Friday, July 29, 2016

தலவிருட்சம்
அந்த விதை முளைத்துவிட்டது
ஆகாயத்தைப் பார்த்து கொழுந்து இலைகளை
அசைத்து அசைத்து நடனமாடியது.
அதைப் பார்த்த மரங்களும் செடிகளும்
இனம்புரியாத ஏக்கத்தில்.
இன்னும் சில செடிகளுக்கு
அதன் உச்சத்தைக் கண்டு பொறாமை.

எல்லோரும் கூடினார்கள்
கோபுரத்தில் செடி முளைப்பது
கோபுரத்திற்கு நல்லதல்ல என்றார்கள்
வேர்கள் கருவறையை ஆக்கிரமிப்பதற்குள்
அகற்றிவிடுவதுதான்
தர்மம் என்றார்கள்
கோபுரச்செடிக்கும் இவர்களின் படையெடுப்பு
ஆத்திரமூட்டியது.
மூடப்பட்ட கருவறையின் கதவுகளை
தட்டி தட்டி 
சோர்ந்துப்போன நள்ளிரவில்
மின்னலுடன் இடி இடித்தது.
பெருமழையில் சரிந்தது கோபுரக்கலசம்.

அவர்கள் மீண்டும் கூடினார்கள்.
குலத்திற்கு கேடுவரும் என்றார் நிமித்திகர்.
தெய்வக்குற்றம் என்றார் பூசாரி.
கோவில் வாசலின் தலவிருட்சங்கள்
தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டன.
செடி மரமாகி கோவிலாகி தெய்வமாகி..
வரமாகி ... சிவ சிவா..

Thursday, July 28, 2016

கபாலி டா..
தேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள்
வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள்
கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன் இவ்வளவு
அதீத அக்கறையைக் காட்டுகிறார்கள்? என்ற கேள்விக்கு
பல முகங்கள் உண்டு.
கபாலி படம் தலித் அரசியலைப் பேசுவதாக சொல்கிறார்கள்.
திரைப்படம் பார்க்கவில்லை நான். அப்படியே பேசினாலும்
கூட கபாலி திரைப்படம் தலித் அரசியலுக்கு எவ்விதத்திலும்
உதவிடாது. ரஜினிகாந்த் என்ற திரைப்பட நடிகரின் ஸ்டார்
அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு தலித் பிரச்சனையை
இயக்குநர் ரஞ்சித் பேசிவிட்டதாக சொல்வது திரையலகைப்
பற்றி எவ்வித புரிதலும் இன்றி சொல்லப்படும் கற்பனை.


இடதுசாரி பிரச்சனைகளைப் பற்றி பேசிய திரைப்பட
கதாநாயகர்கள் முதல் விவசாயிகள் பிரச்சனை, மணல் கொள்ளை
வரை பேசிய நாயகர்களுக்கெல்லாம் அப்பிரச்சனைகள்
அக்காலத்திற்கான விற்பனைப்பொருள். எதை எதை எப்போது
விற்றால் விறபனை அமோகமாக நடக்குமோ அதை அதை
அப்போது விற்று பிழைத்துக்கொண்டிருக்கிறது திரையுலகம்.

இவை அனைத்தையும் விட என் போன்றவர்கள் அச்சப்படுவது
ஏற்கனவே  அதீத நாயக வழிபாட்டில் சிக்கித்தவிக்கும்
இளைஞர்கள்... அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின்
இளைஞர்களுக்கு அவர்களின் எந்தப் பிரச்சனையிலும்
சம்பந்தமில்லாத சூப்பர்ஸ்டாரின் பிம்பம் வெறும் கபாலியின்
பிம்பமாக இல்லாமல் ரஜினிகாந்தின் பிம்பமாக மட்டுமே
கட்டமைக்கப்படும். திரைக்கதை நாயக பிம்பங்களுக்கும்
நிஜக்கதை பிம்பங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகளை
பகுத்தறிய முடியாத சினிமா ரசிகர் கூட்டங்களுக்கு
கபாலி வேறு ரஜினிகாந்த வேறு என்ற புரிதல் இருக்குமா?
இதிலும் இலாபம் என்னவோ கபாலியாக நடித்த நடிகருக்குத்தான்.
சம்பந்தமே இல்லாத இன்னொரு கீரிடமும் அவர் தலையில்.!

தலித் அரசியலைப் பற்றி பேசுவதற்கு ரஜினிகாந்த் தேவையில்லை
என்ற புரிதலுடன் தலித் அரசியல் பேச வேண்டிய காலமிது.


Tuesday, July 26, 2016

தனிநபர் ?


தனிநபர்கள் அனைவரையும் தனிநபர்கள் என்ற
ஒற்றை அடையாளத்திற்குள் அடக்கிவிடமுடியாது.
அரசனும் போர்விரனும் நிற்கும் போர்க்களம்
ஒன்றாக இருப்பினும்,
எதிரிகள் கூட மாறுபடாமல் இருப்பினும்,
கையில் ஏந்தி இருக்கும் ஆயுதங்களில் கூட
வேறுபாடுகள் இலலாமல் இருப்பினும்...
இப்படியாக எத்தனை இருப்பினும்
அரசன் என்ற தனிநபரும் போர்வீரன் என்ற
தனிநபரும் ஒன்றல்ல.
அரசன் சமூகத்தின் ஒட்டுமொத்த குறியீடு.
போர்வீரன் அச்சமூகம் என்ற சமுத்திரத்தின் ஒரு துளி.
போர்வீரனின் செயல்பாடுகள் அரசனைப் பாதிக்கலாம்/
பாதிக்காமலும் இருக்கலாம். பாதிப்பு இருந்தாலும்
அதன் வீரியம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது.
ஆனால் அரசனின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த
சமூகத்தையும் பாதிக்கும்.
இப்போது அரசர்கள் இல்லை. அரசர்களை விட
அதிகாரமிக்க அதிகாரபீடங்கள் இருக்கின்றன.
அந்த அதிகார பீடங்களை எதிர்ப்பதும் விமர்சிப்பதும்
தனிநபர் விமர்சனமோ தாக்குதலோ அல்ல.
பல தருணங்களில் பொதுஜனக் கருத்துகளுக்கு
எதிராக எழுத்தாளன் பயணிக்க வேண்டி இருக்கிறது.
அத்தருணங்கள் எழுத்தாளனுக்கும் வேதனைத்தரும்
சுமையான பொழுதுகள்.
முரண்வெளியை எழுத்தாளனின் எழுத்துகள்
விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை.

Monday, July 25, 2016

கம்யூட்டர் கவிதை

பத்து  வார்த்தைகளை எடுத்துக்கொள்.
அவை இடக்கரடக்கலாக இருப்பது உத்தமம்.
அந்த வார்த்தைகளைக் குலுக்கல் முறையில்
கவிதையில் போட்டு வை.
அனுபவம், உணர்வு, உணர்வு நிலையின் பரிணாமம்
நிஜமும் புனைவும் கனவில் கலந்த ரசாயணவித்தை
இதெல்லாம் எதுவும் தேவையில்லை.
குலுக்கலில்  வந்துவிழும் கம்ப்யூட்டர் கவிதையை
கொஞ்சம் மவுஸின் உதவியுடன்
கடித்துக் குதறி வாந்தி எடுத்து
கலர் கலராக துப்பு.
க்டைசியில் கவிதைக்கு காசநோயோ புற்றுநோயோ
எதோ ஒன்று வந்து தொலைக்கட்டும்
எப்படியோ ..
தமிழ்த்தாய்.. செத்துப் பிழைத்தாள்
என்று செய்தி வாசிப்பில் வராமலா போய்விடும்?. 

Monday, July 18, 2016

அம்மாவின் நினைவுகள்


வாசிக்காமல் நான் தொலைத்துவிட்ட
புத்தகம்
என் அம்மா.

இன்று என் அம்மாவின் நினைவுநாள். (19/07/2007)

மருத்துவமனையில் அம்மா இருக்கும்போதெல்லாம் இரவு
பொழுதில் அம்மாவுடன் தங்குவேன். கையுடன் தடிமனான
புத்தகம் எதாவது கையில் இருக்கும். அம்மாவுக்கு சாப்பாடு
கொடுத்தப்பின்... நான் புத்தகத்துடன் உட்கார்ந்துவிடுவேன்.
சில நேரங்களில் எதாவது வேணுமாம்மா... என்று கேட்பேன்.
வேண்டாம் என்று தலையசைப்பார். மீண்டும் புத்தகத்திற்குள்
நான்..
நள்ளிரவு மணி 12 ஐ தாண்டி இருக்கும்...
அம்மா என்ன செய்கிறார் என்று திரும்பி பார்த்தால்
நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதை பார்த்துக்
கொண்டு இருப்பது தெரியும்....
"என்னம்மா... பாத்ரூம் போணுமா.."
"ஒன்னுமில்ல.. நீ படிம்மா.." என்பார்.
பொதுவாக ஒரு தலையசைப்பில் பேசுவார்.

இப்போதும் நள்ளிரவில் புத்தகம் வாசிக்கும் போது..
அம்மாவின் வாசனை.. என்னைச் சுற்றி..
அம்மாவின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பது
போல இருக்கும்.
இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்.
அதனாலென்ன... கொஞ்சம் கொஞ்சம் இம்மாதிரி
பைத்தியக்காரத்தனங்கள் இல்லை என்றால்
வாழ்க்கையில் தான் என்ன இருக்கிறது..?
வாசித்த புத்தகங்களை விட
வாசிக்காமல் நான் தொலைத்த இப்புத்தகம்..
இத்தருணத்தை கனமானதாக்கி
என்னை அழுத்துகிறது.

அம்மா ...
ரொம்ப ரொம்ப அழகா இருப்பா..
அவள் எந்தப்புடவைக் கட்டிக்கொண்டாலும்
அந்தப் புடவைக்கு ஒரு அழகு வந்துவிடும்....
எப்போது யார் வந்தாலும் பசியாற்றும் அவள் குணம்..
வீட்டில் வேலை செய்பவர்களின் முகம் பார்த்து
தேவை அறிந்து கொடுக்கும் அவள் கைகள்
மன்னிக்கும் அவள் சுபாவம்.
பொறாமை என்றால் என்ன என்று அறியாத
அவள் வெகுளித்தனம்
ஏழு மொழிகள் தெரிந்த என் அப்பாவை விட
அம்மா தான் இப்போதெல்லாம் எனக்கு
பிரமிப்பூட்டுகிறாள்.
ஆகாயமாக அவள் விரிந்து என்னை ஆட்கொள்கிறாள்...

ஆடைகளின்றி அலங்காரமின்றி
உயிர்த்துடிப்பை பிடித்து இழுத்து அணைத்து
வாழ்க்கையைப் பிரசவிக்கும் மரணம் அழகானது.என் உள்ளங்கைப் பிடித்து
உன் உயிர்ப்பிரிந்த தருணங்களில்
என் நரம்பு மண்டலங்களைச் சிலிர்க்க வைத்தது
காற்றில் கலந்த உன் உயிர்மூச்சு.
அம்மா.. உன்னைப் போலவே
உன் மரணமும் அழகானது.

(புகைப்படம்  அப்பாவுடன் அம்மா ... திருமண ஆல்பம்)
Add caption
அம்

Monday, July 11, 2016

தூய்மை இந்தியா ஊழல்.. நல்லவா இருக்கு!தூய்மை இந்தியாவின் கதாநாயகன் சாட்சாத் நம் பாரதப் பிரதமர்
நரேந்திர மோதி அவர்கள் தான். தன்னுடைய முதல் செங்கோட்டை
மேடையில் தன் கனவுத்திட்டத்தை அவர் அறிவித்தவுடன்
மகாத்மா காந்தியுடன் நரேந்திர மோதி கைகோர்த்த காட்சி
எல்லோரையும் வியக்க வைத்தது. அரசியல் தலைவர்களும்
திரையுலக பிரபலங்களும் கொஞ்ச நாட்கள் தெருத்தெருவாக
துடைப்பத்துடன் போஸ் கொடுத்து போட்டோ போட்டிப்
போட்டுக்கொண்டு போட்டுத்தொலைத்தார்கள்,
நம் தலைவிதி அதை எல்லாம் பார்த்து ரசித்து தொலைத்தோம்.
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனுஷனைக்கடித்தக் கதையா
இருக்கேனு சொல்ற மாதிரி ஆகிவிட்டது மோடியின்
SWATCH BHARAT.  பிறகென்ன.. .. இந்த தூய்மை இந்தியா எங்கள்
வெற்றி, எங்கள் கனவு , மோடி ஆட்சியின் பொற்காலத்திட்டம்..
என்றெல்லாம் சொல்லிவிட்டு இதற்குத் தேவையான பணத்தை
மட்டும் நம்மைப் போன்ற சாதாரண் மனிதர்களிடமிருந்து
வசூலிக்கிறார்கள் சேவை வரியாக.(service Tax)
முடி வெட்டினால் சலூனில் சேவை வரி.
ஹொட்டல் பில்லில் சேவை வரி
தொலைபேசி பில்லில் சேவை வரி
வீடு வாங்கினால் அதிலும் உண்டு சேவை வரி..
பயணச்சீட்டில் உண்டு சேவை வரி..
15 நவம்பர் 2015 முதல் சேவை வரி 14 விழுக்காட்டிலிருந்து
14.5% கூடுதல் வசூலிக்கப்படுகிறது. அதாவது கூடுதலாக
வசூலிக்கப்படும் 0.5% சேவை வரி அப்படியே தூய்மை இந்தியா
திட்டத்திற்கு போகிறது.
அதனாலென்ன... 0.5% தானே ... இந்தியாவின் வளர்ச்சியில்
ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்குண்டு .. இத்திட்டம
அரசின் திட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும்
முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திட்டம்
என்ற விளக்கவுரைகள் சொல்லபப்ட்டன. இந்த விளக்கவுரை
பொழிப்புரைகளை எதிர்த்து கேட்டால், எங்கே.., நம்மீது தேசத்துரோகி
பட்டம் சுமத்தி விடுவார்களோ என்ற அச்சம் வேறு வந்து தொலைத்தது!.
( இந்த திகில்  கதை .. இப்போது வேண்டாம் , )
இத்திட்டம் அறிவித்தவுடன் ஒன்றரை மாதத்தில் அதாவது
15 நவ 2015 முதல் 31 டிச 2015 வரை சேவை வரியாக இத்திட்டத்தில்
வசூலிக்கப்பட்ட தொகை 329 கோடி.
மார்ச் 2016 வரை வசூலிக்கப்பட்ட வரித்தொகை 3750 கோடி.
ஓராண்டில் இத்திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் தொகை
10,000 கோடி..
இவ்வளவு வசூலிக்கிறார்களே... என்ன செய்திருக்கிறார்கள்
தூய்மை இந்தியா தேசியவாதிக்ள்?
பஞ்சாபில் மட்டும் 33 லட்சம் கழிவறைகளை 937 கோடி செலவில்
இத்திட்டத்தின் மூலம் கட்டிக்கொடுத்திருக்கிறார்களாம்.
ஆனால் கள ஆய்வு நடத்தியதில் பல கழிப்பறைகள்
வெறும் காகிதத்தில மட்டுமே இருக்கின்றன.
கிணறு களவுப்போன வடிவேலு கதை எல்லாம்
நகைச்சுவை கதையல்ல.
குடிக்கிற தண்ணீருக்கே அல்லாடும் ஊரில் கழிவறைக்கட்டி
என்ன செயவது? என்றும் சிலர் கேட்பதை மன்னித்துவிடுவோம்.

இத்திட்டத்திற்கான நிதியை நம்மிடமிருந்து நேரடியாக் வசூலிப்பதால்
இதன் வரவு செலவு கணக்கை தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ்  கேட்கலாம் என்றால் அதற்கும்
வழியில்லை... இத்திட்டம் எந்த துறையின் கீழ் வ்ருகிறது என்பதில்யே
இன்னும் குழப்பம் தான்.

இத்திட்டம் வருவதற்கு முன்... கழிவறைகளை யார் கட்டிக் கொடுத்தார்கள்?
அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டது?
இத்திட்டம் வந்தப் பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
என்ன தூய்மை இங்கே வந்திருக்கிறது....
குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதாவது ஒரு சின்ன மாற்றம்
ஏற்பட்டிருக்கிறதா,,?
அரசு தன்னுடைய திட்டங்களுக்காக இம்மாதிரி வரிகளை
தொடர்ந்து மக்களிடமிருந்து வசூலித்துக்கொண்டே இருந்தால்
நாளை சுவாசிக்கும் காற்றுக்கு கூட வரி வசூலிப்பார்களோ
என்று அச்சமாக இருக்கிறது..!

எல்லா ஊழலையும் பார்த்துவிட்டோம்..
பீரங்க்கி ஊழல், 2 ஜி ஊழல், இப்படியாக.. பற்பல ஊழல்கள்.
ஆனால் இத்திட்டத்தின் வரவு செலவு எதுவும் கேட்பாரின்றி
போனால்... நாளை தூய்மை இந்தியா ஊழல்.. என்றல்லவா
சொல்ல வேண்டி வரும்...
ச்சே சே.. அப்படி சொன்னால் நல்லவா இருக்கும்.?
தூய்மை இந்தியா ஊழல்...!!
ப்ளீஸ் மோதிஜீ... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

Wednesday, July 6, 2016

காட்சிப் படிமங்களின் அலைவரிசை


முகநூலில் 3 மணிநேரம்
கூகுளில் 1 மணீநேரம்
வாட்ஸ-அப் 1 மணிநேரம்
கைபேசியில் குறுஞ்செய்திகள் மற்றும்
அழைப்புகளில் 2 மணிநேரம்
இதெல்லாம் காணாது என்று நடுவீட்டில் உட்கார்ந்திருக்கும்
டிவி திரையில் எதையோ பார்த்துக்கொண்டு
மதிய இரவு உணவு நேரமும் சேர்த்து 3 மணிநேரம்
ரொம்ப சோர்வாகிவிட்டால் பாட்டுகேட்கிறேன்
என்று யு ட்யூப்பில் 2 மணிநேரம்..
சராசரியாக இன்றைய மனிதனுக்கு ஒருநாளில் பாதி பொழுது
அதாவது 24 மணிநேரத்தில் 12 மணிநெரம்
காட்சிகளை காண்பதில் கழிகிறது.
(அதுவும் இப்போதெல்லாம் கணிப்பொறியாளர்களால்
நிரம்பி வழியும் தமிழ்ச்சமூகத்தில்
அவர்கள் ஆபிஸில் கணினியின் முன்னால்
உட்கார்ந்து மாரடிக்கும் 10 மணிநேரமும் ! கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படவில்லை)
இப்படியாக..
மூளையில் காட்சிகள் படிந்து படிந்து
படிந்து படிந்து பாசிப்பிடித்து
அதே காட்சிகள் வெவ்வேறு வண்ணத்தில்
அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பாட்டைக் கேட்டுக்கொண்டு கண்மூடி ரசித்தக் காலம்
ஒன்றுண்டு.
அப்போதெல்லாம் பாட்டுகளும் வாழ்க்கையுடன்
ஒட்டியதாக இருக்கும்.
வெறும் சப்தங்களின் அலறல்களாக இருப்பதில்லை.
வாசிப்புக்கு என்று சராசரி மனிதர்கள் ஒதுக்கும்
நேரமும் கணிசமாக இப்போது குறைந்துவிட்டது.
பயணங்களில் வாசித்துவிட்டு இருக்கைக்கு அடியில்
தூரவீசிவிட்டு நகரும் பக்கங்களாக ...
இந்த புழுக்கமான இருட்டறையில்
சிக்கி மூச்சுமுட்டி செத்துக்கொண்டிருக்கிறான்
கொஞ்சம் வித்தியாசமாக யோசிப்பவனும் எழுதுபவனும்.
கிட்டத்தட்ட ஒரு யோகியைப் போல
அவன் வாழ வேண்டி இருக்கிறது.
அதுவும் சாத்தியபடாத சூழலில் யோகியைப் போல
தன்னைப் பாவித்துக்கொண்டு
(கொஞ்சம் சரக்கு ஏற்றிக்கொண்டு!!)
தன்னை ஏமாற்றிக்கொண்டாக வேண்டும்.
தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதை
அவன் உணர்ந்து கொள்ளும் தருணம்
அவனைப் பொறுத்தவரையில்
மரணத்திற்கு முன்னான மரணம்.

Monday, July 4, 2016

நினைவுக்கூட்டல்

நினைவுக்கூட்டலில் பூஜயமாய் எண்களாய்
மாறி மாறி ..
எதைக் கழித்தால் எது மிஞ்சும்
உன்னைக் கழித்துவிட்டால்
என் அனுபவத்தொட்டில் அம்மணமாகிவிடுமோ?
சுயம் தள்ளாடுகிறது.
எதையாவது போர்த்திக்கொள்வதில்
காலம் கழிகிறது.
இருளின் மணம் பகலில் விரட்டுகிறது.
பூக்கள் செடியில் மட்டும் மணப்பதில்லை.
செடியிலிருந்து பிய்த்து எடுத்தப்பிறகும்
அதே மணம்..
இலைகளின் உராய்வுகள் பூக்களின்
இதழ்களில் தெரிவதில்லை.
அதனாலேயே பூக்கள் காயப்படவில்லை
என்பதை உண்மையாக்கிவிட்டார்கள்..
மழைக்காக ஒதுங்க்கிய மைனாவின்
அழுகுரல்
துணை அருகில் அமர்ந்தவுடன்
மவுனத்தில் உறைந்து போகிறது.
கொட்டும் மழையில்
இருள் மேகலை....விலகி
இன்னொரு நாட்டியம்