Friday, January 30, 2015

மகாகவி பாரதியும் செங்கோட்டை ஸ்ரீஆவுடை அக்காளும்
ஆண்டுகள் ஒன்றிரண்டு அல்ல. சற்றொப்ப 400
ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் ஆவுடையக்காளின்
பெயரைச் சொன்னவுடன் கூட்டத்திற்கு வந்திருந்தப்
பெண்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியதை
பார்த்தேன். அந்த அனுபவம் எனக்குள் ஏற்படுத்திய அலைகளின்
தாக்கம் ஓயவில்லை.

முதல் முறையாக எனக்கு ஸ்ரீஆவுடையக்காவை அறிமுகப்படுத்தியவர்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள். சொல்வனம் இணையத்தில்
அக்காள் குறித்த அவர் கட்டுரை இருக்கிறது.
அதன் பின் மும்பை கோரேகான் தமிழ்ச்சங்க கூட்டத்தில் என்
பேச்சைக் கேட்ட திருமதி வேதா ராமஸ்வாமி "செங்கோட்டை
ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரச)
பாடல் திரட்டு - (ஸ்ரீ ஞானானந்த நிகேதன் வெளியீடு 2012
324 பக்கங்கள்) வாங்கி ஹைதராபாத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
நேற்று (2015) ஜனவரி 1 முதல் இன்றுவரை
அககாளின் பாடல்களை முழுமையாக வாசித்தேன்.
அடிப்படையில் நான் ஒரு பெரியாரியக்கத்தைச் சேர்ந்தவள்.
அக்காளின் எல்லா கருத்துகளுடனும் எனக்கு உடன்படுவது
சாத்தியமில்லை என்றாலும் ஒரு பெண்ணாக ஸ்ரீ ஆவுடை
அககாளின் வலியும் வேதனையும் அவள் தேடலும்
என்னை ஆட்கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
காரைக்கால் அம்மையார் இவர் என்று சொல்லலாம்.

மகாகவி பாரதி ஸ்ரீ ஆவுடை அக்காளைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதால்
பாரதியின் படைப்பு நேர்மையைக் கேள்விக்குறி ஆக்கி இருக்கிறார்
என் பேராசிரியர் சு. வேங்கடராமன். அதிரடி கவனிப்புகளுக்காக
எதையும் எழுதும் இயல்பு கொண்டவர் அல்ல என் பேராசிரியர்.
சு.வேங்கடராமன் அவர்கள் அகிலன் படைப்புகள் குறித்து முனைவர்
பட்ட ஆய்வு செய்து முடித்தவுடன் மதுரை பல்கலை கழகத்தில்
தற்கால இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியராக சேர்ந்தார்.
அவருடைய முதல் மாணவர்களில் நானும் ஒருத்தி.
நான் தான் புதியமாதவி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பது அவருக்குத் தெரியுமோ என்னவோ..?

நேற்று கூட ஆவுடையககாள்  பாடல்களையும் பாரதியின் பாடல்களையும்
அருகருகே வைத்துக் கொண்டு வாசித்தேன். பாரதியை மிகவும்
அதிகமாகப் பாதித்த ஆளுமை ஸ்ரீ ஆவுடை அககாள் என்பதை
என் வாசிப்பு அனுபவத்திலும் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.

"செங்கோட்டை ஆவுடையக்காள் தான் ஒருவகையில்
மகாகவி பாரதியாரின் கவிதைகளைப்  பாதித்த ஆளுமைமிக்கவர்.
"ஸ்ரீசுப்ரமணிய பாரதியார் அவர்களுக்கு "ஸ்ரீஅக்காள்" அவர்களின்
பாடல்கள் என்றால் உயிர். அவரும் "ஸ்ரீஅக்காள்" வரலாற்றை
அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப்பாடல்களின்
கருத்துக்களை ஒட்டியே அவரும் அநேக வேதாந்தப் பாடல்களைப்
புனைந்திருக்கிறார். அவர் எனது தாயார் அவர்களுக்கு சகோதரியின்
கணவராகையால், (பாரதி) அவர் மூலமாகவும் சில தகவல்கள்
அறியும் பாக்கியம் கிடைத்தது" என்று பதிவு செய்திருக்கிறார்
ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம்.

தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே -
என்கிறார் ஆவுடையக்கா.

பாரதி,

மோகத்தைக் கொன்றுவிடு அல்லால்
எந்தன் மூச்சை நிறுத்திவிடு

ஸ்ரீஅக்காள் எழுதிய பாடல்கள் 1000க்கும் மேலாக இருக்கும்.
திருநெல்வேலி வட்டாரத்தில் அவளுடைய பாடல்கள் மக்களுக்குப்
புத்துயிரும் சாந்தியும் ஊட்டின. பல இடங்களில் பெண்கள் சங்கங்கள்
அமைத்து அவள் பாடல்களைப் பாடி ஞானம் பெற்றனர்.
அக்காலத்து இளம் விதவைகளுக்கு அக்காளின் பாடல்களே
தாரகம். சுந்தரபாண்டியபுரம், சாம்பூர், வடகரை, ஆம்பூர்,
ஆழ்வார்குறிச்சி, நாகர்கோவில், வடுவீஸ்வரம், முன்னீர்பள்ளம்,
கல்லிடைக்குறிச்சி முதலிய கிராமங்களில் மத்தியான உணர்விற்குப்பின்
பத்துப் பெண்கள் கூடிக்கொண்டு, அக்காள் பாட்டைப் பாடி
தங்களுக்குள் ஆறுதல் அடைந்து கொள்வது வழக்கம்" எங்கிறார்
ஸ்ரீமதி கோமதி ராஜாங்கம்.


.
பாரதியை மிகவும் பாதித்த ஆளுமை ஸ்ரீ ஆவுடை அக்காள்.
ஆனால் அக்காளின் பெயரை  பாரதி எவ்விடத்தும் பதிவு செய்யவில்லை
என்பதாலேயே
பாரதியின் நேர்மையில் களங்கம் வருமா?
பேராசிரியர் சு.வே. அவர்களின் கேள்விக்குப் பின் பலர் இந்த
விவாதங்களை முன் எடுத்துச் சென்றுள்ளார்கள். இந்த
விவாதங்களுக்குள் நுழைவதில் எனக்கு விருப்பமில்லை
பாரதி தன் உறவுப் பெண்ணான கோமதியிடம் அக்காளைப் பற்றி
பேசி இருப்பதை அவரே பதிவு செய்திருக்கிறார். எனவே
ஆவுடை அக்காளின் பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டும்
என்ற உள்நோக்கம் பாரதியிடம் இருந்ததாக முடிவுக்கு வர
வேண்டியதில்லை.மேலும் ,
பாரதி வாழ்ந்த காலத்தில் அன்றாட எல்லா நிகழ்வுகளையும்
பதிவு செய்யும் வசதி இருந்ததா?
மேலும் தன்னைப் பாதித்த அனைத்தையும் பதிவு செய்ய
நம்மைப் போல முகநூல்/வ்லைப்பூ என்ற வசதிகளும்
பாரதிக்கு இல்லை.
அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில்
அவர் வாழ்ந்த அக்கால சமூக அரசியல் சூழலும் அது சார்ந்தப் பிரச்சனைகளும்
எப்போதும் முன்னிலை எடுத்திருக்கும். மேலும் "நீண்ட புகழ், வாழ் நாள்,
நிறை செல்வம்" வேண்டிக் கேட்ட பாரதிக்கு அவை வெறும் கனவாகவே
போய்விட்டன. தான் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கும் கால
அவகாசத்தை காலன்  பாரதிக்கு வழங்கவில்லை.

பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணம் நடக்கிறது.
பால்யவிவாகத்தின் கொடுமையை அனுபவிக்கிறார்
ஆவுடையக்கா. ஆம், ஆவுடையக்காவின் கணவர் இறந்துவிட
இளம்வயதிலேயே கைம்பெண் கோலம், ஆனால் அதுவே
அவர் அறிவுதேடலின் ஆரம்பமாகிறது. கல்வி ஞானம் பெறுகிறார்.
 ஞானப்பெண்ணாக ஆவுடையக்கா தன்னை வளர்த்துக் கொள்கிறார். பாடல்கள் புனைகிறார்.
விளைவு?  இந்தச் சாதி சமூகம் ஆவுடையக்காவை "ஜாதிபிரஷ்டம்" செய்கிறது.

ஒரு ஆடிமாத அமாவாசை நாளில் குற்றால அருவியில்
குளிக்கச் சென்றவள், மலையிலேறி தியானம் செய்துவிட்டு
வருவதாக தன் சிஷ்யைகளிடம் கூறிவிட்டு தன் புடவைப் பெட்டியுடன்
மலையேறி சென்றவள் என்ன ஆனாள் என்பது யாருக்குமே தெரியாது.
நம் ஆவுடையக்கா குற்றால அருவிக்கு குளிக்கப் போனவள்
மலைமீதேறி மறைந்துவிட்டாள் என்கிறார்கள். சிலர் அருவியில் விழுந்து
விட்டாள் என்கிறார்கள். ஆனால் எவ்வளவு தேடியும் அவள் சடலம்
எங்கும் கிடைக்கவில்லை. ஸ்ரீ ஆவுடை அக்காளின் முடிவை வாசிக்கும் போது
எனக்கு இன்னும் சில பெண்களின் அடையாளங்கள் நினைவுக்கு வருகிறது.

ஆண்டாளும் மீராவும் கோவிலுக்குள் சென்றவர்கள் திரும்பிவரவில்லை.
ஆண்டவனுடன் ஐக்கியமாகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
கர்நாடக மண்ணில் வாழ்ந்த அக்காமகாதேவி அவள் வாழ்ந்த குகைக்குள்
மறைந்தாள். மாயமாகிவிட்டாள் என்று சொல்கிறார்கள்
காஷ்மீரின் லல்லா ஆகாய மேகக்கூட்டத்தில் மறைந்தாள்.
என்னவானாள்? யாருக்கும் தெரியாது. இந்தப் பெண்ணுடல்கள்
செய்த குற்றம் என்ன? ஏன் இந்தப் பெண்பால் ஒவ்வாமை?

ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்

ஞான ரஸ கீர்த்தனைகள் (பக் 186)

(ராகம் - ஸாவேரி)

பல்லவி

ஆசையானேன் வெங்கடேச ஸ்வாமி மேலாசை ஆனேனே

அனுபல்லவி

ஆசையானேன் அவருடைய லீலையை தேசமெங்கும்
தேடியும் காணேன் கோசபஞ்சக மேல்விளையாடும்
வரத வெங்கடேசநாதன் மேலாசையானேன்         (ஆசை)

சரணம்

அகமுருகுதடி பெண்ணே, மோகம் பெருகுதடி, ஒருவகை
யாக வருகுதடி தேகஸாக்ஷியானவன் ஸரஸம்
அனேகமாமதை என்ன சொல்வேனடி போகபோக்ய ஸாதன
சித்கனபோதமாகிய ரதிவிலாஸன்மேல்   (ஆசை)

அடுத்த நாயகன் வந்து என்னை பிடித்தநாள் முதலாய் மானம்
கெடுத்த கலவியிலே மனம் பிடித்தமாகுதடி
படுத்தவுடனிது கடுத்துக்கொண்டு உடுத்த துகில் தன்னை
விடுத்து அடுத்தவேளையி லானந்தாமிருதம் குடித்து   (ஆசை)

என்னுள்ளம் குமுறுதடி பெண்ணே கடத்துக்குள்
வான் போலே ஜடத்துக்குள்ளே சிதாகாசத்தை கண்டேன்
தன்னையும் தானவன் கண்டுபடர்ந்த லீலைகள் செய்யும்
அவன்மேல் மோகமதாகினேன் அடியே, பெண்ணே     (ஆசை)

Saturday, January 17, 2015

ஜீவா என்றொரு மனிதன்
40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம்.
காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப்
பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர் என்று அறிவித்துக்கொண்ட
பொதுவுடமைவாதி. எப்போதும் கதர் ஆடை, எளிமையான வாழ்க்கை,
எப்போதும் பேருந்து பயணம், குடிசை வாழ்க்கை

காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோமடா-என் தோழனே
பசையற்று போனோ மடா

கொச்சைப் பிழைப்பறி யோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறி யோம் - என் தோழனே
எத்தும் புரட்டறி யோம்

என்று தான் எழுதியபடியே கடைசிவரை வாழ்ந்த மனிதன்.
குடிசை வீட்டில் வாழ்ந்துக் கொண்டிருந்த ஜீவாவைப் பார்த்து
மனம் வருந்திய அன்றைய முதல்வர் காமராஜர் "அரசு சார்பில்
வீடு கொடுக்கிறேன், அங்கே சென்றுவிடு" என்று கூறியபோது
"எல்லோருக்கும் வீடு கொடுங்கள், அப்போது எனக்கும் ஒன்று
கொடுங்கள். அதுதான் உண்மையான சோசலிஷம்" என்று
காமராசருக்கே பாடம் சொன்னவர்.

1945ல் க்டலூர் சட்டமன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த
சட்டமன்ர உறுப்பினர் குலசேகரதாசின் மகள் கண்ணம்மாவை
திருமணம் செய்து கொண்டார். அத்திருமணத்தில் தன் தோழர்கள்
10பேரை அழைத்திருந்தார். பத்து ரூபாய் கொடுத்து இரு மல்லிகைப் பூமாலையும் மீதமுள்ள பணத்தில் சாக்லேட் மிட்டாய்களும் வாங்கி வரச் சொன்னார். தோழர்களுக்கு அவர் செயல் எதுவும் புரியவில்லை.
மாலை மாற்றிக்கொண்டு அனைவருக்கும் சாக்லேட் கொடுத்து
திருமணம் முடிந்தது என்று அறிவித்தார். ஓராண்டில் ஒரு பெண்மகவைப்
பெற்றெடுத்த கண்ணம்மா கண்ணை மூடிவிட்டார்.
அக்குழந்தை தாய்வழி தாத்தாவின் வீட்டில் வளர்ந்தது.

1948, ஜனவரி 21 ல் N K கிருஷ்ணன் தலைமையில் பத்மாவதி
அம்மையாரை மறுமணம் செய்து கொண்ட போதும் நெருங்கிய
நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார். அவர்களுக்கு தேநீர் மட்டும்
வழங்கப்பட்டது.

முதல் மனைவி மூலம் தனக்குப் பிறந்த தன் மகளை 17 ஆண்டுகள்
கழித்து 1963ல் சென்னையில் ஜனசக்தி அலுவலகத்தில் சந்திக்கிறார்.
அச்சந்திப்பு இப்படித்தான் நடந்தது.

"ஜீவா இருக்கிறாரா.."இரு பெண்கள் பரிவான குரலில் கேட்கிறார்கள்
"என்னம்மா வேண்டும்..?
-உங்களைத் தான் பார்க்க வந்தோம்-
"நீ யாரம்மா?
அந்தப் பெண்கள் பதில் சொல்லவில்லை.
ஒரு துண்டுக்காகிதத்தில் அவர்களில் ஒருத்தி எழுதுகிறாள்
"என் தாத்தா பெயர் குலசேகரதாஸ்,. என் அம்மா பெயர் கண்ணம்மா"
ஜீவா அத்துண்டு காகிதத்தை வாசிக்கிறார்.
'என் மகள்" என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்...
இப்படித்தான்.. ஜீவா என்ற மனிதன் பற்றறு வாழ்ந்திருக்கிறார்.

1960 செப்டம்பர் 19, இரவு மதுரையில் இராஜாஜி விளையாட்டுத்திடலில்
நடைபெற்ற  கூட்டத்தில்" ஆட்சி மொழியும் கம்யூனிஸ்ட் கட்சியும்"
என்ற தலைப்பில் ஜீவா உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் துண்டுப் பிரசுரத்தில்
"புரட்சியாளர், புதுமை எழுத்தாளர், அரசியல் அறிஞர் ப. ஜீவானந்தம்
பேசுவார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேடையில் பேச வந்த ஜீவா அத்துண்டு பிரசுரத்தில் இருந்த அடைமொழிகளைக் குறிப்பிட்டு "
 " என் மீது கொண்ட அன்பின் காரணமாக இத்தகைய
அடைமொழிகளைத் தந்துள்ள தோழர்களே! தயவு செய்து இனி இம்மாதிரி
செய்யாதீர்கள். "தோழர் ஜீவா" என்ற வார்த்தையை விட எனக்கு
கவுரவம் தரக்கூடிய வார்த்தைகள் வேறு இல்லை" என்று வேண்டுகோள்
வைத்தார்...

அடைமொழிகளின் அடையாள அரசியலில் ஊறிப்போன இன்றைய
தமிழ்ச் சமூகத்திற்கு தோழர் ஜீவா ஒரு கடந்தக் காலமாகி...


தோழர் ஜீவாவின் இயற்பெயர் சொரிமுத்து ஐயனார்.
பெற்றோர்: பட்டம்பிள்ளை & உமையம்மாள்.
நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி ஊரில் 1907 ஆக 21 ல் பிறந்தார்.
1963 ஜனவரி 18, தன் 56 ஆவது  வய்தில் மறைந்தார்.

Thursday, January 15, 2015

கருப்புப் பணம் ஒழியுமா..?

கருப்பு பணம் எப்படி வருகிறது?
இதுகுறித்து 1947 முதல் மன்மோகன் சிங் அரசு 2012 மே மாதம்
கொண்டுவந்த வெள்ளை அறிக்கை வரை 40க்கும் மேற்பட்ட
குழுக்கள், ஆய்வுகள், பரிந்துரைகளுக்கு பஞ்சமில்லை.
ஆனால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை.
1971ல் நம்  நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்-
அதாவது  நம் அமைச்சர்கள் அடிக்கடி சொல்வார்களே
அந்த GDP யில் 7 விழுக்காடாக இருந்த கருப்பு பணம்
இன்றைக்கு 75 விழுக்காடாக வளர்ந்துவிட்டது..

இந்த கருப்பு பணம் எப்போது இப்படி வளர்ச்சியைக் கண்டது
என்றால், 1991ல் இந்திய அரசு உலகமயம், தாராளமயம்,
தனியார் மயம் ஆன பிறகு தான்.

க்டந்த 25 ஆண்டுகளாக துபாய், சிங்கப்பூர், வெர்ஜீன் தீவுகளில்
இந்தியர்கள் அதிக அளவில் கருப்பு பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.
ஹாவாலா பணப் பரிமாற்றத்தின் தலைமை இடமாக துபாய் இருக்கிறது.
துபாயிலும் சிங்கப்பூரில் இருக்கும் அதிகமான கருப்பு பணத்தைப்
பற்றிய கவனத்தை திசைத் திருப்பவே சுவிட்சர்லாந்து வங்கியில்
இருக்கும் கருப்பு பணத்தைப் பற்றி மட்டுமே அனைத்து அரசியல்
கட்சிகளின் தலைவர்களும் பேசுகிறார்களோ என்று எழும் ஐயப்பாட்டில்
உண்மை இல்லாமல் இல்லை.


சரி, யாரிடம் இருக்கிறது, இந்தக் கருப்பு பணம்?
இந்த நாட்டின் செல்வத்தில் 75 விழுக்காடு வைத்திருக்கும்
10 விழுக்காடு மேல்தட்டு வர்க்கத்திடம் தான் இவ்வளவு
கருப்பு பணமும் இருக்கிறது.
இவர்கள் தான் ஒருவகையில் இந்த நாட்டை எந்தக் கட்சி
ஆட்சியைப் பிடித்தாலும் உண்மையில் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
கள்ளத்தனமாக பொருட்களைக் கடத்துவது, ஹவாலா பணப்பரிமாற்றம்,
சட்ட விரோத ஆயுத விறபனை, பாலியல் தொழில், போலி ஆவணங்கள் தயாரித்து
வங்கி, அரசு மற்றும் மக்களை ஏமாற்றுவது, சட்ட விரோத சுரங்கத்தொழில்,
காடுகளை அழித்தல், ஆள் கடத்தல், தங்கம் வைரம் கடத்தல், கள்ளச்சாராயம்
என்று பல்வேறு கருப்பு பணத்திற்கு ஊற்றுக்கண் இருந்தாலும்
இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் ஏஜண்டுகளில் மிக
முக்கியமானவர்கள்,
கல்வித் தந்தைகள் (தனியார் கல்வி நிறுவனங்கள்),மற்றும்
சினிமாக்காரர்கள்..
ஒவ்வொரு ஆண்டும் கல்வி வணிகத்தில் மட்டும் 50,000 கோடி
கருப்பு பணம் உருவாகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Monday, January 12, 2015

பெரியார் & பி.கே. திரைப்படம்
நேற்று பி.கே திரைப்படம் பார்த்தேன். (11/01/15)
சில கேள்விகளும் காட்சிகளும் ரசனைக்குரியது.
இம்மாதிரி கேள்விகளை ரசனைக்குரியதாக்கியதில்
பி.கே. க்கு வெற்றி தான். ஆனால் பி.கே. கதைப்பாத்திரம்
ஒரு வேற்றுலக ஜீவன் என்ற அறிவியல் பின்புலத்தில்
இக்கதையைப் பார்த்தால் அந்தக் காலத்தில்
எம்.ஜி. ஆர் நடித்த "பறக்கும் தட்டு" திரைப்படத்தைவிட
இப்படம் பெரிதாக எதையும் காட்டிவிடவில்லை. its not a science
fiction .  எனவே வேற்றுகிரகவாசி கேரட் சாப்பிடுவதும்
கனவு காணுவதும் காதல் கொள்வதும் எப்படினு யோசிக்க
கூடாது.
இகேள்விகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால்
பி.கே. படத்தை ரசிக்கலாம். தந்தை பெரியார் சொல்லாத
எதையும் புதிதாக பி.கே சொல்லிவிடவில்லை.
ஆனால் பெரியார் சொன்ன பாணியில் சொல்லவில்லை
என்பதால் தான் வெகுஜனங்களின் பொதுப்புத்தியில் இப்படம்
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மதங்களும் மதக்குருமார்களும்
உருவாக்கி இருக்கும் கடவுள் மனிதனின் பய உணர்வுகளின்
மீது ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர்கள் உருவாக்கி
இருக்கும் அந்தக் கடவுளர்கள் அனைவரும்
WRONG NUMBER. சரி... அப்போ.. who is RIGHT NUMBER...?
பி.கே சொல்வது... உங்களையும் என்னையும் இந்தப் பிரபஞ்சத்தையும்
உருவாக்கிய சக்தி.. ..
தந்தை பெரியாருக்கு இந்தக் குழப்பமில்லை. அவர் எல்லாமே
wrong number தான் என்று சொன்னார். ஒருமுறை அவரிடம்
கேட்டார்கள்:" அய்யா.. கடவுள் இல்லை, இல்லை என்று சொல்கிறீர்களே,
அவர் உங்கள் முன் வந்தால் என்ன சொல்வீர்கள்? என்று"
பெரியார் தயக்கமின்றி பதில் சொன்னார்.
"கடவுள் இருக்கார்னு சொல்லிட்டுப்போறேன்,!!" என்று.

பி.கே திரைப்படத்தில் இன்னொரு காட்சி.. "இசுலாமியர் என்றால்
நம்பக்கூடாதுனு " இந்து தேசம் கட்டமைத்திருக்கும் ஒரு கேள்வியை
கதைப்போக்கில் உடைத்து நொறுக்கி இருக்கும் இடம்.
சமகால அரசியலில் மிகவும் கவனிப்புக்குரியது.

நம்மைச் சுற்றி எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன.
பிரபஞ்சம். பால்வீதி நம் கற்பனைக்குள் அடங்காமல்
விரிகிறது. ஏன் நாம் வாழும் பூமியில் கூட நமக்குப் புரியாதப்
புதிர்கள் தொடர்கின்றன. நம் அறிவியல் கூட எப்படி நிகழ்ந்தது
ஏன் நிகழ்ந்தது என்று தான் சொல்லமுடியுமே தவிர இது
இப்படித்தான் நடக்கும், இதனால் மட்டுமே நிகழும் என்று
அறுதியிட்டு சொல்லிவிடுவதில்லை. ஒரு கண்டுப்பிடிப்பைத்
தாண்டி இன்னொரு கண்டுப்பிடிப்புகள் அதனால் தான் தொடர்கின்றன.
அதில் நேற்று சொன்னது இன்று தவறாகிவிடுவதும் உண்டு.
ஆனால்; இவை எல்லாமே வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு
தான். இயற்கையை, சக மனிதனை அழிப்பதற்கோ மறப்பதற்கோ
அல்ல....

Tuesday, January 6, 2015

CYBER ATTACK ON USA - SONY


நவம்பர் 24, 2014ல் அமெரிக்காவின் புகழ்பெற்ற சோனி பிக்சர்ஸ்
நிறுவனம் "ஹேக்" செய்யப்பட்டது. அந்த சைபர் அட்டாக்கில்
சோனி நிலைகுலைந்து போயிருக்கிறது என்பது தான் உண்மை.
சோனி நிறுவனத்தின் வெளிவராதப் படங்கள் முதல் சோனியின்
பெருந்தலைகளின் ரகசிய கடிதங்கள் வரை.. ஒவ்வொன்றாக
வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டின் மிக மோசமான சைபர் அட்டாக் இதுவாகத்தான் இருக்க
முடியும். வடக்கு கொரியா அரசும் கொரியாவிலிருக்கும் சில
நிறுவனங்களும் தங்கள் மீது சைபர் அட்டாக் நடத்தியதாக சோனியும்
அமெரிக்க அரசும் வடகொரியா மீது குற்றம் சுமத்துகின்றன.
THE INTERVIEW என்ற சோனியின் காமெடி படத்தில் வழக்கம்போல
அமெரிக்காவின் சிஐஏ, கொரியா அதிபதி கிம் ஜோங்க் யுன் ஐக் கொல்ல நடந்த கற்பனைக் கதையை தீவிரவாதம் என்று வர்ணிக்கும் வடகொரியா அரசு தாங்கள் இந்த சைபர் அட்டாக் செய்யவில்லை என்று மறுக்கிறது.
ஆனால் சோனிக்கு பக்கபலமாக அமெரிக்க அரசும் அதிபர் ஓபாமாவும்
இருக்கிறார்கள். வடகொரியாவிடம் நஷ்ட ஈடு கேட்கிறது அமெரிக்கா.
கொரியா அதற்கு தலையசைக்கிற மாதிரி இல்லை!
என்னவோ நடக்கிறதைப் பார்த்தால் இதுவரை சோனி எடுத்திருக்கும்
படங்களை விட இந்த நிஜப்படம் ரொம்பவும் த்ரில்லிங்கா , அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது.
இதில் ரொம்பவும் சுவராஸ்யமான காட்சிகள் வேறு அரங்கேறி
இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை சோனி பெருந்தலைகளும் அவர்களின் பார்ட்னர்கள் இவர்களுக்குள் நடந்த "புறம்பேசும்" கிசுகிசுக்கள்.
அதில் ஓபாமாவுக்கு கறுப்பர்கள் நடித்த சினிமா என்றால் ரொம்பவும்
விருப்பம் என்பதைக்கூட ஓபாமாவின் கறுப்பர் இன அடையாளத்துடன் சேர்த்துப் பேசியது வரை அடக்கம்.
இந்த சைபர் அட்டாக் நடத்தியது யார்? உண்மையில் என்ன
ந்டந்தது ? என்று வெகுவிரைவில் ஹாலிவுட் படம் ஒன்று
வரும்.

Monday, January 5, 2015

ஆபரேஷன் தியேட்டரில் பணம் தின்னும் பருந்துகள்

இப்படி எழுதுவதற்கு ரொம்பவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.
அண்மையில் நவிமும்பை நகரில் செயல்படும் "மெடி ஏஞ்சல்ஸ்"
(Medi Angels, a second opinion centre at navi mumbai)
நிறுவனம் நடத்திய கள ஆய்வில் சில அதிர்ச்சி தரும்
உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.
சென்ற ஆண்டு நடந்த அறுவைச்சிகிச்சையில் மட்டும்
47% அறுவைச் சிகிச்சைகள் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை,
அதாவது தேவையில்லாமல் நடந்த அறுவைச் சிகிச்சைகள்.
heart problems 55 %
knee replacements 48%
infertility 45%
தேவையில்லாமல் இதயநோயாளிகள் 55% , மூட்டுவலிக்கு 48%
குழந்தையின்மைக்கு 45% அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தி,
அரசு வழங்கும் மருத்துவ உதவித்தொகையில்
பெரும்பங்கு இம்மாதிரி தேவையற்ற அறுவைச்சிகிச்சை
நடத்தும் தனியார் மருத்துவமனைக்குப் போய் சேர்வதுதான்.
தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் தினக்கூலிகள் போல
என்பதை சில டாக்டர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஒரு டாக்டரை வைத்து அந்த மருத்துவமனைக்கு எவ்வளவு வருமானம் வருகிறதோ அந்தக் கணக்கில் தான அக்குறிப்பிட்ட டாக்டரின் வருமானம் தீர்மானிக்கப்படுகிறது. எனவே தேவை இருக்கிறதோ இல்லையோ
எவ்வளவு நோயாளிகளை ஆபரேஷன் தியேட்ட்ருக்கு அனுப்பலாம், பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே இன்றைய டாக்டர்கள் கவனம்
செலுத்துகிறார்கள்.
மிகச்சிறந்த டாக்டர்கள், திறமையானவர்கள் இருக்கிறார்கள்.
இல்லை என்று சொல்லவில்லை. ஆனால்
அவர்கள் சிறுபான்மையாகி வருவது மருத்துவ துறைக்கு
மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஆபத்தானது.

Sunday, January 4, 2015

பராசக்தி சிவகாமி ஆனாள்

இனறு, இந்த இரவு
அவன் வரப்போகும் இரவு.
உங்க்ள் ஊரும் நகரமும்
விலக்கி வைத்தவன்
இன்று வரப்போகிறான்.
நீங்கள் நயவஞ்சகமாக நஞ்சூட்டிக் 
கொல்ல நினைத்தவன்
இன்று வரப்போகிறான்..
இடுகாட்டில் குடிசைப்போட்டவன்
இன்று வரப்போகிறான்
..

ஆதிரைகள் என் கடற்கரையில்
தூங்குகிறார்கள்
குடிசைகள் எங்கும் 
மார்கழி மாத முழுநிலவு காய்கிறது.
தோழியர் திருவாதிரை களியுண்டு 
கடற்கரையில் ஆடுகின்றார்கள்.
தெற்கும் வடக்கும் தடுமாறும் தருணத்தில்
ஒற்றைக்காலூன்றி
உயிர்க்காத்த என் தலைவன் வருகின்றான்.

அவன் அடி முடி அறிவது
உங்களுக்கு சாத்தியமில்லை.
போராளிகளுக்கு மட்டுமே
அவன் மூன்றாவது கண்ணின்
முகவரி தெரியும்
நட்சத்திரங்களே.. இந்த இரவு
நீங்கள் அறிந்திராத நீண்ட இரவு.

காத்திருக்கிறேன்...
அரூபமாய் என்னருகில் 
அவன் ஆடும் தருணத்தில்
இந்த நீண்ட இரவில்
அது நடக்கும்...
பராசக்தி.. சிவ காமியாய் ...
விடிவதற்குள் இன்னொரு பிறப்பெடுப்பாள்.
பூமி எங்கும் அவள் பனிக்குடம் உடைந்து
மீண்டும் மீண்டும் ஜீவனின் தொட்டில்  
சிவன் சிவ காமி..சிவகாமி

ஓம் நம சிவாய.

(மார்கழி மாதம் முழுநிலவு நாள், திருவாதிரை அன்று இரவுப்பொழுது 
பிறநாட்களைவிட நீண்ட இரவு.)