Sunday, November 29, 2020

THE CROWN - is a FICTION

 

ஒரே ஒரு கிரீடம்.
அந்த கிரீடம் உலக நாடுகளை ஆட்சி செய்திருக்கிறது.
அதுவும் அந்த கிரீடம் ஒரு பெண்ணின் தலையை
அலங்கரிக்கிறது.
கிரீடம் அரசனின் தலையில் இருக்கும் வரை
ஏற்படாத புதிய புதிய பிரச்சனைகள்
அதே கிரீடம் அரசியின் தலையில் சூட்டப்படும் போது
முளைக்கின்றன.
உலகப்போரில் வெற்றி பெற்ற தளபதிகள்
அந்த கிரீட த்தின் முன்னால் தலைகுனிந்து
வணங்குகிறார்கள்.
பக்கிம்காம் அரண்மனை..
அரண்மனை.. அரண்மனை..
கிரீடத்தில் எதிரொலிக்கிறது..

“ நீ அரசியா … மனைவியா”
“நீ அரசியா அம்மாவா”
“நீ அரசியா அக்காவா”
கிரீடம் இந்த உணர்வுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது.
அரசியைச் சுற்றி இருக்கும் அதிகாரத்தின்
ஆண் முகங்கள் அவள் முன்னால் மரியாதை
நிமித்தம் வணங்கினாலும்
அவள் சில தருணங்களில் கேலிக்குரியவளாகிறாள்.
அரசன் பிரதமரிடம் பேசினால்
அது ஆலோசனை கேட்பதாகவும்
அரசி பிரதமரிடம் பேசினால்
அது ஆலோசனையாக இல்லாமல்
அவள் அறியாமையாகவும் … புரிந்து கொள்ளப்படுகிறது.
திருமணத்தில்
“கணவன் சொல்படி கேட்கும் மனைவியாக “ –( to obey )
என்று சர்ச்சில் பாதிரியார் சொல்ல சொல்ல
அதை இளவரசி சொல்லி உறுதிமொழி ஏற்கும் போது
விண்ஸ்டன் சர்ச்சிலுக்கு
அது நெருடலாகிறது…
TO OBEY… ???!!!
இங்கிலாந்தில் அரசி .. to obey …?
ஆனால் அரசிக்கு..
அந்த மணப்பெண்ணுக்கு அது நெருடலாக இல்லை!
அண்மைக்கால வரலாறு என்பதால் Netflix தொடரை
மிக அதிகமானவர்கள் பார்க்கிறார்கள்.
எனக்கும் அதனால் தான் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் சீரியல் 1 & 2 வரை ஏற்படாத பிரச்சனை
4 ல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதாவது டயனா அரண்மனைக்குள் வரும்போது
இப்போது பல்வேறு விமர்சனங்கள் !
U.K. culture secretary says
"The Crown" should warn viewers the show is fictional”
….
காட்சி 2
தமிழக அரசியலில் மிக முக்கியமான
பெண்ணாக இருந்த ஜெயலலிதா அவர்கள்
குமுதம் வார இதழில் “சொல்லத்தான் நினைக்கிறேன்”
என்று தன் வாழ்க்கையை தொடராக எழுத ஆரம்பித்தார்.
அவர் எப்படி நடிக்க வந்தார் என்பதெல்லாம்
சொல்லிக்கொண்டே வந்த தொடர் அவருக்கும்
எம் ஜி ஆருக்குமான கதையை (கதை!) சொல்ல வரும்போது
நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆம் நிறுத்தப்பட்டு விட்ட து
-
காட்சி 3
“சிறந்த பேச்சு ஒரு நேர்மையான பொய்.
மோசமான மெளனம் ஒரு நிர்வாண உண்மை “ – மிகெய்ல் நைமி.

உனது நானும் எனது நானும் ஒன்றாகும் வரை -
ஒரே கோட்டில் பயணிக்கும் வரை -
சொற்களோடுதான் வாழ்ந்தாக வேண்டும்.
அதனால் தான் புனைவுகள் சுகமானவை.
நிஜங்களின் காயத்திற்கு புனைவுகளே மருந்து.

Friday, November 27, 2020

அசல் மூக்குத்தி அம்மன்




அசல் மூக்குத்தியும்
சினிமா மூக்குத்தியும்
.......
மனிதர்களும் அவர்கள் வணங்கும் தெய்வங்களும்
அந்தந்த மண்ணின் இயற்கை சார்ந்தவர்கள்..
ஆனால் என்ன செய்வது..?
மூக்குத்தி அம்மன் கூட கறுப்பா இருக்க கூடாது.
குண்டா இருக்க கூடவே கூடாது.
ஏனேனில் இங்கே அழகு என்பதை
யார் யாரோ தீர்மானிக்கிறார்கள்.
அது அவர்களின் சந்தை சார்ந்தது.
இதைப் புரிந்து கொள்ளாமல் கலை இலக்கிய
உலக பிரம்மாக்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள்.

அவள் கரிய மேனியின் நாவற்பழ அழகில்
மயங்கினேன். அவள் தேகத்தின் வலிமை
அவள் என் மீது கொண்டிருக்கும் காதலைப் போல
இருக்கிறது. காற்றடித்தால் சாய்ந்துவிடும் கொடியல்ல
அவள். என் மண்ணில் வேர்விட்டு என் சந்ததியை
விளைவிக்கும் மண் போன்றவள் அவள்.
மாவிலையைப் பார்த்திருக்கின்றீர்களா...
என் காதல் மொழியில் அவள் வெட்கப்படும்போது
அவள் முகத்தில் மாவிலையின் நிறமும்
காலை சூரியனும் தெரியும்
கடற்கரையின் உப்புக்காற்று அவள் மேனியில்
பூசினாற்போல ஒரு வாசனையைத் தெளித்திருக்கும்.
அவளைத் தொடும் அந்த இரவில்
கடற்கரை அடியிலிருக்கும் சங்குகள் நெளியும்.
அவள் கூந்தலில் எப்போதும் கருக்கலில் மலரும் பிச்சிப்பூவின் வாசம்.
நான் தொடும்போது மட்டும் அந்தக் கறுப்பு வைரம்
எனக்குள் ஜொலிக்கும்...
அவள் அழகிடா...
ஏ.. மாங்கா மடையர்களா
இப்படி எல்லாம் உங்கள் மண்ணின் அழகை
எப்போது அடையாளம் கண்டு எழுதப்போகின்றீர்கள்.?
... இப்படிக்கு
அசல் மூக்குத்தி அம்மன்.

Wednesday, November 25, 2020

காதலுக்கு ஆத்மா இருக்கிறதா..??

 ஒரு திருமண நிகழ்வு.

மணப்பெண் அமெரிக்க நாட்டவர்.
மணமகன் மும்பை தமிழர். காதல் திருமணம் தான்.
திருமணத்திற்கு மணப்பெண்ணின் பெற்றோர் வந்திருந்தார்கள்.
அக்காட்சி... இதுவரை நம் திருமணங்களில் காணமுடியாத காட்சி.
மணப்பெண்ணின் அப்பா தன் மனைவியுடனும்
மணப்பெண்ணின் அம்மா தன் கணவருடனும்
ஜோடியாக கை கோர்த்து கொண்டு
மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள்.
அவர்களிடம் எவ்விதமான தடுமாற்றமோ
அல்லது தயக்கமோ இல்லை.
ஆண் பெண் உறவில் அவர்களிடம் இருக்கும்
இந்த வெளிப்படைத்தன்மையை நான் ரசித்தேன்.
ஒருவரை ஒருவர் மதிக்கும் பேருள்ளம்.
உண்மையை நிதர்சனத்தை எவ்விதமான
நெருடலும் இல்லாமல் அவர்கள் எதிர்கொண்டு வாழும் வாழ்க்கை
அதற்கான புரிதல் மனத்திடம் எல்லாவற்றுக்கும் மேலாக
வாழ்க்கையில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளாமல்
அவர்கள் வாழும் வாழ்க்கை..
....
(இந்த மணமக்கள் தற்போது நவிமும்பையில் வசிக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்து கொண்டு தங்கள் வீட்டையே அனாதைக்குழந்தைகளின் காப்பகமாக மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக காதலித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.)
நாம்..??
இந்திய மனம் வாழ்க்கையை ஏன் தியாகமாக
வடிவமைத்து கொள்கிறது?
இந்திய ஆண் பெண் உறவில் எத்தனை வேடங்கள்?
நெருடல்கள், மனக்கிலேசங்கள், ஏமாற்றங்கள்.
வக்கிரங்கள்..
நம் ஆண் பெண் உறவு புனிதம் என்ற போர்வையை
தன் மீது போர்த்திக்கொள்கிறது.
யதார்த்த மன நிலையை எதிர்கொள்ள முடியாமல்
தயக்கம் காட்டுகிறது.
காதலையும் திருமணத்தையும் கூட
எப்போதும் இணைத்தே பார்க்கிறது.
திருமணத்திற்குப் பிறகு உன் காதலை மறந்துவிடு
என்று போதிக்கிறது.
காதலனும் கணவனும் வேறு வேறானவர்கள் என்றால்
அது ஒரு பெண்ணின் கற்புக்கு களங்கம்
என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.
நான் முழுமனதாக உன்னைக் காதலிக்கிறேன்.
நீங்கள் அந்த அளவுக்கு என்னைக் காதலிக்கிறீர்களா?’

என்று கேட்ட அம்ரிதா ப்ரிதமின் காதலை
சாஹிர் ஏற்றுக்கொள்ளவில்லை.
"இது ஆத்மாவால் உணரப்பட வேண்டிய
ஒரு உணர்வு
காதல்,
காதல் என்ற பெயரிலேயே இருக்கட்டும்
அதற்கொரு பெயர் கொடுத்து
கறை படுத்திவிட வேண்டாம் "
என்று அம்ரிதா தன் வாழ் நாள் முழுவதும்
காதலைக் கொண்டாடிக் கொண்டே இருந்தார்.
அம்ரிதா சொல்வது போல காதல் ... என்ற உணர்வு
ஆத்மாவால் உணரப்பட வேண்டியது... என்பதும்
காதலை ஏமாற்றிக்கொள்ள இந்திய மனம்
போர்த்திக்கொண்ட இன்னொரு போர்வையா..?


எது தான் காதல்?
காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்லி முடித்துவிடலாமா..!
கடவுள் இல்லை இல்லை என்று சொல்பவர்களும்
காதலைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் காதலுக்கு ஆத்மா இருக்கிறது என்பதை
அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கவிதையைக் கொண்டாடுபவர்களுக்கு
காதல் தான் எல்லாம். இன்னும் சொல்லப்போனால்
காதலுக்கு கிடைத்திருக்கும் இத்துனை மரியாதைகள்,
பிம்பங்கள் எல்லாமே இவர்களின் கவிதைகளால்
வளர்க்கப்பட்டவை, நிலை நிறுத்தப்பட்டவை.
அப்படியானால் காதல் என்பது என்ன?

பார்க்கும் பெண் மீதெல்லாம் ஆடவனுக்கு ஈர்ப்போ
அல்லது பார்க்கும் ஆண் மீதெல்லாம் பெண்ணுக்கு
ஈர்ப்போ ஏற்படுவதில்லை.
சிலருக்கு சிலர் மீது ... ஈர்ப்பு ஏற்படுகிறது.
அந்த ஈர்ப்பு .. மட்டுமே.. புவி ஈர்ப்பு விசை போல
ஆண் பெண் உலகை இயக்கிக்கொண்டே இருக்கிறது..
(அம்ரிதா ப்ரீதம் வாசித்தால் இப்படித்தான் ஆகும்!)

Friday, November 20, 2020

பொதுஜனத்தின் தேசப்பக்தி

 

தேசப்பற்றை எப்படி எல்லாம் நிரூபிக்க வேண்டி இருக்கிறது

என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.

10 ஆண்டுகள் முடிந்துவிட்டன.   

வங்கதேசத்து தலைநகர் டக்காவில்

2008 அக்டோபர் 7 முதல் 10 வரை

ஹோப் பவுண்டேசனில் நடைபெற்ற கருத்தரங்கம்.

தங்கும் வசதிகளும் மிகப்பெரிய நூலகமும்

கொண்ட ஹோப் பவுண்டேசன். டாக்கா.

இந்திய தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றிய

கருத்தரங்கம். உலக நாடுகளின் தேர்தல் முறைகளை

தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. அவர்களைச்

சந்திக்கவும் உரையாடவும் கருத்துப் பரிமாறவும்..

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள்

மறைந்த M C Raj மற்றும் அவர் வாழ்க்கைத்துணை

ஜோதிராஜ்.

எம்.சி.ராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் "Dalitocracy" நூலை

 தாய்லாந்திலிருந்து வந்திருந்த முகமது அப்டுஸ் சபுர் வெளியிட

முதல் பிரதியை பாகிஸ்தானிலிருந்த வந்திருந்த கலாவந்தி பெற்றுக்கொண்டார்.

கலாவந்தி பழகுவதற்கு மிகவும் இனிமையான பெண்.

தனித்து வருவதற்கு அவர் குடும்பம் அவரை அனுமதிக்கவில்லை

என்பதால் துணைக்கு இன்னொரு பெண்ணையும் அழைத்து

வந்திருந்தார். அவருடனான என் நட்பு அதன் பின் மின்னஞ்சல்

வழியாக தொடர்ந்த து.

அவரோ பாகிஸ்தான்  பெண்.

நானோ இந்தியப் பெண்.

நட்பு என்பது தேசவிரோதமாகிவிடலாம் என்று

நாங்கள் இருவருமே நினைக்கும் சூழல் ஏற்பட்ட து.

விடைபெற்றுக்கொண்டோம்.

இதை எழுத்துகளில் எழுதிக்கொள்ளாமல்

ஒரு வார்த்தை பரிமாறிக்கொள்ளாமல்

புரிந்து கொண்டோம்..

என்ன விந்தையான உலகமிது.

எப்படியோ நாங்கள் இருவரும்

எங்கள் தேசப்பக்தியைக் காப்பாற்றிக்கொண்டோம்.

இன்னொரு கவிஞரை நான் மும்பை ஜஹாங்கீர் ஆர்ட் காலரி

ஓவியக்கண்காட்சி முதல் நாள் தே நீர் விருந்தில்

சந்தித்தேன். அவரோ வங்கதேசத்திலிருந்து மருத்துவம்

பார்ப்பதற்காக இந்தியா வந்திருந்தார். ரிடையர் ஜட்ஜ்.

அவரை மீண்டும் பன்மொழி கவிஞர்கள் கவிதா நிகழ்வில்

சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த து. அவர் தான் வழங்கிய

தீர்ப்புகளை மறுவாசிப்பு செய்யும் கவியையை வாசித்தார்.

ஒரு நீதிபதியிடம் எழுதப்பட்ட சட்டங்களும் மனசாட்சியும்

மாறி மாறி பேசுகின்றன..கவிதை மிகுந்த வரவேற்பை

பெற்றது.  நான் வாசித்த மகளே வந்துவிடு கவிதையும்

புத்தக அலமாரியும் அவருக்குப் பிடித்துப் போய்விட்ட து.

அவரும் என்னுடன் மின்ன ஞ்சல் தொடர்பில் இருந்தார்.

மருத்துவம் முடிந்து வங்கதேசம் புறப்படும் போது

இனி உங்களுடன் தொடர்பு கொள்வது சாத்தியப்படுமா

தெரியவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லி

வாழ்த்து விடைபெற்றார்.

இப்படியாக நானும் அவரும் அவரவர்

தேசப்பக்தியைக் காப்பாற்றிக் கொண்டோம்



.

டாக்காவில் இருந்த 5 நாட்களில் மற்றவர்கள் எல்லாம்

ஷாப்பிங்க் போகும்போது நான் அங்கிருந்த நூலகத்தில்

என்  நேரத்தை செலவு செய்தேன்.

எதை எல்லாம் நாம் பாகிஸ்தானியர்களுக்கு எதிராகச்

சொல்கிறோமோ அதையே தான் அவர்களும்

இந்தியர்களுக்கு எதிராக அவர்கள் தேசத்தில்

சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை

மிகத்தெளிவாக புரிந்து கொண்டேன்.

இந்தியப் பிரிவினை குறித்த புத்தகங்களில்

 நமக்கு இந்தியாவின் பார்வை தான் தெரியும்.

அவர்களின் பார்வையையும் வாசிக்க முடிந்த து.

அத்துடன் பிரிவினையின் போது பாகிஸ்தான் தளபதி

எழுதியபுத்தகம்.. மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட

புத்தகங்களை வாசித்து குறிப்பெடுத்துக் கொண்டேன்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் எங்காவது எதாவது

எழுதி இருக்கிறேனா..இல்லையே..

இப்படியாக நான் என்னை

தேச விரோத சக்திகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டு

என் இருத்தலைக் காப்பாற்றிக்கொள்வதில்

கவனமாக இருக்கிறேன்.

 

 

 

 

 


Sunday, November 15, 2020

WALKING WITH THE COMRADES

 

லால் சலாம்…
மசே வை பேசவிடுங்கள்.
(WALKING WITH THE COMRADES)
அவள் காலடி நிலம் .. அந்த 60,000 சதுர கி.மீட்டர் வனம்
நம் இந்திய மண்ணின் ஆன்மா. ஜீவன்.
அதன் கழுத்தை நெறிக்கும் கரங்கள் எவராக இருந்தாலும் எத்துனை அதிகாரம் வலிமையுடன் வந்தாலும் மசே எதிர்கொண்டு போராட துணிகிறாள்.
அவளுக்குத் தெரியும்..
இந்தப் போராட்ட த்தில் அவளும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அவள் அன்னையும் சகோதரிகளும் தோழியரும் விதைக்கப்பட்ட மண்ணில் .. வீசப்படுவாள்,
அவளுக்குத் தெரியும்..
அவளுக்காக காத்திருக்கும் காக்கி உடைகளும்
துப்பாக்கி ரவைகளும்
.மசே….
அவளைப் பேச விடுங்கள்,
அவள் அந்த வனங்களின் யட்சி.
அவளைப் பேசவிடுங்கள்,
செவ்வணக்கம் காம்ரேட்
பூமி வெப்பமடைதலை குளிர்ச்சாதன அடுக்குமாடியில்
கணினி முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்
அறிவுஜீவிகளுக்கு வன ங்களின் வாழ்க்கையை யார் தான் சொல்லுவது?
மசே வை பேசவிடுங்கள்.
வாகன ங்களை எரிப்பது வன்முறை தான்.
ஆனால் அந்த வன்முறையின் ஊடாக காந்திய துப்பாக்கியை எடுக்கவும் வனத்தை அழிப்பவரைக் கடுமையாக தண்டிக்கவும்...
மசே வின் பயணம்.. கரடுமுரடானது.
அவளுடன் சமவெளிகள் பயணிக்க முடியாது.
சமவெளிகளின் முன்னேற்றம் என்பதற்குப் பின்னால்
நடக்கும் OPERATION GREEN HUNT …யார்?
யாருக்காக இதெல்லாம் நடக்கிறது!
வனத்தடியில் புதைந்திருக்கும் கனிம வளங்கள்
தோண்டி எடுத்து வனங்களை அழித்த
நம்மிடம் அவள் கேட்கிறாள்!
இந்த முன்னேற்றம் என்ற பெயரில்
யார் முன்னேறி இருக்கிறார்கள் என்று!
அவள் கேள்விகளை நாம் எதிர்கொள்ள
அச்சப்படுகிறோம்.
இந்தியா விற்பனைக்கா!
என்ற இன்னொரு பக்கமாக அது விரிவது
நமக்கு விருப்பமில்லை.
நமக்கு நாம் விரும்பிய காட்சிகளுடனேயே
கதைகள் தேவைப்படுகிறது.
மசே.. வனத்தின் அழகு,
FAIR AND LOVELY அழகியல் மசே அறியாதவை.
அறிந்தாலும் அதை அவள் கரிய கால்தடம் மண்ணுக்குள்
புதைத்துவிடும் என்று விளம்பரங்கள் பயப்படுகின்றன.
நமக்கு விளம்பரங்களும் அதில் வரும் தேவதைகளும்
ரொம்பவும் முக்கியம்.
அதனால் தான் மசே…
மசேவை பேசவிட்டால்..
சத்யமேவ ஜெயதே..
வாக்குப்பலித்து விடலாம்.
மசே.. உன் குரல்வலையை
நெருக்கும் சமவெளியின் அதிகாரம்
பூமி நடுங்க ..
லால் சலாம் லால் சலாம்..
மசே வை பேச விடுங்கள்.
மசே.. மாவோயிஸ்டுகள்…
அருந்ததி ராய்
இந்திய அரசாங்கம் மவோயிஸ்டுகளின் தலைமையின்
தலையைத் துண்டித்துவிட்டால்
இந்த வன்முறையை நிறுத்திவிடலாம் என நினைத்தால்
அது பெரும் தவறாகிவிடும். மாறாக வன்முறை இன்னும்
பரவும், உக்கிரமடையும். அரசாங்கத்திடம் பேசு வார்த்தை
நட த்த யாரும் இருக்க மாட்டார்கள்” (பக் 93)
பெரிய அணைகள் நவீன இந்தியாவின் கோவில்கள்
என்று தப்பு தப்பாக அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தோம்.
அப்படித்தான் கற்பித்தீர்கள்,,
மசே .. உங்கள் கருத்தாக்கத்தை உடைத்தாள்,
இப்போது அவள் குரல்வலையைத் துண்டிக்க
நினைக்கின்றீர்கள்.
வேண்டாம்…
மசே.. நம் வனத்தின் யட்சி.
இந்திய மண்ணின் ஜீவன்.
மசே வை பேசவிடுங்கள்.
லால் சலாம் லால் சலாம்..
மசே…
தன் வனத்துடன் சமவெளியிலும் பள்ளத்தாக்குகளிலும்
இறங்கி நியாயம் கேட்கிறாள்.
அவளைப் பேசவிடுங்கள்.
மசே .. நம் வனத்தின் யட்சியைப் பேசவிடுங்கள்.

லால் சலாம்.
சத்யமேவ ஜெயதே.

பிகு:
இப்புத்தகம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பது புத்தகத்தை எழுதிய அருந்ததி ராய்க்கு தெரியாது. பொது ஜன வாசகர்களுக்கும் தெரியாது. தடை செய்யப்பட்டதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பரவலாக வாசிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கும் தடை கோரிய அமைப்பிற்கும் மிக்க நன்றி

Saturday, November 14, 2020

WHO KILLED SHASTRI?

 

இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கின்றன.
இதைச் சுற்றி சுற்றி பல்வேறு கேள்விகளுடனும்
உரத்த குரல்களுடனும் வெளிவந்திருக்கும் திரைப்படம்.
தி தாஷ்கண்ட் பைஃல்ஸ்
ரஷ்யாவில் தாஷ்கண்ட் நகரில் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு சாஸ்திரிக்கு மாரடைப்பு
வந்து திடீர் மரணம் சம்பவித்த தாக சொன்னார்கள். சொல்கிறார்கள்.
அப்போதும் சில கேள்விகள் எழுந்தன.
1) ஒரு நாட்டின் பிரதமர் திடீர் மரணம் அயல்தேசத்தில் நடக்கிறது. யாருக்கும் சந்தேகமே வரவில்லையே ! ஏன்?

2) சாஸ்திரியின் உடல் ஏன் சோதனைக்குட்படுத்தப்படவில்லை?
(போஸ்ட்மார்ட்டம்)
3) சாஸ்திரியின் உடல் நீலம் பாரித்திருந்த்தாக சொல்லப்படுவது உண்மையா?

4) சாஸ்திரியின் உடலில் வயிற்றுப்பகுதியிலும் கழுத்திலும் வெட்டுப்பட்டு இருந்த தும் அதிலிரிந்து ரத்தப்போக்கு இருந்த தும் சாஸ்திரி அணிந்திருந்த தொப்பியில் அந்த ரத்த த்தின் கறை இருந்த தும்
கவனிக்கப்படாமல் மறக்கடிக்கப்பட்ட து ஏன்?
5) சாஸ்திரியின் மரணத்தால் யாருக்கு இலாபம்?
6) INDIA FOR Sales … அச்சமூட்டுகிறது.
Who killed shastri? என்ற புத்தகத்தின் பக்கங்கள் திரையில் ஓடுகின்றன.
இம்மாதிரி திரைப்படங்கள்….
அதுவும் காங்கிரசை நேரடியாக
குற்றவாளிக்கூண்டில் ஏற்றும் திரைப்படங்கள்…
இப்போது மிக அதிகமாக திரைக்கு வருகின்றன.
வரலாற்று உண்மைகளுக்கும் அப்பால்..
இதுவும் ஒர் அரசியல் தான்
இதில் யாரும் விதிவிலக்கல்ல என்ற புரிதலுடனும்
பார்க்க வேண்டியதிருக்கிறது.

Friday, November 13, 2020

தீபாவளி + 14 நவம்பர் .. ..

 இதை எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் எழுதாமல் எளிதில் கடந்து

சென்றுவிட முடியவில்லை.

" நான் தீபாவளி கொண்டாடுவதில்லை"
கொண்டாடியதாக நினைவும் இல்லை.
(என் பெரியாரிஸ்டின் தீபாவளி சிறுகதை
சுயசரிதையும் ஒரு துளிதான்!)
ஆனால் தீபாவளி
வாழ்த்துகள்
நிரம்பி வழிகிறது.
நண்பர்கள் உறவுகள் கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
வாழ்த்துகளை விட வாழ்த்தும் உள்ளங்கள்
ரொம்பவும் முக்கியமானவை.
அவர்கள் தங்கள் கொண்டாட்டங்களை
என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள்
என்பதில் மகிழ்ச்சி.
என் மகளும் மருமகளும் கூட
தீபாவளி கொண்டாடுகிறார்கள்!
அதிலும் என் பேரன் சித்தார்த் க்கு
இது முதல் தீபாவளி என்ற தடபுடல் வேறு!!.
(10 மாதக்குழந்தை)
எல்லாவற்றுக்கும் சாட்சியாக
தாமரை இலை தண்ணீர் போல ...
வாழ்க்கை.. மகிழ்ச்சி .

****
இன்று குழந்தைகள் தினம்.
14 நவம்பர்.
Tributes to our great leader & First PM of India
Pandit Jawaharlal Nehru..
#Tributes_nehru

***
இன்று world diabetes day 14 November
தீபாவளி ஸ்வீட்ஸ்.. !
சர்க்கரை வியாதியும் இனிப்பும்..
ஆஹா...
பரவாயில்லை...
ஒரு நாள் தானே...
இனிப்பு சாப்பிடுங்கள்..
இந்த டாக்டர்கள் ரொம்பவும் பயமுறுத்துவார்கள்.
அதை நம்பி
தீபாவளி பலகாரங்களை மிஸ் பண்ணிடாதீங்க.