Thursday, June 30, 2022

சைபுன்னிஷா - சிவாஜி காதல்


 

அவள் முகலாய சாம்ராஜ்யத்தின் இளவரசி.
அவள் காதலித்த அவனோ இந்துத்துவ சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி.
இன்றுவரை இசுலாம் – இந்து எதிர் நிலைகளில்
நிறுத்தப்பட்டிருக்கும் அரசியலில் உயிருடன் வாழ்ந்து
கொண்டிருப்பவர் அவர்கள் இருவரும்.
அந்த முகலாய அரசன் ஒளரங்கசீப்.
அந்த இந்து அரசன் சக்கரவர்த்தி சிவாஜி.
 
ஆம்…
சக்கரவர்த்தி சிவாஜியின் வீரத்தை சாதாரண மனிதனைத் 
தாண்டிய ஒரு செயலாக விரல்கள் துண்டிக்கப்பட்ட 
அவள் தளபதி பேசுகிறான். அவன் அவளுக்கு உறவு முறையும் கூட.
அவளுக்கு “அந்த வீரன் எப்படி இருப்பான்? என்ற 
கற்பனை விரிகிறது.
அவனைப் பார்க்க அவள் மனம் ஏங்குகிறது.. 
அவளையும் அறியாமல் அவள் நினைவுக்கிடங்குகளில் அவன் சிம்மாசனமிடுகிறான். ஆட்சி செய்கிறான்.
எப்படியும் அவனைச் சந்திக்கவேண்டும்..
சிவாஜியை சிறைப்பிடித்து வருகிறார்கள். 
முக்காடு அணிந்து முகம் மறைத்திருக்கும் 
அவள் கண்கள் அவனைத் தின்று தின்று காதலின்
பசியாற்றிக்கொள்கின்றன. 
அப்போதும் அச்சப்படாமல் வீரத்துடன் 
தலை நிமிர்ந்து பேசிய அவன் உடல்மொழி 
அவள் இரவுகளைத் தொந்தரவு செய்கின்றது. 
அவளுக்குத் தெரியும்.. தன் தந்தையும்
 இசுலாமிய அரசனுமான ஒளரங்கசீப் 
 என்ன காரணம் கொண்டும் தன் காதலை 
ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது. 
 
ஆனால்.. காதல் என்பது காலம் காலமாக 
 நிறைவேறாத
நிறைவேற்ற முடியாத கனவுகளுக்குள் 
தன்னைச் சிறை வைத்துக்கொண்டு 
சித்திரவதையை அனுபவிக்கிறது என்பதும்.

 

 
 
இது ஒருதலைக்காதல் தான்.
அவள் கொண்ட காதல்.. அவனுக்கும் தெரியவருகிறது.
அவளுக்குத் தெரிந்தவர்கள் “ அவள் அறிவையும் 
போர் ஆற்றலையும் அவனிடம் சொல்லிப்பார்க்கிறார்கள். தேச ஒற்றுமைகளுக்காக இந்து தேசத்து இளவரசிகளைத்
 திருமணம் செய்து கொண்ட அக்பரின் கதைகள் 
கதைகள் அல்லவே. அதையும் அறிந்தவன் மட்டுமல்ல அவனும்.
 சிவாஜியும் எட்டு பெண்களைத் திருமணம் செய்து 
கொண்டவர்தானே. காரணம் தன்னைச் சுற்றி இருக்கும் 
சிற்றரசுகளோடு இணக்கமான உறவைப் பேண
 பெண்ணும் திருமணமும் கூர்மையான ஆயுதங்களாக
 இருந்தக் காலம் தானே..
இசுலாம் தழுவினால் தன் தந்தை மனம் மாறலாம் 
என்று காதல் பித்தில்
அவள் நினைத்திருக்கலாம்..
தெரியவில்லை.
 
ஆனால்.. திருமணம் என்ற உறவில் 
தொடர முடியாத தன் ஒருதலைக் காதலைக் 
கடைசிவரை வாழ்ந்து முடித்தவள் அவள்.
அவனே என் மணவாளன், 
அவன் அன்றி இந்த இப்பிறவியில் 
எவனுடனும் ‘நிக்காக்” இல்லை 
என்று வாழ்ந்து முடிந்துப்போனாள்.
தன் கடைசிக்காலங்களில் தன் பங்கு சொத்தை 
தன் தந்தையிடம் பெற்று அவள் கட்டிய மசூதியில்
 அவள் காதலை அடக்கம் செய்தார்கள்.
 
அவள் தான் காதலித்த அவனுடைய மகன் சம்பாஜியின்
 மனைவி மற்றும் மகனை முகலாயர்கள் சிறைப்பிடித்து 
அழைத்துவந்தப் போது தன் காதலனின்
வாரிசை , மகன் வழிப் பெயரன் சாகுவை (shahu) 
தன் அருகில் வைத்துக்கொண்டு அவனுக்கு 
ஆசிரியை ஆனாள். மொழிகள் கற்றுக்கொடுத்தாள். 
வாள் வீச்சும் குதிரை ஏற்றமும் போர் முறைகளும் 
அவளே கற்பித்தாள். அவள் மனசுக்குள் இருந்தக் 
காதலை இப்படியாக அவனுடைய வாரிசு உருவில் 
கண்டு அவள் வாழ்ந்து முடிந்துப்போனாள்..
 
இது கதையல்ல. இது வரலாறு பேசாத உண்மைக்காதல்..
இதில் சம்பந்தப்பட்ட இரு ஆண்களும் ஒளரங்கசீப் – சிவாஜி –
மத அரசியலின் அடையாளமாக அரசியல் செய்பவர்களுக்கு
இப்போதும் தேவைப்படுவதால்…..
இப்போதும் கூட அவள் தன் காதலை
வெளிப்படுத்திவிட முடியாமல்..
தடை செய்யப்பட்டிருக்கிறது.!!!!
 
அவள் பெயர் .. சைபுன்னிஷா
( Zebunnissa – Zeb-un-nisha)
அவள் சூஃபி கவிஞர் என்பதும் கூடுதல் தகவல். 
புனைபெயர் மக்ஃபி
இப்போது அவள் காதலின் இன்னொரு
பக்கத்தை இத்தகவல் உங்களுக்குப் புரியவைக்கும்..
 
“ஓ மக்ஃபி..
காதலின் பாதையில் நீ தனித்தேதான்
பயணித்தாக வேண்டும்.
உனக்குப் பொருத்தமானவர்கள் யாருமில்லை,
அது கடவுளாக இருந்தாலும்..!”
இந்த வரிகள் அவள் கவிதையிலிருந்து..
அவளிடம் என்ன சொல்லட்டும்
ஆம் ... சைபுன்னிஷா..
எப்போதுமே அறிவானப் பெண்களுக்கு
காதலர்கள் கூட வருவதில்லை. !

Sunday, June 26, 2022

அதிமுக அரசியல் திமுகவின் எதிர்காலம்

 




அ.இ.அ.தி.மு.க. வின் அரசியல் இருத்தல் EPS OPS அரசியல் எதிர்காலமாக சுருக்கி விடுவது பேராபத்து. இது அதிமுக வுக்கு வந்திருக்கும் ஆபத்து மட்டுமல்ல. திமுக வின் எதிர்காலத்திற்கும் ஆபத்து. இன்னும் வெளிப்படையாக திமுக உ. பி. களுக்குப் புரிகிறமாதிரி சொல்லவேண்டும் என்றால் திமுகவின் அரசியல் வாரிசாக முன்வைக்கப்படும் திரு. உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி அவர்களின் எதிர்கால அரசியலுக்கு  ஆபத்து. !! 

பாம்பு கழுத்தைச் சுற்றி படம் எடுத்து ஆடுகிறது.. கடிக்காமல் விடாது. 

கவனம்.. கவனம் கவனம்.

அதிமுகவின் எதிர்காலத்தைத் காப்பாற்ற வேண்டிய அரசியல் கடப்பாடு திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது.


மராட்டிய மாநில அரசியலில் நடக்கும் விபரீதப் போக்குகள்.. மாநில இறையாண்மை மிக்க அரசியல் கட்சிகளை விழுங்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு இது எதனால் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டவர்களுக்கும் நான் சொல்ல வருவது சட்டெனப் புரியும்,  புரியவேண்டும்.

அப்புறம்.. சரவணா..

.இது பெரியார்மண் ஆ வுனு 

யாரும் வந்து  கொடிப்பிடிக்க வேண்டாம். 

ப்ளீஸ்.

#அதிமுக_எதிர்காலம்_திமுக_அரசியல்

Saturday, June 25, 2022

பார்சிகளுடன் பயணித்த 22 ஆண்டுகள்

(The tower of silence at Malabar hill, Mumbai)


 பார்சி நண்பர்களுடன் 22 ஆண்டுகள்

என் பன்னாட்டு வங்கி அனுபவத்தில்  எனக்கு மிகவும் நெருங்கிய

ஆண் பெண் நண்பர்கள் அனைவருமே பார்சி சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

பொதுவாக வங்கிகளில் அன்றைக்கு கேஷியர்களாக அவர்களே இருந்தார்கள்.

அதற்கு முக்கிய காரணம் அவர்களின் நாணயம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் மட்டுமல்ல, மிகவும் நம்பிகையானவர்கள். அதிலும் குறிப்பாக பார்சி ஆண் நண்பர்கள்.. இந்திய மண்ணில் பன்மொழிப்பேசும் பல இன ஆண்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு என் வாழ்விடமும் பணியிடமும் கொடுத்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். பார்சி ஆண்கள் மிக மிக நம்பிக்கையானவர்கள்.பயமின்றி ஒரு பெண் பழகலாம். 


 வெளி நாட்டு வங்கியில் பணி என்பதால் அதன் ஆங்கிலமும் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானவை. ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது ஆண் பெண் பேதமின்றி தோளணைத்து கட்டிப்பிடித்து 

நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துவோம். அப்படியான வாழ்த்துகளை என் பார்சி  நண்பர்களிடம் பெறும் போதெல்லாம் என் உயிர் சிலிர்க்கும். பிரபஞ்சத்தின் நேசத்தை அத்தருணத்தில் அனுபவித்திருக்கிறேன்.

அது என்னவோ தெரியவில்லை, என் மேலதிகாரிகளும் சக தோழமைகளும் கூட அவர்களாகவே அதிகம் இருந்திருக்கிறார்கள். பார்சி நண்பர்கள் எனக்கு

கொடுத்த செல்லப்பெயர்தான் “மல்ல்லு” மேற்கத்திய நடை உடை பாவனைகளுடனும் ஆங்கில உச்சரிப்புகளுடன் இருந்த பணியிடத்தில்

என்னைத் தடுமாறி விழுந்துவிடாமல் ஆதரவுடன் அணைத்து ..

அதை எப்படி சொல்வது..? இதுகளெல்லாம் உன் முன்னால ஒன்னுமே இல்ல மல்ல்லு.. என்று என்னை எனக்கு மீட்டெடுத்துக் கொடுத்த தாயுமானவர்கள்.

பிற்காலத்தில் EXPORT, DC, INM FINANCE CONTROL என்று வங்கியின் பலவேறு துறைகளில் தடம்பதித்து வெளியில் வந்தேன். தமிழ் இலக்கியம் படித்தவள்

வங்கியில் அதுவும் பன்னாட்டு வங்கியில் அம்பாசிடராக அடையாளப்படுத்தப்பட்டு வங்கி  இதழில் என்னைப் பற்றி எழுதும் அளவுக்கு என்னை நிலை நிறுத்திக்கொண்டதில் என் பார்சி நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் பெரும்பாங்காற்றி இருக்கின்றன.

 மதிய உணவை என்னோடு பகிர்ந்து கொண்ட  நண்பன் உண்டு. இன்னொரு  நண்பனின் மகளுக்கும் என் ,மகளுக்கும் ஒரே வயது. தன் மகளுக்கு என்ன வாங்கினாலும் என் அம்முவுக்கும் வாங்கிவருவான்.

எதுவும் பேசித்தான் புரியவைக்க வேண்டும் என்பதில்லை. என் மவுனத்தைக் கூட வாசித்த நண்பர்கள் உண்டு. இதில் இன்னும் சில வேடிக்கைகளும் உண்டு.. என் ஆண் நண்பர்களுக்காக நான் என் பெண் பார்சி தோழிகளிடம் “காதல் தூது” சென்றிருக்கிறேன்!!! என் நண்பர்களில் சிலர் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் என்ற நிறுவனத்தின் “பொறுப்பு” என்பது அவர்களுக்கு வாழ்க்கையின் சுமையாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அனைவருமே இறை நம்பிக்கையாளர்கள்.


 என் தோழியின் அம்மா இறந்தப்போது நான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளுடனேயே இருந்தேன். ஆம்.. அவர்கள் நம்மைப் போல வாய்விட்டு அழுவதில்லை. ஆனால் அழாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை, மன அழுத்தம் தருவது என்பதைப் புரிந்து கொண்டேன்.

மலபார் ஹில் பகுதியில் இறந்த உடல்களைக் கொண்டு வைக்கும் “சைலன்ஸ் டவர் “ the tower of silence வரை போயிருக்கிறேன்.அவர்களின் மதச்சடங்குகளில் கலந்து கொள்ளவோ கோவிலுக்குள் நுழையவோ பார்சி அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கும் வசதி உண்டு. சைலன்ஸ் டவரிலும் தோழியுடன் நாங்கள் சென்றிருந்தோம். உயிர்ப்போன பிறகு உடல் புனிதமிழந்துவிடுகிறது.   நிலம் நீர் தீ இந்த மூன்றும் அவர்களின் மத நம்பிக்கையில் புனிதமானவை என்பதால் தான்

புனிதமிழந்த உடலை அவர்கள் புதைப்பதோ நீரில் விடுவதோ எரிப்பதோ இல்லை என்று காரணம் சொல்கிறார்கள். துக்க நாட்களில் வெள்ளை உடை அணிவது அவர்கள் வழக்கம் 

கொரொனா எல்லாவற்றையும் புரட்டிப்போட்ட்தைப் போல அவர்களையும்

புரட்டிப்போட்டுவிட்டது.  ஆம்.. கொரொனாவில் மரணித்த உடல்களை 

சைலன்ஸ் டவரில் போடவில்லை. !

 அவர்கள் “தீ”யை வழிபடுகிறார்கள். அவர்களின் வழிபாட்டு இடங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீ அணைவதில்லை. ஈரானிலிருந்து புலம்பெயர்ந்து வரும் போது எடுத்து வந்த “தீ” யின் நாக்குகள் அணையவில்லை. அவர்களும் எட்டாவது நாள், பதினாறாவது நாள் , சிரார்த்தம் என்று பலசடங்குகளைச் செய்கிறார்கள். 

 “நவஜோட்’ என்ற சடங்கு பார்சிகளின் வாழ்க்கையில் முக்கியமானது.

ஆண் – பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன் இச்சடங்கு செய்துவிட வேண்டும். இச்சடங்கு இந்தியாவில் வாழும் பிராமணர்களின் “பூணூல்” சடங்கு மாதிரியான சடங்கு. இச்சடங்கு செய்தப்பிறகுதான் அக்குழந்தை “பார்சி” சமூகத்தின் அடையாளம் பெறுவதாக நம்புகிறார்கள்.

இந்த நவஜோட் சடங்கு ஒரு திருமணத்தைப்போல வெகு விமரிசையாக கொண்டாடப்படும். உணவுவகைகள் மட்டுமே 30 முதல் 50 வரை பரிமாறப்படும். அசைவ உணவுகளும் உண்டு. 

விருந்துக்கு அழைக்கும் அழைப்பிதழில் ஒரு அட்டை இணைக்கப்பட்டிருக்கும். அதில்  வருகிறேன் / வரவில்லை என்பதும்

எத்தனை பேர் என்பதும் உணவு வகை சைவமா அசைவமா என்பதையும்

குறித்து கேட்கப்பட்டிருக்கும். அதைப் பூர்த்தி செய்து அவர்களிடம்

கொடுத்துவிட வேண்டும். இவ்வளவு திட்டமிடலுடன் அவர்களின்

நிகழ்வுகள் நடக்கும். நான் இரண்டு நவ்ஜோட் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். 

கொஞ்சமாக விஸ்கி பிராண்டி வொய்ன் அருத்துவார்கள். எவ்வளவு குடித்தாலும் குடித்துவிட்டு உளறுவது

சண்டைப்போடுவதெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை.

இச்சடங்கில் பிரத்தியோகமான ஒரு மேல்சட்டையும் இடுப்பில் அணியும் ஒரு நூலும் இடம் பெறும். இதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது. பொதுவாக அவர்கள் எவ்வளவுதான் நெருங்கிப்பழகினாலும் அவர்களின் சில சடங்குகளை அயலாரிடம் முழுமையாக சொல்லுவதில்லை என்பதுதான் என் அனுபவம். 


 வாரிசுகள் இன்றி இறந்துப்போகிறவர்களின் சொத்துகள் “பார்சி அறக்கட்டளை”க்கு போய்விடும். அவர்களின் குடி இருப்புகள் குறிப்பாக பார்சி  குடியிருப்புகளை பிறருக்கு வாடகைக்கு விடவோ விற்கவோ அனுமதி கிடையாது. பார்சிகளின் அறக்கட்டளை பார்சி இனக்குழுவின் கட்டுக்கோப்பான இறுக்கமான விதிகளைப் பின்பற்றுகிறது என்றாலும் அவர்களின் பாதுகாப்பு முதல் ஆதரவற்ற பார்சிகளுக்கு உதவுவது வரை , இந்த அறக்கட்டளையின் பங்களிப்பு உண்டு.  அகமண முறையை மிகத்தீவிரமாக கடைப்பிடிக்கும் பார்சி இனம் ஆண் இன்னொரு சமூகத்தைச் சார்ந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதைக் கூட மன்னித்து

ஏற்றுக்கொள்ளும் .. ஆனால் பார்சி பெண் பார்சி அல்லாத ஆணைத் திருமணம் செய்து கொண்டால் தங்கள் இனத்திலிருந்து விலக்கிவிடுவதில்

தீவிரம் காட்டுகிறார்கள். !  யூத மதச்சடங்குகளுக்கும் பார்சி மதச் சடங்குகளுக்கும் தொடர்புகள் அதிகமிருப்பதாக அறிகிறேன். . . பூ, தேங்காய், சந்தனக்கட்டை, அவர்கள் சடங்குகளில் இடம் பெறுகிறது. புனித நீராடல் உண்டு.

.........2004ல் விருப்ப ஓய்வு. அதன் பிறகு மெல்ல மெல்ல தொடர்புகள் விட்டுப் போய்விட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ருக்சானா வீட்டுக்கு அவளைப் பார்க்க போயிருந்தேன். பார்சி குடியிருப்பு.. அவளும் அவள் தங்கையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வயதான அப்பா ஓர் அறையில் அரை நிர்வாணத்துடன். வீட்டில் மவுனம் கவிந்திருந்த சூழலில்.. எனக்கு அழுகை வந்துவிட்டது. இப்போதும் அப்பெண்கள் இருவருக்கும் சமையல் தெரியாது.

பார்சி சமையலில் இருந்து டப்பா – சமைத்த உணவு வருகிறது . மற்றபடி பிரட், பட்டர், பாவ், பால், பழங்கள்.. 

அதன் பின் அவளை நான் சந்திக்கவில்லை. நீங்கள் அனைவரும் நலமாக

இருக்க விரும்புகிறேன்.. என்றும் உங்கள் மல்ல்லுவின் மனசில் உங்கள்

நினைவுகள் ஈரமாக இருக்கும். கடைசிவரை..

Wednesday, June 15, 2022

பூம்பூம் மாடுகள்


 

 

பூம்பூம் மாடுகள் குறி சொல்லுகின்றன.

தலையாட்டுகின்றன.

வளர்ப்பவனுக்கு வஞ்சகம் செய்யாமல்

பிச்சை எடுக்கின்றன.

இல்லாதக் கொம்பை இருப்பதாக நினைத்து

ஆட்டி ஆட்டி ..

எதையாவது உளறிக்கொட்டுகின்றன.

அதோடு நிறுத்திவிட்டால் நல்லது.

இப்போதெல்லாம்

பூம்பூம் மாடுகள்..

இவர்கள்தான் சிறந்தக் கவிஞர்கள்,

இவர்கள்தான் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள்

இதெல்லாம்தான் சிறந்த புத்தகங்கள்

என்று பட்டியல் போடுகின்றன.

இந்தப் பட்டியல் எங்கிருந்து தயாரிக்கப்படுகிறது?

பூம்பூம் மாடுகளுக்கும் இந்தப் பட்டியல்

வரிசைக்கும் என்ன தொடர்பு?

பூம்பூம் மாடுகள்

இந்தப் பட்டியலில் எந்த எழுத்தையும் தின்று

சாணிப்போட்டதாகக் கூட தெரியவில்லை..

இருந்தாலும்..

பூம் பூம் மாடுகள்

குறி சொல்லுகின்றன.

பிழைப்புவாதம்..

விருதுவாதம்

அடையாளச்சிக்கல்..

இப்படியாக எதாவது ஒன்றில் அடைபட்டு

இருக்கலாம்ம்ம்ம்ம்..

ஆனாலும்

பூம்பூம் மாடுகளின் தொல்லை

தாங்க முடியவில்லை.

பூம்பூம் மாடுகள் முட்டுவதில்லை.

அதனால் ஆபத்தும் இல்லை

என்று விட்டுவிடாதீர்கள்.!!!

முட்டுகின்ற மாடுகளைவிட

பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும்

மாடுகள் …

கால்நடைகளின் அவமானம்.

ச்சே..