவள் ஓடிவரும்போது திசைகள் தெரிவதில்லை.
வெளிச்சத்தில் அழத்தெரியாதவள் அவள்.
இருளில் ஓடுகிறாள்.
கூட்டமாக சேர்ந்து அவளை அவர்கள்
துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் பாதையில்தான் நீ சென்றாக வேண்டும்
என்று அவர்கள் சொல்வதில்லை.
ஆனால் அந்தக் குறுகலான ஒற்றைப் பாதை தான்
அவள் முன் இருக்கும்படியாக பார்த்துக்கொள்கிறார்கள்.
தப்பித்தால் போதுமென அவள் ஓடிவருகிறாள்.
அவள் ஓட ஓட .. பாதை மேலும் மேலும் குறுகலாகி
அவளை அடைத்துக் கொள்கிறது.
"பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேனே"
விலகிச்செல்லும் அவனிடம் நெருங்கி நெருங்கி
வருகிறது அவள் காதல்மொழி.
"ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ…"
கதறுகிறாள் அவள்.
அவன் அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அவள் வேதனை அவனை எதுவும் செய்யவில்லை.
அவளிருந்த இட த்தில். வேறொருத்தியை எளிதாகப்
பொருத்திவிட முடிகிறது அவனுக்கு.
“இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் -..
போகட்டும அதனாலென்ன..?
அவள் தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்.
"அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்…
என்று இந்தப்பிறவியில் ஆளாக முடியாமல் போன
வேதனையை ஆற்றிக்கொள்கிறாள்.
"எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று"
பேதலிக்கிறது அவள் மனம்..
இன்புற்றேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு
தன்னைத் தானே
ஏமாற்றிக் கொள்கிறாள்.
தனக்குள் இருக்கும் அவனை
அவனே நினைத்தாலும் எடுத்துவிடமுடியாது?
அவன் எனக்குள் இருக்கிறான்.. இருப்பான்..
தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்.

இரவும் பகலும் வருகின்றன.
ஊர்க்கோடியில் அவள் ஒதுங்கிக்கொள்கிறாள்.
நினைவுகளில் வாழ்வதும் கனவுகளில் விழிப்பதும்
இரவில் எரியும் பிணங்களைத்
தொந்தரவு செய்கின்றன.
பிணம் எரிப்பவன் அருகில் வருகிறான்.
என்னவேண்டும் தாயே என்று
அவள் முகம் பார்க்கும்போது
காலத்தின் வற்றிய முலைகளிலிருந்து
பால் சுரக்கிறது..
தாகம் தணிக்கிறான்.

#அவள்மொழி_புதியமாதவி

Friday, July 23, 2021

தரவுகளின் புனைவுலகம்


 

பிரபலங்களைப் பற்றிய குறிப்புகளில்

அதீதப் புனைவுகள் . ( நாஞ்சில், அம்பை..)
நாஞ்சில் நாடன் ருத்திராட்ச மாலையுடன்
அம்பை "தண்ணியடிக்க" கதை எழுதும் அவசரத்தில்..

நாஞ்சில் நாடன்:
"சில ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கியச் சந்தையில்
மதிப்பூட்டப்பட்ட மாத இதழ் ஒன்றில் யுவ இலக்கியவாதி
ஒருவர் எழுதினார், நாஞ்சில் நாடன் முறையாக
சைவ இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த வம்சா வழியில்
வந்தவர் என்று. எனக்கு உடுத்திருக்கும் நாலு முழ வேட்டியையும்
உரிந்து போட்டுவிட்டு ஓடலாம் எனும் அளவுக்கு நகை
பெருகியது. என்னைப் பெற்ற அப்பா ஐந்தாம் வகுப்பு
தோற்ற ஓர்நேர் சம்சாரி. பாட்டம் பயிரிட்டு
ஏழு பிள்ளைகளை வளர்த்தவர். அம்மா கல்யாணமாகி
நாஞ்சில் நாட்டுக்கு வந்தபிறகு தமிழ் எழுத்துக் கூட்டி
வாசிக்கப் பழகினார். ஆனால் நினைத்துக்
கொண்டிருப்பார்கள் போலும்! நாம் ஏதோ மிராசுதார் – ஜமீன்தார் – பண்ணையார் பரம்பரை தலைமுறை தலைமுறையாக
என்று. சைவத் திருமுறைகளை எழுத்தெண்ணிக்
கற்றிருப்போம் என்று. கடவுளே! நாலணாவுக்கும்
எட்டணாவுக்கும் எங்கப்பன் பட்டபாடு! வீட்டு வாசலில்
பூடம் போட்டு அமர்ந்திருந்த புலைமாடனும் புலைமாடத்தியும்
சாட்சி. எவனோ ஒருத்தன் எழுதுகிறான்,
எவனோ ஒருத்தன் வெளியிடவும் செய்கிறான்,
வெட்கமில்லாமல்."
என்ன இப்போ ...???
உங்கள் கழுத்தில் யாரோ ஆசையோடு
ருத்திராட்ச மாலை போட்டு பார்க்கிறார்..
உங்களுக்கு அந்த கெட்டப் எப்படி இருக்கும்னு
கும்பமுனியுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்..
. ஹாஹாஹா...
இது கூடப் பரவாயில்லை நாஞ்சில்..
எங்க ஊரு அம்பைக்கு வந்த நிலையைப்
பார்த்தீர்களா... ??!!
தமிழ் இலக்கியம் வளர்ப்பதற்கு இப்போ எங்கள் அம்பை
கட்டாயம் ‘தண்ணியடிக்க” என்ற கதையை
எழுதியாக வேண்டும்.
அம்பையின் முக நூல் (15 ஜூலை ) பதிவிலிருந்து
திரு. டி.வி. ராதாகிருஷ்ணன்அவர் எழுதிய
”தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்”
என்ற புத்தகத்தை அனுப்பி இருந்தார். ….
நான் எழுதாத புத்தகங்களும் உள்ளன. "பயணங்கள்"
என்ற நாடகமும் "தண்ணியடிக்க" என்ற கதையையும்
நான் இனிமேல்தான் எழுதவேண்டும்!......
இத்தனை தகவல் பிழைகளும் நாளைக்கு வேறு
யாராவது ஆராய்ச்சி என்ற பெயரில் குறிப்பிட்டு அது
’ஆராய்ச்சித் தரவாகிவிடும். அதைத் தடுக்கத்தான்
இந்தப் பதிவு. இதிலுள்ள மற்ற எழுத்தாளர்களும்
அவரவர் குறிப்புகளைப் பார்த்துக்கொள்ளவும்
இதைப் பதிகிறேன்.
இனி வரும் பதிப்புகளில் என் பெயரை நீக்கும்படி
திரு. ராதாகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறேன். “
அப்புறம் தமிழ்ப்படங்களில் நடித்த ஒரு சினிமா
நடிகையின் முதல் கணவர் பெயரை விக்கிப்பீடியாவில்
பார்த்துவிட்டு.. அவரிடமே கேட்டபோது….

”இனிமேதான் அந்த ஆளைக் கண்டுப்பிடிச்சி
கல்யாணம் பண்ணிக்கனும்னு ‘ சொன்னது நினைவுக்கு வருகிறது.
வரலாறு ரொம்ப ரொம்ப முக்கியம் சரவணா
மறந்திடக்கூடாது..
தமிழ் , கலை இலக்கிய உலகம் தன் அதீத புனைவுகளில்
தரவுகளைக் காப்பாற்றி வருகிறது.!