Thursday, December 29, 2016

அம்மா - சின்னம்மா அரசியல்சசிகலா  நடராஜன் நல்லவரா கெட்டவரா
எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..!)
ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்புகள்  அரசியலில் இல்லை.
எதிரணிக்கு ஈடு கொடுக்கும் சர்வ வல்லமைப் படைத்தவர்
என்பதை மட்டும் சொல்லமுடியும். (அப்படிப் போடு  )

இன்றைய அரசியல் களத்தில் மகாத்மா காந்தி  மற்றும் பெருந்தலைவர்
காமராஜ் போன்றவர்கள் தலைவர்களாக வந்தால்
அரைநாள் கூட தாக்குப்பிடித்து நிற்க முடியுமா என்ன?

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆயுதங்களை மட்டுமல்ல
தலைமையைக் கூட எதிரணியின் தகுதிகள் தான் தீர்மானிக்கின்றன.
அப்படிப் பார்த்தால் சபாஷ்..
அதிமுக வினர்  இம்முறை ஜெயித்துவிட்டார்கள்.

இதில் தேவையில்லாமல் அடிவாங்கி இரத்தம் சொட்ட சொட்ட
போஸ் கொடுத்து சிலர் ஹீரோவாகிவிடலாம் என்று படம் பிடித்தது
ஏதோ காமெடி மாதிரி தான் இருந்தது.

எம் ஜி ஆர் மறைவுக்குப் பின் இதே அதிமுக வில் அதிகார மாற்றம்
எப்படி நடந்தது என்பதைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்
இன்று நடந்திருக்கும் அதிகார மாற்றமும் அமைதியாக அதைச்
செய்து காட்டி இருக்கும் விதமும் கவனிப்புக்குரியது.
வட்ட மாவட்ட பொறுப்புகளுக்கே அடி தடியில் இறங்கும் திராவிட அரசியலின் இதுவும் ஒரு திருப்புமுனைதான்..

புத்திசாலிகள் தான் காரண காரியங்களை வைத்துக்கொண்டு விவாதங்கள்
நடத்தி நடத்தி நடத்தி அதையே இன்னொரு விவாதமாக்கி..
விவாதங்களுக்குள் விவாதமாகி... எதை விவாதிக்க வந்தோம் என்பதையும்
மறந்து ... இப்படியாக தொடரும் விவாதக்களத்தைப் பற்றி எவ்வித கவலையும்
இன்றி... இப்படித்தான்யா நாங்க.. இது எங்க வீட்டு காரியம்.. எங்களுக்குத் தெரியும்னு
சின்னம்மா... நீங்க தான் எங்களை வழிநடத்த வேண்டும் என்று அழைத்து வந்து அமர வைத்துவிட்டார்கள்.
காங்கிரசு கட்சியில் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு சோனியா காந்தியை அழைத்து அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எவ்விதமான உறுத்தலுமின்றி ஏற்றுக்கொண்டவர்கள் நாம்.
தமிழகத்தில் திமுக அரசியலில் நாலே நாலு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
இருந்தால் கூட  தன் மகள் மகன் பேரன் உறவுக்களுக்கு சீட் போட்டு வைக்கும்
அரசியலையும் அமைதியாக ஏற்றுக்கொண்டவர்கள் நாம்.
அதை எல்லாம் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட  அரசியல்
 இதையும் ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 எதை விதைத்தோமோ அதைத்தானே
அறுவடை செய்ய முடியும்?

Thursday, December 22, 2016

மோடி மாயாஜால வித்தைகள்..


ஆடுபாம்பே... விளையாடு பாம்பே..
ஆடுபாம்பே... ஆடு டு டு  பாம் ப்ப்பே...


நல்லதே நடக்கிறது.. ஆனால் நல்லதற்கல்ல..

தமிழகத்தின் தலைமைச் செயலர் அலுவலகத்தில் பலகோடி ரூபாய், ஆவணங்கள்..எவருக்கும் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தமிழருக்கே பெரும் தலைகுனிவு என்று எதிர்க்கட்சி தலைவர் திரு. க. ஸ்டாலின் அவர்கள்  அதிகமாகவே வருத்தப்பட்டிருப்பது
அறிந்து தனிப்பட்ட முறையில் வருத்தம் ஏற்பட்டது.
 உண்மையில் அவர் வருத்தப்பட்டிருக்க கூடாது.
 சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்...
 நல்லவேளை இத்தருணத்தில் திமுக  ஆட்சியில்
இல்லை என்பதற்காக. ஆனால் வழக்கம்போல அவர் அவசரப்பட்டுவிடுகிறார். என்ன செய்வது?

தமிழகத்தின் ஊழலை ஒழித்துக்கட்ட பாரதப்பிரதமர் மோதியின் நடவடிக்கை என்று ஊடகங்கள் வேண்டுமானால் இக்காட்சிகளைக் காட்டி தங்கள் ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் மோதியின் நோக்கம் அதுவல்ல. எங்கெல்லாம் பிஜேபி வீக்காக இருக்கிறதோ அங்கெல்லாம் மோதி மஸ்தானின் இந்திர ஜால வித்தைகளாக இவை
அரங்கேறுகின்றன. இப்படி சொல்லவதற்காக தமிழகத்தில் ஊழல் நடக்கவில்லை என்றோ அல்லது தமிழக அரசியல் வாதிகள் கறைப் படியாதவர்கள் என்றோ பொருளல்ல.
இம்மாதிரி காட்சிகள் அரங்கேறும் போதெல்லாம் சில ப்ளாஷ்பேக் காட்சிகளும் சேர்ந்தே ஓடுகின்றன.
இரண்டு காட்சிகளையும் பார்க்கும் போது மட்டுமே
மோடி மஸ்தான் காட்டும் வித்தையின் அபாயம் புரிகிறது
.
காட்சி 1)
மோடி அவர்கள் குஜராத்தில் முதல்வராக இருந்தப் போது
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுயைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், இதன் வர்த்தக மதிப்பு 40 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமானதென்றும், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் எரிசக்தி தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருப்பதாகவும், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அப்படுகையில் 2007-இல்எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடுமென்றும்” அதிரடியாக அறிவித்தார்.
இன்றுவரை ஒரு கன அடி எரிவாயு கூட எடுக்கவில்லை .. ஆனால் 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடியவுள்ள ஏழே ஆண்டுகளில், 19,720 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக உருவிக் கொண்டுவிட்டது.

காட்சி 2)
2014- 15 நிதியாண்டில் பிஜேபி வளர்ச்சி நிதி அல்லது டொனேஷன் என்ற பெயரில்  வாங்கி இருக்கும் தொகை : 437. 35 கோடி. மற்ற கட்சிகளின் வசூல் தொகையுடன் ஒப்பிடும் போது பலமடங்கு அதிகம். அதிலும் இவர்களுக்கு இத்தொகையைக் கொடுத்த மிக முக்கியமான நிறுவனம் சத்தியா எலெக்டோரல் டிரஸ்ட்.
(Satya Electoral Trust) 25 Oct 2013 ல் டில்லிடில் திடீரென முளைத்த அரசு
சார்பில்லாத நிறுவனம் இது.
 இவர்களின் வேலை என்ன என்று ஆராய்ந்துப் பார்த்தால்
அரசியல் கட்சிகளுக்கு டொனெஷன் கொடுப்பதுதான் மிக முக்கியமான வேலையாக தெரிகிறது. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் வருகிறது?
இது என்ன வித்தை ? என்று ,மோடி மஸ்தான் தான் சொல்ல வேண்டும்.

அனைத்து மாநிலக் கட்சிகளையும் கறுப்பு பண ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு கழுத்துக்கு மேல் அதிகாரத்தின் கத்திகளைத் தொங்கவிட்டிருக்கிறார்.
இதிலிருந்து எவரும் தப்ப முடியாது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது
ஆகப்பெரும் செயலாக தெரிகிறது. ஆனால் வலை விரித்திருப்பது ஊழல்
ஒழிப்புக்கு மட்டுமல்ல.. ஊழலை செய்கின்ற ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கூட தனக்கானதாகவே வைத்துக்கொண்டுவிட்டால் ஆபத்தில்லை என்று
நினைக்கும் அதிகாரத்தின் வேட்கை இது.

அரசியலில் மோடி மஸ்தான்  வித்தைகள் காட்ட நினைக்கும்
அதி புத்திசாலித்தனம் ரொம்பவும் ஆபத்தானது.


Monday, December 19, 2016

பெண்ணுடல் பேராயுதம்

வி கேன் புக்ஸ் தொலைப்பேசி / வாட்ஸ்-அப் - +91 9940448599 தொடர்பு கொண்டு புத்தகங்களை வி.பிபியில் பெறலாம் அல்லது இணையத்தில் வாங்க....http://www.wecanshopping.com/.../%E0%AE%AA%E0%AF%86%E0%AE...


Wednesday, December 14, 2016

வர்தா புயலின் பின் விளைவுகள்
6000 மரங்கள் சரிந்திருக்கின்றன.
இதன் இழப்பு ரொம்பவும் அபாயகரமானது.
கடந்த மாதம் இந்தியத் தலைநகர் டில்லியில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கும் அளவுக்கு தலைநகரில் மாசும் தூசியும் . கிட்டத்தட்ட ஒர் அவசரநிலை கால நடவடிக்கைக்கு ஒத்ததாக இருந்தது அப்போதைய நிலை. பல ஆண்டுகளாகவே டில்லியின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு தான்
டில்லி வாழ் மக்களின் மருத்துவச்செலவு ஓராண்டில் 2450 கோடி அதிகரித்திருக்கிறது!
சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் ஆகப்பெரும் சக்தி மரம் மட்டுமே. காற்றில் கலக்கும் மாசைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுத்து நிறுத்தி ஒரு சமநிலையை எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மரம் ஓராண்டிற்கு சற்றொப்ப 100 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு மனிதனுக்கு சற்றொப்ப 740 கிலோ ஆக்ஸிஜன் ஓராண்டுக்கு
தேவைப்படுகிறது.
அதாவது ஒரு மனிதனுக்குத் தேவை குறைந்தது 6 மரங்கள் !
 இந்த விவரங்களை அறியும்போது விழுந்துவிட்ட
 6000 மரங்களும் அதன் விளைவுகளும் நாம் நினைப்பது போல
 அவ்வளவு சாதாரணமானதல்ல.
ஒவ்வொருவரும் மரம் நடுவோம்.
நம் எதிர்கால சந்ததியினருக்கு இந்த மண்ணை
அவர்கள் உயிர்வாழ தகுதியுள்ளதாக காப்பாற்ற வேண்டியது
 அரசின் கடமை மட்டுமல்ல,
ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் கூட.Sunday, December 11, 2016

மரணமும் அதிகார மாற்றங்களும்


பிஜேபியுடன் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அவர்களின் வெளிப்படைத்தன்மையான அதிகார மாற்றமும்
அது செயல்படும் விதமும் அதற்கான கட்டுக்கோப்பும் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தப்போது அவர் நல்லவர்,,
அணுகுண்டு வெடித்து இந்தியாவை வல்லரசாக்கிய வல்லவர், கவிஞர்,கூட்டணிக்கட்சிகளை மதிப்பவர்... 
இத்தியாதி அவர் மீது விழுந்த புகழாரங்கள் பல உண்டு. 
இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.
 ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து அவர்கள்
 வெளிப்படையாக பேசினார்கள். அவருக்குப் பின்
இப்போதைய பிரதமர் நரேந்திரமோதியை கட்சி முன்னிறுத்தியது
. இப்படியாக
அதிகார மாற்றம் என்பது ஒரு கட்டுக்கோப்பாக
 பிம்ப வழிபாடுகளைக் கடந்ததாக தொடர்கிறது. 
வாஜ்பாய் அவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து
 விலக்கப்பட்டதற்கும் சங்க்பரிவார் அதிகார மையத்திற்குமான 
உட்பூசல் காரணங்கள் இருந்தாலும்
இந்த அதிகார மாற்றத்தை இவ்வளவு வெளிப்படையாக 
இந்தியாவில் இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரசோ 
அல்லது பிற மாநில கட்சிகளோ செய்வதில்லை என்ற யதார்த்த நிலையுடன் ஒப்பிடும்போது ..
 மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கிறது.
காங்கிரசிலும் சரி, பிற மாநிலக் கட்சிகளிலும் சரி
அதிகார மாற்றம் என்பதை மரணம் மட்டுமே தீர்மானிக்கும்.. அரண்மனை வாரிசுகளுக்கு மட்டுமே அரியணை உரிமை என்ற புரிதலுடன்.
(கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபித்துக் கொள்:ளக்கூடாது. அவர்கள் இப்போது ஆட்டத்தில்
இல்லை. ரெஸ்ட் ரூமில் இருக்கும் என் தோழர்களை தொந்தரவு செய்யாதீர்கள்!)

Thursday, December 8, 2016

பகுத்தறிவின் பிம்ப வழிபாடுகள்

Image result for காந்தி சமாதி
இந்தியாவின் தலைநகரம் டில்லி கல்லறைகளின் நகரம்.
மன்னராட்சி காலத்தின் அடையாளமாய் முகலாய சாம்ராஜ்யத்தின் அரசர்களின் கல்லறைகள் டில்லியைச் சுற்றி இருக்கின்றன. .
அக்கல்லறைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத அளவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டின் மக்களாட்சி தந்த
தலைவர்களின் சமாதிகள்.. டில்லி" ராஜ் கட் " சுற்றி. நம் தலைநகரின் 245 ஏக்கர் நம் தலைவர்களின் சமாதிகள் தான் ஆக்கிரமித்திருக்கின்றன.
இப்படியே போனால் பாராளுமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் எங்கே வைத்திருப்பது என்ற அச்சத்தில் நம் அரசு விழித்துக்கொண்டது. அதனால்
தற்போது எந்த ஒரு தேசியத் தலைவரின் மறைவுக்கும் தனி இடம் ஒதுக்கப்போவதில்லை என்றும் தேசியத் தலைவர்களின் இறுதிச்சடங்கை மறைந்த ஜனாதிபதி ஜெயில்சிங் கல்லறைத் தோட்டத்தில் நடத்துவது என்பதை அமுலுக்கு கொண்டுவந்திருப்பதாக
அறிவித்திருக்கிறார்கள்.
*
"நான் இறந்தப் பிறகு எனக்காக சிலை எழுப்பப்போகும் அன்பர்களே..
உங்களை ஒன்று கேட்கிறேன். யாருக்கு வேண்டும் சிலை?
உங்களை வேண்டுவதெல்லாம் இதுதான். தெய்வம் இல்லை என்று கூறிவந்த என்னைத் தெய்வமாக்கி இழிவுப் படுத்தாதீர்கள்"
-சிலிக் கவிஞன் பாப்லோ நெருடா.
**
மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர்.
அவரது மறைவுக்கு பின்னர் அங்குள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களுக்கு அவரது பெயர் சூட்டும் முயற்சியில் மக்கள் ஈடுபடக்கூடும் என்பதால்
‘‘எனது சகோதரர், தான் இறந்த பிறகு தனது பெயர் எந்தவொரு நிறுவனத்துக்கும், தெருவுக்கும், பூங்காவுக்கும் அல்லது இன்னபிற இடங்களுக்கும் சூட்டப்படுவதை விரும்பவில்லை. எனவே அவருடைய பெயரை சூட்டுவதற்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும்’’ என்று இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ சொன்னதாக
அண்மையில் வாசித்த செய்தி நினைவுக்கு வருகிறது.
***
உலகிலேயே மிக அழகான கடற்கரைகளில் நம் சென்னையின் மரீனா கடற்கரையும் ஒன்று.
இந்தியாவின் மிக நீளமான கடற்கரையும் கூட. அதுவும் பாறைகள் நிறைந்த எம் மும்பை கடற்கரை போன்றதல்ல மரீனா கடற்கரை. அழகான மணற்பாங்கான
இயற்கையின் கொடை மரீனா பீச். .
***
தமிழ்ச் சமூகத்தில் தெய்வ வழிபாடு... தனிமனித வழிபாட்டின் வரலாறுதான்.
அதைப் பகுத்தறிவுடன் அணுகி சமூக உளவியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய திராவிட இயக்கம்... தமிழ்ச் சமூகத்தில் தலைவர்களின் துதிபாடல்களையும்
தனி மனித வழிபாடுகளையும் தலைமையின் பிம்ப வழிபாடுகளையும் வளர்த்தெடுத்ததில் முன்னணியில் இருந்தது.
பொதுவுடமை பேசியவர்களும் சரி, காந்தியம் பேசியவர்களும் சரி.. இந்த தனிமனித வழிபாட்டுகளின் கோஷத்தில் மயங்கி அவர்களே கவியரங்க துதுபாடிகளாக மாறிப்போன அவலம் நடந்தது. எல்லாம் விருதுகளுக்காகவும் அங்கீகாரங்களுக்காகவும் என்பதையும் தாண்டி இருத்தலின் அடையாளமாகவும் ஆகிப்போன அவலம் நடந்தது. நடக்கிறது.. !
**
#"பகுத்தறிவு பேசிய பராசகதி
அண்ணாமலையாகி ஆருடம் சொன்னது
நடந்துவிட்டது... சுபம் . "#

Sunday, December 4, 2016

பெண்வழிபாடு சிறுகதை தொகுப்பு விமர்சனம்.


தலைப்பு-புதியமாதவியின் பெண்வழிபாடு, வளவ.துரையன் ; thalaippu_penvazhibaadu_puthiyamathavi_valavan_thuraiyan

புதிய மாதவியின் பெண்வழிபாடு:

சிந்தனையைததோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு

  சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
 மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி புதிய இலக்கியத்தில் முதன்மையான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை,  திறனாய்வு எனப் பல வகையான தளங்களில் இயங்கி வருபவர்.  ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
  பெண் தலைமை தாங்கும் மன்பதை மறைந்து ஆணை முதலாகக் கொண்ட மன்பதை என்று உருவாகத் தொடங்கியதோ அன்றே பெண்ணடிமையாகும் சூழல் தோன்றத் தொடங்கிவிட்டது எனலாம். என்னதான் பெண் கல்வியில் முன்னேறி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தன் காலில் நிற்கும் அளவிற்குப் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் அவள் வீட்டிலும் வெளியிலும் ஒரு போகப் பொருளாக, ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட வேண்டியவளாகவே இருக்கிறாள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
‘பெண்வழிபாடு’ எனும் முதல் கதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் வைக்கப் பட்டிருக்கிறது. இக்கதை கூறப்பட்டிருக்கும் வகை ஒரு புதுமையாக இருக்கிறது. மரபிலக்கியங்களில் பெண்ணை அவளின் அகவையை வைத்துப்  பேதை, பெதும்பை, மங்கை மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனச் சில பருவங்களாகப் பிரித்துள்ளனர். இப்பருவங்கள் ஒவ்வொன்றையும் கூறி அவற்றில் அவள் அடையும் பாலியல் தொந்தரவுகளை இச் சிறுகதை காட்டுகிறது.  ஆகப் பெண்ணுக்கு எல்லாக் காலங்களிலும் ஆண் வழி வரும் ஆதிக்கத்தை நாம் உணர முடிகிறது. பத்து அகவையில் தனிப்பயிற்சி அளிக்கும் ஆசிரியர், பதினைந்து அகவையில் தனிப்பயிற்சி அளித்த பெண் ஆசிரியை, மடந்தைப் பருவமான இருபத்து நாலு அகவையில் அக்காள் கணவன், என அவளுக்குப்  பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. மணமான பின்போ கணவன் இவள் விருப்பம் அறியாமல் களிக்கக் கூடியவனாக இருக்கிறான். “அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கேச் சிதறிக் கிடக்கும் படுக்கையில். சுருக்குப் பையைக் கிழித்து நுழையும் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது.” என்ற வரிகள் அவளின் மன ஆழத்திலுள்ள அவலத்தைப் படம் பிடிக்கின்றன.
  ஆனால் இதற்கெல்லாம் பழி வாங்குவது போலப் பழகுகின்ற ஒரு நண்பரிடமே அவள் தன் உடலைக் கொடுக்க ஆயத்தமாகிறாள். நண்பரோடு தனியாய் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. “அன்று வீட்டில் யாரும் இல்லை. அவருடன் தனியாகக் கழிக்கப் போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றிக் காத்திருந்தது உண்மை.” என்ற வரிகள் அவளுக்கு நாம் கொடுத்த ஆதரவை மீட்டெடுக்கலாமா என எண்ண வைக்கின்றன. இவ்வளவு துன்பப் பட்டவள் வரம்பு மீறுவதும் தவறில்லைதான் என நினைக்கும் நாம்  கதை இப்படிக் கூட முடியலாம் என்றெண்ணுகிறோம். ஆனால் மரபில் கூறும் பருவங்களை வைத்து எழுதும் ஆசிரியரால் அதை மீற முடியவில்லை போலும். கதை இந்த இடத்தில் திடீரெனத் தடம் மாறுவது ஆசிரியரை மீறியே நடந்து விட்டது என நினைக்கிறேன்.
  அடுத்த வரியைப் பாருங்கள். “அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. உடலைக் கழற்றித் தூர எறிந்துவிட முடியாத அல்லல்பாட்டில் அவள் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.”அவர் அவளைத் தொட அவள் பிடி இறுக இருவரும் பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறார்கள். தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல, கவனக் குறைவால் ஏற்பட்ட நேர்ச்சி(விபத்து) என ஊடகங்கள் பேசுகின்றன. படிக்கும் வாசகன் அவள்தான் அவரையும் தள்ளிக் கொண்டு விழுந்தாள் என்பதையும் உணர்கிறான். கவனக் குறைவு எனும் சொல் இங்கு விழுந்திருக்கிறது.
  மரபை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் அதில் கட்டுண்டு கிடக்கும் சூழல் ஒரு புறம் என இக்காலப் பெண் இருபொறிகளில் சிக்கித் தவிப்பதைக் கதை நன்கு காட்டுகிறது. ஒருவர் எதை நினத்துக் கொண்டிருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார் என்பது உள நூல் வல்லுநர்களின் கருத்தாகும். அதுபோல எசுதரின் மனம் முழுதுமே கருப்பாய் மாறிவிடுகிறது. “கருப்புதான் எனக்குப் பிடிச்ச வண்ணம் (கலரு)” என்று பாடவில்லையே தவிர காரணம் தெரியாமலே அவளுக்குக் கருப்பு பிடித்துவிடுகிறது.“கருப்பண்ண சாமி கோயில் பக்கம் போகாதே” என்று அம்மா சொன்னாலும் அவள் அந்தப் பக்கமாகப் போகும் போதெல்லாம் கருப்பண்ணசாமியைத் திருட்டுத்தனமாகப் பார்த்து மகிழ்ந்து வருகிறாள். பள்ளி ஆண்டு விழாவின் மாறுவேடப் போட்டியில் கருப்பண்ண சாமி வேடம் போட்ட மாசானத்தை ஆட்சியர்(கலெக்டர்) பாராட்ட அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்த்து. அதற்கு ஆட்சியர்(கலெக்டர்) கருப்பாக இருந்ததும் ஒரு காரணம். கருப்பு நிறத்தைப் பூசிக் கொண்டுவரும் இரவு அவளுக்குக் கிளர்ச்சி ஊட்டுகிறது.
  அவளின் மன உணர்வு தெரியாமல் அவள் குணமடைய அவள் அம்மா வாரம் தவறாமல் தேவாலயத்திற்கு நடக்கிறாள். இக்கதை மகளின் மனம் அறியாமல் இருக்கும் தாயைக் காட்டுகிறது என மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணின் சிறு அகவையில் ஆழப் பதியும் உணர்வு எவ்வளவு அவளைப் பாதிக்கிறது என்று அறிய முடிகிறது. ஒரே ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு அவளின் மன எண்ணங்களைப் படம் பிடித்து அழகாக ஆசிரியர் கதையை நடத்திச் செல்கிறார்.
  திரைத்துறைபற்றி ஒரு கதை. அதில் விழுந்தவர்கள் மீளமுடியாது என்பதைக் காட்டுகிறது. அகவையான பின்னும் ஆண் நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் உலகம் அது. ஆனால் சற்று அகவையானாலே பெண் நடிகர்களுக்கு,  சித்தி, பாட்டி அம்மா பாத்திரங்கள்தாம் கிடைக்கின்றன. ஆனால் அதை அவர்களால் தாங்க முடியவில்லை. அறுபது வயது நடிகரை இளம் பெண் விரட்டி விரட்டிக் காதலிக்கும் கதைகள்தாம் ஆணாதிக்கமுள்ள சூழலில் மாட்டித்தவிக்கும் அந்த உலகில் இருப்பதையும் இச்சிறுகதை காட்டுகிறது.
  முதியோர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களைச் சிறுமைப்படுத்தும் கதைதான் ‘பாட்டி என்ன சொல்லி விட்டாள்?’
  தொன்மத்தில் புகுந்து அதே நேரத்தில் இயல்பாக எழுதப்பட்ட கதை என ‘அம்மாவின் காதலன்[ர்]’ கதையைச் சொல்லலாம். இருந்தாலும் ஆனைமுகனை வள்ளி காதலித்தாள் என்பதெல்லாம் கொஞ்சம் மிகுதி. ஆனால் கற்பனைக்கு விலங்கிட முடியாதுதான். அதே நேரத்தில் குறிஞ்சி அழகனாக வந்தது ஆனைமுகன்தான்  என்று அவள் நினைப்பதை ஏற்க முடியாது ஏனெனில் அவள் ஒரு மானிடப் பெண். இந்தத் தொன்மம் எப்படி அம்மாவின் காதலரைத் தேடிப்போகும் கதை சொல்லிக்குச் சரியாகிறது என்பது புரியவில்லை.
   ‘பரிசித்’ கதை எங்கோ தொடங்கி எங்கோ முடிகிறது. இக்கதையை எந்த நோக்கதோடு புதிய மாதவி எழுத வந்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு மையங்களை வைத்துக் குழப்பப் பட்டுள்ளது. குருசேத்திரப் போரில் பல ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்காளாயினர் என்பது ஒரு கரு. பாஞ்சாலி எப்போதும் மனத்தில் அர்ச்சுனனை மனத்தில் வைத்திருந்து மற்ற கணவர்களுக்குத் துரோகம் செய்தாள் என்பது மற்றொன்று. இரண்டையும் தனித்தனியாகவே எழுதி இருக்கலாம்.  ஆனால் அக்காலப் போர்முறைகளை இக்காலத்துப் போர்முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். போரே அன்று நகரத்துக்குப் புறம்பான வெட்ட வெளியில்தான் நடந்தது. தோற்றவர்களின் பெண்டிரைச் சிறை எடுக்கும் வழக்கம் புராண காலத்திற்குப் பின்னர்தான் வந்தது. இன்னும் நன்கு கனிந்த பழமாக வந்திருக்க வேண்டிய கதை இது.
 ‘தசரதபுரம்’ எனும் கதையும் இதேபோலத்தான் அமைந்து விட்டது. இன்னும் சற்று அழுத்தமாகப் பதிய வேண்டிய கதைதான் அது. வெளி நாட்டுக்குப் போன பாட்டி அங்குள்ள சூழலுக்கு ஒத்துப் போக முடியாமல் தவிக்கும் கதைதான் மரகதம் பாட்டி பற்றியது. ஆனால் மேல் நாட்டு வெப்பம், மற்றும் குளிரால் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும் அவர்களது நாகரிகத்தையும் நாம் கிண்டல் செய்யக் கூடாது என்பது எண்ணம்.
”நாட்டுக்கு நாடு எல்லாமே மாறுகிறதே. ஆனால் இளந்தலைமுறை எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு என்று இதைத் துணிந்து சொல்லலாம். ஏனெனில் புதிய மாதவியின் நடை சற்று மாறுபாடானது. இத் தொகுப்பின் தளங்களும் வெவ்வேறானவை. புதிய சிந்தனையைத் தோற்றுவிப்பவை.

– வளவ. துரையன் 

புதியமாதவியும் வளவ.துரையனும் ; puthiyamadavi_valavaithuraiyan


சங்கு சிற்றிதழ் ஆசிரியர் வளவ துரையனுக்கும் தமிழ் உலகம் மின்குழுமத்தில் மீள்பதிவு செய்த அய்யா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கும் மிக்க நன்றி. 

Thursday, December 1, 2016

ஜன கண மன --- திரைப்பட விமர்சனம்

திரைப்படம்... ஜன கண மன

திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் கட்டாயம்
தேசியகீதம் திரையில் ஓடும். அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும்
தம்தம் தேசாபிமானத்தைக் காட்டும் வகையில் கட்டாயம் எழுந்து
நின்றாக வேண்டும் . நம் தேசத்தின் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. ஜெய்ஹிந்த்.
1960களில் இந்திய சீன எல்லையில் போர் நடந்தக் காலக்கட்டம்.
அப்போதுதான் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தப்பிறகு
தேசியகீதம் ஒலிக்கும். எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் அப்படி
தேசியகீதம் ஒலிக்க அப்படியே அட்டென்ஸன் பொசிசனின் நின்று
என் தேசப்பக்தியைக் காட்டியதற்காக... கூட வந்தவர்களிடம்
வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன். பெரிசா வந்துட்டா...
இவளாலே நமக்குத்தான் லேட்டாகும் என்று அலுத்துக் கொள்வார்கள்.
ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் 52 வினாடிகள் அப்படியே நிற்கும்போது டூரிங் தியேட்டரே என்னை மாதிரி
பள்ளிக்கூடப் பிள்ளைகளை ஏதோ அதிசயப்பிராணியைப் பார்க்கிறமாதிர் பார்ப்பார்கள்! அது ஒரு காலம்.
அதன் பின் தேசியகீதம் முடிவதற்குள் தியேட்டரே காலியாகிவிடும்
நிலையைக் கண்டு சினிமா தியேட்டர்களில் தேசியகீதத்தை எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நிறுத்திவிட்டார்கள்.

... 52 வினாடிகள் எழுந்து நிற்பதோ தேசியகீதத்தை
மதிக்க வேண்டும் என்பதோ பிரச்சனை இல்லை. ஆனால் அதைக் கட்டாயமாக்குவதை எந்த வகையில் நியாயப்படுத்தமுடியும்?
பன்னாட்டு விளையாட்டு அரங்கத்திலோ கருத்தரங்கத்திலோ
அரசு விழாக்களிலோ பிரதமர், கவர்னர் , ஜனாதிபதி கலந்து கொள்ளும் அரசு நிகழ்வுகளிலோ தேசியகீதத்தை கட்டாயமாக்குவதில் அர்த்தமிருக்கிறது.  எதற்காக சினிமா பார்ப்பதற்கு முன்?!!
அதற்கு சொல்லப்படும் காரணமும் கத்தரிக்காயும்.!!

மும்பையில் - மராத்திய மாநிலத்தில்  2003 ஜனவரி 26 முதல் திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிக்கும் மும் தேசியகீதம் ஒலிப்பதை சட்டமாக்கினார்கள்.. இன்றுவரை அது தொடர்கிறது
இப்போதெல்லாம் மும்பையில் தேசியகீதம் முடிந்தப்பிறகு தான் நிறையபேர் இருட்டில் டார்ச் அடித்துக்கொண்டு
தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள்
அனைவரும் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள்!
மற்றபடி பல ஆண்டுகளாக மும்பையில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன் தேசியகீதம் ஒலிக்கிறது. நாங்கள் எல்லோரும் எழுந்து நிற்கிறோம்... அதனால் அறியவேண்டியது என்னவென்றால்
இந்தியாவில் மற்றவர்களை விட மும்பைவாசிகளுக்கு
முக்கால் (3/4) கிலோ தேசப்பக்தி அதிகம் தான்.  

Tuesday, November 29, 2016

BOOKSWAP

Image result for bookswap

BOOKSWAP
ஊடகங்கள் ஊடகங்கள் ஊடகங்கள்...
கையிலிருக்கும் ரிமோட்டில் எந்தப் பக்கம் பிடித்தாலும்
சில முகங்கள் அடிக்கடி எல்லா நிகழ்ச்சிகளிலும் வருவதும் போவதுமாய்
வருவதும் போவதுமாய்... இப்படி வந்துப்போவதாலேயெ பிரபலமாகிவிடலாம்
என்றும் பிரபலமாகிவிட்டால் அவர்களுக்கு தினமும் தீபாவளிதான்..
நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இது பெரிய குற்றமில்லை.
விளம்பரத்தில் தொலைந்து போனவர்களை விட நம் நாட்டில்
விளம்பரமில்லாமல் தொலைந்துப் போனவர்கள் நிறையபேர் உண்டு.
இம்மாதிரியான ஒரு சின்ன மனக்கலக்கத்தில் ... டாடா இலக்கியத் திருவிழா
கூடலில் மதிய உணவுக்குப் பின்
 புத்தகப்பரிமாற்றம் என்ற  BOOKSWAP  பகுதிக்குள் நுழைந்தேன்.
அங்கே... சேட்டன் பகத், ஷோபா டி இத்தியாதி பல பிரபலங்கள் எழுதிய
புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன. ஒரு ராமச்சந்திர குகாவோ அருந்ததிராயோ
எழுதிய எந்தப் புத்தகமும் இல்லை ...இல்லை .. இல்லை.
அப்பாடா... வாசிப்பவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்...
கடற்கரை காற்று சுகமாக இருந்தது.

Monday, November 21, 2016

PAST SO PRESNT IN PRESENT


இறந்தகாலத்தில் முகம்பார்க்கும் நிகழ்காலம்
அதுவும் அரசியலில் இறந்த காலத்தைத் தூக்கி சுமந்துக்கொண்டிருக்கும் நிகழ்கால அரசியல்வாதிகள்..
ghosts who walk
why is the past so present in indian politics?
எவ்வளவு ஆழமான  விவாதப்பொருள்..
இத்தலைப்பை வாசித்தவுடனேயே என்னையும் உற்சாகம்
தொற்றிக்கொண்டது. என்னவெல்லாம் பேசுவார்கள்?
NCPA - Littile theatre sunday 20/11/16 - 5 to 6 pm
வழக்கம்போல கூட்டம் ஒரு இருக்கை கூட காலியாக
இருக்கவில்லை. வெங்கட் துலிப்லா வும் ஷரிர் மஷானியும்
உரையாடல். தலைமை திலீப் பட்கோன்கர். (venkat dhulipala
and zareer masani . chair: Dileep padgaonkar)
ஷரீர் மஷானி மிகவும் சிறப்பாக ஆரம்பித்தார்.
ராமஜென்மபூமி முதல் பாரதப் பிரதமர் ப்ளாஸ்டிக் சர்ஜரி
இந்தியாவில் இருந்ததாக அறிவியல் கருத்தரங்கில் பேசியது
முதல் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார். மராட்டிய
மண்ணில் எங்கே பார்த்தாலும் சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மும்பையில்
விக்டோரியா டெர்மினஸ் சத்ரபதி சிவாஜி ரயில்நிலையமானது.
விமானத்தளத்தின் பெயரும் சத்ரபதி சிவாஜி விமான நிலையம்தான்.
இப்படியாக எங்கே பார்த்தாலும் வீரசிவாஜி ... கர்நாடகத்தில்
திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்படுவதைச் சுட்டிக்காட்டி
அரசர்கள் அவரவர் அதிகாரத்தை நிலைநிறுத்தவே போராடினார்களே
தவிர நாட்டு விடுதலைக்கும் அவர்கள் போராட்டங்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்பதையும் சிரித்துக் கொண்டே
விவரமாக சொன்னார்.  அவர்கள் வாழ்ந்தக் காலங்களில் அவர்கள்
வீரர்களாக தலைவர்களாக இருந்திருக்கலாம் ஆனால் அவர்களை
அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து ஒரு அவதார புருஷனாக
காட்டுவதும் இளைய தலைமுறைக்கு கடந்த கால முகங்களை
நிகழ்காலத்திற்கான அடையாளமாகக் காட்டுவதும் ஆபத்தானது
என்றார் மஷானி. அதன் பின் விடுதலைப் போராட்டம் , காந்தி, நேரு
என்று ஆரம்பித்த உரையாடல் அப்படியே தலைமையின் கேள்விகளின்
ஊடாக கொஞ்சம் கொஞ்சமாக தலைப்பிலிருந்து விலகி விலகி விலகி.. ரொம்பவே விலகிப்போய்... என்னவோ இந்தியா பாகிஸ்தான்
பிரிவினையைப் பற்றிய உரையாடலாக மாறியது. இதற்கு முழுக்காரணமும் நிகழ்ச்சியை நடத்திய திலீப் படுகோன்கர் தான்.
சிக்னலை தவறான பாதையில் காட்டினால் வண்டி ட்ராக் மாறித்தானே
பயணிக்கும்... எப்படியே அதுவும் ரொம்ப ரொம்ப சூடான விவாதமாக இருந்தாலும் இப்படி அநியாயமாக ட்ராக் மாறி
வண்டி ஒடியதில் என்னைப் போல பலருக்கு ஏமாற்றம் தான்.
மாயாவதி உத்திரபிரதேசத்தில்  நிறுவி இருக்கும் ஏகப்பட்ட ஆனை
சிலைகளும் பாபாசாகிப் அம்பேத்கர் சிலைகளும் ஒரு எதிர்வினை
செயல் தான் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள் வெங்கட்..
இந்த நாட்டில் மகாத்மா காந்தி ரோடு, இந்திராகாந்தி ரோடு,
ராஜிவ்காந்தி ரோடு.. என்று எல்லா பாதைகளையும் ஒரே
குடும்பத்து காந்திகள் வரிசையாக அடைத்ததின் எதிர்வினைதான்
மாயாவதி செய்தது என்றார்.
பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து அம்பேத்கர் எழுதி இருப்பது
குறித்து விவாதம் இன்னொரு RIGHT TURN . அவர் சொன்ன கருத்துகளை அப்படியே கேட்டுக்கொண்டேன். இன்னொரு முறை அம்பேத்கரின் குறிப்பிட்ட
இக்கருத்து குறித்து மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்.
இப்படியாக டிராக் மாறி ஓடினாலும் வண்டி ஏகப்பட்ட
பயணிகளுடன் (எண்ணச்சிதறல்களுடன் )  நிகழ்ச்சி முடிந்து
24 மணி நேரம் கடந்தும் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

Thursday, November 17, 2016

அவள் எழுதுகிறாள் அவன் எழுதுகிறான்
( SUE ROBERT AND GILLIAN JOHNSON )

அவள் எழுதுகிறாள்... அவன் எழுதுகிறான்
ஆம் அவள் எழுதுகிறாள் அவன் எழுதுகிறான்
என்ற தலைப்பே என்னைப் போன்றவர்களை  NCPA - Experimental theatre க்கு
அழைத்தது எனலாம். அரங்கம் நிரம்பிய கூட்டம். சித்தார்த் சங்கவி தலைமையில் (17 நவம். 2016 மாலை 6.30 - 7.30)
இரு இணையர் பேசிக்கொண்டிருந்தார்கள். -
GILLIAN JOHNSON & NICHOLAS SHAKESPEARE
மற்றும் SIMON ARMITAGE & SUE ROBERTS.
தங்கள் சந்திப்பு, இருவரும் எழுதிக்கொண்டிருக்கும் ப்ஸியான நேரங்கள்,
" காஃபி ப்ளீஸ், வாக்கிங் போகலாமா " என்று மட்டுமே உரையாடல்
நடந்த தருணங்கள், மனைவி பேசிக்கொண்டே இருக்க கணவன்
ஒரு அமைதியாக இருந்ததும் மனைவி வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில்
கணவன் பேச ஆரம்பித்ததும் ... தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
மிகவும் இயல்பாக பரிமாறிக் கொண்டார்கள். ஓர் ஆணும் பெண்ணும்
கணவன் மனைவியாக இணையும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள்
தங்கள் எழுத்துப்பணிக்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்
என்று (அதாவது  child free couple  என்ற அடையாளத்தையே நான்
குறிக்கிறேன்) முடிவு செய்திருந்தால் என்னதான் அந்த முடிவு அவர்களின்
தனிப்பட்ட  முடிவாக இருந்தாலும் அந்த முடிவு குடும்பம் என்ற நிறுவனத்தின்
ஒரு விதிவிலக்கான முடிவாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது.
இதையும் கருத்தில் கொண்டு அவர்கள் அம்மாதிரியான விதிவிலக்கானவர்களாக
இருக்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போதே.. அவர்கள்
தங்களின் குழந்தைகள் குறித்தும் பேச ஆரம்பித்தார்கள்!
பெண்களின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை எழுத்தாக்கும் நான் ,
ஒரு தாயாக குழந்தையைப் பிரசவிப்பதிலிருந்து
ஒரு குழந்தைக்கு பேம்பர்ஸ் மாற்றுவதும் "ஆய்" போனால் துடைப்பதுமான
அனுபவத்தையும்  அடைந்தேன்.. என்று பேசப்பேச ... எனக்குள் என் கடந்தக் காலம் விரிந்தது..
அவர்களுடைய கணவன்மார்கள் ஒரு குழந்தை வீட்டில் தரும் மகிழ்ச்சியை
அளவாக பேசி தங்கள் நிலைப்பாட்டைக் காட்டினார்கள்.
இருவரும் எழுதுகிறார்கள். இருவருக்கும் ப்ஸியான வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு வேறு, உரையாடல்களுக்கான நேரம் குறைகிறது .. எப்படி வாழ்க்கை?
என்ற பார்வையாளர் கேள்விக்கு நிக்கோலஸ் சொன்ன பதில் இதுதான்
"படுக்கையிலிருந்து காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுகிறோம்"
என்றார். ( waking up together) இதில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன.
ஒன்றாக துயில் எழுந்து ஒன்றாக இணைந்து எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொண்டு அவரவருக்கான சுயமிழக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து
இருவரும் அவரவருக்கான இடத்தைக் கொடுத்து வாழும் வாழ்க்கை..!
இப்படி எத்தனையோ அர்த்தங்கள் அவர் சொன்ன சொல்லில் இருந்தது.
ஆனால் மனைவி என்றால் "பின் தூங்கி முன் எழ வேண்டும்" என்று நல்ல
மனைவிக்குரிய தகுதிகளை வரையறுத்திருக்கும் நம் சமூகத்தில்?
ஊடகத்தில் காட்சிகளைப் பார்த்தால்... "கணவன் படுக்கையில் தூங்கிக்
கொண்டிருப்பான்.. மனைவி எழுந்து குளித்து பூஜை செய்து கையில்
காஃபியுடன் வருவாள்.. இப்படி காட்சி வராத ஒரு தொலைக்காட்சி தொடர்,
ஒரு சினிமா இன்றுவரை வந்திருக்கிறதா..?? இக்காட்சியை தன்னை மறந்து
ரசிக்கும் ஆண்களும் பெண்களுமாக இருக்கும் நம் சமூகத்தில்
சேர்ந்து எழுவது நடக்கவில்லையா..? என்று கேட்டால் காலப்போக்கில்
இந்த மாற்றம் நடக்கிறது ... நடக்கிறது.. எப்படி..?

அவனும் அவளும் ஒரே நேரத்தில் முழிக்கிறார்கள்...
அவள் வேகம் வேகமாக பல்துலக்கிவிட்டு அவனுக்கு காஃபி போடுகிறாள்.
அவன் வாக்கிங் சூ  மாட்டிக்கொண்டு நடைப்பயிற்சிக்காக கிளம்புகிறான்.
அவள் அவன் போன பின், கிட்சனில் எட்டுக்கைகள் உடைய தேவியாக
அவதாரம் எடுக்கிறாள். மிக்ஸி ஒடுகிறது.. தோசைக்கல்லில் தோசை..
இன்னொரு அடுப்பில் குக்கர் சத்தம் போடுகிறது. கைகள் காய்கறிகளை
வெட்டுகின்றன. சட்னி தயாராகிவிடுகிறது.. நடு நடுவே கிட்சனுக்கும்
பெட்ரூமுக்குமாக ஒரு ஜெட் போல பறந்துக்கொண்டிருக்கிறாள்..
குழந்தைகளை எழுப்புகிறாள்.. சாம்பாரோ கறியோ தயாராகிக் கொண்டிருக்கிறது.
சப்பாத்தி உருட்ட ஆரம்பிக்கிறாள். எப்படியோ குழந்தைகளை ஒரு வழியாக
எழுப்பி... அவர்களுடன் ஒரு மந்திரவாதியைப் போல நடந்துக்கொள்கிறாள்.
வாக்கிங் போன கணவன் வீடு திரும்புகிறான். ரொம்பவும் வியர்வையுடன்.
வந்தவுடன் அவன் அன்றைய தினசரியை வாசிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
என்னங்க... கொஞ்சம்.. சின்னவனைப் பாருங்களேன்.. பாத்ரூமில் என்ன
செய்திட்டிருக்கானு.., என்னங்க... குக்கர் சத்தம்ம் போடறது காதில விழலையா.. என்று கேட்டுக்கொண்டே வேகமாக கிட்சனுக்குள் நுழைந்து அதை நிறுத்துகிறாள்.
அவன்... " இந்த வீட்டில நிம்மதியா காலையில எந்திருச்சி ஒரு பேப்பர் படிக்க
முடியுதா.. ? " கோபத்துடன் பேப்பரை எடுத்து வீசுகிறான்.
பிள்ளைகளுக்கு சீருடைகளை மாற்றி சாப்பாடு டப்பா, தண்ணீர் பாட்டில்
வைத்து ஸ்கூல் பஸ் வருவதற்குள் ஓடி ஓடி எப்படியோ அவர்களை
அனுப்பி விட்டு வரும் போது அவன் குளிக்கப் போய்விடுகிறான்.
சிதறிக்கிடக்கும் பேப்பரை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு
அவள்  நிமிரும் போது இடுப்பு வலிக்கிறது. கொஞ்சம் உட்கார்ந்தால்
நல்லா இருக்குமே என்று நினைக்கும் போது அவன் பாத்ரூமிலிருந்து
கத்துகிறான்.. எதற்கோ..!
அவள் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால்..அவளும்
குளித்து உடைமாற்றி பஸ் பிடித்து மும்பை மாதிரி இடத்தில் ரயில்
கூட்டத்தில் இடிபட்டு தொங்கிக்கொண்டு போய்ச்சேரும் போது
அவள் எப்படி  இருக்கிறாள்...? அய்யோ..யோ யோ..!
இப்படியாக சில மாற்றங்களுடன் தொடர்கிறது குடும்பத்தில்
ஆண் பெண் வாழ்க்கை.
இதில் எழுத்தாளர் தம்பதியரின் வாழ்க்கை?
அவள் எழுதினாள்.. அவன் எழுதினான்.
அவள் எழுதினாள்... அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.
அவள் ஒரு காலத்தில் எழுதினாள்.
அவன் எழுதிக்கொண்டு இருக்கிறான்... என்றும் எழுதிக்கொண்டிருப்பான்.

SHE  WROTE HE WROTE
SHE WROTE HE WRITES
HE WRITES  HE ONLY  WRITES...
SHE?
இப்பயணத்தில் தமிழ்ச்சூழலில் சில இணையர் நினைவுக்கு வரக்கூடும்.
she wrote he wrote... she wrote he writes இணையராக. வேண்டாம் எனக்கு
வம்பு. அவர்களை விட்டுவிடுவோம்.

she writes he writes இணையராக சிலர் நினைவுக்கு வருகிறார்கள்.

அ. வெண்ணிலா  - முருகேஷ்
(நினைவில் வாழும் ) சுகந்தி   சுப்பிரமணியன்- சுப்ரபாரதி மணியன்
அம்பை - விஷ்ணுமாத்தூர்
மாலதி மைத்ரி -  பிரேம்
(யாராவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே)
இப்படி சில இணையர்  நினைவுக்கு வருகிறார்கள். வாழ்த்துகிறேன் அவர்களை.
TATA LIT FESTIVAL  போன்ற பன்னாட்டு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
பங்கேற்கும் நிகழ்வுகளில்  வெளிநாட்டவர்  சொல்லும் சில கருத்துகள்
இந்தியச் சூழலில் ரொம்பவும் அந்நியமாய் இருப்பதை உணர்கிறேன்.
இந்திய எழுத்தாளர்களில் , இந்திய நடிகர்களில் அவள் -  அவன்
ஓர் இணையராக  பேசும் நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே
நம்மை அதில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற
எண்ணம் வருகிறது.
Monday, November 14, 2016

நேரு - காந்தி - சுபாஷ்

சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு... இருவருக்குமான ஒற்றுமை,
காந்தி என்ற ஆளுமையுடன் இருவருக்குமே ஏற்படும் கருத்துவேறுபாடுகள்
Image result for nehru bose parallel lives

காந்தி என்ற  வட்டத்திலிருந்து வெளியில் வரும் சுபாஷ்,
அந்த வட்டத்திற்குள் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நேரு..
1933 ல் நேரு எழுதுகிறார் த ன் டைரியில்...
"நான் மகாத்மாவை விட்டு ரொம்ப விலகிவந்துவிட்டேன்.
உணர்வுப்பூர்வமாக நான் அவருடன் நெருக்கமாக இருந்தாலும்
அவர் அரசியலை அறிவுப்பூர்வமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இனி, அரசியல் ரீதியாக அவருடன் சேர்ந்து செயலாற்றமுடியும் என்று
தோன்றவில்லை. நாங்கள் எங்களுக்கான  அவரவர் பாதையில்
பயணிக்க வேண்டும்.."  ஆனாலும் கடைசிவரை காந்தியுடன் இருக்கிறார்
நேரு. இதைப் பற்றி சொல்ல வரும் பிர்லா
Birla said, " He ( Jawaharlalji ) could have caused a split by
resigning but he did not.... Jawaharlalji seems to be  like a typical
English democrat who takes defeat in a sporting spirit. He seems to be
out for giving expression to his idealogy, but he realizes that action
is impossible and so does not press for it"  என்று விமர்சிக்கிறார்.
நிறைய தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம்.
NEHRU AND BOST - Parallel lives
author : Rudrangshu Mukherjee.

Saturday, November 12, 2016

அப்பாவின் நினைவுகள்அப்பாவின் அரசியல் எனக்குப் பாடம் மட்டும் தான்"
மும்பையிலிருந்து செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்.
அவள் தனியாக மூன்றாம் ஏசியில். அவளுடன் ஆண்கள்
பயணிக்கிறார்கள். எதிரில் ஒரு வயதானவர். அவள் தான்
கொண்டு வந்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். .
கூடப்பயணிப்பவர்களுடன் உரையாடல் நடத்துவதை அவள் தவிர்க்கிறாள்.
எதிரில் இருந்தவர் போனில் உரையாடும் போது தமிழில் பேசுவதும் அவளுக்குத் தெரிந்த உறவுக்காரரின் பெயரைச் சொல்லி அவர் உடல்நலம் விசாரிப்பதும் அவள் காதுகளில் விழுகிறது. அவளால் அதற்குமேலும் 
அமைதியாக இருக்க முடியவில்லை. மெளனம் கலைகிறது. உரையாடல் வழி அவளைப் பற்றி அவர் விசாரிக்க விசாரிக்க அவள் விவரங்களைச் சொல்ல சொல்ல அவள் இன்னாரின் மகள் என்ற விவரத்தை அவர் அறிந்தவுடன் அவர் அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
எப்படிப்பட்ட மாமனிதரம்மா உன் அப்பா... என்று அவர் சொல்லும் போது அந்த மனிதரின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது. மும்பைக்கு பிழைக்க வந்தவர்களில் பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்தவர், பிள்ளைகளுக்கு
படிப்பதற்கு பணம் கட்ட வேண்டும் என்று அவர் வீட்டு வாசலைத் தட்டியவர் எவரும் வெறும் கையுடன் வந்ததில்லை ... அப்படி ஒரு
மனுஷனை அதன் பிறகு என் வாழ்நாளில் நான் சந்திக்கவே இல்லைமா"
அவர் சொல்ல சொல்ல அவள் மனம் கனக்கிறது.
(உடன் பயணித்தவர் மும்பையில் புகழ்ப்பெற்ற டாக்டர் மச்சிவேல் அவர்களின் அண்ணன், அவள் இதோ அந்த நினைவுகளை மீட்டிக்கொண்டு)
2 வயது வித்தியாசத்தில் 7 பிள்ளைகள்.. வரிசையாக. அதிலும் 6 பெண்கள்..
அவர் பெரிய வீடு வாங்கவோ ஏன் தான் ஆசைப்பட்ட படி ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கவில்லை! வாழ்க்கையை இப்படியும் வாழமுடியும் என்று வாழ்ந்துக் காட்டியவர்.... இன்று அவரின் நினைவு நாள்..(. 12 & 13 நவம் 1986)
"அப்பா... ஒரு இதிகாசத்தைப் போல வாழ்ந்திருக்கிறீர்கள்.
என் எழுத்துகளில் உங்களைப் பற்றி எழுத வரும்போதெல்லாம் அடுத்தப் புள்ளிக்கு நகர முடியாத அளவுக்கு கனமாகிவிடுகிறது.
என்னை இன்றும் அலைக்கழிக்கிறது உங்களின் அரசியலும் கடைசி நாட்களும். 
அப்பா... உங்கள் அரசியல் ... எனக்குப் பாடம் மட்டும்தாம்..
ஓடி ஓடி ... ரொம்பவும் சோர்ந்துப் போயிருக்கிறேன் அப்பா. 
நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு துளியை ...
எனக்குத் தருவீர்களா..?
(புகைப்படம்... அப்பாவின் மறைவுக்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து எங்கள் சொந்தவூர் பத்தமடையில் அப்பாவின் பெயரால் - பி.எஸ். வள்ளிநாயகம் - திமுக கொடிக்கம்பம் எழுப்பப்பட்டது ... திமுக திரு. ஸ்டாலின் அவர்கள் கொடி ஏற்றுகிறார்.. நன்றி அனைவருக்கும்.)

Tuesday, November 8, 2016

அன்று மொரார்ஜி இன்று மோடிஜி

Image result for indian 10000 rupee note image

நேற்றிரவின் பரபரப்பு..
இன்னும் முடியவில்லை.
மோடிஜி அறிவிச்சாலும் அறிவித்தார் ...
போன் அழைப்புகள் பயமுறுத்திவிட்டன.
என்னவோ லட்சக்கணக்கில் பணம் வீட்டில் இருக்கிறமாதிரிதான்
என் கணவர் ஒரு பில்-டப் கொடுத்தார் பாருங்கள்...
அடுக்கி வைத்த கபோர்ட் வார்ட் ரோப் எல்லாம் புரட்டிப்போட்டு எனக்கு ஏகப்பட்ட வேலையை வைத்திருக்கிறார். (அதற்கு ஒரு நாள் இருக்கு... அவர் வாங்கிக்கட்டிப்பாரு)
அதைவிடுங்கள்... இப்படியாக அவர் தேடி எடுத்ததில்
சேர்ந்த மொத்த தொகை 3,017...!!!! அவர் தொகையை கையில் வைத்துக்கொண்டு இன்னும் அதிகம் டென்ஷனாகிவிட்டார்!!!
காரணம் வெறும்17 ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?
இந்த 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கும் 3000 இன்னும் 2 நாட்களுக்கு அவரை ரொம்பவும் பயமுறுத்தும்.
இந்தப் பயமுறுத்தலை இன்னும் அதிகப்படுத்திவிட்டான்
என் புத்திரபாக்கியம். இரவு ரிக்‌ஷாவில் வந்திருக்கிறான். ரிக்‌ஷாக்காரர் 500 ரூ நோட்டை வாங்க மறுத்துவிட்டார். மோதிஜி அதிரடி செய்தியை அறியாமல் வாய்ச்சண்டை... கீழிருந்து இண்டர்காமில் அழைத்து சங்கர் ஒடி
நான் இரவில் விழித்து என் கிட்சன் லாக்கரில் தேடி எடுத்து எப்படியோ 220 ரூபாயைக் கொடுத்துவிட்டோம்.
விளைவு..?!!
வறுமைக்கோட்டுக்கும் கீழே இந்த இரு நாட்கள் நம் தேச
நலனுக்காக வாழ்ந்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டோம்.
****
மோடிஜி இதற்கான தயாரிப்புகளை 6 மாதமாக செய்திருக்கிறார்.எண்ணிக்கையில் கால்வாசியாக இருக்கும் 500 & 1000 ரூபாய் நோட்டுகளின்
மதிப்பு மொத்த பணமதிப்பில் 86%. இத்தனையும் மொத்தமாக வங்கி, போஸ்ட் ஆபிஸ் மூலமாக ரிசர்வ் வங்கி கைக்குப் போக வேண்டும்.
இதற்கிடையில் இந்த 6 மாதத்தில் 86% பண மதிப்புக்கு ஈடான ரூ 50, ரூ 100, ரூ 2000 மதிப்பு நோட்டுகள் அச்சிடும் பணி ரகசியமாக நடந்திருக்கிறது. இந்த ரகசியம் அறிந்தவர்கள் பிரதமர் மோதிஜி, நிதிமந்திரி அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி இரு மேலதிகாரிகள்
மட்டுமே என்று சொல்லப்படுகிறது. 
**
Image result for morarji desai and modi

1978ல் ஜனதா கட்சியின் ஆட்சி . மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார். அப்போது 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுகள் இப்படித்தான் கறுப்புபணத்தை
ஒழிக்கும் செயலாக அதிரடி நடவடிக்கை எடுத்தார்கள். கறுப்பு பணம் ஒழியவில்லை. இப்போது மீண்டும் அதே நடவடிக்கை. ஆனால் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் ரூ 2000 மதிப்புள்ள நோட்டில் "சிப்" பொருத்தப்பட்டிருக்கும்
என்றும் அதனால் சாட்டிலைட் மூலமாக அந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கவனிக்கப்படும் என்றும் எவரும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைக்க
முடியாது என்றும் சொல்லப்படுகிறது. புழக்கத்திற்கு வந்தப் பின் தான் இதைப் பற்றிய
முழுமையான விவரங்களை அறியமுடியும்.
**
7ஆம் தேதி சுபமூகூர்தநாள். அன்று நடந்த திருமணத்தில் வந்த மொய்ப்பணம் 500, 1000 ரூ நோட்டுகளாகவே இருக்க
அந்த திருமண வீட்டார் அலறி அடித்து என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். ! அவர்கள் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கிறார்கள்!
நேற்றிரவே தங்கம் விலை கிராமுக்கு ரூ 3800 ஆகி இருக்கிறது ! (unofficial report) (38000 for 10 gms).
ரியல் எஸ்டேட் விலையில் சரிவு ஏற்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலின் இருவேறு காட்சிகள்


தண்டி யாத்திரையில் காந்தியை கைப்பிடி பிடித்து உற்சாகத்துடன்
முன்னால் செல்லும் சிறுவன் கன்னுபாய் காந்தி. காந்தியின் பேரன்.
ராமதாஸ் காந்தியின் மகன். நேற்று மாலை (7/11/16) தன் 87 வது வயதில்
காலமாகிவிட்டார்.  அவர் அமெரிக்காவில் நாசாவில் வேலைப்பார்த்தவர்.
2014ல் இந்தியா திரும்பியபின் கஸ்தூரிபா ஆசிரமத்தில் தன் மனைவியுடன்
தங்கியிருந்தார். !ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன்
, மகள் இந்திராகாந்தியின் மகன்  ராஜீவ்காந்தியின் புதல்வன், ராகுல்காந்தியை தலைமை ஏற்க
அழைக்கிறது அகில இந்திய காங்கிரசு.....
ஆன்மிக அரசியலும் அதிகார அரசியலும் இப்படியாக தங்களை
அடையாளம் காட்டிக்கொள்கின்றன .


Thursday, November 3, 2016

நடக்கலாம் நம் சந்திப்பு.மீண்டும் சந்திப்பேன். மீண்டும் சந்திப்பேன்.
நாளையோ நாளை மறுநாளோ
உன் வானத்தில் விடிவெள்ளி முளைக்கும் பொழுதில்
நடக்கலாம் நம் சந்திப்பு.
கருக்கலில் பிச்சிப்பூ வாசனையில்
தோட்டத்தில் சரசரவென கடந்து செல்லும்
பாம்புகள் அறியாமல்
நடக்கலாம் நம் சந்திப்பு.
புகைவண்டி நிலையத்தில் எதிர் எதிர் திசையில்
அவரவர் பயணத்திற்காக காத்திருக்கும் பொழுதில்
நடக்கலாம் நம் சந்திப்பு.
சுவாசமே சுமையாக மூன்றாவது காலோடு
காத்திருக்கும் தருணத்தில்
நடக்கலாம் நம் சந்திப்பு.
எப்போது வேண்டுமானாலும்
நடக்கலாம் நம் சந்திப்பு.
விழித்திரை கிழிந்து பிம்பங்கள் சிதைந்து
எதுவும் வரையமுடியாத தூரிகையுடன் நீ
காற்றாக நுழைவேன்
திரைச்சீலைகள் விலக்கி முத்தமிடுவேன்
முதலும் கடைசியுமாக....
இப்படியும் நடக்கலாம் நம் சந்திப்பு
எப்படியும் நடக்கும் நம் சந்திப்பு.
எப்படியும் நடக்கும் நம் சந்திப்பு.

Wednesday, November 2, 2016

காந்தியின் ஆன்மீக அரசியல்

Image result for காந்தியைக் கடந்த காந்தியம்


காந்தி ஆன்மீகத்தை அரசியல் மயப்படுத்தியும் அரசியலை
ஆன்மீக வழிப்படுத்தியும் இணைப்புநிலை மதிப்பீடு
ஒன்றை உருவாக்கினார் என்றும் காந்தியைப் பொறுத்தவரை
ஆன்மீகமும் அரசியலும் பிரிக்க முடியாத இணைப்புகள்
என்றும்  காந்தியைக் கடந்த காந்தியம் - ஒரு பின் நவீனத்துவப்பார்வை
கட்டுரைகளில் பிரேம் அவர்கள் காந்தியின்  அரசியலை ஆன்மீக
அரசியலாக அடையாளப்படுத்துகிறார்.
காந்தியின் ஆன்மீக அரசியல் காந்தியை மட்டுமே மகாத்மாவாக
அடையாளம் காட்டியதை தவிர வேறு என்ன செய்தது ? . அந்த ஆன்மீக அரசியல் வளர்த்தெடுக்கப் பட்டதாகவோ அல்லது காந்தியின் ஆன்மீக அரசியல் குறித்து அவருக்கு அடுத்த நிலையில் இருந்த வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதோ ஒரு ஒப்பீட்டளவில் கூட பேசப்படவில்லை.
புனா ஒப்பந்தம் குறித்து பேச வரும்போது பிரேம் அவர்கள்
"காந்தி அப்போது இந்து-சாதி ஆதிக்கத்தின் அரசியல் சதிக்கு
தன்னையறியாமல் துணை புரியும் நிலைப்பாட்டினை எடுத்தார்"
(பக் 213) (கவனிக்க.. தன்னையறியாமல் என்ற சொல்வழி புலப்படும்
காந்தியின் உளவியல் ...)
என்று அடையாளம் காட்டுகிறார்.
இந்த ஒற்றை அடையாளத்தில்
காந்தியின் ஆன்மீக அரசியல்
 சட சடவென சரிந்து விழுகிறது...
நன்றி பிரேம்.

ஒரு கோப்பையின் விளிம்பில்


 " கொஞ்ச நேரத்திற்கு கவித்துவம், இரசனை,
கவிதை, அழகியல், நுண் அழகியல்
என்பதையெல்லாம் பேசி உரை நிகழ்த்துவதை
நிறுத்திவிட்டு மெளன அஞ்சலி செலுத்தவும் " *

தமிழ் இலக்கியப்பரப்பில் எதிர்ப்பிலக்கியம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.
கலை இலக்கிய வடிவங்கள் பெரும்பாலும் கலகக்குரலின்
வெளிப்பாடுகள் தான்.  அதிகாரத்திற்கு எதிராக தன் ஆயுதங்களுடன்
களத்தில் நிற்பவன் கலைஞன், கவிஞன்.  பொதுஜன அபிப்பிராயங்களுடன்  அவன் ஒத்துப்போவதில்லை. பொதுஜனத்திற்கு விருப்பமானதை மட்டுமே கொடுக்கும் வியாபர உத்திகள் அறியாதவன் அவன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாட்டார் கலை இலக்கிய வடிவங்கள்
பத்திரிகையோ தொலைக்காட்சியோ கணினியோ இல்லாத
அக்காலத்தில் சமூக தளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த
வல்லவையாக இருந்திருக்கின்றன.
சித்தர்களின் பாடல்கள்  எதிர்ப்பிலக்கியம் தான். சித்தர்கள் இறை நம்பிக்கையை முற்றாக மறுக்கவில்லை. நாத்திகம் பேசவில்லை.
ஆன்மிக தளத்தில் சித்தர்களின் கலகக்குரல் ஒரு முக்கியமான
புரட்சியின் அம்சமாகும்.

பெண்ணிய தளத்தில் இந்திய வரலாற்றில் ஆணுக்கும் ஆண் ஏற்படுத்திய அதிகார கட்டமைப்பிற்கும் எதிராகக் குரல் கொடுத்த
புத்த பிக்குனிகள் பாலி மொழியில் எழுதி இருக்கும் "தேரி கதா "
எதிர்ப்பிலக்கியமாகும்.
சிலப்பதிகாரம் பேசும் அறமும் :அறம் பிழைத்தவன் நாட்டை ஆளும்
அரசனாகவே இருந்தாலும் ஒரு சாதாரண பெண்ணால் அவனை
எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற கருத்தை முன்வைக்கும்
எதிர்ப்பிலக்கியம் ஆகும். இப்படியாக எதிர்ப்பிலக்கியத்திற்கு
வரலாறு நெடுகிலும் ஒரு சரித்திரம் உண்டு. ஆனால் எதிர்ப்பிலக்கியத்திற்கு என்று தனிப்பட்ட வடிவமோ மரபோ இல்லை.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எதிர்ப்பிலக்கியம் தனக்கான
வடிவத்தை கண்டடைகிறது, அந்த வடிவத்தின் ஊடாக தன்னைப்
புதுப்பித்துக்கொள்கிறது.

கடந்த கால எதிர்ப்பு இலக்கியத்தின் தீட்டிய கூர்முனை எதை நோக்கி
தீட்டப்பட்டிருக்கிறது, யாருக்கு எதிராக/ எதற்கு எதிராக என்ற
அடையாளங்கள் ஓரளவு வெளிப்படையாக தெரிந்தன.
ஆனால் இன்றைய நவீன யுகத்தில் , மக்களாட்சியின் மகத்துவங்கள்
வாழ்ந்து கொ ண்டிருக்கும் காலத்தில் (!) , எதிர்ப்பிலக்கியம்
தனிப்பட்ட நபரையோ தனிப்பட்ட ஆட்சி அதிகாரத்தையோ
எதிர்க்க முடியாத நிலை. அரூபமாக மக்கள் கூட்டத்தில் மக்களில்
ஒருவனாக கலந்து கரைந்து நிற்கும்  அதிகாரப்புள்ளியை அடையாளம்
காண்பதும் அதை எதிர்ப்பதுமாக இரண்டையும் ஒரே நேரத்தில்
எதிர்ப்பிலக்கியம் செய்கிறது. அடையாளம் காண்பதில் அரசியல்,
சாதி மதம் என்று பல பின்னூட்டங்கள் தானாகவே வந்து சேர்ந்து
கொள்கின்றன.
இப்பின்னணியில் மலேசிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும்
தமிழரான - மலேசிய தமிழரான கே.பாலமுருகனின்
"தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் " கவிதைத் தொகுப்பு
என் கவனத்திற்கு வந்தது.
தொலைக்காட்சியில் காட்டப்படும் மலேசியத் தமிழர்கள், சுற்றுலா
பயணியாக மலேசியாவில் சந்திக்கும் பளபளப்பான  தோற்றமும்
மிடுக்கும் மலேசியா மண்ணில் வாழ்க்கை சுகமானது என்ற ஒரு
பிம்பத்தை கட்டமைத்திருக்கிறது. மலேசியாவில் பாலாறும் தேனாறும்
பாய்ந்து வளம் கொழிக்கும் வாழ்க்கை வாழ்கிறார்கள் மக்கள் என்ற
கருத்தை மிகவும் கவனமாக ஊடகங்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து காட்சிப் படுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள்.
இச்சூழலில் இந்த வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கும்
பாலமுருகன் தன் குரலை உரக்கவே பதிவு செய்திருக்கிறார்.
வல்லினம் ம.நவீன் சொல்வது போல "அதிகாரத்தோடு ஒத்துப்போவது, அதிகாரத்திடம் சம்மரசம் செய்து கொள்வது, அதிகாரத்தின் முன் மெளனம் சாதிப்பது, அதிகாரம் வீசும்
எச்சில் இலைக்காக வாலாட்டி நிற்பது எனத் தமிழ்ச்சூழலில்
பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட பல எழுத்தாளர்களின் வளைந்த
முதுகெலும்புகளுக்கு மத்தியில் படைப்பிலக்கியம் மூலம்
பாலமுருகன் தனது எதிர்க்குரலை மீண்டும் மீண்டும் பதிவு
செய்வதே உவப்பான சூழலை உருவாக்கி இருக்கிறது " எனலாம்.
"அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 
ஒரு கவிதைக்குள் நீங்கள் நுழைந்திருக்கிறீர்கள்" என்று
பாலமுருகனே  தன் கவிதைகள் குறித்து அறிமுகம் செய்து
கொள்கிறார். அவர் வாழும் சமூகத்திற்கு அவசரமாக அறுவை
சிகிச்சை தேவை என்பதால் அவர் கவிதைகள் தன்னை அறுவை
சிகிச்சைக்குட்படுத்திக் கொள்கின்றன.
ஆண்களின் கழிப்பறை கவிதையில்
நடைமுறை காட்சியை எள்ளலுடன் விவரித்து வரும்வரை
அக்கவிதை ஆண்களின் கழிப்பறையாக மட்டுமே இருக்கிறது.
ஆனால்,
"நீங்கள் செலுத்தியது வெறும் 30  சென்
என்பதை மறக்க வேண்டாம்.
அதையும் மீறி கவிதைக்குள் எதையாவது தேடினால்"
என்று எச்சரிகை விடும்போது கழிவறை இலக்கிய பரப்பாக
இலக்கிய மேடையாக இலக்கியத்திற்கு போர்த்தப்பட்டிருக்கும்
பட்டுப்பீதாம்பரமாக விரிகிறது. இந்தத் துர்நாற்றமே நம் தேசத்தின் 
காற்று  மற்றும் ஊனமுற்ற பூச்சிகளின் தற்கொலை * என்ற தலைப்புகளில்  எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில்
கழிவறை தலைவர்களின் முகமாக, ஆட்சி அதிகாரமாக, கட்சி
அரசியலாக தன் வரலாற்றை விரிக்கிறது.

"புத்தாண்டு பரிசாக அனைவருக்கும்
பூட்டுகள் தரப்பட்டன.
எல்லார் உதடுகளிலும்
இரு பெரிய ஓட்டைகள்
இலவசமாய்ப் போடப்பட்டன..
....
.....
பூட்டு மிகவும் தரமானது
எத்தனை தலைமுறைக்கும் தாங்கும்
பூட்டு மறுபயனீடு மிக்கது. 
செத்தப் பிணத்திலிருந்து கழற்றி
அடுத்தச் சந்ததியினருக்கும் பூட்டலாம்
பூட்டு மிகவும் அழகானது
கண்ணாடியில் பார்க்கும் சில தருணங்களில்
அறிவைக் கவரக்கூடும்.
பூட்டு உத்திரவாதம் நிறைந்தது.."

Image result for கே பாலமுருகன்

மலேசிய தமிழ் இலக்கியத்தின் அரசியல் பக்கத்தை எழுதியதில்
பாலமுருகனின்" தூக்கிலிடப்ப்பட்ட நாக்குகள் "
காலம் கடந்தும் என்றும்  பேசப்படும்.

Monday, October 24, 2016

கற்பிதங்களும் கவிதாசரணும்
அலர் பற்றிய முதல் குறிப்பு வாய்மொழியாய் என்னுடன்
பகிர்ந்து கொண்ட அத்தருணம் ...
நான் இதுவரை அறியாத
கவிதாசரணின் இதிகாசமாய் விரிந்து இன்று "அலர் எனும்
மகா உன்னதமாய் என் முன் ...
அலர் பற்றி கவிதாசரண் பேச ஆரம்பித்தவுடன் வழக்கத்திற்கு
மாறாக நான் அமைதியாக இருந்தேன். அவர் சொல்ல சொல்ல
கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் கண்களை ஊடுருவிப்
பார்த்துக்கொண்டிருந்தேன். மொழிகளின் கற்பிதங்கள் மறைக்கும்
கதைகளை கண்கள் எப்போதும் மறைக்காமல் சொல்லிவிடும் தானே.!
அவர் த்ன்னை மறந்து தன் அடிமனதில் பல
ஆண்டுகள் திறக்காத கதவுகளைத் திறந்து கொண்டிருக்கிறார்.
திறக்கட்டுமே.. இதில் மண்டி கிடக்கும் இருள் விலகட்டுமே.
இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ரகசியச்சாவிகளைப்
பத்திரப்படுத்துவது.?
இப்போது அவரால் திறக்கமுடியவில்லை என்றால் இனி
எப்போதும் அது சாத்தியப்படாது என்ற சின்ன புரிதல்
மட்டுமே  அந்த விசாலமான அறையில்
எங்கள் இருவருடனும் இருந்தது. அத்தருணம் கனமானப்பொழுதாக
நீண்டது . ஓர் அசிரீரி போல ஒலித்த அவர் குரல்,
அப்போது அந்தக் கண்களில் வெளிப்பட்ட கனவுகள்,
அந்த அறை எங்கும் வியாபித்தது.
இந்தக் கவிதாசரணை நான் அறிந்திருக்கவில்லை
என்ற எண்ணம் வந்தவுடன் அவ்விடத்தில் நானொரு
மூன்றாம் மனுஷியாக உட்கார்ந்திருந்தேன்.
அதை அவரும் உணர்ந்திருந்தார். அதைத்தான் அவர்

என்னிடம் எந்த தீர்வுகளையும் எதிர்ப்பார்த்து
உரையாடல் ந்டத்தவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்.
"அண்மையில் புதியமாதவி சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்ததில்
அலர் பற்றிய தகவலைப் பரிமாறிக்கொண்டேன்.சற்றுக் கூடுதலாகப்
பரிமாறிக்கொண்டதாக என்னுள் ஓர் எண்ணம்.அவர் எனக்கு புதிய வழி
சொல்வார் என்பதைவிடவும் யாரோடாவது பேசினால் மனம் சமாதானம்
அடையும் அல்லவா? அந்த சமாதானத்துக்கு மாதவி நம்பகமானவராய்த்
தெரிகிறார் என்பதாலும் தான் " (பக் . 68)


... அலர் ஒரு கற்பிதமா?
கனவா? மாயையா? பல ஆண்டுகள் அவருக்குள் கொஞ்சம்
கொஞ்சமாக செதுக்கப்பட்ட சிற்பம் என்பது அவருடைய புத்தக
வாசிப்பு அனுபவங்களின் ஊடாக நான் வந்தடையும்
புள்ளி. .
(அதிலும் குறிப்பாக "தெய்வம் தெளிமின்" "அடங்கல்"
:"புழுதிக்கோலம் " புத்தகங்கள் )
.

நான் அறிந்த அம்மா திருமதி கவிதாசரண் அல்ல
அலர் கவிதாசரண்.
திருமதி கவிதாசரண் என்ற ஒற்றை
அடையாளத்திற்குள் அலர் கவிதாசரணை அடக்கி
வைத்துவிடமுடியாது. அலர் வேறு கவிதாசரண் வேறல்ல.
பிரிந்து வாழ்ந்திருந்தாலும் சேர்ந்தே சுவாசித்த
ஈருடலாய்  அலரும் கவிதாசரணும்.

ஐம்பூதங்களின் சேர்க்கையே உயிர் என்று சொல்கிறது
அறிவியல். சுவாசிக்கும் காற்றாய் கண்ணுக்குத் தெரியாத
வேர்களைத் தாங்கும் நிலமாய், பச்சையம் வற்றாமல்
வளர்த்து ஆளாக்கும் நீராய், ஆண் பெண் சமூக உறவுகளின்
வட்டத்திற்குள் அடைபடாத ஆகாயமாய்... இறுதியில்..
கடந்த காலத்தின் நிகழ்காலத்தில் கறைகளை தன்
மவுனத்தாலும் பொறுமையாலும் எரித்துப் பொசுக்கி
சாம்பாலாக்கும் நெருப்பாய் ...அந்தச் சாம்பலையே உரமாக்கி
கவிதாசரணை விசுவரூபமாக்கும் சக்தியாய்..
இப்படியாக ஜீவனைப்  பிரசவிக்கும் ஐம்பூதமாய்  அலர்
. கவிதாசரணின் சக்தியாய் அலர் ..
அலர் கவிதாசரண்.

இதழே ஓர் இயக்கமாய் வாழ்ந்த என் ஆசான் கவிதாசரண் அவர்களின்
இயங்குசக்தி அலர் என்பதன் எழுத்து ஆவணமாய் இப்புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும்..புத்தகம் என் கைக்கு வந்தப் பின் இந்த 5 நாட்களுக்குள்
3 தடவைகளுக்கும் அதிகமாக வாசித்தாகிவிட்டது.
மகாபாரத இதிகாசம் போல கதைப் பாத்திரங்கள் ஒன்றிலிருந்து
ஒன்றாக விரிகிறது. விரிய விரிய வாழ்க்கை சரித்திரத்தின்
ஆழம் பெண்ணுலகின் ஆழியாய் என்னைத் தனக்குள்
மூச்சுத்திணற ,முக்கி எடுக்கிறது.
ஆனையம்மாளும் ஜலகண்டேஸ்வரியும் அலரும் திருமதி கவிதாசரணும்
நல்லம்மாவும் நீமாவும் சோனாவும் இசையும் ...
ஏன் இந்த உன்னதப்பக்கங்களில் சிறிய கரும்புள்ளியாக
உருவம் தெரியாமல் ... கவிதாசரணுடன் வாழ்ந்து அவர் குழந்தைகளைப்
பெற்றெடுத்த பெண்ணும்... ஒவ்வொரு பெண்ணும் கவிதாசரண்
என்ற புள்ளியைச் சுற்றி வருகிறார்கள்.
இந்தப் பெண்களுக்கு கவிதாசரண் வெறும் ஆண்மகனாக மட்டுமே
இருந்திருந்தால் இக்கதை பிற புனைவுகள் போல
பத்தில் ஒன்றாக படித்துவிட்டு கடந்து சென்றிருக்கும்
புதினமாகி இருக்கும் . .
ஆனால் இந்தப் பெண்களுக்கு கவிதாசரண் மகாபிரபுவாக
ஆகச்சிறந்த தலைவனாகவே இருக்கிறார்.
இப்பெண்களின் கற்பிதங்கள் கவிதாசரணின் வாழ்க்கையில்
மேடு பள்ளங்களை உருவாக்கிக்கொண்டே இருக்க்கின்றன..
அனைவரும் கவிதாசரண் என்ற ஆளுமையை கண்ணனைக்
கொண்டாடும் கோபியர்கள் போல கொண்டாடிக் கொண்டாடி
ஓர் இதிகாச தலைவனாக்கி விடுகிறார்கள்.
இப்பெண்களின கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் கவிதாசரணின்
பிம்பத்தை கட்டமைப்பதில் ஒவ்வொரு செங்கலாக அடுக்கப்பட்டு
உன்னதங்களை நோக்கி உயரே எழும்பி நிற்கின்றன.
இந்தக் கோபுரத்தின் கருவறையாக இருக்கும் ஆனையம்மாள்
கருவறையின் சிலைக்கு உயிரூட்டுகிறாள்.
கவிதாசரணுக்காகவே
பெற்று வளர்த்துவிட்ட நேர்த்திக்கடனாய் எப்போதோ ஒலித்த
ஜலகண்டேஸ்வரியின் வாக்கை சத்தியவாக்காக ஆக்கும்
பிரயாசையில் அலர் எனற இதிகாச தலைவி உருவாக்கப்படுகிறாள்.

பார்வை இழந்தவனுக்கு தன்னை மணமுடித்துவிட்டார்கள் என்ற
ஒரு மனநிலையில் தன் கண்களைக் கட்டிக்கொண்ட காந்தாரிதேவியை
அரண்மனையின் அதிகாரபீடங்கள் ... கணவன் காணாத புற உலகை
காந்தாரியும் காண விரும்பவில்லை என்ற கற்பிதத்தை
அவள் மீது ஏற்றிவிடுகிறார்கள். அந்தக் கற்பிதத்தை
அரண்மனைப் பெண்கள் கொண்டாடுகிறார்கள். இதுவே
காந்தாரியின் தலையில் முள்கிரீடமாய் ஏறி அமர்நது
கொள்கிறது  அவளால் கடைசிவரை
அவர்கள் கற்பித்த கற்பிதங்களிலிருந்து வெளியில் வர முடியவில்லை.

அலர் மீதும் சுமத்தப்பட்ட கற்பிதங்கள் அலரை ஆகச்சிறந்த
உன்னதமாக்கி இருக்கலாம். ஆனால் ஆசாபாசங்களை அனுபவித்த
ஒரு சாதாரண மனுஷியாக வாழவிடவில்ல. சாதாரணங்கள்
அவளீடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. ஜலகண்டேஸ்வரி
ஜானகிராமனின் "அம்மா வந்தாள் " புதினத்தின் அம்மாவைப் போலவே
தனக்கான பாவ விமோசனம் தேடி அலைகிறாள்.
ஆனையம்மாளிடம்
". தன் மகளைத் தொடாதே .. அவள் தோஷம் உனக்கு
வேண்டாம் என்று சொல்லும் ஜலகண்டேஷ்வரி "மகளின் குழந்தையை
உத்தமியாக்கி என் பிள்ளைக்கு நேர்ந்துவிடு " என்று வேண்டுகிறாள்.
காவிரியும் கரைக்கமுடியாத தன் பாவத்தை இந்த நேர்த்திக்கடன்
செய்து கரைத்துவிட நினைக்கும் பெண்ணின் கண்ணீர்
இந்த நேர்த்திக்கடன். ஒருவகையில் சொல்லப்போனால்
ஜலகண்டேஷ்வரிககு இந்த நேர்த்திக்கடன் அவளாகவே கற்பித்துக்
கொண்ட ஒரு பாவவிமோசனம்.

தன் மகள் உன மகனுக்காகவே ஒரு பெண்மகவைப் பெற்றுக்கொடுபபாள்.
அவள்   ஒரு நேர்த்திக்கடன் என்ற கற்பிதம்
 அலர் ஜனிப்பதற்கு முன்பே அலர் மீது சுமத்தப்படுகிறது.
அந்தக் கற்பிதத்தை நிஜமாக்கும் போராட்டத்தில் அலர்
மகா உன்னதமாகிவிடுறாள்  கவிதாசரண் எழுத்துகளில்.
.
 சிலப்பதிகாரத்தின் மாதவி தான் பெற்றெடுத்த
மணிமேகலையை இளவரசனின்  காதலை உணர்ந்தும் விலக்கி
வைக்கும் துறவை எப்படி தன் ம்கள் மீது சுமத்தி வைத்திருந்தாளோ
அப்படியே ஈஸ்வரியும் தன் மக்ள் வழி பேத்தி மீது சுமத்தி
வைத்திருக்கிறாள். மாதவியோ காதலை விலக்க் வைத்து
அமுதசுரபியுடன் தன் மகளை அலையவிட்டாள்.
ஜலகண்டேஸ்வரியோ காதலையோ ஓர் அமுதசுரபியாக
தன் பேத்தியின் கைகளில் கொடுத்து காதலுககு,
ஆண்- பெண் உறவுக்கு ஓரு இதிகாசத்தை படைத்துவிடுகிறாள்.
ஆனால் காதலை விலக்கி வைததவளும் சரி,
காதலையே அமுதசுரபியாக சுமந்தவளும் சரி,
மனுஷியாக ... வாழ்வில்லை.
நிஜங்களில் வாழ்வதைவிட கற்பிதங்களில் வாழ்வது
இவர்களுக்கு சுகமான வலியாகவே இருந்துவிடுகிறது.

"அம்மா... , நீ உண்மை என்பதைவிடவும் கற்பிதம் என்னும்
போது பேரழகாத் தெரியிறே. உண்மையை விடக் கற்பிதம் தான்
உண்மையாய் இருப்பதின் உயர்ந்தபட்சத் தகுதியோ என்னவோ..
எனக்கே பல சமயங்கள்ல நான் பாட்டுக்குப் பேசிண்டே
போகும் போது அலர் என்னோட கற்பிதமாத்தான்
பேசறாளோன்னு பிரமிப்பு ஏற்படுதுப்பா..."
(பக்.. 48)

கற்பிதங்கள் கட்டமைக்கும் ஆளுமைக்கு எல்லா
கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை
என்றாலும் சில அடிப்படை கேள்விகளைப் புறம் தள்ளிவிட்டு
உன்னதங்களைக் கொண்டாடுவது சாத்தியப்படவில்லை.
அதனால் மாணிக்கவாசகம் என்ற பெயரில் கவிதாசரணுக்கும்
தேவைப்பட்டிருக்கிறது
அலர் - இன்னொரு வெளிச்சம் " என்ற இணைப்பு.

இலையுதிர்காலத்தில் இளைப்பாறும் தருணத்தில் அலர்
என்ற ஆலமரத்தடியில் காற்றில் அசைந்தாடும்
கிளைகளின் ஊஞ்சலில் ஆடுகிறது கவிதாசரணின்
காலம்.
ஆகப்பேரழகு மிக்க அம்மா தன் ஆசைக்கனவுகளை எல்லாம்
பாலை மணற்குறுணையாய் பதியமிட்டுவிட்டு,
கட்டக்கடைசியில் வாழ்வின் தீராமையாக
" என் கடைசிமூச்சு உன் மடியில் தான் டா " என்று
அப்பாவை வேண்டி பரிதவிப்பதாக மாணிக்கவாசகம்
சொல்கிறார். (பக் 145)
. ஆனால் அலரின் கிளைகளில் கூடுகட்டவோ
நிரந்தரமாக தங்கிவிடவோ நிழலிலொரு  கயிற்றுக்கட்டிலில்
துயிலவோ மறுக்கிறது கவிதாசரண் என்ற ஆளுமை.
ஒரு வகையில் அந்த ஆளுமைதான் அலர் என்ற
பெண்ணை ஒரு சக மனுஷியாக வாழ்விடமால்
தெய்வீகப்பேயாக அலைய விட்டிருக்கிறது.
..
" நான் உன் அம்மா கூடவே இருந்திடலாம்டா. அது பெரிய
விஷயமே இல்ல. ஆனா அப்படி இருந்துட்டா, நான் ஒரு
தூசு மாதிரி அற்பமா தாழ்ந்து போயிடுவனோன்னு பயமா
இருக்கு. அப்படியொரு தன்னகங்காரத்தை அம்மாவுக்கு எதிரா,
அம்மாவை மீறி அவளே எங்கிட்ட விதைச்சிருக்காம்மா.
அதை இப்பத்தான் நான் உணர்றேன்... அம்மாவும் நானும்
ஒன்னுங்கைறதெல்லாம் அதுக்கும் மேலதாம்மா. அப்படி
ஒன்னு நடந்திட்டா , அம்மாவுக்கு அது எவ்வளவு
பெரிய வீழ்ச்சி!"  (பக் 148)

அவரே இசையிடம் சொல்லும் இக்காரணம் அலரின்
கற்பிதங்களை நிஜமாக்கும் கவிதாசரணின் விசித்திரமான
வாழ்க்கை.. கற்பிதங்கள் விசித்திரமானவை மட்டுமல்ல,
பல தருணங்களில் கற்பிதங்களே நிஜ வாழ்க்கையைத்'
தீர்மானிப்பதும் ஆட்டுவிக்கும் சக்தியாக இருப்பதும்
அலைக்கழிப்பதும் தொடர்கிறது.

இதையே அலரிம் பார்வையில் சொல்லப்போனால்,

"அவருக்குள்ள ஆற்றாமை அல்லது அதிதீவிரம் என்னன்னா,
அவரு நல்ல கனவு காண்றாரு. நல்லா கற்பனை பண்றாரு.
ரொம்ப நல்லா எழுதி தொலைக்கிறாரு. அதுக்கும் மேலே
தான் காண்ற கனவெல்லாம் நிஜம்னு நம்பறாரு.
கற்பிதத்தை எல்லாம் அற்புதம்னு பிரமிக்கிறாரு.
நாம அழுது புலம்பறதை எல்லாம் தன் மகாகாவியத்தோட
பிரம்மாண்டம்னு கூத்தாடுறாரு.."

அலர் எனும் மகா உன்னதம் ... கூத்தாடுகிறது
மலைக்கோட்டைகள் அதிர்கின்றன.
எங்கோ ஒலிக்கிறது... இன்னும்

கால்டுவெல்லின் பறை ஓசை.