Monday, October 29, 2018

வாலியின் சினிமா அரசியல்

mgr-vaali.jpg (720×480)


திரையிசையில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக
3 தலைமுறைக்குப் பாடல் எழுதியவராக
வலம் வந்த வாலியைப் பற்றிய பதிவுகள் பத்திரிகை
செய்திகள் எதுவுமே வாலியின் அரசியல்
பற்றிப் பேசுவதில்லை.
பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த
வெளிப்படையான அரசியல் நமக்குத் தெரியும்.
ஆனால் வாலிக்கு அப்படியான வெளிப்படையான
அரசியல் இல்லை என்பதாலேயே அவருக்கு அரசியல்
இல்லை என்ற முடிவுக்கு என்னால் வரமுடிவதில்லை.
திராவிட அரசியலை எதிர்த்த கண்ணதாசனின்
புறக்கணிப்பு காலத்தில் வாலியின் வரவு..
கண்ணதாசன் பாடல்களுக்கும் வாலியின் பாடல்களுக்கும்
கூட  ஆரம்ப காலத்தில் பெரிதும் வேறுபாடுகள் கிடையாது.
இன்றும் கூட வாலியின் பாடல்களை கண்ணதாசன் எழுதிய
பாடல்களாக மயக்கம் ஏற்படுவதுண்டு.
கண்ணதாசனைப் புறக்கணிக்க வாலியைத் தூக்கிவிட்ட
 அரசியல் இன்னும் வெளிப்படையாக பேசப்படவில்லை.
வாலி கண்ணதாசனைப் புகழ்ந்து கொண்டே
கண்ணதாசனைப் போல பாட்டெழுதிக்கொண்டிருந்தார்.
இதன் இன்னொரு சினிமா அரசியல் கூட்டணி
கண்ணதாசனின் திமுக எதிர்ப்பு = எம் ஜி ஆர் + வாலி  
இந்த சமன்பாடு மிகவும் கச்சிதமாக பொருந்தியது.
இந்தக் கூட்டணி அரசியலை கூட்டிக் கழித்துப் பாருங்கள்..
திரை விலகும்.
எம் ஜி ஆரும் வாலியும் ஒருவருக்கொருவர் ஆண்டவராகி
சினிமா கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தக்
காட்சிகள் விரியும்.
வாலி எம் ஜி ஆரைக் கொண்டாடி எம் ஜி ஆருக்காகவே
பொருத்தமான பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
வாலியின் பாடல்களில் எம் ஜி ஆரின் அரசியல்
கொடிக்கட்டி பறந்த து. அதே கவிஞர் வாலி
திமுக அதிகார வட்ட்த்திற்கு வெண்சாமரம் வீசவும்
தயங்கியதில்லை! திமுக தலைவர் கலைஞர் அவர்களை
வாலி அளவுக்கு வைரமுத்து கூட புகழ்ந்திருப்பாரா
என்பதையும் கவனித்துப் பாருங்கள்.
வாலி  தமிழினத் தலைவர் ஈழப்போராளி
பிரபாகரன் பற்றி கூட கவிதை எழுதி இருக்கிறார்!.
காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறக்கும் சக்திப்
படைத்தக் கவிஞர் வாலி என்றும் சொல்லலாம்!


அது எப்படி… எல்லோரையும் தன் கவிதைக்குள் கொண்டுவர
முடிந்திருக்கிறது ஒரு கவிஞனால்…என்பது
எனக்கு எப்போதுமே வியப்பளிக்கிறது.
அடிக்கடி என் தோழி என்னிடம் ஒரு கேள்வியை வைப்பாள்..
அதாவது ஒரே மனிதர்.. ஒரே நேரத்தில் எப்படி

இருவேறு கருத்துகளை எழுதுபவருக்கு லைக் போட்டு
இருவருக்கும் பதிவுக்கு ஏற்றமாதிரி பின்னூட்டமிட்டு
எப்படி .. எப்படி.. என்பார்.
அது தான் வாலியின் ஃபார்முலா.. .
வாலி விட்டுச் சென்ற அரசியல் இதுதான்.

எழுதுபவனுக்கு வெளிப்படையான அரசியல் இருக்கக்கூடாது.
அதிகார மையங்களை எப்போதுமே பகைத்துக் கொள்ளக்கூடாது.
மொழி வசீகரமானது.
அதை வளைக்கத் தெரிந்தால் மட்டும் போதும்.
மொழி அவ்வளவுதான்.
இந்த அரசியலைத்தான் வாலி என்ற வெற்றி பெற்ற
கவிஞர் விட்டுச் சென்றார்.
கவிஞர் வாலி காசுக்குத் தானே சினிமா பாடல்கள்
எழுதினார்.. வெளிப்படையான வியாபாரம் அது
என்று எதிர்வினை ஆற்றுவது சுலபம்..
அப்படியானால் காசுக்கு பாட்டெழுதியவர்களை
மொழிப்படுக்கையின் என்னவென்று சொல்ல
வேண்டும்..? மொழியை விற்றவர்கள் என்றா..
மொழியின் வசீகரம் இருந்த ஒரே  காரணத்தால்
அதை விற்பதும் நாய் விற்ற காசு குரைக்காது
என்பதால் கொண்டாடுவதும் ..


வாலியின் இந்த வெற்றி ரகசியம்
இன்று அப்படியே தொடர்கிறது.
இன்றைய வாலிகளுக்கு ராமச்சந்திரர்கள்
கிடைக்கவில்லை!
அதனால் யார் யாரோ ராமச்சந்திர பீடங்களாக
மாற முயற்சி செய்கிறார்களோ என்னவோ..


Friday, October 26, 2018

தந்தையர் வதம்

helen+omamo+-+mother+love+70x90.jpg (1233×1600)

வம்சத்தின் பெயர் கேட்டு அலைகிறது
என் வானத்தில் தனித்துவிடப்பட்ட நிலவு.
யுத்தப்பூமியில்
சிதறிவிழுந்த ரத்த துளிகளில்
புதைந்துக் கிடக்கும்
பரம்பரை வம்சத்தின் கோரமுகத்தை
எப்படித் தோண்டி எடுக்கட்டும்?

காற்றில் பறந்த போர்க்கால ஒப்பந்தங்கள்
முறிந்து விழுந்த கிளைகளின் நடுவில்
வண்ணத்துப் பூச்சிகளை மறந்த
மலர்களின் கூட்டம்.
எத்தனைக் கோடி மகரந்தப் பொடிகள்!
எது விழுந்த்தோ எது கலந்த தோ
கண்களை இறுக மூடிக்கொண்ட து காற்று.
என் மண்ணில் முளைக்கிறது
உதிர்ந்த இலைகளின் எதிர்காலம்

யாருக்கு வேண்டும்
இங்கே விதைகளின் விலாசம்?
யுத்தக்களமே
என் பிரசவ பூமியானதால்
என் பிள்ளைகள் துறக்கட்டும்
வம்சங்களின் பெயர்களை.!

எதிரிகளின் பிள்ளைகள் என்பதைவிட
என் பிள்ளைகளாக மட்டுமே
இனிஷியல் இல்லாமல்
இருந்துவிட்டுப் போகட்டும்.
யுத்தங்கள் இல்லாத
தேசங்களின் வரைபட த்தை
தந்தையர் வதம் செய்து
அவர்களே வரையட்டும்..

(ஐந்திணை கவிதை தொகுப்பிலிருந்து )
(இக்கவிதை ..நான் சந்தித்த வார்மதர்ஸ் களுக்காக)

Thursday, October 25, 2018

ME too POLITICS


ME too வின் அரசியல்
மீ டூ சர்ச்சைக்குள் ஒலிக்கும் குரல்களை
அடையாளம் காண வேண்டியதும் இருக்கிறது.
மீ டு இயக்கமாக வளர்ந்திருப்பது கவனத்திற்கு
உரியதாகிறது. மீ டூ வை ஆதரிக்கின்றீர்களா என்று
கேட்கும் என் இனிய தோழியருக்கு தனிப்பட்ட முறையில்
என் கருத்தைச் சொல்லி இருக்கிறேன்.
பொம்பள வேணாம் னு சொன்னா அதற்கு அர்த்தம்
வேணும்னு தெரிஞ்சுக்கோ என்று வளர்க்கப்பட்டிருக்கும்
ஆண் மைய சமூகத்தில் மீ டூ ஒரு அதிர்ச்சி வைத்தியம் தான்.
அதாவது பெண் வேண்டாம் என்று சொன்னால்
அதற்குப் பொருள் “வேண்டாம்.. டாம்” என்பது மட்டும்தான்!
இதை ஆண்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.
பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் உடலைக் கூட
அவள் விருப்பமின்றி ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது
என்பது தான் ஆண் பெண் பாலியல் உறவு நிலை சார்ந்த
இன்றைய பெண்களின் நிலைப்பாடு.
பெண்ணுடல் அரசியலை தனிப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் சுய
அனுபவமாக சுருக்கி விடுவதும் அதுவே பெண்ணியமாகவும்
பெண் விடுதலையாகவும் திட்டமிட்டு நடக்கும் அரசியல் என்பதை
சமூக அரசியல் தளத்தில் களத்தில் நிற்கும் பெண்கள்
மிகவும் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மீ டூ வாகட்டும், டில்லியில் நிருபயா சம்பவம் நடந்தப் போதும் சரி..
வைக்கும் கேள்வி ஒன்றுதான்!

பெண்ணுடல் சாதியின் பெயரால் அனுபவிக்கும்
வன் கொடுமைகளைப் பற்றி அதன் அரசியல் பற்றி
அந்த அரசியலின் இன்னொரு முகமாக இருக்கும்
மதங்கள் பற்றி மீ டூ வுக்கு அக்கறை இருக்கிறதா?
என்று கேட்டால்…
அதற்கான பதில் இத்தருணத்தில் எவரிடமும் இல்லை.
தன் சுய அனுபவத்தை இத்தனை ஆண்டுகளும்
தனக்குள் வைத்துக்கொண்டு அழுத்தப்பட்ட
உணர்வுகளுடன் வாழ்ந்தப் பெண்கள்… அதே போல
இன்னொரு பெண் உடல்…
 தெருவில் நிர்வாணமாக்கப்பட்ட போதோ
அல்லது வல்லாங்கு செய்யப்பட்டு அவர்கள்
தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக
கோர்ட் வாசலில் பல ஆண்டுகள் காத்திருந்தப் போதோ
அல்லது காஷ்மீரில் வட கிழக்கு மா நிலங்களில்
தேசியம் என்ற ஒரே போர்வைக்குள் பெண்ணுடல்
துண்டாடப்பட்ட போதோ…
அந்த அரசியலை அவர்கள் பேசவில்லை!
(விதிவிலக்கு அருந்ததி ராய் .. )
அது அரசியல்..
இது பெண்ணியம் என்று பிரித்துவிட்டால்…
சுயம் சார்ந்த்து மட்டுமே பெண்ணியமாக
சுருங்கிவிடும்.
அப்படித்தான் பெண்ணியம் இருக்க வேண்டும்
என்ற பெண்ணிய நிலைப்பாடு என் போன்றவர்களுக்கான
பெண்ணியம் அல்ல.  
இந்த முரண் சாதியும் வர்க்கமும் இருக்கும் வரை
பெண்ணிய தளத்திலும் அதன் பிரதிபலிப்பாக
இருக்கவே செய்யும் என்ற புரிதலுடன் தான்
இதை எல்லாம் கவனிக்கிறேன்.….
பெண்ணுடலுக்கு சாதியில்லை
மதமில்லை மொழியில்லை தேசமில்லை
 என்ற புகழ்பெற்ற வாசகம்
பொய்யானது என்பதையும் அதே நாங்களும்
எங்கள் எழுத்துகளில் கையாளும் போலித்தனமும்
என் முகத்தில் அறைகிறது….
பெண்ணுடலுக்கு சாதியில்லை என்றால்
கயர்லாஞ்ச்சி சுரேகாவின் உடல் நிர்வாணமாக்கப்பட்டு
நடுத்தெருவில் வன்புணர்வு செய்யப்பட்டிருக்காது!
பெண்ணுடலுக்கு மதமில்லை என்றால்
காஷ்மீர் கதறி இருக்காது,
பெண்ணுடலுக்கு  மொழியில்லை என்றால்
ஈழத்தில் அவள் உடலைச் சிதைத்திருக்க மாட்டார்கள்.
பெண்ணுடலுக்கு தேசமில்லை என்றால்
இந்திய பாகிஷ்தான் பிரிவினையில்  நவகாளியில்
பெண்களின் கதறல் ஒலித்திருக்காது.
ஆண் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும்
அத்தனைப் பிரிவுகளும் பெண்ணுடலுக்கு உண்டு
உண்டு.. பெண்ணுடல் அந்த எல்லைகளைக்
கடக்கும் யுத்தம் … இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
அதனால் மீ டூ பேசுபவர்கள் மேட்டுக்குடி பெண்கள்
என்ற புகாரில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொள்கிறேன்.
கலகம் என்பதும் புரட்சி என்பதும் எப்போதுமே
கீழிருந்து தான் கிளம்ப வேண்டும் என்பதில்லை.
மேலிருந்து வரட்டும்.. வரட்டுமே என்று சொல்கிறேன்.
அதை வெறும் காற்றில் கரைந்து விடும் வெற்றுக் குரலாக்காமல்
தனி நபர்களின் விளம்பர உத்திகளைத் தூக்கி எறிந்துவிட்டு
இச்சமூகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக முன்னெடுக்க
வேண்டும். செய்வோமா தோழியரே…
வாருங்கள் என் நண்பர்களே..
 நீங்களின்றி இது சாத்தியமில்லை
என்பதை நானறிவேன்..
சேர்ந்தே பயணிப்போம்…


Wednesday, October 24, 2018

முக்திபவன்


"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன்.
உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்..
உயிருக்கு..?!
முக்தி பவன்
"முதுமையைக் கொண்டாடும் முக்திபவன்.
உடலுக்குத்தானே ஆணுடல் பெண்ணுடல்..
உயிருக்கு..?!
Mukti Bhawan - Poster.jpg

77 வயதான அப்பா தயா, +50 வயதில் மகன் ராஜீவ்
அப்பாவுக்கு மரணத்தைப் பற்றிய கனவுகள்.
அதுவும் காசியில் கங்கைக் கரையில்
மரணித்து நேராக அப்படியே எந்த டிராபிக்
ஜாமும் இல்லாமல் சொர்க்லோகம் செல்ல
ஆசை. மகனுக்கோ சாப்பிடும் போதும்
கைபேசியில் தன் வாடிக்கையாளர்களுடனும்
மேலதிகாரியுடனும் பேசிக்கொண்டிருக்கும்
அளவுக்கு வேலைப்பளு.
ஒரே மகன். அப்பாவின் கடைசி ஆசை..
காசியில் மரணிக்கும் ஆசை...
வீட்டில் பேத்தி நண்பர்களையும் உறவினர்களையும்
அழைத்து தாத்தாவுக்கு கேக் வெட்டி பிரியாவிடை
கொடுக்கும் பார்ட்டி.. மகன் வந்தவர்களிடமும்
சொல்லிப் பார்க்கிறான்... நீங்களாவது அப்பாவிடம்
சொல்லக் கூடாதா.. இந்த விபரீத ஆசையை விடச் சொல்லி
என்று..
ம்கூம்.. பிடிவாதக்கார அப்பா...
கான்பூரில் இருந்து காசிக்கு அப்பாவுடன் பயணம்..
போகும் போது மனைவி கேட்கிறாள்...
"எப்போது திரும்பி வருவீர்கள் ? என்று.
கேள்வி மனைவியர் கேட்கும் சாதாரணக் கேள்வி.
மகனுக்கோ எரிச்சல் வருகிறது..
"அப்பா எப்போது சாவார்னு எப்படித் தெரியும்?!"
மனைவி தான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை
என்று எவ்வளவு சொல்லியும் அவன் கோபம்
அடங்கவில்லை. அவனே காசியில் முக்தியடைய
அப்பாவுடன் தங்கி இருக்கும் நாட்களில்
அதே கேள்வியை குருவிடம் கேட்கிறான்...
" என் அப்பாவுக்கு அந்த நாள் வந்துவிட்டதா?"
என்று..
வயதான அப்பாவோ தன்னைப் போலவே
முக்தியடைய காத்திருக்கும் மனிதர்களுடன்
ஜாலியாக இருக்கிறார். காலையில் யோகா
சாப்பாடு , நதியில் படகுப்பயணம் , மாலையில்
டிவியில் தொடர் பார்ப்பது குல்ஃபி சாப்பிடுவது
தூள் கிளப்புகிறார் நடிப்பில் லலித் பகல்.
அப்பாவும் மகனும் நெருக்கமாகும் தருணங்கள்
முதல் முறையாக மகன் இளவயதில் எழுதியிருந்த
கவிதையை புரபோசர் அப்பா சிலாகித்து சொல்லும்
போது மகன் எரிச்சல் அடைகிறான்...
என்னை எங்கே எழுதவிட்டாய்..?
ப்படி எல்லாம் எழுதியவனைத் தான் 
நீ இந்த மாதிரி வேலைக்கு அனுப்பி எனக்குள்
இருந்தக் கவிஞனை இல்லாமல் ஆக்கிவிட்டாய் 
என்று குற்றம் சுமத்துகிறான்..
ஒரு நடுத்தர வர்க்கத்தின் ஒட்டுமொத்தக் குரலாய்
அவன்...
தயா தன்னைப் போலவே மரணிக்க காசியில்
18 வருடம் காத்திருக்கும் விமலாவின் நட்பு..
காமிரா.. திரும்புகிறது..
ஒரு காட்சியில் விமலாவும் தயாவும் அருகருகே
தூங்குகிறார்கள்.. இருவரின் கைகளும்
ஒன்றை ஒன்று எட்டிவிடும் தூரத்தில்.
மகன் அதைப் பார்த்துவிட்டு வெளியில் போகிறான்.
முகத்தில் எந்த உணர்வுகளும் வெளிக்காட்டாமல்.
மரணிக்க காத்திருக்கும் உடல்களில்
ஆணுடல் பெண்ணுடல்... இரண்டும்
காணாமல் போயிவிடுகிறது.
முதுமையில் உடலும் மனமும்
குழந்தைகளாகி ஒவ்வொரு தருணத்தையும்
கொண்டாட்டமிக்கதாக்குகிறது.
15 நாட்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதிக்கப்படும்
விடுதியில் தன் கணவனின் முக்திக்குப் பின் தானும்
முக்தியடைய 18 ஆண்டுகள் காத்திருக்கிறாள் விமலா.
பெயர் மாற்றிக்கொண்டு தங்கி இருக்கிறாள்..
ஆம் உடலுக்குத் தானே இந்தப் பெயர்கள்..!
என்ற தத்துவ விசாரணைக்குள் பார்வையாளனை
எளிதாகத் தள்ளிவிடுகிறது இக்காட்சிகள்...
அப்பாவும் மகனும் நெருக்கமாகிறார்கள்..
ஒரு தருணத்தில் மரணிக்க காத்திருப்பவனுக்கு
ஏன் வேண்டும் இந்த நெருக்கமும்.. உணர்வுகளும்..
என்ற அடுத்தக் கட்டம் வருகிறபோது...
தயா தன் மகன் ராஜீவை தன்னைத் தனியாக
விட்டுவிட்டு செல்லும்படி சொல்லுகிறார்.
மகனிடம் கண்டிப்புடன் இருக்கும் அப்பா
தன் பேத்தியிடம் ஜாலியாக இருப்பதும்
உன் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நீயாகவே
இருக்க வேண்டும் என்று சொல்வதும்
திரைப்படத்தின் இன்னொரு திருப்புமுனையாக...
ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின் கதை..
கங்கைக்கரையில் இறந்தால் சொர்க்கம் போகமுடியுமா
என்ன? என்ற கேள்வியை மகன் அப்பாவிடம்
வைக்கலாம்.
ஆனால் போதும்பா.. இந்த உடம்பும்.. ஆட்டமும்...
நான் இனி ஓய்வெடுக்கப் போகிறேன்.. என்ற
தயாவின் குரலும் அந்த நாளுக்கான காத்திருப்பின்
கம்பீரமும்...
முக்திபவனின் வெற்றி.
மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம்.
ஆனால் இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி
பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும்
விருதுகள் பெற்ற திரைப்படம்..

Friday, October 19, 2018

போய் வருகிறேன்.. வல்லரசே




போய்வருகிறேன்..
உன் பூக்களின் அழகும்
உன் தெருக்களின் கம்பீரமும்
என் காமிராவுக்கு தீனிப்போட்டன.
என் கவிதைகளுக்கல்ல.
போய்வருகிறேன்.
வணக்கமும் விசாரிப்புகளும்
உன் நுனி நாக்கின் மொழிகள்.
என் இதயத்தின் அடி ஆழத்தில்
அது எதிரொலிக்கவே இல்லை
போய்வருகிறேன்.
குழந்தைகள் கிரிக்கெட் ஆடாத 
உன் அகன்ற தெருக்களில்
அழகான நாய்களின் ஊர்வலங்கள்.
குரைக்காத நாய்கள்
காக்கைகள் கரையாத தோட்டவெளி
மவுனத்தில் உறைந்த வீடுகள்
நிறைந்த மாய உலகத்தில்
என் பச்சைக்கிளிக்காக மட்டுமே
பறந்து வருகிறேன்..
ஆனாலும் உன் பச்சை மரங்களும்
படர்ந்த புல்வெளியும்
என் விரல் நுனியைக் கூட
ஈரப்படுத்தவில்லை.
நெருப்பு மூட்டி குளிர்க்காயும் இரவுகளில்
நட்சத்திரங்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
வரிசையாக ஓடிக்கொண்டிருக்கும் கார்கள்
எங்குப் பார்த்தாலும் விமானங்கள்
எப்போதும் இரவு 9 மணிக்கு
நகரைக் கண்காணிக்க வட்டமிடும் ஹெலிகாப்டர்..
பறந்து கொண்டிருக்கும் உன் றக்கைகளில்
எரிந்துக் கொண்டிருக்கிறது
எண்ணெய்க்காக நீ எரித்த
தேசங்களின் வரைபடங்கள்.
எரிமலைப் பிரதேசத்தில் மகாசமுத்திரங்கள் சூழ
உன் ராஜாங்கம் நடப்பதை
நீயும் மறக்கவில்லை.
நானும் மறக்கவில்லை.
உன்னுடன் கை குலுக்கும்
ஒவ்வொரு தருணமும்
என் கைகளில் ஒட்டிக் கொள்கிறது
என் கடற்கரைகளில்
நீ கொட்டும் கழிவுகளின் மிச்சம்.
இருவருமே கைகளில் தடவிக்கொள்கிறோம்
கிருமி நாசினியை.
நீ சிரிக்கிறாய்.
ஹலோ சொல்கிறாய்.
நானும் தான்.
போய்வருகிறேன் என்று சொல்கிறேன்.
மீண்டும் சிரிக்கிறாய்.
உன் நக்கல் சிரிப்பு எனக்கும் புரிகிறது.
பூக்களை மட்டுமே அறிந்த உன்னிடம்.,
பூக்களில் இருக்கும் முட்களையும்
வேர்களில் ஒட்டி இருக்கும் மண்ணையும்
மண்ணின் வாசத்தையும்
மழையின் வசந்தத்தையும்
வெயிலின் நடனத்தையும்
கொண்டாடும் நான் 
எப்படி புரியவைப்பேன்..
விடை பெறும் தருணங்களில்
“போய் வருகிறேன் ” என்று சொல்லும்
எங்கள் மரபின் வேர்களை.

(அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முந்திய நாள்
விடிகாலையில்..)

Tuesday, October 16, 2018

முதுமையில் அசத்தும் அமிதாப்பச்சன்




நடிகர் அமிதாபச்சன் இளமையில் சாதிக்க முடியாததை
இந்த வயதில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இளம் வயதில அவரை angry hero .. என்ற ஒரே
அடையாளத்தில் காட்டினார்கள்.
எனக்கென்னவோ அந்த மசாலா படங்களை விட
இன்று வெளிவரும் .. மசாலா படங்களில் கூட
அமிதாப்பச்சன் ஒரு முத்திரை பதிக்கிறார்.
இந்த வயதில் அவர் இளம் பெண்களுடன்
ஓடிப்பிடித்து டூயுட் பாடுவதில்லை என்பதே
பார்ப்பவர்களுக்கு நிம்மதியாக இருக்கிறது.
அவருடைய வயதுக்கு ஏற்ற கதைப் பாத்திரங்கள்
அந்த முதிர்ந்த வயதின் நிறங்கள்
உணர்வுகள் தடுமாற்றங்கள்
என்று அவர் தூள் கிளப்புகிறார்
இன்னும் சொல்லப்போனால் இந்தி திரையுலகம்
அந்த நடிகனை அவர் வயதுக்கும் அனுபவத்திற்கும்
ஏற்ப அவருக்கு என்றே பல்வேறு குணச்சித்திர
கதைப் பாத்திரங்களை உருவாக்கி
அந்த நடிகனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
தமிழ்த் திரையுலகம்..
சிவாஜி என்ற நடிகனை ..
இப்படியான எந்த வாய்ப்புகளுக்குமான கதவுகளைத்
திறக்காமல்
அவரை தனிமைக்குள் தள்ளி..
முதுமையை நோயாக்கி..
அவரை வீணடித்துவிட்டது.

இதை +60 இல் இருக்கும் இன்றைய
நடிகர்கள் கவனத்தில் எடுப்பார்களா
இயக்குனர்கள் பக்கத்து தெரு
பாலிவுட்டில் என்ன நடக்கிறது என்பதை
கவனிப்பார்களா..?
தெரியவில்லை

என்ன திடீர்னு.. சினிமா பற்றி எல்லாம்
எழுதுகிறாய்னு கேட்டுடாதீங்க..
இப்போதெல்லாம் இந்தி மசாலா படங்களும்
பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
எப்போதுமே.. சீரியஸான படங்களைப்
பார்த்துக்கொண்டு தலைவலி தைலத்தை
தேய்த்துக்கொண்டிருக்க முடியுமா..
.. அப்படிப் பார்த்ததில் தான் 
அமிதாப்பாச்சன் இந்தி மசாலாவில்
எவ்வளவு காட்டாம சுள்ளுனு.. இருக்கார்னு
.. கண்டுபிடிச்சேன்..

Monday, October 15, 2018

ஈராக் பெண்ணும் காஷ்மீர் பெண்ணும்..

இந்தப் பூமியில் நானே கடைசிப் பெண்ணாக இருக்க வேண்டும்..
- ஈராக் பெண்.
சொல்லாத என் கதையைச் சுமந்து நிற்கிறேன்..
காஷ்மீர் பெண்..

THE LAST GIRL புத்தகத்தில் தன் சுயசரிதையைச் சொல்லி
இருக்கும் NADIA MURAD இப்படித்தான் எழுதி இருக்கிறார்.
அண்மையில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பதால் இவரின்
சுயசரிதை இன்னும் அதிகமானக் கவனிப்பைப் பெற்றிருக்கிறது.
வடக்கு ஈராக் , கூச்சு மலைப்பகுதியில் 
வாழ்ந்தவர்கள் யாழிடி என்ற சிறுபான்மையினர்.
விவசாயம் கால் நடை வளர்ப்பு அவர்களின் தொழில்.
அவர்களுக்கு என்று தெய்வ நம்பிக்கைகள் உண்டு.
ஆனால் இசுலாமிய மதவாதிகள் அந்த மக்களை
இசுலாமுக்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆகஸ்ட்ய் 15, 2014ல் இசுலாமிய படை அவர்களின்
கிராமத்தில் ஊடுருவி அவர்களை வதம் செய்கிறது.
அவள் கண் முன்னாலேயே அவளுடைய சகோதரர்கள் 6 பேர்
கொல்லப்படுகிறார்கள். அவளுக்கு அப்போது வயது 21.
அவள் அம்மாவையும் அம்மாவின் வயதொத்த பெண்களையும்
அவர்கள் இழுத்துச் செல்கிறார்கள். அனைவருக்கும்
ஒரே புதைகுழி .. ISIS அவள் வயது ஒத்த பெண்களை
பாலியல் வன்கொடுமை செய்து கை மாற்றுகிறார்கள்.
தன் உடலின் ,மீது திணிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை
வெறும் காமத்தின் வெறி என்று மட்டும் சொல்லமுடியாது..
அவள் உடலை அவர்கள் தங்கள் நுகர்ப்பொருளாக்கி
விற்பனைப் பண்டமாக்கி அவளை அடிமையாக்குவதன்
மூலம் தங்கள் போரின் வெற்றியை நிலை நாட்டிக்கொள்வதை
அவள் உணர்ந்து கொள்கிறாள்.
மத வாதம், இன வாதம் , தேசியவாதம்…
இவை அனைத்திலும் பெண் உடலை எதிரியாக
நினைத்து அடிமைப்படுத்துவதன் மூலம் எதிரியின்
மன வலிமையை உடைத்து விட முடியும்
என்று காலம் காலமாய் போர்க்களத்தில்
பெண்ணுடல் சிதைக்கப்படுவதை … 
இந்த பெண் வரலாற்றில் தானே கடைசிப் பெண்ணாக
இருக்க வேண்டும் என்று அவள் பெருமூச்சுடன்
சொல்லும் போது…
இதிகாச குருஷேத்திர களம் முதல்..
நாம் வாழும் காலத்தில் நடந்த முள்ளிவாய்க்கால்
ஈழம் வரை … சிதைந்த பெண்ணுடல்கள்
நம் கண்முன்னால் வந்து கொண்டே இருக்கின்றன…
நடியாவின் சில வரிகள்..:
“Still, most of the escaped sabaya were tight-lipped about their time with ISIS, as I had been at first, and I understood why. It was their tragedy and their right not to tell anyone.” 
We are homeless. 
Living at checkpoints until we live at refugee camps.” 
“I want to be the last girl in the world with a story like mine.”
விருதுகள் கொடுக்கப்படுவதற்கும் அரசியல் உண்டு.
கொடுக்காமல் இருப்பதற்கும் கூட அரசியல் உண்டு.
இந்த நோபல் பரிசுகள் அதிலும் குறிப்பாக 
இசுலாமிய நாடுகளுக்கு எதிராகவும்
இசுலாமியர்களை தீவிரவாதிகளாகவும்
சித்தரிக்க விரும்பும் இன்னொரு அரசியலின்
முகம்.. இதற்கும் வல்லரசுகளின் சாயம் உண்டு
என்ற புரிதலுடனேயே நான் நடியாவின் சுயசரிதையை
வாசித்தேன். காரணம்.. நடியாவின் விருதுகளுக்கும்
கவனிப்புக்கும் அரசியல் இருக்கலாம்.
ஆனால் நடியாவின் அனுபவம்..?
அவள் கடந்து வந்தப் பாதை..?
அவள் வலியும் வேதனையும் நாம் வாழும் காலத்தில்
நம் பாரத தேசத்தின் இன்னொரு முகத்தையும்
எனக்கு நினைவூட்டுகிறது.
எரியும் பனிப்பிரதேசத்தின் காஷ்மீர் பெண்களின்
அந்தக் குரல்..


அதிலும் குறிப்பாக KUNAN POSHPORA வில்
எங்கள் சீருடைகள் நடத்திய .. அந்த மிருகத்தனமான
இரவைப் பற்றி யாரோ எழுதிய கவிதை..
எப்போதோ வாசித்த வரிகள்..
தன்னை எனக்குள் மொழியாக்கம் செய்து கொண்ட வரிகள்..
மீண்டும் தன்னை வாசித்துக் கொண்டன..
இதோ அந்த வரிகளுடன்..
என் ஊமையாகிப்போன உடல்
இறுகிப்போன ரத்தச் கறைகள்
கொடுமையான அந்த நாட்களை
சகிக்க முடியாத அந்த இரவுகளை
சகித்துக்கொண்டது..
மவுனம் என் தொண்டைக்குழிக்குள்
அழமுடியாத அவஸ்தையில்..
நிரப்பப்படும் படிவங்கள்
வறண்டுப்போன ஆழமான கிணற்றில்
விழுந்துக்கொண்டிருக்கின்றன சொட்டுச் சொட்டாக.
ஆழமான பெருமூச்சுடன் கனத்த இதயம்
அந்தப் பொய்கள் ஏச்சுகள்
தாங்க முடியாத இணைப்புகளாய்
என் உறுதியைக் கட்டுப்படுத்த முடியாமல்
அலைகின்றன.
அந்தப் புத்தகங்கள்
எங்கள் மலைகள் ஏரிகள்
பள்ளத்தாக்குகள் பற்றிப் பேசுவதில்லை.
புழுதிப்படர்ந்த பாலைவனத்து ஆகாயத்தின் கீழ்
பசுஞ்சோலைகள் இல்லை. கானல் நீரும் இல்லை.
இருந்தாலும் ஆறுதலான ஒரு சொல்
இதமாக இருந்திருக்கும்.
அதுவும் கூட 
எங்களை விட்டு தொலை தூரத்தில்.
உங்களுக்குத் தெரியுமா..
சிப்பி சுமக்கும் வலியின் சோகம்.
ஆனால் நீங்கள் கவலைப்படுவதெல்லாம்
சிப்பி தரப்போகும் முத்துகளைப் பற்றித்தானே.
அந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக போராட
என் இலையுதிர் தேகத்திலிருந்து
ஒற்றை இலையைக் கூட 
விட்டுவரவில்லை நான்.
இப்படியாகத்தான் நிரந்தரமாக
எவரும் அறியமுடியாதப்படி
அழித்துக்கொண்டுவிட்டேன் என்னை.
யாரும் இதுவரை கேட்காத கதை
நான் பகிராத என் கதை
இதோ.. சொல்லாத என் கதையை
நான் சுமந்து நிற்கிறேன்…

Thursday, October 11, 2018

BEYOND #ME Too..





வைரமுத்து - சின்மயி விவகாரம் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வைரமுத்து மறுத்திருக்கிறார்இருக்கட்டும்.
இந்த வைரல் வலையத்துத்துக்குள் அகப்பட்டு
உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களை
அவமானப்படுத்த நான் விரும்பவில்லை.
அதிலும் தங்கள் பெயர் விலாசத்துடன் குற்றச்சாட்டு
வைக்கும் பெண்கள் சொல்வது மட்டும் தான் உண்மை என்றொ
Anonymous ஆக அடையாளம் மறைத்து வைப்பதாலேயே
அக்குற்றச்சாட்டுகள் பொய் என்றொ சொல்லும் 
புத்திசாலித்தனம் என்னை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
#Me too குறித்து எதிர்வினை ஆற்றும் நல்லவர்களை
புனிதர்களை வாழ்த்துவோம். அவர்களில் ஒருவர் கூட
ஏன் INDIGO NAI போல இன்றுவரை யோசிக்கவில்லை?
இங்கே எந்த ஆண்மகனுக்குதில்லு இருக்கு
இந்தச் சமூகம் எப்படி தங்களை வளர்த்திருக்கிறது?
இந்த இலக்கிய சாம்ராஜ்யம் எதைப் பெண்ணாக
எழுதி வைத்திருக்கிறது?
இந்த சினிமாக்கோட்டைக்குள் பெண் என்பவள்
என்னவாக திரையில் ஆடுகின்றாள்?
அதை ரசிக்கும் உன் மனசின் வக்கிர பாலுணர்வை
ஏன் கலை என்ற போர்வையில் மறைத்துக்கொண்டு
நவீன போர்வையை மூடிக்கொள்கிறாய்?
உன் மதம் பெண்ணுடலை எங்கே கிடத்தியிருக்கிறது?
உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்..
உரக்கக் கத்து 
இங்கே நல்லவனும் இல்லை. கெட்டவனும் இல்லை..
There is no gentle men.. we are just men.. the
Creation of the society.. in male body..
.. தில்.. லு இருக்கா.. 
ஓராண்டு கடந்துவிட்டது இண்டிகோ நய் அவர்களின்
முகனூல் பதிவை வாசித்து.
அந்த ஆண்மகனின் குரலை 
உங்களில் எத்தனைப் பேர் .. 
தடுமாற்றம் இன்றி சொல்லப்போகிறீர்கள்?
ப்ளீஸ் 
இங்கே ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது.
turning awareness into action to end sexual harassment. 
raising kids and engaging men in the solution.


#Me too பெண்களை அவமானப்படுத்தும்
ஆண்களுக்காகவே இப்பதிவை எழுதுகிறேன்.
Indigo Nai - facebook, 16 oct 2017@NYK from his Facebook page
Let me shout it out for those sitting in the back: there are no ‘good men’, gentlemen. There are no ‘bad’ men. There are no ‘gentlemen’. There are just men. And men are not raised to be gentle. Whether you see it or not, our society has raised us to be women's wolves.

What women are saying today about men is obvious to me, and so, because I am a man, I have no alternative but to acknowledge women’s experience at my hands:
I have a list. It isn’t long, but it’s not good. And like most men, my list is probably longer than I’d like to think. My history ranges from kissing acquaintances without warning to treating silence as if it was consent, to being more aggressive while intoxicated than I am while I was sober. I pursued women I wanted to the point of their emotional exhaustion, to the point where it was easier to give in than keep restating their boundaries. I penetrated a new partner without a condom once. A long time ago, I gave a friend enough champagne that her ’no’ became a ‘yes’. It wasn’t a yes the next morning…
Whether we know it or not, whether we allow ourselves to admit it or not, every man has a list of times that he has violated a woman's boundaries. Men are raised in a society that teaches boys that they are entitled to have access to women’s bodies. You may not be drugging women’s drinks in a nightclub, you may not be stalking sex workers in a van, but you have probably pressured someone sexually more than once in your life. The game teaches men to assume that women want what we want. The game teaches women that they are supposed to want what men want. Men benefit from this, women do not, but the game is rigged to hurt everyone. The only way to end that cycle is to reject the game itself.

Wednesday, October 10, 2018

உண்மையின் ஊர்வலம் 1



உண்மைகள் கற்பனைகளை விட
அற்புதமானவை. அழகானவை. 
ஜீவனின் துடிப்பை சுமந்தலையும் முகங்கள்.
எவ்வித ஒப்பனையுமில்லாமல் …
கற்பனை கலக்காத உண்மையின் தரிசனங்களில் 
மனம் உருகிக் கரைந்து போகிறது.
இப்படியும் இருக்கிறார்களா ? இது நிஜம்தானா ? 
இவர்கள் நம்முடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா ? 
இந்த சாதாரண மனிதருக்குள் இருக்கும் 
இந்த அசாதாரணங்களை என்னவென்று சொல்வது?
அவர்களைப் பற்றி வாசிக்க வாசிக்க 
உண்மையில் கலந்து ஊண் உருகி உயிர்க் கரைந்து 
நம் சுயமிழந்து…
கைகள் அந்த மனிதர்கள் வாழும் திசை நோக்கி
கும்பிடுகிறது.. கண்களில் வழியும் கண்ணீரில்
கவிதையின் இதயத்துடிப்பு…

பிப்ரவரி 02 , 2006 வினய்பாலுக்கு வயது 17. 
அவன் மும்பையின் ஜோகேஸ்வரி புறநகர்ப்பகுதியில்
தன் அப்பா ராம்பாலுடன் இருக்கிறான். +2 தேர்வு எழுதுகிறான். 
தேர்வுக்கு முன்பு தன் பிறந்த நாளில் தன் தாயின் ஆசி பெற 
அவன் நானாவதி மருத்துவமனைக்குப் போனான். 
அவன் தாய் காமாதேவிக்கு என்ன வியாதி ?
அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே அவள் 
இந்த மருத்துவமனையில் பெட் நம்பர் 33ல் தானிருக்கிறாள். 
அவனை அவளுக்கு அடையாளம் தெரிவதில்லை.
1989ல் சிசரியன் ஆபரேஷன் செய்து 
அவன் பிறந்ததலிருந்து அவளுக்கு அவள் மகனை 
அடையாளம் காண முடிவதில்லை. 
அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவர்கள் கொடுத்த 
மயக்கமருந்தின் அளவு அதிகமானதால் 
அவள் மூளைப் பாதிக்கப்பட்டுவிட்டது. 
அவளால் பேச முடிவதில்லை. 
யாரையும் அடையாளம் காண முடியாத 
வெறித்தப் பார்வையுடன் தொடர்கிறது 
பதினேழு வருடங்களாக இந்த மருத்துவமனையில் 
அவள் வாழ்க்கை.
கோர்ட், வழக்கு, விசாரனை.. 
எல்லாம் இருந்தும் என்ன பயன் ? 
அவளுடைய கேஸில் மருத்துவர்களின் 
பெருந்தவறு இருப்பதால் இதோ 17 வருடங்களாக 
மருத்துவமனையில் அவள் இருப்பதற்கு 
அனுமதி கிடைத்திருக்கிறது!
1988ல் ராம்பாலுக்கும் காமாதேவிக்கும் 
திருமணமாகி இருக்கிறது. ஓராண்டு மணவாழ்க்கையில் 
வினய் பிறந்திருக்கிறான்.
ஒவ்வொரு நாளும் (Maharashtra telephone nigam ltd) 
எம்.டி.என்.எல். ஆபிஸில் கடைநிலை ஊழியராக இருக்கும்
ராம்பால் ஆபிஸிலிருந்து நேராக 
மருத்துவமனைக்குத்தான் போகிறார். 
தன் மனைவிக்கு தன் கையால் இரவு உணவு கொடுத்துவிட்டு
இரவு 10 மணிக்குப் பின் வீடு திரும்புகிறார்.
இத்தனை வருடங்களாக இதுவே அவர்
வாழ்க்கையாகிவிட்டது. 
‘யாராவது ஊட்டினால் கொஞ்சம் சாப்பிடுகிறாள். 
அதுதான் தினமும் வந்து இரண்டு மணிநேரம் 
அவளூடன் இருக்கிறேன். இரவு உணவு ஊட்டிவிட்டபின் 
வீடு திரும்புகிறேன். என்னால் அவளுக்கு செய்ய முடிந்தது
இவ்வளவுதான் ‘ என்று சொல்லுகிறார் ராம்பால்.
**
வெறித்தப் பார்வையுடன்
என்னை விலக்கி வைக்கும் விழிகளில்
உறைந்தப் பனிக்கட்டியாய்
இறுகிக்கிடக்கிறது எங்கள்காதல்.
தொடுதலின் வெளிச்சங்கள்
இல்லாத துருவக்கோட்டில்
எப்போதாவது
எட்டிப்பார்க்கலாம்
பனியை உருக்கும் பகலவன்.
அதுவரை நித்தமும்
என்னவளுக்காய்
எரிந்து கொண்டிருக்கும்
என்னுயிர்த் தீயின்
அகல்விளக்கு.
**
ராம்பால் .. 
ரத்தமும் சதையுமாக உழலும் வாழ்க்கையில்
உடற்பசியும் காமப்பசியுமாக அலையும் வாழ்க்கையில்
ராம்பால்…
எப்படி ராம்பால்.. உங்களால் .. முடிகிறது!

(Ref: Mumbai Mirror, Jan31, 2006 pg 2
An oversose of anaesthesia at the time of the cesarean
operation caused permanent brain damage to Gama dEvi. Her
medical condition is known as hypoxic brain damage. she cannot
recognize anyone. Nor can she speak ‘ said medical superindent
Dr. Ashok B hatolkar.
vinaypal who has been raised by his father Rampal in a slum
in Jogeshwari, )

Tuesday, October 9, 2018

சமூக அரசியல் புதினத்தின் இரு முகங்கள்.. சாவுச்சோறு VS shoes of the dead





அரசியல் சமூகப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்படும் படைப்புகள்
அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.
அவ்வகையில் சமூக அரசியல் கருப்பொருளான இரு புதினங்களை
ஒரே வாரத்தில் வாசித்தேன். இக்கதைகளின் கருப்பொருள் கற்பனையோ
பொழுதுப்போக்கோ அல்ல. சமகால் சமூக அரசியல் பின்புலமும்
கருப்பொருளும் கொண்டு எழுதப்பட்டவை. 
முதலாவது புத்தகம் கோட்டா நீலிமா
ஆங்கிலத்தில் எழுதிய shoes of the dead. மிகச்சிறந்த அரசியல் நாவல்
என்று பெயர் பெற்ற நாவல். அவருடைய நாவல்
பெருகிவரும் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி பேசுகிறது.
இன்னொரு புத்தகம் எழுத்தாளர் இமயம் தமிழில் எழுதிய சாவுச்சோறு.
தலலத்திய கதைக்களத்தில் இன்றைய சாதி சமூகத்தை முன்வைத்து
எழுதப்பட்டிருக்கிறது.
தமிழில் எழுதப்பட்ட இமயம் அவர்களின் சாவுச்சோறு ..
முதலில் பார்ப்போம்.
9 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் சாவு சோறு
கதைத் தொகுப்பில் முதல் கதையான " சாவு சோறு"
கதையில் கையாளப்பட்டிருக்கும் சாதியப்பிரச்சனையும்
அச்சமூகப்பிரச்சனையை இமையம் கையாண்டிருக்கும் விதமும்
கதையின் பாத்திரப்படைப்புகளும் களமும் உரையாடல்களும்
படைப்புலகில் மிகச்சிறந்த இடத்தில் இருக்கின்றன.

சாதி சார்ந்த சமூகப்பிரச்சனையின் சகல பரிமாணங்களையும்
உள்ளடக்கி இருக்கிறது சாவுசோறு. நாவலுக்கான கதை, என்றாலும்
கூட சிறுகதை வடிவில் கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.
தருமபுரி சம்பவம், இளவரசன் திவ்யா காதல் திருமணமும்
கொலை செய்யப்பட்ட இளவரசன், இந்நிகழ்வுக்குக்கு முன்னும்
பின்னும் இருக்கும் சாதி அரசியல் என்ற ஓர் உண்மை சம்பவத்தின்
இன்னொரு பிரதிபலிப்பு தான் சாவுசோறு.

மகள் அம்சவல்லி ஒரு விடீயோ போட்டோபிடிப்பவனுடன்
ஓடிப்போய்விடுகிறாள். தாய் பூங்கோதை தன் மகள் அம்சவல்லியைத்
தேடி ஊரிலும் ஊரின் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் ஒவ்வொரு
பள்ளிக்கூடமாக ஏறி இறங்குகிறாள்.
"எட்டுப்பவுணு நக, இருவதாயிரம் பணம், அப்புறம் அவ படிச்ச
இந்தச் சீட்டுவோ, இது இருந்தா இதெக் காட்டி ஒரு எடத்தில வேல
செஞ்சி பொழச்சிக்குவா இல்லே?" என்று அலைகிறாள் தாய்.

அவள் தேடலுடன் நடக்கும் உரையாடலில் தான் கதை முழுக்கவும்
சொல்லப்படுகிறது., உயிரோட்டமாக.

மகள் ஓடிப்போனதற்காக தாயைத் தண்டிக்கிறது சாதி சமூகம்.
"நீ நல்லவ இல்லே. அதான் நீ பெத்தது மாடு திங்கற பயகூட
பன்னி திங்குற பயகூட ஓடிப்போச்சி " என்று அம்சவல்லியின்
தாய் அவளுடைய கணவன், புதல்வர்கள் மற்றும் சுயசாதிக்காரர்களால்
தண்டிக்கப்படுகிறாள்.
அம்சவல்லியைக் காதலித்து ஓடிப்போனவனின் தாயோ மிகவும்
கொடூரமான வழியில் தண்டிக்கப்படுகிறாள். "ஊரே திரண்டு போயி
கோழியின் கழுத்தை அறுத்த மாதிரி அவள் முலையை அறுத்தது.
அந்த அவமானம் தாங்காமல் அவள் தூக்கில் தொங்குகிறாள்.

ஓடிப்போன மகளுக்கு இதே தண்டனைதான் கிடைக்கும் என்று
சொல்கிறாள் பூங்கோதை. ஏற்கனவே இம்மாதிரி தண்டனை அவர்கள்
ஊரில் வழங்கப்பட்டிருக்கிறது. முலய அறுப்பானுகனு தெரிஞ்சும்
ஒருத்தி ஓடிப்போயிட்டாளே என்று தாய்மனம் அங்கலாய்க்கிறது.

"முலதான் பொட்டச்சிக்கு மூஞ்சி "க்கு என்று சொல்லும்
பூங்கோதையின் வார்த்தைகள் தொன்மையானவை.
முலை பிடுங்கி எறிந்து மதுரையை எரித்த கண்ணகியின்
கதை வெறும் கற்பனை அல்ல, அது ஒரு குறியீடு.
அநீதிக்கு எதிராக , ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட
ஒரு குறியீடு இன்றைய சாதி சமூகத்தில் பெண்ணைக்
கீழ்நிலைப்படுத்த ஓர் அடையாளமாக இழிவு படுத்தப்படுகிறது.
அநீதிக்கு எதிராக பெண்களால் கையாளப்பட்ட போராயுதமாக
இருந்த முலை , சாதி சமூகத்தினரால் பெண்ணை அடிமைப்படுத்தும்
ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது.

ஒரே சாதிக்காரனைக் காதலித்து ஓடிப்போயிருந்தால் இரண்டொரு
மாதங்களில் சமாதானமாகப் போயிவிடும். மேம்பட்ட சாதிக்காரன் கூட
ஓடிப்போயிருந்தா கூட சரினு ஏற்றுக்கொள்ளும். ஆனா கீழ்ச்சாதிக்காரனுடன்
ஓடிப்போனதுதான் பிரச்சனை என்று இன்றைய சாதிப்பிரச்சனையின்
சரியான முகத்தை வெளிப்படையாக பேசுகிறார்.
அதுவும் இக்கதை முழுக்கவும் ஓடிப்போன பெண்ணின் தாயான
பூங்கோதையின் உரையாடலாக அமைந்துள்ளது. அதாவது
கீழ்ச்சாதி பெண்ணின் உரையாடலால அல்ல. தங்கள் சுயசாதிப்
பெருமை ஒரு கீழ்ச்சாதிப்பையனுடம் ஓடிப்போய்விட்டதால்
சரிந்துவிட்டதாக கருதும் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதியின்
பெண்ணிடமிருந்து வருகிறது. இதன்மூலம் சூத்திரசாதியின்
சாதிப்பெருமையை அதே சாதி சார்ந்த பெண்ணின் மூலம்
உடைத்து விடுவதில் இமையம் வெற்றி பெற்றுவிடுகிறார்.
சாதிப்பெருமை பேசும் சூத்திரசாதி ஆண்கள், தங்கள் இனத்துப்
பெண்களான திவ்யாக்களையும் திவ்யாக்களின் அம்மாக்களையும்
பேசவிடவில்லை என்பதையும் அவர்களின் காதலையும்
விருப்பத்தையும அடக்கி ஆள்வதில், அவர்களை அடிமைப்படுத்தி
வைத்திருப்பதில் அவர்களின் சுயசாதிப்பெருமை இருக்கிறது
என்ற அவலத்தையும் காட்டிவிடுகிறார்.

கதைப்போக்கில் வந்துப்போகும் கதைப்பாத்திரங்களும் மிகுந்தக்
கவனத்துடன் படைக்கப்பட்டுள்ளன.
முதல் பள்ளிக்கூடத்தில் வாட்ச்மேன் பூங்கோதையை விரட்டிவிடுவதும்
இன்னொரு பள்ளியில் பெருக்கும் துப்பரவு வேலைச் செய்யும் கமலா
பூங்கோதையிடம் கதை கேட்பதையும் ஆறுதலாக இருப்பதையும்
கூட பெண்ணின் துயரத்தை அறியும் பெண்மனதின் உளவியலுடன்
இணைக்கிறார் கதையாசிரியர்.

கிராமங்கள் எங்கும் இன்று சிறுதெய்வ வழிபாட்டில் இடம்பெறும்
பெண் தெய்வங்களின் கதைகள் பெரும்பாலும் நம் சமூகத்தின்
சாதிப்படுகொலைகள் மீது எழுப்பப்பட்டிருக்கும் வழிபாட்டு பிம்பங்கள் தான்.
இக்கதையிலும் பூங்கோதை தன் கிராமத்தில் வழிபாட்டுக்குரிய
மானங்காத்த சாமியின் கதையைச் சொல்கிறாள். தன் மகளும்
அப்படி தங்கள் சாதி மானத்தைக் காப்பாற்றி இருந்தால்
கும்பிட்டுவிட்டு போயிருப்பேனே என்று அழுகிறாள்.
நத்தம் காலனி கலவரத்திற்கான காரணத்தை ஆராயும்போது
அப்பகுதியில் கொண்டாடப்படும் கொடைக்காரி அம்மனின்
சமூக வரலாற்று பின்னணி நினைவுக்கு வருகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்ககாலத்து பெருமையை
உலக அரங்க்கில் சொல்லும் தமிழன், திருக்குறளை உலகப்பொதுமறையாக
கொடுத்ததால் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு என்று கொண்டாடும் தமிழன், தமிழ்நாட்டில்
தம்தம் இனப்பெருமையாக நினைப்பதும் கொண்டாடுவதும்
அவ்ரவர் சாதிப்பெருமையாக மட்டுமே இருக்கிறது.
அதனால் எல்லோரும் தங்களை "ஆண்ட சாதியாக"
ஆய்வு செய்து நிறுவுவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
சாதிப்பெருமையைக் காக்க, தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும்
ஆணோ பெண்ணோ அவரவர் சாதி மானங்காத்த தெய்வமாகி
வழிபாட்டுக்குரியவராகிவிடுகிறார்கள். அப்படி தன்னை மாய்த்துக்
கொள்ள தெரியாமல் எதிர்த்து போராட வருபவர்கள் வாயில்
மலமும் மூத்திரமும் திணித்து தங்கள் சாதிப்பெருமையை
நிலைநாட்டிக்கொள்கிறது சூத்திர இடைப்பட்ட சாதிகள்.

திருவள்ளுவரின் திருக்குறளை உலகப் பொதுமறையாக
வான்புகழ் கொண்டு வாழ்த்தும் தமிழ்கூறு நல்லுலகம்
தன் தமிழ் மண்ணில் மட்டும் தத்தம் சுயசாதிப்பெருமையை
மட்டுமே தமிழனின் பெருமையாக இன்றுவரை கட்டிக்காத்துவருகிறது.
தமிழன் உரிமை, ஈழப்போராட்டம் என்றெல்லாம் வரும்போது
சங்ககாலப் பெருமையை தங்கள் அடையாளமாகக் காட்டும்
தமிழ்ச்சமூகம், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் இறையாண்மை,
உரிமை, என்று வரும்போது அவரவர் சுயசாதிப் பெருமையை,
ஆண்ட சாதிப்பெருமையை தமிழ்ச்சமூகத்தின், தமிழ் கலாச்சாரத்தின்
அடையாளமாக முன்வைக்கும் அவலம் தொடர்கிறது.

பூங்கோதை தன் மகள் அம்சவல்லியைக் கண்டுபிடித்தாளா?
அம்சவல்லியின் முலை அறுபட்டதா?
தெரியவில்லை. தாய் மனதின் ஏக்கம், பெருமூச்சு, அதன் ஊடாக
பேசப்படும் சாதி சமூகம், அதுவே தமிழ்ச்சமூகத்தின் அடையாளமாக
இருக்கும் அவலம், தலித் சாதிப் பெண்ணின் உரையாடலில்
கதையை நகர்த்தாமல், சூத்திரசாதியின் தாய் உரையாடலில்
கதையை நகர்த்தி, பெண்ணியப்பார்வையையும் பூடகமாக
சேர்த்தே கொண்டு வந்திருக்கும் எழுத்தாளர் இமையத்தின்
படைப்பு , படைப்பின் உன்னத நிலையை எட்டுகிறது.



,.எழுத்தாளர் நீலிமாவும் மராத்திய மாநிலத்தின்
 மிதியாலா மாவட்டத்தையே
தன் கதைக்கான களமாக தேர்வு செய்திருக்கிறார்.
இறந்தவர்களின் செருப்பு - shoes of the dead எழுதிய கோட்டா நீலிமா
சண்டே அப்சர்வர் இதழின் அரசியல் ப்ரிவுக்கு ஆசிரியர் என்ற
கூடுதல் தகுதியும் கவனிக்கப்பட வேண்டியது.

இப்புதினத்தை எழுதி இருக்கும் நீலிமா ,
"ஒருவன் தன்னையே சாகடித்துக் கொள்கிறான் என்றால்
இதன் பொருள் அத்தனிமனிதனின் இறப்பல்ல, அவனுக்குள்
இருக்கும் விவசாயி தன்னை சாகடித்துக்கொள்கிறான்
என்றுதான் பொருள்" என்று சொல்கிறார்.
"ஜனநாயகத்தில் அதிகாரம் வாரிசுடமை ஆகிவிட்டதை
மாற்றுவது தான் என் நோக்கம் " என்று வெளிப்படையாக
பதிவு செய்துள்ளார். அரசியல் தலைவர்களின் வாரிசுகள்
அதிகாரத்தை வாரிசுடமையாகப் பெறுவது போல
ஏழைகளின் வாரிசுகள் ஏழ்மையைத்தான் வாரிசுடமையாக
பெறுகிறார்கள். க்டன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயி தன் மனைவி மக்களுக்கு அக்கடன்சுமையை வாரிசுடமை
ஆக்கிவிட்டு செல்கிறான். ஓர் அரசியல்வாதியின் மகனுக்கு
தன் தந்தையின் மரணத்தைக் கடந்து செல்வது எளிதாக
இருக்கிறது. கடன்சுமையில் தற்கொலை செய்து கொள்ளும்
விவசாயி மகனுக்கு அதுவே ரொம்பவும் சங்கடமானதாக
அமைந்துவிடுகிறது.
இப்பிரச்சனையைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கும் கதையில்

விவசாயிகளின் பிரச்சனையை நீலிமாவின் கதை
எப்படி அணுகி இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய சமூக அரசியல் பிரச்சனை என்பது
விவசாயிகளின் தற்கொலை தானே தவிர தற்கொலைக்குப்
பின்னர் நடக்கும் விசாரணையோ, அக்குடும்பத்திற்கு
மறுக்கப்படும் நிவாரணமோ அல்ல. கதை பிரச்சனையின்
முதல் நிலையில் கைவைக்காமல் மிகவும் சாதுர்யமாக
இரண்டாவது படிநிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

கதையின் போக்கில் பாதிக்கப்பட்டிருக்கும் கங்கிரி
பாத்ரா ஓர் அஹிம்சைவாதியின் குணாதிசயத்துடன் படைக்கப்
பட்டிருப்பது மட்டுமின்றி அவனுடைய அஹிம்சைவாதமே
ஓர் ஆயுதமாகவும் கந்துவட்டிக்காரன் முதல் அரசியல்வாதி
வரை அதனால் திருந்துவதாகக் காட்டப்பட்டிருப்பதும்
கதைக்கருவை பலகீனப்படுத்திவிடுகிறது.
விவசாயிகளின் போராட்டங்களுக்கான தீர்வு இம்மாதிரி வந்துவிடும்
என்றா? அஹிம்சை வழியில் நடந்தால் அரசியல்வாதியும் திருந்திவிடுவான்
என்றா? இம்மாதிரி கற்பனைகள் எழுத்தாளன் பேச வரும் கதையின்
வலுவை நீர்த்துப் போகவே உதவுகிறது!
விவசாயிகளின் பிரச்சனை குறித்து அறிந்தவரும் தெளிவான கருத்துகளை
தன் செவ்விகளில் முன்வைத்திருப்பவருமான நீலிமா எதற்காக இக்கற்பனா
வாதத்திற்குள் கதையைக் கொண்டு சென்றார் என்பது பெரிய கேள்விக்குறி.

வெறும் கள ஆய்வுகளை வைத்துக்கொண்டு நாவல் எழுதி விடமுடியாதுதான்.
கள ஆய்வுகள் நாவலின் களம், களம் பற்றிய வர்ணனை, அக்களத்தில் நிலவும்
பிரச்சனை இவற்றைப் பற்றிய கட்டுமானத்திற்கு உதவியாக இருக்கலாம்.
ஆனால் அதுவே ஒரு படைப்பின் ஜீவனாக இருந்துவிட முடியாது. கதை
மாந்தர்கள் உயிர்ப்புடன் வாழ கள ஆய்வு மட்டும் போதுமானதல்ல.
கங்கிரி பாத்திரப்படைப்பு இக்கதைக் கருவுக்கோ
சமகால அரசியல் பிரச்சனைக்கோ எவ்விதத்திலும் வலுசேர்க்கவில்லை.

நீலிமா விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை
விவசாயிகளின் வாழ்வியலிலிருந்து விலகி ஒரு பார்வையாளராக
ஓர் ஆய்வாளராக பார்க்கிறார். அப்பார்வை ஒரு மூன்றாம் மனுஷியின்
பார்வை. அதனால் தான் விவசாயி கதை மாந்தரின் உணர்வுகளுக்குள்
வாழ்வதும் அதை அனுபவிப்பதும் அவருக்கு சாத்தியப்படவில்லை.
ஆனால் பெண் கதை மாந்தர்களைக் கொண்டே சாவுசோறு கதையை
எழுதி இருக்கும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு
அப்பெண்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையும், அவர்கள் பிரச்சனையும்
அழுகையும் பெருமூச்சும் அவருக்குள் இருந்து எழுதிச் செல்கின்றன.
படைப்பு ஓர் உன்னதமாகிவிடுகிறது இதனால் தான்.
ஆனாலும் நீலிமாவின் நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால்
எட்டி இருக்கும் பரந்துப்பட்ட வாசக தளத்தை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச்சிறந்த இக்கதை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே காரணத்தினால்
தமிழ்நாட்டுக்குள் மட்டுமே ..வாசிப்புக்குரியதாகி..
அதுவும் தலித்திய சிறுகதைகள் என்ற அடையாளத்திற்குள்
முடங்கிப்போய்விடுகிறது!
பூங்கோதைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்கள் அல்லர்.
விவசாயிகளின் தற்கொலையும் மராட்டிய மா நிலத்திற்கு 
மட்டும் உரியதல்ல. 
சாவுச்சோறு.. தொண்டைக்குழியில்  .. குரல்வலையை
அமுக்கி .. வாசகனைப் புரட்டிப் போடுகிறது.