Thursday, December 20, 2018

பேராசிரியர் அன்பழகனும் திமுக வும்

நேற்று எழுத வேண்டியதை இன்று எழுதுகிறேன்.
Image result for திமுக அன்பழகன்
உங்கள் பிறந்த நாளை இந்த ஆண்டு
கொண்டாடப்போவதில்லை,
யாரும் வாழ்த்த வேண்டாம்,
யாரும் நேரில் வர வேண்டாம் என்று
நீங்கள் சொன்ன சொல்லுக்கு
நான் மரியாதை கொடுக்கிறேன்.
உங்கள் உயிர்த்தோழரின் மறைவு..
நீங்கள் கடந்து வந்தப் பாதை
உங்கள் மவுன யுத்தங்கள்
உங்களின் பேசப்படாத பக்கங்கள்
உங்கள் புத்தகங்கள்…
உங்களின் காணாமல் போன இரண்டாம் இடம்..
அனைத்தையும் உன்னிப்பாகவும்
அக்கறையுடனும் கவனித்து வருகிறேன்.
1949 செப் 17 திமுக உதயம்
ஆனால் அதற்கு முன் அண்ணாவுக்கு
தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்த தயக்கம்..
உங்கள் கேள்வி அல்லவா அந்த தயக்கம்
நீக்கி.. திராவிட அரசியல் பாதையை
எழுப்பியது!
உங்கள் எழுத்துகளுக்கு தனித்தன்மை உண்டு.
ஓர் ஆய்வுக்கட்டுரை போல ஆரம்பித்து
தரவுகளை எப்போதும் எதிராளியிடமிருந்தே
எடுத்துக் கொண்டு நீங்கள் வீசும்
கணைகள்… உங்கள் கட்டுரைகள்.!.
தமிழர் திருமணமும் இனமானமும் என்ற
உங்கள் புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளும்
இன்றும் என் நினைவில் ...
50 ஆண்டு கால அரசியல் தோழமை 
கலைஞருடனான உங்கள் நட்பு என்பது
அவ்வளவு எளிதல்ல. 
கடினமான அந்தப் பாதையை
வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறீர்கள்..
பல்வேறு தருணங்களில் உங்கள் மவுனமே
உங்களுக்கு கவசமாகவும்
எங்களுக்கு எரிச்சலாகவும் இருந்திருக்கிறது…
கலைஞரின் சிலையை
நீங்கள் திறந்து வைத்திருந்தால்
அதுவே திராவிட அரசியலின்
சுயமரியாதையைக்
காப்பாற்றி இருக்கும்… 

இனி…
சொல்வதற்கு எதுவுமில்லை.
உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
#DMK_கலைஞர்


Monday, December 17, 2018

சிலை அரசியல்

சிலை அரசியல்
அதிகாரக் கட்டமைப்பில் சிலைகளின் பங்கு என்ன?
கோட்பாடு சித்தாந்தம் என்ற சூத்திரங்களை
நினைவுப்படுத்தும் அடையாளமாக இருந்த
சிலைகள் ....
கோட்பாடாவது கொள்கையாவது
என்று புறம் தள்ளி ,
பிம்ப அரசியலைக் கட்டமைப்பதில்
வெற்றி பெற்றுவிட்டனவா?
கீழை நாடுகளில் ..
நம் உளவியலில் சிலைகளின் அரசாட்சி
இன்றும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறதே?
ஏன்?
சிலைகள் இல்லை என்றால் எதிர்காலம்
அத்தலைவர்களை மறந்துவிடும் என்ற
அச்சம் தான் சிலைகளைக் காலம் காலமாக
எடுத்துச் செல்லும் நம் உளவியலுக்கு காரணமா?
கண்ணால் காணாத திருவள்ளுவருக்கு கூட
சிலை எழுப்பி ஒரு பிம்ப கட்டமைப்பில்
திருக்குறளை எழுப்புவது என்பது உண்மையில்
வெற்றி பெற்றிருக்கிறதா..?
சந்துகளிலும் சாலைகளிலும் திடீர் திடீரென
உருவாகும் தெய்வங்கள்.. நமக்குத் தேவையில்லை.
என்று பேசிவிடுகிறோம்.
ஆனால் சிலைகள் வைக்கிறோம்.
சிலைகளுக்கு மாலை மரியாதை அணிவகுப்பு..
இதுவே பழகிவிட்ட து நமக்கு.
கணினி சமூக வலைத்தளம் கூகுள் ஆண்டவர்
என்று எதுவுமில்லாத காலத்தில்..உருவாக்கப்பட்ட
சிலை அரசியல் .. காலப்போக்கில்
சாமிகளாக தேவிகளாக மாறி
அருள்பாலித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இன்னும் தலைவர்களை சிலையாக்குவது என்பது
எளிது. சிலை இல்லை என்றால் எப்படித்தான்
கொண்டாடுவது? போற்றுவது.!
தலைவர் சொன்னதை எல்லாம் மறப்பதற்கு கூட
சிலைகள் தான் தேவையாகவும் இருக்கின்றன.
இதை எழுதும் போது ஒரு பெயர் நினைவுக்கு
வருகிறது.
ஃபிடல் காஸ்ட்ரோ..

Image result for ஃபிடல் காஸ்ட்ரோ

உளிகள் செதுக்காத தலைவன் !
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஆனால் அவர் க்யூபாவில் பிறந்துவிட்டார்.
அது கூட பரவாயில்லை..
அவருக்கு சிலை வைக்க க் கூடாது,
மணிமண்டபம் கட்டக் கூடாது
சாலைகளுக்கு அவர் பெயரை வைக்க க் கூடாதுனு
சொல்லிட்டுப் போனாராம். அது… அது ஒன்னுதான்
எனக்கு அவரிடம் பிடிக்கலை.
பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை,
அண்ணாசிலை, அம்மா சிலை,
கண்ணகி சிலை, கடவுள் சிலை.. கலைஞர் சிலை..
ஏன் மயாவதி அவரோட கட்சி சின்னமான ஆனைகளுக்கு
கூட சிலைகள் வைத்து எப்புடி அசத்தினார்!
எங்க போனாலும் நகரத்தைச் சுற்றி
ஒரு மகாத்மா காந்தி ரோடு ( எம்.ஜி.ரோட்),
மும்பையில்.. ரயில்வே ஸ்டேஷனுக்கும் சத்ரபதி
சிவாஜி தான். ஏர்போர்ட்டுக்கும் அதே சத்ரபதி தான்..
இப்படியாக சிலைகளும் ரோடுகளும் பழகிப்போன
எனக்கு ஃபிடல் காஸ்ட்ரோ வின் இந்த லாஜிக்
புரியல. பிடிக்கவும் இல்ல.
பயம்மா இருக்கு.. ஃபிடல் காஸ்ட்ரோவை
க்யூபா மக்கள் மறந்துவிடுவார்களோ னு

Saturday, December 15, 2018

The Philisophy of History & FAIR AND LOVELY

The philosophy of history & ··FAIR AND LOVELY
நாட்டில் ஒன்று நடக்கிறது. பிறகு அதுவே
சரித்திரத்தின் ஒரு பகுதியாக தன்னை ஆக்கிக்
கொள்கிறது. அதோடல்லாமல் தன்னை வளர்க்கும்
வித த்தில் புதிய சரித்திரத்தை உருவாக்குகிறது.
- ஜி.டபிள்யு. எப். ஹெகெல்.
ஒகே ஹெகல்…
நாட்டில் ஒன்று நடக்கிறது.
அது சரித்திரத்தின் ஒரு பகுதி ஆகிவிடக் கூடாது
என்று சரித்திரம் விரும்புகிறது. ஒருவகையில்
சரித்திரம் என்பது எப்போதுமே வெற்றி பெற்ற
அதிகார மையங்களைச் சுற்றியே தன் எல்லைகளை
வகுத்துக் கொள்கிறது.
-புதியமாதவி…
யோசித்துப் பாருங்கள்.. ஆப்பிரிகா உலக நாடுகளைப்
 பிடித்து காலனிய நாடுகளாக்கி
ஆட்சி செய்திருந்தால்... என்ன நடந்திருக்கும்!
FAIR AND LOVELY க்ரீமுக்குப் பதிலா டிவி யில் எல்லாம்
BLACK AND LOVELY CREAM விளம்பரங்கள் 
நம்ம ஒரிஜினல் அழகியரின் ஒய்யார நடையுடன்
 ஓடிக்கொண்டிருக்கும்.. .. 
இன்னும் என்னவெல்லாமோ நடந்திருக்கும்.. !

Wednesday, December 12, 2018

காற்றழுத்தம் தாழ்வு மண்டலத்தில் அரசியல்


தமிழக அரசியலில் இப்போது தான் உண்மையில்
வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெற்றிடம்
திமுக வின் எதிர்காலத்தை நீர்த்துப் போகச்
செய்யும் ஆபத்துக்குரியது என்பதை திமுக
உணர்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை!
அனைத்து ஊடகங்களும் திமுக வுக்கு வெற்றி
வாய்ப்பு இருப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அடுத்த முதல்வர் திரு ஸ்டாலின் தான் என்றும்
உறுதியாகிவிட்ட மாதிரியே இருக்கிறது.
அதாவது தமிழக சூழலில் திமுக வுக்கு எதிர்க்கட்சி
என்று போட்டிப்போட ஓர் அரசியல் கட்சி இல்லை!
இதை எழுதும் போது வானிலைச் செய்தி காதில்
விழுகிறது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும்..
கனமழைப் பெய்யக் கூடும் என்று. இது தான் இயற்கை.
அரசியல் சூழலிலும் காற்றழுத்தம் குறைவான இட த்தில்
கன மழைப் பெய்யலாம். ஏன் காஜா புயல் கூட வரலாம்.!!
வரவேண்டும்.. வருமா .. ..
சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா..
1)      ஆன்மீக அரசியலும் மய்ய அரசியலும் …
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு  வரக்கூடாது என்று
எவரும் சொல்ல முடியாது. சினிமா பிரபலம் என்பது
மட்டுமே அரசியல் வெற்றியாக முடியுமா? எல்லோரும்
எம் ஜி ஆர் ஆகமுடியாது. எம் ஜி ஆர் காலத்திலேயே
அரசியல் கட்சி தொடங்கிய சினிமா பிரபலங்கள் உண்டு.
ஆனால் அவர்களால் எம்.ஜி ஆர் ஆகமுடியவில்லை!
எம். ஜி. ஆர், அவருடைய தொலை நோக்கு அரசியல்
திட்டங்கள், அவரை முன்னிலைப் படுத்திய இயக்கம்,
திரையிசை.. இப்படியாக பல காரணிகள் உண்டு.

2)      பா.ம.க. மருத்துவர் வகையறா.. கட்சிக்கும்
சாதி அடையாளம் உண்டு. தென் தமிழகத்தில்
பா.ம.க வுக்கு செல்வாக்கு அதிகமில்லை.
3)      தொல்.திருமாவளவன் சிறந்த அரசியல்வாதி தான்
ஆனால் தமிழ்ச்சாதி மனம் அவரை சாதித்தலைவராக
மட்டுமே வைத்திருக்கிறது.
4)       வை.கோ… உறுதிமொழி எடுத்துவிட்டார்.
ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய்வதில்லை என்று!
அதற்காக திமுக அவரைப் பாரட்டவில்லை என்றாலும்
நாம் பாராட்டலாம்..!
5) விஜயகாந்த் - தேதிமுக வைக் காணவில்லை. காணவில்லைனு போஸ்டர் கூட போடவில்லை!

                         இப்போது தமிழக அரசியலில் எஞ்சி இருப்பவர்கள் பொதுவுடமைக் கட்சியும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் மட்டும் தான். கொள்கை ரீதியாக
கோட்பாட்டு ரீதியாக நாம் பொதுவுடமைக்கார ர்களை ஏற்றுக்கொண்டாலும்
தமிழகத்தில் அவர்களின் அரசியல் இல்லை.
பக்கத்து மா நிலமான கேரளாவில் இருக்கிறது ஏன்
தமிழகத்தில் இல்லை என்று யோசிக்கும் போது
திராவிட அரசியல் அலை அதிலும் குறிப்பாக
அறிஞர் அண்ணா என்ற மேஜிக்.. தமிழ் மண்ணில்
பொதுவுடமைக் கட்சி காலூன்ற வேண்டிய பள்ளங்களில்
தன்னை இட்டு நிரப்பி அரசியல் செய்துவிட்ட து.
இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலமா
அல்லது அக்கட்சிக்கு ஏற்பட்ட சோகமா ..
இறுதியாக சீமானின் நாம் தமிழர் கட்சி…
இளைஞர்களின் கூட்டம் …
சீமான் முன்வைக்கும் சூழலியல் அரசியல்
இவை எல்லாம் குறைந்த து இன்றைய
வெற்றிட த்தை நிரப்பும் அலையாக
மாறும் வாய்ப்பு இருக்கிறது..
அலை அடிக்குமா.. மழைப் பொழியுமா?
சீமானின் பேச்சைக் கேட்கலாம்,
ஆனால் ஓட்டுப் போட மாட்டோம் என்று
முடிவு செய்யும் தமிழர்களின் மன நிலைக்கான
காரணத்தை சீமான் கண்டறிய வேண்டிய 
காலம் வந்துவிட்டது.

இந்தக் காற்றழுத்தம் தாழ்வான இத்தருணத்தைத்
தவறவிட்டால்… தமிழ் மண்ணில் மழை இல்லை.

ம்ம்ம்.. தமிழக அரசியலில் காங்கிரசு/ பிஜேபி
இரு கட்சிகளுக்கும் காற்றழுத்தம் குறையும்
நேரத்திலும் வாய்ப்புகள் இல்லை.
ஆனால் அவர்கள் இந்திரகாந்தி காலத்திலிருந்து
இன்றைய மோதி காலம் வரை…
புறவாசல் அரசியலில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

Monday, December 10, 2018

இந்திய மனசாட்சியின் ராஜினாமா

Image result for rbi governor resigns
இந்திய மனசாட்சியின் ராஜினாமா
இந்திய அரசாட்சியில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம்,
ரிசர்வ் வங்கி ஆகியவை தன்னாட்சி அந்தஸ்து கொண்டவை.
 நேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன்.
இன்று அவருக்குப் பின் வந்த கவர்னர் உர்ஜித் பட்டேல்..
என்ன நடக்கிறது…?

என்ன நடந்தது  !
அக் 26 .. ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா சொன்னார்..
அரசு தொலை நோக்குத் திட்டமில்லை.
இன்றைய வெற்றி மட்டுமே குறிக்கோள்.
அவர்கள் T20  கிரிக்கெட் விளையாட  நினைக்கிறார்கள்.
நாங்கள் டெஸ்ட் மேட்ச் விளையாட நினைக்கிறோம் என்றார்.
அவர் சொல்ல வந் த து புரிந்த து.
மோதி என்ன கேட்டார் , இவர்கள் வளைந்து கொடுக்க மறுக்கிறார்கள்
என்ற கவலை ஆரம்பித்த து.
இரண்டொரு நாளில் ரிசர்வ் வங்கியின் யுனியன் வெளிப்படையாக
தங்கள் தன்னாட்சி அதிகாரத்தில்
அத்துமீறி நுழையும் அரசு எந்திரத்தைக் கண்டித்த து.
அக் 31ல் ரிசர்வ் வங்கி கவர்னர் “போங்கடா.. “ னு
சொல்லிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு ..
நவ 09 கவர்னரும் மோதியும் சந்தித்து பேசிக்கொண்ட தில்
சமரசம் வரும் என்ற ஊகம் வந்த து..
மோதி அரசு… கேட்க கூடாததை,
கை வைக்க கூடாததை..
கேட்கிறது..
கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்கிறார்.
இது ஒரு அரசு அதிகாரியின் ராஜினாமா மட்டுமல்ல..
மோதியிடம் தன் மனசாட்சியை விற்க முடியாத
இந்திய மனசாட்சியின் ராஜினாமா..
அவ்வளவுதான்…

Sunday, December 9, 2018

SOHAILA ABDULALII was wounded; my honour wasn’t”.
“வாழ்வதற்காகப் போராடினேன். ஜெயித்துவிட்டேன்”

ஷோகய்லா …
உங்களைப் பற்றிய நினைவுகள் இன்று மீண்டும்
எனக்குள்.. விரிகின்றன.
1983களில் உங்களைப் பற்றி நிறைய பேசி இருக்கிறேன்.
உங்களைப் பார்க்கவும் விரும்பினேன். அப்போது  நான்
மும்பை செம்பூர் பகுதி பன்னாட்டு வங்கி கிளையில்
வேலையில் இருந்தேன். 1980 அதே செம்பூர் பகுதியில்
உங்களுக்கு 17 வயது.. ஜூலை  திங்களில் அக்கொடுமை
நடந்த து. 1983 ஜூலை மாத மனுஷி இதழில்
நீங்கள் சொன்ன வாசகம் இன்றும் நினைவிருக்கிறது.
“வாழ்வதற்காகப் போராடினேன். ஜெயித்துவிட்டேன்”
என்று.

இன்று நீங்கள் அமெரிக்காவில் படித்துப் பட்டம் பெற்று
கல்விப்பணி, எழுத்துப்பணி, பெண்கள் முன்னேற்றம்,
என்று தொடர்ந்து சமூகத்தளத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
திருமணமாகி கணவர் ஒரு பெண் குழந்தை என்று
வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
“I was wounded; my honour wasn’t”.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் எப்படி
வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்பதற்கு
 உங்கள் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கிறது.
ஷோகய்லா அப்துல்ல லி…..
உங்களை சரியாக அறிமுகப்படுத்த நாங்கள் தான்
தவறிவிட்டோமோ ? 

என் பெண்வழிபாடு சிறுகதை தொகுப்பை
ஷோகய்லா அப்துல் அலிக்கு சமர்ப்பணம்
என்று எழுதித்தான் இருந்தேன். புத்தகம் அச்சில்
வந்து ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதும் பெற்றது.
ஆனால்… ஷோகய்லா யார் என்று இன்றுவரை
யாருமே என்னிடம் கேட்கவில்லை…

ஷோகய்லா.. நீ கதையல்ல, நிஜம்..
உன் வாழ்க்கை  ..
உனக்கு நேர்ந்த அவலம்..
உன் பாதிப்புகளை  நீ கடந்து வந்தக்
காலமும் அதற்கான முயற்சிகளும்..
அறியப்படாமல் ..
எல்லாமே வெற்றுக் கோஷங்களில்
முடங்கிவிடுகிறது..


Friday, December 7, 2018

ஒரு கிலோ வெங்காயம்...


 இந்தியத் தலை நகரில் விவசாயிகளின் போராட்டமும்
பேரணியும். காவிரி டெல்டாவில் இயற்கைப் பேரிடர்,
மேகதாது அணைக்கட்ட கர்னாடக அரசுக்கு எதிர்ப்பு..
இப்படியாக விவசாயிகளை முன்வைத்து தொடரும்
போராட்ட களமும் அரசியலும் வெளிச்சத்திற்கு வரும்
இக்காலத்தில் தான் எங்கேயோ ஒரு பெட்டிச்செய்தியாக
இன்னொரு செய்தியும் வாசித்தும் வாசிக்கப்படாமல்
வெற்று சொற்களில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.
செய்தி இதுதான்…
நாசிக் மாவட்ட த்தில் வாழும் விவசாயி சஞ்சய் சாத்தே
4 மாத உழைப்பில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை
விற்க மார்க்கெட் வந்திருக்கிறார். ஒரு கிலோ வெங்காயம்
ஒரு ரூபாய் என்று விலை பேசி இருக்கிறார்கள். எப்படியோ
இறுதியாக ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் 40 காசுக்கு
விற்பனை ஆகி இருக்கிறது . அவருக்கு 4 மாத உழைப்புக்கு
கிடைத்த மொத்த தொகை ரூ1064/மட்டும் தான்.
மனம் உடைந்த அவர் தனக்கு கிடைத்த ரூ 1064 ஐ
மொத்தமாக ரூ 54 செலவு செய்து பிரதமர் நிவாரண
நிதிக்கு அனுப்பி விட்டார். அமெரிக்க அதிபர் ஓபாமா
இந்தியா வந்திருந்தப் போது ஓபாமாவைச்சந்திக்க
தேர்வு செய்யப்பட்ட இந்திய விவசாயிகளில் இவரும்
ஒருவர்.

உணவு அரசியலானது
வெங்காயம் அரசியலானது.
வெங்காயம் பகற்கொள்ளையானது.
வெங்காயம் கொலையும் செய்கிறது...


இப்போது தான் ஒரு கிலோ வெங்காயம்
வாங்கி வந்தேன். விலை …?
வேண்டாம்..
ரொம்பவும் கனக்கிறது.. வாங்கிவந்த வெங்காயம்..

Monday, December 3, 2018

தலித் இஸ்லாமியர்

தலித் இஸ்லாமியர்…
கஸ்தூரியும் சுகிர்தராணியும்
#dalith_islam
No automatic alt text available.
கஸ்தூரியின் வரிகள்:
சாதி இந்து வழக்கம் என்று இந்து மக்களை எதிர்ப்பவர்கள்,
 இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?இஸ்லாத்தில் 
சாதிக்கொடுமை இல்லை என்றால் இது என்ன?- கஸ்தூரி

யெஸ்.. மை டியர் கஸ்தூரி… இசுலாம் சமூகத்தில்
 சாதிக்கொடுமைஇருக்கிறது. தலித் இசுலாமியர் மட்டுமல்ல
, தலித் கிறித்துவர் கூட
இந்தியாவில் உண்டு. உண்டு.
இந்திய மண்ணில் இந்த மதங்களும்
பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை ஓரளவிற்கு
 ஏற்றபிறகே இந்தியாவில் நிலைபெற ஆரம்பித்தன.
ஆனாலும் ஒப்பீட்டு அளவில் ஓர் இசுலாமிய மத குரு
ஒரு தலித்தைக் கட்டிப்பிடிப்பார். அவ்வளவு தான் .. வித்தியாசம்!
சாதிக்கொடுமையிலிருந்து தப்பிக்க மதம் 
மாறியவர்களுக்கு இந்து வர்ணாசிரம ம் புகட்டிய பாடம் இது ! 
மனுவின் இந்த வெற்றியை
நீங்கள் உங்கள் வெற்றியாக கொண்டாடலாம் கஸ்தூரி...
சாதி தான் இந்தியா.

இந்தியா தான் சாதி.
சூப்பர்… உங்களை மாதிரி ரெண்டு பேரு 
இப்படி அடிக்கடி எதாவது கேட்டா தான் 
எங்களுக்கும் விழிப்பு வருதும்மா. இந்திய இந்து தேச
 சாதியத்தைநினைவூட்டிய உங்களுக்கு 
என் நன்றியும் வணக்கமும்.

கஸ்தூரிக்கு பதில் சொன்ன கவிஞர்...
ஏண்டி கொழந்தே கஸ்தூரி..அது தலித் இஸ்லாமியர்கள் இல்லடியம்மா.. உம்மைத்தொகை...தலித்துகளும் இஸ்லாமியர்களும்னு வரும்….. கவிஞர் சுகிர்தராணி
அருமை கவிஞர் சுகிர்தராணிக்கு..
கஸ்தூரி குழந்தையா இல்லையா என்பது இருக்கட்டும்!
தலித் இஸ்லாமியர்கள் இல்லையா?
தலித் இஸ்லாமியர் என்பது “உம்மை” தொகையா?!
கவிஞர் சுகிர்தராணி என்பதும் “உம்மை” தொகையா!!
தலித் இஸ்லாமியர் என்பது உம்மை தொகை அல்ல.
தலித் இஸ்லாமியர் என்பது உம்மைத் தொகையாக
இருக்க வேண்டும் என்பது தான் இந்திய இந்து அரசியலின் விருப்பம். 
தலித் இஸ்லாமியர் என்பதை உம்மைத் தொகை
ஆக்குவாதால் தலித் வேறு இசுலாமியர் வேறு என்பது
நிரந்தரமாகிவிடும்.
அதைத்தான் காந்தி காலம் முதல் இந்திய அரசியல் விரும்புகிறது.
மராட்டிய மா நில தலித் பைந்தர் முதல் தமிழ் நாட்டில் 
உங்களில்ஒருவராக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள்
 கட்சி தலைவர்முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள்
 தலித் என்றால் யார்?
என்று பேசியிருப்பதை என்னை விட அதிகம் கேட்கும்
வாய்ப்பும் வசதியும் உங்களுக்குத்தானே உண்டு?
தலித்துகளை அவர் பூர்வக்குடிகள் என்றும்
மண்ணின் மைந்தர்கள் என்றும் 90 கள் முதல்
சொல்லி வருவதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்ன?
இருந்தும் இது என்ன மாதிரியான விமர்சனம் என்பது
எனக்குப் புரியவில்லை! 
தலித் என்றால்
people who are socially, religiously, economically
and politically oppressed, deprived and exploited.

என்று எத்தனை முறை எத்தனை மொழிகளில் 
சொல்லிக் கொண்டே இருக்கிறோம்… 
இசுலாமியர்களும் இந்திய இந்துத்துவ பார்ப்பனிய 
அதிகார அரசியலில் தலித்துகள் தான். ஒடுக்குமுறையையும்
 தீண்டாமையையும் அவர்களும் அனுபவித்துக் கொண்டுதான்இருக்கிறார்கள். சுகிர்தராணி உங்களுக்குத் தெரியுமா..
மும்பையில் ஓர் இசுலாமிய சகோதரனுக்கு வீடு வாடகைக்குகிடைப்பது என்பது பெரும்பாடு! இன்னும் சில குடியிருப்புகளில்இசுலாமியர்களுக்கு வீட்டை விற்க கூடாது என்பது எழுதாதச்
சட்டமாகத்தான் இருக்கிறது. 
இதெல்லாம் அவர்களின்
தலித் இசுலாமிய வரலாறு.
எனவே எனதருமை தோழியே…
தலித் இசுலாமியர் என்பது “உம்” மைத் தொகை அல்ல. அல்ல.
மீண்டும் ஒரு நினைவூட்டலுக்காக..
தொல்.திரு.மா அவர்களின் யார் தலித்?
 என்ற உரை உங்களுக்காக.. 
https://www.youtube.com/watch?v=l-GFiFR8cI