Sunday, October 31, 2021

இந்திராகாந்தியின் மெளனம்..
 நீ டீச்சராகப் போகிறாயா?

டாக்டராகப் போகிறாயா?
நீதிபதி ஆகப்போகிறாயா?
பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் கேட்கிறார்.
அதில் ஒரு குழந்தை மட்டும்
“ நான் ஜோன் அஃப் ஆர்க் ஆகப்போகிறேன்”
என்று சொல்கிறது,
அந்த குழந்தை வேறு யாருமல்ல,
இந்திராகாந்தி தான். !
மகாத்மா காந்தியின் மடியில் தலைவைத்து
உயிர்விட்ட கஸ்தூரிபா காந்தி இந்தியச் சமூகத்தின்
ஆதர்ச மனைவி, இலட்சிய மனைவி, அவர்கள்
இருவரும் இலட்சிய தம்பதியர்.
ஆனால் தன் காதல் மனைவி இந்திராவின் கைகளைப்
பிடித்துக்கொண்டு உயிர்விட்டார் இந்திராவின் கணவர்
பெரோஸ் காந்தி.
நமக்கென்னவோ இந்திராவும் பெரோஸூம்
இலட்சிய தம்பதியர் இல்லை!
அந்த அடையாளத்திற்குள் அவர்கள் ஏன் வரவில்லை?
ஏன் அவர்களை அப்படி அணுக முடியவில்லை?
எது தடையாக இருக்கிறது??????!!!
இவள் உடல் பலகீனமானவள்,
இவளால் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாது
என்று மருத்துவர் எழுத்து மூலமாக
எழுதியதை இரண்டு ஆண் மக்களைப் பெற்று
பொய்யாக்கியவர் இந்திரா.
இந்திராவின் தந்தை இந்த நாட்டின் பிரதமராக இருந்ததும்
நேருவுக்குத் துணையாக அவர் மனைவி இல்லாத வீட்டில்
வீட்டு நிர்வாகத்தையும் தந்தையைக் கவனிக்கும்
பொறுப்பையும் எல்லா இந்தியக் குடும்பங்களையும்
போலவே இந்திராவும் எடுத்துக்
கொண்டார். இது இந்திய சமூகத்திற்கு புதியதல்ல.
தான் காதலித்ததும் கைப்பிடித்ததும் இந்த நாட்டின்
பிரதமரின் மகளைத்தான் என்பதை அறிந்தவர் தான் பெரோஸ்காந்தி.
ஆனாலும், ஆளுமைகள் மோதுகின்றன.
அவர்களுக்குள் நடுவில் மகள் என்றும்
மனைவி என்றும் இரண்டுமாக இருந்தும்
இரண்டுமாக இருக்க நினைத்ததால்
சொல்ல முடியாத மன அழுத்தங்களையும்
அனுபவித்த பெண் இந்திரா.
தாய்மை, தாய்ப்பாசம்.. இந்திராவுக்கு பலமாக அமையவில்லை.
அவர் ஆளுமைக்கு அதுவும் ஒரு சவாலாகவே அமைந்துவிட்டது.
இந்திராவின் ஆளுமைக்கு ஒரு கம்பீரம் கொடுத்த
அவர் நரையும் மூப்பும் மகன் சஞ்சய் மரணத்திற்குப் பின்
ஒரே நாளில் அவர் மூப்படைந்து தளர்ந்து ரொம்பவும்
சாதாரண நிலையிலிருந்து கீழிறங்கி…
அதைப் பார்த்த எங்களைப் போன்றவர்கள்
துடிதுடித்துப் போனோம். ஆம்.. அதுவும் நடந்தது.
அவர் இறுதியாக பயணித்த ஆப்ரிக்க டூனிஷய நாட்டு
இந்தியத்தூதுவர் சொல்கிறார்…
“அமைதியைத் தேடி தான் இந்த இரு நாட்கள்
அரசு பயணத்தை அவர் மேற்கொண்டார்.
மாறுதலான சூழல், ரம்மியமான காட்சிகள்
எதையும் அவரால் அனுபவிக்க முடியவில்லை.
அவர் எப்போதும் ஆழ்ந்த மெளனத்தில் மூழ்கி இருந்தார்”
என்று பதிவு செய்திருக்கிறார்.
ஒரு பெண்ணின் ஆழ்ந்த மெளனம் என்பது
அவள் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல,
அவள் மீது இந்த சமூகம் சுமத்திய
சொல்லமுடியாத சுமைகளின் வலியும் தான்.
இன்று அவள் மறைந்த நாள். (31 அக்டோபர்)
ஆம்.. அவள் மறைவு கூட ஒரு
துன்பியல் நாடகத்தின் காட்சிகள் போல
கண்முன் விரிகிறது..
ப்ரியதர்சினி… எனக்குள் என்றும்.
ஆயிரமாயிரம் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி
அந்தப் பெண்ணின் பெருமூச்சும் மெளனவெளியும்
பேசிக்கொண்டே...

Wednesday, October 27, 2021

The Billion Dollar Code - Real story - Real Google

The Billion Dollar Code’இன்று நம் கணினியில் நம் கைபேசியில் இருக்கும்
கூகுளின் உலக வரைபடம், நம் கூகுள் தேடல்,
பயணிக்கும்போது நம் காரில் ஒலிக்கும் கூகுள்
வரைபட வழிகாட்டி, இப்படியாக நாம் காணும்
கூகுள் பூமி – GOOGLE EARTH ..
இந்த கண்டுபிடிப்புகள் யாருக்குரியவை?
யாரிடமிருந்து கூகுள் திருடி இருக்கிறது?
இந்த திருட்டு நடக்கவில்லை என்றால் இன்று
சிலிக்கான் பூமியாக அமெரிக்கா இருந்திருக்காது.
ஜெர்மன் இருந்திருக்கும்!
இரு ஜெர்மானிய இளைஞர்களின் கண்டுபிடிப்பு
கூகுள் வரைபடம். அதை அவர்கள் 90 களில்
கண்டுபிடித்துவிட்டார்கள்.
ART + COM இளைஞர்களின் கண்டுபிடிப்பு
அவர்கள் எழுதிய கணினி ப்ரோகிராம் (அல்கிருதம் )
அதைத் திருடிய கூகுள்..
இது உண்மையின் கதை. கூகுள் என்ற மாபெரும் சாம்ராஜ்யம்
இன்று உலகை ஆட்சி செய்கிறது.
எத்தனைபேரின் கண்டுபிடிப்புகள்
உழைப்புகள் களவாடல்கள் ஏமாற்றிய வித்தைகள்
கூகுளின் தேடலுக்குள் மறைந்திருக்கிறது..
இன்றைய கணினியுகத்தின் ஒவ்வொரு இளைஞர்களும்
குறிப்பாக எங்கள் அமெரிக்க தேச வெள்ளை காலர்
அடிமைசேவகர்கள் அனைவரும் கட்டாயம்
பார்த்து (ரசிக்க ) எப்படி எல்லாம் திருடலாம்
எப்படி எல்லாம் இன்னொரு கூகுள்,
இன்னொரு மைக்ரோசாப்ட்டை உருவாக்கலாம்
என்று யோசிக்க வேண்டும்.
ஆப்பிளும் மைக்ரோ சாஃப்டும்-
Steve Jobs & Bill Gates இருவரும் ஒருவரை ஒருவர்
ஏமாற்றி இருவரும் சேர்ந்து Xerox PARC labs ல் திருடியது
உலகப்புகழ்பெற்ற கதை.
(When Steve Jobs accused Bill Gates of stealing Apple’s idea
to create Windows in the early 80s, the Microsoft founder
reportedly replied, “Well, Steve, I think there’s more than one way
of looking at it. It’s more like we both had this rich neighbour
named Xerox, and I broke into his house to steal the TV set
and found out that you had already stolen it.” )
இதனால் தெரிவிப்பது என்னவென்றால்..
அமெரிக்காவில் மாங்கு மாங்குனு வேலை பார்க்கும்
எம் இந்திய இளைஞர்கள், இந்த திருடுவது எப்படி
என்பதை மிகத் தெளிவாக கற்றுக்கொண்டு
இந்தியாவை சிலிக்கான் இந்தியாவாக மாற்ற வேண்டும்.


Friday, October 15, 2021

காந்தி சொல்லி.. கடிதம் எழுதினாரா சவார்க்கர்?

 


காந்தி சொல்லித்தான் கடிதம் எழுதினாரா சவார்க்கர்.?

ஒன்றிய அரசின் அமைச்சர் ராஜ்நாத் சிங்க்

என்ன சொல்ல வருகிறார்? எப்போதும் உண்மையை மறைத்து அதனூடாக எந்த வரலாற்றைக் கட்டமைக்க போகிறார்கள்?

    சவார்க்கர் அந்தமான் சிறையிலிருந்து தன்னை விடுவிக்க ஆங்கிலேய அரசுக்கு அனுப்பிய கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. 1911ல் சற்றொப்ப 6 கடிதங்கள்/ மனுக்கள் எழுதி அனுப்புகிறார் சவார்க்கர். அப்போது காந்தி தென்னாப்பிரிகாவில் இருந்தார். 1915ல் காந்தி இந்தியா வந்தப் பிறகும் சவார்க்கர் கடிதம் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதற்கும் காந்திக்கும்  தொடர்பில்லை. தொடர்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் சவார்க்கரின் தம்பி மும்பையில் வாழ்ந்த நாராயண் காங்கிரசில் இருந்தவர் தான் காந்திக்கு கடிதம் எழுதி தன் இரு சகோதர ர்களின் விடுதலைக்கு எதாவது செய்ய முடியுமா என்று உதவிக் கேட்கிறார். காந்தி அவருக்கு எழுதிய பதில் கடித த்தில் விவரமாக தன் போராட்டங்கள் அனைத்து அரசியல் சார்புடையவை (their revolutionary acts had been purely political in nature) என்று விவரமாக கடிதம் எழுதும்படி அறிவுரை வழங்குகிறார்.

காந்தியின் இக்கடித த்தின் சில வரிகளை cut paste  செய்து வழக்கம் போல வரலாறு திரிக்கப்படுகிறது.

சவார்க்கர் எழுதி 1928ல் வெளிவந்த அவர் புத்தகம் “ சிறையில் என் வாழ்க்கை” (My life in prison) புத்தகத்தில் காந்தியைப் பற்றி எதுவும் எழுதப்படவில்லை. சவார்க்கர் எழுதாத தை அவர் தொண்டர்கள் ஏன் எழுத நினைக்கிறார்கள்?


    அந்தமான் சிறைக்கு இப்போது போனாலும்  நெஞ்சம் பதைக்கிறது. கலாபானி… சுற்றிலும் கருங்கடல்.. சிறையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.. இச்சுழலில் எந்த ஓர் அரசியல் கைதியும் விடுதலைக்கேட்டு மனு கொடுப்பதால் மட்டுமே இழிந்தவராகிவிட மாட்டார். இப்படி மனு கொடுத்த பல அரசியல் கைதிகள் இந்திய வரலாற்றில் உண்டு. சவார்க்கரின் அரசியல், இந்து தேசத்துடன் முரண்படுபவர்களுக்கும் இப்புரிதல் உண்டு.

இதைக் கூட புரிந்து கொள்ளாமல் இவர்கள்

செய்யும் அரசியலுக்கு என்ன பெயர் சரவணா?!!

 

Saturday, October 9, 2021

REAL HERO ..ஜாக்கி ஜான் vs ஷாருக்கான்

 

REAL HERO ..
கதை ஒரே கதை.
காட்சிகளிலும் மாற்றமில்லை.
ஆனால் இந்தியச் சமூகம் மட்டும்
ஏன் கதையின் போக்கில் தடுமாறி
தரமிழந்து வெளிப்பட்டிருக்கிறது?
பொதுஜன உளவியல் இந்தியச் சமூகத்தில்
குற்றங்களையும் அதிலும் குறிப்பாக பிரபலங்கள் சம்பந்தப்படும் குற்றங்களை
ஜீரணிக்க முடியாமல் பாசம், குடும்பம் என்ற
போர்வையில் அதையும் தாண்டி தனிமனித உரிமை
என்ற அளவுக்கு குற்றங்களை மடைமாற்றம் செய்கிறது.
இது திரைக்கதை அல்ல. திரைப்படமும் அல்ல.
இரண்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் புகழ்ப்பெற்ற
திரைப்பட கதா நாயகர்கள். ஒருவர் ஜாக்கி ஜான்.
இன்னொருவர் இந்திய திரைப்பட நாயகர் ஷாருக்கான்.
ஜாக்கியின் மகன் ஜெய்ஸி ஜானும்
ஹாருக்கானின் மகன் ஆர்யாகானும்
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திலும்
போதைப்பொருள் கட த்தல்கார ர்களுடன் இருக்கும்
தொடர்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
மகன் 2014 ல் பீஜிங்க்கில் கைது செய்யப்பட்ட போது
ஜாக்கி ஜான் “போதைப்பொருள் கட்டுப்பாடு தூதுவராக”
(Narcotics control ambassador)சீனாவின் காவல்துறையில்
நியமிக்கப்பட்டிருந்தக் காலம்.
கைது செய்யப்பட்ட மகனுக்காக அவர்
தந்தையுள்ளம் கண்ணீர் விட்டிருக்கும்.
ஆனால் தன் மகனின் செயலை அவர் நியாயப்படுத்தவில்லை!
மகனுக்காக காவல்துறையிடம் கெஞ்சவில்லை.
தன் பணம் தன் செல்வாக்கு தன் அதிகாரம்
எதையும் மகனைக் காப்பாற்ற அவர் பயன்படுத்தவில்லை.
மாறாக அவர் பொதுஜனத்திடம்
“மன்னிப்பு” கேட்டார்.
ஒரு தந்தையாக தான் தவறு செய்துவிட்டேனோ ,
அவனை இராணுவப்பள்ளியில் சேர்த்திருந்தால்
ஒழுங்காக வளர்ந்திருப்பானோ “
என்று எண்ணி எண்ணி வருத்தப்பட்டார்.

தன் திரைப்படங்களின் மூலம் அவர் சம்பாதித்த
சொத்தின் மதிப்பு (போர்பஸ் அறிக்கை) 350 மில்லியன் டாலர்
. தன் சொத்துகளை தன் மகனுக்கு அவர்
எழுதிவைக்கவில்லை. அவை அவர் வாழ் நாளுக்குப்
பின் சமூகத்திற்கு, சமூகச்சேவைகளுக்கு என்று
எழுதி வைத்திருக்கிறார். இதைப் பற்றி கேட்டபோது
மகன் ஜெய்ஸி அவனுக்கு அவன்
சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.
அப்பனின் பணத்தை , கஷ்டப்பட்ட சம்பாதித்த
என் சொத்துகளை அவன் வீணடிக்கமுடியாது.
(Jaycee will make his own money, if he is not capable
then the Railroad Tigers star will be wasting Jackie’s hard earned money)இதே காட்சி மீண்டும் மும்பையில் அரங்கேறுகிறது.
ஆர்யாகான் கைது செய்யப்படுகிறார்.
ஷாருக்கான் தன் மகனுக்கும் போதைப்பொருளுக்கும்
தொடர்பே இல்லை என்று சொல்கிறார்.
அய்யோ என் பிள்ளையை விட்டுவிடுங்கள் ,
அய்யோ என் பிள்ளையைக் கைது செய்யாதீர்கள்,
அய்யகோ என் பிள்ளையை நட்சத்திர ஹோட்டலில்
தங்க வையுங்கள், செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்..
என் மகன் ஆர்யாவுக்கு முழு சுதந்திரம்கொடுத்து
வளர்த்திருக்கிறேன்.
என் மகன், அவன் என் மகன், ஷாருகானின் மகன் ஆர்யாகான்… “
இப்படியாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
சல்மான் கான் ஓடோடி வருகிறார்,
ஷாருக்கானின் கண்ணீர்த்துடைத்து ஆர்யாகானுடன் நிற்கிறார்.
ரிதிக்ரோஷன் ஷாருக்கான் ஆர்யாகானுக்கு
ஆதரவாக டுவிட்டுகிறார். சரி விடுங்கள் இவர்கள் அனைவரும்
அவருடம் ஒன்றாக ஆடும் திரை நட்சத்திரங்கள்.
இந்த அறிவுஜீவி ஹார்வார்ட் யுனிவர்சிட்டி புகழ்
சசிதரூரும் தன் பங்கிற்கு டுவிட்டுகிறார்.

இந்தியப் பொதுஜன உளவியல் .. இதுதான்.
இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?!!
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்
என்று விட்டுவிட யாரும் தயாராக இல்லை.
இதில் ப்ரேக் நியுஸ் போட்டு தலை வெடிக்கிற
விவாதங்கள் நடத்தி தங்கள் பசியைத் தீர்த்துக்
கொள்கின்றன ஊடகங்கள்.
ஷாருக்கான்...ஒரு தந்தையாக
உங்கள் வருத்தம் புரிகிறது.
ஆனால்,
ஜாக்கி .. நீங்கள் தான் ,
உண்மையான ஹீரோ..
தலைவணங்குகிறேன் ஜாக்கிஜான்.


Friday, October 8, 2021

TATA (AirINdia) & corporate social RESPONSIBILITY

 


68 ஆண்டுகளுக்குப் பின் 18000 கோடியில்

மீண்டும் ஆகாயத்தை வசப்படுத்தி இருக்கிறது
ஏர் இந்தியா மகாராஜா. இனி “ஏர் இந்தியா”
என்பது கடந்தகாலமாகிவிடும்.
இப்போதைக்கு ஒரு சின்ன ஆறுதல்
மகாராஜாவை மீண்டும் டாடா நிறுவனமே
வாங்கி இருக்கிறது என்பதும்
வேறு எந்த வெளி நாட்டு நிறுவனத்திடமும்
விற்கப்படவில்லை என்பதும் தான்!
அரசுக்கு இனி இராணுவ விமானங்கள் தவிர
வேறு விமானங்களும் இல்லை.
*அயல்தேசத்தில் போர்க்கால நடவடிக்கையாக
தன் தேசத்து மக்களை பத்திரமாக கொண்டுவருவதற்கு

இனி ஏர் இந்தியா மகாராஜா இருக்கமாட்டார்.
*இயற்கைப் பேரிடர் காலங்களில் கொரொனா போன்ற
பெருந்தொற்று காலங்களில் இந்திய மக்களின் நலனுக்காக
தொலைதூரங்கள் பறந்து கொண்டிருந்த
விமானச்சேவை இனி இருக்காது.
*ஏர் இந்தியாவில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும்
பணியாளர்களின் எதிர்காலம் ? விற்பனை ஒப்பந்தப்படி
இன்னும் ஓராண்டுக்கு அவர்கள் டாடா ஏர்லைன்ஸில்
இருக்கலாம். அதன் பின் அவர்களுக்கு விருப்ப ஓய்வு
கொடுக்கப்படும்.
(கார்ப்பரேட் அகராதியில் விருப்ப ஓய்வு என்பது
விரும்பி எடுப்பதல்ல!
GET OUT என்பதன் சுருக்கம் VRS)
*ஓராண்டுக்குப் பிறகும் ஏர் இந்தியா பணியாளர்களை
வைத்திருப்பதும் வெளியேற்றுவதும் முழுக்க முழுக்க
டாடா நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது.
அதாவது அரசு / நீதிமன்றம் /தொழிற்ச்சங்கம்
தலையிடமுடியாது.
*ஏர் இந்தியா இனி, ஏர் இந்தியா இல்லை என்பதால்
ஏர் இந்தியா இதுவரை வழங்கிவந்த சலுகைகள்
மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிவந்த
சில சலுகைகள், ஓய்வு பெற்றவர்களுக்கு
கொடுத்திருக்கும் சில ஒப்பந்த உரிமைகள்
அனைத்தும் இனி செல்லாக்காசாகிவிடுகிறது. !
Corporate social responsibility என்று இன்றும்
மக்களாட்சியும் மக்கள் நல அரசும் நம்புகின்ற
முதலாளித்துவ சமூகப் பொறுப்பை “டாடா”
கைவிட்டிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை
இருக்கிறது. டாடா மகாராஜா இன்றைய
தனியார் விமானங்களுக்கு நடுவில்
தன் தனித்துவத்தைக் காப்பாற்றுவாரா?!!
ஜன்னலைத் திறந்து ஆகாயத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. வெண்புறாக்கள்
எப்போதும் போல பறந்து கொண்டிருக்கின்றன...Thursday, October 7, 2021

Behind the Mother Goddess

 அவர்களை விலக்கிய அவள் தேசம்

---------------------------------------------------------------------
அடியே..
மறந்துப்போனவள் நீ
கோபுரங்களின் உயரங்களில்
தொலைந்துப் போனவள் நீ.
உன்னை மறக்கவும் முடியாமல்
தொலைக்கவும் முடியாமல்
அவர்கள் நாடோடிகளாக
திரிகிறார்கள்.
உன் நினைவுகளை அவர்கள்
வரைந்து வரைந்து
காலம் காலமாய்க் கடத்திக்கொண்டு
அலைகிறார்கள்.
நீ ராஜமாதாவான போது
உன் தேசம் உன் புத்திரர்களை
நாடுகடத்தியதை
அறியவில்லையோ நீ?
உன் அரண்மனையில் நுழைய
அனுமதி மறுக்கப்பட்ட போது
பிள்ளைகள் முகம்பார்க்க
துடிக்கவில்லையோ நீ?
தாயே…
ஆதித்தாயே..
உனக்கு இப்படியும் ஒரு முகமுண்டா?
அவன் வரைகிறான்.
அவள் வண்ணங்களைக் குழைத்து
உன்னை அலங்கரிக்கிறாள்.
உன் நினைவுகளைச்
சுமந்தலையும் எங்களை
உன் ஒன்பதாவது இரவு முடியும்போது
சந்திக்க வருவாயா..
உன் ஆதிமுகம் காட்ட
காத்திருக்கிறது
உன் பக்தர்கள் அறியாத
கலைக்கோவில்.
***
@அவள்களின் தேசம்@2

---
அவர்களை விலக்கிய அவள் தேசத்தின் கதை இது.:
தாய் தெய்வத்திற்குப் பின்னால் ..
Mata Ni Pachedi..
ஒரு கலையுலக வரலாறு.

தாய் தெய்வத்தை தன் வாழ்க்கையின் நம்பிக்கையில்
குழைத்து வைத்திருந்த இனக்குழு மக்களைப்
பேர ரசுகள் விலக்கி வைத்தக் காலத்தில்
இதுவும் நடந்திருக்கிறது.
பெண்தெய்வங்கள் பெருங்கோவிலில்
ஆண்மையக் கடவுளரின் மனைவியாராக்கப்பட்ட
காலத்தில் அவள் வாரிசுகளுக்கு பெருங்கோவில்களில்
நுழைந்து அவளை வணங்கும் வழிபாட்டு உரிமை
மறுக்கப்படுகிறது. அவர்களை அரசும் அதிகாரமும்
விலக்கி வைக்கின்றன. அவர்கள் வாழ்விடம்
பறிக்கப்படுகிறது. ஆனாலும்
அவளின் நினைவுகள் அவர்களோடு இன்னும்
மங்காமல் தலைமுறைகளாக கடத்தப் பட்டிருக்கின்றன
கலைவடிவமாக. . அவர்கள் துணிகளில்
இப்போதும் தங்களின் “தாய் தெய்வத்தை” மட்டுமே
வரைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கறுப்பு, சிவப்பு, வெண்மை இந்த மூன்றும் தான்
அவர்கள் வண்ணங்களில் இன்றும் இடம்பெறுகின்றன.
கறுப்பு இருளின் அடையாளம்.
அதை துருப்பிடித்த இரும்புத்தூளை படிகாரத்துடன் கலந்து
(alum – படிகாரம்) குழைத்தெடுக்கிறார்கள்.
சிவப்பு நிறம்.. வளமையின் குறியீடு,
மண்ணின் குறியீடு, குருதியின் நிறம்..
சிவப்பு நிறத்தை புளியங்கொட்டையைப் பொடியாக்கி
படிகாரத்துடன் கலந்து உருவாக்குகிறார்கள்.
வண்ணங்களற்ற பகுதி வெண்மையாய்
அவர்கள் மொழியில் புனித த்தின் குறியீடாய்
பிரபஞ்சமாய் விரிகிறது.
அவர்களின் தாய்தெய்வம்
முதலையில் ஏறி வருகிறாள்.
ஆடுகள் அவளைச் சுமக்கின்றன.
எருமையும் சிங்கமும் அவள்
ஏறிவரும் வாகனமாய் எப்போதும்
இருக்கின்றன.
படகில் அவள் பயணிக்கிறாள்.
அவளுக்குப் பல பெயர்கள் உண்டு.
பெயர்களுக்கு பல கதைகள் உண்டு.
அவர்கள் தாய் தெய்வத்தை
வரைந்து வரைந்து வாழ்கிறார்கள்.
அவள்மட்டும் ஏன்
மெளனமாகிவிட்டாள்?

#Mata_ni_Pachedi
#behind_themothergoddess

Monday, October 4, 2021

ராஜ்பவனும் பஞ்சாயத்து போர்டும்

 "ஜனாதிபதியா வந்திட்டுப் போ.. ஆனால்

பஞ்சாயத்து போர்டு நாற்காலியில
உட்கார நினைச்சே.."
யாரும் கவனிக்கவில்லை.
எந்தக் கட்சியும் உரிமைக் கொண்டாட முடியவில்லை.
ப்ரேக் நியூஸ் ஆகவில்லை.
நேர்ப்படப்பேசப்படவில்லை.
ஆனால் நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வாழும் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சுயராஜ்யம் என்பது எங்கிருந்து முளைவிட
வேண்டுமோ அங்கிருந்து துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.
இதெல்லாம் நான் உயிருடன் இருக்கும் போதே
நடக்குமா... அல்லது இதுவும் கனவாகி காற்றோடு
கலந்துவிடுமா என்று என்னைப் போலவே
நினைத்தவர்கள் பலர் என்னோடு இன்றும் இருக்கிறார்கள்.
இச்செய்தி என்னமாதிரியான ஒரு மகிழ்ச்சியைக்
கொடுத்த து என்பதை உங்களுக்கு
என்னால் கடத்த முடியவில்லை.
அப்பாவுக்கு மரியாதைக் கொடுப்பவர்கள்
ஏன் பக்கத்து வீட்டு மாடசாமி தாத்தாவை
"போடா வாடா" என்று வயதில் குறைந்தவர்களும்
விளிக்கிறார்கள், என்று புரியாத வயதில்
புரட்சியாளர் அம்பேத்கரை வாசிக்க ஆரம்பித்தேன்.
திருவனந்தபுரத்தில் இறங்கி விமான நிலையத்திலிருந்து
வாடகைக் கார் வைத்துக்கொண்டு ஊருக்கு வரும்போது
ஊருக்குள் நுழைந்தவுடன் ஓட்டுநரின் பார்வையிலும்
விளிப்பிலும் ஏற்படும் மாற்றங்களை
வலியுடன் கடந்து வந்த நாட்கள் ..
"சாதி இப்போதும் இருக்கிறதா.. மாதவி?"
என்று என்னிடம் கேட்பவர்களுக்கு சாதியின்
நுண்ணரசியலை சாதிச்சமூகத்தின் பொதுஜன
உளவியலை என் அனுபவங்களை சொன்னாலும்
புரிந்து கொள்ள மறுக்கும் அவர்களின் புரட்சிகரமான
அறிவுஜீவி முகத்தை மெளனத்தில்
கடந்து செல்ல பழகிவிட்டேன்.
இதோ... நான் எதிர்ப்பார்த்த ஓரு மாற்றம்
என் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இதை அருகிலிருந்து பார்க்கும் நீங்கள் தான்
என்னிடம் சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால் இதைக் கவனிக்க கட்சிகளுக்கோ
தொண்டர்களுக்கோ நேரமில்லை.
பரபரப்பான செய்திகளை மட்டுமே
பரபரப்பாக விற்பனை செய்யும் ஊடகங்களுக்கு
இந்தப் புள்ளிவிவரங்கள் பேசுபொருளாகவில்லை!
தமிழ் நாட்டில் பஞ்சாயத்து தேர்தல்களில் பொதுத்தொகுதியில் 50% அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்கள் களத்தில் நிற்கிறார்கள்...
இது எவ்வளவு பெரியமாற்றம்.. ?
அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்றொ
வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது என்றொ
நான் முடிவுக்கு வரவில்லை.
ஆனால் பொதுத்தொகுதி என்பது "எனக்குமானது"
என்ற விழிப்புணர்வும் அதை சாத்தியமாக்கி இருக்கும்
சமூகச்சூழலும் நாம் வரவேற்க வேண்டியவை.
இந்தப் பாரத தேசத்தில் தாழ்த்தப்பட்டவன்
ஜனாதிபதியாக வந்துவிடலாம்.
ஆனால் பஞ்சாயத்து போர்டு தலைவராக வரமுடியாது!
சாதியம் பனிப்பாறையைப் போல கெட்டியாக
உறைந்துப்போயிருக்கும் கிராமங்களில் மாற்றம்
தென்படுகிறது. பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துவிட்டன.
இந்த மாற்றம்
"கட்சி சார்பற்ற மூன்றாவது அணி அரசியல் , சமூக எழுச்சி"
என்று அரசியல் விமர்சகர்கள் சொல்வார்கள்.
இந்த மாற்றங்களுக்காகப் போராடியவர்கள் பலர்.
உயிரழந்தவர்கள், சிறை சென்றவர்கள்
நாம் அறியாத முகங்கள்.
இதில் சிவப்புக்கும் கறுப்புக்கும் பங்கு உண்டுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இதுவரை
நடக்காத நடக்க முடியாத ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு..
களத்தில் நிற்கும் உறவுகளுக்கு..
வாழ்த்துகள்.
பிகு:
தமிழ் நாட்டில் சாதியம் இல்லை,
சாதிக்கொடுமைகள் இல்லை
தலித்துகள் அதிகாரம் பெற்றுவிட்டார்கள்,
பார்த்தீர்களா என்று இதை வாசித்துவிட வேண்டாம்.

நன்றி: தோழர் TSS Mani.

Saturday, October 2, 2021

MAHATMA VS Gandhi

 


காந்தி குல்லாய் அணிந்த இருவர்

மும்பையின் சிவப்பு விளக்கு வீதியில்
இரவு 8.30 மணிக்கு நடக்கிறார்கள்.
கிராண்ட்ரோட் பகுதியிலிருக்கும் FARASE ROAD ..
சிவப்புவிளக்கு கைகொட்டி சிரிக்கிறது.
அவர்கள் தங்கள் காந்தி குல்லாவை எடுத்து
சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
அந்தப் பழைய கட்டிட த்திற்குள் நுழைகிறார்கள்.
3 மாடிக் கட்டிடம். சின்ன சின்ன தீப்பெட்டி அறைகள்.
காமப்பசித்தீர்க்க முடியாமல் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
அதிலிருந்து எட்டிப்பார்க்கும் பெண்கள்
அந்த இருவரையும் கைப்பிடித்து இழுக்கிறார்கள்.
“என்ன மாதிரி வேண்டும்.. எல்லாம் கிடைக்கும் “
என்றழைக்கும் அழைப்புகளில் அந்த ஆண்களின்
உடல் கூனிக்குறுகிப்போகிறது.
“ப்பேஹன்ஜி” (bahenji) சகோதரியே..
நாங்கள் ரேஷ்மாபாயின்
அறையைத் தேடி வந்திருக்கிறோம்” (Reshmabai Brothel) என்று
சொல்லவும் அங்கிருந்தப் பெண்கள்
“சகோதரியைத் தேடி விபாச்சாரவிடுதிக்கு வந்திருக்கிறார்கள் “
என்று கை கொட்டி சிரிக்கிறார்கள்.
அவமானத்தில் தலைகுனியும் அந்த இரு ஆண்களிடன்
ஒருத்தி நெருங்கி தன் உடலைக் காட்டுகிறாள்..
“ரேஷ்மாவிடம் இருப்பது என்னிடமும் இருக்கிறது .. “
என்று கடைவிரிக்கும் போது அக்கணத்தில்
அந்த இட த்தில் நிற்க முடியாமல் அவர்கள்
இருவரும் ஓடுகிறார்கள்..

இங்கு வந்திருக்கவே கூடாது.. இனி என்ன செய்வது?
எப்படி ஹரிலால் காந்தியைக் கண்டுபிடிப்பது? என்று
தவிக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் சீவ்ரி மருத்துவமனைக்குப் போய்
ஹரிலால் காந்தியைத் தேடுகிறார்கள்..
“யெஸ்.. ஹரிலால் காந்தி.. காந்தியின் மூத்த மகன்,
தேசப்பிதாவின் மகன் ஹரிலால் “
என்று டாக்டரிடம் சொல்லும்போது
சீவ்ரி மருத்துவமனையின் பிணவறை
குளிர்ந்து நடுங்கி ஒடுங்கிப்போகிறது..
மகாத்மாவும் காந்தியும்..
ரணமிகுந்த வரிகளுடன் .. பக்கங்கள்
முதல் காட்சி:
போன் ஒலிக்கிறது..

“நான் Farase Road லிருந்து பேசுகிறேன்.

ஹரிலால் காந்தியைத் தெரியுமா உங்களுக்கு?

“நீங்கள் யார் ?”

“ரேஷ்மாபாய், என் அறையில் தான் ஹரிலால்காந்தி
தங்கி இருந்தார். நேற்று மயக்கமடைந்து உடல் நிலை
மோசமானதால் சீவ்ரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன்”

“ஹலோ ஹலோ..”

:நான் பொதுதொலைபேசியிலிருந்து பேசுகிறேன்..
விவரமாகப் பேசமுடியாது..”

“நீங்கள்?”
(கட் கட் கட் )
(ஹரிலாலைத் தேடிய அந்த இருவரும் :
கேசவ்லால் காந்தி - ஹரிலாலின் தம்பி மகன்,
அதாவது காந்தியின் பேரன் /
சுரேந்திரபாய் காந்தியின் மருமகன் )
பிகு:
இந்தப் பின்னணியை மட்டும் எடுத்துக்கொண்டு
ஒரு காந்தியவாதி- ரேஷ்மா அறை, இன்றைய சூழலில்
ஒரு கதை எழுதி இருந்தேன். யாருமே அந்தக் கதையை
பிரசுரிக்க தயாராக இல்லை!
இப்படி நிராகரிக்கப்படும் கதைகள்
மிகச்சிறந்தவையாகவே இருக்கும் என்று
இலக்கிய வரலாறு சொல்கிறது.
கதையின் தலைப்பு :