Friday, September 30, 2016

சிக்கு முக்கு சிக்குமுக்கு ரயிலே


பஜ்ஜி கவிதை, போண்டா கவிதை, வடை கவிதை இத்துடன் toilet tissue roll poems too.. in the TRAIN

சிறுமியாக இருக்கும்போது தாராவி வீட்டில் பெரிய சன்னல்.அந்த சன்னலிருந்து பார்த்தால் கடல் தெரியும்.
இப்போது அந்தக்கடலை நிரப்பி தான் சயான் பாந்திரா நெடுஞ்சாலை ... கடல் மட்டுமல்ல... இருட்டத்துவங்கும் போது ஆகாயத்தில் தரை இறங்கும் விமானங்கள் சன்னலுக்கு ரொம்பவும் அருகில் வானத்தில் டார்ச் லைட் அடித்துக்கொண்டே பறப்பதைப் பார்க்க எனக்கு ரொம்பவ்ம் பிடிக்கும். புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து ஒரு பக்கம் வாசிபதற்குள் ஒரு விமானம் வந்துவிடும்.
அதன் பின் அந்த விமானம் தரை இறங்கும் வரை அதையே பார்த்துக்கொண்டு இருப்பேன்... இப்படியாக நான் படிக்காமல் செய்த அட்டகாசம் தாங்காமல் தான் என்னையும் கொண்டுபோய் ஊரில்
படிக்க வைத்தார்கள்... அது ஒரு தனிக்கதை.
அப்போதெல்லாம் ஒரு விமானம் வாங்கிவிட வேண்டும் என்பது மட்டுமே என் கனவாக இருந்தது.
அதன் பின் விடுதி வாழ்க்கையில் விடுமுறை விட்டவுடன் திருநெல்வேலி ஜங்கஷனில் பஸ் பிடிக்க காத்திருப்போம். டவுண் பஸ்ஸில் கூட்டம் அதிகம்
என்பதால் தனியார் பேருந்துகள் கண்பதி பஸ், டிஎம்பிஎஸ், பயோனியர் பாப்புலர் பஸ்களுக்காக காத்திருப்போம். அப்போதெல்லாம் எப்படியும் ஒரு பஸ் வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது.
.
இப்போது என் வீடு மத்திய ரயில்வேக்கு மிக அருகில்.
என் வீட்டிலிருந்து டிரெயின் போகிற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைதூரம் செல்லும் ரயில்களும் மும்பை புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயில்களுமாக ...எப்போதும்
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன சகக்ரங்கள்...
இந்த டிரெயின் வருவதை மேம்பாலத்திலிருந்து பார்த்து ரசிப்பது எங்க ஊரு குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு. பெரிசுகளுகும் அதுவே பொழுதுப்போக்கு..
இப்போது கொஞ்சகாலமாக ஒரு டிரெயின் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்க்ம் அந்த டிரெயினில் படுக்கை வசதியுடன் அருமையான ஒரு நூலகம். அத்துடன்
எழுத்தாளர்கள் சந்திக்க விவாதிக்க சிற்றரங்க வசதிகள்.
எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை வெளியிடவும் அக்காட்சியை அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒளி பரப்ப வசதியும் கொண்டதாக அமைக்க திட்டம்.
இன்னும், டிரெயினில் விற்பனையாகும் பஜ்ஜி சொஜ்ஜி வடை போண்டா பொதிந்து கொடுப்பதற்கு கூட வசதியாக ஸ்பஜ்ஜி கவிதை, போண்டா கவிதை, வடை கவிதை இத்தியாதி கவிதைகளும் இருக்கும். அதுமட்டுமல்ல... டாய்லெட் டிஷ்யு ரோல் கவிதைகள் 
என்று (toilet tissue roll poems) வாசித்திருக்கிறேன். அதைப் பற்றியும் விசாரித்துவிட்டு நம் டிரெயினில் அந்த வசதியையும் ஏற்பாடு செய்துவிடலாம். அது ஒன்றும் அதிகச் செலவாகாது. தட்டுபபாடும் வராது. 
ஒரே ஒரு பிரச்சனை தான்... முழுவதும் குளிர்ச்சாதன வசதிகள் கொண்டதாக வைக்கவா அல்லது..?
சிக்கு முக்கு சிக்குமுக்கு ரயிலே

Image result for toilet tissue role poems

Wednesday, September 28, 2016

PARCHED... பெண்வெளியின் தீராத தாகம்


பெண்வெளியின் தீராத தாகம் ...

கல்வி அறிவில்லாத பெண்கள்
இளமையில் விதவையான தாய்
ரிகார்ட் டான்ஸ் ஆடும் பெண்
அவள் உடலைக் கொத்தித்தின்ன காத்திருக்கும்
ஆண்களின் கூட்டம்..
பெண்ணுடலையும் ஆண் பெண்ணுடலில் தேடும்
காமத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தும் பாடல்வரிகள்
கணவன் குழந்தை தரமுடியாதப்போது
வேறொரு ஆணுடன் குழந்தைப்பேறுக்காக
உடலுறவு கொள்ளும் பெண்...
...
இத்தனைப் பெண்களின் கதைகளையும்
மணல்வெளி படர்ந்த ராஜஸ்தான் கிராமத்தின்
கதைக்களத்தில் காட்டி தூள் பரப்பி இருக்கிறார்
இயக்குநர் லீனா யாதவ்.

தன் மகனுக்கு ராணி (தனிஷ்தா சட்டர்ஜி)
ஒரு பெண் குழந்தையைப் பெண்பார்க்கப்போகும்
காட்சியுடன் ஆரம்பமாகிறது படம்.
கல்வி கற்க விரும்பம் அப்பெண் குழந்தை
தன் நீண்ட் தலைமுடியை கத்தரித்துக்கொண்டு
திரும்ணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறது.
ஆனால்... நீண்ட கூந்தல் வெட்டப்பட்ட நிலையில்
அந்த மணப்பெண் மணமகனுடன் செல்லும்போது
முக்காடு விலகி காட்சி வெளிப்படும்போது..
அவமானமாகிவிடுகிறது. பெண்ணுக்கு கூந்தல்தான்
எவ்வளவு முக்கியமாகிவிடுகிறது..!

குடித்துவிட்டு வரும் மகன்... தன் வீட்டிலேயே தன் சேமிப்பை
திருடும் மகன்... அதைத் தட்டிக்கேட்கும் மருமகளைப் பழிவாங்க
அவளை வல்லாங்கு செய்யும் காட்சி...
என் வீடு விபச்சாரவிடுதி அல்ல...என்று தன் மகனுக்கு
எதிராகக் குரல் கொடுத்து விரட்டும் தாய்..
இறுதியாக தன் மருமக்ளை தன் வீட்டை விற்று
அவள் விரும்பிய பால்ய சிநேகிதனுடன் அனுப்பும் காட்சியில்
பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை நோக்கி பயணிக்கும் கதை
ஆரம்பமாகிறது...
குழந்தைக்காக வேறொரு ஆணிடம் போகும் லஜ்ஜூ
(ராதிகாஅப்தே) அக்காட்சி.. என்னவோ நமக்கு
தமிழ்நாவல் பெருமாள் முருகனின் மாதொருபாகனை
நினைவூட்டுகிறது. அந்த ஆடவன் அவள் பாதம் தொட்டு
கும்பிடுகிறான். ல்ஜ்ஜூவும் அவ்னைக் கண்ணீருடன்
வணங்க்குகிறாள்... அதன்பிறகுதான்... உடல்களின்
சங்கமம் அரங்கேறுகிறது.. அக்காட்சி வெறும் உடல்
சம்பந்தப்பட்டதாக இல்லாமல் அதையும் தாண்டிய
ஓர் ஜீவனுள்ள கவிதையாக விரிகிறது.
பிஜ்லி (சுர்வீன் சாவ்லா) சிரிக்கும் போதெல்லாம்
நமக்குச் சிரிக்கமுடிவதில்லை..!
அதுவும் தசாரா திருநாளில்.
ஊர்ப்பொதுவெளியில் திருவிழாவில்
அரக்கன் எரிந்துக்கொண்டிருக்கிறான்....
லஜ்ஜூவின் வீட்டிலும் தீ.. விபத்தாக வருகிறது..
ராணி லஜ்ஜூவின் கணவனைக் காப்பாற்ற முனையும்போது
லஜ்ஜூவே அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு
வெளியில் வந்டுவிடுகிறாள்..... அவர்கள் இருவரும்
பிஜ்லியுடன் சேர்ந்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்குப்
பயணிக்கிறார்கள்....
பெண்வெளியை திரையில் கொண்டுவந்த
இயக்குநருக்கு வாழ்த்துகள்..

Friday, September 23, 2016

சும்மா சொல்லிப்பார்த்தேன்அண்ணன்மார்களே தம்பிமார்களே
இப்போதே உங்களுக்கான சிறப்பு பட்டத்தை
தேர்வு செய்துவிடவும்.

தமிழ்நாட்டின் அலெக்சாண்டர்

தமிழ்நாட்டின் நெப்போலியன்

தமிழ்நாட்டின் புருஷோத்தமன்

தமிழ்நாட்டின் தாகூர்

தமிழ்நாட்டின் ஓபாமா..

இப்படியாக நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானலும் இப்போதே தேர்வு செய்து கொள்ளவும்.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை.

ஆண்களுக்கு மட்டும்தானா...

பெண்களுக்கும் இதோ

தமிழ்நாட்டின் மேரி க்யூரி

செம்மொழியாம் தமிழ்மொழியின் செல்மா லோவிசா

தமிழ்தாய் பெற்றெடுத்த பெர்ல் பக்

தமிழ்க்கேடயம் கேப்ரியலா

இலக்கிய உலகில்  நெல்லி சாகஸ்

தமிழ்க்கனல் டோனி மாரிசன்

தமிழ்ப்புலி டோரிசு லெசிங்க்

எங்கள் தமிழச்சி எர்டா முல்லா

இப்படியாக பெண்களுக்கும் ஏகபப்ட்ட அடைமொழிகள்
காத்திருக்கின்றன.

ஆமாம்.. இவர்கள் எல்லாம் யார்?
என்னிடம் கேட்காதீர்கள்...
எனக்கென்ன தெரியும்..?
சும்மா.. சொல்லிப்பார்த்தேன்.Tuesday, September 20, 2016

CORPORATE DEMOCRACY

எனக்கு எழுதுவதற்கான உரிமை இருக்கிறது.
பேசுவதற்கான உரிமை இருக்கிறது
போராடுவதற்கான உரிமை இருக்கிறது.
ஆனால் நான் எதை எழுத வேண்டும்
எதைப் பேச வேண்டும் , எதற்காக போராட வேண்டும்
என்பதை தீர்மானிக்கும் காரணிகள்
ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன.
நான் எதைச் சாப்பிட வேண்டும்
எதை அணிய வேண்டும்
எந்தக் கைபேசி என் கையில் இருக்க வேண்டும்
நான் எந்தக் காரை வாங்க வேண்டும்
நான் எதில் பயணிக்க வேண்டும்
எனக்கு மின்சாரம் தேவையா இல்லையா
ஏன் எனக்கு என்னமாதிரி வியாதிகள் வரவேண்டும்
என்பதையும் கூட அவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.
CORPORATE GLOBALISM முதலாளித்துவ உலகமயமாதலின்
விளைவுகள் இவை. இந்தியாவைப் பொறுத்தவரை இது
CORPORATE DEMOCRACY

Monday, September 19, 2016

அதுவேறு இது வேறா, தோழா

அதுவேறு இது வேறா,  தோழா
------------------------------------------------
அவனை அவர்கள் அடித்துக்கொன்றார்கள்.
அதைப் பற்றி எழுதியபோது 
அதைச் சாதியம் என்றார்கள்  தோழர்கள்.
இவனை இவர்கள் சாகடித்தார்கள்.
இப்போது எங்குப்பார்த்தாலும்
மனிதநேயம் பூத்துக் குலுங்க்குகிறது.
நேற்று எங்கள் ஊரில் டவுண் பஸ் பிரேக்டவுண்.
ஆளும்கட்சியின் அட்டகாசம்
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக
ஜனநாயகக்காவலர்கள் சீறிப்பாய்ந்தார்கள்.
நியூட்டனின் மடியில் புவிஈர்ப்பு விசை.
ஆப்பிள்கள் விழுகின்றன.
கொட்டும் மழையில் குடைப்பிடித்து
ஒதுங்கி நடக்கிறது நிழல்.
சகதியை வாரி இறைத்துக்கொண்டு
வேகமாக ஓடி மறைகிறது நிஜம்.
அதுவேறு இதுவேறு தான் தோழா.
அதுவேறு இதுவேறு தான். 

Saturday, September 17, 2016

பெரியார் என்னை மன்னிக்க வேண்டும்.இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள். 
அவரைப் பற்றி  சில துளிகள்:
***
நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம்
நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி
- தந்தை பெரியார் 1950ல் சென்னை ராபின்சன் பூங்காவில்
நடைபெற்ற கூட்டத்தில் பேசியது.
**
தந்தை பெரியார் என்று சொன்னவுடனேயே அவர்
நாத்திகர், கடவுள் மறுப்பாளர் என்ற அடையாளம்
மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. அவர் கடவுள் மறுபாளர் தான்.
அவருடைய நாத்திகக்கொள்கை மேற்கத்திய நாடுகளின்
நாத்திகக்கொள்கை போல முழுக்கவும் அறிவியல்
சார்ந்தது அல்ல. மனித நேயம் சார்ந்தது .
***
திரு.வி.க தமிழறிஞ்ர். அவர் நடத்திய பத்திரிகைகளின்
பெயர் நவசக்தி, தினசரி... (சம்ஸ்கிருத சொற்கள்)
பெரியார் தமிழறிஞரில்லை. அவர் நடத்திய பத்திரிகைகளுக்கு
விடுதலை, குடியரசு . உண்மை ... என்று தமிழில் பெயர் வைத்தார்.
**
பெரியார் இந்துமத அடையாளங்களை எதிர்த்தவர். ஆனால்
அவர் தான் திரு.வி.க தன் இல்லத்தில் தங்கியிருந்தப் போது திரு வி க நீராடி முடித்தவுடன் கைகளில் விபூதியுடன் காத்திருந்தார் பெரியார்.. திரு.வி.க குளித்தவுடன் விபூதி பூசுவார் என்பதால்.
பெரியார் குன்றக்குடி அடிகளார் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் அவரை "மகாசந்நிதானம் அவர்களே " என்றே அழைத்தார்.
***
16-6-1968ல் நடந்த அன்பரசியின் காதுகுத்து விழாவில்
பெரியார் பேசுகிறார்:
"பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக்கும்
பலவித சடங்குகளைச் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான்
இந்த காதுகுத்தும் சடங்கு"
(இம்மாதிரி எல்லாம் ஒரு தலைவர் பேசுகிறார் தன்
தொண்டர்களின் வீட்டு நிகழ்வுகளில் தலைமை ஏற்று...!!)
***
பெரியார் நடத்தும் கூட்டங்களில் நூல் விறப்னைக்கு கடைகள் போடுவார். அவரே மற்றவர் நூல்களையும் மலிவு விலையில் அச்சில் கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு கூட்டத்திலும்
தன் பேச்சின் தொடக்கத்தில் "நூல் அறிமுக உரை " ஆற்றுவது அவர் வழக்கம். இதைப் போல வேறு எந்த தலைவரும் செய்திருப்பதாக
நான் கேள்விப்படவில்லை.
***
வருடத்தில் 365 நாட்களில் 220 நாட்கள் அவர் கூட்டங்களில் பேசி இருக்கிறார். தன்னுடைய 95 வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தக் க்டைசி 3 மாதங்களில் கூட 42 கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவ்ருடைய உரைகளைத் தொகுத்து
ஆடியோ கேசட்டில் பதிவு செய்து நிறுத்தாமல் தொடர்ந்து ஓடவிட்டால் இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் பேச்சு தொடர்ந்து ஒலிக்கும்.உலகிலேயே தன் கொள்ளைப் ப்ரப்புக்காக அதிகம் பேசியவர்,
அதிகம் பயணித்தவர் இந்த நூற்றாண்டில் தந்தை பெரியார் தான்
என்று அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ.
***
பிற்சேர்க்கை...
தந்தை பெரியார் என்னை மன்னிக்க வேண்டும்...
தந்தை பெரியாரின் இத்தனை வீச்சுகளையும் திராவிட அரசியலில் ஓட்டு வங்கியாக மாற்றியதில் வெற்றி கண்டவர் திமுகவை தோற்றுவித்த அறிஞ்ர் அண்ணா அவர்கள்.
பெரியாரையும் அண்ணாவையும் கவசமாகவும் வாளாகவும் வைத்துக்கொண்டு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியதில்
மகத்தான வெற்றி பெற்றிருப்பவர்
டாக்டர் கலைஞ்ர் மு. கருணாநிதி அவர்கள்.
காலம் கேட்கும் கேள்வி:
இந்த சாம்ராஜ்யம் யாருக்கானது ?

Wednesday, September 14, 2016

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு
அண்ணாவின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு...

நமது கலைஞர் தொலைக்காட்சியில்
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
கலைஞரின் கைவண்ணத்தில்
கலைஞரின்
தென்பாண்டி சிங்கம்
இரவு 8.30
.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்தநாளை
ஒட்டி அண்ணாவைப் பற்றிய எந்த ஒரு சிறப்பு
நிகழ்வுகளுஒளிபரப்பவாதில்லை என்று என் போன்ற
ஒரு சிலர் ரொம்பவும் அக்கறையுடன் கவலைப்பட்டு
எழுதிக்கொண்டிருந்தோம். இந்த ஆண்டு என் கவலை
தீர்ந்துவிட்டது போங்கள்.
மனசு பூரித்துவிட்டது.. அப்படியே..

அண்ணா வாழ்க. அண்ணாவின் நாமம் வாழ்க.

Monday, September 12, 2016

உலக வங்கியின் கடன்பத்திரத்தில் இந்தியா"கடன் காரப் பாவிமக்கா.."
ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு தடவையாவது
நான் இந்த சாலையை கடந்து செல்கிறேன்.
(eastern express highway)
ஒவ்வொரு முறையும் இந்த சாலையை நான்
பயன்படுத்துவதற்காக அரசாங்கம் என்னிடம்
பணம் வசூலிக்கிறது. இந்தியா எங்கும் சாலைவழி
போக்குவரத்தில் இன்று இது பெருகிவிட்டது.
ஏன் வசூலிக்கிறார்கள்? எவ்வளவு ஆண்டுகள் வசூலிப்பார்கள்?
நாம் ஏன் கொடுக்க வேண்டும்? அவர்கள் நாம் கொடுக்கும்
பணத்தை குறிப்பிட்ட அச்சாலையின் பராமரிப்புக்கு
செலவு செய்கிறார்களா ..? பாருங்கள் .. எவ்வளவு
கேள்விகள் எழுகின்றன.
INFRA STRUCTURE .. STRUCTURE என்று அடிக்கடி பேசுகிறோம்
.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இது ரொம்பவும் முக்கியமானதுதான்
 என்பதையும் மறுப்பதற்கில்லை. 
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது..
உலக வங்கி இந்தியா போன்ற நாடுகளுக்கு இத்திட்டங்களுக்காக 
கடன் வழங்குகிறது.
க்டந்த 70 ஆண்டுகளில் அதிகமாக உலகவங்கியிடம் 
கடன் வாங்கி இருக்கும் நாடு இந்தியா தான்.
(எவ்வளவு வழங்கியிருக்கிறது என்பதையும் அட்டவணையில் பார்க்கவும்)
1947 முதல் 1994 வரை மட்டும் உலக வங்கி 6000 பிராஜெக்டுக்கு திட்டம் போட்டது,அதில் எதையும் நிறுத்தவில்லை. கொடுத்து முடித்துவிட்டது.
க்டன் வாங்கிய இந்தியா,,, வின் நிலைமை:
1993 முதல் 1998 வரை வாங்கிய கடன் தொகையை விட
அதிகமாக 1,475 பில்லியன் டாலர் தொகையை இந்தியா
உலக வங்கிக்கு கட்டி இருக்கிறது
வட்டியைக் கட்டுவதற்கு கூட தடுமாறிப்போய் இந்தியா
மீண்டும் மீண்டும் உலக வங்கியிடம் கடன்வாங்கிக் கொண்டு அதைக் கொண்டு , பழைய கடனுக்கு வட்டி செலுத்துகிறது..
(ஆதாரம் உலகவங்கியில் 1998ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை)
இதுவும் ஒருவகையான காலனியாதிக்கம் தான்.
எப்படியோ... வாங்கியக் கடனுக்கு நம்மை எல்லாம்
என்னிக்கோ அடகு வச்சிட்டாங்கப்பா..


Sunday, September 11, 2016

செல்லம்மா பாரதிக்கு...
இன்று மகாகவி பாரதியின் 95வது நினைவுநாள்.
இந்தாளில்

பாரதியை மகாகவியாக வாழவிட்ட செல்லம்மா பாரதியின் பாதம்
பணிகிறேன்.
1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.யிலிருந்து
சில பகுதிகள்.

மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்....

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Saturday, September 10, 2016

இப்படிக்கு காவிரி...


தற்கொலை தடுப்பு நாள் -செப் 10

World Suicide Prevention Day on September 10, 2016.
இந்த நாளில் என்னைப் பேசவிடுங்கள்.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.என் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல்
என்றெல்லாம் எழுதி வைக்கப்போவதில்லை.
அப்படியே யார் யார் காரணம் என்று நான்
எழுதி வைத்தாலும் உச்சநீதிமன்றமே
என் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க
வேண்டும் என்று ஆணையிட்டாலும்..
என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது.??
எனக்கு உங்கள் நீதிமன்றங்கள் மீதிருந்த
நம்பிக்கை பொய்த்துவிட்டது.
எனக்கு உங்கள் போராட்டங்கள் மீதிருந்த
அபிப்பிராயங்கள் செத்துவிட்டன.
திருமணமானவுடன் என்னிடம் வந்து மலர்த்தூவி
வழிபட்டு வணங்கி செல்லும் உங்களுக்கு
கொடுப்பதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை.
என்னை நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம்
நான் கெஞ்சப்போவதில்லை.
உங்கள் மன்னிப்பு எனக்கு எதற்கு?
என்னில் கலந்து தன்னை மறந்தக் காதல் உறவுகளை
நஞ்சூட்டி கொலை செய்த பாதகர்கள் நீங்கள்.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
இனி ... நான் கடந்த காலமாக..
உங்கள் இலக்கியதில் முகநூலில் மட்டுமே
பேசப்பட்ட பாடுபொருளாக ...
என் தற்கோலைக்கு காரணமானவர்கள்
நீங்கள் உருவாக்கிய உங்கள் தலைவர்கள் என்பதால்
உங்களையும் நான் மன்னிக்கப்போவதில்லை.
தற்கொலைக்கு தயாராக இருக்கும் இத்தருணத்தில்
உங்கள் தொட்டிலில் அழும் குழந்தைகளின் அழுகுரல்
என்னை ஸ்தம்பிக்க வைக்கிறது.
பாலூட்டிய மார்பகங்கள் புற்றுநோயால் சிதையுண்டு
இனி.. காலம் கடந்துவிட்டது.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
என்னைத் த்டுக்கும் உரிமையை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
இப்படிக்கு ..... காவிரி.

Wednesday, September 7, 2016

JIO JIO MODI JI


ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில்
ஜியோ ஜியோ என்று நம் பிரதமர் சந்தோஷத்தில் குதிக்கிறார்.
TRAI விதிகளில் இருக்கும் ஓட்டைகளை மிகவும் தந்திரமாக
 கையாண்டு வெற்றி பெற்றுவிட்டது ரிலையன்ஸ் 
அதாவது கட்டணம் இல்லாத அழைப்புகள் 
(free trial calls) எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி 
காலவரையறை இல்லை.
இந்த free trial calls காலத்தில் அரசுக்கு ரிலையன்ஸ் 
சேவை வரியோ கட்டண வரியோ செலுத்த
 வேண்டியதில்லை. 
அந்த தொகை மட்டும் ரிலையன்ஸின் ஜியோ வரவில்
 25% முதல் 28% வரை இருக்கும்.
அதாவது அவ்வளவு தொகை அரசுக்கு இழப்பு
. தனியார் நிறுவனத்திற்கு கொள்ளை லாபம். 

BSNL 4 டவர்களில் அனுப்பும் அலைவரிசையை 
தனியார் நிறுவனங்கள் ஒரே ஒரு டவரில் அதிகமான
 மின்சாரத்தைக் கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தி 
அனுப்பி வருகின்றன. இதைப் பற்றி கருத்து தெரிவித்த
 BSNL தோழர் பால்கி அவர்கள்
"தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிகமாக 
அழைப்பு வரக்கூடிய இடத்தை சர்வே செய்து, டவர் 
அமைத்து, 18 சதுர கிலோமீட்டர்
பரப்பளவுக்கு கொடுக்கக்கூடியதை 36 கிலோமீட்டர்
 பரப்பளவுக்கு பூஸ்ட் செய்வார்கள். இதனால் பயனாளர்களின் ந்ரம்பு மண்டலம் பாதிக்கபப்ட்டு உடல்நலம் கெடுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு சேவைசெய்ய டவர்கள் இல்லை. நஷ்டத்தில் ஓடக்கூடிய டவர்களை வாடகைக்குக் கேட்டு வருகிறது.
திட்டமிட்டே, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நஷ்டத்தில்
ஓடக்கூடிய டவர்களை தனியாருக்கு ஷேர் செய்யலாம்
என்ற சட்டமும் போட்டது. " என்று சொல்லி இருக்கிறார்.
எனவே, BSNL நஷ்டத்தில் இருக்கும் டவர்களை
ரிலையன்ஸ் பயன்படுத்தும்.
இப்படித்தான் அரசாங்கத்தின் பணம், 
அதாவது நம்முடைய பணம் தனியாருக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்படுகிறது.
எல்லாம் இலவசம் எல்லாம் இலவசம் என்ற
இலவச வியாதியில் நமக்கு கணக்குப்போடக் கூட
மறந்துவிடுகிறது.
(நேரம் இருப்பவர்கள் see JIO vs BSNL tariff )
இப்படியாக பொதுஜனம் இலவச மயக்கத்தில் கொள்ளை அடிக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் சட்சாத் நம் பாரதப்பிரதமர் ,
120 கோடி மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்
ஜியோ அறிமுகத்தை முன்னிட்டு வெளியான 
டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் 
போன்ற தேசிய ஆங்கில நாளிதழ்களின் முழுப்பக்க-முதல்பக்க விளம்பரத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். .
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும், 120 கோடி நாட்டு மக்களுக்கும், ஜியோவை அர்ப்பணிக்கிறோம் என்று விளம்பரத்தில் வாசகமும் இடம் பெற்றிருந்தது. மும்பையில் நடந்த ஜியோ அறிமுக விழாவிலும்,
முகேஷ் அம்பானி, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறிப்பிட்டு பேசி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
பிரதமர் & முகேஷ் அம்பானி அறிவித்திருக்கும் 
இந்த 120 கோடி மக்களில் நானும் இருக்கிறேனா... ?!!
இந்த அர்ப்பணிப்பு எனக்கு வேண்டாம் என்று அறிவிப்பது
எப்படி என்ற குழப்பத்தில் நான்.