Sunday, October 29, 2023

மாணவர்களுக்கு ஒரு கையேடு - குமணராசன்

 

.மாணவர்களுக்கு ஒரு கையேடு

 மும்பை தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவரான திரு குமணராசன் அவர்கள் பல்வேறு பயணக்கட்டுரைகள், சமூக அரசியல் கட்டுரைகள் எழுதியவர். அதில் தடம்பதித்தவர். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் ‘செவ்வியல் இலக்கியங்கள்: ஓர் அறிமுகம்” கட்டுரை தொகுப்பு வித்தியாசமானது. அவருடைய தமிழார்வம் மட்டுமல்ல, அவர் ஈடுபாடும் அதில் அவர் கொண்டிருக்கும் தெளிவும் இக்கட்டுரைகளின் வெளிப்படுகிறது.

     மாபெரும் இலக்கியவெளி பரப்பை எடுத்துக் கொண்டு அதை ஒரு கையேடாக கொடுப்பது என்பது அவ்வளவு எளிதானப் பணியல்ல. பக்கம் பக்கமாக ஒவ்வொரு செவ்விலக்கியம் குறித்தும் எழுதிவிடுவது எளிது. ஆனால், அத்தனையும் சேர்த்து ஒரு குறிப்பேடு போல எழுதி அதிலும் கவனமாக எது தேவையோ எது ரொம்பவும் முக்கியமானதோ அதையும் விட்டுவிடாமல் சேர்த்துக் கொண்டு குறிப்பெடுப்பது என்பது கடினமான பணி. அந்த அரிதினும் அரிதான காரியத்தை தன் முயற்சியால் இளைய தலைமுறைக்கு பயன்படும் வகையில் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது  அது இன்றைய தேவையும் கூட.

     செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் தன் முதல்கட்டப் பணிக்காக பட்டியலிட்டிருக்கும் 41 செவ்வியல் இலக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரைகள்.

+ @ நாழிகை கணக்கிடும் முறையை தமிழர் அறிந்திருந்தனர். முல்லைப்பாட்டு பற்றிய குறிப்பெழுதும்போது ‘குறு நீர்க்கன்னல்” பற்றி எழுதுகிறார், ஒரு கலத்தில் நிரைத்து வைத்திருக்கும் நீரைச்சின்ன்ஞ்சிறு துளை வழியாக சிறுகச் சிறுகக் கசியவிட்டு , அவ்வாறு கசியும் நீரை அளந்து காண்பதன் மூலம் நாழிகையைக் கணக்கிட்டனர். இதைச் செய்பவர்கள் ‘நாழிகைக் கணக்கர்’ என்று அறியப்பட்டனர். ( பக் 112)

+ @ குறிஞ்சிப்பாட்டும் கபிலரின் 99 மலர்களும் தமிழரின் மண்சார்ந்த மணமிக்க மலைவாழ்க்கை. அந்த மலர்களை அறியத்தருவதும் அந்த வரிகளை குறிஞ்சிப்பாட்டின் அடிக்கோடிட்ட வரிகளாக்குவதும் மாணவர்களுக்கு தேவையானதாக இருக்கிறது.

+ @ சங்க இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் வகைப்படுத்தி இருப்பதன் அடிப்படை என்ன? இதை எளிதாக்கவே நெடுநல்வாடை ஏன்

புறப்பொருள் வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டது என்பதைக் கொண்டு விளக்கம் தருகிறார். (பக் 122)

+ @ பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஆசிரியர் பத்தொன்பது நூல்களைப் பற்றி குறிப்பெழுதுகிறார். காரணம், பதினெண் கீழ்க்கணக்கு வகைப்பாட்டில் ‘இன்னிலை, கைந்நிலை என்ற இரண்டு தொகுப்புகள் குறித்த விவாதமும் பட்டியலிடுவதில் சிறு குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. அதையும் மறக்காமல் இரண்டையுமே இந்த நூல் வகைப்பாட்டில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின்  தொகுப்புக்கும் வழிகாட்டுவதாக

அமைகிறது இத்தொகுப்பு.

+ @  நக்கீரன், ஒளவையார் பெயர்களும் இவர்க:ளின் காலங்களும் ஆய்வுக்குரியவை. கொங்குதேர் வாழ்க்கை பாடிய நக்கீரனும், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனும் ஒருவர் அல்லர். ஒரே பெயர் கொண்ட, காலத்தால் வேற்பட்டவர்கள் என்பதை திருமுருகாற்றுப்படையின் குறிப்பில் மறக்காமல் இணைத்திருக்கிறார்.

+ @ செவ்வியல் இலக்கியங்களில் பெண் என்னவாக இருக்கிறாள்? பெண்ணுடல் வண்ணனையைக் கொண்டு அதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், செவ்வியல் இலக்கியம் இன்றைய ஆபாசம் என்று கருதுவதை எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பதாகவும் இதைப் புரிந்து கொள்ள முடியும் . (பக் 95)

     ஒவ்வொரு தொகுப்பு குறித்தும் இப்படியாக சில குறிப்புகளை எடுத்து அதை முன்வைக்கும் ஆசிரியர் மிகவும் தெளிவுடன் தன் கருத்தை இறுதிப்பகுதியில் சொல்லி இருப்பது அவருடைய சமூக அரசியல் தெளிவை

உறுதிப்படுத்துகிறது.

ஒவ்வொரு  நூற்றாண்டிலும் பல்கிப் பெருகிய இலக்கியங்கள் ஏராளம். ஆனால் இந்த இலக்கிய வளர்ச்சியானது தமிழ் மொழியின் தொடர்ச்சி என்ற அளவில் இருந்ததேயொழிய தமிழ் மக்களின் மரபு வழிச் சிந்தனையின் வளர்ச்சியாக அமைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம் “ (பக் 250) இத்தெளிவு திரு குமணராசன் அவர்களின் தனித்துவமான அடையாளம் .

     எத்துணை சிறப்புமிக்கதாக இருந்தாலும் அதை ஒன்றுவிடாமல் சொன்னால் அதைக்கேட்க நேரமோ பொறுமையோ இல்லை நம்  இளைய தலைமுறையினருக்கு என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும், நாளை அவர்களில் சிலராவது இந்தக் கையேடு கொண்டு தங்கள் தேடலின் ஊடாக பயணிப்பார்கள். அதற்கான ஒரு திறவுகோல்தான் இப்புத்தகம்.

     ஒவ்வொரு மாணவர்களிடமும் இருக்க வேண்டிய கையேடு. மாணவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு இப்புத்தகம்.

 

  நூல் :

செவ்வியல் இலக்கியங்கள் – ஓர் அறிமுகம்.

ஆசிரியர்: சு. குமணராசன்.

வெளியீடு : தமிழ் அலை ஜூலை 2023.

பக் 256, விலை ரூ 250

 

14 comments:

  1. சிறப்பு சிறப்பு

    ReplyDelete
  2. சிறப்பு சிறப்பு சந்திரிகா

    ReplyDelete
  3. மிகச்சிறப்பு

    ReplyDelete
  4. மிகச் சிறப்பு, மகிழ்ச்சி...இலக்கிய பயணம், சமூகவியல் பயணம், குடும்ப பயணம் இவை அனைத்தும் வாழ்வியல் பயணத்தோடு ஒன்றோடு ஒன்றாக இன்றைக்கும் இணைவதில்லை..ஆனால் திராவிடப் பயணம் இன்றைக்கும் நிலைத்து நிற்க்கும்.

    ReplyDelete
  5. மிகச் சிறப்பு, மகிழ்ச்சி...இலக்கிய பயணம், சமூகவியல் பயணம், குடும்ப பயணம் இவை அனைத்தும் வாழ்வியல் பயணத்தோடு ஒன்றோடு ஒன்றாக இன்றைக்கும் இணைவதில்லை..ஆனால் திராவிடப் பயணம் இன்றைக்கும் நிலைத்து நிற்க்கும்....ரவிச்சந்திரன் மும்பை

    ReplyDelete
  6. இன்றைக்கும் அல்ல என்றைக்கும் என்று வாசிக்கவும்

    ReplyDelete
  7. நமது பண்டைய தமிழர் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை என்ற உணர்வுடன் படைக்கப்பட்டதே இந்நூல், இதைப் படித்து பயன்பெறுவதே நூலாசிரியர் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்!

    ReplyDelete
  8. மிகச் சிறந்த இலக்கிய கையேடு.
    தமிழாசிரிய பெருமக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய கையேடு. எங்கள் சங்கம் மூலமாக எத்தனை புத்தகங்கள் வாங்க முடியும் என தேரிவிக்கிறேன் அய்யா.
    தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் தலைவர் கருநாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம் பெங்களூர்

    ReplyDelete
  9. ஐயா குமணராசனாரின் இலக்கியத் தொண்டில் இதுவும் அவர் புகழ் பாடி‌ நிற்கும் என்றென்றும். வாழிய அவர் திருத்தொண்டு.

    ReplyDelete
  10. சிறப்பான முயற்சி. பண்டைய தமிழ் இலக்கியங்களை படிப்பவர்களுக்கு குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு இப்புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா.‌ நன்றி.

    ReplyDelete
  11. சிறப்பான தமிழாவு நண்பர் குமணன் அவர்களிடம் காணக்கிடைப்பதாகும். வாழ்த்துக்கள் 🌹🌹🌹

    ReplyDelete
  12. புதிய மாதவி அவர்கள் இராம.சண்முகராசனாரின் மகளைப்போல் வளர்ந்தவர் அவரின் குறள்சார்ந்தா ஈடுபாடுகளில் நானும் தமிழார்ந்த குறளார்ந் இலைக்கிய சொற்களஞ்சிய நிகழ்ச்சிகளில் இணைந்தவன் என்பதையும் உறுதி செய்கின்றேன்.

    ReplyDelete
  13. சிறப்பு. சங்க இலக்கியங்களை எளிய முறையில் அறிமுகப்படுத்தும் தங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். நன்றி ஐயா

    ReplyDelete
  14. ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்கிப் பெருகிய இலக்கியங்கள் ஏராளம். ஆனால் இந்த இலக்கிய வளர்ச்சியானது தமிழ் மொழியின் தொடர்ச்சி என்ற அளவில் இருந்ததேயொழிய தமிழ் மக்களின் மரபு வழிச் சிந்தனையின் வளர்ச்சியாக அமைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம் “ (பக் 250) இத்தெளிவு திரு குமணராசன் அவர்களின் தனித்துவமான அடையாளம் .

    ReplyDelete