Monday, November 22, 2021

சாதி கெட்டப்பயலே..


சாதி கெட்டப்பய..
சாதி கெட்டச் சிறுக்கி
இவை செம்மொழி தமிழ்ச்சமூகத்தின்
வசைமொழிகள்.
சாதிக் கெடுவது நல்லதுதானே.
சாதியற்று இருப்பது பெருமைதானே.
சாதி அடையாளம் தொலைப்பது
மனித மாண்புதானே!
அது எப்படி உங்கள் மொழியில்
வசைமொழியானது?!!

அப்பன் பெயர் தெரியாமல் இருப்பதைவிட
கேவலமானதும் கீழானதும்
ஒருவன்/ ஒருத்தி சாதிக் கெட்டு இருப்பது.
குடும்பமில்லாமல் வாழ்ந்துவிடலாம்.
சாதிசனமில்லாமல் வாழமுடியாது
என்பதற்கான இன்னொரு விதியாக
இவை செயல்படுகின்றன.
குடும்பம் சாதியைக் காப்பாற்றிக்
கொண்டிருக்கிறது.
சாதி , குடும்ப நிறுவனம் உடையாமல்
பாதுகாக்கும் சக்தியாக செயல்படுகிறது.
என் பிள்ளைகள் திருமணத்தின் போதுதான்
சாதி எவ்வளவு முக்கியம் என்பதை
நான் ஒத்துக்கொண்டேன்.
சாதி பெரியவினையாற்றியது.
இச்சமூகம் எதிர்ப்பார்க்கும் வெள்ளைத்தோல்
இச்சமூகம் எதிர்ப்பார்க்கும் இலட்சத்தில்
மாதவருவாய்
இச்சமுகம் எதிர்ப்பார்க்கும் நடை உடை
ஆனால் சாதி ..?
அதை எதைக்கொண்டும் கடந்துவிட முடியாது
என்பதை முகத்தில் அறைந்து
என் போன்ற முட்டாள்களுக்குப்
பாடம் கற்பித்த
தமிழ்ச்சமூகம் இது.
புரட்சி பேசிய தோழர்கள்
குடும்பம் குடும்பத்திலிருக்கும்
மனைவி அம்மா அப்பா அண்ணன்
பங்காளி…
இவர்கள் ஏற்கவில்லையே என்று
காரணம் சொன்னபோது
சாதிக்கு புதுவடிவம் இருக்கிறது
என்பதை நான் புரிந்துகொண்டேன்.
அது இப்போதெல்லாம் ரொம்பவும்
நுணுக்கமாக செயல்படுகிறது.
அது ஊமைக்காயங்களை ஏற்படுத்துகிறது.
ரத்தம் சொட்டும் காயங்களைவிட
நீங்கள் செய்யும் கொலைகளைவிட
அது இன்னும் அதிகக் கொடூரமானது.
அது எப்படி இருக்கும் என்பதை
உங்கள் புரட்சியின் எந்தப்புத்தகமும்
கற்பித்துவிட முடியாது.!
தங்களைப் புரட்சியாளர்களாக காட்டுவதற்கு
சிலர் “ நான் புதியமாதவி வீட்டிலெல்லாம்
சாப்பிட்டிருக்கிறேன்.. “ என்று சொல்லும்போது
என் விடியல்கள் விழித்துக்கொள்கின்றன.
உங்கள் நட்பை ஒரு காகிதப்புன்னகையில்
கடந்துவிட முடியாமல்
இருண்டு போகிறது எம் முகம்.
என் வாழ்நாளில் இன்றுவரை
எனக்குச் சாதிச்சான்றிதழ் இல்லை.
என் பிள்ளைகளுக்கும் இல்லை.
சாதியற்று சாதிக்கெட்டு வாழ நினைத்தேன்.
வாழ்ந்துப் பார்த்தேன்.
ஆனால்…
நீங்கள் யாரும் அப்படி என்னை
வாழவிடவில்லை.
எனக்கு மட்டுமல்ல
என் எழுத்துகளுக்கும் நீங்கள் சாதி
அடையாளத்தை நிறுவ
இன்றுவரை கடும் முயற்சி செய்கிறீர்கள்..
எம் சாதிசனம் என்று எழுதியதில்லை,
எம் மக்கள் என்று எழுதும்போதெல்லாம்
எல்லாவகையிலும் வசதியற்று ஒடுக்கப்பட்டு
உழைத்து வாழும் எம் “தாராவி” சனங்களை
என் படைப்புலகமாக்கினேன்.
தாராவி குடிசை பார்ப்பனர் தவிர
அனைத்து சாதி மதமும் வாழுமிடம்
என்பதைக்கூட அறியாதவர்கள்
நீங்கள் மட்டுமல்ல..
இந்த அறிவு ஜீவிகளும் தான்.
இல்லை என்றால்
தாராவியை அவர்கள் ஏன்
“ஆசியாவின் சேரி” என்று
அடையாளப்படுத்துகிறார்கள்??
ஒரு பெண்ணாக இருப்பது மட்டுமல்ல
சாதிகெட்டுப்போயிருப்பதன்
வலியும் வேதனையும்
என்னவென்று தெரியுமா உங்களுக்கு?
நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.
எழுத்திலும் வாழ்க்கையிலும்.
வழக்கம்போல இப்பதிவையும்
நீங்கள் நின்று கொண்டிருக்கும்
சாதிப்பூமியில்
நான் யார்ப்பக்கம் நிற்கிறேன்
என்பதற்கான முன்னுரையாக
சிறுமைப்படுத்தி விடாதீர்கள்.
இதோ..
ஒரு பெண்ணாகவும்
சாதிகெட்டவளாகவும்
உங்கள் சாதிமுகத்தின் மீது
காறி உமிழும் எம்
“த்தூ”

இப்போது… முடிந்தால்
உங்கள் முகத்தை
உங்கள் மனசாட்சியின்
கைக்குட்டையை எடுத்து
துடைத்துக் கொள்ள முடிகிறதா பாருங்கள்.

Saturday, November 20, 2021

ஜெய்பீம் கொண்டாடு.. பெயரில் என்ன இருக்கிறது?

 பெயரில் என்ன இருக்கிறது?

தோழா.....
பெயரில் என்ன இருக்கிறது?
எல்லா பெயர்களும்
எல்லோருக்கும் பொருந்துவதில்லை.
பெயரில் என்ன இருக்கிறது?
திருப்பதி மொட்டையும்
திருச்செந்தூர் மொட்டையும்
ஒன்றா.. ?
மயிரு தானே!
பெயரில் என்ன இருக்கிறது?
மீனாட்சி காமாட்சி விசாலாட்சி
மாரியம்மா எல்லம்மா முண்டகண்ணி
கும்பிடும் தெய்வம்
குலசாமி
கழுத்தில் தொங்கும் தாலி
கருமாதி வீடு
எல்லாமும் ஒன்றுதான்.
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா பெயரில் என்ன இருககிறது!
தாலியைப் பார்த்து
சாதியை அறியலாம்.
தோழா நீயோ
தாலி அறுத்து திருமணம்
நடத்துகிறாய்.!
புரட்சி வெடிக்கிறது..
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா.. பெயரில் என்ன இருக்கிறது!
யாருக்கும் தெரியாத சாதி
சாவு வீட்டில்
மீண்டும் பிறக்கிறது.
போகிற இடத்திற்கு
புண்ணியம் தேட
எல்லாமும் தான்
உனக்கும் எனக்கும்.
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா..பெயரில் என்ன இருக்கிறது!
ஜெய்பீம் கொண்டாடு.
புரட்சி வெடிக்கும்
ஜீவா , பாரதி
காந்தி பகத்சிங்
உன் புரட்சிக்குரல்
எல்லைகள் தாண்டி
இலெனின் ஸ்டாலின்
சேகுவேரா வரை
அட டா..
உன் புரட்சியின் திருநாம வரிசையில்
புதைந்திருக்கிறது
தோழா..
உன் புரட்சியின் அசல்முகம்.
பெயர்கள் உனக்கு
புரட்சியின் முகமூடி
கறுப்பு சிவப்பு
எல்லா முகங்களுக்கும்
இதுதானே சொந்தமுகம்.
இன்னும் பிறக்கவில்லை
எவர் வீட்டிலும்
இவர் மட்டும் .
(அம்பேத்கர்)
அட டா..
பெயரில் என்ன இருக்கிறது!
தோழா.. பெயரில் என்ன இருக்கிறது!
ஜெய்பீம் கொண்டாடு.
உன் புரட்சியின் முகம்
ஒளிரட்டும்.
கொண்டாடு.
ஜெய்பீம் கொண்டாடு.
பெயரில் என்ன இருக்கிறது?
உனக்கும் எனக்கும்
பெயரில் என்ன இருக்கிறது?
தோழா ..
பெயரில் என்னதான் இருக்கிறது !!

Friday, November 19, 2021

வேளாண் சட்டமும் அரசியலும்

 FARM LAWS WITHDRAWN.





THE ISSUE IS GONE!
If there is NO issue
that means there is NO POLITICS.





காங்கிரசுக்கு நல்லதொரு ஆலோசனைக் குழு
தேவைப்படுகிறது. ஏற்கனவே இருக்கும்
ஹார்வேர்ட் ஆட்கள் வெள்ளைவேட்டிகள்
எல்லாம் இப்போ ஏனொ எடுபடவில்லை.
கவர்ச்சியான அரசியலுக்கு
என்னவெல்லாம் செய்யவேண்டுமோ
அதை எல்லாம் செய்யத் தெரியாமலோ
அல்லது செய்ய முடியாமலோ
காங்கிரசு முழிமுழிண்ணு பரிதாபமாக
முழிப்பதைப் பார்க்கும்போது
பச்சப்பிள்ளைக்கு கூட அழுகை வந்துவிடுகிறது.
ஞே..!
வேளாண் சட்டங்களை மோதி அரசு திரும்ப பெறுகிறது.
அப்படியானால் ,
விவசாயிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.
So there is NO ISSUE at all ,!!!
If No ISSUE then NO POLITICS .
(சரவணா.. அப்படின்னு நான் சொல்லல. டிவிக்காரர்கள்
தொண்டைவறள கத்திக்கொண்டிருக்கிறார்கள். )
இதில மோதிஜி ரொம்பவும் செண்டிமெண்ட் டச்
செய்திட்டாருனு சீக்கியர் சமூகம் பேசுவது
அரசியலா மதமா என்று தெரியவில்லை.
காரணம் வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றது
குருநானக் ஜெயந்தி அன்று.
குருநானக்கின் ஆவிதான் மோதியின் கனவில்
வந்து சொல்லியிருக்கலாம் , மோதிஜி குருநானக்கை
குருநானக் மக்களை மதிக்கும் மாமனிதர் என்று
அவர்களைக் கொண்டே பேச வைக்கும்
இன்னொரு உணர்ச்சி அரசியல் திடீரென காட்டாற்று
வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டத்தை
இந்து –சீக்கியர் போராட்டமாக”
திசைமாற்ற நடந்த முயற்சிகளை
மோதி முறியடித்துவிட்டார்”
என்று புதுக்கரடி விடுகிறார்கள்.
சும்மா சொல்லப்பிடாது..
இப்படியான ஒரு கற்பனை எந்த ஒரு புனைவிலும்
இதுவரை வந்திருக்காது..
காங்கிரசு.. இந்தக் கவர்ச்சி அரசியலை
எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்?
சீக்கியர்கள் – டில்லி – காங்கிரசு இன்னொரு
கறைபடிந்த சரித்திரப் பக்கங்கள் புரட்டப்படுமோ
என்று காங்கிரசு இளசுகள் பயப்படுகிறதா..!
காங்கிரசு ஏன் தமிழக அரசியலில் இருந்து
பாடம் கற்றுக்கொள்ளக் கூடாது?
தந்தையின் அரசியல் அதிகாரம்..
வாரிசு அரசியல் ..
எதுவாக இருந்தாலும்
பாவ புண்ணியத்தில்
அப்பா வேறு பிள்ள வேறு..
அவரவர் கர்மத்திற்கு அவரவர் பொறுப்பு..
அவரவர் பசிக்கு அவரவர்தானே சாப்பிடவேண்டும்.
இப்படியாக எத்தனை தத்துவங்கள்
நம்பிக்கைகள் நம்மிடம் வாழ்கின்றன.
அதில் எதையாவது எடுத்துவிட
என்ன தயக்கம்?
என்ன நான் சொல்றது சரிதானே!
இது ஒன்றும் புதிதல்லவே.
ஆகையினால்,
புதுக்கரடி ஊரில் புகுந்து வேட்டையாடுவதற்கு முன்
இது பொம்மைக்கரடி என்று எடுத்து தூக்கிப்போட்டு
விளையாடிவிட வேண்டும்.
இப்போது எதிரணிக்கு தேவை..
களத்தில் சிக்ஸர் அடிப்பவர் மட்டுமல்ல,
பந்தைப் பிடித்து வீசி
அவுட் ஆக்குபவர்களும் தேவை.
அரசியல் ஒரு விளையாட்டு.
தொடர் விளையாட்டு.
பொதுஜனம் எப்போதும் பார்வையாளர்கள் மட்டுமே.
இந்திய மக்களாட்சி விதிகளில் முக்கியமானது
முதல் 5 ஆண்டுகள் ஆட்சியில் கட்டி
எழுப்பப்பட்டிருக்கும் பிம்பங்கள்
ஊடகங்கள் ஊதிப்பெருக்கிய
விசுவரூபங்கள்..
அடுத்து தொடரும் ஐந்தாண்டு காலத்தில்
சரிந்துவிடும்.
எச்சரிக்கை.
ஜன நாயக முதலாளித்துவ கவர்ச்சி அரசியலின்
அசல்முகம் ..
அரசியல் எழுதும் புதிய அத்தியாயங்கள்.


1

Friday, November 12, 2021

ஜெய்பீம் அசல் பார்வதியும் திரைப்பட செங்கேணியும்.

 


வருஷத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளி போல காலச்சுவடும் வருஷத்திற்கு ஒருமுறையாவது தந்தை பெரியார் பற்றி ஒரு கட்டுரை வெளியிடுவார்கள்..! அதுபோல தான் தமிழ் சினிமாவில் " ஜெய் பீம்" .

 எது எது எந்தெந்த காலத்தில் சந்தையில் விற்பனையாகுமோ அதை தயாரித்து வெளியிடுவது ஜனநாயக முதலாளித்துவம். அவ்வளவுதான்.

 ஜெய் பீம் அட்டைக்கத்தி அல்ல ..

 அது எம் போராயுதம்.

 ஜெய் பீம் புனைவுகளுக்குள் அடங்கும் பூமியல்ல. 

அது எங்கள் போராட்டக் களம். 

இந்தப் புரிதலுடன் தான் ஜெய் பீம் திரைப்படத்தை யாமும் கண்டோம். 

நிஜவுலகின் பார்வதிகளை நோக்கிப் பயணிப்போம். 

 இனி கீழ்க்கண்ட தோழர் Yamuna Rajendran முகநூல் பதிவை மீண்டும் வாசிக்கவும். /

ஜெய் பீம் படம் உருவாக்கம் தொடர்பான விவாதங்களில் மனத்தை மிகவும் வருத்தமுறச் செய்தவிஷயம் ஜெய்பீம் என்கிற படம் வெளியாவதற்கு முன்போ வெளியான பின்போ அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பார்வதியம்மா சொல்லும் நேர்காணல்.

 நிஜத்தில் இன்றும் வாழும் மனிதர்களாக ஜெய்பீம் பட நாயகன் சந்துருவுக்கு உள்ள அதே முக்கியத்துவம் செங்கேணி பாத்திரத்திற்கு உரியவரான பார்வதி அம்மாவுக்கு உண்டு. ஊடக நேர்காணல்களிலும் சரி பிம்பக் கட்டமைப்பு தொடர்பான ஊடகக் கட்டுரைகளிலும் சரி சந்துரு பெற்ற முக்கியத்துவம் பார்வதி அம்மா பெறவில்லை. இது சமநிலை நோக்கு அல்ல. பன்டிட் குயின் படம் குறித்த காப்புரிமைப் பிரச்சினையை அருந்ததிராய் எழுப்பினார். நிஜத்தில் ஜெய்பீம் படக் கதையின் காப்புரிமை ஆதாரத்தில் சந்தேகமில்லாமல் பார்வதி அம்மாவினுடையது. ஜெய் பீம் படத்தின் இறுதிக்காட்சி அரசு வழங்கிய இடத்தில் கட்டப்பட்ட கல்கட்டிடத்தில் செங்கேணி தனது கைக் குழந்தையுடன், மகளுடன் குடியேறுவது போல இருக்கிறது. நிஜத்தில் பார்வதி அம்மா ஓலைக்குடிசையில் வாழ்கிறார்.

 இங்கு உலக சினிமாவில் நடந்த சில மாற்றங்களைச் சொல்கிறேன். சலாம் பாம்பே படம் மும்பை தெருவில் வாழும் குழந்தைகள் பற்றியது. மீரா நாயர் அப்படத்தின் பின் இவ்வாறு வாழும் குழந்தைகளுக்கு பராமறிப்பு இல்லம் ஒன்றை உருவாக்குகிறார். இது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சேரிச் சிறுவனாக நடித்த சிறுவனுக்கு அதன் இயக்குனர் வீடுகட்டித்தருவதோடு அவனது கல்விச்செலவை ஏற்கிறார். கணிசமான நிதியுதவி செய்கிறார். இது தாராளவாத உதவிகள்தான். அரசே இதற்கு தீர்வு காணவேண்டும் என்பதும் உண்மைதான். என்றாலும், திரைப்படம் ஒரு வணிகம் எனும் அளவில், இவற்றிற்கு ஆதாரமான ஏதிலிகளான மனிதர்களைப் பற்றி கொஞ்சமேனும் பொறுப்பெடுக்க வேண்டியது அதனை உருவாக்குபவர்களது கடமை.

 சூர்யா அரசிடம் பங்களித்த பழங்குடி மக்கள் நிதியான இரண்டு கோடி ரூபாய்கள், முதல்வர் ஸ்டாலினிடம் வெளிப்பட்டிருக்கும் அம்மக்கள் பாலான பொறுப்புணர்வு போன்றன தன்னேரில்லாத நகர்வுகள். என்றாலும், ஜெய்பீம் படத்திற்குத் தொடர்பில்லாத ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாவுக்குச் செய்யும் உதவியை விடவும் கூடுதல் பொறுப்பு பார்வதி அம்மாவைப் பொறுத்து படத்தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் உண்டு. 

 திரைப்படம் சமூக மாற்றத்தின் கருவி என்பது அப்போதே மெய்ப்படும்.. 

 நன்றி: Yamuna Rajendran

Wednesday, November 10, 2021

மன்னாதி மன்னனும் சங்க இலக்கியமும்

 


மன்னாதி மன்னனும் சங்க இலக்கியமும்.


எம் ஜி ஆர் நடித்த புகழ்பெற்ற திரைப்படம் மன்னாதிமன்னன்.
பத்மினியும் அஞ்சலிதேவியும் அவருடன்.
ஒரு முக்கோணக்காதல் கதை.
இப்படம் கண்ணதாசனின் ஆட்டனத்தி- ஆதிமந்தி காவியத்தின்
இன்னொரு பதிப்பு. இதையே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
“சேரதாண்டவம்”
என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.



தானுமொரு ஆடுகளமகளே என்று ஆதிமந்தி தோழியிடம்
சொல்லும் சங்கப்பாடல் வரிகள்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே
இதையும் தாண்டி ஆதிமந்தி போல நானும்
அலைவேனோ என்று வெள்ளிவீதியார்
பாடலில் பெண்ணொருத்தி தன் துயர் உரைக்கிறாள்.
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோபொலந்தார்
ஆனால் மன்னர் ஆட்சி தமிழகத்தில் ஆட்டனத்தி
சேர இளவரசனாகவும் ஆதிமந்தி சோழ இளவரசியாகவும்
அரண்மணை காதலாகிறது.
அதையே சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டமும்
"மன்னன் கரிகாலன் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇ..
எப்போதுமே நம் தமிழ்ச்சமூகத்திற்கு குடிசைகளின்
காதல்கதைகளை விட அரண்மனை காதல் கதைகள் காவிய ரசனைக்குரியதாகின்றன.
அதிலொரு மயக்கம்..
அந்த மயக்கத்தை எம் ஜி ஆர் தன் காதல் காட்சி
பாடல்களில் எப்போதும் பயன்படுத்திக் கொள்வார்,
பெரும்பாலும் அவர் ஒரு காட்சியாலாவது
அரச உடையில் வந்து காதலிப்பார்.
ரிக்சாகாரன் படத்தில் வாத்தியார் ஏன்
அரசகோலத்தில் வந்து காதல் செய்கிறார்
அவருக்கு தேவதைகள் பூச்சொரிகிறார்கள்
என்றெல்லாம் நமக்கு கவலை இல்லை!
அவர் கதைகளை விரும்பி பார்த்த அன்றைய
உழைக்கும் மக்களுக்கு அதுவும் ஒரு போதையாக இருந்தது.
எம் ஜி ஆர் எப்போதுமே அதிகமாக
குடிசையில் காதல் செய்யமாட்டார்!
அரச உடையலங்காரம் அவருக்கு கச்சிதமாகப்
பொருந்தி இருக்கும். நம் பாடலாசிரியர்கள்
அரண்மனை காதலை மெருகூட்டி
பார்வையாளருக்கு போதையூட்டுவதில்
பெரும் தமிழ்த்தொண்டாற்றி இருப்பார்கள்.
இப்படியாக ஆட்டனத்தி ஆதிமந்தி மருதி காதல்கதை..
ஆட்டனத்தியாக எம் ஜி ஆர்,
ஆதிமந்தியாக அஞ்சலிதேவி,
மருதியாக பத்மினி..
என்று மன்னாதி மன்னனாகி
தமிழ்ச்சமூகத்தில் எம் ஜி ஆர் மன்னாதி மன்னன் ஆனார்.
தாயே .. காவிரித் தாயே ..
பொன்னிப் பெருந்தாயே
புகழ் வளர்த்த காவிரியே
தென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ
தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
என்று அஞ்சலிதேவி அதாவது ஆதிமந்தி காவிரிக்கரையோரமாக
தலைவிரிக்கோலத்தில் பாடல் காட்சி..
அப்போது பட்டிமன்றங்கள் வளரவில்லை என்பதால்
காதலில் சிறந்தவள் ஆதிமந்தியா மருதியா?
என்று யாரும் ஆரம்பிக்கவில்லை!
ஆடிப்பெருக்கு மருதியின் நினைவாக என்று சொல்லும்
இன்னொரு கிளைக்கதை எல்லாம் உண்டு.
எது எப்படியோ..
இந்த சங்க இலக்கிய காதல் கதை, கண்ணதாசன் பாரதிதாசன்
என்று கவியுலகம் மட்டும் கொண்டாடவில்லை.
எம் ஜி ஆருக்கும் ரொம்பவும் நெருக்கமான
காதல்கதையாகி அவர் தன்னையே ஆட்டனத்தியாக
பொருத்திக்கொண்டு வலம் வந்தார்., பெரும்பாலும்
எல்லா படங்களிலும்!
எம் ஜி ஆர் ஆட்டனத்தி என்றால்
யார் ஆதிமந்தி ?
யார் மருதி?
இப்படியான கேள்விகள் எனக்கும் வந்தது உண்டு.
அட போங்கய்யா.. எப்படிப் பார்த்தாலும்
எம் ஜி ஆர் தான் ஆட்டனத்தி.
எம் ஜி ஆர் தான் மன்னாதி மன்னன்.

Monday, November 8, 2021

அம்பேத்கரும் ஆதிவாசிகளும்

 அம்பேத்கரும் தொல்பழங்குடி மக்களும்.










கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்.
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்.
நாங்கள்
கடவுள்களுக்கு
முன்பிறந்தவர்கள்..
(இந்திரனின் மொழியாக்கத்தில் தொல்பழங்குடியின் குரல்)
பாபாசாகிப் அம்பேத்கர் ஆதிவாசிகள் – schedule tribes - குறித்து
என்னமாதிரியான கருத்தை வைத்திருந்தார்?
அவர் ஆதிவாசிகளை கண்டு கொள்ளவில்லையா?
இப்படியான பல சர்ச்சைகள் இன்றும் முன்வைக்கப்
படுகின்றன.

இந்தியாவில் வாழும் தொல்பழங்குடி மக்கள்
அனைவரும் அதிகாரத்தின் பாதிப்பு என்ற ஒரு புள்ளியில்
மட்டும் தான் இணைகிறார்கள்.
தமிழ் நாட்டின் இருளர்களும் மத்தியபிரதேசத்தின்
‘கோண்ட்”தொல்பழங்குடிகளும் வேறு வேறானவர்கள்.
மராட்டிய மண்ணின் மகர்களும்
தமிழகத்தின் பறையர்களும் வேறு வேறானவர்கள்.
ஆனால் அரசு அதிகாரத்தின் பாதிப்புக்கு உள்ளாகும்
மக்கள் என்ற வகையில் schedule caste & schedule tribe
என்று வகைப்படுத்தப் படுகிறார்கள்.
(எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒரு நினைவூட்டல்!)
அம்பேத்கர் தொல்பழங்குடி மக்கள் குறித்து பேசியதை
“அசாம் டைம்ஸ்” வெளியிட்டிருக்கிறது.

link below:

https://assamtimes.org/node/22262


Sunday, November 7, 2021

ஜெய்பீம் அட்டைக்கத்தி அல்ல.


 நம் எல்லோருக்கும் ஏன்

ஜெய்பீம் திரைப்படம் பிடித்திருக்கிறது?
எல்லோரும் ஏன் கொண்டாடுகிறோம்?
தமிழ்ச்சமூகத்தின் அகம் எப்போது
இவ்வளவு ஈரமுடையதாக மாறியது!
காரணம்.. இந்த திரைப்படம் நம் யாருடைய
அடிவயிற்றிலும் கைவைக்கவில்லை.
சமூகத்தின் மையத்தைவிட்டு விலகிய
பிரச்சனைகளைப் பேசுவது நமக்கு
எப்போதும் எளிதாகவே இருக்கிறது.

ஆம்.
இருளர் சமூகம் நம் சமூகத்தின் ஒரு பகுதி தான்
என்றாலும் நம்மோடு கலந்திருக்கவில்லை.
காக்கி உடை அணிந்த காவல்துறையின்
அட்டூழியங்களை வெளிப்படையாக காட்டுவதும்
நம் யாருக்கும் எவ்விதமான உறுத்தலையும்
தரப்போவதில்லை!
காவல்துறையின் வெறித்தனமான செயல்களுக்கு
யார் காரணம்? ஜெய்பீம் படத்தில் குற்றம் சுமத்தப்
பட்டிருக்கும் போலீஸ்கார்ர்கள் தங்களுக்கு
“மேலிடத்து பிரஷ்சர் இருந்ததால் இப்படி நடந்து
கொண்டதாக சொல்வது புனைவு அல்ல. அதுதான்
காவல்துறையின் அகம். அதை இயக்கும் அதிகார
வர்க்கம் யார்? இருளர்களுக்காக போராடிய போது
ஆட்சியில் இருந்தவர்கள் யார்? அவர்களைக் காட்டினால்
அது அடிவயிற்றில் தீ வைத்த மாதிரி இருக்கும். அதை
தவிர்ப்பதுதான் சினிமாவை தயாரித்தவர்களின்
புத்திசாலித்தனம்!
அடுத்து நாம் மிகவும் கொண்டாடிய திரைப்படம்
சர்தார் உத்தம்.
வரலாற்றில் இரத்தக்கறை படிந்த காட்சிகள்..
இங்கே குற்றவாளிகள் அன்றைக்கு இந்தியாவை
ஆட்சி செய்த வெள்ளையர்கள். எனவே நமக்கு
எந்தவித உறுத்தலும் இல்லாமல் “அச்சச்சோ..”
என்று உச்சுக்கொட்டி, பொலபொலனு கண்ணீர்
விட்டு படம் பார்த்துவிட்டு கனத்த மனசுடன்
வெளிவந்துவிட முடிகிறது. சம்பவம் உண்மைதான்
என்றாலும் இதுவும் நம் மனசாட்சியைத் தொடாமல்
சமகாலத்தை மறக்கடிக்க செய்கிறது.
காதல், முக்கோணக் காதல், ஒருதலைக்காதல் என்று
காதல் படங்கள் காலம் மாறி ஷங்கர் காலத்தில் ஊழல்
கறுப்புபணம் திரைப்படமாகியது. அதுவும் மாறி
விவசாயம், போதைப்பொருள், பெண்களுக்கு நிகழும்
பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள் என்று நம்
திரைக்கதைகள் திரும்பியது.
இன்று இந்த மாற்றங்களின் இன்னொரு முகமாக..
ஜெய்பீம் ..
ஜெய்பீம் என்றால் புதுப்புது விளக்கங்கள்
இப்போது வருகின்றன. அசலின் உருவத்தையும்
உள்ளடக்கத்தையும் இவர்கள் மாற்றிவிடுவார்களோ
என்று அச்சமாக இருக்கிறது!
இதே ஜெய்பீம்..
சாதிய சுடுகாடு பற்றி பேசிவிடமுடியாது.
சாதியப் படிநிலைகளைப் பற்றி பேசிவிடமுடியாது.
ஜெய்பீம்.. சமகாலத்தில் நடந்த சாதி ஆணவக்கொலைகள்
பற்றி பேசிவிட முடியாது!
ஜெய்பீம்.. சமூகம் குடியிருக்கும் ஊரும் சேரியும்
இன்னும் ஒன்றாகவில்லை என்பதை பேசிவிட
முடியாது.
தலித்துகளின் குடிசைகள் எரிந்ததை ஜெய்பீம்
காட்சியாக்கிவிட முடியாது!
2002ல் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதிஜியிடம்
“நீங்கள் இசுலாமியர்கள் தாக்கப்பட்டது குறித்து
வருத்தப்படுகின்றீர்களா ? “
(ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஜூலை 2013)
என்று கேட்டபோது அவர் சொன்னார்
“ நம் வாகனம் சாலையில் வேகமாகப் போகும்போது
குறுக்கே நாயோ எலியோ ஏதேனும் வந்து விழுந்து
செத்தால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? “
என்று திருவாய் மலர்ந்தார். இந்த அதிகாரத்தின் ஒரு
துளியைக் கூட ஜெய்பீம் காட்சிப்படுத்திவிட முடியாது.
மையத்தை விட்டு விலகி நிற்பதும்
எல்லா வன்முறைகளுக்கு காரணம் போலீஸ்தான்
என்று கையை நீட்டுவதும் நமக்கு எளிது.
ஜெய்பீம் திரைப்படமும் சர்தார் உத்தம் திரைப்படமும்
அதனால் தான் நம் அனைவருக்கும் மிகவும்
பிடித்திருக்கிறது. நாம் கொண்டாடுகிறோம்.
இப்போதைக்கு இதாவது சாத்தியப்பட்டிருக்கிறதே
மெல்ல மெல்ல தான் கொண்டுவரமுடியும்
என்று நினைப்பீர்கள்.
நானும் இப்போதைக்கு அப்படி நினைத்து கொள்வது
எனக்கும் தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆனால் இதுவல்ல.. ஜெய்பீம்.
இதுவும் தான் ஜெய்பீம்.
ஆனால் ஜெய்பீம் என்பதை
மையத்திலிருந்து விலக்கி விடாதீர்கள்..
அது சாதிப்படி நிலையில் இறுகிப்போயிருக்கும்
நம் சமூகத்தை உடைக்கும் பேராயுதம். போராயுதம்.
அதை உங்களுக்கு வசதியாக
அட்டைக்கத்தி ஆக்கிவிடாதீர்கள்.
ஜெய்பீம் அட்டைக்கத்தி அல்ல,
ஜெய்பீம்.
ஜெய்பீம்
ஜெய்பீம்.

#ஜெய்பீம்

#jaiBhim