Saturday, September 29, 2018

தூய்மைவாதமும் நம் தலைவர்களும்.தூய்மைவாதமும் நம் தலைவர்களும்.எனக்கென்னவோ இந்திய சமூகம் இக்கருத்தில்
இலட்சியவாதிகளாக இல்லாமல் நடைமுறைவாதிகளாக
இருப்பதாகவே நினைக்கிறேன்., அதிலும் குறிப்பாக
தனிமனித தூய்மைவாதத்தில்.
தனி மனித ஒழுக்கம் என்பது போற்றுதலுக்குரியது தான்.
ஒழுக்கத்தின் வரையறைகளுக்கு அவரவர் பார்வையில்
எல்லைக்கோடுகள் வித்தியாசப்படுகின்றன.
ஒழுக்கவிதிகளை மீறுபவர்களுக்கு ஆதரவாக
பேசும்போது அத்தகைய மீறலின் காரணமாக
பாதிக்கப்படும் தனி மனிதர்களின் மன உளைச்சல்,
குடும்பம் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தங்கள்
உடையும் போது ஏற்படும் சிதைவுகளால்
சின்னாபின்னமாகும் எதிர்காலம், பொருளாதர
பிரச்சனைகள் , குழந்தைகளின் எதிர்காலம்
இப்படியான பல கோணங்களில் பார்த்தாக
வேண்டி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்திய சமூகத்தில் பிரபலமான
தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்திலும் தூய்மைவாதத்திலும்
எந்தளவுக்கு தேர்ச்சி அடைவார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன்.
நேரு- மவுண்ட் பேட்டன் மனைவி
எல்லோரும் அறிந்த ரகசியமில்லாத ரகசியம் தானே!
“நான் திருமணமாகாதவன், ஆனால் பிரம்மச்சாரி இல்லை!”
என்று சொன்ன வாஜ்பாய்..
இந்த வரிசை நடுவண் அரசுடன் நிற்காது.
மா நில அரசுப்பட்டியலுக்கு வரும் போது
பல கிளைகளாக பிரிந்து மெகா தொடராகும்!
ஆனால் நம் அரசியல் கட்சிகளின் சில எழுதாத
ஒப்பந்தங்களின் படி இவை எதுவும் பொதுமேடையில்
பேசப்படுவதில்லை. காரணம் கண்ணாடிக் கூண்டுக்குள்
நின்று கொண்டு கல்லெறிவது பற்றி நன்கு அறிந்தவர்கள்
நம் அரசியல் கட்சி தலைவர்கள்.
அதுமட்டுமல்ல, நம் பொதுஜன உளவியல் இவற்றை
தலைமைத்துவத்திற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்வதில்லை
என்பதும் ஒரு காரணம். 
“We don’t expect politicians to be good people. 
We don’t need them to be good people. 
What we still need is for them to be good representatives,” 
voters are viewing personal transgressions far less 
seriously than abuses of power.
says Michael G. Miller, a political science professor 
at the University of Illinois !
மைக்கல் ஜி மில்லர் சொன்ன இந்த வரையறையின் ஒரு
பாதி தான் சரி. இன்னொரு பாதியான அதிகார துஷ்பிரயோகம்
பற்றிய கருத்து நம்ம அரசியல் தலைவர்களுக்கு
ஒத்துவருமா? 
இப்படியாக எல்லா வரையறைகளையும் தாண்டி
மீண்டும் மீண்டும் நாற்காலிகள் இந்தத் தலைவர்களை
எப்படி கொண்டாடுகின்றன என்பது தான்
எந்த அரசியல் ஆய்வாளருக்கும் பிடிபடாத
பரம ரகசியமாக ..

Thursday, September 27, 2018

Adultery is not a crime, “திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு சட்டப்படி குற்றமல்ல”


“திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு
சட்டப்படி குற்றமல்ல”
இந்த தீர்ப்பு கொஞ்சம் சென்சிட்டிவ் ஆன விஷயம் தான்.
அப்படி எல்லாம் இல்லை என்று எந்தப் புரட்சி முகமூடியும்
போட்டுக்கொள்ள வேண்டியதில்லை.
“திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு
சட்டப்படி குற்றமல்ல”
Adultery is not a crime, 
India's supreme court rules.
1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வயது வந்தோர் சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், முறையற்ற உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும் என்று வழக்கில் இருந்த 157 ஆண்டுகால பழமையான சட்டத்தை இப்போது இந்த தீர்ப்பு
மாற்றி அமைத்துள்ளது.
இத்தீர்ப்பு திருமணத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடும், நீர்த்து போகச்
செய்துவிடும் என்பதே கலாச்சாரக் காவலர்களின் கவலையாக இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் பிரவீனா கோடோத், "கணவரின் அனுமதியுடன் திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் அது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கணவரே கட்டாயப்படுத்தி தன் மனைவியை வேறு ஒருவருடன் உறவுகொள்ள வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து கூறப்படவில்லை," என்கிறார்.
இத்தீர்ப்பு வந்தவுடன் ஆஹா ஒஹோ என்று கொண்டாடவோ 
அல்லது இத்தீர்ப்பை வைத்துக்கொண்டு இதுவே பெண்ணுக்கு
கிடைத்திருக்கும் பாலியல் விடுதலை என்று முடிவு செய்யவோ
முடியாது என்பதே என் கருத்து. காரணம்.. நடைமுறை வாழ்க்கை
என்பது இந்திய சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதைக்
கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை நான் அணுகுகிறேன். தோழி
கிருபா முனுசாமி அவர்கள் முன்வைக்கும் கருத்துடன் முழுக்கவும்
உடன்படுகிறேன். வழக்கறிஞர் கிருபா முனுசாமி 
“"பெண்களுக்கு சொத்துரிமை ஏற்கனவே சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முன்வரும் குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு வழங்காமல் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்குகின்றன. சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை, சாதியப் பாகுபாடு ஆகிய இன்னும் நடைமுறையில் உள்ளன. அதேபோல்தான் திருமணத்துக்கு 
வெளியேயான உறவு இனி சட்டப்படி குற்றமில்லை 
என்றாலும் நடைமுறைக்கு இது உடனடியாக வர 
வாய்ப்பில்லை," 
அதாவது வெளிப்படையாக சட்டப்படி குற்றமில்லை என்பதாலேயே
இந்திய பொதுச்சமூகம் இவற்றை ஏற்றுக்கொள்ளாது.
இதை எழுதும் போது அண்மையில் வாசித்த இன்னொரு கள ஆய்வும்
நினைவுக்கு வருகிறது. நம் இந்திய சமூகம் ஆண்-பெண் பாலியல்
உறவில் எப்போதுமே ஒரு முகமூடியைப் போட்டுக்கொள்கிறது.
அந்த முகமூடி தலைவர்கள் முதல் கடைக்கோடியில் கோவணத்துடன்
வாழும் ஆண்- பெண் வரை அனைவருக்குமானதாக இருக்கிறது.
முகமூடியின் கனமும் நிறமும் அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுகிறது
அவ்வளவு தான். ஆனால் முகமூடிகள் நிஜமானவை. (Pls ref: 
Union government’s National Family Health Survey (NFHS-4), 
published in December 2017)
மகாராஷ்டிரா, உத்திரபிரதேச கள ஆய்வுகள் சொல்லும் சில
நடைமுறை பாலியல் உறவுகள்:
> பெண்கள் தங்கள் உடல் இச்சையைத் தீர்க்க பல்வேறு வழிகளைக்
கையாளுகிறார்கள்.
> வயிற்றுப்பசியைப் போலவே உடல் இச்சையான காமப்பசியும்.
இதில் ஆண் பெண் உடல்களுக்கு வேறுபாடில்லை.
>கணவனின் உடல் உபாதைகள்/ கணவனின் பிரிவு/ கணவனின் இயலாமை
இப்படியான காரணங்களால் அவன் மனைவி கணவன் குடும்பத்திலேயே இன்னொரு
ஆணுடன் உடலுறவு கொண்டிருப்பதை அக்குடும்பம் கண்டும் காணாமல் இருப்பது தொடர்கிறது காலம் காலமாக!
> குடும்பத்திற்குள் தொடரும் இந்த திருமணத்திற்கு அப்பாற்பட்ட
உறவை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம்..
பிரச்சனை குடும்பத்திற்குள்ளேயே இருக்கும், வெளியில் தெரிந்துவிடாது
அத்துடன் பிறக்கும் குழந்தைகள் இக்குடும்பத்தின் இரத்தவாரிசாகத்தானே இருக்கும்! என்ற வலுவான காரணமும் 
> இன்னும் சில கிராமங்களில் இரு பெண்கள் சேர்ந்து வாழ்ந்து 
கொண்டிருக்கிறார்கள். ரகசியமாக பெண்களுக்குள் “ அவர்கள் 
இருவரும் கணவன் மனைவி போல’ என்ற நக்கல் சிரிப்பு மட்டும்
இருக்கும். ஆனால் அவர்களையும் கண்டும் காணாமல் இருக்க
மக்கள் பழகி இருக்கிறார்கள்.
மேலே சொன்ன அனைத்துமே நடைமுறை யதார்த்தங்கள்.
கள ஆய்வின் இந்த முடிவுகள் .. இந்திய சமூகத்தில் எத்தனை
முகமூடிகள் இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.
தனியறையில் உறவு நிலை எப்படி இருந்தாலும்
ஆண் - பெண் உறவுகளுக்குள் போட்டுக்கொண்டிருக்கும்
முகமூடிகள் கழட்டுவது சட்டத்திற்கும் சரி.. சமூகத்திற்கும் சரி
அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை.. என்றே நினைக்கிறேன்.

Wednesday, September 26, 2018

உடல்மொழியின் மறுபக்கம்உடல்மொழியின் மறுபக்கம்


வரப்போரத்தில்பிரசவித்து
கதிர் அறுக்கும் அருவாளால்
என் தொப்புள் கொடியை
அறுத்தவள்
ஓடையிலே கால்கழுவி
எனக்காக 
ஓடிக்கொண்டிருக்கிறாள்.
நானோ
உன் பட்டுப்போன்ற
சானிடரி நேப்கினைத்
தொட்டுப் பார்க்கும்
ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
பத்துப்பாத்திரம் கழுவி
வீடுவீடாக 
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன்.

பெண்மொழியை
உடல்மொழியாக்கிய
உன் மொழியைப்
போற்றிப்புகழும் 
புத்திஜீவிகளுக்கு நடுவில்
அனாதையாகிவிடுகிறது
ஆலமரங்கள்
வயல்களில் எழுதிய 
எம் வாய்ப்பாட்டு.
------------------------------

எங்கிருந்தோ ஒலிக்கிறது
என்னை அழைக்கும்
உங்கள் குரல்
ஓடிவந்து உங்கள் வரிசையில்
என்னையும் நிறுத்தும்
கனவுகளுடன்
விழித்துக்கொள்கிறது
என் பூமி.

ஏதொ ஒன்று....
இனம்புரியாத முள்வேலியாய்
நம் எல்லைகளுக்கு நடுவில்.

எல்லைத் தாண்டிய
உம் மேகங்கள்
என் எல்லைக்குள் நுழைவது
சாத்தியமில்லை
உரக்கச் சொல்கிறார்கள்
பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும்
நட்சத்திரங்கள்.

அவர்களிடம் சொல்
முள்வேலியைத் தாண்டி
ரத்தம் சொட்டும் பாதங்களுடன்
உன் பச்சைப்புல்வெளியில்
தடம் பதிக்கப்போவது
எம் பாதங்கள் என்பதை.

(மீள்பதிவு )

Sunday, September 23, 2018

பாவண்ணன்+பருவம்= மும்பை ஃபீவர் …


எங்கள் வாசிப்பு மண்டலத்தில் பருவம் காய்ச்சல் வந்தது.
பைரப்பாவின் பருவம் நாவலை சாகித்திய அகதெமிக்காக
எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்தக் காய்ச்சல் பெங்களூரிலிருந்து மும்பைக்குப் பரவியது.
இந்தக் குளிர்காய்ச்சலை மும்பைக்கு பரப்பியது
சாட்சாத் இந்த லூசு தான்.. 

பெங்களூர் தமிழ்ச்சங்க நிகழ்வில் சிறப்புரை ஆற்ற
பெங்களூர் சென்றிருந்தேன். அதுவும் தந்தை பெரியார்
அறக்கட்டளை சொற்பொழிவு.. அப்போது இரு தினங்கள்
சாருஶ்ரீ இல்லத்தில் தங்கி இருந்தேன். இரவு தூங்கும் போது
சாரு மெதுவாக பருவம் பற்றி பேசினார்அப்போதே
என் கண்கள் அங்குமிங்கும் அலைய ஆரம்பித்துவிட்டன.
அவர்.. மும்பை போகும் போது தர்றேண்டி..
இப்ப தூங்கு என்று என்னை சமாதானப்படுத்திவிட்டார்.
மும்பைக்கு டிரெயினில் உட்கார்ந்தவுடன் பருவம்
விழித்துக் கொண்டது. இரவு முழுவதும் ஏசி கோச்சில்
பருவம் குளிரில் வெடவெடத்துப்போனேன். பேயடிச்சமாதிரி
இறங்கியவள் குளிக்காமல் சாப்பிடாமல் ரூமில் போய் கதவை
அடைத்துக் கொண்டேன். பருவம் மீண்டும் என் அருகில்
அதற்குள்ளாக சாருவின் போன்..
தெரியுமே.. டிரெயினிலேயே திறந்திருப்பேனு
அடியே.. புக்கை வாசிக்கறப்போ நன்னா சாய்ந்து
உட்கார்ந்துக்கோ.. பக்கத்தில் தண்ணீர், மிக்சர்,
முடிஞ்சா இரண்டு பழம் .. எதாவது வச்சுக்கோ..
அப்புறம் மறக்காம கண்ணாடி போட்டுண்டு வாசி.
இன்னொரு டிப்ஸ்.. மடியில ஒரு தலையணையை
வச்சிண்டு வாசி.. புக்கு கீழை விழுந்தா.. ..
(சாருவுக்கு கனமான பருவம் என் கைதவறி விழுந்து
காயம் பட்டுவிடக் கூடாது என்ற பயம் தான்..!)
அப்புறம் அடிக்கடி போன் வேற.. இப்போ எது வரைக்கும்
வந்திருக்கே.. பீஷ்மர் என்ன பண்றார்..?
திரெளபதி சொன்னதைப் பார்த்தியோ..!”
போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு பருவத்தில்
நான் கரைந்துப் போனேன்
1000 பக்கங்களுக்கும் அதிகமான கனமான
பக்க அளவில் மட்டுமல்ல.. எழுத்திலும் கனமான
பருவம். பைரப்பாவை தமிழிலுக்குத் தந்தது மூலம்
பாவண்ணன் எங்கள் அனைவருக்கும் ரொம்பவும்
வேண்டியவராகிப் போனார்
இதைப் பாவண்ணனுன் அறிவார்.

இப்படியாக பருவம் நான் வாசித்து எனக்குப் பின்
எங்கள் வட்டத்தில் கே ஆர் மணி, மதியழகன் சுப்பையா.
அக்னிபுத்திரன் என்று கைமாறிக்கொண்டே இருந்தது.
இறுதியில் சாருவுக்கு அவர் பருவம் திரும்பவே இல்லை.
யாரோ வசமாக திருடிக் கொண்டு பருவத்தை தன்
வசமாக்கிக் கொண்டது பெரிய புத்தகத்திருட்டு
கதை.. 

இந்தக் காய்ச்சல் வந்தததால் பருவம் காய்ச்சல் தீர
சந்தித்து பருவம் பற்றி மட்டுமே  பேசிப் பேசி.. 
ம்கூம் அப்படி எல்லாம் பருவம் எங்களை விட்டுவிடுவதாக இல்லை.
காய்ச்சல் முத்திப்போய் வேறு வழியின்றி 
ஒருவழியாக பாவண்ணனை மும்பைக்கே அழைத்தோம்..!
பருவம் பற்றி பேசுவதற்குத்தான்!!!!
அவரும் வந்தார். பாவண்ணன் மிகச்சிறந்த சிறுகதைகளை
எழுதி இருக்கிறார். அதோடு அவர் மொழிபெயர்த்தும் இருக்கிறார்
என்ற ஓர்மை எங்களுக்கு கொஞ்சம் லேட்டாகவே ஏற்பட்டது.
பாவண்ணன் புத்தகங்களை அனைத்தையும் வரவழைத்து
பிரித்துக்கொண்டு வாசித்து மேய்ந்து அவரை வரவேற்க
தயாரானோம்.. அவருக்கு எங்கள் பருவம் காய்ச்சல் 
சாருஶ்ரீ மூலமாக ஏற்கனவே தெரியவந்திருந்தது.
அவருக்காக நாங்கள் நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில்
கூட்டம் ஏற்பாடு..

என்ன செய்தோம் தெரியுமா..
பருவம் நாவலின் கடைசிக் காட்சி..
அஸ்தினாபுரத்தின் அரண்மனையை நோக்கி
குருஷேத்திரத்தில் கணவனை இழந்தப் பெண்கள்
தலைவிரிக்கோலமாக வரும் காட்சி..
குருசேத்திரத்தில் மரணதேவதையின்
நடனம் பின்னணியில் ..
கதைக் காட்சிக்கு நாடகம் வடிவம் கொடுத்தவர்
இளவல் மதியழகன் சுப்பையா..
நாடகக்கலைஞர் பானுமதியின் குழுவினர்
நாடகத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் பெண்கள்..
இப்படியாக பருவம் நிகழ்த்துக்கலையாகி..
அதற்காகவே நாங்கள் அனைவரும் எழுந்து நின்று
பாவண்ணன் அவர்களுக்கு :போட்டோம்

எந்த வியாதி வந்து மருந்து சாப்பிட்டாலும்
அதற்கு பக்கவிளைவுகள் இருக்கும் தானே!
அப்படித்தான் பருவம் நாவலும் .. எனக்குள்
சில தேடல்களை.. 
பருவம் வாசித்தவர்கள் கட்டாயம் இரண்டாம் இடம்
வாசித்தாக வேண்டும் என்று யாரோ அருள் வந்து சொல்ல
நானும் மலையாளத்தில் வாசுதேவ நாயர் எழுதிய இரண்டாம் இடம்
நாவலை - தமிழில் குறிஞ்சிவேலன் மொழிபெயர்ப்பில் வாசித்தாகிவிட்டது.
அப்படியே எஸ்.ரா.வின் உபபாண்டவம் 
AJAYA: Roll of dice By Anand Neelakandan
Rise of kali by Anand Neelakandan..
வாசித்துவிட்டு கொஞ்சம் அசைபோடுவதற்குள்
இன்னொரு செய்தி சசிதரூர் எழுதிய மகாபாரதக் கதையில்
தற்கால அரசியலுடன் சேர்த்து எழுதி இருப்பதாக 
பத்திரிகையில் வாசித்தேன்.. அதையும் எப்படியும்
வாசித்தாக வேண்டும்..
இப்படியாக பருவம் துரத்திக் கொண்டே இருக்கிறது..Saturday, September 22, 2018

பெண்களே.. திருந்துங்கள்..

நம்ம ஆட்களுக்கு நாக்கு ஏன் இம்புட்டு
நீளமா இருக்குனு யோசித்துப் பார்த்ததில்
அதற்கு நம்ம சாப்பாடு தான் காரணமாக
இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
அதிலும் குறிப்பாக அதற்கு காரணம்
பெண்களாகிய நாம் தான் 

மெக்சிகன்  சாப்பாடு
இட்டாலியன் ஆலிவ் கார்டன் சாப்பாடு
வியட்னாமியர் சாப்பாடு
அமெரிக்கன் பரிடோஷ் 
இப்படி வகைவகையான சாப்பாடுகளைப்
பாருங்கள் 
ரொம்ப சிம்பிள்
எல்லா காய்கறிகளும் போட்டு வேகவைத்து
அதில் ருசி சேர்க்க சில ரசங்கள்..
இல்லைனா சிம்பிளா சிப்ஸ் பாக்கெட்
சிப்ஸ் தொட்டுச் சாப்பிட அவக்கடா பழச்சட்னி..
இன்னொரு ஸ்பெஷல் சாப்பாடு..
வேகவைத்த நம்ம சோறு ஒரு கரண்டி..
அது மேலே ஊற வைத்த சோளம், மொச்சை,
கடலை இத்தியாதி போட்டு
அதற்கும் மேலே இலை தழை முட்டைக்கோஸ்
வெட்டிப்போட்டுஅவ்வளவு தான்..
இப்படியாக சமையல் என்பது ரொம்பவும்
சிம்பிளா இருக்கு..

பஜ்ஜி, சொஜ்ஜி, வடை, தயிர்வடை, ரசம் வடை, பருப்பு வடை..
இட்டிலி தோசை அதைத் தொட்டுக்க நாலு விதமான சட்டினி..
போதாக்குறைக்கு சின்ன உள்ளி போட்ட சாம்பார்,
நல்லெண்ணெய் குழைத்த மிளவாப்பொடி..
வக்கணையா வடிச்ச சோறுய்
சாம்பார் ரசம் தயிரு மோரு
கூட்டுக்கறி அவியல் பொரியல்
அப்பளம் சுண்டைவற்றல் குழம்பு
கீரைக்கறி..
தொட்டுக்க ஊறுகாய்
இப்படியாக வக்கணையாக சமைச்சுப்
போட்டெதெல்லாம் போதும்ங்கறேன்..
என்ன நான் சொல்றது புரியுதா..

பெண்களும் இப்படியாக தங்களை
உலகமயத்தில் கரைத்துக்கொண்டு
கரையேற வேண்டும்..Thursday, September 20, 2018

அம்மாவின் வாசனை..
ஒளியில் பிறந்த நட்சத்திரங்கள்
இருளை விலக்கி வைத்துவிட்டன.
உன்னை எரித்த தீயின் மிச்சம்
என்னைச் சுற்றி இன்னும் அணையாமல்.
தீயைத் தீயால்  அணைக்கும் தீ நாக்குகள்
அமாவாசையை இருளிடமிருந்து
விலகச் சொல்கின்றன.
என் மீது வீசும் உன் கருவறைவாசனையை
அவர்களால் துடைத்தெடுக்க முடியாமல்
தோற்றுப்போகிறார்கள்.
அவர்களின் பஞ்சாயத்து தீர்மானிக்கிறது
இனி 
மழைநீரிலிருந்து  ஈரம் விலகட்டும்..
அரசாணைகள் அந்தப்புரத்திலிருந்து வருகின்றன
அவர்களுக்கு குடைப்பிடித்து நடந்த என் நிழல்
என்னை விட்டு விலகுகிறது.
இடியும் மின்னலுமாய்  வானம்.
கருக்கொண்ட கார்மேகத்தில்
முகம் மறைக்கும் உன் மூக்கூத்தி
என்னைப் பரவசமூட்டுகிறது.
அம்மா என்று அலறல் கேட்டு
இடி இடிக்கிறது..
மின்னல் விழுந்த மரமாய்
என் கவிதைகள் சரியும் தருணம்
எங்கிருந்தோ பறந்து வந்த அந்தப் பறவை
அது…. நீ.. !
நீ தானே அம்மா..!!
விடியலைச் சுமந்திருக்கும் இருட்டிலிருந்து
பூவின் இதழ்கள் விரிகின்றன.


Wednesday, September 19, 2018

ஸ்டாலின் வழங்கும் ஊழல் zandu balm

ஸ்டாலின் மீண்டும் மீண்டும் உடன்பிறப்புகளுக்கு
கொடுக்கும் தலைவலி தீர
இன்றே பயன்படுத்துங்கள்.. ஊழல் ZANDU BALM

தயாரிப்பு : செல்வ கணபதி , சுடுகாடு கொட்டகை அருகில்,
கலர் டிவிக்கு கடைக்கு எதிரில், சேலம். தமிழ் நாடு.

 


செய்தி:
ஊழலுக்கு எதிரான போராட்டம்.
ஊழல் அதிமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
செயல்தலைவர் தலைவரான பிறகு கலந்து கொள்ளும்
முதல் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில்
அதிமுக அரசில் அமைச்சராக இருந்தவர்..
கலர் டிவி வழங்கியதில் ஊழல் செய்தவர்
சுடுகாட்டு கொட்டகை வழக்கில் 2014ல்
குற்றவாளி என்று சிபிஐ தீர்ப்பளித்து அதனால்
தன் எம்.பி. பதவியை இழந்தவர்இப்படியாக
சில பல ஊழல்களின் தலைவராகவும்
குற்றவாளியாகவும் இருக்கும் செல்வகணபதி 
அவர்களை வலது பக்கம் நிறுத்திக்கொண்டு
என்னதான் நீங்கள் ஊழலுக்கு எதிரான கண்டன
ஆர்ப்பாட்டம் என்று சிம்ம கர்ஜனை போஸ் கொடுத்தாலும்
எவ்வளவு காமெடியாக இருக்கு பாருங்க 
தளபதி.. cum தலைவர்.
ப்ளீஸ்.. 
எனக்கு வர்ற தலைவலிக்கு 
இப்போவே அங்க வந்து..
எம் மண்டையை இரண்டா உடைச்சிக்கனும் 
போலிருக்கு.


Tuesday, September 18, 2018

சூர்யா@நட்புமண்டலம்.12
திடீரென ஒருநாள் என் அலைபேசியில் உன் முகம்
மின்னலடித்தது. 
என்னால் நம்ப முடியவில்லை. 
உன் குரல்..ஆண்டுகள் பலவாகியும் உன் குரல்
அதே அலைவரிசையில் என்னிடம்.
நலம் விசாரித்தாய்..
கணவர்  நலமா?
பிள்ளைகள் நலமா?
எப்போது ஊருக்கு வருகிறாய்..?
எனக்குத்தான் அன்று தொண்டைக்குழிக்குள் தீக்கங்குகள்.
நீண்ட இடைவெளியில் என்னை எரித்த தீயின்
மிச்சமாய் தீக்கங்குகள் அணையாமல்
எனக்குள்.. என்னை எரித்துக்கொண்டும் அணைத்துக்கொண்டும்.
அப்போதுதான் 

நீ தாத்தாவாகி விட்டதை என்னிடம் சொன்னாய்.
எப்போதுடா என்றேன்
இப்போதுதான்.. 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்..என்றாய்
வாழ்த்துக்கள் சொல்ல வாய் வரவில்லை.
எனக்குத் தெரியும்..
நீ என்னிடம் தான் முதன் முதலில் சொல்கின்றாய் என்று.
கண்களில் கண்ணீர் வழிந்தது.
எனக்குத் தெரியும் அதைச் சொல்லும் போது
உன் கண்களிலும் கண்ணீர் வடிந்தது என்று.
கண்ணீர் பலகீனத்தின் அடையாளம் என்று
பேசிய நாமிருவரும் கண்ணீர் விட்டோம்.
காற்று அதைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.


இளம்வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் 
உன்னைப் போல 50வயது தாண்டுவதற்கு
முன்பே தாத்தாவாகிவிடலாம்.
எல்லாத்திலும் நீ முன்வரிசையில் தான் டா.

உன் பேத்திக்கு பரணி என்று 
பெயர் வைத்திருப்பதாய் எழுதியிருந்தாய்.
என்னால் நம்ப முடியவில்லை.
என் பெயரை .. எனக்கு நீ வைத்திருந்த பெயரையே
 .. இன்று உன் வாரிசுக்கும்..
ஏன் டா பல சமயங்களில் நீ 
உன் சின்னச் சின்ன செயல்களிலும்
என்ன்னை ஆட்டிப் படைக்கின்றாய்.!!

எனக்குப் பரணி என்று பெயர் வைத்தாயே
அந்த நாள் நினைவிருக்கின்றதா?
ஒருநாள் ஜாதகம் சோதிடம் பற்றி என்னிடம் பேசினாய்.
அறிவியலும் மூட நம்பிக்கையும் சேர்ந்து பெற்ற 
முட்டாள் பிள்ளை தான் சோதிடம் என்றாய்.
நாள் நட்சத்திரங்கள் பார்த்து செய்வதைக் கேலி செய்தாய்.
உன் பிறந்த நட்சத்திரம் என்ன என்று கேட்டாய்?
"பரணி " என்றேன்.
பரணியில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்களாமே!
ஜோதிடம் சொல்கிறது தாயே
நீ எந்த தரணியை ஆளப் போகின்றாய் 
என்னைச் சீண்டி விட்டாய்.
கேலி செய்தாய்.
அன்றுமுதல் நான் அழுமூஞ்சியாக
உன்னிடம் வரும்போதெல்லாம்
பரணியில் பிறந்தவள் நீ
அழலாமோ
தரணியை ஆளப்பிறந்தவர்கள் அழலாமோ
என்று கிண்டல் செய்வாய்..

நீயா 
இன்று உன் வாரிசுக்கு பரணி என்று பெயர் வைத்திருக்கிறாய்!!!


உன் பரணி..
உன் நெஞ்சில் தன் பட்டுக் கால்களை வைத்து 
மிதிக்கின்றாளா?
உன் மூக்கு கண்ணாடியைக் கழட்டி வீசி 
உன் கண்விழிகளில் என்னைப் பார்க்கின்றாளா?
உன் சட்டைப் பைக்குள் கையை விட்டு  
தேடுகின்றாளா?
உன் மடியில் படுத்து தேவதைகள் பூ காட்ட 
தூக்கத்தில் சிரிக்கின்றாளா?
உன் தடி தடியான புத்தகத்தை கிழிக்கின்றாளா?
உன் தோள்களில் தொட்டில் கட்டி 
தூங்கிக் கொண்டிருக்கின்றாளா?
உன் படுக்கையை ஈரமாக்கி உன்னை எழுப்பியவள்
உன் மார்பின் கதகதப்பில்
தன்னை மறந்து
இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றாளா?
அவளைத் தூங்கவிடு.
எழுப்பி விடாதே.
அவள் உன் பரணி..

பரணிக்கு நம் வண்ணத்துப் பூச்சிக்களைக் காட்டு.
அவளுக்கு நம் வண்டிப் பாதைகளைக் காட்டு.
நாம் நீச்சலடித்த கிணறுகளைக் காட்டு.
நாம் ஏறிய வேப்ப மரங்களைக் காட்டு.
நம் நட்பின் அடையாளமாய் 
உன் வீட்டுக் கொல்லையில் நாம் நட்ட
கொய்யாமரங்களைக் காட்டு.

அந்தக் கொய்யாமரங்கள் வளர்ந்திருக்குமே?
அந்தப் பழங்களை நான் சாப்பிடும் நாள் வருமோ
 என்னவோ
உன் பரணிக்கு அந்த கொய்யாப்பழங்களைக் 
கொடுப்பாய் தானே.

கொய்யா மரத்தில் காய்ப்பது 
கொய்யாப் பழங்கள்தான்.
ஆனால்-
உன்கொல்லையில் மட்டும்
எனக்குத் தெரியும்
நெல்லிக்கனிகள் காய்த்திருக்கும் என்று.
நம் கொய்யா மரத்தில் காய்த்த
நெல்லிக்கனிகள்
நம் நட்பின் அடையாளம்

உன் பரணியிடம்
எல்லாம் சொல்வாய்தானே
குழந்தை உள்ளம் கள்ளம் கபடு அறியாதது..
சந்தேகம், பொறாமை அதற்கில்லை.
இந்த--
மனுச உலகின்
புழுதிக்காற்று
அவள் மேனியில் படும் முன்பே
உன் பரணியிடம்
எல்லாம் சொல்லிவிடு

சொல்வாய் தானே..

அவளை நீ பரணி என்று அழைக்கும் 
ஒவ்வொரு அழைப்பிலும்
என் கண்களைத் தானே தேடுகின்றாய்.
சொல்.
அவள் கைப்பிடித்து நடக்கும்போது
என் வாசனையைத் தானே நாடுகின்றாய்
சொல்
அவளிடம் நீ உன் பரணியைத் தானே 
தேடிக்கொண்டிருக்கின்றாய்.
சொல்.
பெயரில் என்ன இருக்கின்றது?
என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்.
பரணி என்ற பெயரில்
ஒரு எழுதாதக் காவியம் எழுதப்பட்டதை
அதன் உச்சரிப்பில்
நாம் மகிழ்வதை
நம் உணர்வுகள் நடனமிடுவதை
உணர்கின்றென்.
இனி வெறும் பெயரில் என்ன இருக்கின்றது
என்று எண்ணவே மாட்டேன்.
பெயரில் என்னவெல்லாமொ இருக்கும்
இருக்கிறது.. 


இதை நான் புரிந்துகொள்ளக் கூட
நீ தான் ஆசான் ஆனாய்.
என் பிள்ளைக்கு மறைந்த தன் கணவரின் பெயரைத்தான் 
வைக்க வேண்டும் என்று என் மாமியார் விரும்பியபோது
எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?
பத்துமாதம் சுமந்து பெற்றவளுக்கு 
தன் பிள்ளைக்கு தன் விருப்பப்படி
பெயர் வைக்க கூட உரிமையில்லையா? என்றெல்லாம்
 ஒரு போராட்டம் அல்லவா
நடத்தி இருக்கின்றேன்.
உன் பரணி வந்துதான் எனக்கு ..
என் முட்டாள்தனத்தை உணர்த்தியிருக்கின்றாள்.
எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக , 
மேம்போக்கான அர்த்தமில்லாத போராட்டங்களை
உரிமைக்குரல் என்று எண்ணி 
காலத்தை வீணடித்திருக்கின்றேன்.

உறவுகளைக் காயப் படுத்தி இருக்கின்றேன்.

சூர்யா..
நெருப்பில் எரிந்துப் போகாத சிறகுகளுடன்
என்னை வானத்தில் பறக்கவிட்டது
உன் குணதிசையின் வெளிச்சம் தான்


என்னை என் கால்களை
மண்ணில் பதியவைத்து
அதன் புழுதிகளை,அழுக்கை, சூட்டை
உணரவைத்தது
உன் குடதிசையின் மலைகள் தான்.
சூர்யா..
வடக்கும் தெற்குமாய் அலைந்துவிட்டோம்.
களைத்துப் போய்
கண்துஞ்சும் முன்னே
சேர்த்து பயணிப்போம் வா..
ஒன்பாதாவது திசையில்
சூரியன் அஸ்தமிப்பதே இல்லையாம்.