Wednesday, May 30, 2018

cerritos Library (California, USA)


Cerritos libraryசெரிடோஸ் பகுதியில் இருக்கும் இந்த லைப்ரரிக்குள் நுழைந்தவுடன்
அப்படியே கருவறைக்குள் நுழைந்துவிட்ட பக்தனைப் போல ஒவ்வொரு
புத்தகமாகத் தொட்டு தொட்டு கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
யாராவது பார்ப்பதற்குள் எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நூலகத்தின்
ஒரு கோடியில் ஒதுங்கி கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
போனவுடன் ஒரு பெரிய மீன் தொட்டி. குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும்
கவர்ந்திழுக்கிறது. இதைப் போலவே ஒரு மீன் தொட்டியை துபாய் மால் பகுதியிலும்
பார்த்திருக்கிறோம். கிரவுண்ட் ஃப்ளோர் முழுக்கவும் சிறுவர்களுக்கான நூலகம்.
நடுவில் பெரிய மரம். குட்டி குட்டியான பெஞ்சுகள். இடையிடையே டைனசோர்.
சித்திரக்கதைகள் அடங்கிய புத்தகவரிசை. எழுத்துக்கூட்டி வாசிக்கும் முன்பே
குழந்தைகளை அங்கு அழைத்து வருகிறார்கள். அக்குழந்தைகள் அவர்களே
புத்தகத்தின் வண்ண மயமான அட்டைப்படத்தைப் பார்த்து எடுத்துக் கொண்டு நடக்கிறார்கள்.
பிஞ்சு விரல்கள் புத்தகங்களுடன் நடக்கும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அம்மாக்களும் அப்பாக்களும் சித்திரம் பார்த்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
சீனம், ஸ்பானிஷ், குஜராத்தி என்ற பிற மொழி புத்தகங்களைப் பார்த்தவுடன்
அவர்கள் குழந்தைகள் அவரவர் தாய்மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும்,
தாய்மொழி குழந்தையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறது என்பதை
மிகவும் தெளிவாக அறிந்திருப்பது கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. தமிழ்ப் புத்தகங்கள்
இருக்கின்றனவா என்று தேடிக் கொண்டே வந்தேன். பெரிய மரத்தின் விழுதுகள்
முடியும் பகுதியில் ஒரு அலமாரியில் தமிழ்ப் புத்தகங்கள்
ஆஹாகைகள் பரபரத்தன. ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் புரட்டினேன்.
ஆங்கில நர்சரி பாடல்களின் தமிழாக்கம் என்ற வகையில் அப்புத்தகங்கள்
அமைந்திருந்தன.
இன்னும் கொஞ்சம் யாராவது முயற்சி எடுத்தால்,
கை வீசம்மா.. கை வீசு
கடைக்குப் போகலாம் கைவீசு..”
 மாதிரியான சிறுவர்களுக்கான ஒரிஜினல் தமிழ்ப் பாடல்களை நூலகத்தில்
இடம் பெற செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. 
தானியங்கி படிகளில் எறி முதல் மாடி, இரண்டாம் மாடிக்கு சென்றால் 
உலகம் உங்கள் கைகளில் வந்து உட்கார்ந்து கொள்கிறது .. 
இது  மனப்பிரமை அல்ல. 
ஆய்வு மாணவர்கள், புத்தகப்பிரியர்கள், லைப்ரரியில் சந்திக்கும் நண்பர்கள்,
காதலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள்.. என்னைப் போல சில பரதேசி பயணிகள்..
லைப்ரரிக்கு போனவுடன் எந்தப் பகுதிக்குள் போவது,, 
எதை வாசிக்க எடுப்பது..
இப்படியாக .. அங்குமிங்கும் கால்கள் நடக்க.. இப்படியே திருவிழாவைப் பார்த்த
சிறுமியைப் போல அலைந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த உதவியாளர்
அருகில் வந்து .. “என் உதவி வேண்டுமா?” என்று கேட்கும் வரை.. என் கண்கள்
அலைபாய்வதைத் தடுக்க முடியவில்லை.  Free wifi, PC, reading tables with llights.., 
small reading rooms .. sofa chairs..
எல்லா வசதிகளுடனும் ஓர் அரசு பொது நூலகம் 18000 சதுர அடியில்
பிரமாண்டமாய்.. என்னை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.
கடிகாரத்தின் முட்கள் என்னிடம் தோற்றுப்போகின்றன.
நேரம் போவது தெரியவில்லை.
நான் புத்தகங்களுக்குள் கரைந்துப் போகிறேன்.
மதுரைப் பல்கலை கழகத்தின் நூலகத்தில் எல்லா புத்தகங்களிலும்
கைரேகைப் பதிந்திருக்கும். 
இன்று அது சாத்தியமில்லையோ.
இந்த நூலகம் தன் பிரம்மாண்டத்தில் என்னை வசீகரித்துக் கொள்வது
தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிவலிங்க தரிசனம் போல


நான் வெளியில் வருகிறேன்.
சின்ன சின்ன நீர்க்குழாயில் நீர்க்குமிழிகள்..
கீழிருந்து மேலாக நுரைப்பொங்க கொப்புளித்து
குதியாட்டம் போடுகின்றன.
குழந்தைகள் அதனடியில் விளையாடுகிறார்கள்.
கைகளில் இருந்தப் புத்தகங்களை ஒரு ஓரமாக பாதுகாப்பாக வைத்துவிட்டு
நானும் அந்த வளைவுக்குள் ..
நீர்த்துளிகள் முகத்தில் படும்போது ..
சில்லென்ற காற்றின் வருடல்.
பிராமாண்டங்கள் ஒரு நொடிக்குள் .. ஒரு துளியில்..
கரைந்து காணாமல் போகின்றன.
நான் மீண்டு வருகிறேன்.

Tuesday, May 29, 2018

கொஞ்சம் உளற வேண்டும்..


கொஞ்சம் உளற வேண்டும்.
உளறுவது சுகமானது.
தண்ணிப் போட்டு உளறுவது என்பது சினிமாத்தனமானது.
ம்கூம்.. அப்படி எந்த மப்பும் இல்லாமல்
மனம் போகிற போக்கில் உளற வேண்டும்.
உளறுவதில் எதாவது தத்துவம் இருப்பதாக
நீங்கள் சிலாகித்தால் நல்லது.
தத்துவங்கள் எல்லாம் உளறல்கள் தான்
என்பதை தத்துவவாதிகளும் எப்போதாவது
ஒத்துக் கொள்கிறார்கள்.
கொஞ்சம் உளற வேண்டும்.
உளறும் போது கெட்ட வார்த்தைகளைச் சேர்க்கலாமா கூடாதா
இதுவும் ஒரு பட்டிமன்றத்திற்கான    தலைப்பு தான்.
அதற்காக பட்டிமன்றமே உளறல்களின் மேடை என்று
சொல்லிவிட முடியுமா..?
என் பட்டிமன்ற நண்பர்கள் கோவித்துக்கொள்ள மாட்டார்களா?
அவர்களுக்காக எத்தனை முறை தொலைக்காட்சி பட்டிமன்றங்களைப்
பார்த்து அவர்கள் போட்டிருந்த சட்டைக்கலர் முதல்
அவர்கள் காப்பி அடித்த ஜோக் வரை
ரசித்திருக்கிறேன். 
எனக்கு என் நண்பர்கள் அதிமுக்கியம்.
அதனால் பட்டிமன்றங்களை விட்டுவிடுவோம்.
தலைவர்கள் தங்கள் உளறல்களுக்காகவே
மா நாடுகள் நடுத்துவதாக தொண்டர்கள்
ரகசிய செய்தி அனுப்புகிறார்கள்.
பாவம் அவர்கள்..
பூனை மீது மதில் ஏறி குதிப்பதற்கெல்லாம்
கை தட்டும் பாக்கியசாலிகள் அவர்கள்.

அவள் பேரழகி என்று அவன் உளறுவதும்
நீ யே என் காதல், 
காதல் காதல் காதல்
காதல் இல்லையேல் சாதல் சாதல் என்று
அவள் உளறுவதும் 
அபத்தமாக இருந்தாலும் 
காதலர்களுக்கு உளறுவதற்கு லைசன்ஸ் உண்டு.

கணவனின் உளறலை மனைவியோ
மனைவியின் உளறலைக் கணவனோ
காது கொடுத்து கேட்காமல் இருப்பது
இருவருக்கும் நல்லது.
தற்காத்து.. என்று எழுதிய வள்ளுவன் கூட
சொற்காத்து என்று சொல்லுவது
இந்த உளறலுக்குப் போடுகிற கண்டிஷனாக
இருக்குமோ என்று பெண்ணியவாதிகள்
கொதித்து எழுந்துவிடக்கூடாது.
ஆண்களின் பார்வையில் 
உளறலுக்கு பொருள் காண்பது 
அகராதியுடன் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது.

இன்னும் உளறிக்கொட்ட நிறைய இருக்கிறதா…?
வாருங்கள்.. உளறுவோம்.
உளறுவது உடம்புக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் நல்லதாம்.
வாருங்கள் .. கொஞ்சம் உளறுவோம்.Saturday, May 26, 2018

இந்திய வங்கிகள் ஒளிர்கின்றன.


இரண்டே வருஷத்தில் நீங்க உலகப் பணக்காரர் ஆகிவிடலாம்!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முதலில் பிஜேபியின் பக்தராக
வேண்டும். அதன் பின் ஏதாவது பிசினஸ் ஆரம்பிங்கோ.
பேரீச்சம் பழத்திற்கு ஈயம் பித்தளைனு பிசினஸ் செய்தா கூட ஓகே தான்.
அதன் பின் வங்கியில் நுழைந்து லோனுக்கு அப்ளை செய்யுங்க.
ஒரே வங்கியில் லோன் கேட்கப்பிடாது. ஒரு பத்து பதினைந்து வங்கியில்
லோன் கேளுங்க. லோன் கிடைக்கும்ங்கே. அதன் பின் ஒரு வங்கியின் கடனை
இன்னொப்ரு வங்கியில் லோன் வாங்கி வெறும் வட்டித்தொகையை மட்டும்
ஒரு வருஷத்திற்கு கட்டிட்டு வாங்க. அதாவது அப்படியே வாங்கின பணத்தில்
10 விழுக்காட்டை இப்படியே ரோட்டேஷனில் விடுங்க. பெரிசா ஒரு தொகை
கைக்கு வந்தவுடன் ரெடியா வச்சிருக்கிற பாஸ்போர்ட், விசா, குடியுரிமை
வச்சிக்கிட்டு இந்தியாவை விட்டு கம்பி நீட்டிருங்க.
இதுதான் இப்போ லேட்டஸ்ட்டா ஓடிட்டிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டோரி.


***


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 
புள்ளிவிவரங்களின் படி
மோதி யின் பிஜேபி ஆட்சி காலத்தில் வங்கிகளில்
நடந்த தில்லுமுல்லுகள்
அதற்கு முந்திய காங்கிரசு ஆட்சியில் நடந்த ஏமாற்றுகளை எல்லாம்
தூசியைப் போல ஊதித்தள்ளிவிட்டு 
பெரிசா ரொம்ப பெரிசா ஒளிருதாம்
ரிசர்வ் வங்கி தான்
இதை ஒத்துக்கொண்டு தகவல் தந்திருக்கிறது. 
***
நானும் ஒரு வங்கியில் தான் வேலை பார்த்திருக்கேன். என்ன ப்ரயோஜனம்
சொல்லுங்க! நானெல்லாம் வேஸ்ட் ப்பீஸ். ஒத்துக்கறேன். 

Friday, May 25, 2018

இந்தியப் பொருளாதர அடியாட்கள்

இந்தியப் பொருளாதர அடியாட்கள்
யார் இவர்கள்?
இவர்களை உங்களுக்கும் எனக்கும் தெரியும்.
 இவர்கள் அதிகாரத்தின் உச்சத்தில் 
இருப்பவர்கள் மட்டுமல்ல்
இவர்கள் இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த
வந்தச் செம்மல்கள் 
அப்படித்தான் அவர்களை எல்லாம் ஊடகங்கள் ஊதித்தள்ளிய போது
அந்தப் புள்ளிவிவரங்களில்
யார் தான் மயங்கவில்லை
சொல்லுங்கள்!
இவர்களை உங்களுக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்.

Oriental Cerámics ல் வேலைப் பார்த்தவர் 1976 ல் 
அந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்தமாக 
ஒரு காப்பர் ஸ்க்ரேப்ஸ் பிசினஸ் தொடங்கியவர் தான்
இன்றைய வேதந்தாவின் உடமையாளர் அனில் அகர்வால்.
அது எப்படி
1993 ல் தன்னுடைய முதல் public issue 
கொண்டுவந்த ஸ்டெர்லைட் 
2003 ல் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பட்டியலில் இடம் பெற்ற
முதல் இந்திய கம்பேனியாக அதீத வளர்ச்சியை எப்படி எட்டிப் பிடித்தது
இதற்காக மிகவும் கடுமையாக உழைத்த 
மாபெரும் புத்திசாலிகள்  
யார் யார்
எத்தனை சின்ன மீன்களை விழுங்கி செரித்து
தன்னை அசுர பலத்துடன் காட்டிக்கொள்கிறது வேதந்தா
வேதந்தா கட்ட வேண்டிய
வரி பாக்கி எவ்வளவு
இந்திய அரசுக்கு இதனால் ஏற்பட்ட இழப்பு தொகை
எவ்வளவு? ஏன் ஆளும் கட்சியும் சரி எதிர்க்கட்சிகளும் சரி.. 
இதை எல்லாம்
பேசுவதே இல்லை? !! 
இந்தியப் பொருளாதர அடியாட்களை
உங்களுக்குத் தெரியும்.
உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும்.


Saturday, May 19, 2018

May 19, 2009 கொழும்பு விமானநிலையத்தில் நான்..


May 19, 2009 ல் கொழும்பு விமான நிலையத்தில் நான்

இப்போது நினைத்தாலும் உடல் சில்லிட்டு உறைந்து போகிறது.
வரலாற்றின் அந்தக் கொடுமையான தினத்தில் நான் அந்த மண்ணில்
நிர்கதியாக நின்று கொண்டிருந்தேன். அதுவும் என் குடும்பத்துடன்.
பாங்காக்கிலிருந்து மும்பைக்கு வரும் வழி.  அதுவும் ஶ்ரீலங்கா
விமானத்தில் பயணம். கொழும்பு வழியாக எங்கள் பயணம். இந்திய அரசு
மீது அசாத்தியமான நம்பிக்கையுடன் இருந்த காலக்கட்டம். எப்படியும்
இந்திய அரசு எதாவது செய்துவிடும். தமிழக அரசின் கெடுபிடி அதிகரிக்கும்
என்றெல்லாம் தவறாக ஊட்டப்பட்ட நம்பிக்கையில் -குருட்டு நம்பிக்கையில்-
காத்திருந்த தருணம்.
கொழும்பு நகரில் இறங்கியுவுடன் நிலைமை கைமீறிப் போய்விட்டதை அறிந்து
கொள்கிறேன். கால்கள் நடுக்கமெடுக்கின்றன. என் கணவர் சங்கர் என் குழந்தைகளை
என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க வேண்டும். பயப்படக்கூடாது, டிவியில் காட்டப்படும்
எந்தக் காட்சிகள் குறித்தும் மும்பையில் வீடுபோய் சேரும் வரை எதுவும் பேசக்கூடாது
என்று சொல்லி அழைத்து வருகிறார். மும்பை விமானத்திற்கு 4 மணி நேரம் நாங்கள்
விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை. டிவி திரைகளில் காட்சிகள் ஓடுகின்றன.
அதைக் கொண்டாடிய சிங்கள முகங்கள் .. ஆண்களும் பெண்களும் கூடி பேசி சிரித்து
ஆராவாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது நான் என்ன மன நிலையில் இருந்திருப்பேன்
என்று என்னால் முழுமையாக வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. எனக்குள் ஒரு நெருப்பு..
நானே அக்னியாகி அத்தருணத்தில் என்னை எரித்துக்கொண்டு எல்லாவற்றையும் எரித்துக்
கொண்டு இந்து மாகடலில் கரைந்துவிட மாட்டோமா என்றிருந்தது. என்னால் எதுவும் செய்ய
முடியாது என்ற கையறுனிலை இன்றுவரை குற்ற உணர்வுக்கு தள்ளுகிறது.
உடல் அனலாகக் கொதித்தது. தலை விண்விண் என்று வலிக்க ஆரம்பித்தது.
பாத்ரூமிறிகுள் நான் போவதும் திரும்புவதுமாய் இருப்பதை அவர்கள் கவனிக்க
ஆரம்பித்தார்கள். நான் போய்வந்தவுடன் பாத்ரூமுக்குள் போய் அறையைக் கண்காணித்தார்கள்.
அவள் கண்முன்னாலேயே பேசினில் வாந்தி எடுத்து தொலைத்தேன். அவள் முகச்சுழிப்புடன்
என்னைப் பார்த்தாள்.
நான் வெளியில் வரவும் அவளும் அவளுடன் இன்னும் இரு ஆண்களும் பெண்களும்
என்னைச் சுற்றி நின்றார்கள். என் பாஸ்போர்ட் டிக்கெட் விவரங்களை வாங்கிப் பரிசோதித்தார்கள்.
வெட்கத்தை விட்டு சொல்கிறேன்.. அப்போது நாங்கள் அவர்களுடன் இந்தியில் பேசினோம்.
மும்பை முகவரி.. இந்தியில் பேசியது.. நெற்றியில் போட்டு இல்லாதது.. குழந்தைகள் இந்தியில்
பேசிக்கொண்டது.. இப்படியாக அச்சூழலிருந்து தப்பினோம்.. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
அதன் பின்திமுக அரசியலையும் அக்கட்சியின் தலைமையையும் மிகவும் கடுமையாக எதிர்க்க
ஆரம்பித்தேன். திமுக  அரசும் திமுக தலைமையும் ஈழப்போருக்கு ஆதரவாக பதவி விலகி இருந்தால்
மட்டும் முள்ளிவாய்க்கால் கொடுமைகள் நடந்திருக்காது என்றோ அல்லது ஈழப்போரின்
முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கலாம் என்றோ சொல்லவரவில்லை.
பன்னாட்டு அரசியல் ஆயுத அரசியல் பூகோள அரசியல் வல்லரசுக்கான போராட்டத்தில்
ஈழம் பலிகாடானது என்பதை நானும் அறிவேன். ஆனால் அத்தருணத்தில் திமுக தலைமை
எடுத்த முடிவுகளும் உண்ணா நிலைப் போராட்ட கேவலமான நாடகக்காட்சியும் 
என் போன்றவர்களுக்கு  உள்ளத்தில் ஆறாத தழும்பாக இருக்கிறது.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 
என்ற வரிகளைச் சொல்லித்தான் எல்லா மேடைகளிலும் என் உரையை 
ஆரம்பிப்பது வழக்கம். 2009 மே 19 க்குப் பிறகு அந்த வரிகள்
என்னை விட்டு விடைபெற்றுவிட்டன. எதுவும் எழுதமுடியாமல் வாசிக்க முடியாமல் சற்றொப்ப
இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவதிப்பட்டிருக்கிறேன். 

அன்று கொழும்பு நகர் விமான நிலையத்தில் நான் என்ன நினைத்தேன் என்பதையோ
என்ன செய்ய விரும்பினேன் என்பதையோ என்னால் பதிவு செய்ய முடியாது. இதற்குமேல்
அதைப் பற்றி சொல்வதற்கு தெரியவில்லை.

தேசப்பற்று தேசியம் என்று பேசப்படும் கருத்தருவாக்கங்களை இன்று நான் மீள்வாசிப்பு
செய்து கொண்டிருக்கிறேன். 
(ஒவ்வொரு ஆண்டும் இந்த என் அனுபவத்தை என் தோழி மீராவுடன் பகிர்ந்து கொள்வதுண்டு.
அவள் இதைப் பற்றி நான் பதிவு செய்யவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவாள். அவளை விட்டு
தொலைவில் இருக்கும் இன்னாளில் .. நன்றி தோழி.)