Thursday, July 24, 2025

கலாப்ரியா கவிதைகள்

 


காலமே காட்சியாகும் கலாப்ரியா கவிதைகள்..

Tk Kalapria 


கலாப்ரியாவின் கவிதைகளில் வாழ்விடமும் மனிதர்களும் கவிதையாகி நம்மை அந்த உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இனி வரும் தலைமுறைக்கு அவர் கவிதையின் முதற்பொருள் " இப்படி எல்லாம் இருந்ததாம்" என்று ஓர் ஆவணமாக மாறும்.

இப்புறச்சூழலைக் காட்சிப்படுத்தும் கவிதைகளின் ஊடாக அவர் கையாளும் கருப்பொருட்களும் கவிதையின் உணர்வு சரடில் கச்சிதமாக பொருந்தி நிற்கும்.

என் வாசிப்பில் கவிஞர் கலாப்ரியாவின் கவிதைகளின் தனித்துவமாக இதை உணர்கிறேன்.


முதுகலை படிக்கும்போது கலாப்ரியா வின் கவிதை வரிகள் இரண்டை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறேன்.

அது தனிக்கதை.😃


அவருடைய கவிதைகளின் தனித்துவத்தை ஒரு வாசகராக இப்போதும் கொண்டாடுகிறேன்.

அவர் கவிதைகளின் முதற்பொருளும்  கருப்பொருளும் எனக்கு அந்நியமானவை அல்ல, என்பதும் கூட அவர் கவிதைகளை மிகவும் நெருக்கமாக எனக்கான உலகமாக மாற்றி இருக்கலாம் என்ற 

ஓர்மையுடன் நான்.

 கவிஞர் கலாப்ரியாவுக்கு வாழ்த்துகளுடன்..💐💥🎻


கலாப்ரியா கவிதை:

கறுப்பேறிப்போன

உத்திரம்,

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும் உயரத்தில்.

காலேஜ் படிக்கும் அண்ணன்

அதில் அவ்வப்போது

திருக்குறள்,

பொன்மொழிகள் – 

சினிமாப் பாட்டின்

நல்வரிகள் – என

எழுதியெழுதி அழிப்பான்

எழுதுவான்.

படிப்பை நிறுத்திவிட்டு

பழையபேட்டை மில்லில்

வேலை பார்க்கும் அண்ணன்

பாஸிங்ஷோ சிகரெட்டும்

தலைகொடுத்தான் தம்பி

விளம்பரம் ஒட்டிய

வெட்டும்புலி தீப்பெட்டியும்

உத்திரத்தின்

கடைசி இடைவெளியில்

(ஒளித்து) வைத்திருப்பான்.


அப்பா வெறுமனே

பத்திரப்படுத்தி வந்த

தாத்தாவின் – பல

தல புராணங்கள்

சிவ ஞானபோதம்

கைவல்ய நவநீதம்

சைவக்குரவர் சரித்திரங்கள்

பலவற்றை,

வெள்ளையடிக்கச் சொன்ன

எரிச்சலில் – பெரிய அண்ணன்

வீசி எறியப் போனான்.

கெஞ்சி வாங்கி

விளக்கு மாடத்தில்

அடைத்ததுபோக

உத்திர இடைவெளிகளில்

ஒன்றில் தவிர

அனைத்திலும்

அடைத்து வைத்திருப்பாள்

அவன் அம்மா.


முதல்பிள்ளையை

பெற்றெடுத்துப் போனபின்

வரவே வராத அக்கா

வந்தால் – 

தொட்டில் கட்ட

தோதுவாய் – அதை

விட்டு வைத்திருப்பதாயும்

கூறுவாள்.

நின்றால் எட்டிவிடும்

உயரம்

என்று

சம்மணமிட்டு

காலைக் கயிற்றால் பிணைத்து – 

இதில்

தூக்கு மாட்டித்தான்

செத்துப் போனார்

சினேகிதனின்

அப்பா.

7 comments:

  1. சிறப்பான வடிவங்களை உள்ளடக்கியவை கலாப்ரியாவின் கவிதைகள்... இந்தக் கவிதை உத்திரத்தின் பல்வேறு கோணங்களைச் சொல்லி நிறைவாய் நெகிழ்ச்சியுடன் முடிந்திருக்கிறது... சிறப்பான பதிவு

    ReplyDelete
  2. AnonymousThursday, July 24, 2025
    சிறப்பான படிமங்களை உள்ளடக்கியவை கலாப்ரியாவின் கவிதைகள்... இந்தக் கவிதை உத்திரத்தின் பல்வேறு கோணங்களைச் சொல்லி நிறைவாய் நெகிழ்ச்சியுடன் முடிந்திருக்கிறது... சிறப்பான பதிவு... தமிழ் இயலன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  3. நா.முத்துநிலவன்Thursday, July 24, 2025

    நானும் எனது கல்லூரிக் காலத்தில், அந்த "கருப்பு வளையல்" கவிதை பற்றிய விவாதங்களில் "மயிர் பிளக்க வாதம்" செய்தவன் தான்! பிறகுதான் கலாப்ரியாவை முழுவதும் படித்துப் புரிந்தேன். இது போலும் "சில"கவிதைகளை நல்ல கவிஞரான கலாப்ரியா அவர் எழுதியிருக்க வேண்டியதில்லை என்பதே இன்று வரையான எனது கருத்து🤝நீங்களும் அதே தானா?😊

    ReplyDelete
    Replies
    1. அதுதானே! கருப்புவளையல் தாண்டி உத்திரம் பார்க்கலாம்னு நினைச்சேன்.

      Delete
  4. கலாப்ரியா 75 நிகழ்விற்கு உங்களுடன் இணைந்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே நீங்கள் இட்டிருக்கும் கவிதை வழியாக மீண்டும் கலாப்ரியாவை ஒரு மதிப்பீடு செய்ய வேண்டியது இருக்கிறது. அதனை விரைவில் செய்வோம்..
    --இரா.தெ.முத்து

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழர். இந்தப் பார்வையிலா அவரைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

      Delete