Monday, April 27, 2020

அணில் காதல்

அணில் காதல்


அணில்கள் சண்டை இடுகின்றன.
கலவிக்கான யுத்தம் இது.
மூர்க்கத்துடன் ஆண் இருவர்
மோதிக்கொள்ளும் சப்தம்
தோட்டத்தை தாண்டி
வெளியில் பரவுகிறது.
கதவுகளைத் திறந்து எட்டிப் பார்க்கிறேன்.
கிணற்று ஓரம் பதுங்கி இருக்கும்
அவள் பார்வையில் இருந்து
நடுக்கமும் பயமும் துண்டு துண்டாய் கிணற்றுக்குள் விழுகிறது.
இது நிச்சயமாக அவள்தான்.
வலியவனைப் புணர்வது
அவர்கள் தேசத்தின் நியதி தானே..
பின் ஏன் இந்த அச்சம்?
தோற்றுக் கொண்டு இருப்பவன்
அவள் காதலனாக இருப்பானோ?
அவனை இழக்கப் போகும் சோகமோ
காதலின் மரண வலியோ
கதவுகளைச் சாத்தி பூட்டிக் கொள்கிறேன்.
என்ன நடந்திருக்கும்?
மறுநாள் அணில்கள் ஒன்றே ஒன்று
விரட்டிக்கொண்டு துள்ளி விளையாடுகின்றன.
மாதுளம்பழத்தை துளைத்து எடுத்து துவம்சம் செய்திருக்கும் அணில்களை விரட்டுவதற்காக விரைகிறேன்.
இணைகளின் குதியாட்டத்தில்
முருங்கைப் பூக்கள் உதிர்கின்றன.
ஏக்கத்துடன் அவளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
அடுத்த பிறவியிலேனும்
அணிலாக பிறக்க வேண்டும்.

Saturday, April 25, 2020

தாராவியும் கொரொனாவும்

ட்டேய்....திருந்துங்கடா...

தாராவியில் கொரொனாக்கொரொனா..
இந்தச் செய்தியை மிகுந்த பதட்டத்துடன் எனக்கு யாரும் forward செய்யாதீர்கள்...

நீங்கள் சொல்கின்ற கடைப் பிடிக்கின்ற
தனிமனித இடைவெளியை 18x10 அளவுள்ள தீப்பெட்டி சைஸில் இருக்கும் குடிசையில் வாழும் 5 முதல் எட்டு பேர் கொண்ட குடும்பம் கடைப்பிடிப்பது எப்படி?

காலம் காலமாக மும்பை பெருநகரின் மையப்பகுதியில் இருக்கும் தாராவியின் redevelopment scheme என்று சொல்லிக்கொண்டு மீண்டும் அதே மாதிரி புறாக்கூண்டு வீடு தான் தாராவி மக்களுக்கு கட்டித் தருவேன் என்று திட்டமிடும் உங்கள் வளர்ச்சித் திட்டங்களை வைத்துக்கொண்டு தாராவியில் கொரொனா என்று
அலரா தீர்கள்.

1440 பேருக்கு ஒரு கழிவறை வசதி தான் இருக்கிறது என்று 10 வருடத்திற்கு முன்பே எழுதியது நீங்கள் வாசிக்கும்TOI.
பாசஞ்சர் ட்ரெய்னில் கூட இதைவிட அதிக வசதிகள் இருக்கிறது. நீங்கள் கொண்டுவந்த ஸ்வச் பாரத் தாராவியில் ஒரு மயிரையும் சிரைக்கலையே!
பிறகு எதுக்குடா இப்ப இந்த அலறல்!

தாராவியில் எந்த ஒரு பகுதியிலும் கழிவுநீர் கலக்காத குடிதண்ணீருக்கான
வசதி இருக்கிறதா? எவ்வளவு போராடி இருக்கிறோம்? கெஞ்சி இருக்கிறோம்!
எங்கள் குரல் அப்போதெல்லாம் உங்கள் காதில் விழுந்த இருக்கிறதா?
இப்போது இப்போது என்ன முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள்!

இந்திய வணிக பெருநகரத்தின் தலைநகரமான மும்பையின் மையப்பகுதியில் இருக்கும் எங்கள் குடிசைகளில் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படாத வரை உங்கள் பொருளாதார வளர்ச்சி என்பது சீழ்ப் பிடித்து வடியும் சிரங்கு.. இப்போது தான்
சொரிய ஆரம்பித்திருக்கிறீர்கள்.! சாயம் பூசிய உங்கள் நகங்களில் இருந்து உதிரும் செதில்களுக்கு யார் பொறுப்பு?
இனியாவது புரிந்து கொள்வீர்களா?
மும்பை பெரு நகரம் என்பது நாங்களும்தான், தாராவியும்தான் என்பதை,.

**
இன்னொரு முக்கியமான வேண்டுகோள்... அம்மணிகளே.. தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்வதெல்லாம் புதுசு புதுசா கொண்டாடி உங்களைத் தெய்வீக பெண்மணிகள் ஆக காட்டிக் கொள்ளாதீர்கள்! வயிறு பற்றி எரிகிறது..
ப்ளீஸ் அவர்களுக்கு முடிந்தால் தாகத்திற்கு ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுங்கள் அது போதும்.. சக மனுஷியாக அவர்களை மதிக்க தெரியாத உங்களிடமிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை!...

ட்டேய்... சரவணா..
நீங்கள் சொல்லுகிற social distance தூய்மைப் பணியாளர் களுக்கு கிடையாது.. அப்படித்தானே. புண்ணியவான்களே ....
குப்பை அள்ளும் காரணத்தால் அவர்களுக்கு குப்பைகளை ஏற்றிச்செல்லும் லாரியில் உணவுகளை எடுத்து வரலாம் என்ற உங்கள் செயல்
உங்கள் பொய் முகத்தைக் கிழிக்கிறது..
ட்டேய்... திருந்துங்கடா...

Sunday, April 19, 2020

அவன்


(Thanks to Sri N Srivastava)
Introspection and soul-searching lead to self discovery. Who am I? Where am I heading? What am I doing? Is it what I truly want? What is real and what is true? I don't seem to know anything, do you? Perhaps this poem in Tamil by Puthiyamaadhavi Sankaran reproduced here with prior permission from the poet together with an English translation by moi holds a clue:

அவன் அவன் தானா
அவன் என்பது பிரம்மை
அவன் என்பது கனவு
அவன் என்பது புனைவு
அவன் என்பது பொய்

அசத்தியங்களின் மூழ்கிப்போன வனை நீந்தி எடுத்து கரை சேர்க்கும் போது காதல் ஜீவ சமாதி செய்துகொண்டது.

அவன் ......அவன் அல்ல!
அவன் அவனைத் தொலைத்து தொலைதூரம் பயணித்து விட்டான்.
அவனிடம் அவனைத் தேடித் தேடி
களைத்துப்போய் அலுத்துக் கொள்கிறது காலம்.
எப்போதாவது
அவனின் இருள் கிழித்து
வரும் மின்னலாய்
அந்த அவன் வருவானா!
காத்திருக்கின்றன
தரிசு நிலத்தில் விழுந்த
கவிதை விதைகள்
இடி மின்னலுடன் வரப்போகும்
கடைசி மழைக்காக.....

#புதியமாதவி_சங்கரன்

Is he him only?
He is an illusion.
He is a dream.
He is imaginary.
He is a lie.

Love buried itself alive
while swimming to retrieve
and bring ashore
the one who got
drowned in untruths.

He.......is not him.
He has lost him
and journeyed a long way past.
Searching repeatedly
for him in him,
Time is tired and bored.
Like lightning
rending through his darkness,
will that him ever come!
Seeds of poetry
that fell on barren land
await the last rains
to come alongwith
lightning and thunder.

~Sri 1520 :: 19042020 :: Noida 

Saturday, April 18, 2020

ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய


தமிழ் மெய்யியல் குறியீடு ஓம் நமசிவாய.
அறிவு சார்ந்த தமிழ்ச் சமூகத்தின் குறியீடு ஓம் நமசிவாய.
கலாச்சார போர்க்களத்தில் தமிழன் ஏந்திய போராயுதம் ஓம் நமச்சிவாய.
பெண்ணை க் காலடியில் அமர்த்திய சமூகத்திற்கு எதிராக தமிழ்ச் சமூகம் ஏந்திய போர்க்கொடி ஓம் நமசிவாய.
பெண்ணை அலங்காரம் பொம்மையாக்கி அந்தப்புரத்தில் வைத்த சமூகத்திற்கு பாடம் புகட்ட அதே பெண்ணைப் போர்க்களம் அனுப்பி பரணி பாடிய பண்பாட்டின் அடையாளம் ஓம் நமச்சிவாய.
பெண்ணை சக மனுஷியாக மதித்து கொண்டாடிய நம் சமூகத்தின் குறியீடு ஓம் நமசிவாய.
ஆண்மைய சமூகத்தில் பெண்ணை நுகர் பொருளாக மட்டுமே வைத்திருக்கும் கலாச்சாரத்தைக் கட்டுடைக்கும் குறியீடு ஓம் நமசிவாய.
பெண் என்றால் மென்மை என்ற பொய் முகத்தை தூக்கி வீசிய நம் பழையோளின்
குறியீடு ஓம் நமசிவாய.
மருதம் திரிந்த பாலையில் தாகம் தணிக்கும் ஈரத்தின் குறியீடு ஓம் நமசிவாய.
அவன் கழுத்தில் ஆபரணமாய் ஆடுகிறது
பாம்பு. அவன் இடையில் நெளிகிறது பாம்பு. அவன் காலடியில் சுருண்டு படுத்திருக்கிறது அதே பாம்பு.
பெண்ணை பெண்ணுடலை பெண்ணின் காமத்தை பெண்ணின் நுண்ணிய உணர்வுகளைப் புறக்கணிக்காத ஆண்மையின் குறியீடு ஓம் நமசிவாய.
பெரியாருக்கு முன் வாழ்ந்தப் பெரியாரின் அடையாளம்ஓம் நமசிவாய
இவை அனைத்தும் ஒன்றாகி என்னை என் நனவிலி மனதில் மரபின் எச்சமாய் யுகம் யுகமாக கடத்தப்பட்டு இருக்கும் என் ஆதி சமூகத்தின் குறியீடு ஓம் நமச்சிவாய

****

அவள் பிரபஞ்சம். மற்றவையெல்லாம் இந்த பிரபஞ்சத்தைச் சுற்றிவரும் தூசிகள் அவளே சக்தி அவளே இயக்கம் அவள் என்ற பால்வீதியின் மந்திரச் சொல்லாய் ஓம் நமசிவாய.

அவள் எப்போதும் அவளாக மட்டுமே இருப்பதில்லை. அவளுக்குள் பிரபஞ்சத்தின் கோடானக் கோடி அவள்களும் குடியிருக்கிறார்கள். அந்த அவள்களின் குரலாய் அவளே இருக்கிறாள்.

பேய் உருக்கொண்டு அலைந்த புனிதவதியின் ஏக்கமும் கோபமும் அவளிடம் உண்டு.
புனிதவதியாய் அவள் செய்த குற்றம் என்ன? அறிவு சார்ந்த புனிதவதியை அவன் கண்டு ஏன் அச்சப்பட்டான்?
நீயும் உன்னிடம் வந்தவளை 'அம்மையே' என்றழைத்து ஏன் ஒதுக்கி வைத்தாய்?
'சகியே 'என்று அவளை அழைக்காமல் எது தடுத்தது? தோழி என்றழைத்து துணை வந்திருக்கலாமே?! ஹே அர்த்தநாரீஸ்வரா.. பேய் உருக்கொண்டு அவளை அலைய விட்டது ஏன்?
ஓம் நமசிவாய ...கதறுகிறேன்...
துடிக்கிறேன்.. உன் முகமூடியைக் கிழிக்கிறேன்! ஆத்திரம் தீருமட்டும்
கொற்றவை யாய் நானும் அலைகிறேன்!

மேகங்களில் நீ மறைந்து இருக்கும் போது நான் லல்லா வாகி உன்னை கைநீட்டி அழைக்கிறேன்.
அரண்மனையை சொகுசு வாழ்க்கையை விட்டு வெளியேறி பொதுவெளியில் கலக்கும்போது அக்கா மகாதேவி யாகி விடுகிறேன். பிச்சியாகி
அலையும் போதெல்லாம் என் நிர்வாண மறைக்கும் ஆடையாய் தத்துவமாய் ஓம் நமசிவாய..
பிரபஞ்சத்தில் இயங்கு சக்தியாய் எனக்கு முளைக்கும் சிறகுகள் ஓம் நமசிவாய..
ஒளி குறைந்த இருளும் ஓம் நமசிவாய
சுட்டு எரிக்கும் வெயிலும் ஓம் நமசிவாய.
புரிந்தது புரியாதது
அறிந்தது அறியாதது
ஓம் நமசிவாய.
ஐந்திணையும் ஓம் நமசிவாய
பெருந்திணை யாய் இருப்பதுவும் ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய


உன் நெற்றிக்கண்ணாக இருப்பதும் நான் தானே.. ஓம் நமசிவாய..
உன் சிவகாமியை
உன் கங்கையை
இந்த தாமிரபரணியிடம் தேடித்தேடி தோற்றுப் போகாதே! ஓம் நமசிவாய.

பஃ றுளியின் மகள் நான் என்பதையும் மறந்துவிடாதே ஓம் நமசிவாய..

ஓம் ஓம் ஓம்
ஓம் நமசிவாயFriday, April 17, 2020

பிறவிக்கடல்

கைகளையும் கால்களையும் கட்டியது
யாருமல்ல நானே தான்.
 எதிர்நீச்சலிட விருப்பமில்லை.
திமிரும் உடலை அழுத்தி அழுத்தி மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்.
ஏழு கடல்களையும் தாண்டுவதற்குள்
காற்றின் சுவாசம் அடங்கிப் போகிறது .

அவன் ஸ்பரிசம் அறியாத உடல்
உப்பு நீரில் வானம் பார்த்து மிதக்கிறது.
மீன்கள்கண்களைக் கொத்துகின்றன தொடைகளுக்கு நடுவில் ஊர்ந்து சென்ற பாம்புகள்
அடிவயிற்றில் இருந்து தவளையைக் கவ்விப்பிடித்து பசியாறுகின்றன.
 திமிங்கலம்விலகிச் செல்கிறது.
குஞ்சுகளுடன் நீந்தி வந்த சுறாக்கள்
 கண்ணீர் விடுகின்றன.
கடல்குதிரை மீதேறி வரப்போவதில்லை ராஜகுமாரன்.
அவன் தின்னாத முத்தங்களை
கடலின் அலைகள் தின்னுமோ ?
 பசியாறுமோ !
அமுதமே விஷமாக நிசப்தம் ஆகிறது
பாற்கடல்

Tuesday, April 14, 2020

பாம்பின் விளையாட்டு

பாம்புகள் ஊர்ந்து சென்ற பாதையில்
விடியலில் என் பாதங்கள் பதிய நடக்கிறேன்.
பாம்பு உரித்துப் போட்ட ஆடைகளை போர்த்திக்கொள்கிறேன்.
உடல் நெளிகிறது.
புதருக்குள் ஓடி ஒளிந்து விளையாடுவது
புதிய அனுபவமாய்...
புத்துணர்ச்சி தருகிறது.
குதித்து ஓடும் தவளைகளைப்
பிடிப்பதும் விடுவதும்
தவளைகள் மரண பயத்தில்
துள்ளி ஓடுவதை ரசிப்பதும்
விநோதமான விளையாட்டாகிவிடுகிறது.
வீட்டு நினைவில் வாசலில் நுழைகிறேன்.
"பாம்பு பாம்பு விடாதே..ஒரெ போடா
மண்டையில போடு.."
தடியும் காம்புமாய் தாக்க வருகிறார்கள்.
சர்ரென்று வெளியில் வந்து
உரக்குழியில் மண்டிக்கிடக்கும்
குப்பைச் செடிகளுக்குள் முகம் புதைக்கிறேன்.
பாம்பின் ஆடைகளைக் கழட்டி வீசிவிடவா..வேண்டாம்.
பாம்பு என்றால் படையும் நடுங்குமாமே..
அவன் நடுங்க மாட்டானா!
அவன் தனித்திருக்கும் போதெல்லாம்
அவனருகில் செல்கிறேன்.
நடனமாடுகிறேன்.
என்னைக் கண்டவுடன் அலறிக் கொண்டு
தலைத் தெறிக்க ஓடுகிறான்.
ரசனையான விளையாட்டு..
பாம்புகளின் உலகத்தில்
ஏமாற்றங்கள் இல்லை
நிராகரிப்புகள் இல்லை
துரோகங்கள் இல்லை.
பயமில்லாமல் பயணிக்கிறேன்.

ஓம் நமசிவாய...

Monday, April 13, 2020

அம்பேத்கரின் வாழ்வில் மனைவி ரமாபாய்

அறிவாயுதம் ஏந்திய அண்ணலின்
வாழ்க்கையில் அவர் மனைவி ரமாபாயின் பங்களிப்பு என்ன?   ..இக்கடிதம் அதற்கான பதில் சொல்கிறது..
....

ரமா, நீ எப்படியிருக்கிறாய் ரமா.

இன்று முழுக்க உன்னையும், யஷ்வந்தையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உன்னைப்பற்றி எண்ணுகையில் உருக்குலைந்து போகிறேன். சமீப காலங்களில் என்னுடைய உரைகள் பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. வட்ட மேசை மாநாட்டில் நான் நிகழ்த்திய உரைகள் நன்றாகவும், ஊக்கமூட்டுவதாகவும் இருந்ததாகச் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. அதற்கு முன்னால், இந்த மாநாட்டில் என்னுடைய பங்கு என்ன எனப் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன். நம் நாட்டின் ஒடுக்கப்பட்ட குடிமக்களின் முகங்கள் கண்முன் நின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் வலியிலும், துயரத்திலும் உழன்று அல்லல்படுகிறார்கள். தங்களுடைய துயரங்களுக்கு முடிவோ, விடிவோ இல்லையென்று நம்புகிறார்கள். நான் அதிர்ந்து போனேன் என்றாலும், இந்தத் தீமைக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருக்கிறேன். பெரும் அறிவுறுதியை பெற்றவனாக உணர்கிறேன். என்னுடைய மனதில் பல சிந்தனைகள் நிழலாடுகின்றன. இதயம் பல வகையான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது.

நான் நம் வீட்டையும், உங்கள் எல்லாரையும் காணத்துடிக்கிறேன். உன்னை எண்ணி பிரிவுழல்கிறேன். யஷ்வந்தின் நினைவு வாட்டியெடுக்கிறது. என்னை வழியனுப்ப கப்பல் வரை வந்தாய். உன்னை வரவேண்டாம் என நான் சொல்லியும், எனக்குப் பிரியாவிடை கொடுக்க ஓடோடி வந்தாய். சுற்றியிருந்த மக்கள் என்னை ஆரவாரத்தோடு வழியனுப்பி வைப்பதை கண்கூடாகப் பார்த்தாய். நீ நன்றியுணர்வால் நிறைக்கப்பட்டவளாக, உணர்ச்சிவயப்பட்டவளாகக் காட்சியளித்தாய். உன்னுடைய உணர்வுகளைச் சொற்களைக்கொண்டு வெளிப்படுத்த இயலாமல் நின்றாய். நீ பேச நினைத்ததை எல்லாம் உன் விழிகள் தெரியப்படுத்திவிட்டன. நீ உதிர்க்கும் சொற்களைவிட உன்னுடைய மௌனம் பலவற்றைப் பேசியது. உன் நாவினில் சொற்கள் பூத்தன,எனினும், உன் விழித்துளிகளே அச்சொற்களின் முழுப்பொருளாகும். அந்தக் கண்ணீர்த்துளிகள் வாய்மொழி வெளிப்படுத்த இயலாதவற்றையெல்லாம் பேசின.

லண்டனின் காலை வேளையில் இந்த எண்ணங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது, அழுதுத்தீர்த்து விட வேண்டும் என்றிருக்கிறது. நான் கிடந்து தவிக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய் ரமா? நம் யஷ்வந்த் நலமா? அவன் அப்பா எங்கே என்று கேட்கிறானா? அவனுடைய மூட்டுவலி மட்டுப்பட்டிருக்கிறதா? நம்முடைய நான்கு குழந்தைகளை இழந்து நிற்கிறோம். யஷ்வந்த் மட்டுமே நமக்காக உயிர்த்திருக்கிறான். அவனே உன் தாய்மையின் முகம். அவனை நாம் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக்கொள் ரமா. யஷ்வந்திற்கு நிறையக் கற்பி. இரவு அவனை எழுப்பிப் படிக்க வை. என் தந்தை என்னை இரவில் எழுப்பிப் படிக்க வைப்பார். என்னைத் தவறாமல் எழுப்ப வேண்டுமென்பதற்காக அவர் தூக்கந்தொலைந்து விழித்திருப்பார். அவர்தான் எனக்கு இந்த ஒழுக்கத்தைப் பயிற்றுவித்தார். நான் படிக்க எழுந்ததும் அவர் உறங்கப்போய் விடுவார். இரவு போயும் போயும் எழ வேண்டுமா என எனக்கு ஆரம்பத்தில் சோம்பேறித்தனமாக இருக்கும். படிப்பதைவிடத் தூங்குவதே சுகமானது இல்லையா. ஆனால், இப்போது திரும்பிப்பார்க்கையில், உறக்கத்தை விடவும் கல்வியே வாழ்க்கைக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது. இதற்கான பெரும்பாலான பாராட்டுகள் என் தந்தையைச் சேர வேண்டும். நான் படிப்பில் ஆர்வமிக்கவனாக இருக்க வேண்டும் என்பதற்காக என் தந்தை எண்ணற்ற தியாகங்கள் புரிந்தார். என் வாழ்வில் விடியல் மலர்வதற்காக அவர் அல்லும், பகலும் ஓயாமல் உழைத்தார். அவரின் உழைப்பின் கனிகள் தற்போது காய்த்துக்குலுங்குவதைக் காண்கிறேன். இன்று அதைக்குறித்து நான் பேருவகைக் கொள்கிறேன் ரமா.

ரமா, அதற்கு இணையாக யஷ்வந்தும் கல்வியில் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். அவன் உள்ளம் புத்தகங்கள் மீது தீராத் தாகத்தைக் கொண்டிருக்குமாறு தூண்டிவிட வேண்டும். ரமா, பணம், ஆடம்பரம் ஆகியவற்றால் பயனொன்றுமில்லை. உன்னைச்சுற்றி அவற்றைக் கட்டாயம் கண்ணுற்றுக் கொண்டே இருப்பாய். இத்தகைய சுகங்களை நாடி மக்கள் ஓயாமல் அலைகிறார்கள். இந்த ஒற்றை இலக்கில் மட்டுமே இம்மக்களின் வாழ்க்கை தேங்கி விடுகிறது. அவர்கள் வேறு எந்த முன்னேற்றம், வளர்ச்சியையும் நாடுவதில்லை. இத்தகைய வாழ்க்கையில் நாம் திருப்தியடைந்து விடக்கூடாது ரமா. நம்மைச்சுற்றி வேதனையைத் தவிர வேறொன்றுமில்லை. வறுமை மட்டுமே நம்முடைய துணைவனாக இருக்கிறது. பிரச்சினைகள் நம்மைவிட்டு விலகுவதேயில்லை. அவமானம், வஞ்சிப்பு, ஏளனம் நம் நிழலைப்போலப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நம்மை இருட்டும், துயரக்கடலும் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன

நாமே நம்முடைய மீட்பர்களாக இருக்க வேண்டும். நாமே நமக்கு வழிகாட்டியாக மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுத்த பாதையில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த வெற்றி நோக்கிய பாதையில் நாமே நடை போடுவோம். சமூகத்தில் நமக்கென்று இடம் எதுவுமில்லை. நமக்கான இடத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். நம் நிலைமை இப்படியிருப்பதால், யஷ்வந்த்துக்கு உயர்ந்த கல்வியை நீ வழங்க வேண்டுமென விரும்புகிறேன். அவன் முறையாக ஆடையணிவதை உறுதிசெய்வதோடு, சமூகத்தில் பண்புநலன்களோடு பழகவும் பயிற்றுவிக்கவும். நீ அவன் மூளையில் லட்சியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால்,நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது. அறிவைத் தேடியடைய வேண்டும் எனும் என்னுடைய சபதம்.

வேறு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அறிவுத்தேடலில் என்னை மூழ்கடித்துக்கொண்டு விட்டேன். என்னைத்தாங்கும் வலிமைமிக்கத் தூணாக நீயே இருக்கிறாய். என்னுடைய உலகத்தைக் கவனித்துக்கொள்கிறாய். உன் கண்ணீரைக்கொண்டு என் மனவுறுதியை வளர்த்தெடுக்கிறாய். இதனால்தான் எல்லையற்ற அறிவுப்பெருங்கடலில் எந்தத் தடையுமின்றி நான் ஊறித்திளைக்க முடிகிறது. நான் சத்தியமாகக் கொடுமைக்காரன் இல்லை ரமா. என் அறிவு வேட்கையைச் சளைக்காத தேடலின் மூலம் தணித்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து திசைதிருப்பும் எதுவும் என்னைக் காயப்படுத்துகிறது. என் அமைதியை சீர்குலைத்து, கோபம்கொள்ள வைக்கிறது. எனக்கும் இதயம் உள்ளது ரமா, நான் பரிதவிக்கிறேன், ஆனாலும், புரட்சிக்கு என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். இந்த உயரிய லட்சியத்திற்காக என் உணர்ச்சிகளைத் தீயிட்டு பொசுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால், நீயும், யஷ்வந்தும் கூடச் சமயங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், இந்த மடலை ஒரு கையால் எழுதிக்கொண்டே இன்னொரு கரத்தால் உன் கண்ணீரைத் துடைக்கிறேன். நம்ம செல்ல “பட்லே”வை (யஷ்வந்த்) பார்த்துக்கொள் ரமா. அவனை அடிக்காதே. நான் அவனை அடித்திருக்கிறேன். அதை ஒருக்காலும் அவனுக்கு நினைவுபடுத்தாதே. அவன் உன்னுடைய பிரிக்கமுடியாத பகுதி

இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மத, உளரீதியான பக்கச்சார்புகள், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே வேரறுக்கும் வழியைக் கண்டடைய வேண்டும். இவை அன்றாட வாழ்வில் ஆழமாக ஊறிப்போயிருக்கின்றன. இவற்றை மொத்தமாக எரித்திட வேண்டும். மீண்டுவர முடியாதவகையில் புதைத்திட வேண்டும். இவற்றைச் சமூகத்தின் ஞாபகம், கலாச்சாரத்தில் இருந்தும் கூட அறவே அகற்ற வேண்டுமென விரும்புகிறேன்.

ரமா, இந்த மடலை படித்துக்கொண்டிருக்கும் போதே உன் விழிகளில் வழியும் நீரின் ஈரத்தை உணர்கிறேன். நீ திக்குமுக்காடிப் போயிருக்கிறாய் என எண்ணுகிறேன். உன் இதயம் கனத்துப்போயிருக்கும். உன் உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தாலும், உன் உணர்ச்சிகளுக்கு நீ சொல்ல முயல்பவற்றைக் கடத்தும் வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ அத்தகைய உடைந்துவிடக்கூடிய உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறாய்.

ரமா, நீ என் வாழ்க்கையில் இல்லையென்றால் என்னாகி இருக்கும்? நீ என் துணையாக உடன் வராமல் போயிருந்தால் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்? வாழ்க்கையில் சொத்து சுகமே முக்கியம் என எண்ணுபவளாக இருந்திருந்தால், என்னைத் தனியே தவிக்கவிட்டு போயிருப்பாள். யாராவது எப்போதும் பசியால் வாடவும், பம்பாயில் பசுமாட்டின் சாணியைத் தேடியலையவும், அதை வறட்டியாக்கி அடுப்பெரிக்கவும் யாராவது விரும்புவார்களா? வீட்டில் கிழிந்து போன துணிகளை ஒட்டுப்போட்டுக் கொண்டும், வறுமைக்கொடுமையில் நான் கொட்டும், ‘ஒரே ஒரு வத்திப்பெட்டி தான் மாதம் முழுவதற்கும்’ அல்லது ‘இருக்கிற அரிசி,பருப்பு, உப்பை வச்சு மாசக்கடைசி வரை ஓட்டித்தான் ஆகணும்’ முதலிய சொற்களைத் தாங்கிக்கொள்வார்கள்?

என்னுடைய ஆணைகளை நீ கடைபிடிக்காமல் முரண்டுபிடித்திருந்தால் என்னாகி இருக்கும்? நான் உடைந்து போன உள்ளத்தோடு, என் சபதத்தைக் காப்பாற்ற முடியாதவனாகப் போயிருப்பேன். முற்றிலும் நிலைகுலைந்து, எண்ணிப்பார்க்க கூட முடியாத அளவுக்கு என் கனவுகள் சுக்குநூறாகியிருக்கும். ரமா, என் வாழ்வில் நான் தேடுவதையெல்லாம் தொலைத்திருப்பேன். எல்லாமும், என்னுடைய எல்லா உள்ளக்கிடக்கைகளும் நிறைவேறாமல், காயப்பட்டுப் போயிருப்பேன். சிறு பதரைப்போலப் பொருளற்றவனாக இருந்திருப்பேன்.

உன்னையும், என்னையும் பார்த்துக்கொள். சீக்கிரம் ஊர் திரும்பிவிடுவேன். கவலைப்படாதே. என்னுடைய நல்வாழ்த்துகளை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்…!

உன்னுடைய,
பீமாராவ்,
லண்டன்,
30 டிசம்பர் 1930

(தமிழில்: பூ.கொ.சரவணன்)

Sunday, April 12, 2020

குளியல்

Genetics may make us take birth as humans. Circumstances make us who we turn out to be. We prey on some and some others prey on us. Oppression and suppression of expression lead inevitably towards depression. The mind, long confined, prays for release, for pressures to ease.

Here is the latest poem in Tamil by Puthiyamaadhavi Sankaran reproduced with her prior permission together with an English translation by moi:

பல்லியும் தவளையும் முறைத்துப்பார்க்கின்றன.
அவர்களின் பார்வையில்
நான் புழுவா பூச்சியா பூதமா
யாரறிவார்?

பல்லியின் வாயில் பூச்சியாக
நெளியும் என்னுடலை
அவஸ்தையுடன் பார்க்கிறது
சந்திரிகா சோப்பு நுரைகள்.
கொடியில் தொங்கும் உள்ளாடைகள்
காற்றில் அசைகின்றன.
தொட்டித் தண்ணீரில் படரும் நிழலை
படக்கென்று தாவிப்பிடித்து
கவ்விக்கொண்டு
குதித்து வெளியேறுகிறது தவளை.

வெயிலின் வெக்கையும்
நினைவுகளின் புழுக்கமும் தாளாமல்
எத்தனை முறைதான்
குளித்து வெளியேறுவது?!

#புதியமாதவி_சங்கரன்

The lizard and the frog
stare.
Who is aware
if, in their purview, 
I am a worm, insect or genie?

The suds of Chandrika soap
look on with difficulty
at my body
wiggling like a bug
in the lizard's mouth.
Underclothes hanging
on the clothesline
sway in the wind.
Grabbing the shadow
spreading on the water
in the trough
with a quick leap,
the frog jumps out.

Unable to bear
the heat of the Sun
and the sultriness
of memories,
how many times
does one bathe
and get out?

~Sri 1300 :: 12042020 :: Noida

Chandrika Soap: A very popular brand of toilet soap.

Thanks to Sri N Srivastava

Thursday, April 9, 2020

ராட்சதக் காற்றாடிகள்

பெரிய்ய்ய்ய் புடுங்கி நான்..எப்படி எல்லாம் பெருமைப் பீத்திருக்கேன்..நினைச்சுப் பார்த்தா வெட்கமா இருக்கு ஆத்தா..என்னால ஒரு நாளைக்கு ஒரு புத்தகமாவது வாசிக்காம உசிரோடவே இருக்க முடியாதுனு சொல்லிட்டு அலைஞ்சிருக்கேன்.

தேர்வு காலத்தில் கூட பாடப்புத்தகமல்லாத ஒன்றிரண்டு புத்தகம் வாசிப்பேன்.அம்மா மருத்துவமனையிலிருந்தக் காலங்களில் புத்தகங்களுடன் அம்மா அருகில்..புத்தகம்   வாசித்துக் கொண்டிருக்கும் என்னையே அம்மா பார்த்துக் கொண்டிருப்பார். என்னமா.. ஏதாச்சும் வேணுமானு கேட்டுட்டு மீண்டும் புத்தகத்தில் ...அம்மா நான் வாசித்துக் கொண்டிருப்பதையே ஏக்கத்துடனும் பெருமையுடனும் பார்த்துக்கொண்டே இருப்பாள். புத்தகங்களின் தாள்களை புரட்டிக் கொண்டிருப்பேன்...இப்படியாக வாசித்தலின்றி நானில்லை என்பது..ஹம்பக்..ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசிக்க கிடைத்தன..அதுவும் மமுடிந்துவிட்டது.. நான் உயிரோடு தானிருக்கிறேன். மூச்சுக்காற்று நின்றுவிடவில்லையே!...

தலையில் நானே ஒட்டிக் கொண்டதும் தானே வந்து ஒட்டிக் கொண்டதுமான எல்லா கிரீடங்களும் உடைந்து உடைந்து காலடியில் விழுகின்றன. என் நிழலே எனக்கு அன்னியமாக இருக்கிறது...ராட்சதக் காற்றாடிகளுக்கு காற்று இரையாகிப் போனதை மகேந்திர மலை செய்வதறியாது பார்த்துக் கொண்டே அசைவற்று இருக்கிறது..

Tuesday, April 7, 2020

கோவிந்தா கோவிந்தா

THANKS TO Sri N Srivastava.


.Mere mortals celebrate their own birthdays amidst a limited circle only but the birthdays of gods become festivals celebrated by whole communities across continents. Lord Krishna's birthday is called Janmashtami and celebrated with great fervour by his devotees.

In Mumbai, every locality vies with every other locality in organising these celebrations which include the Dahi Handi, which is a clay pot filled with curds and cash prizes suspended high in the air. Teams of young men train together for months to form a human pyramid and grab the pot of goodies.

It came to be a pot of curds because Krishna, as a naughty child, used to climb over the shoulders of his playmates to reach into the pots filled with  fresh butter suspended from the ceiling. The teams that play Dahi Handi would chant and sway rhythmically while forming the human pyramid punctuated with Govinda Govinda, one of the many names of Mahavishnu who took birth as Krishna.

Krishna is also called the Maayaavi or the illusionist, who could make things seem different. At face value, this poem could be taken as one of those rhythmic chants by the Dahi Handi players. But then, the wise never take anything at face value but seek out the implied meaning.

Here is the poem titled #Govinda penned by Poet Puthiyamaadhavi Sankaran reproduced with her prior permission together with an English translation by moi:

#கோவிந்தா

எங்கள் மேய்ச்சல் நிலம்
எங்கள் கறவை மாடுகள்
எங்கள் தயிர்ப்பானை
புல்லாங்குழலின் இசையில்
ஆடைகளை மறந்தது போல
திருடர்களையும்..!
திருடர்கள் திருடியதைச்
சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
கோவிந்தா கோவிந்தா..

பாற்கடலின் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன.
கோவிந்தா கோவிந்தா..

உன் கோவிந்தாக்களைத்
தோள்களில் சுமக்கும்
எங்கள் தோள்களுக்கு
இன்னும் எட்டவில்லை
நீ திருடிய தயிர்ப்பானை.
கோவிந்தா கோவிந்தா..

#புதியமாதவி_சங்கரன்

#GOVINDA

Our pasture,
our cows,
our curd pot!
Like clothes were forgotten
in the music of the flute,
the looters too..!
The looters claim
the loot as their own.
Govinda! Govinda!

The waves
of the Milky Ocean
roar
Govinda! Govinda!

Our shoulders
that bear
your Govindas
have not
yet got
to the curd pot
that you looted.
Govinda! Govinda!

~Sri 1915 :: 06042020 :: Noida

Sunday, April 5, 2020

9 மணி ..9நிமிடங்கள்

9 மணிக்கு லைட் ஆஃப் செய்துட்டு வழக்கம் போல சட்டுபுட்டுனு ஊரே தூங்கியாச்சு சரவணா.... ஒன்றிரண்டு பெரிசுகளிடம் கேட்டதில் கருக்கலில் தான் விளக்கேத்தனும்..தூங்கப்போற நேரத்திலானு ..கேட்டுட்டு போயிட்டாங்க. இன்னிக்கி மழை வேற தூறல் போட்டுச்சா.. வீட்டுக்குள்ள லைட்டைப் போட்டு வச்சிருந்தா மழைப்பூச்சி ..ஈசல்.. வந்திடும்னு எட்டு மணிக்கெல்லொம் லைட் ஆஃப் செய்திட்டோம்....சரவணா.. இந்தக் கிராமம் இந்தியாவில் தானிருக்கு..

Thursday, April 2, 2020

கரிச்சான் குருவி

பெருநகரப் புறாக்களுடன் உறவாடியமனம்
கரிச்சான் குருவிகளின் பாஷையை
எழுத்துக்கூட்டி வாசிப்பதற்குள்
திணறிப் போய்விடுகிறது.

முருங்கைமரக் கொம்பில்
நெல்லிமரங்களுக்கு நடுவில்
தென்னங்கீற்றுகளின் மீதேறி
எதையோ சொல்ல வருகிறது.
தந்திக்கம்பங்களில் தொங்கிக் கொண்டிருக்கும்
மின்சாரக்கம்பிகளில் பாயும்
அதன் விழிகளின் வெளிச்சம்
என் மீது பரவுகிறது.
கண்கள் கூசுகின்றன.
கதவுகளை அடைத்துக் கொள்கிறேன்.
மவுனம் உறைந்துப்போன அதிகாலையில்
இருளைத் தின்று தின்று
பசியாறிய கனவுகளுடன்
கரிச்சான்குருவிக்காக காத்திருக்கிறேன்.
சிறகுகள் உதிர்க்கும் எழுத்துகளை
மண்ணில் விழுவதற்குள்
மடியில் கட்டிக்கொள்ள...