வறண்ட பூமி..
மழைப்பொய்த்த வானம்
கனவாகிக் கலைந்துப் போகும் கருமுகில்கள்
வாடிப்போன கறிவேப்பிலை கன்றுகள்
வெறிச்சோடிப் போயிருக்கும் மாட்டுத்தொழுவங்கள்
இலவச டிவியில் பசி மறக்கும் எம் சனங்கள்
காற்றுக்கு மட்டும் ஆவேசம் அடங்கவில்லை
புழுதிவாரி தூற்றிக்கொண்டிருக்கிறது
மண்ணை அள்ளி சாபமிடுகிறது
ஆவேசமாக இரவும் பகலும் அலைமோதுகிறது.
களையிழந்த குமரிக்கடல் காற்றுடன் கைகோத்து
ஓங்காரமிடுகிறது.. ஒப்பாரி வைக்கிறது..
தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய வியாபாரம்.
அவள் வருகிறாள்... போகிறாள்.. வருகிறாள்
பத்திரகாளியும் இசக்கியும் மூன்றுயுகம் கொண்டாளும்
வாடிய அவள் பூக்களின் சாட்சியாக .
இராட்சதக் காற்றாடிகள் எம்மைக் கண்காணிக்கின்றன.
தேசவிரோதி, தீவிரவாதி, தமிழினத்துரோகி..விருதுகள்
எமக்காகக் காத்திருக்கின்றன.
கையறுநிலையில் என்னைப் போலவே மகேந்திரமலையும்.
--------
இனி ஒரு உலகமகாயுத்தம் வரும் என்றால் அது தண்ணீருக்கானதாகவே
இருக்கும் என்பதை உறுதி செய்கிறது எம் தெருக்கோடி தண்ணீர்க்குழாய்கள்.
தென்னை மரத்தை பனை மரம் போல மாறிக்கொள் என்று சொல்லுகிறேன்.
வாடிப்போன மரங்களுக்கும் செடிகளுக்கும் அடுத்தவர் தோட்டத்தில்
அத்துமீறி நுழைந்து திருடிக்கொள் உனக்கான உன் தண்ணீரை.. அது உன் உரிமை என்று சொல்லி இருக்கிறேன். கேட்குமோ இல்லை என்னைப்
பார்த்து நகைக்குமோ.. ? ! வாடிய தோட்டத்தின் காட்சி .. வறண்ட நிலத்தின்
மக்கள்..
ஏரிகள் நிரம்பி வழியும் மும்பை பெருநகரில் பெருமூச்சுடன் கழிகிறது
என் நாட்கள்.
No comments:
Post a Comment