Tuesday, February 25, 2014

புனிதங்களின் நரகம்சுதாமணி என்ற மீனவப்பெண் மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் எங்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் பிறந்த இடம் இன்று அமிர்தபுரி என்ற பெயரில் உலககெங்கும் இருக்கும் மனிதர்கள் வந்துப் போகும்
ஆன்மிகமையமாக செயல்படுவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன.

மாதா அமிர்தானந்தமாயி ஆசிரமத்தின் சொத்து மதிப்பு சற்றொப்ப ரூ. 1500/ கோடி. இந்தியாவில் அதிகமான வெளிநாட்டுப் பணம் வரும் அமைப்புகளில்
முன்னிலை வகிக்கிறது இந்த ஆசிரமம் என்கிறது இந்திய உள்துறை அமைச்சகம். 2008-2009 ஆம் ஆண்டில் மட்டும் இந்த ஆசிரமத்திற்கு அயல்நாட்டிலிருந்து வந்த தொகையின் மதிப்பு 116.39 கோடி.
ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் என்று அவர் உலகமெங்கும் பயணித்து
மக்களை  கட்டிப்பிடித்து உச்சிமோந்து அனைவரையும் அன்பெனும்
மழையால் நனைத்துக்கொண்டிருப்பவர். மே , 2011 வரை
அம்மா கட்டிப்பிடித்து அன்பைக் கொடுத்த மக்களின் தொகை மட்டும் 30 மில்லியன் என்கிறது டெலிகிராப் , பத்திரிகை.

. 2002 ஆம் ஆண்டு சர்வதேசப் பெருமைக்குரிய காந்தி-கிங் விருது வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சபையில் அவர் சொற்பொழிவாற்றியபோது அமெரிக்க பத்திரிகையாளர் சிலர் உலகை ஆளும் வாய்ப்பு உங்களுக்குத் தரப்பட்டால் முதலில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர் துப்புரவு செய்யும் பணியைத்தான் செய்வேன் என்று சொன்னதாகவும் வாசித்திருக்கின்றேன்.

ஆனால் முதலில் துப்புரவு செய்ய வேன்டியது அவருடைய ஆசிரமம் தான்
என்று சொல்கிறார் அவருடைய ஆசிரமம் உருவாகுவதற்கு முன்பே அவருடன்
20 வருடங்கள்  அவருடைய சீடராக , அவருடைய நிழலாக இருந்த கெயில் ட்ரெட்வெல் என்ற காயத்ரி . கெயில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா
வந்தவர். தன்னைத் தேடிய ஆன்மிகத்தேடலில் அவர் வந்தடைந்த இடம்
கேரளாவில் சுதாமணி வாழ்ந்த கிராமம். அப்போது சுதாமணி மாதா அமிர்தானந்தமாயியாக அறியப்படவில்லை. அவருடைய அமிர்தபுரி ஆசிரமம்
உருவாகவில்லை. சுதாமணியைப் பெற்ற தந்தை தன் மகளுக்கு மனநிலைப்
பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவே நினைத்தார் ( சரியாகவே நினைத்தார்) , ஆனால்
அவர் தெய்வப்பெண்ணாகிவிட்டார் என்று சொல்லிவிட்டார்கள். ஒருவகையில்
நம் கிராமங்களில் கொடை விழாக்களில் சாமி வந்து அருள் வந்து ஆடுகின்ற பெண்களைப் போலவே அவரும் தேவி அருள் வந்து ஆடுவதும் அப்படி அவர்
ஆடும் போது மட்டுமே அக்கிராமத்தில் மக்கள் அவரை தெய்வசக்தியுடைய
பெண்ணாக ஏற்றுக்கொண்டதையும் பதிவு செய்திருக்கின்றார் கெயில்.

தன் பெயரை காயத்ரி என்று மாற்றிக்கொண்டு முழுக்கவும் இந்து மத
அடையாளங்களுடன் சுதாமணிக்கு வேண்டிய அனைத்தையும் 24 மணிநேரமும்
கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்திருக்கிறார். ஆனால் சுதாமணி
சாதாரண மனிதர்களையும் விட மோசமாகவே நடந்து கொள்வார் என்கிறார்
கெயில். அவர் கேட்டதை உடனே எந்த இடமாக இருந்தாலும் உடனே செய்தாக
வேண்டும், இல்லை என்றால் அடி, உதை, காலால் எட்டி உதைப்பது இத்தியாதி
எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும் செயல்கள்.
"அம்மா சொன்னபடி எதாவது நடந்துவிட்டால் அது அம்மாவின் அருள், அம்மாவின் தெய்வீக ஆற்றல், அதுவே அவர் சொல்லியும் அவர் சொல்
பலிக்கவில்லை என்றால் அப்போது அம்மா அவர்களைச் சோதிக்கிறார்
என்று சொல்வதைக் கவனிக்கிறார் கெயில்.


பெண்ணையும் பெண்ணின் தீட்டையும் எப்போதுமே விலக்கி வைக்கும்
மதப்பீடங்கள் அம்மாவுக்கு மாதவிலக்கு வருவதில்லை அவர் தெய்வப்பெண்ணல்லவா !~ என்று கிளப்பிவிட்டிருந்த கதை எவ்வளவு
பொய்யானது என்பதையும் கெயில் வெளிக்கொண்டு வருகிறார்.
அமெரிக்க பயணத்தின் போது அம்மாவுக்கு அடிவயிறு வலிக்க
மருத்துவமனைக்குப் போகிறார்கள், அங்கே டாக்டர் அம்மாவின் மாதவிலக்கு
தேதியைக் கேட்க , கூட இருந்தப் பெண் அம்மாவுக்கு அதெல்லாம் கிடையாது
என்று சொல்ல அம்மா "இரண்டு வாரங்கள் ஆகிறது " என்று உண்மையைச் சொல்ல ...
 இதுமட்டுமல்ல, அம்மாவுக்கு அவர் சீடர்கள் பக்தர்கள் அனைவருமே
அவர் குழந்தைகள் தானாம். அதிலும் பெண் குழந்தைகளை விட ஆண்குழந்தைகள் மீது அம்மாவுக்கு அலாதிப்பிரியம். அதிலும் குறிப்பாக
பாலு மீது. தாழிட்ட கதவு, அம்மாவைத் தனியாக சந்திக்கும் அவருடைய
மகன்கள் அவர்களுடனான பாலியல் உறவு.. அத்துடன் கெயில் என்ற காயத்ரியை வல்லுறவுக்கு உட்படுத்தும் பாலு...
ஆசிரமம். குவியும் பக்தர்கள், கொட்டும் பணம்... இச்சூழலில் கெயில், அம்மாவுடன் 20 வருடங்கள் உடனிருந்த கெயில் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது அம்மாவிடமிருந்து ஓடிப்போய் தப்பிக்கிறார்.

தன்னுடைய ஆசிரம அனுபவங்களை HOLY HELL - A MEMOIR OF FAITH DEVOTION AND PURE MADNESS என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை வாசித்தப்பின் சில கேள்விகள் எழுகின்றன...

* தொடர்ந்து அம்மாவால் அவமானப்படுத்தப்பட்ட கெயில் ஏன் 20 வருடங்கள்
அவருடன் இருந்தார்?

* பாலுவின் பாலியல் வன்புணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு அம்மாவின் சீடராக
தொடர்ந்ததன் காரணம் என்ன?

* ஒருவேளை அம்மா கெயிலைத் துன்புறுத்தியோ அவமானப்படுத்தியோ
இருக்கவில்லை என்றால் அம்மாவின் நிஜத்தை மிக அருகிலிருந்து பார்த்தவர் என்ற வகையில் இந்த உண்மைகளை இதைப் போலவே பதிவு செய்ய முன்வந்திருப்பாரா?


தமிழ்நாட்டில் சாய்பாபா இறந்தப்பின் அவருடைய அறையிலிருந்து கட்டுகட்டாக பணத்தை எடுத்தார்கள். பார்த்தோம், பார்த்தோம்..
அதன் பின் எல்லோருமே அதை மறந்துவிட்டோம்.

ஷிர்டி சாய்பாபாவின் வாழ்க்கை சரிதத்தை வாசித்த தோழி பேராசிரியர்
மீனாட்சி அவர்கள் ஒருமுறை மும்பை சிந்தனையாளர் சங்கமத்தின் அமர்வில்
பேசும் போது குறிப்பிட்டார், "ஷிர்டி சாய்பாபா ரொம்பவும் எளிமையானவர்,
ஆடம்பரங்களை விரும்பியதில்லை ஆனால் இன்றைக்கு அவர் கோவில்
தங்கத்தால் ஜொலிக்கிறது" என்று வருத்தப்பட்டார்.

கெயிலின் புத்தகத்தை வாசிக்கும் போது அவரே சொல்லியிருப்பது போல
"மொத்தத்தில் இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்பதுதான் உண்மை.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு இப்புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கம் போல இதுவும் அரசியல் சதி என்றும் அறிக்கை
வெளியிட்டிருக்கிறது .

கெயில் சொல்வது உண்மையா அல்லது அம்மாவின் அன்பு மழை
உண்மையா..? கெயில் தன் புத்தகத்தில் கடைசிவரியில் சொல்லியிருப்பது
மட்டும் எவரும் மறுக்க முடியாத உண்மை.


IN THE END I DID NOT FIND GOD BUT I DID FIND MYSELF AND I THANK GOD FOR THAT
என்று முடிகிறது கெயிலின்  புனித நரகத்தின் அனுபவம்.Sunday, February 16, 2014

மாயை வரும் நாளில்...மாயை என்னைச் சுற்றி
மந்திரக்கயிறாய் வலைவீசி
கண்ணாமூச்சி ஆடும் ஆட்டத்தில் ..
மூகமுடியுடன் முத்தமிடுகிறது.
கட்டிப்பிடிக்கிறது.
காதலாய், காமமாய், நட்பாய்,
உறவுகளாய்
என்னைச் சுற்றி வட்டமிடுகிறது..
கனவுகளில் வந்து பயமுறுத்துகிறது.
பக்கத்தில் வந்து
கடித்து துப்புகிறது.
கண்களால் எரித்து
கால்களைச் சுடுகிறது
கைகளைப் பிடித்து
விரல்களை நறுக்குகிறது.

கண்விழித்து அலறுகின்றேன்.
மெதுவாக பக்கத்தில் வருகிறது.
அவனைப் போல அருகில் வந்து
என்னைப் பருகி தாகம் தீர்க்குமோ?
உன்னைப் போல உறவுகொண்டு
என்னைத் தின்று பசி தீர்க்குமோ?
மாயை எப்படி இருக்கும்?
யாரைப் போல இருக்கும்?
கறுப்பா சிவப்பா?
காதலா கவிதையா?
மாயை என்னைத் தொடும்போது
உணர்வுகள் உயிர்த்தெழுமா?
இல்லை மரத்துப்போகுமா?
மரணத்தைப் போல
மாயை நிஜமானதா?
இல்லை , மரணம்தான் மாயையா?
மாயைக்கு மறுபிறவி உண்டா?
மரணத்தில் மாயை மரணிக்குமா? ஜனிக்குமா?
மாயையைப் பெற்றெடுத்த மாயாவி யார்?
எங்கே இருக்கிறாள்?
மாயை கண்ணுக்குத் தெரியாதாமே
கடவுளைப் போலவே!
உண்மைதானா?
மாயப்பிசாசு என்று
மாயையைப் பிசாசாக அலையவிட்ட
புண்ணியவான் யார்?

மாயை எனக்குள்
என்னை அறியாமல் நுழையுமோ?
அகண்ட வானத்தின் கருமேகமாய்
என் கருப்பை நிரப்புமோ? 
மேகங்கள் மறைத்த மலைமுகட்டில்
என்னை எனக்குள் பிரசவிக்குமோ?
சித்தம் கலங்க அலைகிறது மாயை
தன்னை தனக்குள்  தேடுவதாய்
வேதாந்தம் பேசும் மாயை
வரும்நாளில்  நானிருக்கும்
வாசல் திறந்திருக்க 
கதவுகளில்லாத மாளிகையைத்
கட்டிக்கொண்டிருக்கிறேன்.
Saturday, February 8, 2014

மீராபாய் கவிதைகள்


ஓ நண்பர்களே..

இந்தப் பாதையில் என் விழிகள்

இவை இனி என் விழிகள் அல்ல

விழிகளின் ஊடாக வியாபித்த ஆனந்தம்

என் இதயத்தை துளைக்கிறது.

சாலையை வெறித்தப்படி

இன்னும் எவ்வளவு காலம்

உடல் என்ற வீட்டில் காத்திருப்பேன்?

வாழ்க்கைப் பிணி தீர்த்தவன்

மாமருந்து அவனே மூலிகை

எல்லோரையும்    தாங்கும்     வல்லமைப்படைத்தவன்

அந்தக் கிரிதரனுக்குச் சொந்தமானவள்

இந்த மீரா

எல்லோரும் சொல்கிறார்கள்

அவளைப் "பிச்சி" என்று.


---
ராணா..

உன் விசித்திரமான விநோதமான உலகம்

எனக்கு விருப்பமில்லை.

அங்கே குப்பைகள் நிறைந்திருக்கிறது.

இருக்கும் எவரும் புனிதமானவராய் இல்லை,.

இனி, அணியப்போவதில்லை

எந்த நகைகளையும் நான்.

கண்ணுக்கு மையிடேன்

கார்கூந்தல் முடியேன்

மங்கலப் பெண்களின்

அலங்காரங்கள் களைந்தேன்.

மலைகளை ஏந்திய கிரிதர கோபலன்

என் தலைவன்.

இனி, தேவையில்லை

எனக்கு எந்த மணமகனும்.