Wednesday, March 29, 2017

இது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்

Image result for மனுஷ்யபுத்திரன்

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா
 அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று
 குழப்பமாக இருக்கிறது....
ச்சே சே.. இதெல்லாம் என்ன குழப்பம்.
அப்படி எல்லாம் உங்களை விட்டுவிட மாட்டோம் ஹமீது.

. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். 
இது.. இது சரியான கேள்வி ம.பு
. இன்றுவரை உங்களைப் போன்று நம் சமூகத்திற்காக
மொழிக்காக உழைத்தவர்கள் வாடகை வீட்டில்
 இருக்கிறார்கள் என்பதைக் கூட
என் போன்றவர்களுக்கு நம்ப முடியவில்லை!
அதுவும் அண்மை காலங்களில் தொலைக்காட்சிகளின்
 ஊடாக நீங்கள் சார்ந்து பேசும் அரசியல் கட்சி உங்களை
இன்றுவரை வாடகை வீட்டிலா வைத்திருக்கிறார்கள்!
 என்ன கொடுமை ம.பு!
இதை வன்மையாக கண்டிக்கிறேன் ம.பு.

இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!

டியர் ம.பு.... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பிஜேபி
அடுத்து ஆட்சிக்கு வந்துவிடும் போலிருக்கிறதே! நீங்கள் குறிப்பிடும் மேற்கண்ட சொற்றொடர்கள் அவர்கள் சொல்வது போல இருக்கிறதே..
மேலும் நீங்கள் சார்ந்திருக்கும் திமுக வாகட்டும்
திராவிட அரசியலாகட்டும்..
தொடர்ந்து ஆட்சி செய்த தமிழகத்தில் இந்த நிலைமையா?
 நீங்கள் திராவிட அரசியலையே நடுத்தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்துவிட்டீர்கள். என் போன்றவர்களுக்கு
அது கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கிறது ம.பு.

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை 
கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது
 முதல் முறையாகக் கேட்கிறேன்
 ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’
நான் - நாமாக மாறியதும்
என் - எங்களாக மாறியதும்...
சூப்பர். இது .. #இது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்.#

உங்களுக்கு விரைவில் வேளச்சேரியிலோ அல்லது
 போயஸ் கார்டனில் ரஜினிகாந்தி வீட்டுக்கு அருகிலோ
 சொந்தமாக ஒரு வீடு அமையவேண்டும்.
வீடு மனை அமைய சனிப்பகவானை உங்களுக்காக வழிபடுகிறேன்.

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

Sunday, March 26, 2017

உன்னை வாசிக்கவில்லைImage result for why do read

நான் உன்னை வாசிக்கவில்லை.
உன் புத்தகங்கள் தடிமனாக இருக்கின்றன.
அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
உன் விருதுகள் என்னைப் பயமுறுத்துகின்றன
நான் உன்னை வாசிக்கவில்லை.

உன்னை வாசிக்கும் உயரத்தை எட்ட வேண்டும்.
காய்களை நகர்த்துகிறேன்.
ஏணிகளுக்கு அருகில் பாம்பின் வழித்தடம்
நீ  ஏதோ சொல்லுகிறாய் என்னிடம்
எல்லோரும் உன்னை வாழ்த்துகிறார்கள்.
வாழ்த்துக் கூச்சலில் உன் குரல்
காற்றில் கற்பூரமாய் கரைந்துவிடுகிறது.
கழுதைகள் அறியாது கற்பூரவாசனையை என்கிறாய்.
கழுதைகளைப் பற்றி அறியாதவர்கள் 
நீ சொல்வதே சரி என்கிறார்கள்.
கழுதைகளிடம் யாரும் கேட்கவில்லை. 
தாழம்பூ மணக்கும் நதிக்கரையோரம்
என் கழுதைகள் இளைப்பாறுகின்றன.
உன்  அழுக்கடைந்த ஆடைகளை
வெள்ளாவி பானைக்குள் திணித்து தீமூட்டுகிறேன்.
பிரம்மனின் நான்காவது தலை  வெடித்து சிதறுகிறது.
நான் உன்னை வாசிக்கவில்லை.
வாசிக்கப்போவதுமில்லை.


Friday, March 24, 2017

அரசியல் உளறல்கள்

Image result for அரசியல் கோமாளிகள்உளறல்கள் பலவிதம்..
அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம்
உளறல்கள் எப்போதாவது உண்மையாகிவிட்டால்
 பரவாயில்லை.
சிலர் உளரும் போது என்னவோ அவர்கள்
  சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது
.என்ன மாதிரி ஒரு நிலை வந்திடுச்சிடா சாமி.!

உதாரணத்திற்கு சில உளறல் கில்லாடிகளின் அண்மைய உளறல்கள்

தமிழ்நாட்டில் ஆறு மாதத்திற்குள் திமுக ஆட்சியைப் பிடிக்கும்
என்று உச்சக்குரலில் முழக்கமிடுகிறார் துரைமுருகன்.
 ஜெ வின் மறைவுக்குப் பின் அடிக்கடி கேட்கும்
 இக்குரலும் அதன் பின் நிகழும் சில மெகா காட்சிகளும்
மெரீனா முதல் சட்டசபை வரை ...
இதோடு சேர்த்து புரிந்து கொள்ள வேண்டி  இருக்கிறது.

அதிமுக பிளவுபட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின்
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருப்பதாக
தொடர்ந்து கூறிவந்தார் தமிழிசை சவுந்தரராஜன்
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கும்
 பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 ஆனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது சரிதான்
என்று இப்போது கூறியுள்ளார்.

சசிகலா முதல்வராவதை எவரும் தடுக்க முடியாது
என்று தன் டுவிட்டரில் எழுதிய சு.சுவாமி
இரண்டு நாட்கள் கழித்து பல்டி அடித்தார்.
சசிகலா முதல்வராக வாய்ப்பே இல்லை
பிப் 9 ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் தெரியவரும்
என்று ஜாதகம் கணித்தார்.

இவர்களின் உளறலுக்குப் பின் நடந்தது என்ன
என்று நமக்குத் தெரியும்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
 இவர்கள்  உளறிக் கொட்டுவதையும் கவனிக்க
வேண்டியதாகிவிட்டதே   என்ற கவலையுடன்.


.

Thursday, March 23, 2017

ஆதித்தியாநாத் யோகியும் மர்மநபர்களும்

Image result for yogi adityanath imageஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர்.
33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா..!
உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங்களை மூடப்போகிறார்.
இதில் மட்டும் சகிப்புத்தன்மையைக் காட்டக்கூடாது என்று
அதிகாரிகளுக்கு உத்தரவு. அதிரடி ஆட்டம் ஆரம்பித்துவிட்டது.
 கேட்டால் சட்ட விரோத பசுவதைக் கூடங்களை மூடப்போவதாக
 பிஜேபி தங்கள் தேர்தல் அறிக்கையில்
அறிவித்ததை செயல்படுத்தப்போவதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் சொல்லிட்டா செயல்படுத்திடறது
 நியாயம்தானே! இருநாட்களுக்கு முன்  கன்சிராம் காலனியில் இருக்கும் இறைச்சி , மீன் கடைகளை மர்மநபர்கள் தீவைத்துக்
கொளுத்திவிட்டார்கள்.
யோகியின் சக்தி... ஆதித்தியா யோகியின் சக்தி.. 
மர்மநபர்கள் பலரை உருவாக்கும் சர்வ வல்லமைப் படைத்தது.
உங்கள் சக்தியின் முன்னால் எங்கள் ஜனநாயம் வெறும் தூசு.
யோகி ஆதித்தியா நமஹ..
(2)
உங்கள் சர்வவல்லமை சக்தியைப் பயன்படுத்தி
 உங்களின் புனித நதியான கங்கை மற்றும் யமுனையும்
காப்பாற்றுங்கள்.
கங்கையில் மட்டும் 1.5 பில்லியன் கழிவுநீர்
  (sewage )கலக்கிறது.
காசியில் செத்தால் சொர்க்கம் போகலாம் என்பதால்
 காசியில் மட்டும் 32000 எரிக்கப்பட்ட பிணங்கள்  மிதக்கின்றன.
அதனால் 300 டன் அளவு பிணங்களின் சதை நாற்றத்தால்
 அழுகிக் கொண்டிருக்கிறது கங்கை.
முடிந்தால் உங்கள் மர்மநபர்களைக் கொண்டு
 கங்கையைக் காப்பாற்றுங்கள்.. யோகிஜி.

மோதி நமஹ. யோகி ஆதித்தியா நமஹ.
ஓம் கங்கா ஸுதாய நமஹ

Wednesday, March 22, 2017

the secret diary of Kasturba

புத்தக அலைவரிசை

காந்தியை விட 6 மாதத்திற்கு மூத்தவர் கஸ்தூரிபா. 
அதுமட்டுமல்ல காந்திக்கு அவர் 3வது மனைவி.
 முதலிரண்டு பெண்கள் தவழ்ந்து விளையாடுவதற்கு 
முன்பே இறந்துவிட்டார்கள். ஆம்.. பிறந்தவுடனேயே 
நிச்சயிக்கப்பட்ட மனைவியர். கஸ்தூரிபாவின்
 அந்தக் கடைசி தருணங்கள்.. 
மகன் சொல்கிறான்.. "அம்மாவுக்கு ஊசி போட்டால் நல்லது "என்று.
 காந்தி அதைத் தடுக்கிறார். இயற்கையாக மரணத்தை
 வலியுடன் ஏற்றுக்கொண்டு அவள் தலையை எடுத்து
 தன் மடிமீது வைத்துகொண்டு..
வாசிக்கும் போது என்னடா இப்படியும் கிறுக்குத்தனமாக
 ஒரு மனுஷன் வாழ்ந்திருக்கிறானே என்று
 கோபம் கலந்த ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு ஏற்படுகிறது.
இன்னொரு புத்தகம்..
இதைத்தாண்டி காந்தியின் மூத்தமகன் ஹரிலாலில் கடைசி நாட்கள்
 ஒரு காவியத்தின் துன்பியல் காட்சிபோல விரிகிறது.
 ரேஷ்மாபாய் என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்
 போன் செய்கிறாள் திடீரென்று ஹரிலாலின் தம்பி மகன்
 கேசவ்லால் காந்திக்கு. கேசவ்லால் காந்தி ஹரிலாலின் மருமகன்
 சுரேந்திரபாய் க்கு போன் செய்து அழைக்கிறார்.
 இருவரும் கேசவ்லால் வீடிருக்கும் மாதுங்காவிலிருந்து புறப்படுகிறார்கள். பாலியல்தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் காந்தி குல்லாவுடன்
 இரவில் அலையும் அவர்களை அப்பெண்களும் இளைஞர்களும்
 அதிசயமாகவும் கேலியாகவும் பார்க்கிறார்கள்.
 குல்லாவை எடுத்து சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு 
போனில் தகவல் சொன்ன ரேஷ்மாபாயைத் தேடுகிறார்கள்.
சீவ்ரி அரசு மருத்துவமனையில் தன் கடைசி நாட்களை
 எண்ணிக்கொண்டிருக்கும் தேசப்பிதாவின் மூத்தமகன்..
வாசிக்க வாசிக்க தேசப்பிதா தன் மூத்தமகனுக்கு மட்டும் 
பிதாவாக இருக்கவில்லையே என்ற எண்ணம் பாறாங்கல்லாகி
 வாசிப்பு நிமிடங்களைக் கனமுள்ளதாக்கிவிடுகிறது.

காந்தியுடன் முரண்படும் புள்ளிகள் பலவுண்டு. 
ஆனாலும் அந்த மனுஷன் தன் வாழ்க்கையில்
 தன் அனுபவங்களின் ஊடாக தன்னையே வருத்திக்கொண்டு...
காந்தி மகாத்மாவாகவே இருக்க ஒரு மனைவியாக கஸ்தூர்பாவும் 
ஒரு மகனாக ஹரிலாலும் கொடுத்த விலை அதிகம் தான்.
 மகாத்மாக்களுக்கு வேண்டுமானால் அதெல்லாம்
 பெரிதாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் என்னைப் போன்ற சாதாரண மனுசிக்கு.. அப்படியல்ல.

புத்தக அலைவரிசை: THE SECRET DIARY OF KASTURBA - BY
Neelima Dalmia Adhar
&MAHATMA VS GANDHI - by Dinkar JOSHI

கொஞ்சு புறாவே..

 . .Image result for pigeon at window
பால்கனியில் முட்டையிட்டு குஞ்சுபொறித்து
குடும்பம் நடத்திய புறாக்கள்
பறந்துவிட்டன.
ஊடலும் கூடலுமாய் வெட்டவெளிச்சத்தில்
வெட்கமின்றி திரிந்த புறாக்களை
சிபிமகாராஜாவின் நீதிமன்றம்
தண்டித்துவிட்டது..
சாலை ஓரத்தில் எச்சமிடும் நடைபாதை மனிதர்கள்
விடிவதற்கு முன்பே எழுந்துவிடுகிறார்கள்.
புறாக்களின் எச்சங்கள்
அடுக்குமாடிகளின் அழகைக் கெடுத்துவிடுகிறதாய் அறிவித்தவர்கள்..
இரும்புவலைக் கம்பிகளால் வேலிபோட்டு
பத்திரப்படுத்திக்கொண்டார்கள்..
பறக்கவோ இருக்கவோ
புறாக்களுக்கு அனுமதியில்லை.
இனி, காடுகளை இழந்த ஆதிவாசிகளைப் போல
புறாக்கள் அலைந்து கொண்டிருக்குமோ?.
புழுக்கமான இரவுப்பொழுதில் சன்னல்கதவுகளைத் திறக்கிறேன்.
புறாக்கள் விட்டுச் சென்ற முத்தங்களின் வாசனை
துரத்துகிறது சாபமாய். .


Sunday, March 19, 2017

சாமிக் கொண்டாடிகளும் என் சனங்களும்


அது என்னவோ தெரியல நான் எங்க ஊருக்குப் போயிட்ட
(அதாவது நான் வாக்கப்பட்டப் போன ஊரைத்தான் சொல்றேன்)
நான் அப்படியே மாறிப்போயிடுதேன். அது என்ன மாயமோ தெரியல.
காலையில எழுந்திருச்சி  வாசப்பெருக்கி முற்றம் தெளிச்சி கோலம்
போட்டு தோட்டமெல்லாம் பெருக்கி ... அப்படியே வயக்காட்டுக்குப்
போயி மோட்டார் போடற கிணற்றில் குளியல் போட்டு துணியைத்
துவைச்சி வீட்டுக்கு வந்து அசைக்கயிற்றில் காயப்போடுவது வர..
எல்லாமே என் ஊருக்கான ஸ்பெஷாலிட்டி தான்.அப்படித்தான் எங்க
ஊரு சாமிகளும் சாமிக்கொண்டாடிகளும். நாங்க போனவுடனேயே
சாமிக்கொண்டாடி வந்து சொல்லிட்டுப் போயிடுவாரு.. கோவிலுக்குப்
பூஜை செய்யது பற்றி. ஒரு வெள்ளியோ செவ்வாயோ கோவிலையும்
கோவில் சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
கோவிலைச் சுற்றி வளர்ந்திருக்கும் முள்மரங்களை வெட்டுவது தண்ணீர்
தெளிப்பது என்று எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதைப் பார்க்கவே
நல்லா இருக்கும். அப்போது சூடான அரசியல் பேச்சும் நடக்கும்.
அவர்களுக்கு ஊரில் காபிக்கடை வைத்திருப்பவர் தன் சார்பாக
காபியும் வடையும் கொடுத்து கவனித்துக் கொள்வார்.
மாலையில் பூஜை ஆரம்பிக்கும். நான் நல்லபெண்ணாக எந்த
விவாதங்களும் செய்யாமல் அவர்களுடன் கலந்து நிற்பேன்.
சர்க்கரைப் பொங்கல் வைத்து பூஜை நடந்தப் பிறகு வரும் பாருங்கள்
சாமிக்கொண்டாடிக்கு அருள்... அப்படியே அவர் ஆட ஆரம்பித்து
விடுவார்.. பெண்கள் அவரிடம் நல்வாக்கு கேட்பார்கள்..

" அந்த மனுஷன் திரும்பி வருவாரா இல்ல.. அப்படியே
போயிடுவானா.."
-யாரு உன் புருஷனைதானே கேட்கே.. அவன் அங்க ஒரு தொடுப்பிலே
இருக்கான்... எப்படியும் இந்தப் பங்குனி மாதத்திற்கு பிறகு வந்திடுவான்
பாரேன்.  -

'உன்ன நல்லாதானே வச்சிருக்கோம். இப்படி தோட்டமெல்லாம்
காய்ந்து போயி கிடக்கே.. .."
சாமிக்கு இப்போது அருள் உச்சத்தை தொடும்.
"என்ன மறந்திட்டீங்க... என்ன மறந்தீட்டிங்க.."  என்பார்.
ஊரிலிருக்கும் பெரியவர் சாமியிடம் கோவித்துக் கொள்வார்.
"தோட்டமும் வயலும் செழிப்பா இருந்தா உன்ன என்ன பட்டினியா
போடுவோம்.." என்பார்.

'கிணத்திலே தண்ணி இல்ல. விதைச்சிட்டேன். மழை வருமா ..
விளையுமா சொல்லு..'
"வர்ற அமாவாசைக்கு முந்தின நாள் மழை ஆரம்பிக்கும்.
குளம் குட்டை கிணறெல்லாம் நிரம்பிடும். அம்மா சொல்லிட்டா"
இப்படியாக அவர் நல்வாக்கு சொல்ல ஒருவழியாக நாங்கள்
 எல்லோரும் சுவையான சர்க்கரைப் பொங்கலை
அங்கேயே இலைப்போட்டு சாப்பிட்டுவிட்டு வருவோம்.
 பூஜைக்கு வைத்த தேங்காய் ,பழம் , எஞ்சிய சர்க்கரைப் பொங்கல்
ஊரில் அனைவரின் வீட்டுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

அமாவாசை வரும் போகும் வரும் போகும்.
மழை ஏன் வரவில்லை என்று அவரிடம் யாரும்
 எதிர்கேள்வி கேட்பதில்லை.
அவரும் தோட்டத்திற்கு வயலுக்கும் நடையா நடந்து இளைத்து
களைத்துப் போயிருப்பார். பல வருடங்கள் இதைப் பார்த்து
என் சனங்களின் தெய்வங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
இந்த தெய்வங்களுக்கும்  கருவறையில் வீற்றிருக்கும்  கடவுளின்
அதிகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை.
 தெய்வங்கள் அவர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவர்களைப் போலவே அவர்களின் தெய்வங்களும் வெயிலில் வாடி
கறுத்து மழையில் நனைந்து ஒதுங்குவதற்கு மேற்கூரையின்றி
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் தெய்வத்துடன்  பேசுகிறார்கள்
 கோவித்துக் கொள்கிறார்கள்
சண்டைப் போடுகிறார்கள். ஏன் அவர் அவர்களுடன் சேர்ந்து
சாராயம் வேறு குடிக்கிறார்
.இப்படியாக வாழ்ந்த சாமிக்கொண்டாடிகள்  பலரில்
நல்வாக்கு கேட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு சாமிக்கொண்டாடி
போய்ச்சேர்ந்தப் பிறகு ஊரிலிருந்து சங்கருக்கு அடிக்கடி போன்
வருகிறது
. " அண்ணே.. நம்ம ஊர்ல சாமியாட இப்போ யாருமில்லைன்ணே"
என்று. என் சனங்களின் கவலை நியாயமானதுதான்.

Saturday, March 18, 2017

மொழிக்கொள்கை
கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடகவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே ஒவ்வொரு மாநில மொழிக்கும் சம அந்தஸ்த்து என்றே சொல்லப்பட்டது.
நடைமுறை வேறாக இருந்தாலும்.

இந்த அறிவிப்புக்குப் பின் ஊடகங்களில் திடீரென இக்கருத்து
 பேசு பொருளாகி இருப்பது வரவேற்புக்குரியதுதான்.
ஆனால் இதைப் பற்றி பேசுபவர்களும் கருத்துரைப்பவர்களும்
 நடைமுறை சிக்கல் என்ன என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்
 என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
 தேசத்துரோகி மாதிரி இனத்துரோகி என்ற பட்டம்
 கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் கூட காரணமாக
 இருக்கலாம். இதை எழுதுவதற்கு முன் நானும்
முன்னெச்சரிக்கையாக இரண்டு வரிகள்
 எழுத வேண்டும்.நான் தாய்மொழிக் கல்விக்கு
 எதிரானவள் அல்ல . எங்கள் வீட்டில் என் தந்தையார்
 எங்கள் அனைவரையும் தமிழ்வழிக் கல்வி கற்கவே
 ஏற்பாடு செய்தார்
 (அவர் தொண்டர் என்பதுகூட காரணமாக இருக்கலாம்!)

நடைமுறை சிக்கல்கள் :
The allocation of cadre officers to the various cadres shall be made by the Central
 Government in consultation with the State Government of the State Government concerned.
 The Central Government may, with the concurrence of the State Government
 concerned, transfer a cadre officer from one cadre to another cadre".
இதுதான் இந்த அரசு அலுவலர்கள் குறித்த இந்தியச் சட்டம்.
 All India Service Officers(IAS/IPS/IFoS) and other Central Government Group A Officers(IFS, IRS, IAAS, IRTS etc) பதவிகள் இந்திய நடுவண் அரசு நியமிக்கும் பதவிகள். இது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோது பரந்துபட்ட இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிகள். காலனி ஆத்கத்தின் நிர்வாக முறை வசதிக்கான பதவிகள்.
இப்பதவிகள் குறித்த சட்டதிட்டங்கள் எதுவும் இந்தியக்குடியரசான பிறகும்
மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் அடையவில்லை என்பதையும்
எண்ணிப்பார்க்க வேண்டும்..

எனவே இந்தியக் குடியரசு  அயல்மாநிலத்தவர் பணி புரிய வரும்போது சில விதிமுறைகளை அமுல்படுத்தி இருக்கிறது. அதாவது அயல்மாநிலத்தவர் தான் பணி செய்யும் மாநிலத்தின் மொழியை 6 மாதத்திற்குள் கற்றுக்கொள்ள வேண்டும்.
 அதற்கான பயிற்சி, உதவித்தொகை, நேரம் இத்தியாதி
எல்லாம் கூட ஒதுக்கப்படுகின்றன. ஆனால் நடைமுறையில்
 பிற மாநிலத்தவர் இன்னொரு மாநில மொழியை ஒரு கோப்புகளை வாசிக்கும் அளவுக்கு கற்றுக்கொள்கிறார்களா? அது எந்தளவுக்கு சாத்தியப்படும் ? என்பதையே நாம் சிந்திக்க வேண்டும்.
உதாரணத்திற்கு,
.  ஒரு தமிழர் மராட்டிய மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிகிறார்.மாநில மொழிக்கொள்கை படி அவர் மராட்டி மொழியைக் கற்க வேண்டும். சரி.. ஐஏஎஸ் படிச்சவருக்கு இன்னொரு மொழி கற்பது ஒன்றும் கடினமில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றலாகிப் போகிறார்.பஞ்சாபி கற்கவேண்டும்.!!
இப்படிப் பேச ஆரம்பித்தால் உடனே நடுவண் அரசு சொல்லுவார்கள்.. அதனால் தான் சொல்லுகிறோம் இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று.
இதுவும் இந்தி மொழி திணிப்பு என்ற  கட்டாய மொழித்திணிப்பின் இன்னொரு
வடிவமாகவே இருக்கும்.
அதுவும் சரியல்ல. அப்படியானல் என்ன செய்ய வேண்டும்?
கட்டாய மொழித்திணிப்பு, இந்தியாவின் இறையாண்மை, இந்திய தேசத்தில் வாழும் பல்வேறு (தேச )இன மக்களின் இறையாண்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு தீர்வு காண வேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால் தான் இதை அரசியலாக்கி ஓட்டுக்கான விலையாக்கிவிடக்கூடாது என்று கருதுகிறேன்
இப்பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதை முதலில் விட வேண்டும். இது குறிதது இந்திய மொழி அறிஞ்ர்களும் கல்வியாளர்களும் இணைந்துதீர்வு காணவேண்டும்

1.

Thursday, March 16, 2017

ஆதாமின் எச்சில்
வெயில்நதி ஓடிய பெருவெளியாய்
நீண்டு கிடக்கிறது  பகல்வெளி.
ராஜநாகங்கள் பிணைந்து எழுந்து
புணர்ந்து மடிமீது தலைசாய்த்து
இளைப்பாறுகின்றன.
ஆலிலை சருகுகளின் ஓசையில்
சாரைப்பாம்புகளின் மொழி
வனத்தின் மவுனத்தைக் களைக்கிறது. 
துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருக்கிறேன்.
காற்றில அசையும் கொடியில்
ஊஞ்சலாடுகிறது இரவில் தீண்டிய நாகம்.
விஷங்களை விழுங்கிய நட்சத்திரங்கள்
வானத்தில் துப்புகின்றன  
ஆகாயமெங்கும் நீலநிற எச்சில்படுக்கை.
ஆதாமின் ஆப்பிள் கசக்கிறது.குமட்டுகிறது.
.வாந்தி எடுக்கிறேன்.
கூநதலில் சூடிய முல்லைப்பூக்கள் கருகி விழுகின்றன.
மலைகளைக் குடைந்து நீளும் பாதையில்
பாறைகள் உருண்டு மோதுகின்றன.
காயங்களுடன் .. எட்டிப்பார்க்கிறாள் நாககன்னி.
ஆதரவாக என்னை அணைத்துக் கொள்கிறாய் நீ..
கைகளில்  நெல்லிக்கனியுடன். Tuesday, March 14, 2017

பிஜேபி கணக்குGOA     INC17 BJP13 OTH10 AAP0
MANIPUR INC28 BJP21 OTH11 PRJA0
13 > 17
21 > 28
இது பிஜேபி கணக்கு.
காங்கிரசுக்கு கோவாவில் தேவை 4. மணிப்பூரில் தேவை 3
பிஜேபிக்கு கோவாவில் தேவை 8, மணிப்பூரில் தேவை  10
மொத்தமா திருடி இருக்கிறது பிஜேபி.
திருடறது என்று முடிவு பண்ணிட்டா அதில் மொத்தமா திருடறது
கொள்ளை இலாபம் என்பது கார்ப்பரேட் அரசியல் உத்தி.
 எங்கள் வெற்றியை பிஜேபி திருடி ஆட்சி யமைக்கிறது என்று
ராகுல்காந்தி சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால்
 அரசியல் நியாயம் தர்மங்களுக்கு அப்பாற்பட்டது.
கணக்கு என்பது வெறும் கூட்டல் கழித்தல்
பெருக்கல் வகுத்தல் மட்டுமல்ல. அரசியல்கணக்கு என்பது
புள்ளிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
புள்ளிகளை எந்த இடத்தில் எப்போது வைக்கிறோம் என்பதைப்
பொறுத்தே கணக்குகளின் விடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
புள்ளிகள் அரசியலில் பூஜ்யங்களுக்கு மதிப்பைக் கூட்டுவதிலும்
குறைப்பதிலும் பெரும்பாங்காற்றுகின்றன. .
இதெல்லாம் புரியாட்டா கூட பரவாயில்லை.
4 சட்டசபை உறுப்பினர்களை வாங்குவதை விட
8 சட்டசபை உறுப்பினர்களை வாங்க அதிக பணம்
 தேவைப்பட்டிருக்குமே. ஊழலுக்கு எதிரான ஆட்சியாக
தங்களைச் சொல்லிக்கொள்ளும் மோடிஜி பிஜேபி 
வகையறாவுக்குத் தான் இந்த ஊழல் கணக்கு வெளிச்சம். 

. இது பிஜேபி " நடுவண் அரசு  அதிகாரம்" என்ற
அனாதிஷியாவைக் கொடுத்து ஜனநாயக ஆபரேஷனை
 வெற்றிகரமாக செய்துவிட்டது. ஆனால் ஜனநாயகம்
என்ற நோயாளி தான் அநியாயமாக செத்துப்போய்விட்டார்.

OPERATION SUCESS. PATIENT DIED.
.
Saturday, March 11, 2017

மோதிஜியின் வெற்றியும் ராகுல்காந்தியின் தோல்வியும்

பிஜேபி வெற்றி பெற்றால் அது மோடிஜியின் வெற்றியாகவும் 
காங்கிரசு வெற்றி பெற்றால்
அது ராகுல்காந்தியின் வெற்றியாக மாற்றம்
பெறாமல் இருப்பதும்.. கவனிக்க வேன்டியவை.
உ.பி யின் வெற்றி முழுக்கவும் மோடியின் வெற்றியாகக் 
கொண்டாடப்படுவது.. பிஜேபியின் அரசியல் எதிர்காலத்தை
 கேள்விக்கு உரியதாக்குகிறது.
காங்கிரசின் வெற்றி ராகுல்காந்தியின் வெற்றியாக அல்லாமல் 
அந்தந்த மாநில காங்கிரசு தலைவரின் வெற்றியாக 
பார்க்கப்படுவது இரண்டாம் கட்ட தலைமைகளின்
 வளர்ச்சிக்கு இடமளிக்கிறது.
ஓட்டுவிகிதங்களைப் பார்க்கும் போது
மற்ற கட்சிகள் ஒன்றும் காணாமல் போய்விடவில்லை
என்பதும் நம்பிக்கை தருகிறது.
காங்கிரசின் தோல்வி ராகுல்காந்தியின் தோல்வியாக
 சித்தரிக்கப்படுவதும் அவருக்கு முன்பிருந்த 
காங்கிரசு கட்சி தலைவர்களுடன் ஒப்பிடுவது
(வேறு யாரு...அவரோட பாட்டி, அப்பா, பூட்டன், சித்தப்பா.. இவர்கள் தான்) 
இன்னும் சோகம்.. அவர்களுக்கெல்லாம் இல்லாத
அவர்கள் சந்திக்காத ஒரு களத்தை ராகுல்காந்தி சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
 அதுதான் மோடியும் மோடியை முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலும்..

. காங்கிரசுக் காரர்கள் கணக்கில் கொஞ்சம் வீக்காக இருக்கிறார்கள்.
அவ்வளவுதான்.

சூப்பர் ஸ்டார் ... சூப்பர் பரதநாட்டியம்..

.
Image result for aishwarya rajinikanth bharatanatyam


இந்தப் பாருங்கோ சூப்பர் ஸ்டார்.. உங்க ஸ்டைலே உலகமகா நடிப்பாக்கி நீங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராகி உங்களுக்கு பாலாபிஷேகமெல்லாம்
நடத்தி நீங்க ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி நி னைச்சி...
இன்னிக்கு வரைக்கும் ... உங்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம் என்பதாலேயே நீங்க ரொம்பவும் எல்லைத்தாண்டி ..
அய்யோ அய்யோ... ...
உங்கள் மகள் என்பதற்காக திருமதி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களை ஐ.நாவின் இந்திய கலாச்சாரா தூதுவராக நியமதித்ததைக் கூட நாங்கள் ஏற்றுக்கொண்டு
விட்டோம் என்பதற்காக
(Aishwarya R Dhanush, UN ambassador for gender equality in India)
அவரை இந்தியாவின் பரதநாட்டிய கலைமாமணியாக
நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது டூ மச் ... சா ..
உங்களுக்கே தோணல..
மார்ச் 8 மகளிர்தினக் கொண்டாட்டத்தில்
அவர் ஆடியதை சூப்பர் டான்ஸ் என்று வேணும்னா
சொல்லிக்கொள்ளுங்கள். "சூப்பர் " உங்களின்
குடும்பப்பெயராகிவிட்டதாக சொல்லிக்கொள்கிறோம்.
ஆனால் ப்ளிஸ் பரதநாட்டியம்னு மட்டும் சொல்லிடாதீங்க..
இது பரதநாட்டியம்னா அப்புறம் நீங்களெல்லாம்
சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்மினி அம்மானு
ஒரு நடிகை அதுதான் நம்ம தில்லானா மோகனாம்பாள்
ஆடியதை என்ன நாட்டியம்னு சொல்றது?

நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்.
இப்படியே ஆட ஆரம்பித்தா அப்புறம் நான் அழ ஆரம்பிச்சிடுவேன்...
ஹேங்ங்

Friday, March 10, 2017

நீல. பத்மநாபன் - மீள்வாசிப்புஎழுபதுகளில் வெளிவந்த மகத்தான படைப்புகளில்
ஒன்றாக பலராலும் பேசப்பட்ட நாவல் நீல. பத்மநாபனின்
"தலைமுறைகள்" . 80 களில் கல்லூரிகளில் பல கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட்ட நாவலும் இதுதான்.
மதுரை பல்கலை கழகத்தில் நீல. பத்மநாபனின் படைப்புகள்
குறித்து ஒரு நாள்  சிறப்பு கருத்தரங்க நடந்தப்போது
 நான் முதுகலை முதலாமாண்டு மாணவி.
 நீல. பத்மநாபன் வந்திருந்தார். அன்று அவர் படைப்புகள் குறித்து
 என்ன பேசினார்கள் என்ன விவாதித்தார்கள்
என்பதை எல்லாம் விட இன்றுவரை என் நினைவில்
 மறக்காமல் இருப்பது அன்று அவர் அணிந்திருந்த
 நீலநிறக் கலர் சட்டையும் அதற்கு மேட்சான பேண்ட்டும்
 குறுந்தாடியும்  ஒல்லியான தீர்க்கமான பார்வையுடன் கூடிய முகமும்...ம்ம்.ம்ம். .. இதெல்லாம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அப்படியே நினைவில் இருப்பதற்கு காரணம்...
 சரி அதெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்.
தலைமுறைகளின் உண்ணாமலை ஆச்சி மாதிரி நானும்
எதையோ சொல்ல வந்து வேறு எதையோ
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அப்போது எங்கள் பேராசிரியராக இருந்த  தி.சு. நடராசன் சார் அவர்கள் தலைமுறைகள் நாவலை கார்க்கியின் நாவலுடன் ஒப்பிட்டெல்லாம் விதந்தோதி ஆகச்சிறந்த ஒப்பியல் ஆய்வெல்லாம் செய்திருந்தார்.
 எனவே எவ்வித மறுப்புமின்றி தலைமுறைகள் நாவலைக்
 கொண்டாடுவது எங்களின் கடமைகளில் ஒன்றாக மாறிப்போனது.
மீண்டும் தலைமுறைகள் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் நாவலில் அன்ந்தநாயரின் கதைப்பாத்திரம் அளவுக்கு
திரவியம் வளரவில்லை.
உண்ணாமலை ஆச்சி மட்டுமே தலைமுறைகளின்
பக்கங்களில் நம்முடன் பயணிக்கும் கதைப்பாத்திரமாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் நிழல் கதைப் பாத்திரங்கள் மட்டும் தான்.
அதிலும் தலைமுறைகள் நாவலில் நாகு என்ற பெண்ணைச் சுற்றி
அவளுக்கு அவள் கணவனால் இழைக்கப்பட்ட கொடுமை
தலைமுறைகளின் மாறிவரும் மதிப்பீடுகளைப் பற்றியதாக
இருந்தாலும் கூட முக்கியமான கதைப் பாத்திரமான நாகு
எந்த இடத்திலும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை!
அவளைப் பற்றிய பிரச்சனைகள் குறித்து கதையோட்டத்தில்
அவள் தம்பியாக வரும் திரவியம் தான் பேசிக்கொண்டே இருக்கிறான். உண்ணாமலை ஆச்சி தலைமுறைகள் கடந்த
சம்பிரதாய மீறல்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் .
பள்ளிக்கொண்ட புரத்தில் கதை உத்தியும்
அனந்தநாயரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போன அவர் மனைவி கார்த்தியாயினியும் பிற  கதைப் பாத்திரங்களும் தலைமுறைகளைத் தாண்டி நம் வாசிப்பு அனுபவத்தில் நிரந்தரமாக நம்முடன் பயணிக்கிறார்கள்...
தலைமுறைகள் நாவலில் கதை சொல்லியாக நீல. பத்மநாபன்,  பள்ளிகொண்டபுரத்தில்  படைப்பாளராகி
கதைப் பாத்திரங்களில் உயிர்ப்புடன் ...
.
எனவே அப்போதும் சரி..இத்தனை ஆண்டுகள் கடந்து
 இரு நாவல்களையும் மீள்வாசிப்பு செய்தபோதும் சரி..
பள்ளிகொண்டபுரம் நீல.பத்மநாபன் ... பசுமையாக.


Monday, March 6, 2017

அரைநூற்றாண்டு திராவிட ஆட்சி


திராவிட இயக்கம் வேறு திராவிட அரசியல் கட்சிகள் வேறு.
திராவிட இயக்கத்தின் பலனை அனுபவித்தவர்கள்
 திராவிட அரசியலை விமர்சிப்பது செய்நன்றி கொன்ற குற்றமாக
 கருதுவது எவ்வகையான பகுத்தறிவு ?!!
*
'
1967ல் திராவிட அரசியல், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத்
 தொடர்ந்து இந்த அரைநூற்றாண்டு திராவிட அரசியலின்
 விளைவுகளை அனைவரும் பேசுகிறார்கள். இந்த விளைவுகளுக்குப்
பொறுப்பு திமுகவும் அதிமுகவும் என்றாலும் அதிகமாக
 விமர்சனத்திற்கு உள்ளாவது திமுக மட்டுமே! 
இதுவே திமுகவுக்கு இன்று எஞ்சியிருக்கும் ஆகச்சிறந்த பெருமை,
 மதிப்பு, மரியாதை, வெகுமதி..எல்லாமே..
அதிமுகவில் பெயரளவில் மட்டுமே அண்ணாவும் 
திராவிடக்கட்சியின் அடையாளமும் இருக்கிறது என்பதால் தான்
 விமர்சனங்கள் அனைத்தும் திமுக வை நோக்கியே பாய்கிறது 
என்பது திமுக வுக்கான + பாயிண்ட் தானே!

திமுகவினர் விமர்சனங்களை ஆதாரத்துடன் எதிர்கொள்வதற்கு
 மாறாக மீண்டும் மீண்டும் உணர்ச்சி அரசியல் மட்டுமே
 நடத்திக் கொண்டிருப்பது ஏன்?

திராவிட கட்சிகளின் விளைவுகளை விமர்சனம் 
செய்யும் போதெல்லாம் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்று
 சிறப்புமிக்க சமூக மாற்றங்கள் -
சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாக இருந்தது நீக்கப்பட்டது முதல் 
பேருந்தில் ஒடுக்கப்பட்டவர்கள் பயணிக்கலாம் என்ற அரசாணை வரை
அனைத்தையும் சட்டமாக்கி முன் உதாரணமாக இருந்தது நீதிக்கட்சி.

நீதிக்கட்சியின் செயல்பாடுகளை இன்று இவர்கள் பேசும் போது
மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டதை காங்கிரசு கட்சி பேசுவது போலவே இருக்கிறது ...
 நீதிக்கட்சி செய்தவற்றை ..அதே உதாரணங்களை மட்டுமே 
உரத்தக் குரலில் ஒலிப்பதை நிறுத்திவிட்டு 
அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுகவும் அண்ணாவின் பெயரைச் சொல்லிஆட்சிக்கு வந்த அதிமுகவும் 2017 வரை தமிழக அரசியலில் கொண்டுவந்த சிறந்த
திட்டங்களை .. வெளிப்படையாகப் பேசுங்கள். 
நீங்கள் இலவசமாக கொடுத்தப் பட்டியலை நினைவூட்டி 
பிச்சைக்காரப்புத்தியை வளர்த்ததை தயவுசெய்து
உங்கள் சாதனைகளாக சொல்லாதீர்கள். ப்ளீஸ்.

திராவிட இயக்கம் தமிழ்ச்சமூகத்திற்கு எவ்வளவோ
 நன்மைகளை செய்திருக்கிறது.
திராவிட இயக்கத் தொண்டர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் 
இன்றும் கோடை மழையாய் இருக்கின்றன.
 அதனாலேயே திராவிட அரசியலை விமர்சிக்கவே கூடாது என்பதும் 
அப்படி விமர்சிப்பது "செய்நன்றி கொன்ற குற்றமாக" சித்தரிக்கப்படுவதும் 
பகுத்தறிவுக்கு ஏற்றதா? 
திராவிட இயக்கம் வேறு. திராவிட அரசியல் கட்சிகள் வேறு.
 திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எல்லாம் நீர்த்து போக வைத்ததற்கு திராவிட அரசியல் கட்சிகளே காரணம்.
ஓர் அரசியல் கட்சி 50 ஆண்டுகளுக்கு முன் சொன்னதை மட்டுமே
 வைத்துக்கொண்டு மாறி வரும் அரசியல் சூழலில் தேர்தலை
 எதிர்கொள்ள முடியாது என்பதை என்னைப் போன்றவர்கள்
 ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது
 இவர்கள் ஊறுகாய் மாதிரி மாநில சுயாட்சியைத் தொட்டுக் கொள்வதும்
ஆரிய திராவிட சிக்கன் 60 சாப்பிடுவதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
இனியாவது மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் வாருங்கள். அத்துடன், திமுக, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆட்சிக்கு வந்தப் பின்
திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்ட வட்டங்கள்
 சட்டசபை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் சொத்துக்கணக்கை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மன்றத்தில் வையுங்கள்.
இவர்களைத் தவிர திராவிட என்ற அடையாளத்துடன்
கட்சி ஆரம்பித்து கடையில் இன்றுவரை ஜோராக வியாபாரம்
 செய்துக்கொண்டிருக்கும் மதிமுக, தேதிமுக காரர்களும்
 கட்சி ஆரம்பிப்பதற்கு முன், கட்சி ஆரம்பித்தப் பின்
உங்கள் சொத்துக்கணக்கை வெளியிடுங்கள். 
அப்போதுதான் கூட்டணிகளின் சாயம் வெளுக்கும்!
மக்கள் தீர்மானிக்கட்டும்.
நீங்கள் தானே அடிக்கடி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..

Sunday, March 5, 2017

நானும் எழுதுகிறேன்


நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்
ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை.
நேற்று சொன்ன காரணங்கள் இன்று என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
நான் எழுதிதான் புரட்சி ஏற்பட்டுவிடப் போகிறது என்பதலோ
சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்பதலோ எழதவில்லை.
நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ்த்தாய் ஒன்றும் தற்கொலை
செய்து கொள்ளப்போவதில்லை ! என்பதை நன்கு அறிவேன்.
ஆகச்சிறந்த எழுத்தாளராக பிரபலமாகி கொண்டாடப்படுவதற்காக
எழுதும் எந்த லட்சணங்களும் எனக்கோ என் எழுத்துக்கோ
கொஞ்சமும் இல்லை. அந்த வரிசையில் நானும் என் எழுத்துகளும்
இல்லை இல்லை என்பதால் வருத்தப்படுவதற்கு மாறாக
அதுவே எனக்குத் தலைக்கனமாகி இருப்பதாக என்னையும் என்
எழுத்துகளையும் அறிந்த தோழி சொல்கிறாள். அவள் அப்படி
சொன்னவுடன் என் தலையைத் தூக்கி சுமப்பது எனக்கே பெரும்
சுமையாகி அதைக் கழட்டி வைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறேன்.
ஆனாலும் எழுதுகிறேன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
எழுத்து என் இருத்தலுக்கான மூச்சாகிவிட்டதால் எழுதிக்கொண்டு
 இருக்கிறேனா? அல்லது  எழுத்து மவுனமொழிக்குள் வசப்படும்
 யோக நிலையை எட்டமுடியவில்லை என்பதால்
 எழுதிக்கொண்டு இருக்கிறேனா..?
நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

Saturday, March 4, 2017

யுகங்களை கடந்துவரும் கைரேகைகள்
தினையரிசியும் பாலும் கலந்து பால்சோறு, அவரைப்பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச் சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்து ஊன்துவை அடிசில், புளியும் மோரும் மூங்கிலரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட புளியங்கூழ் ஆகியன சங்ககால உணவு வகைகைகள் . அதாவது சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட உணவு தயாரிப்புகளை நாம்  அறிந்திருக்கிறோம்.
இந்த அடிப்படையிலிருந்து தான் இன்றைய பால்சோறு, பாயாசம், பால் கலந்த பிற இனிப்புகள், காய்கறிச்சோறு
(வெஜிடபுள் பிரியாணி/புலாவ்) மட்டன் சிக்கன் பிரியாணி,
புளிச்சோறு, தயிர்ச்சாதம் வகையறாவெல்லாம் கிட்சன்
கில்லாடிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உணவு என்பதும் உணவு முறை என்பதும் திணை
சார்ந்து பிரிக்கப்பட்டிருப்பது இடம் காலம் சார்ந்த சுற்றுப்புறச்சூழலைக் கணக்கில் கொள்ளும் உணவுமுறை.
உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர்.

• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
• உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
• உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
• நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
• நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
• பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
• மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
• மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
• விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
உணவும் உணவு சார்ந்த அறிவும் துய்ப்புணர்வும்
தமிழரின் வாழ்வியலின் ஓர் அங்கமாகவே தொடர்ந்து
வந்திருக்கிறது. பாலைக் காய்ச்சி உறை மோர் விட்டு
புளிக்க வைத்து தயிராக்கும் முறையையும் அந்த தயிரை
மோராகக் கடைந்து விற்கும் ஆயர்குலப் பெண்களைப்
பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”    கு.தொ. 167
குறுந்தொகை விவரிக்கும் இக்காட்சி ஒரு பெண் தன் மணவாளனுக்கு முளிதயிர்ப்பிசைந்த தீம்புளிப் பாகரை
எத்துணை ஈடுபாட்டுடன் சமைத்தாள் என்பதையும்
சொல்கிறது. சமையலும் சமைத்தலும் பெண்ணுடன்
சேர்ந்தே  சமூகத்தில் தொடர்கின்றன. அத்தொடர்ச்சியை
வளமைமிக்க தமிழ் உணவு மரபை தன் கவிதைக்குள்
எடுத்துவரும் மு. ஆனந்தனின் தலைப்புக் கவிதை
"யுகங்களின் புளிப்பு நாவுகள்".
அம்மாவின் ரேகையில் முளிதயிர்ப் பிசைந்த குறுந்தொகை
தலைவியின் கைரேகை இருக்கிறது. ஆனால் அம்மாவிடம்
அவள் அணிந்திருந்த கழுவுறு கலிங்கமில்லை. அம்மாவின் விரலும் காந்தள் மென்விரல்களாயில்லை.
ஓரிரவில் மோர் ஊற்றிய பால் தயிராகிறது
"ஓர் யாமத்தில்
கலவியாடி கருத்தரித்து
புலரியில் பெற்றெடுக்கிறது காலம்
புதுத்தயிரை" என்று கவிதையாகும் போது கவிதை வரிகளின் ஊடாக  வாசிக்க முடிகிறது ,
காதலும் காமமும் ஓர் யாமத்தில் கலவியில் கருத்தரிக்கின்றன என்பதையும் . விடியலாக தொடக்கமாக புதுதயிர் உருவாகிவிட்டது என்பதையும்..
அது என்ன புதுதயிர்?
தயிர் என்று சொன்னாலே போதுமே? ஏன் புதுத்தயிர்?
இது வெறும் தயிரல்ல. காலம் காலமாய் தொடர்ந்து
வரும் மோருடன் தசாப்த பாலின் சூலகத்தில் கருத்தரித்து
பிறந்திருப்பதால் இது "புதுதயிர்"
பசுமாடு வளர்ப்பும் பால் விற்பனையும் மோர்க்கடைந்து விற்ற முல்லை நிலப்பெண்ணும் அறியாத புதுத்தயிர்.
என்றைக்கு நம் மண்ணில்  ஆவின்பால் நிறுவனமயமாகி தொழில்மயமாகி பசுமாடுகள் எல்லாம் கறவைமாடுகளாக பால்மாடுகளாக மாறியதோ அன்று முதல், 
"அந்த தசாப்த பாலில் சூலகத்தில்
சதாப்த மோர் கருத்தரித்து" கிடைக்கும் புதுத்தயிர்.
(தசாப்தம் - பத்து ஆண்டுகள், சதாப்தம் - நூறு ஆண்டுகள்,
சஹஸ்ரம் - ஆயிரம் ஆண்டுகள்)
இந்த தயிரைக் கடையும் போது தயிர் மத்தின் சலசலப்பில்
கடந்த கால முல்லை நிலமும் ஆயர் குலப் பெண்ணும்
அவள் முளிதயிரும் ஏன் அணிந்திருந்த ஆடையும்
 பின்னோக்கி இழுத்துச் செல்லும் நினைவுக் கடைசலில்
வெண்ணெய்யாக திரளுகின்றன..
அதனால் தான் மோர்க்கடையும் கலயச்சுவர்களை
முகம் சுழிக்கின்றனவாம்!
"பின்னோக்கி  கடையும்
தயிர் மத்தின் சலசலப்பில்
காலாதி காலங்கள் பிரசவித்த
மோர்த்துளி சந்ததிகளின் விந்தணுக்கள்
கலையச்சுவர்களை  முண்டிச் சுழிக்கிறது"
என்று பூடகமாக சொல்கிறார் கவிஞர்.
இந்த மோரில் இருக்கும் புளிப்பு சுவைக்கும் யுகங்கள்
பலவுண்டு. மோரைக் கலையத்தில் கடையும் அவளும்
யுகங்களைக் கடந்து இன்றும் தயிரை மோராகக் கடைந்து
கொண்டிருக்கிறாள். அந்த மோரை ருசிக்கும் நாவுகளும்
யுகங்கள் கடந்து  புளிப்பு ருசியை உறை மோராக
தயிரில் கலந்து வருகின்றன. விளைவு... புதுப்புது
தயிரும் புதுப்புது மோரும்... மாறியும் மாறாமலும்
தொடர்கிறது யுகங்களின் புளிப்பு ருசி என்று ஒரு
முரணையும் விவரிக்கிறார் கவிஞர்.
ஆவின் பால் அமுல்  பாலாகி அமுல் தயிராக மாறிய இன்றைய சமூக அரசியல் சூழலில்  கவிதையின் இறுதி
வரிகள் சமூக அரசியலைப் பேசுகின்றன.
"உறை மோரின் நீர்மையில்
ஊடுபாவிக்கிடக்கிறது
யுகங்களின் புளிப்பு நாவுகள் "
என்கிறார் கவிஞர் மு. ஆனந்தன் அவர்கள்.
----

யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பில்
நான் மிகவும் விரும்பி வாசித்தக் கவிதைகள் இன்னும் சில உண்டு. குறிப்பாக தீக்கூடு, என் மகள் பெரியவளாகி,
கொழுவு எருத்து, திருமஞ்சன நீராட, அப்பாக்களின் முலைகள், நான் சொல்வதெல்லாம் பொய்  என்ற தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளைக்
குறிப்பிட்டு சொல்லலாம். இக்கவிதைகள் குறித்து கவிதை நூலிலேயே பேசப்பட்டிருப்பதால் என் விமர்சனத்தை
தலைப்புக் கவிதைக்கு திருப்பினேன்.
ஒரு கவிதை தொகுப்புக்கு தலைப்புக் கவிதையாகும் கவிதை
அக்கவிதை தொகுப்பின் ஒட்டுமொத்த கவிதைகளின் ஊடாக கலந்திருக்கும் மொழி என்பது என் எண்ணம்.
மோரின் புளிப்பு சுவை நாவுகளுடன்  இக்கவிதை வாசிப்பில் என்னருகில் அரூபமாக பயணித்த
யுகங்களைக் கடந்த அந்தக் கலித்தொகை, குறுந்தொகை
ஆதித்தாய்களுடன் சேர்ந்து  வாழ்த்துகிறேன் நானும்...
---

விமர்சனத்திற்கு அப்பால் இன்னும் சில..
அண்மைக் காலமாக எனக்கு வரும் கவிதை தொகுப்புகளை வாசித்து வாசித்து..
இப்போது இதைப் பேசியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். அண்மைக்காலமாக இப்போக்கு அதிகரித்து வருகிறது.என்பதால். இதற்கு இக்கவிதைதொகுப்பு மட்டுமே கார ணமல்ல. ஆனால் செறிவான ஒரு கவிதைகளுக்கு இதெல்லாம் ஏன் என்ற அக்கறையுடன்.
.கவிதை நூலுக்கு ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் அணிந்துரை கொடுக்கும் போது அதுவே வாசகர்களுக்கு இடையூறாக இருப்பதுடன் அக்கவிதை நூலை விமர்சனத்திற்கு வரும் போது விமர்சனம் செய்பவருக்கு பெரிதும் இடையூறாகவே இருக்கிறது.
ஒரு புத்தகத்தை முதல் அட்டை முதல் கடைசி அட்டைப்படம் வரை வாசிக்கும் என் போன்ற 
வாசகர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!