Wednesday, April 21, 2021

நீர்வளரி....மூச்சுத்திணறுதே
 மூச்சு முட்டுது நைனா..

 நீர்வளரியில் மூழ்கி எந்திருக்க முடியல

 மொழிப்பொருள் தெய்வமே.. 

கருணைக்காட்டு.. 

எப்படியும் என்னைக் காப்பாத்திடு.. 


தமிழ்லல எழுதியிருக்காருய்யா,, 

ஒவ்வொரு வரியும் புரியுதுய்யா. 

ஆனா மொத்தமா சேர்த்து வாசிச்சா 

தலை சுத்திக்கிட்டு யாரோ தண்ணிக்குள்ள வச்சு

 அமுக்குறமாதிரி மூச்சை முட்டுது நைனா,, நீர்வளரி நாவல்.. 

கோணங்கி எழுதியது. 780 பக்கமெல்லாம் 

பயமுறுத்தலை நைனா. இத மாதிரி இரண்டு மடங்கு

 பெரிசெல்லாம் வாசிச்சிருக்கோமில்ல, 

அத்த விடு நைனா, வாசிக்கிறவனை தலைமயிரைப் பிய்ச்சுக்கிட்டு உட்காரவைக்கறதெல்லாம் 

ரொம்ப பயம்ம்ம்மா இருக்கு நைனா. 

இப்போ இந்த 780 பக்கத்துக்கும் 

உங்களையோ அல்லது நீர்வளரியில் 

முங்கி எந்திரிச்சவுங்களையோ 

உரை எழுதச் சொல்ல முடியுமா என்ன?!! 

ஒருவேளைநீர்வளரி எங்கள மாதிரி வாசகர்களுக்காக

 எழுதப்பட்டதல்ல என்று சொல்லலாம்,!

 "என் எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஒருவன் பிறப்பான்" 

என்று சொன்ன பிரபலமான எழுத்தாளர்களையும்

 வாசித்துவிட்டோம்.. 

இது என்ன நைனா.. நீர்வளரி கண்ணாமூச்சிக் காட்டுது! 

பிட்டு பிட்டா புரியுது. ஆனா சேர்த்து ஒன்னா வாசிக்கும்போது 

மூச்சு முட்டுது. 

15 நாளா நீர்வளரியோட முங்கி எந்திரிச்சி 

நீஞ்சி .. பெரிய யுத்தம் நடக்கு. 

ஏன் நைனா.. இப்படி எல்லாம் சோதனை நடத்தறீங்க? 


ஒவ்வொருகாதையும் அதன் களமும் காலமும்

 வால்காவிலிருந்து கங்கை சுட்டுகிறமாதிரி 

ஒரு பாயிரமாவது இருந்திருக்கலாம். 

பயணிக்க எளிதாக இருந்திருக்கும்! 

 "முதற்புல் கூட் முளைக்கவில்லை, முதல்மரம் எதுவும்

 படைக்கப்படவில்லை, செங்கல் எதுவும் பதிக்கப்படவில்லை, 

கட்டடம் எதுவும் அமைக்கப்படவில்லை, நிலமெல்லாம்

 கடலாக இருந்தது " முதல் கதையில் (பக் 86) "

"ஆழமான கடலிலே வளர்ந்து வந்தவை ஆணுமல்ல, 

பெண்ணுமல்ல,சர்வ நாசமிக்க சூறைக்காற்றுகள் அவை.

 சுமேர தீபிகாவில்கண்ணுக்குத்தெரியாத பல காற்றுகள் 

சுழன்று சுற்றி பறவைகளாக மாறிவ்டும். யார் பார்வைக்கும்

 தெரியாதபடி கூழாங்கற்கள் கீழே நழுவிஇறங்கி 

கொண்டிருக்கிறது சுமேரதீபிகா" (பக் 87) 

 இது இன்னும் நல்லாவே புரியுது நைனா. கவித்துமாகவும் இருக்கு. 

அப்படியேே வாசிச்சிட்டே வந்தப்போ துரைசாமி பேசற பின் நவீனத்துவ கவிதை சூப்பரா இருக்கு. 

"எனக்கும் சாயைகளுக்கும் சம்பந்தம் என்னவென்று சொல்லிமனக்கலக்கத்தை காக்கையில் இருட்டில் பூசி 

காட்சியற்ற இருப்பை அடைந்தேன். ஆயினும் காக்கையின்

 கரைவு ஒலி] எங்கிருந்தாலும் என்னைத் தொட்டது. சலூனில் மொட்டைஅடித்துக்கொண்டு தாடியை மழித்தாலும் ,

 காக்கையில் ஓட்டம்என் பிம்பத்தோடு சேர்ந்து பறக்கிறது. ....

.தீவாந்திர தண்டனைக்குப் பிறகு கால வித்தியாசத்துடன்

 சமகாலக் காக்கைகள் கூட்டமாகப்பறக்கின்றன. 

அதன் மோகத்திலிருந்து என்னால் தப்ப முடியவில்லை" 

ரொம்பவும் ரசித்த இடம் .. இந்த வரிகள். 

ஆனாா ரசனையுள்ள வரிகளும் புரிந்தப் புள்ளிகளும்

 விரவிக்கிடந்தாலும் ஏன் நைனா.

. இடியாப்பம் மாதிரி இருக்கு..! 

நானும் என்னவெல்லாமோ உத்திகளுடம்

 வாசித்தாகிவிட்டது! ம்கூம்... ரொம்ப மூச்சுமுட்டுது நைனா.. 

எங்கஊர்ல ஆக்சிஜன் சிலண்டர் வேற தட்டுப்பாடாகிவிட்டது.

 இப்படி மூச்சுத்திணற வைக்கலாமா நைனா..?!!

 நீர்வளரி... அப்படியே.. கொஞ்சம் கொஞ்சமா

என் வாசிப்பு நிலத்தை ஆட்கொள்ளமுடியாமல் 

அமுக்கி ஒரேயடியாக நீரடிக்குள்

 லெமுரிகாரிகையுடன் நானும் பயணிக்கிறேன்..! 

புத்தகத்திற்குள் உள்ளே மூழ்கும் வார்த்தைகள் 

 மொழிச் சுழல்களில் நகரும் புயல" இந்தக் கடலடி 

நீர் நூலகத்தில் எழுதியவர்கள் யாரேனும் ரகசியமாய்

 எழுதிக்கொண்டிருந்த மஞ்சள் நீர் விளக்கொளி

 மயங்கித் தோன்றும் இருளில் யாரோ நடந்து வருகிறார்கள். 

கடலுக்கு வெளியே மூழ்கும் நூலகம் அதன் நினைவை 

ஒவ்வொரு நாளும் அறியாமலேயே 

இன்னும் எழுதியபடியே.." (பக் 132/ 133) 

நீர்வளரியில் நான் கனவு காணுகிறேன்.. 

எல்லா கனவுகளும் புரிவதில்லை தானே.. நீ


நீர்வளரி நாவல் 

 எழுத்தாளர் கோணங்கி

 அடையாளம் வெளியீடு 2020. 

பக் 780. விலை.660/
Saturday, April 17, 2021

என் "இவளை" தொலைத்துவிட்டேன்.

 

இவள் எனக்கு இப்போது "யாரோவாக" தெரிகிறாள்!
நான் இவளை எப்போது தொலைத்தேன் என்று
நினைவில்லை. இவள் மதுரைப் பல்கலை கழகத்தில்
முதுகலை தமிழ் இலக்கியத்தில் தெ.பொ.மீ தங்க விருது
(GOLD MEDALIST) பெற்ற நாளில் எடுத்தப் புகைப்படம்
என்று புகைப்படக்குறிப்பு சொல்கிறது.
அதுவும் எனக்கு மறந்தே போய்விட்டது. !!

தமிழ் இலக்கியம் படித்த இவள்
ஏன் பன்னாட்டு வங்கி வேலைக்கு
கணக்கெழுதப்போனாள்?
தாவரவியல் படித்துவிட்டு வங்கி வேலைக்குப்
போக முடியும் என்றால் தமிழ்ப் படித்துவிட்டு மட்டும் வங்கி
வேலைக்குப் போக முடியாதா என்ன?
எல்லாமே என் வாழ்க்கையில் எதிர்கொண்ட
சவால்களும் அவற்றை நான் எதிர்கொண்ட
கதைகளுமாக இன்னும் எழுதப்படாமல்.. அப்படியே..

இந்தப் புகைப்படத்தில் இருப்பவளைத் தொலைத்து
விட்டதில் எனக்கு வருத்தமில்லை!.. ஆனால்
இந்த இவளின் அறிவும் துணிச்சலும் வாசிப்பும்
சேர்ந்தே தொலைத்துவிட்டதற்காக
வருத்தப்படுவதைத் தவிர
இனி.. என்ன செய்ய முடியும்!
(இவள் வாசிப்பின் இராட்சசி..
இவள் கைப்படாத தமிழ் ஆங்கில சமூகவியல்
புத்தகங்கள் மதுரைப் பல்கலை கழக நூலகத்தில்
இல்லை என்ற அளவுக்கு வாசித்து தீர்த்தவள் ... !)
இவள் இப்போது எனக்கு "யாரோ"வாக தெரிகிறாள்.

Saturday, April 3, 2021

இலண்டன் - திரள் சமூக கலை இலக்கிய குழுமம்.

இலண்டன்  - திரள் சமூக கலை இலக்கிய குழுமத்தின்

பார்வைக்கு:
வணக்கம் நண்பர்களே.

உங்கள் விசித்திரமான அணுகுமுறை தான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது, இதற்காக , நான் மிகவும் வருந்துகிறேன். காரணம்

அழைப்பிதழில் பெயர் போட்டு அந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற முதல் நிகழ்வாக உங்களின் நேற்றைய

நிகழ்வு அமைந்துவிட்டது.

     27/3/21 திட்டமிடப் பட்ட உங்கள் நிகழ்வு “பிரதிகளின் மொழி அரசியல்”

மிகவும் அருமையான மிகச்சிறந்த தலைப்பு. திட்டமிடப்பட்டபடி அன்று நிகழ்வு நடக்கவில்லை என்று அறிகிறேன். அது உங்கள் அமைப்பு சார்ந்த பிரச்சனை. அதில் நான் எதுவும் சொல்வதற்கில்லை. அதே நிகழ்வு அதே தலைப்பில் 3/4/21  நேற்று நடைபெற்றிருக்கிறது. வாழ்த்துகள்.

 ஏப்ரல் 01 காலையில் சுவிஸ் ஊடறு றஞ்சி அவர்கள் என்னைத் தொடர்பு

கொண்டு 03 ஆம் தேதி பேச முடியுமா என்று கேட்டவுடன் நானும் இசைவு கொடுத்தேன். அதன் பின் நிகழ்வு இருக்கிறதா இல்லையா என்பதை

இருமுறை நானே றஞ்சியுடன் தொடர்பு கொண்கு கேட்டுக்கொண்டிருந்தேன். அழைப்புதழ் தயாராகிறதாக சொல்கிறார்கள் என்று அவரும் அவருக்கு

கிடைத்தச் செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் நிகழ்வு நடக்கும் 03/4/21 நேற்று காலை 10.39 மணிக்கு றஞ்சி

எனக்கு அழைப்பிதழ் அனுப்புகிறார். மாலையில் நடக்கும் நிகழ்வுக்கு

காலையில் தான் அழைப்பிதழ் அனுப்பி உறுதி செய்யப்பட்ட து.

இதில் றஞ்சி மீது எனக்குத் துளியும் வருத்தமில்லை.

     றஞ்சி என்னைத் தொடர்பு கொண்ட து கெளரி பாராவின் வேண்டுதலால். இதுவும் ஓகே. ஆனால் கெளரி பாராவுக்கு வாசன்

அவர்களுக்கோ ஏன் திரள் குழுமத்திற்கு நான் புதியவள் அல்ல. ஏற்கனவே

அவர்கள் அழைத்து 31 அக்டோபர் 2020 ல் நடந்த நிகழ்வில் நான் கலந்து

கொண்டிருக்கிறேன். அப்போது வாசன் தான் என்னை நேரடியாக

தொடர்பு கொண்டு கால அவகாசம் கொடுத்து நட த்தினார்.

அப்படி இருந்தும் திரள் அமைப்பிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு

கொண்டு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை. காலையில் வாசன்

அனுப்பி இருந்த உள்பெட்டி மெசஞ்சர் செய்தி மாலையில்  நான்

பார்த்துவிட்டு கடந்து செல்வதை தவிர வேறு வழி?

  நீங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து அழைக்கவில்லை என்று நான்

ஆதங்கப்படவில்லை. ஆனால் 24X7 நாங்கள் ஓய்வாக இருப்பதாகவோ

அல்லது நீங்கள் எப்படி எந்த முறையில் அழைத்தாலும் ஓடோடி

வந்துவிடுவோம் என்றோ உங்கள் “மவுனமொழியின் பிரதி அரசியல்”

உணர்த்தியது. சகமனிதரை எப்படி நட த்துகிறோம் என்பது தான்

பிரதி நிதியின் சமூக அரசியல். எந்தக் கடவுச்சீட்டும் அதை தீர்மானிப்பதில்லை.

     பிரதிகளின் மொழி அரசியல் < பிரதி நிதிகளின் மவுன மொழி

அரசியலாக மாற்றியதில் நீங்கள் சொல்ல விரும்பியது என்ன?

ஏன்?

     நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு என் வாழ்த்துகளும் அன்பும்.

நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தமில்லை எனக்கு. ஆனால்

அதை இப்படி வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்காக வருந்துகிறேன்.


   

Thursday, April 1, 2021

அசுரனுக்கு வாழ்த்துகள். ரஜினி வாழ்க!!

 


இந்திய அரசு வழங்கும் திரையுலகின் மிக உயரிய விருது

தாதாசாகேப் பால்கே விருது.

இந்த விருது இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்

முன்னேற்றத்திற்கு தன் பங்களிப்பை வழங்கியவருக்கு
வழங்கப்படும் விருது
(Outstanding contribution to the growth and development of Indian cinema)

மத்திய அரசு இந்த விருதை இந்த ஆண்டு
தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும்
ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

வாழ்க ரஜினி.
ரஜினிகாந்த் என்ற சினிமாக் கலைஞர்
இந்திய சினிமா வளர்ச்சிக்கோ முன்னேற்றத்திற்கோ
என்ன பங்களிப்பு செய்திருக்கிறார் ?
வசூல் மன்னன். ஸ்டைல், பஞ்ச் டயலாக் இத்தியாதி
எல்லாம் ரசிகனை மகிழ்விக்கும் நடிப்புக்கலை.
ஓகே. இதனால் எல்லாம் இந்திய சினிமா துறைக்கு
என்ன முன்னேற்றம்??????
இக்கேள்வியை முன்வைத்தால் இது எங்கே ரஜினி
என்ற சூப்பர் ஸ்டாருக்கு எதிரான கேள்வியாக
மாறிவிடுமோ என்ற அச்சம் தமிழ் திரையுலகத்திற்கு
இருக்கும். பாவம் தான் அவர்கள்!
ஆனால் ஓர்மையுடன் இதைக் கவனித்துக் கொண்டிருப்பவர்
இதைக் கடந்து சென்றுவிட முடியவில்லை!
தனுஷ் நடித்த அசுரன் விருது பெற்ற போது
கொண்டாடிய மனம்
ரஜினி விருது பெறும்போது கொண்டாட முடியாமல்
ஏற்பட்டிருக்கும் அவஸ்தை..
ஒரு மா நிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்துக்
கொண்டிருக்கும்போது அந்த மா நிலத்தின்
ஒரு பிரபலத்திற்கு மத்திய அரசு விருது அறிவிப்பதில்
அரசியல் இல்லை என்றெல்லாம் நம்பத்தான்
வேண்டும்.