Thursday, October 26, 2017

நெற்றிக்கண்ணைக் காணவில்லைஅவனுடைய நெற்றிக்கண்ணைக் காணவில்லை.
யார் திருடி இருப்பார்கள்?
என்ன நடக்குமோ 
அச்சத்தில் பனிச்சிகரங்கள் தடுமாறுகின்றன.
எங்கே போனது நெற்றிக்கண்?
சல்லடைப் போட்டு மூவுலத்திலும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
தொலைந்துப் போன நெற்றிக்கண்ணை.

நக்கீரனின் விலாசம் மறந்துப்  போனதால்
கண்ணப்பனைத் தேடி பெருநகரவாசிகள்
காட்டில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அடர்ந்த வனத்தில் மின்னலைப் போல ஜொலிக்கும்
 பேய்மரங்களின் கிளைகளில்
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்
 யட்சிகளுக்கும் தெரியவில்லை.
கழுத்தில் படமெடுத்து ஆடிய நாகம்
நாகமணியை வெளியில் துப்பி 
புதர்களுக்குள் தேடிக்கொண்டிருக்கிறது நெற்றிக்கண்ணை.
தற்காத்தல் அறிந்த பார்வதி தேவி 
தற்கொண்டான் பேணுவதில் தவறிவிட்டதாக
கங்காதேவி குற்றம் சுமத்துகிறாள்.

எல்லைக்காவல் படையினர் பதட்டத்தில் இருக்கிறார்கள்.
எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கிகள் வெடிக்கலாம்.
அமைதிப் புறாக்கள் அரசியல்வாதிகளின் கூடுகளில் 
அடைக்கப்பட்டுவிட்டன.
எங்குப் பார்த்தாலும் நெற்றிக்கண் பற்றிய
பர பரப்பான செய்திகள்.
நெற்றிக்கண் எப்படி இருக்கும்?
இமைகள் உண்டா , கிடையாதா?
செம்பற்சோதியான் செக்கற்மேனி
சுடர்விழி ஆழியோ நெற்றிக்கண்?
இளம்பிறைதானோ நெற்றிக்கண்!
செம்மொழிப் புலவர்கள்
சங்க இலக்கியத்தில் நெற்றிக்கண்ணைத் தேடும் 
ஆய்வுகளைத் தொடங்கிவிட்டார்கள்.
நெற்றிக்கண் ஆணாதிக்கத்தின் அடையாளமென
பெண்ணியவாதிகள்  பேசுவது சரியா தவறாவென
நவீன இலக்கியத்தின் பிதாமகன்கள் 
சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள்..
நெற்றிக்கண்ணைக் காணவில்லை.

நெற்றிக்கண் முன்  தோற்றுப்போன காமதேவன்
 கையில் கரும்புடன்
மீண்டும் களத்தில் நிற்கிறான்
இருள் வெளிச்சத்தில் ரதியின்  சிவலிங்க பூஜை
அலைகளுக்கு நடுவில் பவளப்பாறைகள் விழித்திருக்கின்றன.
மரங்கள் பூக்கின்றன.
முட்டை ஓடுகளை  உடைத்தக்  குஞ்சுகள்
இரைக்காக  சப்தமிடுகின்றன.
ஒற்றைக்கண்ணால் சரித்துப் பார்க்கும் காக்கை
வடையைத் திருடக்  காத்திருக்கிறது.
தலைவர்கள் கண்களைக்  கறுப்புக்கண்ணாடிகள்
அலங்கரிக்கின்றன.
நெற்றிக்கண்ணை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.
திரிகூட மலையில் லட்ச தீபங்கள்
செண்பகப்பூவின் மணம் அருவிகள் எங்கும்..
பஃறுளியைத் தேடி  பயணிக்கிறது தாமிரபரணி.
அவன் கண்கள் மெல்ல சிரிக்கின்றன..

Thursday, October 19, 2017

சாதாரணம் தான் ஆனால்..

இது சாதாரணமான நிகழ்வு தான்.
எல்லா இடங்களிலும் நடப்பது தான்.
ஆனால் இதை எல்லாம் எப்படி சாதாரணமாக
கடந்துப் போவது?

என் குடியிருப்பின் மாடிப்படிகளை அவன் தண்ணீர் விட்டு
கழுவி விட்டிருக்கிறான். சலவைக் கற்கள் பளபளக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன் கட்டாயம்
 இப்படிக் கழுவுவது அவன் வேலை.
அடுக்குமாடிக் கட்டிடம். வேலை அதிகம் தான்
அதனாலோ என்னவோ அவன் மனைவியும்
சேர்ந்து வந்திருந்தாள்.
அது மட்டுமல்ல ஒவ்வொரு தளத்திலும் கழிவறை
வசதிகளும் உண்டு. அதையும் மறக்காமல் கழுவி
 விடுவார்கள். காலையில் ஆரம்பித்தால் பிற்பகல்
 தாண்டி மாலை வரை நீடிக்கும்.
இதோ.. சிறார்கள் பட்டாசு வெடிக்கிறார்கள்.
 தற்போது பட்டாசுகளின் அளவு குறைந்திருக்கிறது என்றாலும் வெடிக்கத்தான் செய்கிறார்கள். நாளையும் நாளை மறுநாளும்  தோட்டமெங்கும் கட்டிடத்தின் சுற்றுப்புறம் எங்கும்
 பட்டாசு வெடிகளின் கழிவுகள் சிதறிக்கிடக்கும்.
அதை அவர்கள் தான் பெருக்கி எடுக்க வேண்டும்.
அவர்களுக்கு நாங்கள்  அனைவரும்  மறக்காமல்
 தீபாவளி டிப்ஸ் கொடுத்துவிடுவோம்.
இது எல்லாம் எல்லா இடங்களிலும் நடப்பது தான்
 என்கிறீர்களா..?
அப்படித்தான் நினைக்கிறேன் நானும்.
ஆனாலும் என்னவொ நெருடலாகவும்
குற்ற உணர்வாகவும் இருக்கிறது.
அவனுடனும் அவளுடனும் சேர்ந்து வந்திருந்த
 அவர்களின் மகனைப் பார்க்கும்போது. 

Saturday, October 14, 2017

ஆரையடா சொன்னா யடா ..

Starr 061108-9798 Marsilea villosa.jpg

ஆரையடா சொன்னா யடா
ஒரு காலடி நாலிலைப் பந்தலடி
அது என்னடீ..
என்று ஒளவையை "டீ"  போட்டு  அழைத்தானாம்
  கவி சக்கரவர்த்தி என்று போற்றப்படும் கம்பன்.
அவன் அகங்காரத்தை  தன் கவிதைமொழியால்
அடக்கியவள் ஒளவைப் பெருமாட்டி என்பது
 வாய்வழியாக வரும் பழங்கதை.
எங்கள் ஊரில் வயக்காட்டில் ஆரங்கீரை வரப்போரத்தில்
வளர்ந்திருக்கும் . பள்ளிக்கூடத்திற்குப் போகாத எங்க ஊரு
பெரிசுகள் கூட காதில் பாம்படம் ஆட
தங்கள் மூதாட்டி ஒளவையின் பெருமையை
ஆரங்கீரையில் கண்டு அதை என்னிடம் சொன்னது
 இன்று பழங்கதையாகிவிட்டது.
இன்று வயல்களுமில்லை, வரப்புகளுமில்லை,
 ஆரங்கீரைகளும் காணாமல் போய்விட்டன.
ஒளவைகள் கூட  இதை எல்லாம் மறந்து
 பல காலமாகிவிட்டது.

ஆரங்கீரையை ஆரக்கீரை  என்றும் சொல்கிறார்கள் .
ஆங்கிலப் பெயர்: water clover
பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும்
மழையின்றி  காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில்
 மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் ..

ஒளவையின் பாடல்:
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
கூரையில்லா வீடே  குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா

தெருச்சண்டையில் ஏசுகின்ற சொற்கள்
அவலட்சணமானவனே, எருமையே,
கழுதையே, குட்டிச்சுவரே, ஏ குரங்கே..
என்று ஏசிவிட்டு.. ஆரைப் பார்த்துடா உன் விடுகதைக்கு
விடை கேட்கிறாய் என்று சிலேடையில்
 ஆரங்கீரை என்ற பதிலையும்  சேர்த்து சொன்னவள்
ஓளவை.
இதில் அவலட்சணம் என்ற பொருள் தரும்
"எட்டேகால் லட்சணமே"..
அன்றைய பெண்ணின் கணித  அறிவு.
தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்றும்
 கால் என்பதை ‘வ’ என்றும் குறிப்பார்கள்.
 எனவே, எட்டேகால் லட்சணம் என்றால்
அவலட்சணம் என்று ..!!
அடேங்கப்பா..
ஆரையடா சொன்னா யடா

Tuesday, October 10, 2017

சசிகலாவைக் கண்டு யாருக்கு அச்சம்?

சசிகலாவைக் கண்டு யாருக்கு அச்சம்?
"தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை
 விட ஆபத்தானவர் அல்ல சசிகலா"
சசிகலா குற்றவாளியா இல்லையா
நல்லவரா கெட்டவரா
மறைந்த "ஜெ"வின் மரணத்திற்கும் அவருக்கும்
 உள்ள தொடர்பு என்ன?
இப்படி எழும் கேள்விகளுக்கு நடுவில் இன்னொரு
 மிக முக்கியமான கேள்வியை தமிழக ஊடகமோ 
மனித உரிமை குறித்து பேசுபவர்களோ
எழுப்பாமலிருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது.
1993ல் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில்
 கைதானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 
அவருடைய வீட்டில் துப்பாக்கிகள் இருந்தது
 என்று கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு
5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது கூட தன் மகளின் நாசி அறுவைச்சிகிச்சையை 
முன்னிட்டு சிறையிலிருந்து
காப்பு விடுப்பில் (பரோலில்) வெ ளியில் வந்துவிட்டார்.
 இப்படியாக கடந்த 2 ஆண்டுகளில் அவர் வெளியில் இருந்தது மட்டும்
 5 மாதங்களுக்கும் மேலிருக்கும்.
ஆனால் சஞ்சய் தத் போல ஒரு குற்றவாளி அல்ல சசிகலா.
சசிகலா வின் குற்றப்பின்னணி பொருளாதரம் ஊழல்
 சார்ந்த குற்றமும் அதற்கு உடந்தையாக இருந்ததும்.
 இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும்
என்றால் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் 
சாட்டப்பட்டவரை விட ஆபத்தானவர் அல்ல சசிகலா. 
ஆனால் ஏன் சசிகலா வின் காப்பு விடுப்பில்
இத்துணை கட்டுப்பாடுகள்? 
சசிகலா வெளியில் வருவதும் வெளியில் இருப்பதும்
யாருக்கு ஆபத்து? 
எந்த அதிகாரத்தின் கோட்டைக்கு அவர் வெளியில் இருப்பது
ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது?. 
இந்த ஒற்றைப்புள்ளியில் சசிகலா வின்
பரோல் விடுப்பு பற்றியும் அதிலிருக்கும் அரசியல்,
 மாநில அரசியல், மாநில அரசியலைக்
காவு வாங்கும் மத்திய அரசும் அரசியலும் பேசப்பட்டிருக்க வேண்டும்.
 ஆனால்
அதைப் பற்றி பேசாமல் அதிலிருக்கும் மாநில மத்திய அரசியலைப் பேசாமல் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்.
இப்பதிவு சசிகலா என்ற தனிப்பட்ட அரசியல்வாதிக்கான 
ஆதரவு பதிவு அல்ல, (அது என் நோக்கமும் அல்ல. ) 
அதையும் தாண்டி, நாம் பார்க்க வேண்டிய மாநில மத்திய
 அரசியல் சதுரங்கம் ஆட்டம். இந்திய இறையாண்மை, மாநில
இறையாண்மை. இந்தியக் கூட்டாட்சி, மாநில சுயாட்சி

Saturday, October 7, 2017

அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு

கருத்துகளைத் தெரிந்து கொள்வது முதல் நிலை.
அடுத்தது தெரிந்ததைப் புரிந்து கொள்வது.
புரிந்தப் பின் ஏற்றுக்கொள்வதும் கடந்துசெல்வதும்.
ஆனால் வாழ்க்கையில் பெரும்பகுதி
 புரிந்து கொள்வதிலேயே கழிகிறது.

அறிந்து கொண்டதும் புரிந்து கொ ண்டதும் 
காலப்போக்கில் அர்த்தமிழந்துவிடுகின்றன.
"அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு "
இப்படி அறிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும்
இன்று என்னவாக இருக்கிறது ?!!
இந்த முழக்கம் "ஒரு பயங்கரமான அரசியல் மோசடி"
 என்று திரு. சம்பத் அவர்கள் அன்று  சொன்னபோது
அவரைத் துரோகியாக நினைத்ததும் ஒதுக்கியதும்
 நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டை விட  சிறிய நாடுகள் எல்லாம்
 இன்று சுதந்திரம் பெற்ற தனிநாடாக இருக்கும் போது
 தனித்தமிழ் நாடு ஏன் சாத்தியப்படாது?
 என்று இன்றைய தமிழ்த்தேசியம் கேட்கிறபோது
அந்தக் கருத்தியல் ரீதியான விளக்கத்தில்
அப்படியே உணர்ச்சிப் பொங்க
 நாடி நரம்பெல்லாம் புடைத்து வீங்கி வெடித்து..
மேடை அதிர கை தட்டல் ..
 பேசியவருக்கும் கேட்டவருக்கும் மகிழ்ச்சி. மகிழ்ச்சி.
தமிழ்தேசியம் வாழ்க வளர்க ..
தமிழினப்பற்றை  உறுதி செய்துவிட்ட பெருமிதத்தில்
அன்றைய தினம் .
ஆனால் அம்மாதிரியான தருணங்களில் எல்லாம்
என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது இந்த வசனம்
"அடைந்தால் திராவிடநாடு. இல்லையேல் சுடுகாடு"Sunday, October 1, 2017

காந்தியும் மும்பைத் தமிழர்களும்

Image result for gandhi at manibhavan

தேசியம் இல்லாத தேசம்  எங்கள் இந்தியத் தேசம்.
கனக-விசயனின் தலையில் கல்சுமக்க வைத்தது எங்கள்  கடந்தகாலசரித்திரம்
கார்க்கில் போரில் வீரமரணம் இன்றைய  வரலாறு.
இந்திய தேசம் என்பது இமயமுதல் குமரி வரை என்பது
பூகோளம் அறியாதவர்கள் எழுதிவைத்தது.
குமரி முதல் இமயம் வரை என்பது ,மனித இன வரலாறு.
இப்படி புரளும்   வரலாற்றின் அலைகளில்
 காந்தியம் என்ற பேரலை வீசிய போதும்
 நாங்கள் அடித்துச் செல்ல முடியாத
அழிக்க முடியாத எழுத்துகளை எழுதியிருக்கின்றோம்.
எங்களிடம் தான்  காந்தியத்தின் சத்தியாகிரகத்தின்
உப்பின் வேர்வை  கரைந்திருக்கின்றது.
அந்தக் கரைசல் வெறும் பெளதிகக் கரைசல் அல்ல,
சத்திய சோதனையை அக்னி சோதனைக்கு உள்ளாக்காத நம்பிக்கை.
அந்த நம்பிக்கை பலரின் வாழ்க்கையானது.
இந்த அரபிக்கடலோரம் இந்திய வரலாற்றில்
 எத்தனையோ பக்கங்களை  எழுதி இருக்கிறது.
அதில் காந்தியும் எழுத மறந்த சிலப் பக்கங்கள் உண்டு.
இவை எங்களைப் போன்ற சாமனியமானவர்களின் பக்கங்கள்.
எங்களுக்கு முகவர்கள் இல்லை. முகவரிக் கூட இல்லை.
அதனால்தான் எங்கள் வாழ்க்கையின் உன்னதங்களைப்
 பதிவு செய்பவர்கள் இல்லை.
எழுதத் தெரியாத மக்கள் எத்தனையோ
எழுதமுடியாதச் சரித்திரங்களை தன் வாழ்க்கையில் எழுதினார்கள்.
இன்று-
அந்தச் சரித்திரத்தின் எச்சமாக நிற்பவை சிலரின் பெயர்கள்.
அந்தப் பெயர்கள் மட்டுமே கடலோரம் இருக்கும் கல்வெட்டுகள்.
**
காந்தி, பகவத்சிங், திலக், பாரதி  இதெல்லாம்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைத்தப் பெயர்கள்.
அட... காந்தி என்பது தனி நபரின் பெயரல்ல..
அது ஒரு குடும்பத்தின் பெயர். (SURNAME)
இதை எடுத்துச் சொன்னபோது அதனாலென்ன..,
அடுத்தக் குழந்தைக்கு காந்தியின் பெயரை
வைத்து விடுகின்றேன் .."மோகன்" என்று..
இப்படி பெயர் வைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.
அவர்களில் ஒருவர் , காந்தி என்ற பெயர்சூட்டப்பட்டவர்
 இன்று பத்தமடை காந்திநகரில் சீரும் சிறப்புமாக
வாழ்ந்து கொ ண்டிருக்கிறார்.
பகவத்சிங், மோகன் என்ற பெயர் சூட்டப்பட்ட அந்தக் காந்தியவாதியின் மகன்கள் இன்று இல்லை.
இன்னொரு  சுவராஷ்யமான செய்தி ..( நினைவில் வாழும் சீர்வரிசை சண்முகராசன் மூலமாக நானறிந்த சம்பவம் )
அவர்களில் ஒருவர்... தொழிலாளி..
தனக்குப் பிறந்தப் பெண்குழந்தையை...
இரண்டு மாதம்கூட ஆகாத தன் குழந்தையை எடுத்துக்
கொண்டு மும்பையிலிருக்கும் மணிபவன் வாசலில்
 காலையிலிருந்து காத்திருக்கின்றார்...
கூட்டம்.. அலைமோதுகிறது...
அந்தக் காந்தியப் பேரலையில் நனைய வந்திருக்கும்
பச்சிளங்குழந்தை அழுகிறது..
வெயில் தாங்காமல்.. கூட்ட நெரிசலில்..பசித்து..

"வேண்டாம் நமக்கு இந்த அலையின் ஈரம்..
இந்த அகிம்சை விடுதலையில் நம் அடிமைத்தளை 
உடையப் போவதில்லை.
தலைவர்களுக்காக  நீங்கள் ரத்தம் சிந்தியது போதும்
என் கண்களையும் கட்டி விடாதீர்கள்
நான் எனக்கான விடுதலையைப் போராடியே 
பெறுவதற்குப் பிறந்துவிட்டேன்
வேண்டாம் எந்த மகாத்மாவும் ..
எனக்குத் தேவை மனிதர்கள் மட்டும்தாம்..!."

அழுதது அழுதது....
இன்னும் அழுதுக் கொண்டே இருக்கிறது.
ஆனால் கேட்காதச் செவிகள்..
அப்படித்தான் அந்தக் குழந்தையுடன் அவரும் ...
அந்தக் குழந்தையின் அழுகுரல்..
காந்தியின் கூடாரத்தில் முட்டி மோதி
அவர் மெளனத்தைக் கலைத்துவிட்டதா ?
பின் எப்படி நிகழ்ந்தது அந்த நிகழ்வு..!
காந்தியின் உதவியாளர்  வெளியில் வந்தார்.
அழுகின்ற குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கும் செல்லையாவிடம்.

செல்லையா கண்களில் நீர்மல்க...
எங்கள் காந்தி-
என் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன்...!
கண்ணப்பனுக்கு காட்சியளித்த  சிவனின்கதை வெறும் புராணம்..
இந்தச் செல்லையாவுக்கு அன்று காந்தி கொடுத்தது?
செல்லையாக்களின் வாழ்க்கையில் அதுவே வரம்..
காந்தி அவர்களுக்குக் கொடுத்த வரம்.

செல்லையாவின் பெண்மகவுக்கு காந்தி வைத்தப் பெயர் கஸ்தூரி..
ஆம் கஸ்தூரி...
அவருடைய வாழ்வின் துணை, காந்தியின் சரிபாதி..
கஸ்தூரியைக் கையில் ஏந்திக் கொண்டு செல்லையா கடலோரம் நின்றபோது..
காந்தி என்ற சரித்திரத்திற்கு தலை வணங்காதக் கடல் அலைகள்
செல்லையா என்ற உழைப்பாளியின் நம்பிக்கைக்கு முன்னால் தலைவணங்கியது.

இந்தச் செல்லையா அவர்கள் தமிழ்நாட்டில்
 கோவில்பட்டி வட்டாரத்தைச் சார்ந்தவர்,
வேதமுத்து என்ற தமிழ்ப்பண்டிதரின் இளவல்.
இன்று காந்தியின் கஸ்தூரி.. நெல்லை மாவட்டத்திலிருக்கும் சேரன்மகாதேவியில் தன் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
செல்லையா இன்று இல்லை...
யாருக்குத் தெரியும்... எத்தனை பேருக்குத் தெரியும்...
தன் இரண்டு மாத அழுகுரலில் காந்தியை எழுப்பிய
 கஸ்தூரி இவர் என்பது...
பெரும் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது தன் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து அதையே
 பெரியப் புகைப்படம் எடுத்து நடு அறையில்
 மாட்டி வைத்துக் கொண்டு வாழ்கின்ற
இன்றைய விளம்பரங்கள் அறியாத
செல்லையாக்கள் எத்தனை எத்தனையோ பேர்..

காந்தியின்  தேசிய நீரோடையில் தன் சுயம் இழக்காமல்
 வாழ்ந்த தமிழர்களும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் மகாத்மா பூலே தலைவராக இருந்தார்.
சமூகவிடுதலை இல்லாத அரசியல் விடுதலை... சாத்தியமில்லை
என்ற கருத்தை முன்வைத்து தங்கள் இருத்தலுக்காகப்
போராடியவர்கள். அவர்களின் ஒருவரான
நரசிம்மமேஸ்திரி அவர்கள் தான் முதன் முதலாக
தாராவியின் தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகள்
 கல்வி கற்பதற்காக முதல் தமிழ்ப் பள்ளிக்
கூடத்தை நிறுவினார். தமிழ்நாட்டிலிருந்து கல்வி கற்பிக்க
 ஆசிரியர்களை அழைத்து வந்தார்.
இசுலாமியர்களுடன் இணக்கமான சகோதரத்துவ
 உறவைப் பேணி வந்தார்.
இந்த எச்சங்கள் தான் இன்றும் தாராவியில்
 காணப்படும் தமிழர்களின் வாழ்க்கை.
காந்தி அலையும் எதிரலையும்
 ஒன்றுடன் ஒன்று கலக்காமல், மோதிக் கொள்ளாமல்
அரபிக்கடலோரம் .. வாழ்ந்த வாழ்க்கை..
 மும்பைத் தமிழர் வாழ்க்கையில்
முக்கியமான  பக்கங்கள்.