Friday, May 24, 2013

முலைச்சிப் பறம்பு
ஏப்ரல் மாதம் வந்துவிட்டால் வங்கிகளுக்கு ஓடி 15G அல்லது 15H படிவங்களைப் பூர்த்தி செய்துவிட்டு நமக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக
இருக்கும் வங்கி கணக்குகளை அரசாங்கத்தின் வருமான வரி PAN எண்ணுடன் இணைத்திருப்பதால் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் காட்டி நல்லதொரு
இந்தியக் குடிமகனாக இருப்பதை ஒவ்வொரு வருடமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த வருமான வரிகள் எல்லாம் நம்மைப் போல மாத வருமானம் பெறும்
நடுத்தர வர்க்கத்தினருக்கானதாகவே இன்று இருக்கிறது.
அடிக்கடி பத்திரிகைகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான அமெரிக்க டாலரில் லாபம் காணும்
கார்ப்பரேட் முதலைகளும் வைத்திருக்கும் வரிபாக்கி பட்டியல் வரும், போகும்,
வரும் போகும்.. வருவதற்கும் போவதற்கும் நடுவில் என்ன நடக்கிறது?
சரி, விட்டுத்தள்ளுங்கள். இப்போதைக்கு நம் நாட்டில் நாம் கட்டும் வரி
நம் மூதாதையர்கள் கட்டிக் கொண்டிருந்த வரிகளுடன் ஒப்பிடும் போது..
எவ்வளவொ பரவாயில்லை என்று பெருமூச்சு விட்டு ஓரளவு நம்மை
நாமே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளலாம்.

ஜப்பானில் 1590களில் தங்கள் விளைபொருள்கள் அனைத்தையும் பண்ணையாருக்கே உழைப்பவர்கள் கொடுத்துவிட வேண்டும் என்பது சட்டம்.
பண்ணையாரே பார்த்து, பொழைச்சுப் போகட்டும் என்று ஏதாவது
தன் பண்ணைத் தொழிலாளிக்கு கொடுத்தால் அதுவே அவனுக்கு
கிடைத்த பெரும்பேறாக கருதப்பட்டது.

சியாம் நாட்டில், அதாவது இன்றைய தாய்லாந்தில் 1899 வரை உழைக்கும்
விவசாயிகள் ஓர் ஆண்டுக்கு குறைந்தது 3 மாதமாவது தங்கள் அரசனுக்கு
மட்டும் உழைக்க வேண்டும். இதில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி
அதிகமானதால் இந்த முறையை மாற்றி விட்டு கடுமையான வருமான வரியை வசூலித்தார்களாம்.

யுஸ்பிக்கிஸ்தானில் (UZBEKISTAN) 16 ஆம் நூற்றாண்டுவரை திருமணம் செய்து
கொள்வதற்கே கடுமையான வரி விதித்தார்களாம். இது யாரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விதிக்கப்பட்ட வரி அல்ல. மனிதர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே முடியாது என்பதால் (விதிவிலக்குகளை விட்டுத்தள்ளுங்கள்!) இப்படி ஒரு வரிவிதித்து
தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டதாம் அரசாங்கம். பிறகென்ன?
1543ல் இச்சட்டத்தை தடை செய்துவிட்டார்கள், காரணம் அது இசுலாமிய
விதிகளுக்கு முரண்பட்டது எனக் கருதியதால்.

1365 முதல் 1825 வரை ஓட்டமன் பேரரசில் 12 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்டவர்களையே வரியாக வசூலித்தார்கள் அரசு அதிகாரிகள்.
நல்லக் கட்டுமஸ்தான் ஆண்களை ஊர் ஊராக வந்து பிடித்துக் கொண்டு போய்
சுல்தானின் சொத்தாக்கினார்கள். பெரும்பாலும் சுல்தானில் படைப்பிரிவில்
சேர்த்தார்கள்

இந்த எல்லா வரிகளையும் விட கொடுமையான வரிகள் விதிக்கப்பட்ட
ராஜ்யம் கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானம் தான்.
தலைவரி என்று 16 வயது முதல் 60 வயது வரை ஆட்களின் தலைகளை எண்ணி ஈழவர்களிமிருந்தும் சாணார்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட ஓராண்டு
வரித்தொகை சற்றொப்ப ரூபாய் 88,044/

தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள்மீது திணிக்கப்பட்ட உடை பற்றிய கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகயிருந்தது. கடுமையான ஆணாதிக்க மரபானது அவர்ண சாதிப்பெண்களை ஆபாசப்படுத்தி அவர்களை இடுப்பிலிருந்து முழங்கால்வரை மறைக்கும் "முண்டு'' என்ற முரட்டுத் துணியைத்தான் சுற்றியிருக்க வேண்டும் என கட்டுப்படுத்தியிருந்தது. அவர்களை அரை நிர்வாணிகளாக்கியது.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்மக்களை, ஆதிக்கச் சாதிப்பெண்களிடமிருந்து பிரித்து, உடனடியாக அடையாளம் தெரியும் வகையில் அவர்கள் மார்பகங்களைக் காட்டிய வண்ணமே நடமாட நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அவர்ண சாதிப்பெண்ணுக்கு அவளது சவர்ண சாதி எஜமானன் ஆண்டுக்கொருமுறை ஒன்று அல்லது இரண்டு முண்டுகள் கொடுப்பான். காலையிலிருந்து அந்தி சாயும்வரை வெயிலிலும், மழையிலும், குளிரிலும், நீரிலும் நின்றுகொண்டுகளை பறிப்பதாலும், நாற்று நடுவதாலும், ஒரே துண்டுத் துணியை நாள்தோறும் ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரை உடுத்துவதாலும் இந்தப் பெண்கள் அழுக்கடைந்தவர்களாக செயற்கையாகவே ஆக்கப்பட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள் தாங்கள் அடிமைப்பெண்கள் என்று அடையாளப்படுத்த கல், கண்ணாடி, இரும்பு, தகரத்திலான அணிகலன்களையே அணிய நேரிட்டது. (அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, பக்கம்:96)

"திருவிதாங்கூரில் வரிவிதிப்பு முறைமைக்கணங்கள், உலக நடப்பில் வேறெங்கும் கேள்விப்படாத, நடந்திராத வகையில் கேவலங்களை உள்வாங்கிக் கொண்டு உறைந்து கிடந்தது. சட்ட ஒப்பனைகளோடு அம்பலம் ஏறிய வரிவிதிப்புப் பட்டியலில் நிமிர்ந்த தலைகளும் வளர்ந்த முலைகளும் கூட இடம் பெற்றிருந்தது. கேவலங்களின் வெட்கம் அறியாமல் வெளிப்பட்ட, கண்மூடித்தனமாக சுரண்டும் கைங்கரியமாகிப் போன வரிகளின் பொருளடக்கத்தில் மிதமிஞ்சிய வல்லடித்தனமும் வக்கிரமும் சாதி ஆதிக்க குறியாட்டத்தின் இலக்கணமாகியிருந்தது. தங்கள் உறுப்புகளுக்கும் வரிகொடுக்கும் நிலைமைக்கு ஊழியச்சாதி-அடிமைச்சாதி பெண்களும், ஆண்களும் ஆளாக்கப்பட்டார்கள்." என்று பதிவு செய்திருக்கிறார்
எஸ்.பி. வள்ளிநாயகம்.

 வரிவசூல் வேட்டையும் மூர்க்கங்களின் உச்சமான சாட்சியங்களாக இருந்தது. வரிவசூல் வேட்டை நாய்களின் தொல்லை தாங்கமுடியாதநிலை ஏற்பட்டதில், சேர்த்தலையைச் சேர்ந்த ஒரு ஈழவப்பெண் போராளியானாள்.
 ஆழைப்புழை மாவட்டத்தில் சேர்த்தளை கிராமத்தில் வாழ்ந்த நன்செல்லி என்ற ஈழவப்பெண்  மார்பை துணியால் மறைத்துக் கொண்டாள். இதைக் கேள்விப்பட்ட முலைவரி வசூலிக்கும் அரசு அதிகாரிச்
அவளிருப்பிடம் தேடி வந்து வரி கேட்டார். அவளும் முலைவரி கொடுக்க
முன்வந்தாள். முலை வரி கொடுக்கும் முன் அவர்கள் வழக்கப்படி
விளக்கேற்றி அதன் பின் வாழை இலையில் வைத்து முலைவரியைக்
கொடுக்க வேண்டும். நன்செல்லி விளக்கேற்றினாள். முலைவரி எடுத்து
வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்தவள்
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அப்போது தான் அறுத்தெடுக்கப்பட்ட தன் இரு முலைகளையும் ஏந்தி வந்தாள்.
முலைவரி கொடுப்பதாக உள்ளே போனவள் தன் முலைகளையே வரியாகக் கொண்டுவந்தக் காட்சியைப் பார்த்த அதிகாரி அதிர்ச்சியில் நின்றார்.
அவளோ இரத்த வெள்ளத்தில்...பிணமாக..
வெளியில் போயிருந்த அவள் கணவன் கந்தப்பன் அவள் சிதையில் விழுந்தே
தானும் மரித்து போனதாய் சொல்கிறார்கள்.

முலைவரிக்காக அந்தப் பெண் செய்த உயிர்த்தியாகம்..
உலக வரலாற்றில் பெண்ணியம் பேசுபவர்கள் கூட மறந்துப்போன
மிக அண்மைக்கால வரலாறு.

அப்போது திருவாங்கூர் அரசராக இருந்த ஶ்ரீ மூலம் திருநாள் ( 1885- 1924)
நன்செல்லியின் செயலைக் கேள்விப்பட்டவுடன் அச்செயலே தன் நாட்டில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கிவிடலாம் என்று அச்சப்பட்டு அதுவரை அமுலில் இருந்த
முலைவரியை ரத்து செய்தார். ஒரு பெண்ணின் செயல் ஓர் அரசாங்கத்தின் மிகக்கொடுமையான ஒரு செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

முலைப் பிடுங்கி எறிந்து
பாண்டியனின் மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கிய கண்ணகியின் கதை
காப்பியக்கற்பனையோ ?வரலாறோ?
ஆனால் நன்செல்லி இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முந்திய
வாழ்ந்தவள். அவள் வாழ்ந்த இடம் இன்று முலைச்சிப்பறம்பு என்றழைக்கப்படுகிறது.

கேரளத்திலாகட்டும், அண்டை மாநிலமான தமிழகத்திலாகட்டும் , நன்செல்லி வாழ்ந்தக்கதை
வரலாறாக எழுதப்படவில்லை. அவள் இலக்கியத்தில் இடம்பெறவில்லை.
பாடப்புத்தகங்களில் அவளுக்கான பக்கங்களே இல்லை.
மார்க்சியமும் பெண்ணியமும் உரக்க ஒலிக்கும் கேரள மண்ணில்
அவள் ஊமையாக்கப்பட்டிருக்கிறாள்.

ஊடகங்கள் முலைச்சிப்பறம்பை
மனோரமா கவலா என்றே அழைக்கின்றன. அந்த இடத்தில் இன்று வாழும்
எவருக்கும் முலைச்சிப்பறம்பு வரலாறு தெரியவில்லை. நன்செல்லியும்
முலைச்சிப்பறம்பு வரலாறும் இருட்டடிக்கப்பட்டதில் சாதியம் புதிய முகத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் உணரலாம்.

இந்த வரிகளும் சேர்ந்து தான் பத்மநாப சுவாமிக்கோவிலின் கருவறையில்
பொற்காசுகளாகவும் தங்கம் வெள்ளி நகைகளாகவும் ரத்த வாடையுடன்.

Tuesday, May 21, 2013

காலச்சுவடு கட்டுரையும் என் எதிர்வினையும்

பெரியார் ஒரு பார்வை என்ற தலைப்பில் மதிப்பிற்குரிய திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். கட்டுரையாளருக்கு என் வணக்கமும் பாராட்டுதல்களும்.
ஜனவரி 2012இல்* வாசித்தக் கட்டுரையை 2013 மார்ச் காலச்சுவடு இதழ் காலங்கடந்து அச்சில் கொண்டுவந்து இருப்பது ஏன்? என்ற கேள்விகளைத் தாண்டி கட்டுரைக்குள் வரவேண்டி இருந்தது. கிருஷ்ணன் அவர்கள் பெரியார் குறித்த தன் கருத்தை வைப்பதற்கு அவருக்கு முழு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான ஒரு கட்டுரையை எந்த ஒரு தலைவரைப் பற்றியும் எவரும் எழுதிவிட முடியும். காந்தியைக் குறித்து நேருவும் தாகூரும் வைத்திருக்கும் விமர்சனங்களை நாமறிவோம்.
இக்கட்டுரைக்கு கனம் சேர்த்திருப்பது எழுதிய கருத்துகள் என்பதை விட எழுதியவர் யார்? என்கிற உண்மைதான். எழுதியவர் யார் என்று பார்க்காதே, எழுத்துகளை மட்டும் பார்த்து விமர்சனம் செய் என்று சொல்வது ரொம்பவே புத்திசாலித்தனமாக தோற்றம் அளிக்கும். ஆனால் எல்லோருக்கும் அவரவர் வாழ்ந்த வளர்ந்த சமூகச் சூழல் அவர்தம் கருத்துகளில் எதிரொலிக்கும். கிருஷ்ணன் தன்னைப் பற்றி ஓர் அறிமுகம் செய்து கொண்டுதான் பெரியாரைப் பற்றி எழுத வேண்டி இருப்பதன் காரணம் கூட இதுதான்.
பெரியாருக்கு ‘இது தெரியாது, அது தெரியாது’ என்று அட்டவணை இடுவது எவருக்கும் எளிது. ஆனால் அவரைப் பொறுத்தவரை எப்போதும் எந்த ஒரு கருத்தையும் நறுக்குத் தெறித்தாற் போல சொல்ல வேண்டியே இருந்தது. அப்படித்தான் அவருடைய கம்பராமாயணம் குறித்த கருத்துகளும். கம்பன் எழுதிய காவியத்தில் கதைத்தலைவன் ஒரு அரசனாக மட்டுமே இருக்கிறவரை அது பெரியாருக்குப் பொருட்டல்ல, ஆனால் அவனோ சாட்சாத் திருமால், விஷ்ணுவின் அவதாரமாக மாற்றம் பெற்றதால்தான் பிரச்சனையே! கம்பனின் தமிழை மட்டும் எடுத்துக்கொள், அவனது ராமனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னால் அன்றைக்கிருந்த பெரியார் தொண்டர் எவருக்கும் அது புரிந்திருக்காது. கம்பனின் தமிழ்ப்பற்றும் தமிழ்மொழி ஆளுமையும் இப்படி கருத்தியல் ரீதியாக தமிழனுக்கே எதிராக இருப்பதை முன்வைத்து ‘கம்பனே வேண்டாமய்யா’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்பட்டது. காந்தியைப் பற்றி எழுத வரும்போது கிருஷ்ணன் அவர்கள் “ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து கொண்டே இருக்கும் என்பதை அவர் (பெரியார்) ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை” என்கிறார். அக்காலக்கட்டத்தில் தான் எழுத்துக்கூட்டி வாசிக்க வந்திருக்கும் தன் தொண்டர்களுக்குத் தன் கருத்துகளை “உண்டு அல்லது இல்லை” என்று மட்டுமே சொல்லிப்புரிய வைக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் பெரியாருக்கும் இருந்தது என்பதை வசதியாக எல்லோருமே மறந்துவிடுகிறோம்.
இந்தியா எனது நாடு என்கிறீர்கள். எனக்கும்தான். மும்பையில் க்ளாஸ் 4 தேர்வுக்கு உட்காரும் தகுதிகூட தமிழனுக்கு மறுக்கப்படுகிறது, தமிழ்நாடு வந்தாலோ தருமபுரியும் பரமக்குடியும் எங்களைப் பயமுறுத்துகிறது. எங்களுக்கு என்று நாடில்லை, மொழியும் இல்லை என்ற நிலையில் பெரியாரை விட்டால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒதுங்கவும் நாதியில்லை! நான் சந்தித்த வடகிழக்கு மாநில இலக்கியவாதிகள் எவரும் இந்தியா தங்கள் நாடு என்பதை இன்றுவரை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த யதார்த்த நிலையைப் பேசவோ எழுதவோ முன்வந்தால் பிரிவினைப் பேசுகிறார்கள் என்று எளிதாக குற்றச்சாட்டு வைத்து பிரச்சனைகள் இருப்பதைத் தொடர்ந்து நாம் புறக்கணித்து வருகிறோம். காந்தி கொல்லப்பட்டபோது பெரியார் இந்தியாவிற்குக் காந்திதேசம் என்று பெயர் வைக்கச்சொன்னார் என்பதையும் தோழர் மதிமாறன் பேசியதையும் குறிப்பிட்டிருக்கின்றார் கட்டுரையாளர். The Murder of the Mahatma என்ற புத்தகத்தை 1963ல் எழுதிய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜி.டி. கோஸ்லா எழுதிய புத்தகம் பெரியாரின் கருத்துக்குப் பல்வேறு கோணத்தில் ஒத்திருப்பது நினைவு கூர வேண்டிய செய்தியாகும். கோட்சே தன் வாக்குமூலத்தில் “இலட்சக்கணக்கான இந்துக்களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கியால் நான் சுட்டேன். எல்லா பக்கங்களிலிருந்தும் எனக்கு எதிராகக் செய்யப்படுகின்ற விமர்சனங்களால் எனது செயலில் நியாயத்தன்மை கலைந்துவிடாது என்பது என் நம்பிக்கையாகும். வரலாறு எழுதுவோர் எனது செயலில் உள்ள நியாயத்தைச் சரியாகவே மதிப்பிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றுதான் சொல்லியிருந்தார். கோஸ்லா அவர்கள் கோட்சே பற்றி His main theme however, was the nature of a righteous man’s duty, his dharma as laid down in the Hindu scriptures’ என்று குறிப்பிடுகின்றார். இக்கருத்துகள்தான் மதிமாறன் சொல்வதுபோல பெரியார் காந்தியைப் போற்றும் ஒரே புள்ளி. இந்தப் புள்ளியை உருவாக்கியது அன்றைய இந்துத்துவா சக்திதானே தவிர பெரியார் மட்டும் காரணமல்ல. இந்த இடத்திலும் பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் நாம் மீண்டும் வாசிக்க வேண்டும். காந்தியைக் கொன்றதற்கு காரணம் இந்துத்துவ வெறி என்ற காரணத்தை மட்டும்தான் கையில் எடுத்துக்கொண்டாரே தவிர கொலை செய்தவனின் சாதி - இன அடையாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விமர்சிக்கவில்லை. பெரியாரைப் பார்ப்பன இனத் துவேஷியாக பார்ப்பவர்கள் பெரியார் தன் இனத் துவேஷத்திற்கு வலுவான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் இன்றைய தலைவர்களைப் போல கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து இயக்கம் நடத்தவில்லை என்பதையும் சேர்த்தே எண்ணிப் பார்க்க வேண்டும். “காந்தி, ராமசாமி ஆகிவிட்டதால் அவரை ஒழித்துவிட்டார்கள்” என்று பெரியார் சொன்னதை இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
பெரியாரின் பெண்ணிய விடுதலைக் கருத்துகளில் மிக அதிகமான பலன்களைப் பெற்றவர்கள் அன்று கல்வி நிலையில் முன்னிலைக்கு வந்து கொண்டிருந்த பிராமணர் வீட்டுப் பெண்கள் தான். பெரியார் தன் கூட்டங்களில் பேசும் போது பலர் சொன்ன தகவல்கள், அவரே வாசித்து அறிந்தவை என்ற அடிப்படையில் பேசியும் எழுதியும் வந்தார். கருத்தரங்குகளில் கட்டுரை வாசிக்கும் முறை எல்லாம் பெரியாரிடம் இல்லை என்பதாலேயே அவர் எங்கிருந்து சில கருத்துகளைப் பெற்றார் என்ற குறிப்புகளைப் பெறுவது எளிதாக இல்லை. சீக்கிய சமூகத்தில் இருக்கும் சாதியம் பற்றி எழுதும் போது கூட அக்கருத்தை வாய்மொழியாக தன்னிடம் சொன்ன குறிப்பை பதிவு செய்திருக்கிறார். கட்டுரையாளர் எழுதியிருக்கும் யூத சமூகம் குறித்த பெரியாரின் கருத்துகளின் ஆதாரம் என்ன என்பது விடுதலை ஏட்டில் தேடினால் கிடைக்கும்.
பெரியார் என்னளவில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர். அவரை விமர்சிப்பதே குற்றம் என்கிற கருத்தெல்லாம் எனக்கில்லை. கிருஷ்ணன் அவர் பார்வையை வைத்திருப்பது போல அந்த வரிசையில் நானும் நான் புரிந்து கொண்டிருக்கும் பெரியாரும்.
புதியமாதவி
மும்பை


நன்றி : காலச்சுவடு 

http://www.kalachuvadu.com/issue-161/page77.asp

Monday, May 20, 2013

என்னால் எழுத முடியவில்லை
என்னால் எழுத முடியவில்லை
அடுக்களையில்
ஆத்தங்கரையில்
வயக்காட்டில்
வாய்க்காலில்
குளக்கரையில்
கொள்ளைப்புறத்தில்
ஒதுங்கும்போதெல்லாம்
ஓசையின்றி வளர்த்த என் மொழி
உயிரூட்டி வளர்த்த என் மொழி
குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி
துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய்
என்னால் எழுத முடியவில்லை.

உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை
உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க
அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே
இயல்பான என் உடல்மொழி
உன் காமத்தீயில் கருகிப்போனது
என்னால் எழுத முடியவில்லை.

களவும் கற்பும்
நீ எழுதிவைத்த இலக்கணம்தான்.
இரண்டும் இருவருக்கும்
பொதுவாக இருக்கும்வரை
காதலிருந்தது.
முன்னது உனக்கும்
பின்னது எனக்கே எனக்குமாய்
உன் ஆயுதங்கள் வென்ற எல்லைக்கோடுகள்
இதில் காணமால் போனது காதல்மட்டுமல்ல
என் கவிதைமொழியும் தான்.

உன் படுக்கையறையின் வயகராவாய்
என் ஆடைகளைத் தயாரித்து
உன் சந்தையில் பரப்பினாய்
எதைக்காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
எதைத் திறக்கவேண்டும்
என் உடலின் எல்லா கதவுகளையும்
திறக்கவும் பூட்டவும்
உடைக்கவுமான சாவிகளும்
கடப்பாறைகளும் உன் வசம்.
உன் பசித்தீர்க்கும் அமுதசுரபி என
உன் வர்ணனையில்
மணிமேகலைகளும் மயங்கிப்போனார்கள்.
பனிக்குடம் சுமக்க்கும் பை ஆகிப்போனது
என் உடல்
பசியும் ருசியும் மறந்துப்போனது
இதுவே பழகிப்போனதால்
எப்போதாவது கனவுகளில்
எட்டிப்பார்க்கும் என் முகம்
எனக்கே அந்நியமாகிப் போனது.
அலறிக்கொண்டே விழித்துக் கொள்கிறேன்
கனவில் கண்ட முகம் பற்றி
எங்காவது
யாரிடமாவது
எப்போதாவது
உரையாடல் நடத்தும் தருணத்தில்
உணர்ந்தேன் என் மொழி ஊமையாகிப்போனதை.

என்னால் எழுத முடியவில்லை
என்னால் பேச முடியவில்லை.Friday, May 10, 2013

அணுவுலையும் கருவாடும்
நான் கருவாடு
என்னைக் கொஞ்சம் பேசவிடுங்கள்
எனக்கு அறிவியல் தெரியாது.
அதனால் உங்கள் 
அணுவுலைகள் பற்றியும்
தெரியாது.

நீர்தான் உயிருப்பின் ஆதாரம்
என்று நீங்கள் படித்து தெரிந்து
கொண்டதெல்லாம்
பலகோடி ஆண்டுகள்
சமுத்திரத்தில் சுற்றித்திரிந்த 
என் கூட்டம்
கடற்கரையில் ஒதுங்கியபோது
பட்டுத்தெறித்த 
தாம்பூல மகிமையால் தான்.நேற்று வலையில் மீனாக
உங்கள் கடற்கரை வந்தேன்.
உங்கள் கூடைகளில் நிரப்பி
தலையில் சுமந்து திரிந்தீர்கள
முற்றத்தில் உலர்த்திக் கருவாடாக்கி
எப்போதும் பசிதீர்க்கும்
அமுதசுரபியாக
என்னை வாழவைத்தவர்கள்
நீங்கள்.--
-
-


அணுவுலகைகள் வேண்டாம் என்கிறீர்கள்
உங்களுக்கு  ஆபத்தானது என்பதால் மட்டுமல்ல
காலம் காலமாய் உங்கள்  கைகளில் இருக்கும்
அமுதசுரபிக்கும் ஆபத்து வரும் என்பதால்

-அணுவுலகைகள் ஆபத்தானவை அல்லவாம்
நீதிதேவதையே எழுதிவிட்டாளாம்
இனி அச்சமில்லை அச்சமில்லையாம்
டில்லியிலிருந்து கேட்கிறது குரல்.

ஆபத்தானது அல்ல என்றால்
டில்லியிலேயே அணுவுலகைகளைத் திறக்கலாமே
நாட்டுக்கும் பெருமை
நாட்டின் தலைநகருக்கும் பெருமை
மின்சாரத்தைச் சரியாக எடுத்துச் செல்லும் வசதி
இல்லை என்கிறது உங்கள் மின்சாரவாரியம்..
அப்படி இருந்திருந்தால் குஜராத்திலிருந்தும்
கோலிவாடாவிலிருந்தும்
மின்சாரத்தை எடுத்து வந்து
தமிழகத்தை தகதகவென
ஒளிர வைத்திருப்பார்களாம்
அப்படித்தான் சொன்னார்கள் .

ஆமாம்.. நிறைய மின்சாரம் கிடைக்குமாமே
கூடங்குளம் திறந்துவிட்டால்.
அதிலும் முதல் கட்டம் தொடங்கி
இரண்டாம் கட்டம் --முடிந்து
மூன்றாவது கட்டம் வரும்போது
மின்சார மழைப் பொழியுமாமே
இவ்வளவு அபரிதமாக மின்சாரம் கொட்டினால்
அம்மாடியோவ்... 
அதை எடு-த்துச் செல்லும் வசதிகூட இல்லாமல்
 தமிழகம் எங்கும்-
 மின்சாரம் பாய்ந்து
மின்சாரம் கசிந்து
ஒரே ஷாட் சர்க்க்யூட் ஆகி
...
வேண்டாமய்யா டில்லியாரே
ஆளைவிடுங்கள்
மின்சாரம் இல்லாமல்
சிக்கிமுக்கி கல்லை உரசி 
தீ உண்டாக்கி
வலையில் பிடித்த மீனைச் சுட்டுத் தின்று
நிலாப் பொழியும் நெய்தல் கரையில்
படகுகள் ஓட்டிச் சென்றவன்
--வரும் வரைக் காத்திருந்து
கடற்கரை மணலில்
கானல்வரிப் பாடி
ஊடலும் காதலுமாய்---
வாழவிடுங்கள் அய்யா..
உங்கள் அணு ஆயுதங்களின்
சோதனை எலிகளாய்
அவர்கள்  தொட்டில்களை
எடுத்துச் செல்லாதீர்கள்.
அவர்களை  விட்டுவிடுங்கள்


மல்லிகைப்பூ மணக்கும்
கருவாடு நாறும் என்று
மக்கள்  பொதுபுத்தியில் ஏற்றிய
புண்ணியவான்களே,,.
அணுக்கழிவுகளைப் போல
அழிக்க முடியாத'
அரசியல் வாதிகளே..
உங்கள் செங்கோட்டைக்குப் பக்கத்தில்
அணு உலைகள் வளரட்டும்
அப்துல்கலாம் இருக்கிறார்
பார்த்துக் கொள்ள.

இப்படிக்கு
அணுவுலைகளுக்கு எதிரான
கருவாடுகள்..