Sunday, February 28, 2021

Ever green books

 கல்கியின் பொன்னியின் செல்வன் சலுகைவிலையில் கிடைத்த தாக சொன்னார் அந்தப் பெண். அதனால் வாங்கிவந்ததாகவும் சொன்னார். 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவர் இன்னும் அப்புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் புத்தகப்பிரியர்கள்! பாவம்.. பொன்னியின் செல்வன். 

கல்கியை வாசிக்க வேண்டும் என்றால் பொன்.செ. பக்க அளவு பயமுறுத்தலாம்.. அதனால் சிவகாமியின் சபதம் வாங்குவது நல்லது.. 

சிறுகதைை என்று வந்துவிட்டால் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கு.பா.ரா , லா..ச.ரா..எப்போதும் வாசிக்கலாம். 

மீசைை என்பது மயிறு.. ஆதவன் தீட்சண்யா.. ரொம்பவும் வித்தியாசமானது. 

ஜெயமோகன் கொரொனா காலத்தில் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வந்துவிட்டால் வாங்கிவிடலாம். 

யமுனாா ராஜேந்திரனின் மொழியாக்க கவிதைகளும் வாசிப்பின் புதிய வாசலைத் திறக்கும். 

(ஆ.தீ, ஜெ.மோ, ய.ரா… அடுத்தடுத்து எழுதியதற்கு எந்தக் காரணமும் இல்ல. அப்படி வந்திடுச்சி…ப்ளீஸ் நம்புங்க) 

தமிழ்் ஸ்டுடியோ இதழ்கள் நவீன சினிமாவைத் தேடும் வாசகனை ஏமாற்றாது. 

 “ உயிர் எழுத்து “ இதழ் மீண்டும் ஆரம்பித்திருப்பதாக சுதிர் செந்திலின் முக நூல் பக்கம் சொல்கிறது. தமிழ் இதழ்களில் உயிர் எழுத்து வரவேற்கப்பட வேண்டியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. (உயிர் எழுத்து பழைய இதழ்கள் மொத்தமாக தோழர் மதி கண்ணன் இல்லத்தில் தங்கி இருக்கும் போது வாசித்தேன்.) 

கொஞ்சம்் தத்துவ விசாரணையும் தேடலும் இருப்பவர்கள் “மிர்தாதின் புத்தகம்” – மிகெய்ல் நைமி எழுதியது. “இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்” என்று ஓஷோ சொல்வது முழுக்க உண்மை. PDF கிடைக்கிறது என்றாலும் கூட புத்தகமாக நம்முடம் மிர்தாத் பயணிக்கும் அனுபவம் இனிது. 

மொழியாக்க நாவலில் இதிகாசங்களை விரும்பி வாசிப்பவர்களுக்கு எப்போதுமே “பருவம்” நாவல் தாம் . கன்னட த்தில் பைரப்பா எழுதியது. பாவண்ணன் தமிழாக்கம். 

இன்னொருபுதினம் “அக்னி நதி” உருது மொழியில் குர் அதுல் ஜன் ஹைதர் எழுதியது. தமிழாக்கம் செளரி. . பவுத்தம். அத்வைதம் துவைதம், சூஃபி பவுத்தம் சமூகத்தில் பரவிய காலத்தின் கதையாக விரிகிறது. இப்படி எல்லாம் எழுதமுடியுமா என்று வாசித்துவிட்டு நான் பிரமித்த நாவல். 

விமர்சனக்கட்டுரையில்் ராஜ்கெளதமன் எழுதிய “சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்” . ஆனால் சுந்தர ராமசாமியை தலையில் வைத்துக் கொண்டாடும் வாசகனுக்கு இப்புத்தகம் அவ்வளவு உவப்பானதாக இருக்காது. (இன்றைக்கு இவ்வளவுதான் நினைவில் வந்த்துச்சு.. தொடரலாம்) 

 #chennaibookfair2021 

#MyReadings_puthiyamaadhavi

Friday, February 26, 2021

இந்திய அரசியலில் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு

 https://youtu.be/ToWZUv6P7Q0

இந்திய அரசியலில் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு.

முப்பா கூட்டம் 92/ பொழிவு 19

Wednesday, February 24, 2021

திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு

 

 

திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ரா. பேட்டி                திராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு தொடர்ந்து

இலக்கிய மேதாவிகளால் இருட்டடிக்கப்படுகிறது. அப்படியே யாராவது

திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு என்று பேச ஆரம்பித்தால்

அப்படி பேசுபவரின் கலை இலக்கியப் பங்களிப்பையே கேள்விக்குட்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் இன்றும்

வாய்த்திறக்காமல் மவுனமாக இப்பக்கங்களைப் புரட்டிவிடுகிறார்கள்.

இதற்கான காரணங்களை மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின்   நேர்காணல் மிகத் தெளிவாக முன்வைக்கிறது. கி.ராவும் தன் மவுனத்திற்கான காரணத்தை ஒற்றைவரியில் சொல்லிச் சென்றிருப்பதும் இன்னும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்து பத்திரிகையிலிருந்து சம்ஸ் கேள்வி:

(மாபெரும் தமிழ்க்கனவு.. பக். 270)

தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப் புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன. நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும் இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால் தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும் இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல. தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது. நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம் இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால், இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது. திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது. இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கி.ராவின் பதில்:

சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க, அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு. அது மணிக்கொடிஆட்கள்கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.

மேலும் இதே நேர்காணலின் இறுதியில் கிராவின் வாக்குமூலமாக வெளிவரும் சொற்கள் …” எங்களால மணிக்கொடிபக்கமும் போக முடியல, ‘திராவிட நாடுபக்கமும் போக முடியல. ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு. …… நாம இதை ரெண்டையுமே சொல்லக்கூடிய நிலையில இல்லை. சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!...”

                காலம் இப்படித்தான் இருக்கிறது என்று கடந்து செல்ல முடியாது. கலை இலக்கியத்தின் மீதான சாதி ஆதிக்கத்தை ஒழித்து இலக்கியப்பிதாமகன்களின் சாதிய

இலக்கியப்பட்டியலைக் கிழித்து அதில் அப்பட்டமாக தெரியும் சாதி முகத்தை அடையாளம்

காணும் அறிவை அவர்களின் நுண்ணரசியலை தமிழர்களுக்கு கொடுத்ததில் பெரும்பங்காற்றி இருப்பது திராவிட இயக்கத்தின் பங்களிப்பு தான்.

இலக்கியமும் வாசிப்பும் சில சாதியினருக்கானவையாக இருந்ததை மாற்றி அமைத்து

இன்று திராவிட இயக்க்த்தின் மீது ஒவ்வாமையைக் காட்டும் இலக்கியங்களையும்

வாசிக்கும் வாசகர் பரப்பை உருவாக்கியதும் திராவிட இயக்கமே.  இலக்கியநோக்கில் பல மாறுதல்கள் சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் உருவானவை. . பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை எழுத்துலகில் பெருகியது.

சற்றொப்ப 400 மாத வார நாளிதழ்களால் திராவிட இயக்கம் வளர்த்த து அரசியல் மட்டுமல்ல.

அதனூடாக வாசிப்பும் வாசகப்பரப்பும் வளர்த்தெடுக்கப்பட்டதை வசதியாக மறந்துவிடுகிறோம்.

              இருபதாம் நூற்றாண்டில் தமிழின் தொன்மையை வலியுறுத்தியவர்கள்

இரு பிரிவினராக இருந்தார்கள் . ஒருசாரார் கடவுள் மறுப்புக்கொள்கையை முன்வைத்த தந்தை பெரியார் வழியைப் பின்பற்றினார்கள். இன்னொரு சாரார் தமிழன் இந்துவல்ல, அவன் சைவ சித்தாந்த கொள்கை உடையவன் என்றார்கள்.  பார்ப்பனரல்லாத தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சைவ சித்தாந்தத்தை முன்வைத்தவர்களாக இருக்கிறார்கள். இதில் திராவிடமும் சைவ சித்தாந்தமும் கலந்தகலவையாக இருந்தவர் திராவிட இயக்க முன்னோடி , சைவத்தமிழ் ஆய்வாளர், பேராசிரியர்  -பெ. சுந்தரம் பிள்ளை. இவர் எழுதியதுதான்நீராருங்கடலுடுத்த ..” தமிழ்த்தாய் வாழ்த்து . முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை எனலாம்.

 

            ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக

வேத இந்தியா முன்னிறுத்தப்பட்டது. அதாவது வெள்ளையரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக வேத இந்தியாவின் கலாச்சாரமும் மேன்மையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதி போன்றவர்கள் கொண்டாடும் ஆரியவேதம், ஆரியதேசம்  இந்தவகைப்பட்டதுதான். ஆனால் அறிஞர் அண்ணா இந்த திசையை தன் இயக்கத்தின் ஆணிவேராக மிகச்சரியாக அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தியா என்ற ஒரு தேசம் பிறப்பதற்கு முன்பே தமிழர்களுக்கான தேசமும் தமிழ்த்தேச அரசியலும் தமிழ் மண்ணில் இருந்தது என்பதை 2000 வருடத்திற்கு முந்திய சங்க இலக்கியத்திலிருந்தும் மற்றும் இடைக்கால தமிழ்க் காவியங்களிலிருந்தும் எடுத்துக்கொண்டார். தமிழனின்

சங்க காலத்தைப் பொற்காலமாகவும் தமிழ் மொழியையும் இனத்தையும் அப்பொற்காலத்தின் அடையாளமாகவும் காட்டியதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் உலகத்தில் ஒரு புரட்சியை மிக எளிதாக ஏற்படுத்தினார்.

இந்தப் புரட்சிவிதைகள் காற்றில் கலந்து தமிழ் இலக்கியவெளியில்

பல்வேறு வண்ணங்களாக வெளிப்பட்டன.

 

            வானம்பாடி இயக்கத்தினராக-மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.

பெண்ணிய பெருவெளியில் பெரும்வெடிப்பை ஏற்படுத்திய பெரியார் பெண்ணியம்

பெண்ணிய எழுத்துகளின் போக்கைத் தீர்மானித்தன. சாகும் தருவாயில்

இருந்த தமிழிசைக்கு உயிரூட்டியவர் பெரியார்தான். இப்படியாக திராவிட

இயக்கம் சமூக வெளியில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்களும்

அரசியலும் செயல்பாடுகளும் இச்சமூகத்தை முன்வைத்து எழுத வந்தவர்களின்

எழுத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.

                                                           

 இயல் இசை இலக்கியம் இவை அனைத்திலும் தமிழை முன்னிலை படுத்திய

திராவிட இயக்கத்தின் நாடகத்துறை பங்களிப்பு கலைத்துறையில் மிகவும்

முக்கியமானது. கலை வெளிப்பாடுக்காக எழுதப்பட்டு நடிக்கப்பட்டவை அல்ல

அவர்களின் நாடகங்கள். ஆனால் நாடகங்களின் முகவரியை மாற்றி எழுதியதில்

திராவிட இயக்கம் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் சில

கருத்துகளை முன்வைக்கிறார்.

 

///////நாடகங்களை தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சக மனிதனின் பிரச்சினைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். . அண்ணாவைப் பின்பற்றி கருணாநிதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு போன்ற பல நாடக எழுத்தாளர்கள் உருவாயினர். ஆனால் சமூக விமர்சனத்தைத் தவிர இவர்களின் நாடகங்களில் அதிக கற்பனையோ, கலைநயமோ இல்லை. ஆனால், அண்ணாவிடம் ஒருவிதமான பல்நோக்கு பார்வை இருந்தது. இரு வேறுபட்ட இலக்குகள் இருந்தன. லெனினை கொலை செய்ய நிலவிய ஒரு சதி பற்றி `துரோகி கப்லான்' என்ற நாடகமாக எழுதினார். ரொம்பவும் திட்டமானதாகவும் கூர்மையாகவும் இருந்தது அந்த நாடகம். சுய சிந்தனையைக் கூண்டில் நிறுத்தி எதிரிகள் வழக்காடுவதாக `ஜனநாயக சர்வாதிகாரி' என்ற நாடகம் எழுதினார். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை காங்கிரஸ் அனுமதிப்பதாக உருவக பாணியில் `சகவாச தோசம்' என்ற நாடகத்தை எழுதினார். பெரும்பாலான நாடகங்கள் நேரடித் தன்மை கொண்டிருந்தாலும் ஒரு விஸ்தீரமும் விசாரணையும் அவருடைய நாடகங்களில் பிரதானமாக இருந்தன. “ 

ண்ணாவின் பாணியைப் பின்பற்றாமல்  என்.எஸ். கிருஷ்ணன் நயமான நகைச்சுவை மூலம் சமூக விமர்சனக் கருத்துக்களை வழங்கினார்.  காந்தியத்தையும் பகுத்தறிவையுன் இணைத்து கொண்ட ஒரு போக்கை அவர் நாடகங்களில் காணலாம், அவருடைய நல்லதம்பி இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.

வேதம், புராணம், பக்தி என்ற பிராம்மணக் கலாச்சாரத்துக்கு மாற்றாக எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட புதிய தமிழ்க் கலாச்சாரத்துக்கு - மக்கள் கலாச்சாரத்துக்கு என்.எஸ். கிருஷ்ணன் ஆதாரமாக இருந்தார். 

 

எம்.ஆர். ராதா உருவகப்படுத்திய ஒரு கலகப் பண்பாடு திராவிடர் இயக்கத்தின் இன்னொரு முக்கியமான போக்கு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக மேடைக்கு ஒரு புதிய அழுத்தத்தை உருவாக்கியவர் அவர். தமிழில் முதன்முதலில் தடை செய்யப்பட்டவை எம்.ஆர். ராதாவின் நாடகங்களே. அந்த அளவுக்கு ஒரு கலகக்கார நாடகக்காரராக அவர் விளங்கினார். மிகவும் உண்மையானதும் கசப்புமான யதார்த்தங்களை அவர் எடுத்துக் கூறினார். ராமாயணப் பாத்திரங்களை கேலி செய்து அவர் எழுதிய கீமாயணம் நாடகம் தடை செய்யப்பட்டது. தடையை மீறி திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நாடக மேடையில் ஒருவிதமான பரிசுத்த நாயகர்களையே காட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தறிகெட்டு அலையும் ஒருவனை நாயகனாக்கி `ரத்தக் கண்ணீரை' உருவாக்கினார். ரத்தக் கண்ணீர் நாடகம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் நிகழ்த்தப்பட்டது. பெரியாரின் கருத்துக்களுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதை பிரச்சாரத்திற்கு ஒரு மதிப்பை அளித்தவர் எம்.ஆர். ராதா. எம்.ஆர். ராதாவைப் பின்பற்றி திருவாரூர் தங்கராசு போன்றவர்களும் நாடகங்கள் நிகழ்த்தினர். என்.எஸ். கிருஷ்ணனின் கலை அம்சத்தையும், எம்.ஆர். ராதாவின் கலகப் பண்பாட்டையும்பின்பற்றி பலர் உருவாகாதது திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய குறைபாடு.

 

இந்த நாடக உணர்வை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட இயக்கம் தவறிவிட்டது. சக மனிதனை முதன்மைப் படுத்துதல், சமூக யதார்த்தம் பற்றிய விமர்சனப் பார்வை ஆகியவை பல்வேறுபட்ட இலக்கியப் போக்குகளை உருவாக்கி இருக்க முடியும். ஆனால், தி.மு.க. அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்ததுமே அதன் கலை, இலக்கியக் கண்ணோட்டத்திலும், சமூக விமர்சனப் பார்வையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. பகுத்தறிவுக் கருத்துக்களின் பின்னணியில் ஒரு புதிய  எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது. நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.ஆசாரம், பக்தி என்பதற்கு மாற்றாக அன்பு, சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்த வேண்டியவர்கள் போலித்தனம், கவர்ச்சி இவற்றில் மூழ்கிப் போனார்கள். ஆரம்பகால திராவிட இயக்க உணர்வுகள் நீர்த்துப் போய் சகமனிதனின் வாழ்நிலையும் சமூக யதார்த்தமும் மேடைப்பேச்சுகளில் நீர்த்துப்போனது தான் நடந்திருக்கிறது.

                       

கலை கலைக்காகவே..

கலை மக்களுக்காகவே..

மக்களுடன் கலைகள் பிறந்த காலம் முதல் இந்த இரண்டு பக்கங்களும்

இருக்கின்றன. கலை மக்களுக்காகவே என்ற கலை இலக்கியவாதிகள்

திராவிட இயக்கத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்துவதில்லை.

இந்தப் புள்ளியிலிருந்து தான் மீண்டும் கி.ராவின் நேர்காணலை வாசிக்கும் போது

தமிழ் கலை இலக்கியவெளியின் நுண்ணரசியலும்

சாதி முகமும் அப்பட்டமாக தெரிகின்றன.

இலக்கியவெளியில் இத்தடைகளை ஊடறுத்து பயணிப்பவர்களை

வாழ்த்துவோம்

  நன்றி : keetru.com

 

Thursday, February 18, 2021

ஆசீவகமும் தமிழர் மெய்யியலும்

 அறிவுசார் சமூகமாய் ஆசீவகம் - நம் கல்வி நிலையங்கள் சமூகவியல் ஆய்வுகள் மதச் சார்பான பரப்புரைகள் அவை சார்ந்த வரலாறுகள் இலக்கியச் சான்றுகள் அனைத்திலும் சமணமும் பெளத்தமும் சைவமும் வைணவமும் வைதீக மரபும் கற்பிக்கப்படுகின்றன. இந்த மதங்களின் வழிப்பாடுகள் கோவில்கள் சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து தலைமுறைத் தலைமுறையாக நம் வாழ்க்கையின் பழக்க வழக்கங்களில் காட்சிகளாக விரிகின்றன. 

வாசல் கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும் கஜலட்சுமி உருவமோ திருமாலின் மனைவி இலட்சுமி தேவியாகவே காட்சி அளிக்கிறாள். சித்தார்த்தன் அரண்மனை வாழ்க்கையைத் துறந்து புத்தனாகி பெளத்தம் பரப்பினான் என்றும் வட இந்திய பேரரசர் அசோகன் காலத்தில் பவுத்தம் தென்னிந்தியாவையும் தாண்டி உலக நாடுகளுக்குப் பரவியது என்றெல்லாம் படிக்கிறோம். இந்த வரலாற்றில் துறவறம் அஹிம்சை ஆகிய கருத்துருவாக்கங்கள் திடீரென உருவாகி வளர்ந்திருக்க முடியாது என்ற புரிதலை விலக்கி வைக்கிறோம்.

 சித்தார்த்தன் திடீரென இல்லறம் துறந்ததிருக்க முடியுமா? . 

அதுு என்ன துறவு வாழ்க்கை ?! சித்தார்த்தனுக்கு முன்பே இல்லறம் துறந்து சமூக வெளிக்கு வந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அப்படி ஒரு வெளி நடைமுறையில் சமூகத்தில் இருந்ததால்தான் சித்தார்த்தன் அந்த வழியைப் பின்பற்ற ஏதுவாக இருந்தது என்ற புரிதலை இருட்டடிப்பு செய்து விடுகிறது நம் கேள்வி பதில் பாடசாலைகள். 

சமணண பவுத்த மத நூல்கள் , காப்பியங்களைத் தமிழில் பட்டியலிடும் போது .. இப்படியாக வடக்கே இருந்து ஒரு கருத்துருவாக்கம் தமிழ் கூறு நல்லுகம் வந்தடைந்து இங்கே பெரும் வளர்ச்சி பெற்று மக்களின் வாழ்க்கையில் 14 ஆம் நூற்றாண்டு வரை உயிர்ப்புடன் இருந்த து என்று சொல்லும் நாம் … இந்த கருத்துருவாக்கங்கள் தமிழ் மண்ணுக்கு வருவதற்கு முன்.. இந்த மண்ணில் என்ன இருந்த து..? என்ன நம்பிக்கை இருந்த து? இவர்களின் கருத்து தளம், சமூகவியல் கருத்தாக்கங்கள் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை! 


இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சில நம்பிக்கைகள் சில கருத்துருவாக்க சமூகச் சிந்தனைகள் இருந்திருக்கும் என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் போது.. அத்தேடல் பெருவெளியாகி.. பிரபஞ்சமாக விரிகிறது. 


இயற்கை, அறிவியல், அணுக்கோட்பாடு என்று ஒவ்வொரு பக்கமாக விரிந்து பிரபஞ்ச வெளி திறக்கிறது. இவை இட்டுக்கட்டி சொல்லப்படும் கதைகள் அல்ல, நம் புனைவுகளோ புராணங்களோ அல்ல என்பதற்கு சாட்சியாக இருக்கிறது பரிபாடலின் வரிகள்…


 "கருவளர் வானத் திசையில் தோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தன்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் நுண்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும் உள்ளீடாகிய இருநிலத்து ஊழியும் (பரிபாடல் 2:5-12) 

“பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது” என்கிறது பரிபாடல். 


இந்தத உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை அறிந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். 

மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பூதத்தியற்கை “ என்று தீர்மானமாகச் சொல்கிறது புற நானூறு. 

ஆனால் உலகத்தில் தோன்றிய மதங்கள் பெருங்கடவுள் வழிபாடுகள் அனைத்தும் கடவுள் உலகத்தைப் படைத்தார் கடவுள் மரம் செடி கொடிகளைப் படைத்தார் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று மட்டுமே அவரவர் கற்பனைக்கு ஏற்ப எழுதி வைத்திருக்கின்றன. மதங்களின் ஆட்சி அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு மிகவும் நெருக்கமாகும் போதும் சில நேரங்களில் ஆட்சி அதிகாரத் தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மத பீடங்கள் மாறும் போது… கடவுள்தான் உலகத்தைப் படைத்தார், கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்ற கருத்துக்கு எதிரான சிந்தனைகள் ஒட்டு மொத்தமாக துடைத்து எடுக்கப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையில் அவை வேறு ஒன்றாக மாறுகின்றன. காலப்போக்கில் மாற்றங்களின் காரணம் மறைந்துவிடுகிறது. அதன் எச்சங்கள் மட்டும் நம் வாசலில் கஜலட்சுமியாக காட்சி அளிக்கின்றன.. 

பரிபாடல்் பேசும் உலகம் பற்றிய சிந்தனைக்களம் தான் ஆசீவகதின் ஒரு பக்கம். ஆனால் இந்தப் பக்கம் அறிவுசார் அறிவியல் உலகம் இன்று ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்து. According to the Big Bang theory, the Universe was once in an extremely hot and dense state which expanded rapidly. This rapid expansion caused the Universe to cool and resulted in its present continuously expanding state’ (www.wikipedia.com) ‘The universe began over 15,000 million years ago with an unimaginably violent explosion, called the Big Bang. The Big Bang created a huge fireball, which cooled and formed tiny particles. Everything in the universe is made of these tiny particles, called matter’ (The USBORNE – Encyclopedia of World History)

Wednesday, February 17, 2021

STATES in India disappeared

 

India, that is Bharat, shall be a union of STATES

-          அரசியல் சட்டக்கூறு 1.


இந்தியாவின் மொழிவழித் தேசிய இன மா நிலங்களை 

ஆங்கிலத்தில் “ஸ்டேட்”        என்று குறிப்பிடுகிறோம். 

ஸ்டேட் என்பது ஓர் அரசியல் சொல்.

அதை மொழியாக்கம் செய்து நாம் பயன்படுத்தும் 

மாநிலம் என்ற சொல் அரசியல் சொல் அல்ல. 

ஸ்டேட் என்பதன் நேரடி அரசியல் சொல் தமிழில்

“நாடு” என்றே பொருள்படும்.

சுதந்திரமாக இருக்கக்கூடிய   இறையாண்மையுள்ள 

நாட்டைத்தான் உலக அளவில் “ஸ்டேட்” என்றழைப்பார்கள்.

 ஆனால் இந்தியாவில் மொழிவழிப்பிரிந்த 

இறையாண்மையுள்ள துணை தேசியங்கள், 

அதிகாரமிக்க அரசியல் உறுப்பினராக இல்லாமல் 

குறைந்த அதிகாரங்கள் கொண்ட நிர்வாகப்

பிரிவுகளாகவே இருக்கின்றன.  

இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவின் நிர்வாகப்பிரிவுகள் ‘மாகாணங்கள்” என்றழைக்கப்பட்டன. இன்று “மா நிலங்கள்” என்றழைக்கப்படுகின்றன. அவ்வளவுதான்!

அரசியலமைப்பு அவையில் பங்கேற்ற மகாராட்டிராவின் 

எச். வி. படாஸ்கர்

“இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, உண்மையான 

அதிகாரங்களை உள்ளடக்கிய முழுமையான கூட்டாட்சியை 

உருவாக்க நினைத்திருந்ததால்தான்  

‘மாகாணங்கள்” என்ற சொல்லைக் கைவிட்டு

‘ஸ்டேட்’ என்ற சொல்லை ஏற்றார்கள்”

என்றும்

“ஆனால், மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் 

வெட்டப்பட்டு மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு, 

மாநிலங்கள் வெறும் நிர்வாகப் பிரிவுகளாக ஏற்படுத்தபட்டுவிட்ட  நிலையில் “ஸ்டேட்” என்பதே பொருந்தாதப் பெயர் ஆகிவிட்டது”

என்றும் குறிப்பிடுகிறார்.

                                                                                                                                               

-                                         

Wednesday, February 3, 2021

பட்ஜெட் ..

 பட்ஜெட் ..

பட்ஜெட் என்றவுடன் ஒரு டென்ஷன் வந்துவிடுகிறது.

 டென்சனாகித்தான் என்னக் கிழிச்சிடப்போறோம்..

பட்ஜெட் பத்தி சுவராஸ்யமா எதையாவது எழுதலாம்னு தான்

இப்படி ஒரு கூகுள் தொகுப்பு..


1)   1)  உலகத்திலேயே பெரிய பட்ஜெட் இந்தியாவின் பட்ஜெட் தானாம்.

இந்தப் பெரிய என்பது இதன் பக்க அளவைக் குறிக்கிறதா அல்லது

பற்றாக்குறையை குறிக்கிறதா… !


2)   2)பட்ஜெட் என்ற சொல் BOUGETTE என்ற பிரஞ்சு சொல்லிலிருந்து

வந்தது. இதன் பொருள் சின்ன பை… /சின்ன சூட்கேஸ்.

 அட டா… நம்ம நாட்டில பட்ஜெட் போட வரும்போது அமைச்சர் கையில ஒரு சூட்கேஸ் /பை பிடிச்சிட்டு வர்றமாதிரி போட்டோ டிவியில் வருவார்கள். அந்தப் பை .. இந்தப் பிரஞ்சு பை தானா..

 3)   முதல் இந்திய பட்ஜெட் வந்தது எப்போ தெரியுமா? 7 ஏப்ரல் 1860

கிழக்கிந்திய கம்பேனி வெளியிட்ட பட்ஜெட். இங்கிலாந்து அரசியிடம்

சமர்ப்பித்த பட்ஜெட். ஸ்காட்லாந்து பொருளாதர  நிபுணரின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது.

 முதல் பட்ஜெட் ஏப்ரலில் வந்ததைக்  காரணமாக வைத்து இனிமேல் பட்ஜெட்டை 01 ஏப்ரலுக்கு மாற்றினால் என்ன? எப்படிப்பார்த்தாலும் நம்மை முட்டாள் ஆக்குகிற பட்ஜெட் தானே!


4)   4)சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 26 நவம்பர் 1947 ல் வந்த து.

NO TAX BUDGET.

 இதுதான் உண்மையில் ஆனந்த சுதந்திர பட்ஜெட் 

5) 5)   1950  வரை பட்ஜெட் ராஷ்டிரபதி பவனிலிருந்து அச்சிடப்பட்டு வெளியானது. அதன் பின் மிண்ட் ரோட் அச்சகத்திற்கு மாறியது. 1980ல் அரசு அச்சகத்திற்கு மாற்றப்பட்டது.

      ஏன் பட்ஜெட் பிரிண்டிங்க் அட்ரஸ் மாறிக்கிட்டே இருந்திச்சினு       கேட்காதீங்க. வெளியே சொன்னா வெட்கக்கேடு..      ராஷ்டிரபதிபவனிலிருந்து பட்ஜெட் லீக் ஆயிடுச்சி.. அதைக்    கண்டுப்பிடிக்க முடியாம நம்ம ஆட்கள் ப்ரிண்டிங்க் பிரஸ்ஸை      மாற்றிக்கொண்டே இருந்தார்கள். இதுதான் ரகசியம்.

6) 6)   1955 வரை பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது.  1955=56 பட்ஜெட் இந்தியிலும் வெளிவர ஆரம்பித்தது.

இந்தியிலா… அப்படின்னு யாரும் கேட்கலை. காரணம் கணக்கு விவரம் தானேனு நினைச்சிருப்பாங்களோ… என்னவோ.

 

7)   6)   அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜிதேசாய். 10 முறை. அடுத்து ப. சிதம்பரம் 9 முறை, பிரணாப்முகர்ஜி – 8 முறை,

யஷ்வந்த் சிங்கா – 8 முறை. மன்மோகன்சிங்க் 6 முறை.

இன்றுவரை இந்த ரிகார்ட் பிரேக் ஆகலை!

 

8)  7)  இந்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி. 1970-71. இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன்.

9)  8)  யஷ்வந்த் சிங்க் தாக்கல் செய்த பட்ஜெட் 1973-74 “கறுப்பு பட்ஜெட்”

என்றழைக்கப்படுகிறது.

ஜஸ்ட் ஒரு ரூ 500 கோடி பற்றாக்குறை பட்ஜெட் போட்ட தால்

அந்த பட்ஜெட்டை black budget என்றவர்கள்.. இன்னிக்கு வரும்

 பட்ஜெட்டுகளுக்கு blank budget என்பார்களா?!!

 

10) பட்ஜெட்டுகளுக்கு சில சிறப்பு பெயர்கள் கொடுத்தார்கள்.

மன்மோகன் சிங்க் பட்ஜெட் 1991-92க்கு EPOCHAL BUDGET என்றழைத்தார்கள்.

காரணம் இந்தப் பட்ஜெட் இந்திய தேசத்திற்கு பொருளாதர விடுதலையைக் கொடுத்ததாம்.. economic liberation to Nation..

என்ன விடுதலை அதுனு கேட்காதீங்க..

11) ப.சிதம்பரம் பட்ஜெட் 1997-98 கனவு பட்ஜெட் என்றழைக்கப்படுகிறது.

குறைந்த வரிவிதிப்பு பட்ஜெட் என்றார்கள்.

 

12) யஷ்வந்த் சிங்கா பட்ஜெட் 2000 -2001 மில்லினியம் பட்ஜெட்.

ஐடி செக்டருக்கு முக்கியம் கொடுத்த பட்ஜெட் இது என்பதால்.

 

13) பட்ஜெட் தொடரில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் ..2014ல்  அதிக நேரம் பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

 பாவம்… இடையில் 4  நிமிடம் ப்ரேக் எடுத்து தண்ணி குடிச்சிக்கிட்டாராம். அதைக் கேட்டுக்கிட்டிருந்தவங்க எத்தனை ப்ரேக் எடுத்தாங்கனு தெரியல.!

 

14)   பட்ஜெட்டில் மிக அதிகமான சொற்களைப் பயன்படுத்தியவர் மன்மோகன் சிங்க். அவர் பயன்படுத்திய சொற்கள் 18,650.

     இதை எல்லாமா கணக்கு வைக்கிறாங்கா… பின்னே வரவு செலவு    பட்ஜெட்னா சும்மாவா..

15) இந்திய ரயில்வே பட்ஜெட் தனியா வந்த தை நிறுத்திட்டு 2017 முதல்

ஒரே பட்ஜெட்டா கலந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

 ஏன்னா.. அடிக்கடி ஷாக் கொடுக்கவேண்டாம். ஒரே ஷாக் கொடுத்தா போதாதானு நினைச்சிருப்பாங்க.

 

**

                பட்ஜெட் ஒரு குட்டி அலசல்

     ஒவ்வொரு ஆண்டும் வரி வசூல் அதிகரித்து வருகிறது,

                செலவினம் அதிகரித்து வருகிறது,. கார்ப்பரேட் வரி விகிதத்தை 30%      முதல் 25% வரை குறைத்த பின்னர், கார்ப்பரேட் வரி வசூல் , அதாவது     அரசுக்கான வருமானம் குறைகிறது. தொடர்ந்து இந்தியாவின்   நிதிப்பற்றாக்குறை,  கடன் தொகை, அதற்கான வட்டி      எகிறிக்கொண்டிருக்கிறது...

     ஆதலால்,

1)      வளர்ச்சியும் பற்றாக்குறையும் ஒரே நேரத்தில் அதிகரிக்கும் போது

அது என்ன பொருளாதாரம்னு யாராவது சொல்லுங்க!

 2)       கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைப்பதன் மூலம்  நுகர்வோராகிய பொதுஜனம் பெறும்  நன்மை என்ன?

 3)      வட்டி செலுத்த வேண்டியது  ரூ .8,09,701 கோடி .

 முழு பட்ஜெட்டிலும் இந்த தொகையை கழிச்சா மீதி இருப்பது  அரசாங்கத்திற்கு மொத்தம் ரூ .26,73,535 கோடி

4)      நிதி பற்றாக்குறை ரூ .15,06,812 கோடி.  இதுக்கு எங்கே எல்லாம் கடன்வாங்கப்போறோம்?

இதை எல்லாம் எழுதினா மட்டும் பட்ஜெட் நமக்கானதாக மாறிவிடுமா என்ன?

 பட்ஜெட் கொடுக்கும் படிப்பினை

 காலையில் எழுந்திருச்சி குடிக்கிற ஒரு கப் காஃபி முதல் இரவில் தூங்கப்போகும் முன் சுவிட்ச் ஆஃப் செய்ற மின்சாரம் வரை..

எல்லாம் பட்ஜெட் தீர்மானிக்கிறது. இருந்தாலும் பட்ஜெட் பற்றிப்

பேசி எழுதி அவரவர் பொருளாதர அறிவைக் காட்டிக்கலாமே தவிர

வேற எதுவும் செய்ய முடியாது. அரசு சொல்கிற வருமான வரியை

ஒழுங்காகக் கட்டி தன் தேசபிமானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்

பொதுஜனக்கூட்டத்தில் நானும் ஒருத்தி.

 

 

Tuesday, February 2, 2021

மும்பையில் அண்ணாவின் தம்பியர்

 


அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது,

"சிவாஜிகணேசனைப் போல் இன்னொருவர் நடிப்பது

சிரமம். ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால்,

சிவாஜிக்கு இணையாக நடிக்கக்கூடும்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த மார்லன் பிராண்டோ..?
இவர் நடித்தப் திரைப்படங்களை தம்பிகள் யாரும்
பார்த்திருக்கவில்லை!
ஆனால்… அண்ணாவோ மார்லன் பிராண்டோ பற்றிப்
பேசிவிட்டார்.
மார்லன் பிராண்டோ பற்றி எழுதவும் செய்திருக்கிறார்.
( தம்பிக்கு கடிதம் அல்லது அவர் நட த்திய ஆங்கில இதழ்கள்.. )
இதனால் என்ன நடந்த து என்றால் அண்ணாவின் தம்பியர்
மார்லன் பிராண்டோ திரைப்படம் மும்பையில்
ஸ்டேர்லிங்க் தியேட்டரில் திரையிடப்பட்ட போது
அனைவரும் கூட்டாக டிக்கெட் முன்பதிவு செய்து
மார்லன் பிராண்டோவை திரையில் பார்த்துவிட்டு
வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் புரிந்ததா
என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் !
அவர்கள் அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச்
சென்றவர் என் தந்தையார் திரு. பி.எஸ். வள்ளி நாயகம்
அவர்கள்.
திரைப்படங்களுக்கு அக்காலத்தில் டப்பிங்க் இல்லை.
காட்சிகள் ஓடும்போது வசனம் நமக்குத் தெரிந்த மொழியில்
திரையில் வரும் வசதிகள் இல்லை. என்றாலும் கூட,
ஆங்கிலம் அதிகமாக அறியாதவர்களும் அன்று
அண்ணா பேசிய மார்லன் பிராண்டோ திரைப்பட த்தைப் போய்ப் பார்த்திருக்கிறார்கள்..!
அண்ணா தன் எழுத்துகளில் தொடர்ந்து
தன் தம்பிகளுக்கு புதிது புதிதாக கற்பித்துக்கொண்டே
இருந்தார். கலை இலக்கியம் உலக அரசியல் என்று அவர்
ஒரு பரந்துப்பட்ட உலகத்தைக் காட்டினார்.
அவருக்குள்ளும் அறிவுப்பசி கடைசி நிமிடம் வரை இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் அவர் வாசித்தப்
புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும்
அவரைச் சுற்றி அவருக்கு இணையாகவோ அல்லது
அவர் அளவுக்கு வாசிப்பு உள்ளவர்களோ யாருமே இல்லை.
அவர் காலமெல்லாம் தனித்தே பயணித்தார்.
தனித்துவமானவாராக இருந்தார்.
(வழக்கம்போல) நான் அவருடன் சிலப் புள்ளிகளில்
முரண்படுவதுண்டு) அவர் எளிமையும் அவர் பண்பும
அவர் மும்பைத் தம்பிகளிடம் நடந்து கொண்டவிதமும்..
அதைப் பலர் சொல்லக் கேட்டு வளர்ந்த நானும்…
அவர் நினைவுகளைப் போற்றுகிறோம்.
(புகைப்படம் மும்பை நிகழ்வில் அண்ணாவும் அப்பாவும்)

(03 பிப்ரவரி அண்ணாவின் நினைவு நாள்)