Tuesday, September 28, 2021

ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர் . வில்லன் ?

ஜெயலலிதாவின் ஹீரோ எம் ஜி ஆர்.
வில்லன் ???
தலைவி - கங்கனா
QUEEN - ரம்யாகிருஷ்ணன்
இரண்டுமே நமக்குத் தெரிந்த தமிழ் நாட்டு அரசியல்
அதிமுக ஜெயலலிதாவின் கதை.
தலைவியில் எம்ஜிஆராக அரவிந்தசாமி.
வெப் தொடரில் எம் ஜி ஆராக இந்திரஜித் சுகுமாறன்.

திரைப்படத்தில் கங்கனா ஜெயலலிதாவுடன் ஒட்டவே
முடியவில்லை! ஒன்றிரண்டு ஒரிஜினல் சினிமா
காட்சிகளைக் காட்டும்போது மட்டும் பரவாயில்லை.
சினிமாவில் எதிர்க்கட்சி தலைவர் வில்லன் ரேஞ்சுக்கு
சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
சட்டசபையில் துகிலுரிதல் காட்சி..
முதலமைச்சராகி சட்டசபைக்கு வருவேன்"
என்று சூளுரைக்கும் காட்சி...
அய்யய்யோ.. சட்டசபையின்
"அந்தக் கறுப்புதினம்" இன்று பார்க்கும்போது .
. திமுக தொண்டர்களுக்கு
எப்படி இருக்குமோ..? தெரியவில்லையே!
திரைப்படம் ஓடாது.

அதிமுகவும் இதைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது!
பரிதாபம்..!
காரணம் திரைப்படத்தில் திமுக மட்டும் வில்லத்தனம்
காட்டவில்லை.
அதிமுகவும் என்னவெல்லாம் ஜெ வின் அரசியல் பாதையில்
அவர் ஒரு பெண் என்பதால் இழிவுப்படுத்தினார்கள்
என்பதை சினிமாவும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக திரையில் எம். ஜி. ஆர் - ஜெயலலிதா ஜோடியை
ரசித்து விசில் அடித்து கொண்டாடிய வர்கள் இவர்கள்.
சினிமா நடிகரை தலைவராகவும்
ஏன் தங்கள் கண்கண்ட தெய்வமாகவும்
கொண்டாடியவர்களுக்கு அதே சினிமாவிலிருந்து
வரும் பெண்ணை ஏற்க முடியவில்லை.
அவள் சுமக்கும் அவமானங்கள் கனக்கிறது.
எம் ஜி ஆரின் இறுதி ஊர்வலத்தின்
க்ளைமாக்ஸ்..அதிமுகவின் அசல் முகத்தை காட்டி விடுகிறது.

எனவே இரண்டு பக்க தொண்டர்களுக்கும்
தலைவர்களுக்கும் "தலைவி" தொந்தரவுதான்.
தலைவியை விட குயின் கொஞ்சம்
புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
குயின் தொடரில் திமுக எதிர்மறை பாத்திரமல்ல.
குயின் ஒரு பெண்ணின் அரசியல் பயணமும்
ஆண்மைய சமூகம் அதை எதிர்கொண்ட விதமும்
என்று கவனமாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறது.
சின்ன சின்ன அசைவுகளில் அதிமுக தலைவி
"ஜெ"வை கொண்டுவருவதில்
ரம்யா கிருஷ்ணன் ஜொலிக்கிறார்.
கங்கனாவின் உடல்மொழி ஒத்துழைக்கவில்லை.
படம் என்னவோ திரையிடப்பட்ட மும்பையில்
எதிர்பார்த்த அளவுக்கு வசூலை எடுக்கவில்லை.
வெளி நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில்
தலைவிக்கு அதிக வரவேற்புஇருந்திருக்கிறது
என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
எம் ஜி ஆர்.. ?
யார் எம் ஜி ஆராக நடித்தாலும் மக்களுக்கு பிடிக்கும்.
ஜெயலலிதா படங்களில் எப்போதும்
எம் ஜி ஆர் தான் ஹீரோ. சந்தேகமே இல்லை!
ஆனால் யார் வில்லன் என்பதுதான்
இன்றும் சந்தேகமாக இருக்கிறது.

Monday, September 27, 2021

பொய்தேசங்கள்.. இன்றும் அன்றும்.

 

பொய்களுக்குப் பலபெயர்கள் உண்டு.

அவன் பெயரும் அதிலுண்டு.

கரைபுரண்டோடிய வைகை வெள்ளத்தில்

 நீச்சல் கற்றுக்கொடுப்பதாக

பாசாங்கு காட்டியவன்

மூச்சுத்திணறி அவள் மிதக்கும் வரை

கரையிலேறி கொண்டாடியவன்

இதோ..

பட்டத்து ஆனையில் பவனிவருகிறான்.

வெள்ளம் வடிந்துவிட்டது.

சாட்சியாக இருந்த மணல்களை

அவன் அடியாட்கள் 

கொள்ளையடித்துவிட்டார்கள்.

புதர்மண்டி கிடக்கிறது

அவள் கனவுதேசம்.

மதுரை கோபுரங்கள் அதிர

வாழ்க வாழ்கவென கோஷங்கள் .

ரதவீதிகள் குலுங்குகின்றன.

மீனாட்சி தோளிருந்த பச்சைக்கிளியைக்

காணவில்லை.

 

வீறுசால் அவையோர் வாழ்ந்தக் கள்ளூர்

அவள் பிணத்தை எரிக்கவோ

புதைக்கவோ முடியாமல்

நாற்றமெடுக்கிறது.

ஹே சென்னிமல்லிகார்ஜூனா

சுடுகாட்டில்  ஆடும் உன் ஆட்ட த்தில்

நீண்டு தொங்கும் சடைமுடிகள்

மறைத்திருக்கின்றன

உன் முதுகிலிருக்கும்

பொய்யின் தழும்புகளை.

பொய்கள் பொய்களை அறியும்.

வா..

கரும்புத்தோட்டத்தில்

அவன் விட்டுச்சென்ற அதே

பொய்களின் கங்குகளை

தோண்டி எடுத்துவா.

காதலின் பிணங்களை எரிக்க

பொய்களால் மட்டுமே முடியும்.

அவள் பிணம் எரியும் வாசனை

உங்கள்  தேசமெங்கும்

பொய்களை விதைக்கட்டும்.

அதில்

உன் நெற்றிக்கண்ணும் சிதையட்டும்.

கொற்றவை களி நடனம்.

அடியே மீனாட்சி

அழுகையை நிறுத்து.

 

 சங்கப்பாடலில் ஆண் பெண் உறவு

களவொழுக்கம் கற்பொழுக்கம் உடன்போதல்

பரத்தையர் பிரிவு எல்லாம் தான் உண்டு.

ஆனால் அன்றும் பொய் சொல்லி

பெண்ணின் வாழ்வை ஏமாற்றியவர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படியானவர்கள்

இல்லவே இல்லை என்றெல்லாம் பொற்காலக் கனவுகள் மறைத்துவிட முடியாது.


அக நானூறு பாடல் 256: பாடலில்

களவொழுக்கம் கொண்டு அதன்பின்

அவளை “அறியேன்” என்று 

பொய்யுரைத்தவனுக்கு ஊரார் தண்டனை வழங்கியதாக பதிவு செய்திருக்கிறது.

முக்கவரான கிளைகளின்‌ நடுவே கட்டிவைத்து, நீற்றினைத்‌ தலையிலே பெய்து தண்டனை விதிக்கும்‌ வழக்கம்‌
இப்பாட்டிலே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்‌, அவன்‌ குற்றம்‌
ஊரறிந்த பழியுடையதாகிறது.

பாடல் வரிகள்:

“…..பொய்யால்‌; அறிவேன்‌; நின்‌ மாயம்‌

தொல்புகழ்‌ நிறைந்த பல்பூங்‌ கழனிக்‌,

கரும்பமல்‌ படப்பைப்‌, பெரும்பெயர்க்‌ கள்ளூர்‌ 15
திருநுதற்‌ குறுமகள்‌ அணிநலம்‌ வவ்விய

அறனி லாளன்‌, அறியேன்‌என்ற

திறன்‌இல்‌ வெஞ்கூள்‌ அறிகரி கடாஅய்‌,

முறிஆர்‌ பெருங்கிளை செறியப்‌ பற்றி

தீறுதலைப்‌ பெய்த ஞான்றை
வீறுசால்‌ அவையத்து ஆர்ப்பினும்‌ பெரிதே

அகம் 256

புலவர்: மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, September 24, 2021

அவுரி அரசியலான கதை

 தாவர மண்டலத்தின் அரசியல்

காலனி ஆட்சி கால த்தில் மிகவும் முக்கியமானது.

வெட்ப மண்டலத்தில் விளையும் தாவரங்களை
தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் தங்களின் அதிகாரத்தாலும்
பயிரிட முடியாது என்பதால்
மனிதர்களும் விதைகளும் காலனி ஆதிக்கத்தில்
புலம்பெயர்ந்திருக்கின்றன.
அதில் முக்கியமானது அவுரியும் கரும்பும்.
அவுரி இலையிலிருந்து துணிகளுக்கு சாயம் பூசும்
இயற்கை வண்ணத்தை அறிந்த ஆங்கிலேயர்கள்
ஆப்பிரிக்காவில் விளைந்திருந்த அவுரி விதைகளை
இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்திய விவசாயிகளிடம்
கட்டாயப்படுத்தி அவுரி விளைச்சலை அறுவடை செய்தார்கள்.
தங்கள் விளை நிலங்களிலும் அவுரி போட்டு அவர்கள்
நிர்ணயித்த விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு
இந்திய விவசாயிகள் நசுக்கப்பட்டார்கள்.

தமக்குத் தேவையான அவுரியைப் பெற ‘திங்காத்தியா’
என்னும் ஒப்பந்த முறையை ஆங்கிலேயர்கள் உருவாக்கியிருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1830-1895)
அவுரி வாணிபம் மிகுந்த ஆதாயத்தை ஆங்கிலேயர்களுக்கு
அளித்து வந்தது. உலக அளவிலான சந்தை அவுரிக்கு இருந்தது.
துணிகளுக்கு நீலச்சாயம் தோய்க்க உதவும் மூலப்பொருளாக
இது இருந்தமையே இதற்குக் காரணமாகும்.
1890இல் வேதியியல் சாயத்தை ஜெர்மனி கண்டுபிடித்த பின்னர்
அவுரியின் மதிப்புக் குறையலாயிற்று என்றாலும்
முதல் உலகப்போரின்போது ஜெர்மானியரின்
வேதியியல் சாயங்கள் அருகிப் போன நிலையில்
மீண்டும் அவுரிப் பயிர், விலை ஏற்றம் அடைந்தது.
இதனால் ஆங்கிலேயர்கள் கொள்ளை இலாபம் ஈட்டினர்.
அவுரி பயிரிடமாட்டோம் என்று பெரிய போராட்டம் நடந்திருக்கிறது.
இந்தப் போராட்டம் “சம்ப்ரான் சத்தியாகிரகம்”
என்றழைக்கப்படுகிறது.
காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் அவுரியும் குரல்
கொடுத்த வரலாறு முக்கியமானது.
அப்படித்தான் கரும்பும்.
தங்கள் குளிர்ப்பிரதேசத்தில் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை தயாரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு சர்க்கரை அதிகமாக கொடுக்கும் கரும்பை விளைவிக்கமுடியவில்லை.
பீட்ரூட்டிலிருந்து எடுக்கமுடியும் சர்க்கரையின் அளவு
கரும்புடன் ஒப்பிடும் போது சொற்பம். சர்க்கரை
ஒரு சிலருக்கான நுகர்ப்பொருளாக மட்டுமே இருந்தது
அவர்கள் தேசத்தில் அதனால் தங்கள் காலனி ஆதிக்கத்திலிருந்த
இந்து மகாசமுத்திர தீவுகளான ஜாவா, சுமுத்திரா, மொரிஷியஷ்
பகுதிகளி ல் கரும்பு பயிரிட்டு கரும்புத்தோட்டத்தில் வேலை செய்ய
கப்பல் கப்பலாக நம் மனிதர்களை ஏற்றுமதி செய்தார்கள். .
கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே
ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக்
கரும்புத் தோட்டத்திலே.
என்று பாரதி கண்ணீர்விட்டது அதிகாரத்திலிருப்பவர்களின்
சர்க்கரை இனிப்பை
எதுவும் செய்யமுடியவில்லை!!

தேயிலை காஃபி ரப்பர் கொக்கோ என்று அவர்களின் கச்சாப்பொருள்
தேவைகளுக்கு தங்கள் காலனி ஆதிக்க மக்களின் வாழ்க்கையை
சிதைத்தார்கள். இன்றும் அதுவே வேறொரு வேடத்துடன்
அரங்கேறி கொண்டிருக்கிறது. அவர்கள் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
நம் பிள்ளைகள் தங்கள் தூக்கம் கெடுத்து அவர்களுக்காக
கணினி அடிமைகளாய் இருக்கிறார்கள்.
தாவர அரசியல், பூகோள அரசியல் . கனிம அரசியல்,
எண்ணெய் அரசியல் எல்லாமும் தான்
அதிகார அரசியலின் முகமாக இருக்கின்றன
அன்றும் இன்றும்..

Thursday, September 23, 2021

அவள் "ஒய்" என வெட்கப்பட்டாள்..

 

தமிழ் சினிமாக்களின் முதலிரவு காட்சிகள்மிகவும் பிரபலமானவை. அதுவும் அந்தக் காலத்தில் கண்ணதாசன் பாடலோடு பூவால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலைச் சுற்றி அவர்கள்

பாடுவதும் அதை ரசித்துப் பார்த்த ஒரு தலைமுறை இருந்தது என்பதும் 

உண்மைதானே…

ஆனால் சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்

இதே காட்சியை சங்க இலக்கியத்தில் அன்றைய புலவன் எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறான் என்று வாசிக்கும்போது..ஏற்படும் வியப்பு ..

ஆஹா.. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ரசித்து ரசித்துகொண்டாடி இருக்கிறான்யா நம்ம ஆட்கள்!

“ஆட்டுக்கறி பிரியாணி சாப்பாடு.. போட்டிருக்கிறார்கள் . ( திருமணத்தில் சைவ உணவு விருந்து வழக்கம் பிற்காலத்தில் தான் வந்திருக்கிறது) மணமகள் புத்தாடை அணிந்திருக்கிறாள். வாராயோ தோழி வாராயோ என்று மணல் பரப்பிய மணப்பந்தலுக்கு வாகை மகளிர் அழைத்துவருகிறார்கள். அன்று திங்கள் உரோகிணியைக் கூடும் முழு நிலா நாள்.

மணமகன் அவளுக்கு வாகைத்தளிர் அருகம்புல் மல்லிகை மொட்டு மூன்றும் சேர்த்து நூலில் கட்டிய மாலையை (தாலியாக) அணிவிக்கிறான். (அட டா.. இன்னிக்கும் தாலிக்கட்டும் போது அதில் பூ கண்ணியைத் தொங்கவிடுவது இதனால் தானா! இதையே பின்பற்றி இருக்கலாம். தங்கம் விலையைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்!!)

இதோடு நிறுத்திவிடவில்லை புலவன்..

அந்த இரவு காட்சிக்கு வருகிறான்.


உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!

முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 

பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்

உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,

உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,

மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென  

நாணினள் இறைஞ்சியோளே பேணி

பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,

சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த

இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

(அகம் 136)

யாரும் கரித்துக்கொட்ட முடியாத கற்பினை உடையவளே! என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே! துவளாத புத்தாடையால் உடம்பு முழுவதையும் நீ போர்த்திக்கொண்டிருப்பதால் உடல் புழுங்கி உன் நெற்றியில் வியர்வை கொட்டுகிறது. உடல் காற்றாடட்டும், உன் இடையைத் திறஎன்று சொல்லிக்கொண்டு அவள் ஆடையைக் களைந்தேன். அப்போது அவள் உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னினாள். தன்னை மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. ஒய்என்று நாணினாள். என்னை வணங்கினாள். பருத்து மூடிப் பகையுடன் கிடந்த ஆம்பல் மலரானது தன் சிவந்த தன் இதழ்களைத் திறந்து, வண்டு தேனை உண்ணும் மலராக விரிவது போல, தன்னை வேய்ந்திருந்த கூந்தலுக்குள் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள்…

என்ன ஒரு காட்சி.. 

அவள் நாணத்தை “ஒய்’ என்று நாணினாள் 

என்று சொல்கிறானே.. இதுதான்யா அவன் காட்சிப்படுத்தியதின் உச்சம். 

நம் காமிராவுக்குள் இதெல்லாம் அகப்படமுடியாதுதான்!!!

 #சங்ககாலவாழ்க்கை_புதியமாதவி

#sangamLit_puthiyamaadhavi

Monday, September 20, 2021

40 + > 60

 நாற்பதுகளைத் தவறவிட்டவர்கள் அறுபதுகளில் நிம்மதி இழக்கிறார்கள். என்னைப் போல. 

 ஒவ்வொரு பெண்ணுக்கும் நாற்பது முதல் 50 வரை முக்கியமான பருவம். அதை என்ன காரணம் கொண்டும் யாருக்கும் தியாகம் செய்து விடாதீர்கள். கொஞ்சம் தன்னலத்துடன் இருங்கள், ஆம்.. அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. 

 இங்கே குடும்பம் என்பதும் உடன்பிறப்புகள் உறவுகள் என்பதும் எம் தந்தையர் காலத்தின் வாழ்வியல் விழுமியங்களக் கைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட து. பாசம், அரவணைப்பு, எல்லோரையும் சேர்த்திழுத்துக்கொண்டு பயணிக்க நினைத்த விழுமியங்கள் எல்லாமே அர்த்தமிழந்துவிட்டன. திரும்பிப்பார்க்கும் போது நம்மை இன்று அவமதிக்கும் அவர்கள் புத்திசாலிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடமை பாசம் என்பதெல்லாம் ரொம்பவும் கேலிக்கூத்தாகிவிட்டது,, ...... 

 நாற்பதுகளில் விழித்துக்கொள்ளுங்கள். உங்களை , நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் உங்கள் பிள்ளைகள் உங்கள் கணவர் இந்த முதல் வட்ட த்திற்கு மட்டும் அதிக நேரம் ஒதுக்குங்கள் .

 உங்கள் பணம் மட்டுமல்ல, 

 உங்கள் நேரம் விலைமதிப்பில்லாதது.

 உங்கள் உழைப்பு விலை மதிப்பில்லாதது. அதை யாரும் சுரண்டுவதற்கு நீங்களே காரணமாக இருக்காதீர்கள். 

பாசம் கடமை என்ற பெயரில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்! 

 உங்கள் சுயம் காயப்படாமல் காலமெல்லாம் நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதை உங்கள் நாற்பதுகள் தான் தீர்மானிக்கின்றன. 

 நாற்பதுகளைத் தவறவிட்டு என்னைப் போலவும் என் எழுத்துகளைப் போலவும் அனாதையாகிவிடாதீர்கள்.

 என் பிள்ளைகளுக்கும் இதையே என் அனுபவப் பாடமாக விட்டுச் செல்கிறேன். எல்லாம் மாறுகிறது. நாமும் மாற வேண்டும்.

Sunday, September 19, 2021

பாரதி VS தாகூர் & நோபல்பரிசு

 கீதாஞ்சலியை முதலில் தமிழாக்கத்திலும்

அதன் பின் ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். கண்ணதாசனின் புஷ்பாஞ்சலி வாசித்தப்பிறகு கீதாஞ்சலி வாசித்தேன். அத்துடன் தேவாரம் திருவாசகம்

ஆண்டாள் பாடல்கள் ,

மீரா பாடல்கள், சூஃபி பாடல்கள் வாசித்த

பிரமையில் ஆழ்ந்திருக்கும் வாசிப்பு மனம்

கீதாஞ்சலியை ஓர் அதிசயமாக கொண்டாடவில்லை என்பதுதான் உண்மை.

இதை வெளியில் சொல்வதற்கு அச்சப்பட்ட காலமுண்டு. !

ஆனால் தாகூரின் கீதாஞ்சலிக்கு  தான்

நோபல் பரிசு கிடைத்துள்ளது. மேற்கத்திய

படைப்புலகத்திற்கு கீதாஞ்சலி கவிதைகள்

இந்திய படைப்புலகம் குறித்து மாபெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். இது குறித்த கட்டுரை ஒன்றை இம்மாதம் புதிய கோடாங்கி இதழில் சா.து. அரிமாவளவன் “பாரதியும் தாகூரும் ஒப்பாய்வு’ என்று எழுதி இருக்கிறார்.

தாகூரின் கவிதைகளை அயர்லாந்து நாட்டுக்கவி W B Yates செழுமைப்படுத்த உதவினார் என்ற குறிப்புள்ளது. அவரே இக்கவிதைகளுக்கு முன்னுரையும் வழங்கினார்.

நோபல் பரிசின் கதவுகளைத் தட்டுவது தாகூரின் கீதாஞ்சலிக்கு எளிதானது.

நம் மகாகவி பாரதிக்கு..?

 நம் பாரதி வங்கத்தின் தாகூரை அறிந்திருந்தார். தாகூர் பாரதியை அறிந்திருந்ததாகத் தெரியவில்லை!

பாரதிக்கு நோபல் பரிசு கனவாகவே இருந்த து.

தனக்கு கிடைக்கவில்லையே என்று மட்டுமல்ல, தமிழுக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் பாரதிக்கு இருந்திருக்கிறது.

“பாரதி நெல்லையில் தங்கியிருந்தப்போது இரவிந்தீர நாத் தாகூர் மதுரை வந்திருக்கிறார் என்று அறிகிறார் பாரதி. மதுரைக்குப் போய் தாகூரை சந்திக்க விரும்புகிறார்.

 எதற்கு?

“நான்  தாகூரோடு பேசி வென்று அவர் பெற்ற நோபல் பரிசைத் தமிழுக்குப் பெற்றுத்தர வேண்டும்…. நாம் சென்று தாகூரிடம் ஒன்று சொல்வோம். நீர் வங்க க்கவிஞர், நான் தமிழ்க்கவி. விக்டோரியா மண்டபத்தில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசை அவை முன் வையும். இருவரும் பாடுவோம், எனது பாட்டையே சீரியதென மெச்சுவார்கள். உமது கையாலேயே அப்பரிசை எடுத்து தர வேண்டும் என்போம்”

பாரதி…..

உனக்கு ஓர் அயர்லாந்து கவிஞன் கிடைக்கவில்லை. உன்னை எடுத்துச் செல்ல

வக்கத்துப்போனது எம் வாழ்க்கை!

 

நல்லதோர் வீணை செய்தே அதை

 நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி எனைச் 

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். 

 

 

 

Friday, September 17, 2021

சமூக நீதியின் அரசியல்

 நான் தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள்.

அவரை ஓரளவுக்கு வாசித்தவள்.
இந்த இரண்டு வரிகளை எழுதித்தான் அடுத்த வரிகளுக்கு
நகர வேண்டியதிருக்கிறது.
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப் 17
சமூக நீதி நாள் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தந்தாலும் இம்மாதிரி அறிவிப்புகளின் அரசியல் கவலை அளிக்கிறது.
சமூக நீதி என்பது என்ன?
சமூக நீதி பயணத்தில் நீதிக்கட்சி காலம் தொட்டு
திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்ப
தை மறுக்கவில்லை. ஆனால்,
பெரியார் பிறக்கவில்லை என்றால் ?
என்று பேசுவது பகுத்தறிவல்ல.
பெரியார் தான் இந்திய மண்ணுக்கே சமூக நீதியைக் கற்பித்தவர்
என்ற மிகைப்படுத்தல் பெரியாருக்கும்
பெருமை சேர்க்கவில்லை.!
நான் வாழும் மராத்திய மண்ணில் புரட்சியாளர் அம்பேத்கரை
தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளாத ஒடுக்கப்பட்ட மக்கள்
இன்றும் உண்டு. ஆனால் எவரும் இன்றுவரை
அம்பேத்கர் பிறக்கவில்லை என்றால் நீ
செருப்பு போட்டு நடந்திருப்பாயா என்றோ
எல்லாம் அம்பேத்கர் போட்ட பிச்சை என்றோ
பேசுவது இல்லை.
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் வழி வந்தவர்கள்
எல்லோருமே
பெரியார் பிறக்கவில்லை நீ என்னவாக இருந்திருப்பாய்?
என்று கேட்பார்கள். மேம்போக்காக பார்த்தால் அவர்கள் கேள்வி
நியாயம் போல தோன்றினாலும் அந்தக் கேள்வியில்
வெளிப்படுவது நிலவுடமை சமூகத்தின் அதிகாரமும் சூத்திரனின் அதிகாரமுகமும் தான். இதைச் சுட்டிக் காட்டினால் என்னைப் போன்றவர்களை “நன்றி கெட்டவர்கள்’ ஆகிவிடுவோம்.!
இப்படித்தான் இங்கே பெரியார் மண்ணும்
பெரியார் மண்ணின் மைந்தர்களும் இருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு
இந்த அறிவிப்புகளின் ஊடாக வேறொரு அரசியல் நோக்கம்
இருக்கிறது. அது இந்துத்துவ மோதி அரசுக்கு எதிரானதாக
தன்னை இந்திய அரசியலில் காட்டும் ஆயுதமாக
பெரியாரும் சமூக நீதி நாளும் ஆயுதமாகி இருக்கிறதா
என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டியதிருக்கிறது.
சமூக நீதி என்பது
அந்த நாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல,
சமூக நீதி என்பது
சமூக நீதியைக் கடைப்பிடிக்கப்போகிறேன் என்று
உறுதிமொழி எடுப்பதுடன் முடிந்துவிடுவதல்ல.
சமூக நீதி என்பது
விளிம்பு நிலை மக்களுக்கு
வாழ்வாதாரங்களை வழங்குவது மட்டுமல்ல,
சமூக நீதி என்பது
சமத்துவ புரங்களை கட்டி
வாடகைக்கு விடுவதல்ல.
சமூக நீதி என்பது அதையும் தாண்டி
அரசியல் அதிகாரத்தில் சமபங்கு, சம வாய்ப்பு கொடுப்பது.
அதிகாரப்பங்கீட்டில் சமூக நீதியை நிலை நிறுத்துவது.
திமுக அரசு அறிவிப்புகள் வரும்போது உயர் பதவிகளில்
சமூக நீதி செயல்படுகிறதா ?
சரி.. இதையும் தாண்டி.. சமூக நீதியைப் பேசும் திமுக
என்ற மாபெரும் அரசியல் கட்சியில்
அதிகாரமிக்க பதவிகளில் மாவட்ட வட்ட தலைவர் செயலாளர்களாக
இருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள்/ சிறுபான்மையினர்/
பெண்கள் எத்தனை பேர்?
சமுக நீதி என்பது ஒரு செயல்திட்டமாகுமா?
எப்படி ?
என்னவெல்லாம் செய்யப்போகின்றீர்கள
ங்கோவன்

Sunday, September 12, 2021

பேருந்துகளில் விரசமாகும் காமத்துப்பால்

 பெண்ணியம் பேருந்தில் பயணிப்பதில்லையோ??!

திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு மீண்டும் அரசு பேருந்தில்
பயணிக்கும் அனுபவம் கிட்டியது. திருக்குறளை
அசைப்பிரித்து எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டு
புதுசாக எழுதப்பட்டிருக்கும் திருக்குறளை
இவ்வளவு காலமும் சுமந்து கொண்டு
என் முப்பாட்டன் வள்ளுவனே காமெடி மாதிரி
ரசித்துக்கொண்டிருக்கும்போது நானும் அவரைப் போலவே
அதை வாசித்துவிட்டு சிரித்துவைத்தேன்.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில்
திரையிசைப் பாடல்கள் ஒலிக்கின்றன.
பயணத்தில் இசையும் பாடலும் எல்லா நேரங்களிலும்
எல்லோருக்கும் ஒத்துவராது, அதாவது ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மன நிலையில் பயணிப்பார்கள். அதைப் பற்றி
எல்லாம் கவனமின்றி மிகவும் சத்தமாக பாடல் ஒலிக்கிறது.
இதைப் பற்றிய ஓர்மையை நாம் இழந்துவிட்டோம்.
சரி இதை விடுங்கள்.
என் பயண அனுபவத்தில் என் காதுகளை ear phone
வைத்து மூடிக்கொண்டேன்.

ஆண் பெண் குரல் .. முயங்கி மயங்கி முக்கி முணங்கி..
இன்னும் என்னவெல்லாமோ .. சேஷ்டைகளுடன் பாடல் ஒலிக்கிறது..
சத்தமாக..
தமிழ்த் திரையிசைப்பாடல்கள்
எப்படி வேண்டுமானாலும் எழுதப்படட்டும் ..
ஆனால் ஒரு பொது இடத்தில் இம்மாதிரியான பாடல்களை
சத்தமாக ஒலிப்பரப்பிக்கொண்டு பயணிக்கும்
அருவெறுப்பை... என் தமிழ்ச்சமூகமே.. எப்படி
சகித்துக்கொள்கிறாய்? !!
ஏன் தமிழ்ப் பெண்ணியம் இந்தப் பயணத்தின்
அருவெருப்பை கண்டுகொள்ளவில்லை.
ஒருவேளை.. பெண்ணியம் பேசுபவர்கள் யாரும் பேருந்தில் பயணிக்கவில்லையோ??!!
இசை.. இனிமையானது.
ஆனால் அதையும் முகம் சுளிக்க வைத்து
உடல் கூச வைத்து அருவெருப்புடன்
காதை மூடிக்கொள்ள வைத்து.. இவை எதுவுமே
பாதிக்காத எருமைத்தோலுடன்., .. வாழப்பழகிவிட்டீர்களா!
(என் எருமைகள் மன்னிக்க வேண்டும்)
இசைக்கருவிகளின் மெல்லிய இசையை
ஒலிக்க விடுங்கள். திரை இசைப்பாடல்களிலும்
சகிக்க முடியாத விரசமான பாடல்களைத் தவிருங்கள்.
ப்ளீஸ்..

#தமிழ்நாடு_அரசுப்போக்குவரத்துதுறை
#TNSTC