Saturday, July 28, 2012

பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?. ==





இந்தியா ஜனநாயகநாடு
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை.
இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா?
இல்லை.
தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா?
தெரியும்.
சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா?
முடியாது!
!பிறகு என்னய்யா வெங்காயம்!!
நீங்களும் உங்கள் சட்டங்களும்.

****


எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக
எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக
அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார்
என்று உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்து உடனே சிலர்
வழக்குத் தொடுத்தார்கள். அதன் பின் என்னவோ அவர்கள் வழக்கு தொடுத்தக் காரணத்தாலேயே இந்த ஜாம்பவான்கள்
நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வரமுடியாமல் போய்விட்ட மாதிரியும் ஒரு காட்சி உருவாக்கப்பட்டது!

இதில் வாதியும் பிரதிவாதியும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்கொண்டு இந்த மாதிரி ஸ்டண்ட் அடிக்கிறார்களோ என்னவோ.. வேறு எப்படித்தான் இவர்கள் அடிக்கிற இந்த லூட்டிகளை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களோ தெரியவில்லை.
நான் சட்டம் போடற மாதிரி போடறேன், எனக்கு
அது தேவையாக இருக்கிறது, நீங்கள் அதை எதிர்த்து
கோர்ட்டுக்கு போயீடுங்க, மறந்திடாதீங்க,
எனக்குத் தெரியும், கோர்ட்டுக்குப் போனா என் சட்டத்தின்
கதி என்ன என்பது!
இந்திய சட்டப்படி அய்யா மலர்மன்னன் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. (துப்பாக்கி நாயுடு: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர் என்ற அய்யா மலர்மன்னன் கட்டுரையின் பின்னூட்டங்களில் இக்கருத்து போகிற போக்கில் விவாதமாகி இருக்கிறது.) திண்ணையில் தன் கட்டுரைக்குப் பின்னூட்டமாக
திரு பரமசிவம் அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும்
அய்யா மலர்மன்னன் :
>. File a counter at the SC if the case regarding archakas is pending there. You can argue no discrimination is permissible under the Constitution. The SC will summarily reject your counter stating it is purely a religious matter, as it is related to temple formalities of a particular religion and that it is not a social issue.>

ஏன் முடியாது என்பதை எல்லாம் அய்யா மலர்மன்னன் கட்டாயம் விவரமாக சொல்லித்தான் ஆகவேண்டும் என்று
நாம் பிடிவாதம் பிடித்தால் அது "அபத்தம்".
தேடினால் தெரியும், திருடன் நம் வீட்டு குதிருக்குள் தான்
இருக்கிறான் என்கிற உண்மை.

உச்ச நீதிமன்றத்தால் ஏன்  செய்ய முடியாது என்று நம் அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்தானே.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர்
 சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம்,
சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.
(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first
draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional
customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the
"Hindu code bill " in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution
will stand abolished)
ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைய யார் யார் காரணமாக இருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது தலைவர்கள், மதங்கள் , புரட்சிக் காரர்கள் எல்லோர் மீதும்
ஓர் அவநம்பிக்கை தான் ஏற்படுகிறது.




இதெல்லாம் என்னவோ பரம ரகசியம் இல்லை.
இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிபேருக்கு
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சிலருக்குத் தெரிந்தும்
தெரியாமல் இருப்பது போலவே இருப்பதில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. இதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.
இலவசங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பேசவோ
அல்லது சிந்திக்கவோ நேரமில்லை. தங்களை அறிவுஜீவிகள்
என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் எம் தோழர்களும்
அவர்களின் இடது வலது சார்புகளும் இதில் விதிவிலக்கல்ல.

***

தமிழ்நாட்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து என்னவோ சிலர்  உச்சநீதிமன்றத்தில் எதிர்வழக்காடுவதால்
மட்டுமே பிரச்சனை என்று மேம்போக்காக போகிற போக்கில்
சொல்லிச் செல்வது சரியா?

அந்த சிலர் உச்சநீதிமன்றம் வரை போயிருக்காவிட்டாலும்
இச்சட்டம் அமுலுக்கு வந்திருக்க முடியுமா?

சரி, அந்தச் சிலர் யார்?
இச்சட்டத்தின் மூலம் அவர்களுக்கு என்ன இழப்பு?
இக்கோவில்கள் குறித்து பேசும் போதெல்லாம் ஆகமவிதி என்றும்
ஸ்மிருதி விதி என்று இரண்டு விதிகள் பற்றிய பேச்சு அடிபடுகிறதே!
எது ஆகமவிதி?
எது ஸ்மிருதி விதி?
ஆகமவிதி என்ன சொல்கிறது?
ஸ்மிருதி விதி என்ன சொல்கிறது?
பிராமணர்கள் கர்ப்ப கிரஹத்துள் நுழைவதாலும் அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும் பொதுமக்களுக்கும் கேடு விளையும் என்று திருமூலரின் திருமந்திரம் பதிவு செய்திருக்கிறதே,
அப்படியானால் எப்போது இந்த ஆகமவிதி மறைந்து போனது.
இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக
மட்டுமே இந்தக் கோர்ட், வழக்கு வாய்தா எல்லாம்!
ஆனால் நம்ம ஊரு முனியாண்டி,
மாடசாமி, இசக்கி அம்மன் கோவில்களில் சூத்திர பஞ்சம பூசாரிகள் தான்.  இது ஏன்?

**
இந்த நாட்டில் கடவுள்களுக்கும் சாதிகள் உண்டு.
திருப்பதி பாலாஜி
திருச்செந்தூர் முருகன்
திருநெல்வேலி மாடசாமி
சாதிப்படிநிலையின்  அடையாளங்கள்.

நன்றி: திண்ணை இணைய இதழ்.

இக்கட்டுரை குறித்த அனைவரின் பின்னூட்டங்கள் திண்ணை இணைய இதழில்.

http://puthu.thinnai.com/?p=13363

Tuesday, July 17, 2012

கள்ளக்காதல்






காதலன் இல்லாமல்
வாழ்ந்துவிட முடிகிறது
கவிதை இல்லாமல்
வாழ்வது ?


கட்டில் மெத்தையில்
காமம் கூட
அந்த மூன்று நாட்கள்
முகம் சுழித்து
விலகிக்கொள்கிறது.
கவிதை மட்டும்தான்
அப்போதும்
காற்றாய் 
சிவப்புக்கொடி ஏந்திய
தோழனாய்
துணைநிற்கிறது.

சுவடிகளில்
சிறைவைக்கப்பட்டிருந்த
கவிதைமொழியை
விடுதலையாக்கிய
பாட்டனின்
பாடல் வரிகள்
எல்லைகள் தாண்டி
எப்போதும் 
என் வசம்.

ஆளரவமில்லாத காட்டுப்பாதையில்
பூத்திருக்கும் செடிகளின்
இலைகளின் அசைவில்
கவிதைமொழி
கண்சிமிட்டி
கண்ணீர்விட்டு
கட்டி அணைக்கிறது.


காதல் தேசத்தில்
கவிதையே
யார் குற்றவாளி?
கவிதை எழுதும் மனைவி
கணவனுக்குத் தலைவலியாம்

கவிதை எழுதும் அம்மா
பிள்ளைகளுக்கு
பெருந்தொல்லையாம்.

கவிதையே
எத்தனைப் பிறவிகள்
அடுத்தவன் மனைவியை
பித்தனாய் வந்து
பேதலிக்க வைக்கிறாய்?

கவிதையுடன்
கொண்ட காதல்
கல்லறைக்கதவுகளைத்
திறந்து
கடப்பாறையால்
தோண்டி எடுத்து
மரணித்தப் பின்னும்
வேர்களாய் வந்து
கருந்துளை உதடுகளில்
ஈரம் ததும்ப
முத்தமிடுகிறது.
இருந்தும் என்ன செய்ய?
கவிதையே..

துரோகம் செய்தேனோ
நம் காதலுக்கு?
மன்னிப்பாயா
இல்லை
தண்டிப்பாயா
கவிதையே
நீ வாசம் செய்யும்
எந்த மொழியிலாவது
எந்த தேசத்திலாவது
நம் காதல் தேசத்தின் கொடி
பறக்கும் அனுமதி இருந்தால்
ஓடி வந்து சொல்
வருகிறேன் உன்னோடு
அதுவரை
கவிதையே
உன்னுடன் நான் கொண்ட
காதல்
கள்ளக்காதலாய்
தலைகுனிந்து
.....







Friday, July 13, 2012

இப்படியும் ஓர் உண்ணாவிரதம்!

உண்ணாநிலையில் வடக்கிருந்து உயிர்விட்டது ஒரு காலம்.
காந்தியின் மிக வலிமையான ஆயுதம் உண்ணாவிரதம் என்று
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு  எழுதப்பட்டிருக்கிறது.
பெண்டிர் மடலேறுவது இல்லை என்று தொல்காப்பியம் சொல்வதை 
அதெல்லாம் அந்தக்காலமய்யா என்று சொல்லியிருக்கிறது சில நிகழ்கால
செய்திகள்.
காதலித்தவன் ஏமாற்றி விட்டால் "விட்டேனா பார்" என்று அவன் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருந்து திருமணம் செய்துக்கொண்ட சில
வீரக்காதலியரை அண்மைக்கால பத்திரிகை செய்திகள் மூலம்
அறிந்து பெருமிதம் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த உண்ணாவிரதங்கள் அனைத்தையும் தூக்கிச்சாப்பிட்டுவிட்டது...
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இராஜஸ்தானைச் சார்ந்த ஓம் சாந்தி சர்மா என்ற பெண்மணியின் உண்ணாவிரதம்.


செய்தி இதுதான்:


ஓம் சாந்தி சர்மா, புதன்கிழமை, 11 ஜூலை 2012 முதல் புதுடில்லி , ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய கோரிக்கை, இந்தியாவின் (இளவரசர் )ராகுல்காந்தி அவருக்கு மருமகனாக
வரவேண்டுமாம். அதற்காக 15 கோடி வரதட்சனை கொடுக்கவும் தயாராக
இருக்கிறாராம். தன் மகளுக்கு ராகுல்காந்தியை விட மிகச்சிறந்த வரன்
வேறு எவரும் இருக்க முடியாது என்று நினைக்கிறாராம்.
இதைப் பற்றி காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று
தெரியவில்லை. டிசிபி  கே சி திரிவேதி "பாவம், இந்தப் பிரச்சனை காரணமாக
 மவுனவிரதம் இருப்பதாக கேள்வி.


பாவம்..இந்தியத்தாய்..