Monday, January 27, 2020

காணாமல் போன பஞ்சமி நிலங்கள்

காணாமல் போன பஞ்சமி நிலங்கள்..
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம்
12 லட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் .
தற்போது தமிழக அரசு ஆவணப்படி
பஞ்சமி நிலம் 1,26,113. ஏக்கர்.
காணாமல் போனது 10 லட்சத்து 73 ஆயிரத்து
887 ஏக்கர் நிலம்**
ஆட்டையைப்போட்டது யாரு..?!
இவ்வளவு நிலங்களும் இன்று யார் யார் கையில்
இருக்கின்றன? இதை எந்த ஒரு அரசாங்கமும்
கண்டுப்பிடிப்பது கடினம் அல்ல.
என்னதான்.. அதிமுக அரசு திமுக வைக் குறை
சொல்லட்டும்.. திமுக மேடைகள் அதிமுக வை
குறை சொல்லட்டும்.. இப்படி மாறி மாறி
ஆட்சி அதிகாரத்திலும் எதிர்க்கட்சியாகவும்
இருந்த இருக்கின்ற அதிமுக மற்றும் திமுக
இவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும்
சகல கட்சிகளும்… எக்காரணத்தைக் கொண்டும்
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே
மாட்டார்கள்..
தமிழ் நாட்டிலிருக்கும் மத நிறுவன ங்கள், பெரும்
வணிக நிறுவன ங்கள், அரசியல் கட்சிகளின்
சொத்துகள் எல்லாமே பஞ்சமி நிலத்தின்
பட்டாவில் தான் நிற்கின்றன.
ஒருவகையில் இதெல்லாம் பங்காளிச்சண்டைகள்
மாதிரிதான்..
பாவம்.. பொதுஜனங்கள் தான்..
ஆனாலும் ரொம்பவும் அசாத்தியமான நம்பிக்கை
நம்ம ஆட்களுக்கு உண்டு.
அசுரன் பார்த்துவிட்டு .. தனுஷ் நடிப்பைப் பார்த்து
விட்டு .. பஞ்சமி நிலம்.. அது இதுனு பேச
ஆரம்பித்து தனுஷ் அடுத்தப் பட்த்திற்கு மேக்கப்
போடறமாதிரி நம்ம ஆட்களும் அடுத்த டாபிக்
சீரியஸ்னஸ்க்கு மாறிடறோம்.. இதெல்லாம்
நல்லா தெரிஞ்சி வச்சிக்கிட்டு தான்யா
நம்ம நாட்டில.. இம்புட்டு பகற்கொள்ளைகள்
நடக்கின்றன.
என்னவோ போ.. சரவணா..
அர்ச்சகன் பொறுக்கித்தின்ன கோவில்
அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்
அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்..
பொறுக்கித்தின்ன தெரிந்தவன் தான்
பிழைக்கத்தெரிந்தவன்..
அதைக் கேள்வி கேட்பவனெல்லாம்
பரதேசி.. உருப்படாத ஜென்மங்கள்..
நான் உட்பட..
(** ஆதாரம் சிந்தனையாளன் பொங்கல்மலர் 2020)

Friday, January 24, 2020

பாளையங்கோட்டை இருக்கு! கோட்டை எங்கே போச்சு?


பாளையங்கோட்டையில் தான் 4 ஆண்டுகள்
கல்லூரி படிப்பும் விடுதி வாழ்க்கையும்.
பாளையக்காரர்கள் இருந்தார்கள், கோட்டைகள்
கட்டி இருந்தார்கள் என்று எதோ சின்னதா யோசிச்சோமே தவிர பாளையங்கோட்டையில் இருந்தக் கோட்டை
 இப்போ எங்கே இருக்குனு யோசிக்கவே இல்ல..
(அப்போ எல்லாம் அந்த வயசுக்கு ஏற்ற மாதிரி
வேற யோசனைகள் இருந்திருக்கும்!)
சரி ..இப்போ அத விட்டுத்தள்ளுங்க.
எங்க பாளையங்கோட்டையில் கோட்டை இருந்துச்சாம்.
அந்தக் கோட்டையின் நீளம் 2,700 அடி. சுற்றுச்சுவர்
மட்டும் 15 அடி அகலம் இருந்துச்சாம். அடேங்கப்பா..!
இந்தக் கோட்டைக்கு 4 வாசல்.
கிழவாசல் பெயர் – திருச்செந்தூர் வாசல்
வடக்குவாசலுக்கு – மதுரை வாசல்,
தெற்கு வாசலுக்கு – திருவன ந்தபுரம் வாசல்
மேற்கு வாசலுக்கு – திரு நெல்வேலி வாசல்
என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்
காலத்தில் 52 இடங்களில் படைவீரர்கள்
 மறைந்திருந்து கோட்டையைக் கண்காணிக்கவும்
 எதிரிகளைத் தாக்கவும் கொத்தளங்கள் இருந்தன.
 1844 ல் இக்கோட்டை அப்போதைய
ஆங்கிலேய கலைக்டராக இருந்த தாமஸ் மற்றும்
பக்கிம்துரை ஆணையால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
பாளையங்கோட்டையின் கற்களை 
சுலோச்சனா முதலியார் பாலமும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டும் 
கட்ட பயன்படுத்தி இருக்கிறார்கள்..
இக்கோட்டை இருந்த தற்கு சாட்சியாக இருப்பவை
மேடை போலீஸ் ஸ்டேஷன்...!
பாளையங்கோட்டையில் பாளையக்கார ர்கள்
கோட்டை கட்டுவதற்கு முன் .. அந்த ஊருக்குனு
ஒரு பெயர் இருந்திருக்கும் தானே..
அது என்ன? ???? எனக்கு இன்று தான் தெரியவந்தது.
“வல்லப மங்கலம்..”

“வல்லப மங்கலம்” தான் பாளையங்கோட்டையா
மாறி கோட்டை இடிஞ்சி பாலமாகி அணையாகி
அப்புறம் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டாகி
அதில நாங்கள் எல்லாம் படிச்சு… ப்படிச்சி.. ப்படிச்சி..
ஆக்ஸ்போர்ட் பெருமையைத் தூக்கி
நிறுத்திப்பிட்டோமில்ல!


பி.கு: பாளையங்கோட்டை இருக்கு.. நம்ம கோட்டை எங்கே போச்சுனு
தேட வைத்த "தென்னாட்டு ஜமீன்கள் - முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நன்றி)


(the sketch of Palayamkottai fort presented by the Colonel James Welsh)

Wednesday, January 22, 2020

பரட்டை.. பத்த வச்ச நெருப்பு..


Image result for naked images of god and goddess in templeImage result for naked images of god and goddess in templeImage result for naked images of god and goddess in temple

பெரியார் பேரணியில் ஸ்ரீராமனும் சீதாப்பிராட்டியும்
நிர்வாணமாக ஆடையின்றி அழைத்துச் செல்லப்
பட்டார்களா.. ?! தர்பார் புகழ் ரஜினி சார் அவர்கள்
இதை எதிர்ப்பதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்
என்று சிலிர்ப்பதும்… எனக்கு உண்மையிலேயே
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
பெரியார் அப்படி செய்தாரா..
அப்படி செய்திருந்தாலும் அது சரிதானா
இம்மாதிரியான மண்டைக்காயும் தீவிரமான
கருத்துகளை ரஜினி பேசுவது அவருடைய
பஞ்ச் டயலாக்கை விட சூப்பரா இருக்கு!!
சேலத்தில் 1971 ல் இப்படி ஸ்ரீராமனும் சீதாப்பிராட்டியாரும்
அவமதிக்கப்பட்டிருப்பதை இன்றைய ரஜினி துணிச்சலாக
கேள்விக்கேட்க அன்றைய சக்கரவர்த்தி திருமகன் எழுதிய
அறிஞர் சாணக்கியர் மதிப்பிற்குரிய ராஜகோபாலாச்சாரியார்
ஏன் அமைதியாக இருந்திருக்கிறார்? ச்சே.. ராஜாஜியின் அறிவு
அறம் நேர்மை மீது சந்தேகம் வருகிறது.. !!!
அப்புறம் ரஜினி சார்… உண்மையிலேயே ஆடையின்றியா
அல்லது .. என்ன நடந் த து என்று  நான் நேரில் பார்க்கவில்லை.
அப்படியான ஒரு சந்தர்ப்பமோ சூழலோ இல்லை.
சரி .. அதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள் ரஜினி சார்.
அப்படியே நடந்திருந்தாலும் அதெல்லாம் ஒரு நாள் கூத்து..
ஒரு புகைப்படம் கூட சாட்சியாக காட்டமுடியாது இருப்பதாக
தெரிகிறது… ஆனால்.. பாருங்கள்… அழிக்க முடியாத சாட்சியங்களாக
நிர்வாணத்தில் பெண்ணுடல்.. கோவில் கண்ட இடமெல்லாம்
இருக்கிறது. கும்பமேளாவில் சிரிக்கிறது…
இதை எல்லாம் என்ன செய்யலாம்  ரஜினி சார்..??
பெரியார் .. நிர்வாணத்தை அவமானத்திவிட்டார்.
இவர்கள் நிர்வாணத்தைக் கொண்டாடுகிறார்கள்.
ஒன்று அரசியலாகிறது.. இன்னொன்று கலையாகிறது.
இரண்டிலும் பெண்ணுடல்.. ஆடையின்றியே
காட்சிப்பொருளாகி இருக்கிறது.
சீதாப்பிராட்டி நிர்வாணப்படுத்தப்பட்டிருந்தால்
அதைப் பற்றி   நீங்கள் கவலைப்பட வேண்டாம்
ரஜினி சார்… பெண்கள் பார்த்துக் கொள்வார்கள்.
உங்கள் திரைப்படங்களில் பெண்களை நிர்வாணமாக
நீங்கள் காட்டவில்லை. ஆனால் அதைவிட “ஹாட்டா”
காட்டி இருக்கிறீர்கள்.. அப்போதெல்லாம் பெண்ணுடல்
மீது ஏற்படாத மரியாதை சீதாப்பிராட்டியின் பெண்ணுடல்
மீது உங்களுக்கு ஏற்பட்டிருப்பது உங்கள் ஆன்மீகத் தெளிவு!
அந்த திரைப்படக் காட்சிகளை நானும் காட்சிப்படுத்த விருப்பமில்லை.
அந்தப் பெண்கள் ரத்தமும் சதையுமாக நான் பார்த்த
உயிருள்ள ஜீவன் கள். திரையில் கலை என்ற போர்வையில்
அவர்கள் வியாபாரப்படுத்தப்பட்டிருக்கலாம். அதையே நானும்
செய்துவிட முடியாது ..
எப்படியோ.. பரட்டை… நீங்க பத்த வச்சிக்கிட்டே
இருங்க.. எரியட்டும். எரியட்டும்..
அந்த நெருப்பில் பெரியார் மட்டுமல்ல
நீங்களும் நாங்களும் தெரிகிறோம்..
எரியட்டும்..
 Image result for kumbh mela nudity
#rajini_periyar




Tuesday, January 14, 2020

பொங்கலின் அடையாளங்களுடன்..

பொங்கலின் அடையாளங்களுடன்
எம் பொங்கல் வருகிறது போகிறது..
கடையில் தான் புது அரிசி வாங்குகிறேன்.
என்றோ எப்போதோ என் பாட்டனும் பாட்டியும்
வயலில் விளைந்த நெல்லை அறுத்து வந்து
உரலில் குத்தி அரிசியாக்கி அந்தப் புது அரிசியில்
பொங்கல் படைத்தார்கள் என்பதன் அடையாளம்
மட்டுமே நாம் கடையில் வாங்கிவரும் பச்சரிசி.
என் பாட்டி பொங்கல் வைப்பதற்கென்றே
புதுப்பானை வாங்கி வருவாள். அதில் அவள்
தன் கைவிரல்களால் சந்தணமும் மஞ்சளும்
குங்கும மும் தீட்டுவாள்.. அதுவே ஓர் அழகான
ஓவியம் போல இருக்கும். நானும் நேற்றிரவே
வெங்கல உருளிப்பானையை பளபளனு தேய்த்து
தயாரா வைத்திருக்கிறேன்.. அந்தப் பானையின்
புதுமண் மணம் இதில் வரவே முடியாது என்பது
எனக்குத் தெரியும்.
வீட்டு தொழுவத்திற்கு அருகில் தானே முளைத்திருக்கும்
 அருகம்ப்புல்லை கிள்ளிவந்து சாணிப்பிள்ளையாருக்கு 
தலையில் சொருகி வயலில் மண்ணோடு பிடுங்கி வந்த 
மஞ்சள் இஞ்சி குலையுடன் கரும்பும் வாங்கி 
தென்னை மரத்திலிருந்து பறித்த புது தேங்காயின்
நிறமாறாமல் புதுப் பொங்கல்.. மணக்கும்..
தோட்ட்த்தில் பறித்த வாழை இலையில் அந்தப்
புதுப்பானை சோறும் அரிசிப் பாயாசமும் வீட்டில்
தயாரித்த நெய் மணமும் கலந்து அப்படி ஒரு
தேவாமிர்தமாக இருக்கும்.. அதில் எல்லா காய்கறியும்
போட்டு ஒரு குழம்பு வைப்பார்கள்.. அட டா.. மூன்று
நாளைக்கு அந்தக் குழம்பு கெட்டுப்போகாது. 
சுடாக்கி சுடாக்கி சாப்பிடும் போது அதன் சுவையும் கூடும்.
பன ங்கிழங்கு பொங்கல் வைக்கும் போதே
அடுப்புத்தீயில் ஒரு ஓரமாக சுட வைப்பார்கள்.

எல்லாம் வாங்கியாச்சு..
கடையில் தான்..
ஆனாலும் பன ங்கிழங்கு வாங்கி வர
மறந்தாச்சு.. முலுண்ட் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை.. 
எப்படியோ.. பொங்கலின்
அடையாளங்களை மட்டுமே சுமந்து
கொண்டு எனக்கும் வருகிறது போகிறது
பொங்கல்..

வயல்களும் தோட்டங்களும்
கிணறும் கால் நடைகளும்.. எனக்குத் தெரியும்..
ஆனால் என் வாழ்க்கையில் இல்லை.
என் பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி இருக்கிறேன்.
அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின்
பிள்ளைகளுக்கு அவர்கள் காட்டுவதற்கு .. இந்த
வாழ்க்கையின் அடையாளங்களை தக்க
வைத்திருக்கிறோமா…அவர்கள் கூகுளில் தேடிக்
கண்டடையக் கூடும். ஏன் அமேசான் இதை எல்லாம்
பொங்கல் செட் என்று சொல்லி விற்பனை செய்யும்.
(இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம்!)

மண்ணின் வாசனையை கனவுகளில் மட்டுமே
சுவாசிக்கும் ஒரு பெரு நகர வாசியின்
..இனிய பொங்கல் வாழ்த்துகள்

Monday, January 13, 2020

பச்சைக்குதிரை - நாவல் ஒரு பார்வை

பச்சைக் குதிரை - புதிய மாதவி - ஒரு பார்வை - பொன். குமார்


எழுத்தாளர் புதிய மாதவியின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களை, 
அடித்தட்டு மக்களை, பாதிக்கப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட
 மக்களை மையப்படுத்தி இருக்கும். மேம்படுத்துவதில் 
முன்னணியில் இருக்கும். கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, 
நாவல் என அனைத்துத் தளங்களிலும் எழுதும் பேராற்றல் மிக்கவர். 
எழுதுவது எதுவாயினும் அவரின் தனித்தன்மை இருக்கும்.
 ' பச்சைக் குதிரை' என்னும் நாவல் அவரின் நாவல்களில்
 முக்கியமானதாகும்.
பச்சைக் குதிரை என்பது ஒரு கிராமத்து விளையாட்டு.
 ஒருவரைக் குனிய வைத்துத் தாண்டுவது. 
ஒருவர் குனிகிறார் என்பதற்காக தாண்டிக் கொண்டே
 இருப்பதும் தவறு. குனிந்து நிற்பவரும் நிமிர்ந்து நிற்கும் காலம் வரும். 
அவரும் தாண்டும் நிலை ஏற்படும். பச்சைக் குதிரை களாக 
பெண்களை வைத்து எழுதப்பட்ட நாவல் ' பச்சைக் குதிரை'. 
பெண்கள் பச்சைக் குதிரைகளாக இருந்து வருகிறார்கள் என்றும் 
பச்சைக் குதிரைகளாக பெண்கள் இருக்கக் கூடாது என்றும்
 பச்சைக் குதிரை உணர்த்துகிறது.
 " அம்மா, மகள், மனைவி, காதலி, பாட்டி, தோழி என்று 
பச்சைக் குதிரைகள் பல்வேறு பெயர்களில் உங்கள்
 வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. 
நீங்கள் உயரங்களைத் தாண்டிக் கொண்டே இருக்கிறீர்கள். 
பச்சைக் குதிரைகள் நிமிர்ந்து விட்டால்... 
பச்சைக் குதிரைகளுக்குக் கொம்பு முளைத்து விட்டால்... 
எப்படி இருக்கும்? "
இது புதினத்திற்கான முன்னுரை அல்ல. " 
என்று முன்னுரையில் ஆண்களை எச்சரித்துள்ளார்.
 முன்னுரை அல்ல என்றாலும் இதுவே நாவலின் மையம், கரு.
ஒன்றாக படித்த சமாதான மேரி ( சமா), செந்தாமரை ( செத்தா),
 சங்கீதா, கண்மணி ஆகிய நான்கு பெண்களை மையச் சரடாகக்
கொண்டே நாவல் புனையப்பட்டுள்ளது. 
சமாவே நாவல் முழுதும் நாயகியாக வருகிறாள். 
சங்கீதா தவிர சமா, செந்தா, கண்மணி ஆகிய மூவரின் 
வாழ்க்கையில் ஆண் புயலால் எவ்வாறெல்லாம் அவர்கள்
 வாழ்வில் பாதிக்கப்பட்டது என நாவல் விவரிக்கிறது. 
நாவலின் எல்லா அத்தியாயங்களிலும் பெண்களையே 
பிரதானப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. பெண்களுக்கான 
ஒரு நாவலாக உள்ளது ' பச்சைக் குதிரை'.

சமா ஒருவனைக் காதலிக்கிறாள். சாதி பிரச்சனையால் 
கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பின்றி போய் விடுகிறது. 
ஆனால் இப்பலவீனத்தைப் பயன் படுத்தி சமாவின் அக்கா கணவன் 
சமாவைத் திருமணம் செய்து கொள்ள முயல்கிறான்.
 இப்போராட்டத்தில் சமா திருமணமே செய்து கொள்ளாமல்
 ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும் விடுதிக் காப்பாளராகவும் 
பணிபுரிகிறார். விதி விடுவதில்லை. காதலனுக்கு கல்யாணமாகி
 அவன் மகளுக்குக் கல்லூரியில் படிக்கவும் உதவி செய்ய
 வேண்டியுள்ளது. காதலனின் மகள் காதல் திருமணத்திற்கும்
 உதவ வேண்டிய ஒரு கட்டாய நிலை சமாவிற்கு ஏற்பட்டு விடுகிறது.
 வேண்டாம் என்றாலும் விடாமல் துரத்துகிறது சமாவை ஆணினம். 
சமாவும் எல்லா கட்டத்திலும் ஒரு பச்சைக் குதிரையாகவே
 இருந்துள்ளார்.
சமாவின் அக்காவின் வாழ்க்கையும் கிளைக் கதையாக வருகிறது.
 அக்காவின் கணவன் மாமியார் வீட்டில் கட்டாய வசூல் செய்து 
வாழ்பவனாக உள்ளான். அக்கா கல்யாணத்திற்கு போட்ட நகைகளை
 அக்காவின் கணவன் அவன் சகோதரிக்கு போட்டு கல்யாணம்
 செய்விப்பவனாக உள்ளான். அக்காள் வீட்டிற்கும் 
சமாவே உதவி வருகிறாள். அக்கா கணவனின்
 தொடர் தொல்லைகளால் அக்கா தற்கொலைக்கே முயல
 அவளையும் காப்பாற்றி வாழ வைக்கிறாள் சமா.

சமாவிற்கு திருமண வாழ்வில் உடன்பாடில்லை. 
திருமணங்கள் என்னும் ஒரு கட்டாய சடங்கு இல்லாவிட்டால்
 பெண்கள் சுதந்திரமாக வாழ்வார்கள் என்பதை சமாவின் கருத்தாக,
 சிந்தனையாக பதிவு செய்துள்ளார். 
தான் திருமணம் செய்து கொள்ளாததற்காக பெருமையும்
 படுகிறாள். திருமணங்கள் பெண்களை அடிமைப்படுத்தும்
 என்பதையும் குறிக்கிறது.
. .
செந்தாமரை என்னும் செந்தா ஓர் அரசியல்வாதியின் மகள்
 என்பதால் ஓர் அரசியல்வாதிக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். 
அரசியல் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் 
அவளுக்குக் கட்டிவைத்தவன் அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும்
 அப்பா என்னும் ஆணால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்படுகிறது.
ஒரு குழந்தை பிறக்கிறது. கோஷ்டி தகராறில் கணவனும் கொல்லப்படுகிறான். அவளும் அரசியலில் இறக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகி விடுகிறாள். 
ஆணாதிக்க அரசியல் வாழ்க்கையில் அவள் அடிக்கடி கர்ப்பமுற நேரிடுகிறது. கர்ப்பத்தைக் கலைத்து உதவுகிறார் அவள் தோழி மருத்துவர் சங்கீதா. 
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி செந்தாவும் தோழிகளுக்கு
 உதவி வருகிறாள்.

செந்தாமரை விதவையானதையும் சாதகமாக்கிக் கொண்டு 
அவளுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும்
 எண்ணம் இல்லாமல் அரசியல் செய்து வந்த செந்தாவின் 

அப்பாவைச் சாடியதுடன் விதவைத் திருமணத்தையும் ஆதரித்துள்ளார்.
கண்மணியின் கதையோ வேறு விதமான மோசம்.
 கண்மணி மும்பையில் வசிக்கிறார். கண்மணியின் தாயார் கணவன்
 ஒரு வழக்கில் சிறை செல்கிறான். இதனால் ஒரு பெரியமனிதருடன்
 தொடுப்பு ஏற்படுகிறது. கணவனும் வந்துவிட பெரிய மனிதர் 
வீட்டிலேயே ஓட்டுநராகப் தங்க அனுமதிக்கப்படுகிறார். 
கணவன் மனைவி உடல் உறவு கொள்வதைக் கண்ட 
பெரிய மனிதன் வக்கிரபுத்தியுடன் அவன் கண்முன்னாலேயே
 உடல் உறவு கொள்ள நிர்ப்பந்திக்கிறான். இருவரும் பெரியமனிதரின் தொல்லையிலிருந்து விடுபட வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 
ஓட்டுநருடன் ஓடிப்போனவள் என்னும் அவப்பெயர்
 அவள் மீது சுமத்தப்படுகிறது. கண்மணியும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கண்மணியின் தாயின் கதை.
பெரிய மனிதரையே அப்பா என்றழைக்கும் கண்மணிக்கு 
ஒருவனிடம் காதல் ஏற்படுகிறது. அவன் ஏற்கனவே திருமணமானவன்.
 ஒரு நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட உடலுறவில் கர்ப்பமுறுகிறாள்.
 கலைத்து விடுகிறார்கள். அவன் ஒரு தேச துரோகி. கண்மணியின்
 அலைபேசியை அவன் படுத்தியதால் தேச துரோக வழக்கில்
 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள்.
 பின்னர் உண்மையறிந்து விடுவிக்கப்படுகிறாள். 
இதற்கு செந்தா, சமா, சங்கீதா உதவுகிறார்ர்கள்.
சங்கீதாவை அவள் அத்தை, அப்பாவின் அக்கா, மருத்துவ 
படிப்பிற்கு பணம் கட்டி படிக்க வைத்து தங்கள் மருத்துவமனையை
 வருங்காலத்தில் நிர்வகிக்க தகுதி இல்லாத தன் மருத்துவரான
 மகனுக்கு சுயநலத்துடன் மணம் முடித்துக் கொள்கிறாள்.
 சங்கீதா அப்பாவும் சம்மதித்து விடுகிறார். சூழ்நிலையில் 
சிக்க வைக்கப் படுகிறாள். அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்
 கொள்கிறாள். மருத்துவர் சங்கீதாவின் தனிப்பட்ட வாழ்க்கைக் 
குறித்து எதுவும் எழுதப் படாமல் தோழிகளுடன் தொடர்பு 
படுத்தியே நாவல் நகர்கிறது.

சாதி வேறுபாட்டின் காரணமாக ஏற்பட்ட காதல் தோல்வியால்
 தற்கொலைக்கு முயன்ற சமாவைக் காப்பாற்றிய கண்மணி
 காதல் தோல்வியால் தற்கொலை என்பது பைத்தியக் காரத்தனம்
 என்று கண்மணியின் வாயிலாக எழுத்தாளர் புதிய மாதவி தெரிவித்துள்ளார். 
பெண்கள் தற்கொலை முடிவிற்குச் செல்லக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

வாழும் போது மதத்தை, சாதியை ஒதுக்கி வைத்தாலும்
 இறந்த பிறகு மதமும் சாதியும் மனிதரை விடுவதில்லை என்றும் 
வருத்தப்பட்டுள்ளார். அனாதைகளையும் சாதி, மதம் விடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை....
 நாடெங்கும் ஒரே குரல் ஒலித்துக் கொண்டுள்ளது.
 பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் ' ஒரே' என்பது ஒவ்வாதது
. ஒத்து வராதது. பச்சைக் குதிரை நாவலில் சாதி ஒழியாது என்பதை, 
ஒழிக்க முடியாது என்பதை எழுத்தாளர் புதிய மாதவி 
ஒரே வரியில் கூறியுள்ளார். அந்த ஒரே வரி 
" ஒரே சர்ச், ஒரே ஜீசஸ், ஒரே மாதா, ஒரே பைபிள்... 
எல்லாம ஒண்ணா இருந்தாலும் இந்தச் சாதி மட்டும்
 தனித்தனியா எங்கப் போனாலும் விடாம 
ஒட்டிக்கிட்டே இருக்குதாக்கும்"
 என்று கண்மணி உரையாடல் மூலம் உரைத்துள்ளார். '
ஒரே' என்பது சாத்தியமில்லை என்பதையும் உணரமுடிகிறது.

சமா பணிபுரியம் கல்லூரி விடுதியில் சர்மிளா என்னும் பெண் கருக்கலைப்புக்குள்ளாகிறாள். 
செந்தாமரையும் கருக்கலைப்புக்குள்ளாகிறாள்.
 கண்மணியும் கருக்கலைப்புக்குள்ளாகிறாள். 
கருக்கலைப்புகள் என்பது பெண்களுக்கு மட்டும் தண்டனை
 என்பதாக உள்ளது. பெண்களை ஆண்கள் ஒரு போகப் பொருளாக
 பயன்படுத்திக் கொள்வதன் விளைவு.
.
பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் எவ்வாறெல்லாம் 
ஆதிக்கத்தை, அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் என்று நாவல் நெடுக விவரித்துள்ளார் எழுத்தாளர் புதிய மாதவி. பெண்கள் மீது ஆண்கள் வன்முறை நிகழ்த்துதலையும் பெண்களை ஆண்கள் சுரண்டுதலையும் நாவல் நெடுக பேசப்பட்டுள்ளது.
மாதவிடாய் என்பது மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
 என்றாலும் அந்த காலத்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் சிரமத்தை 
அனுபவிக்கின்றனர் என்பது வலியின் வெளிப்பாடாக பதியப்பட்டுள்ளது.
 மாதவிடாயின் போது பெண்கள் முன்பு கையாண்ட முறையையும் தற்போது கையாளும் முறையையும் எடுத்துக் கூறி இரண்டிலுமே 
பெண்களுக்கு அவஸ்தை உள்ளது என்கிறார். பெண்கள் பூப்பெய்துதலை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டாம் என்ற தகவலும் 
நாவலில் காண முடிகிறது.

எழுத்தாளர் புதிய மாதவி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும்
 தற்போது மும்பையில் வசிப்பவர்.
நாவலின் களமும் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு பயணிப்பதாக
 எழுதப்பட்டுள்ளது. நாவலை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு சென்றுள்ளார். 
நாவலில் வருணனை ஏதுமின்றி நிகழ்வுகளை வைத்தே நாவல் 
எழுதப்பட்டுள்ளது. நான்கு தோழிகளின் வாழ்க்கையில்
 மாறி மாறி நேர்ந்த, நிகழ்ந்த சம்பவங்களைச் சரியாக
 பிணைத்து நாவலைத் தொய்வில்லாமல் கொண்டு சென்றுள்ளார். 
பச்சைக் குதிரை என்னும் விளையாட்டை பெண்ணியத்துடன் 
தொடர்பு படுத்தி எழுதியுள்ளது சிறப்பு. 
பச்சைக் குதிரை என்னும் விளையாட்டையும் நினைவுக் கூர்ந்து
 பெண்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டையும் அறியச் செய்துள்ளார். 
பெண்கள் சமூகத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பதையும் காட்டியுள்ளார். 
ஆண் சிங்கங்கள் பெண் பச்சைக் குதிரைகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் பொருட்டு நாவல் எழுதப்பட்டுள்ளது. பெண்கள் எப்போதும்
 பச்சைக் குதிரைகளாக இருக்கக் கூடாது என்றும் 
இருக்க மாட்டார்கள் என்றும் பச்சைக் குதிரை நாவல் வழி
 நன்றாகவே புரியச் செய்துள்ளார் எழுத்தாளர் புதிய மாதவி.
 அவர் புதிய மாதவி அல்ல புதுமை மாதவி, புரட்சி மாதவி.
 நாவலில் ஆண்பாத்திரங்கள் எதிர்மறையாகவும் பெண் பாத்திரங்கள் நேர்மறையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது புனைவு என்பது பொய். ஒரு பெண்ணாக முழுக்க பெண்களைப் பற்றி புதிய மாதவி எழுதிய 
' பச்சைக் குதிரை' என்னும் நாவலை
 ' எழுத்தும் இயக்கமுமாய் பயணிக்கும் ப. சிவகாமி'
 என்னும் ஒரு பெண்ணுக்கு சமர்ப்பித்திருப்பது கவனிப்பிற்குரியது.

வெளியீடு
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41 கல்யாண சுந்தரம் தெரு
பெரம்பூர் சென்னை 600011
விலை ரூ. 140.00

( தோழர் பொன்.குமார் அவர்களுக்கு நன்றியுடன்.. )

Thursday, January 9, 2020

ஆனந்த தாண்டவமோ

Image result for anandha thandavam modern art
 இனம் புரியாத யுகாந்திர
மவுன ங்களுக்குப் பிறகும்
எப்படி வேண்டுவது உன்னை?
உன் தரிசனம் மறுக்கப்பட்ட
ந ந்தனின் மகள் நான். 
ருத்திர தாண்டவத்தை
ஆன்ந்த தாண்டவமாக்கி
அருள் பாலிக்க வேண்டும்..அய்யனே.
உன் பூஜையில் மலராக முடியாது.
உன் தோட்ட த்தில் வேராகவும் முடியாது.
இதெல்லாம் முடியாது தான்..
உன் உற்சவம் முடிந்து
உன் பக்தர்களுக்கெல்லாம்
நீ அருள்பாலித்தப்பிறகு..
சிதம்பர தரிசனம் தரலாம் தானே..!
கொடியின் அசைவுகள் அறியாத
காற்றும் உண்டோ..
உன் தேர்க்கால்களிடம் கேட்டுப்பார்,,
அருகில் வந்ததும் கொடிகள் படர்ந்ததும்
மலையும் காடும் சாட்சியாய் நின்றதும்
உன் அடிமுடி அறியாத ரகசியமல்ல..
குளிரிலும் காற்றிலும் தள்ளாடும் கொடி
நினைவுகளின் கனம் தாங்காமல் சரியுமோ..
தேர் பார்க்குமோ
கொடி படர தேர்க்கால்கள்  நிற்குமோ.
ஆன்ந்த நடனம்..

ஆருத்திரதரிசனம்.. ஓம் நமசிவாய..


Wednesday, January 8, 2020

பாலையின் கனவுகள்

Image result for desert land goddess

தோழி.. சிவ காமீ
பச்சையமில்லாத பாலையின் கனவுகள்
தண்ணீரில்லாத தேசமாய்..
அடியே பச்சைக்கிளி அறியுமோ
வைகை நதிக்கரையில் வசந்தமாக வந்தவனும்
அவன் தான் என்பதை.
பசுமை தர மறுத்தவனை
பாலை மணலாறு
மறக்கவோ மன்னிக்கவோ..!
நதியின் பிழையன்று கொடுமணல்.
சுட்டெரிக்கும் பயணத்தில்
கனவுகளை மட்டுமே சுமந்தலைவது
காதலைக் கொல்லுமோ?
காலத்தை வெல்லுமோ..!
என் செய்வேன்..!
கத்துவேன் கொல்? முட்டுவேன் கொல்?
பெரு நகர இரைச்சலில்
இராட்சத பல்சக்கரங்களுக்கு நடுவில்
சிக்கித் தவிப்பது கனவுகள் மட்டுமா?
சொல்லடி அவனிடம்.

தோழி..
வன ங்களை அழித்து
மரங்களை  நடுபவன்
அறிவானோ
மழையின் தாகத்தை.
கடல் நீர் பாய்ந்து
கழனிகள் விளைவதில்லை..யென
காரணங்களை  அடுக்கி அடுக்கி
கண்ணீரத் துடைக்கிறாயோ..
அடியே.. சிவகாமி..
ஏமாற்றுவது  நீயல்ல.
திணைமயக்கங்களும் புதிதல்ல
கங்கையைச் சுமப்பவன் அறியாதா காதலா!
பொருளதிகாரம் புரியாதவனா அவன்!
புணர்ச்சி விதிகளின் ஒற்றுப்பிழைகள்
தண்டனைக்குரியதா..?
அரண்மனையின்  விதிகளும் சட்டங்களும்
அந்தப்புரங்களோடு முடியட்டும்
அலைகளிடம் காட்டாதே
அடங்கிப்போ வென
உரக்கச் சொல்லடீ..தோழீ
கோட்டைக்கதவுகள் தாண்டி எதிரொலிக்கட்டும்.
கடற்கரையில் உப்புவிற்றவள்
வெள்ளத்தில் கரைவாளோ
அடியே.. கடைபரப்பி நிற்பதுதான்
விதியோ வினையோ?
கனவுகளை  விதைத்த மருத நிலத்தவன்
விதைகளை மட்டும் விதைக்காமல்
விட்ட தென்ன?

பச்சையமற்ற பூமி
காற்றடித்து மணல்வெடித்து
எரிகிறதே..சுடுமணலில்
கனவுகளும் எரிக்கிறதே.
தேவீ.. உன் கழுத்துமாலையின்
மண்டை ஓடுகள்
நிஜத்துடன் உரசி உரசி
பற்றி எரிகிறதே..
பாலைக்கிழத்தியே..
கனவுகளைக் காப்பாற்றி விடு.
கனவுகள் ரொம்பவும் முக்கியமானவை.
கனவுகள் தான் வாழ்க்கை.
கனவில் வருகிறான்.
கட்டிப்பிடிக்கிறான
தோளணைத்து தூங்குகிறான்
கனவுகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அவன் முத் தத்தின் வாசனை
தோழீ ..   வருவான் தானே
கவிதையின் சிதையில்
கனவுகளுக்கு எரியூட்ட..


( நன்றி..காக்கைச்சிறகினிலே. ஜனவரி 2020)