Friday, April 13, 2018

சாதிகளின் தேசம் இது

Image result for அம்பேத்கர்
இந்திய தேசம் சாதிகளின் தேசம்.
இந்திய தேசத்தின் மொழிகள் கலாச்சாரங்கள் பண்பாடுகள்
இவற்றில் வேற்றுமை இருக்கலாம்.
ஆனால் சாதியம் என்ற நூலிழை தான்
இந்திய தேசத்தை இன்றுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
சாதி ஒழிப்புக்காக போராடிய பவுத்தம் இந்திய
மண்ணிலிருந்து விரட்டப்பட்டது.சாதி ஒழிப்புக்காக
குரல் கொடுத்த நாராயண குரு எரிக்கப்பட்டார்.
மகாத்மா புலே இயக்கம் கடந்தகாலமாகிவிட்டது.
இந்தியாவை ஆண்ட பிறமதங்களால் சாதியை ஒழிக்க முடியைவில்லை. இசுலாமிய பேரரசுகளின் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியும் இந்திய சாதிய படிநிலையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல,
தங்கள் உட்கட்டமைப்பையும் இந்திய சாதியத்திற்கு
ஏற்ப மாற்றிக்கொண்டன.
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும்
சாதி ஒழிப்பு திட்டமோ ஏன் காகிதத்தில் எழுதப்பட்ட
அறிக்கையோ கூட கிடையாது. அப்படியே ஒரு திட்டம்
பேசப்பட்டால் கூட அக்கட்சிக்கு தோல்வி நிச்சயம்.
இதுதான் இந்தியா.
இந்திய தேசம் சாதிகளின் தேசம்.
சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்துவதற்கு சாதி மேம்பாடு
என்ற பாதை தெரிவு செய்யப்படுகிறது.
ஆண்ட பரம்பரை புராணங்கள் எழுதப்படுகின்றன.
இப்புராணங்களை எதிர்ப்பதும் வலுவிழக்கச் செய்வதும் மிகவும் எளிது. !!
இந்திய அரசியலமைப்பில் வேண்டுமானால் தீண்டாமை குற்றமாக எழுதப்பட்டிருக்கலாம்.
ஆனால் அக்குற்றவாளிகளே
இந்திய தேசத்தை இன்றுவரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..
இந்திய தேசம் சாதிகளின் தேசம்.
இத்தேசத்தில் சாதி ஒழிப்புக்கும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதைக்கும் அம்பேத்காரின் அறிவாயுதமே போராயுதம்.
போர் முறைகளை மாற்றுவதும்
கூர்மைப்படுத்துவதும் இன்றைய தேவை.

Tuesday, April 3, 2018

இந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.

திராவிட அரசியல் கட்சிகளை நடுவண் அரசின்
கூட்டணியில் இருந்தும் காவிரி பிரச்சனைக்கு உதவவில்லை.
ஏன் காங்கிரசின் பெருந்தலைவர் காமராசர் காலத்திலும்
இந்திய பெரும்பரப்பின் பிம்பம் தமிழகத்தை
தனக்குள் மறைத்தது.
திமுக மற்றும் அதிமுக இந்த இரு கட்சிகளும்
மாறி மாறி தமிழகத்தின் ஆளும்கட்சியாக இருந்தது
மட்டுமல்ல, நடுவண் அரசின் கூட்டணியிலும்
இருந்தவர்கள். காவிரி பிரச்சனையில் காங்கிரசு,
பிஜேபி கட்சிகளை மட்டுமே இவர்கள் குற்றம்
சொல்ல முடியாது என்பது தான் காவிரி பிரச்சனையின்
மையம். (மய்யம் அல்ல!)
திராவிட அரசியல் கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும்
நடுவண் அரசின் அடிமைகளாக நடுவண் அரசின் ஆட்சி அதிகாரப்
பங்கீட்டின் பங்குதாரர்களாக மாறியதும் அதனால் அவர்கள்
அரசியல் என்ற ஒரே ஒரு வியாபாரச்சந்தையின் கொள்முதல்
வியாபாரிகளாகி எந்த ஒரு தொழிலும் செய்யாமல் இந்தியாவின்
பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்தார்கள்.
எனினும் திராவிட அரசியலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு
எதிராகவே நிறுத்துகிறது வடக்கின் ஊடகங்களும்
 சிந்தனையாளர்கள் வட்டமும் என்பது இன்றும்
 நாம் ரசனைக்குரிய முரண்!

தமிழகத்தின் சாபக்கேடு இந்திய ஒருமைப்பாட்டுக்கு
அதிகமான விலையைக் கொடுத்ததும் தமிழகம்தான்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தை ஆண்ட காங்கிரசு
கட்சியும் அன்றைய தமிழக முதல்வராக இருந்த
பெருந்தலைவ ர் காமராசரும் கூட விதிவிலக்கல்ல.
 .
பசல் அலி கமிஷனின் ஆணைப்படி
தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரையும்
 கேரளத்துக்கு விட்டுத் தரப்பட்டிருந்தன.
 ஆனால் இங்கேயும் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்தார்கள்.
 முக்கியமாக மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர்
 நஞ்சைநிலங்களுக்குப்  பாசன வசதிகயைத் தருகின்ற
 முல்லை- பெரியாறு நீர் தேக்கத்தையும் கேரளத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது.
 இவைகளைக் கண்டு நேசமணி அதிர்ச்சியடைந்தார்
பாராளுமன்றத்தில் இந்த மசோதாவின் மீது விவாதம் நடக்கும் போது
விடுபட்டுப் போன இந்தத் தமிழ் பிரதேசங்களை
 தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று மூன்று நாட்கள்
வாதாடினார் நேசமணி.
வரலாறுகளை முன் நிறுத்தியும்,
பொருளாதாரத்தை சுட்டிக்காட்டியும், மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டியும்,  தாய் மொழியின் அடிப்படையிலும்
நேசமணி தன்னந்தனியாக நின்று வாதாடினார்.
இவருக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பாராளுமன்றத்தில் அன்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த உறுப்பினரும்
 முன் வரவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.கள் அங்கே இருந்தனர். என்ன பலன்? இத்தனைக்கும்
தமிழக முதல்வராக இருந்த காமராசர் அன்றைய பாரதப்பிரதமர் ஜனஹர்லால் நேருவின் நம்பிக்கைக்குரியவர்.
செல்வாக்குமிக்கவர். ஆனால்..?
தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க நடந்தப் போராட்டதில் காமராசர் என்ன சொன்னார் என்பதை
நினைவூட்டுகிறேன். "குளம், மேடு எங்களுக்கு வேணும்னு எதுக்குப் போராட்டம் பண்ணனும்? எல்லாம் நம்ம இந்தியாவிலே தானே
இருக்கு"  என்றார்.
உண்மைதான். தமிழகமும் இந்தியாவில் தான் இருக்கிறது,
இருந்தாக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை
அவர் ஏன் தவிர்த்தார்?

இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொல்லி
 போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அப்படியே மேலாண்மை வாரியமோ அல்லது உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கும் ஸ்கீம் வந்தாலோ
அப்போது மட்டும் தமிழகத்திற்கு முறையாக
கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம்
கட்டாயம்  கொடுக்கும் , கொடுத்தே ஆகவேண்டும்
 என்று உறுதியாக சொல்ல முடியுமா?
அப்படி ஓர் உறுதியை உச்சநீதி மன்றமோ
 நடுவண் அரசோ கொடுக்குமா?
கடந்த கால நிகழ்வுகளும்
 கர்நாடக அரசின் செயல்பாடுகளும்
அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கிறதா,,?!