Tuesday, May 10, 2022

யாரும் ஆணியைப் பிடுங்க முடியாது.

யாராலும் ஆணியைப் பிடுங்க முடியாது.
இதுதான் நிலவரம்..
ஒரு நாட்டின் சட்டம் அமுலுக்கு வரும்போது 
அதற்கு முன் இருந்த அனைத்து சட்டவிதிகளும் 
நீக்கப்பட்டு புதிய அரசியல் நிர்ணய சட்டங்கள் 
அரசின் சட்டங்களாகின்றன என்பதுதான் 
பொதுவான நம்பிக்கை.
ஆனால் இந்தியாவில் அது நடக்கவில்லை.
அரசியல் நிர்ணய சட்டத்தைக் கொண்டுவரும் போது 
அக்குழுவின் தலைவராக இருந்த அண்ணல் அம்பேத்கர்
 “, that all the laws which were in force till date of adoption of the 
Indian constitution will stand abolished என்ற
சரியான திருத்தத்தைக் கொண்டுவர எவ்வளவோ 
முயற்சி செய்தும் நடக்கவில்லை. அதாவது இந்தியச் சட்டம் 
மட்டும் நம் நீதிமன்றங்களில்இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் , இந்திய சட்டம் எழுதப்படுவதற்கு முன்பே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்த 
சட்டங்கள் இன்றும் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்பு
 சட்டத்தை ஓவர் ரூல் செய்து கொண்டிருக்கின்றன.
அதனால் இங்கே யாரும் எதுவும் ஆணியைப் 
பிடுங்கிட முடியாது! இதுதான் நிலவரம்.
 
Customs, usuage, religious faith இத்தியாதி வார்த்தைகள் 
நம் நீதிமன்ற தீர்ப்புகளில் எப்படி எல்லாம் தீர்ப்பு சொல்லும்
 என்பது இன்னும் புரியாதப் புதிர் நிறைந்த தீர்ப்புகளாகவே 
தொடர்கின்றன.
சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஏற்றுக்
 கொள்ளப்பட்டதை தந்தை பெரியாரின் வெற்றியாக 
திராவிட அரசியலின் வெற்றியாக நான் உட்பட 
கொண்டாடிக்கொண்டு வருகிறோம்.
ஆனால் இதன் இன்னொரு பக்கம்:
 
1)இது இந்து திருமணச் சட்டத்தின் 7ஏ உள்பிரிவாக உள்ளது.
2)தமிழகம் என்கிற பிராந்தியம் (அ) பகுதியில் மட்டும் 
இது செல்லும்.
3) இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்கள் இப்படித்
 திருமணம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் இச்சட்டம்
 இந்துச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற வில்லை; 
அப்படி மாற்ற முடியாது; அதற்கு மாநில அரசுக்கு 
அதிகாரம் இல்லை. 
(ஆதாரம். வே ஆனைமுத்து, சிந்தனையாளன், டிச 2015)
 
இத்திருமணத்திற்கு தடை எழுந்தப்போது
 தந்தை பெரியார் “எதை ஆதாரமாக கொண்டு 
இதை தடை செய்கிறார்களோ அதையே தான் அவரும் ஆதாரமாக முன்வைத்தார். அதாவது,
““தமிழ்நாட்டில் நீண்டகாலமாக இந்தத் திருமண முறை 
ஒரு வழக்கமாக இருக் கிறது” 
என்று இந்திய அரசுக்கு எழுதும் படி, 
ஆலோசனை கூறி அனுப்பினார், பெரியார்.
இது எங்கள் வழக்கம், பல காலமாக கடைப்பிடிக்கிறோம்
 என்பதைவைத்துக்கொண்டுதான் சுயமரியாதை திருமண சட்டம் 
இந்து திருமண சட்டத்தில் சிறப்பு பிரிவாக சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதனாலே…
யாரும் ஆணியைப் பிடுங்க முடியாது!
சும்மா.. அப்பப்போ.. கொஞ்சம் சத்தமா எதாவது
கோஷம் போடுவதுடன் முடிந்துவிடுகிறது..
சீர்திருத்தங்கள்!
இதில ஒன்னுதான் பல்லக்கும்
பல்லக்கு தூக்கிகளும்.
 
சரவணா...
மக்களாகவே திருந்தனும்
நம்பிக்கைகள் மாறனும்.
பழக்கம் வழக்கம் என்பதை
மதங்கள் தங்கள் வசதிக்கேற்ப
வளைத்துக்கொள்கின்றன
பாவம் .. கடவுளும் தான் என்ன செய்வார்??!!


Sunday, May 8, 2022

ஒரே செய்தி.. இரண்டு முகம்


 சரவணா..இதெல்லாம் செய்தியாவதே பெரிய்ய புரட்சி தான்! 


ஒரே செய்தி.. அதில் ஒவ்வொருவரும் சொல்லியிருப்பதும் உண்மைதான். கற்பனை அல்ல.ஆனால் ஒரே செய்தியை அவரவர் எப்படி பார்க்கிறார்கள்? எவ்வாறு அணுகி இருக்கிறார்கள்?

அந்த நிகழ்வை சமூகத்திற்கு எந்த வகையில் பதிவு செய்ய விரும்புகிறார்கள்?  இதெல்லாம் வெவ்வேறு வகையான உண்மைகளை செய்திகளுக்கு நடுவில் புதைத்திருக்கிறது. தினமும் இம்மாதிரி பல செய்திகளை நம் ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நாமும் அதை எல்லாம் வாசித்துவிட்டு பொங்கி அல்லது பொங்காமல் உண்டு உறங்கி முக நூலில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறோம்.

இன்றைய 09/5/2022 டைம்ஸ் ஆஃப் இந்தியா (மும்பை பதிப்பு) பக் 8  செய்தி :

UP : Dalit woman dies after being 'assulted ' by cops.

அதே குழுமத்திலிருந்து வெளிவரும் எகானிமிக்ஸ் டைம்ஸ் பக் 3  செய்தி:

Old woman in UP Dies After Alleged Assault by Police.

அதாவது டைம்ஸ் 'தலித் பெண் போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள் 'என்று சொன்ன அதே செய்தியை

 அதே நாளில் வெளிவரும் எகனாமிக்ஸ் டைம்ஸ்

'வயதான பெண்மணி போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள்' என்று எழுதுகிறது.

.( பெயரில் சராதாதேவி , ராதாதேவி ஆகிறாள். கணவர் பெயர் மாறவில்லை. போலீஸ் பெயர் மாறவில்லை!)

ஒரே செய்திதான்.. இருவரும் முன்வைக்கும் பார்வையும் கடத்தும் உண்மையும் அதற்குள் புதைந்திருக்கும் செய்தியும் வேறுவேறு.

அதன் பின் எகனாமிக்ஸ் சொல்வதையே பிற பத்திரிகைகளும் வழிமொழிகின்றன. 

தெலுங்கானா டைம்ஸ், வொயர்ஸ், அவுட்லுக், டெக்கான், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்.. இப்படியாக. .. செய்திகளில் அவள் வயதான 60 வயதுப்பெண் என்பதுடன் மட்டும் முடிந்துவிடுகிறது.

இது பாதுகாப்பான செய்தியாகவும் இருப்பது இன்னொரு காரணம்!

சரவணா..

இரண்டு செய்தியிலும் செத்துப்போனவள்

வயதானப் பெண் ( 60 வயசெல்லாம் முதுமைன்னா அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது!)

இரண்டாவது அவள் அன்றாடங்காய்ச்சி. ஏழைப்பெண்.

மூன்றாவது அவள் இருந்தாலென்ன, செத்து தொலைத்தால்தான் என்ன? என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது!

அவள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து தொலைத்தவள்.

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு 

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

இந்த நாட்டில் வாழ்ந்தாலென்ன!

செத்துப்போனால் தான் என்ன?

அவை செய்தியாவதே பெரிய விஷயமல்லவா!

இதை நீ புரட்சி என்று சொன்னால் ஒத்துக்கொள்கிறேன். வேற என்ன பெரிசா கிழிச்சிட முடியும்??? என்ற ஓர்மையுடன். 🙏🙏

Thursday, May 5, 2022

காமத்துப்பாலின் உச்சம்

 

 

 
காமத்துப்பாலின் உச்சம் கலிங்கத்துப்பரணி.
செயங்கொண்டார் அளவுக்கு காமத்தை
இத்துனை அழகியலுடன் எழுதியவர் யார்?
சும்மா பேயாட்டம் ஆடி இருக்கான் யா..
சிருங்காரத்தின் அழகியலை
ரொம்பவும் நுணுக்கமாக தன் பாடல்களில்
வைத்தவன் இவன் தானய்யா.
 
“வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ”
 
 
இந்த 4 வரியுடன் எங்கள் கலிங்கத்துப்பரணி
கடைத்திறப்பு முடிந்துவிடும்.
அதற்கும்மேலே வாசித்தால் நாங்கள்
“கெட்டுப்போயிடுவோம்” என்று
நாங்களும் எங்களுக்கு கற்பித்தவர்களும்
நம்பிய காலம் ஒன்றுண்டு.
இன்று..?
தொடுதிரையில் எல்லாம் “பார்க்கும்” வசதி
வந்தக் காலத்தில் 
 
“நேயக்கலவி மயக்கத்தே
நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப்புதைக்கும் மட நல்லீர்
மணிப்பொற் கபாடம் திறமினோ”
 
என்ற 4 வரிகளை ரசித்து வாசித்து
புன்னகையுடன் கடந்துப் போகிறேன்..
 
அது அது அதுஅதுவாக இருந்தால்
எதுவும் எதையும் கெடுத்துவிடாது..
அவ்வளவுதான்.. வெரி சிம்பிள்.

Wednesday, May 4, 2022

மாதவி SPA

 


கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்ததாக 
வாசித்திருக்கிறேன்.
கழுதைப்பாலின் அழுகுக்குறிப்புகள் தெரியாது. 
  ஆனால் கிளியோபாட்ராவுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். 
அவள் பல மொழிகள் கற்றவள். அழகு குறிப்புகளை 
எழுதியும் இருக்கிறாளாம்! இயற்கை மூலிகை மருத்துவம்
அறிந்தவள். இதெல்லாம் வெளி நாட்டு கதை.
நம்ம ஊரு கதை இதைவிட அழகானதும் 
அழகின் ரகசியக்குறிப்புகளைக் கொண்டதுமாக
இருக்கிறது. நம்ம ஆடலரசி மாதவி 32 வகை வாசனை
மூலிகைகள் ஊறிய வாசனை நீரில்தான் 
குளித்திருக்கிறாள் என்று எழுதுகிறார்
இளங்கோவடிகள். 
 
“பத்துத் துவரினும் ஐந்து வரையினும்
முப்பத் திருவகை ஓமா லிகையிலும்
ஊறிய நன்னீர், உரைத்த நெய்வாசம்
நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி”
 
அவள் நீராடிய அழகை ‘கடலாடுகாதை’ வர்ணிக்கிறது.
இந்த முப்பத்திருவகை- 32 வகை ஓமாலிகை ?
என்னென்ன?
இதைச் சொல்லாமல் விட்டுவிட்டார் துறவி.
நம் உரையாசிரியர்கள் விடுவார்களா? பட்டியல் போட்டிருக்கிறார்கள். அதிலிருந்து, 
 
 
“இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம்,
 நாகணங்கோட்டம், நாகம், மதாவரிசி, தக்கோலம்,
 நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, 
இலாமிச்சம், கண்டில்வெண்ணெய், நெல்லி,
ஒத்தகடு, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், 
அமரேணுகம், காஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது,
 புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், பெருங்குளம்,
 பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகை"
 
… என்ன ஒரு SPA.. !!!
இந்த 32 ல் நமக்கு 5க்கு மேல தெரியல.
….
எப்படியோ.. ஒருவழியா நானும் 
அழகுக்குறிப்பு எழுதிவிட்டேன்.