Saturday, July 15, 2023

மும்பை கல்லூரியில் தமிழ் வாசிப்பு

 அயல் மாநிலத்தில் தமிழ் வாசிப்பு.


 எங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு எங்கள் புத்தகங்களை  நாங்களே வாசித்துக்கொண்டு

பேசிப்பேசி அதில் புளகாங்கிதமடைந்து

எங்கள் புத்தகங்களை தமிழ் நாட்டிலிருந்து பிரபலங்களை வரவழைத்து வெளியிட்டு

அவர்களுடன் போட்டோ எடுத்து போட்டுக்கொண்டு

அதில் மாபெரும் சாதனை செய்துவிட்டதாக நினைத்து..

எல்லாமும் அர்த்தமிழந்து போகிறது எம் மும்பை வாழ்க்கையில்!

அதை உணர்ந்த தருணங்கள் வலி மிகுந்தவை.

வாசிப்பை எங்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் அக்கறையுடன் ஒரு சிறுமுயற்சியாக நேற்று மும்பையின் புகழ்மிக்க SIWS கல்லூரி மாணவர்களுடன் வாசிப்பு நிகழ்வு. தமிழ்நேசன் முயற்சி. தமிழ்க்கூடம் அடுத்த நகர்வு.


"எங்கள் புத்தகங்களை வாசிக்க சொல்லவில்லை நாங்கள்.

நாங்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் இல்லை நாங்கள்.

அட, தமிழ்தான் ஆகச்சிறந்த மொழி

அதுவே உன் தாய்மொழி 

என்றெல்லாம் பெருமை பேசவில்லை நாங்கள்.

நாங்கள் சொன்னதெல்லாம்

வாசிக்கலாம் புத்தகங்களை 

வாருங்கள்

என்று மட்டும்தான்!

உனக்கு எந்தமொழியில் வாசிக்க முடிகிறதோ

அந்த மொழியில் புத்தகங்கள் வாசியுங்கள்.

என்று எங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும்

அவர்களிடம் சொல்லிக்கொண்டே

இருந்தோம்.

இரண்டு பிரிவுகளாக மாணவர்கள் வந்தார்கள்.

காலையில் பட்டப்படிப்பு மாணவர்கள்

பிற்பகலில் +2 மாணவர்கள்..

புத்தகங்களை அவர்கள் எடுப்பதும்

கூடிக்கூடி பேசுவதும்

அதில் ஒருவர் வாசிப்பதும்..

 நாங்கள் பார்வையாளர்களாக அத்தருணத்தில்.

ஆனால்

அவர்கள் மீது படிந்திருந்த அந்த தயக்கம் எனும்

மெல்லிய பனிப்போர்வையை

விலக்கி வெளியில் வர...

தாமதமானது..

வந்தப்பிறகு ஒவ்வொரு பனித்துளியிலும்

ஒவ்வொரு சூரியன்,

மாணவர்கள் உலகம் ஒரு பிரபஞ்சம்.


வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு கேள்வியை

ரகசியமாக என்னிடத்தில் கேட்டான் அந்த மாணவன்..

அவனுக்கு "தமிழ் எழுத்துக்கூட்டி வாசிப்பது இன்னும்

வசப்படாமலிருக்கலாம். அவனுக்கு தமிழ் புத்தகங்களை

தமிங்கலத்தில் அதாவது தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் , அம்மா என்ற சொல்லை ammaa  என்று வாசிக்கும் வசதி இருக்கிறதா என்று!

என்னிடம் பதில் இல்லை.

அவன் அச்சுப்பதிப்பு எதிர்பார்க்கவில்லை.

ஆன்லைன் புத்தகங்களில் அந்த தொழில் நுட்ப வசதி

இருக்கிறதா என்று கேட்கிறான்!

அப்படியான ஒரு தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்திக்கொடுப்பது கடினமல்ல.

சாத்தியம்தான்.

அவனுக்கு தமிழின் தொன்மையும்

அதில் கொட்டிக்கிடக்கும் அறிவுச்சுரங்கமும்

தெரிகிறது.

அதற்கொரு சின்ன டார்ச் லைட் தேவை.

அவ்வளவுதான்.


தமிழ் நாட்டின் எல்லைகள் தாண்டி

அயல் மாநிலத்தில்

எங்கள் அசைவுகள்

எங்கள் இருத்தலுக்கானவை மட்டும் அல்ல.

இதைப் புரிந்துகொள்ளாமல்

தமிழ் வாழ்ந்துவிடும்

தமிழ் வாழ்க

என்று முழக்கமிடுபவர்கள்

கொஞ்சம் விலகி நில்லுங்கள்.


நன்றி : SIWS & மும்பை தமிழ் இலக்கியக்கூடம்


Wednesday, July 5, 2023

மாமன்னன் அரசியல்


"மாமன்னனாக எம் தந்தையர் சமூகம் வாழ்ந்து மறைந்தக் கதை எமக்கு வெறும் கதை அல்ல. அது எம் அரசியலும் கூட. "


மாமன்னன் பார்த்தாச்சு!

வள்ளியூர் சித்ரா தியேட்டரில் 100 ரூபாய் டிக்கெட். மும்பையுடன் ஒப்பிடும்போது எனக்கு லாபம்!

படம் பார்க்கும் போதெல்லாம் வீரா கேரக்டரில் அதாவது நம்ம உதயநிதி ரோல் தனுஷ் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்னு தோணிச்சி.

மற்றபடி வடிவேலு ஓகே. ஆஹா ஓஹோன்னு சொல்ல எதுவுமில்லை. அவரு சில காட்சிகளில் பாடி இருக்க வேண்டாம்னு தோணுது. 

வீரா உண்மையில் இளவரசர். அவரு கஷ்டப்பட்டு பன்றியோடு வந்தாலும் அது ஒட்டல.

சில காட்சிகள் சில சம்பவங்களை மிகக் கவனமாக நம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறது!

படத்தில் நடிப்பில் கொடி கட்டிப் பறப்பது வில்லன் ரோலில் நடித்து பகத்பாசில் தான். செம உடல்மொழி. அந்த உடல்மொழிக்கு வடிவேலுவும் உதயநிதியும் ஈடு கொடுக்க முடியல. 


இப்படம் திமுக அரசியலைப் பேசுகிறதா என்று கேட்டால் ... என் பதில் தயக்கமின்றி "ஆம் " என்பதுதான்! அப்பாவின் அந்தக்கால திமுக முதல் இன்றைய திமுக வரை ஒரு சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அவ்வளவுதான்! மாமன்னனாக எம் தந்தையர் சமூகம் வாழ்ந்து மறைந்தக் கதை எமக்கு வெறும் கதை அல்ல. அது எம் அரசியலும் கூட. 

இப்படத்தில் நடித்த  இந்த ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு வாழ்த்துகள்!

உதயநிதியைக் கொண்டே இந்த அரசியலைப் பேச வைத்த மாரி செல்வராஜ்க்கு என் பேரன்பும் நன்றியும். 

இது மாமன்னன் திரை விமர்சனம் அல்ல.

இது மாமன்ன அரசியல் !

இந்த அரசியலை மாரி செல்வராஜ் கையாண்டவிதம் சூப்பர்.  

#மாமன்னன்_அரசியல்

#மாரிசெல்வராஜ்_மாமன்னன்