Tuesday, March 23, 2021

வெண்டைக்காய் அரசியலும் கவிதையும்

 சென்னையில் 1906 ஆம் ஆண்டின் நீர் நிலை கணக்கெடுப்பின்

படி இருந்த குளம் ஏரிகள் எண்ணிக்கை 474. அதன் பின் 2013

கணக்கெடுப்பின் படி 43.இப்போ தமிழ் நாடு முழுவதும் கணக்கெடுத்த என்ன நிலைமையா இருக்கும்னு தெரியல. தேர்தல் நேரத்தில் இந்தக் கணக்கெடுப்பு வேண்டாம்னு தோணுது.

ஒரு அணையைத் திறந்து தண்ணீர் விட அணையைப் 

பராமரிக்கும் எஞ்சினியருக்கு அதிகாரமில்லை. 

ஏன் அந்த மாவட்ட கலைக்டருக்கும் அதிகாரமில்லை. 

முதல்வரின் அனுமதிக்கு காத்திருக்கும் நீர்மேலாண்மை 

அரசியல் நிலவுகிறது.


இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைக்குறித்து

ஆவணப்படுத்தும் எழுத்துகள் கூட  நீர்மேலாண்மை

குறித்து கவலைப்படுவதில்லை.


 

இந்திய தலை நகரம் டில்லியில் விவசாயிகளின் போராட்டம்

தொடர்கிறது.09 ஆகஸ்டு 2020ல் டில்லியில் கூடிய விவசாயிகள் இன்றோடு 7 மாதம் 2 வாரங்கள் ஆகப்போகிறது.

தீர்வு கிடைக்கவில்லை.

இந்தியாவில் சில மா நிலங்களில் தேர்தல் களம் சூடு

பிடித்துவிட்ட தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்பட

பொதுஜனத்திற்கு நேரமில்லை.

1000 முதல் 2000 வரை போட்டிப்போட்டுக்கொண்டு குடும்பத்தலைவிக்கு பணம் பட்டுவாடா செய்ய தேர்தல்

அறிக்கைகள் உறுதி அளித்துவிட்டதால்.. பொதுஜனம்

மகிழ்ச்சியில்.

 

 மராத்திய மாநிலத்தின்  மிதியாலா மாவட்டத்தையே

தன் கதைக்கான களமாக தேர்வு செய்து விவசாயிகளின்

தற்கொலையைப் பற்றிய புதினம், அரசியல் புதினம் என்று

கொண்டாடப்பட்ட கோட்டா நீலிமாவின்

இறந்தவர்களின் செருப்பு - shoes of the dead .

 

இப்புதினத்தை எழுதி இருக்கும் நீலிமா ,

"ஒருவன் தன்னையே சாகடித்துக் கொள்கிறான் என்றால்

இதன் பொருள் அத்தனிமனிதனின் இறப்பல்லஅவனுக்குள்

இருக்கும் விவசாயி தன்னை சாகடித்துக்கொள்கிறான்

என்றுதான் பொருள்என்று சொல்கிறார்.

 அரசியல் தலைவர்களின் வாரிசுகள்

அதிகாரத்தை வாரிசுடமையாகப் பெறுவது போல

ஏழைகளின் வாரிசுகள் ஏழ்மையைத்தான் வாரிசுடமையாக

பெறுகிறார்கள்க்டன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்

விவசாயி தன் மனைவி மக்களுக்கு அக்கடன்சுமையை வாரிசுடமைஆக்கிவிட்டு செல்கிறான்ஓர் அரசியல்வாதியின் மகனுக்கு

தன் தந்தையின் மரணத்தைக் கடந்து செல்வது எளிதாக

இருக்கிறதுகடன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்

விவசாயி மகனுக்கு அதுவே ரொம்பவும் சங்கடமானதாக

அமைந்துவிடுகிறது. இதுதான் நீலிமா முன்வைக்கும் அரசியல்

நாவலின் அரசியல். இப்புதினம் முன்வைக்கும்  தீர்வுகளுடன் எனக்கு உடன்பாடில்லை எனினும் இப்புதினம் முக்கியமானது.

 

 நன்செய் நிலத்தில் புன்செய் பயிர்களை பயிரிடும் விவசாயி..

அதன் காரணங்கள், அரசியல், நீர்மேலாண்மை , சூழலியல் என்று

பல்வேறு கோணங்களில் அணுக வேண்டியதாக இருக்கிறது.

அண்மையில் தங்கத்துரையரசி கவிதை நூல்

“சொற்களால் நிறமேறும் பொழுதுகள்” வாசித்தேன்.

அதில் ஒரு கவிதை..

“விலையும் விவசாயி நிலையும்” என்ற தலைப்பில்.

 

காய்கறிக்கடையில்

கலக்கத்தோடு நுழைந்தேன்.

தோட்ட்த்துக்காய்

வந்திருப்பத்தாய் சொன்னார்

அண்ணாச்சி.

………

வெண்டைக்காய் விலை

கிலோ பதினைந்தென்றார் அண்ணாச்சி.

அகமும் மலர்ந்த து.

 

ஒடித்தபடி முற்றல் நீக்கிய கைகளோடு

முறுக்கிக்கொண்ட சிந்தனையில்]

ஒருமுகம் வந்துப்போக’

 நொந்தது சிந்தை

 

நஞ்செய்யில்

புஞ்செய்ப் பயிரிட்டவன்

நஞ்சையும் கயிற்றையும்

தேடாமல் என்ன செய்வான்?

வாயிடிடாமலே கசந்தது

வெண்டைக்காய்.

 

Saturday, March 13, 2021

தேசிய மொழிகளின் பாதுகாப்பு (மராட்டி மொழியை முன்வைத்து)

 


ஒரு மனிதன்

ஓர் உலகம்

ஒரே மொழி

உலகமயமாதலின் புதியக் கண்டுப்பிடிப்பு இந்த எந்திரமனிதன்.

இந்தியா என்றால் இந்துதேசம்

இந்தியன் என்றால் இந்தி பேசுபவன்

ஒரே நாடு

ஒரே மதம்

ஒரே ஒரு மொழி,

என்று  இந்திய இறையாண்மைக்கு  மாபெரும் அச்சுறுத்தலை பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனும் சந்தித்துக் கொண்டிருக்கிறான். இந்திய மண்ணின் பல்வேறு தேசிய இனங்களின் குரலை ஒன்றிணைப்பதும் தொடர்ந்து களத்தில் நிற்பதும் பதிவு செய்வதும் சான்றோர்கள் கடமையாகிறது.

    உலகத்தின் மொழிகளில் 50% அதிகமான மொழிகள்

இந்தியத் துணைகண்ட த்தில் பேசப்படுகின்றன.. மொழி ஆராய்ச்சி மையம்  (Bhasha Reserach and Publication centre)

வெளியிட்டிருக்கும் தகவலின்படி கடந்த 50 ஆண்டுகளில்

220 இந்திய மொழிகள் காணாமல் போய்விட்டன. இனி, வரப்போகும் 50 ஆண்டுகளில் 150 இந்திய மொழிகள் மரணித்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன. ஏன்?

இந்தியச் சமூகத்தில் என்ன நடக்கிறது? இந்த மொழிகள்

வழக்கொழிவதற்கு என்ன காரணம்?

    மொத்தம் 24,821 பேர்கள் மட்டுமே சமஸ்கிருதம் தங்கள்

தாய்மொழி என்று மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு

செய்திருக்கிறார்கள். ஆனால் 50 இலட்சம் மக்கள் பேசும் துளு மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்க இந்திய அரசு மறுக்கிறது. இந்திய அரசு செம்மொழி தகுதியைக் கொடுத்திருக்கும் தமிழ், கன்னடம், தெலுங்கு,

மலையாளம், ஒடியா .. இந்த 5 மொழிகளுக்கும் கடந்த

3 ஆண்டுகளில் செலவு செய்திருக்கும் மொத்த தொகை

ரூ 29 கோடி. ஆனால் இதே 3 ஆண்டுகளில் சமஸ்கிருத

மொழிக்கு மட்டும் செலவு செய்திருக்கும் தொகை ரூ 645.84 கோடி. சற்றொப்ப 22 மடங்கு அதிகம் ( ஆதாரம் இந்துஸ்தான் டைம்ஸ், பிப் 16,2020)

இவ்வாறே இந்தி மொழியின் வளர்ச்சிக்கும் கணிசமான

தொகையைத் தொடர்ந்து செலவு செய்கிறது இந்திய அரசு.

இந்தி மொழியின் வளர்ச்சிக்காக 2009-10 ல் செலவு செய்த

தொகை ரூ 349 கோடி. . நாவில் இந்தி மொழியைச் சேர்ப்பதற்கு 2018ல்  இந்திய அரசு செலவு செய்த தொகை ரூ. 400 கோடி. வெளி நாடுகளில் இந்தி மொழியைப் பரப்புவதற்கு 2017-18ல் செலவு செய்த தொகை ரூ. 43கோடி.

இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களின்

வரிப்பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும்-

இந்தி மொழிக்கு மட்டும்-  பெரும்தொகை கணக்கின்றி

செலவு செய்யப்படுகிறது. இந்தியாவின் தேசிய மொழிகளை

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு அணுகுவது தொடர்கிறது. இந்திய மொழிகள் அனைத்தும்

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.

ஆனால் இந்தி மொழி மட்டும் உள்துறை அமைச்சகத்தின்

கீழ் வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    போஜ்புரிஎன்றொரு இந்திய மொழி நமக்கெல்லாம்

போஜ்புரி சினிமாவாக மட்டுமே அறிமுகமாகி இருக்கிறது.

போஜ்புரி மொழிக்காவது மாநில அரசில்லை.  மேற்கு பீகாரிலும் கிழக்கு உத்திரபிரதேசத்திலும் இம்மொழிப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். தனக்கென ஒரு மாநில அரசில்லாத

போஜ்புரியின் நிலமை இப்படி என்றால் தனக்கென மாநில

அரசும் அதிகாரமும் கொண்ட ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களின் கதி என்னவாக இருக்கிறது?

ராஜஸ்தான் மாநில மக்களின் ரஜஸ்தனி மொழியைக்

காணவில்லை, ஹரியானாவின் ஹர்யன்வி மொழி ஹரியானா பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுவது  இல்லை!

இந்த இரண்டு மொழிக்கும் மொழிவழி மாநில அரசும்

அதிகாரமும் இருந்தும் அந்தந்த மொழிகள் காணாமல்

போய்விட்டன. அந்த இடத்தில்இந்திமொழி வந்து

குந்தி இருக்கிறது.

    இதேமாதிரியான அச்சுறுத்தல்தான் நான் வாழும்

மராட்டிய மாநிலத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. 5000 மராத்தி

அரசு பள்ளிகளை மாணவர்கள் சேர்க்கை இன்மை காரணமாக இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது மராத்திய அரசு. 

    இந்தியாவின் வணிகத் தலை நகரமான மும்பையின் கண்கூசும் வெளிச்சம், வானுயர்ந்த கட்டிடங்கள் மும்பை வாழ்க்கை தான் , மராட்டிய மாநிலத்தில் பிறபகுதிகளில்

வசிக்கும் மராட்டியர்களின் கனவாக இருக்கிறது. மும்பையில் வாழும் மராட்டியர்களின் கனவுடாலர்நோட்டுகளை எண்ணும் அமெரிக்க கிரீன் கார்டில் மிதக்கிறது.

    மராட்டியர்களின் தாய்மொழியான மராட்டிதேவ் நகரி

எழுத்துருவைப் பயன்படுத்தியதற்காக இன்று காலம்கடந்து

கண்ணீர் விடுகிறது. இந்தி எழுத்துருவுக்கும் மராத்தி எழுத்து வடிவத்திற்கும் அதிக வேறுபாடுகளில்லை என்று பொதுஜனவெளியில் இருக்கும் பார்வையை மாற்ற முடியாமல் மராட்டியர்கள் தவிக்கிறார்கள். 13ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை

மராட்டியர், “”மொடி அல்லது மொடிக்கா (moodi or moodiga) என்று சொல்லப்படும் எழுத்துவடிவத்தைத் தான் பயன்படுத்தினார்கள். ஆங்கிலேய அரசின் ஆவணங்கள் கூட அந்த எழுத்துருவைத்தான் பயன்படுத்தின. 130 ஆண்டுகள்

மராத்தி மொழி இரண்டு எழுத்துவடிவங்களைக் கொண்டிருந்தது என்பது மொழிவரலாற்றில் ஓர் ஆச்சரியமான உண்மை. ஆனால் என்ன நடந்தது என்றால்

சமஸ்கிருத மொழி மீதிருந்த மோகம், இந்திய நாகரிகம் மற்றும் இந்தியப் பண்பாடு கலாச்சாரம் இத்தியாதி அனைத்தும் சமஸ்கிருத மொழியுடன் தொடர்புடையதாக நினைத்தார்கள். இந்தியத் தேசத்தை ஆர்ய தேசமாகவே தேசியவாதிகள் கொண்டாடினார்கள். இன்னும் சொல்லப்போனால் காலனியாட்சியில் வெள்ளையரின் மேற்கத்திய நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் எதிராக,  மாற்றாக ஆர்ய நாகரிகத்தையும் ஆர்யதேசத்தையும்

முன்வைத்தார்கள். தேசியவாதிகளின் இப்போக்கு அவர்களின் தாய்மொழிக்கு எதிராகவும் திசை திரும்பியதை அவர்களும்

அறிந்திருந்தார்களா ? தெரியவில்லை! சமஸ்கிருத மொழியுடன் தங்கள் தாய்மொழி தொடர்புடையதாக காட்டுவதிலும் தேசியவாதம் என்ற பெயரில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் தங்கள் தேசப்பக்தியைக் காட்டிக்கொண்டார்கள். அதனால்தான் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள்

தன் சுயசரிதையை தன் தாய்மொழியான குஜராத்தியில்

எழுதியபோதும் நகரி எழுத்துவடிவைப் பயன்படுத்தினார்

என்பதைக் கவனிக்க வேண்டும்.

தேசியவாதிகளின் இப்போக்கிற்கு  மராட்டியர்களும் விதிவிலக்கல்ல. அன்று மராட்டிய மண்ணில் வாழ்ந்த

திலகர், அகர்கர், சிப்ளுகர் மூவரும் சமஸ்கிருத மொழி அபிமானிகள். மராத்தி மொழியுடன் சமஸ்கிருத மொழித் தொடர்பை முன்னிறுத்துவதில் பெருமைக் கொண்டவர்கள்.

திலகர் நடத்தியகேசரிபத்திரிகை மராட்டி மொழியை

 நகரி எழுத்துவடிவத்தில் அச்சிட்டு வெளியிட்டது.

திலகரே வழிகாட்டி விட்டார் என்றெண்ணிய அன்றைய

மராட்டி பத்திரிகைகள் அனைத்தும் மொடிகாஎழுத்துருவைக் கைவிட்டு நகரி எழுத்துருவுக்கு மாறின.

வெற்றியும் பெற்றன. காலப்போக்கில் இம்மாதிரியான ஒரு

தவறான முகவரியை எழுதி தங்கள் தலைவிதியை தாங்களே எழுதிக்கொண்டார்கள். ஆனால் இவர்களைப் போலவே நகரி எழுத்துருவைப் பயன்படுத்திக் கொண்டிருந்த

குஜராத்தி விழித்துக்கொண்டது. தங்கள் மொழியின் அடையாளம் என்பது சமஸ்கிருத மயமாதலோ இந்தி மயமாதலோ அல்ல என்ற ஓர்மையுடன் செயல்பட்டார்கள்.

    தங்கள் எழுத்துருவை இழந்துவிட்டாலும் மராட்டியர்களின் உணவு உடை சடங்கு சம்பிரதாயங்களில்

அவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் இன்றும் இருக்கின்றன.

    மராட்டியர்கள் கொண்டாடும்நாகபஞ்சமிஇந்து மத த்தால் நாகப்பாம்பை வழிபடும் இந்து மதச் சடங்காக மாற்றப்பட்டிருந்தாலும் நாகபஞ்சமி இந்த மண்ணின் தொல்குடி மக்களான நாகர்களுடன் தொடர்புடையது.

அரபிக்கடலோரம்  நீண்ட நெய்தல் நிலத்தைக் கொண்ட

மராட்டிய மண்ணில் நெய்தல் நில மக்களின் கடல்தெய்வ

வழிபாடு இன்றும்நாரியல் பூர்ணிமாவாக கொண்டாடப்

படுகிறது. மழைக்காலம் முடிந்து மீண்டும் கடலுக்கு மீன்ப்பிடிக்க செல்லும் நெய்தல் நில மக்கள் தங்களையும் தங்கள் படகுகளையும் காப்பாற்ற வேண்டி கடல்தெய்வத்தை வணங்கி மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் நாளைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறாக இம்மண்ணின்   சிறப்புகளை இழந்துவிடாமல் காப்பாற்றி வந்தவர்கள் மராட்டிய மண்ணின் தொல்குடி மக்களும்

கிராமத்தின் உழைக்கும் மக்களும். இதில்  நாட்டுப்புற கலைஞர்களின் பங்களிப்பும் முக்கியமானது.

நெய்தல் நில மக்களாக கோலியர்களின் நடனம் (KOHLI DANCE) பிரசித்திப்பெற்றது. பாட்டும் கூத்துமாக கடற்கரையில்

அவர்கள் வாழும் வாழ்க்கையின் எச்சங்கள் இன்றைய சினிமாப்பாடல்கள் வரை அதன் தாக்கத்தைக் காட்டுகின்றன.

(Powada, banjara and lavani) போவ்டா, பஞ்சாரா, லாவணி

 நடனங்கள் இன்றும் இவர்களின் கூத்துக்கலையை நிகழ்த்திக்காட்டுகின்றன.

    தங்களின் கலாச்சாரப் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பதை மராட்டியர்கள் அரசியல் ரீதியாக முன்னெடுக்கிறார்கள். அம்ச்சி மும்பையில் புலம்பெயர்ந்து வாழும் எனக்கு, மராட்டியர்களின்மண்ணின் மைந்தர்கள்

என்ற குரல் மேடைக்கான வெற்று முழக்கமாக மட்டும் தெரியவில்லை. அக்குரலில் இருக்கும் அறச்சீற்றத்தை

ஏற்கிறேன். காரணம், இந்தியத் தேசத்தின் இறையாண்மை

என்பது இந்திய தேசிய மொழிகளின் இறையாண்மைதான்

என்ற மாபெரும் இறையாண்மை கோட்பாட்டை வழங்கிய

தமிழ்த்தேசியர்கள் நாம்.

    மராத்திய மாநில அரசின் தலைநகரமான மும்பை

பெருநகரத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. அக்கருத்தரங்கை

எதிர்த்து நவ நிர்மாண் சேனா அறிக்கை வெளியிட்டதை

மட்டுமே ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கி உலகத்திற்கு காட்டின.

ஆனால் அந்த வளர்ச்சி திட்ட கருத்தரங்கிலோ அல்லது

அத்திட்டக்குழுவிலோ ஒரு மராட்டிய மண்ணின் மைந்தர் கூட இடம்பெறவில்லை. இந்தப் பின்புலத்தில் தான்

அவர்கள் குரலில் இருக்கும் அறச்சீற்றத்தை நாம் அணுக

வேண்டியதிருக்கிறது.

    இந்தியாவின் இரண்டாவது தலைநகரம்,  இந்திய ரூபாயின் மதிப்பைத் தீர்மானிக்கும் வணிகச்சந்தை மும்பை மாநகரம். இந்த நகரின் முதலாளித்துவ ஆதிக்கம் உலகமயமாதலுக்குப் பின் ஆக்டோபசின் கரங்களுடன் இப்பெருநகரைத் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறதுமராட்டியமண்ணின் மைந்தர்களை கூலி வேலை செய்பவர்களாக அல்லது  நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் வெள்ளைக்காலர் அடிமைகளாகவே வைத்திருக்கிறது.

இந்தியாவின் திரைப்படத்துறையில் ஹாலிவுட்டுக்கு நிகரான பணம்புரளும் மும்பை பாலிவுட் இந்தி திரையுலகம் மராட்டிய மொழியையும் ,கலையையும் தின்று செரித்து துப்பிக்கொண்டு இருக்கிறது.  மராட்டிய திரைப்படங்கள் பாலிவுட்

என்ற சுறாமீனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பட்டினியால்

செத்து மடிகின்றன. பாலிவுட்டின் தொழில்துறை மராட்டிய   மாநில அரசுக்கு பெரும்வருமானத்தைக் கொடுத்தாலும்

அதற்காக மராட்டியர்கள் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கிறது. இந்த அபரிதமான வருமானத்தில் மராத்தி

தன் ஊடகங்களை- திரைப்படங்களை காவு கொடுத்திருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு காலம் கடந்துதான் மராட்டியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்று

தரமான மராட்டிமொழி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு

திரைக்கு வருகின்றன என்பது ஆறுதலான செய்தி.

    இன்னொரு விசித்திரமான யதார்த்த நிலையை இப்பெரு நகரம் சந்திக்கிறது. கள ஆய்வுகளும் இதை உறுதி செய்கின்றன. பல மாநிலத்தவர் பல மதத்தவர் சேர்ந்து வாழும் மும்பையில் காதல் திருமணங்கள்  நடக்கின்றன.

காதலைக் கொண்டாடும் நாம் காதல் திருமணங்களை

எப்போதும் வரவேற்கிறோம். காதல் தம்பதியரின் வாழ்க்கையில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்

எந்த மொழியைப் பேசுகிறார்கள் என்பதைக் கவனிக்கும்

போது அவர்கள் தந்தை/ தாய் இருவரின் தாய்மொழியையும்

பேசுவதில்லை. மாறாக இந்தி மொழி பேசும் வாரிசுகளாக

வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு இந்திய மொழிக்கலப்பில் அந்த இரண்டு தேசிய மொழிகளையும்

பேசி தங்கள் கலாச்சார அடையாளங்களைக் கண்டடைய

வேண்டிய அற்புதம் நிகழ்வதில்லை. தாய் தந்தை இருவருடனும் தொடர்பில்லாத இந்தி மொழிப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களும் காலம் கடந்து தங்கள் வேர்களைத் தேடும்போது.. அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததாக இருக்கும்.

    இந்திய தேசத்தின் கலாசாரப் பெருமையாக சம்ஸ்கிருத த்தை ஏற்றுக்கொண்ட தேசியவாதிகளின் தவறான வழிகாட்டுதல்,  மும்பை பெருநகரத்தின் இராட்சதப் பல்லிடுக்குகளில் சிக்கித்தவிக்கும் மராட்டிய மண்ணின் மைந்தர்கள், பணம்புரளும் பாலிவுட் இந்தி சினிமா,

உலகமயமாதலின் முதலாளித்துவ முகவரிகளாக இருக்கும்

அம்பானி அதானிகள் , எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய தேசத்தின் மொழிக்கொள்கையும் இந்தி மொழி திணிப்பும்,

இந்திய தேசிய இனங்களையும் அவர்கள் மொழிகளையும்

மாற்றான் தாய் மனப்பாங்குடன் அணுகும் இந்திய அரசு,

காலம் கடந்து விழித்துக்கொண்ட மராத்திய அரசியலும்.. இன்றைய சூழலில் எதையும் செய்ய முடியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு திருவிழாவில் தொலைந்துப்போன குழந்தையைப் போல தடுமாறித் தவிக்கும் மகாராஷ்டிரா மக்கள், ..

எதைச் செய்யக்கூடாது,

எதைச் செய்யத் தவறிவிட்டோம்,

எதைச் செய்திருக்க வேண்டும்

என்பதற்கு இந்திய தேசிய இன மக்களுக்கு ஒரு

பாடமாக இருக்கிறது.


(தமிழ்க்காப்புக் கழகம் 26 ஜனவரி 2021ல் நடத்திய

தேசிய மொழிகள் பாதுகாப்பு , பன்னாட்டு கருத்தரங்கில்

பேசிய உரையின் சுருக்கம் )

* நன்றி : காக்கைச்சிறகினிலே இதழ் மார்ச் 2021