Friday, June 25, 2021

பூஜை அறை அரசியல்


 திருமிகு. துர்கா ஸ்டாலின் அவர்களின் பூஜை அறை காணோளி

வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நேற்று மட்டும் 3பேர் அதை எனக்கு வாட்ஸ் அப்பில்
அனுப்பி இருந்தார்கள். 3பேரின் நோக்கமும் வேறுவேறு!
இந்தப் பூஜை அறை ஏன் பொதுவெளியில் வந்திருக்கிறது ?
என்ற கேள்வியை அரசியல் பார்வை இல்லாமல்
கடந்து செல்ல முடியவில்லை.
*இதுவரை மறைத்து மறைத்து திரைப்போட்டுக்
கொண்டிருந்த பூஜையறை இப்போது பொதுவெளிக்கு
வந்த தில் மகிழ்ச்சி. எதையும் மறைத்து செய்யும்போது
அது குற்றவுணர்வைத் தூண்டும். விமர்சனத்திற்குள்ளாகும்.
வெளிப்படையாக சொல்லும்போது அதை ஒரு
பிரச்சனையாக பேசப்படுவது குறையும். *
*கலைஞரின் காலத்திலேயே இதெல்லாம் நடந்திருக்கிறது.
அவர் இல்லத்திற்கு புட்டபர்த்தி சாய்பாபா வருகைத் தந்ததும்
கலைஞர் தன் குடும்பத்து பெண்களுக்கு கொடுத்திருக்கும்
வழிபாட்டு உரிமை என்றும் அது பேசப்பட்டது*
* பெரியார் நாத்திகத்தின் இறுக்கமான பிடியிலிருந்து
தளர்த்திக்கொண்ட அரசியல் இயக்கம் தான் திமுக.*
*திமுகவின் இந்துமத எதிர்ப்பு என்பதை
திமுகவின் இந்துமத மக்கள் எதிர்ப்பு என்று
திசைமாற்றப்படுவதை இந்தப் பூஜை அறை
எதிர்கொள்வதைக் கவனிக்க வேண்டும். *
கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகள் இவற்றை
எல்லாம் தாண்டி மத நம்பிக்கைகளையும்
சடங்கு சம்பிரதாயங்களையும் காலம் காலமாக
கடத்திக் கொண்டு இருப்பவர்கள் பெண்கள்.
அந்தப் பெண்களின் ஒரு பிரதி நிதி தான்
சகோதரி துர்கா ஸ்டாலின் அவர்களும்.
பூஜை அறையில் கலைஞரின் புகைப்படம்
மகிழ்ச்சி தருகிறது. மற்றபடி இந்துமதத்தின் கடவுளர்கள்
அனைவரும் பிரகாசமாக காட்சி தருகிறார்கள்.
அணையாத விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
இவை எல்லாம் தனிமனித விருப்பங்கள்.
ஆனால்... பிரச்சனை என்னவென்றால்....
பெருமதிப்பிற்குரிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்
முதல்வர் ஆனதே அவர் மனைவி துர்க்காவின்
கடவுள் பக்தியால் தான் என்று ஒரு கூட்டம் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டதுதான்!!

Wednesday, June 23, 2021

கவிஞனுக்கு மரணமில்லை. கவிஞனுக்கு மரணமில்லை.

அவன் நிரந்தரமானவன்...
கண்ணதாசா.. உன்னை வாழ்த்தும்போது
தமிழ் வாழ்கிறது.
தமிழ்க் காதலியர் வாழ்கிறார்கள்
தமிழன் வாழ்கிறான்.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசிவரை நீ தான்.
எம் வாழ்விலும் சாவிலும் கூடவே பயணிக்கிறாய்.
ஒரு தலைமுறை தமிழ்ச்சாதியின்
ஆலயமணி ஒசை நீயல்லவா!
தமிழ் நதியில் விளையாடி
பொதிகை மடியில் தலைசீவிய
4 ஆம் தமிழ்ச்சங்கமே .. நீ
காலத்தை வென்ற தமிழ்க்கடலில் மத்தாகி
பாற்கடலை- பா கடலைக் கடைந்தெடுத்தாய்.
அமுதம் விஷமான போதெல்லாம்
அதுவே உன் கையில் மதுவானது.
நீ போதையில் தள்ளாடும் போதெல்லாம்
தமிழ் தன்னை அலங்கரித்துக் கொண்ட து.
எம் தலைமுறையின் இதயராகத்தை
உன் பாடல்வரிகளால் மீட்டிக்கொண்டோம்.
எம் காதல் கடிதங்கள்
உனக்கு கடன்பட்டிருக்கின்றன.
உன் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்
திரும்பவும் திரும்பவும் பிறக்கிறோம்.
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதும்
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் “ என்று துடிப்பதும்
எம் ரசனையின் அடையாளம் மட்டுமல்ல.
தமிழ் எம்மில் உயிர்ப்புடன் இருப்பதன்
ஒற்றை அடையாளமய்யா நீ.
உன்னைச் சித்தன் என்று சொல்லவா
பிழைக்கத் தெரியாத பித்தன் என்று சொல்லவா
பாட்டுப்பாடி பிழைத்த பாணன் என்று சொல்லவா..
நீ ஜார்ஜ் மன்னனின் நிழலில் குடி இருந்தாய்
சார்லசின் குணங்களை அனுபவித்தாய்
ஆனால் நீ மட்டும் பைரனாகவே வாழ்ந்திருக்கிறாய்.
சிறுகூடற்பட்டி மூங்கிலை வெட்டினார்கள் சிலர்.
திட்டினார்கள் பலர். அவமானப்படுத்தினார்கள்
அழவைத்தார்கள். விரட்டினார்கள்.
கூரிய ஆயுதங்களால் சீவினார்கள்.
மூங்கில் தன்னைத்தானே துளைத்து துளைத்து
துடிக்கும் போதெல்லாம் புல்லாங்குழலில்
புருசோத்தமன்கள் பிறந்தார்கள்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.
சிறுகூடற்பட்டி மூங்கில் வாழ்க
தமிழரின் புல்லாங்குழல் வாழ்க
நம் புருஷோத்தமன் வாழ்க


https://youtu.be/LvBP7qVk-hw


Monday, June 21, 2021

- எரியும் நெருப்பில் எரியாத உண்மைகள் (INCENDIES)சவப்பெட்டி வேண்டாம்.
பிரார்த்தனைகள் வேண்டாம்,
நிர்வாணமாக புதைத்துவிடுங்கள்,
புதைக்கும்போது என் முகம் வானத்தைப் பார்த்து
இருக்க வேண்டாம்.
பூமிக்குள் புதையட்டும்.
புதைத்த இட த்தில் என் பெயரை பொறிக்க வேண்டாம்.”
இப்படி ஒரு தாயின் உயில் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த உயிலை அவள் பெற்ற பிள்ளைகளிடம்
கொடுக்கும் போது இரண்டு பிரிக்கப்படாத கடித உறைகளும் கொடுக்கப்படுகின்றன.
மகள் ஜென்னிக்கு எழுதியிருக்கும் கடித த்தில்,
“மகளே, நோட்டரி மிஸ்டர் லெபல் உன்னிடம்
பிரிக்கப்படாத கடித த்தைக் கொடுப்பார்.
அது உன் தந்தைக்கு எழுதியது.
உன் தந்தையைக் கண்டுப்பிடித்து
அவரிடம் கொடுத்துவிடு”
மகன் சைமனுக்கும் ஒரு கடிதம்..
“மகனே, நோ ட்டரி மிஸ்டர் லெபல் உன்னிடம்
பிரிக்கப்படாத கடித த்தைக் கொடுப்பார்.
அது உன் சகோதரனுக்கு எழுதியது.
அவனைக் கண்டுப்பிடித்து
அவனிடம் கொடுத்துவிடு”
கதை இப்படி ஆரம்பிக்கிறது. அம்மாவின் கடைசி ஆசையை
நிறைவேற்றுவதும் அம்மாவின் கட ந்த காலத்தைத்
தேடுவதுமாக மகள் முதலில் பயணிக்கிறாள்.
அம்மா ஒரு போர்க்கைதியாக சிறையில் 15 ஆண்டுகள்
இருந்திருக்கிறாள் என்ற
உண்மை தெரியவரும்போது அதிர்ச்சி..
சைமனும் வருகிறான்.
போரின் அழிவுகள், அதில் பாதிக்கப்படும் குழந்தைகள்,
பெண்கள் குழந்தைகளுடன் தீயூட்டப்படும் பேருந்து..
மத்திய கிழக்கு நாடுகளில் போர்க்கால காட்சிகள்
இருவரின் தேடல்கள்..
காதலனை ஏற்றுக்கொள்ளாத குடும்பம்
அவள் பிரசவித்த மகனை பாலருந்துவதற்குள்
அவளிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்கிறது.
போர்க்காலத்தில் அவள் தன் அந்த மகனைத் தேடி பயணிக்கிறாள்.
அந்தப் பயணத்தில் அவளும் கையில் துப்பாக்கி ஏந்தி..
போர்க்கைதியாக.. சிறைச்சாலையில் அறை எண் 72ல்..
இரவெல்லாம் பெண்களின் அழுகுரலைக் கேட்க முடியாமல்
பாடிக்கொண்டே இருக்கிறாள்.
அவள் பாடலை நிறுத்த சிறைக்கம்பிகள் அவள் உடலை
ஆண் என்ற ஆயுத த்தால் சிதைக்கின்றன.
அந்த வல்லாங்கில் அவள் பெற்ற குழந்தைகள் தான்
அவள் கடைசி ஆசையை நிறைவேற்ற
அலைகிறார்கள்.
மகள் தந்தையைத் தேடி அலைகிறாள்.
மகன் தன் மூத்த சகோதரனைத் தேடி அலைகிறான்.
இருவரும் கடித த்தை ஒருவனிடமே கொடுத்துவிட்டு
தாயின் கல்லறையில் அவள் பெயரை எழுதுகிறார்கள்…

கதையின் க்ளைமாக்ஸ்..
அதிர்ச்சியுடன்...
மகனே... உன்னை .. நேசிக்கிறேன்..
கடிதத்தின் வாசகங்களை நெருப்பும் எரித்து
சாம்பலாக்க முடியாமல் தோற்றுப்போகிறது.
உண்மை ஏன் கொடூரமானதாக
கேவலமானதாக இருக்கிறது..?!!
….
போர்க்கதைகளின் வரிசையில் இது ஒரு கற்பனைக்கதை
என்று சொல்லப்படுகிறது. பிரான்சில் நாடகமாக நடிக்கப்பட்ட கதை. பல்வேறு விமர்சன ங்கள் இருக்கின்றன.
சமகால வரலாற்றை வல்லரசு ஆதிக்கத்தின் போர்த் தீயின் அழிவுகளை மனித உறவுகளின் நெருக்கடிகளை ரணநாம் பேசவோ எதிர்கொள்ளவொ தயராக இல்லை.
எப்போதோ நடந்து முடிந்த இன்று வாழும் தலைமுறைக்கு
முந்திய போர்களைப் பற்றி உரையாடும் நம் சரித்திரங்கள்
சமகாலப் போர்மேகங்களை பேசாமல் கடந்து செல்வது
செளகரியமாக இருக்கிறது.
இதைப் பேசும் இத்திரைப்படம்..
அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

Saturday, June 19, 2021

கவிதைகளை எரிக்கும் மழைக்காரி

 


பஃறுளி நதிக்கரையில் என் ஆதித்தாய் முணுமுணுத்த

 சொற்களற்ற ஒலிக்குறிப்பிலிருந்து 

ஒவ்வொரு துளியாக எடுத்து

உங்கள் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரபஞ்சம் தோன்றிய அந்த நாளில் 

எழுத்து பிறப்பதற்கு  முன்னரே

எழுதப்பட்டிருந்த காற்றுவெளியின் குறிப்புகளை 

வாசிக்கத் தெரிந்தவர்கள்..

புதிது புதிதாக எழுதிக்கொண்டு இருக்கின்றார்கள்.

புதிதாக எதுவும் பிறக்கவில்லை.

 ஏற்கனவே பிறந்துவிட்ட எதுவும்

இன்னும் தன்னைத் துறக்கவும் இல்லை.

இந்த தொடர்மழையில் குளிரில் நடுங்கும் 

எம் மனிதர்களுக்கு

இன்னும் நீங்கள் வாசிக்காத கவிதைப்பக்கங்களை 

எரித்து எரித்து

சூடாக்கி சூடேற்றி 

குளிர்காய்கிறேன்.

கவிதைகள் எரியும் வாசனையில் 

இப்பெருநகரப்பிசாசு

தண்டவாளத்தில் விழுந்து 

தற்கொலை செய்து கொள்கிறது.

மழைவெள்ளம் வடியும்போது  

பாதி எரிந்தும் எரியாத

கவிதைப் பக்கங்களை 

குப்பையிலிருந்து பொறுக்கி எடுத்து

அடுத்தமழைக்காலத்திற்காக

பத்திரப்படுத்துகிறாள்..

கவிதைகளை எரிக்கும் மழைக்காரி.

 

 

 

 

 

Monday, June 14, 2021

காவல்துறையைப் பலகீனப்படுத்திவிடாதீர்கள்..

 பெண்களைப் பலகீனப்படுத்திவிடாதீர்கள்.. ப்ளீஸ்..

இதுவல்ல தீர்வு..முதல்வர் செல்லும் சாலையில் போலீஸ் பாதுகாப்பு.
சற்றொப்ப 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
கால்கடுக்க சாலையில் நிற்க வேண்டும்.
அதுவும் சில நாட்களில் 12 மணி நேரத்திற்கும்
அதிகமாக நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதில் ஏற்படும் உடல் மன ரீதியான பிரச்சனைகளைக்

கணக்கில்கொண்டால் இருபாலாருக்கும் பிரச்சனைகள் உண்டு.
அண்மையில் தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்
பெண் போலீசுக்கு இதிலிருந்து விலக்களித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை பலரும் கொண்டாடுகிறார்கள்.
தாயுமானவர் என்றெல்லாம் என் தோழர்கள் கொண்டாட
ஆரம்பித்திருப்பது சற்று கவலையளிக்கிறது.
காலம் காலமாக பெண்கள் சில வேலைகள் செய்ய
இயலாதவர்கள் என்ற எண்ணம் சமூகப்பொதுப்புத்தியில்
இருக்கிறது.
அதை உடைத்து அதற்கான சிறப்பு பயிற்சிகள் பெற்றுதான்
பெண்கள் சில துறைகளில் நுழைந்திருக்கிறார்கள்.
அதில் மிக முக்கியமானவை : காவல்துறை, இராணுவம்.
இப்பயிற்சியில் பெண்களுக்கு இதை எல்லாம்
செய்ய முடியாது, இதெல்லாம் பெண்களுக்கு
தேவையில்லை என்ற விதிவிலக்கு கிடையாது.
கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகுதான் அவர்கள்
காக்கிச்சட்டையை அணிந்திருக்கிறார்கள்.
இது கட்டாயப்படுத்தப்பட்ட தல்ல,
அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்ட வேலை.
இன்னும் சொல்லப்போனால் இம்மாதிரி வேலைகளில்
சேர்வதற்கு கூட பெண்களுக்கு எத்தனை கடுமையான
விதிகள் இருக்கின்றன என்பதெல்லாம் எல்லோரும்
அறிந்த து தான்.
150 காவலர்கள் சாலையில் பாதுகாப்புக்கு ஏன்?
எம். ஜி ஆரும் ஜெயும் முதல்வராக இருந்தக் காலத்தில்
தான் அதிகமானவர்கள் முதல்வர் பாதுகாப்புக்கு
நிறுத்தப்பட்டார்கள் என்பதை
அறியாவதவரா முதல்வர் ஸ்டாலின்?
முதல்வர் சாலையில் பயணிக்கும்போது ஏன் பாதுகாப்பு
தேவைப்படுகிறது என்றால் முதல்வரை சந்திக்க
பொதுமக்கள் கூடுவார்கள், எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதால் மட்டுமே இந்தப் பாதுகாப்பு
அரண். முதல்வரை சாலையில் சந்திக்க ஆண் பெண்
குழந்தைகள் யார் வேண்டுமானாலும் நிற்கலாம்.
அதை எந்தச் சட்டமும் தடை செய்ய முடியாது.
அப்படியானால் , பெண்களால் பிரச்சனை அல்லது
அச்சுறுத்தல் வருகிறது என்றால் அதைக்
கட்டுப்படுத்தப் போவது யார்?
அதை யார் கையாளுவார்கள் ?
சட்டப்படி,
பிரச்சினை ஏற்பட்டால், போராட்டங்கள் நடந்தால்
பெண்களைப் பெண் காவலர்கள் மட்டுமே கையாள
வேண்டும் என்கிற விதி உள்ளதே!
கர்ப்பினி பெண்களை சாலைப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம்
என்பதற்கு அப்பால் இப்பிரச்சனையை
பாலியல் ரீதியாக வேறுபடுத்திக் காண்பது தவறு.

பெண்களை எந்த ஒரு காரணத்திற்காக சில பணிகளிலிருந்து
தடை செய்திருக்கிறார்களோ
அதே காரணங்களுக்காக விலக்கு அளிப்பதும் தவறுதான்.
உடற்பயிற்சியும் உளவியல் பயிற்சியும் பெற்றுதான்
பெண்களும் இப்பணிக்கு தங்களைத் தாயார் செய்து
கொண்டு வருகிறார்கள்.
12 மணி நேரம் நிற்பதால் உடல் உபாதை என்றால்
அதே உடல் உபாதைகள் ஆணுக்கும் உண்டு,
மாதவிலக்கு தான் இதில் பிரச்சனை என்றால்
அதை அணுக வேண்டியது ஒட்டுமொத்த பெண்களுக்கும்
விலக்கு அளிப்பதன் மூலம் அல்ல.
பணி இடங்களில் அரசுப் பள்ளிகளில் பணி புரியும்
பெண்களுக்கு தனியான கழிவறை வசதி இருக்கிறதா?
பொது இடங்களில் தூய்மையான கழிவறை வசதிகள்
இருக்கிறதா?
பள்ளிக்கூட த்திற்குப் போகும் மாணவர்கள்
வீட்டுக்கு வந்து தான் சிறு நீர் கழிக்கிறார்கள் .. இப்படியான
பொதுவெளியில் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க
வேண்டியதும் இப்பிரச்சனைகளை
ஒரு “தாயுமானவராக” அணுக வேண்டியதும் முதல்வரின் கடமை.

இன்னொரு மிக முக்கியமான கருத்து..
இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாட்டின் காவல்துறை என்பது
தமிழ் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானது.
ஒவ்வொரு மா நிலத்தின் காவல்துறை
அந்தந்த மா நிலத்தின் இராணுவம். அதில் பெண்களுக்கு
கொடுக்கப்படும் இம்மாதிரி சலுகைகள் ..
பெண்களைப் பலகீனப்படுத்துவது மட்டுமல்ல,
காவல்துறையையும் பலகீனப்படுத்திவிடும்.

பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால்
தீர்வு இதுவல்ல.

Thursday, June 10, 2021

FAMILY MAN 2 - Rani

 

“மாவீரனுக்கு மரணமில்லை”

மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம்

போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது.

பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?

தீபன் யார்?

செல்வா யார்?

தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?

இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்

நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்

கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் வந்திருக்கிறது

FAMILY MAN2 .

*

இப்படியான ஒரு கதை இந்திய அரசு உளவுத்துறை,

 ஐஎஸஐ, தமிழ் ஈழப்போராளிகளின் இயக்கங்கள் 

குறிப்பாக புலிகள் இயக்கம், பெண் போராளிகள்,

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு என்று காட்சிப்படுத்தப் பட்டு 

வெளியிட்ட தன் மூலம் அமேசான் ப்ரைம் 

உலகளாவிய ஈழத் தமிழர்களின் கவனத்தை

ஈர்த்ததில் வெற்றி பெற்றிருக்கிறது.

அமேசானின் நோக்கம் சமகால ஈழப்போராட்ட்த்தைக் 

காட்டுவதோ அதன் நியாயப்பாடுகளை முன்வைப்பதோ அல்ல. அவர்களுடைய நோக்கம் மார்க்கெட்டிங்க்,

 விற்பனை. எதைக் காட்டினால் தன் அலைவரிசையை

உலக நாடுகளெங்கும் எடுத்துச் செல்ல முடியும் என்று நினைக்கின்றார்களோ

அதைக் காட்டி  நடக்கும் வியாபாரம்.

அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.!

*

இக்கதையோட்ட்த்தில் வரும் முக்கியமான ஒரு வசனம்

“ நான் அரசியல்வாதி அல்ல, போராளி”

ஈழப்போராட்டக் களம் தாண்டி விவாதிக்க வேண்டிய கருத்து இது.

*

ராணியாக நடிக்கும் சமந்தா..

சிறிய விமானத்தை windmill  என்று சொல்லி லாரியில் கட த்தும்போது

செக்போஸ்டில் பிடிக்கிறார்கள். அனுமதி இல்லாமல் 

எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரி சொல்கிறான். 

அவன் பார்வை ராணியை நோக்கி இருக்கிறது. 

லாரியை ஓரமாக நிறுத்தியாகிவிட்ட து.

அடுத்து…???

ராணி அவன் பார்வையைப் புரிந்து கொண்டு 

அவன் எப்படிப்பட்டவன் என்பதை அடையாளம் 

கண்டுகொள்கிறாள். அவனருகில் செல்கிறாள்.

எதோ பேசுவதாக லாங்க் ஷாட் காட்சி. 

வசனம் ஒலிப்பதில்லை.

அருகிலிருக்கும் ஒரு ஷெட்டுக்குள் நுழைகிறாள்.

அந்த அதிகாரியும் நுழைகிறான்.

சிறிது நேரம் கழித்து அவள் மட்டும் வெளிவரும் காட்சி.

ராணி தன் மேல்சட்டையை சரி செய்து கொண்டு

முகம் வியர்த்து கண்கள் சிவந்து வெளியில் வருவாள்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அவர்கள்

புறப்படுவார்கள்.

ஷெட்டுக்குள் என்ன நடந்த திருக்கும் என்பதைப்

 பார்ப்பவர் புரிந்து கொள்கிறார். 

ராணி பாலியல் வல்லாங்கை அனுபவித்தவள்.

இலங்கை இராணுவத்தின் கொடுமையிலிருந்து அவளை மீட்ட து

தமிழீழ இயக்கத்தின் தலைவர்.. 

கதையோட்ட த்தில் இக்காட்சி..என்ன சொல்லவருகிறது?

பெண் போராளியை இழிவுப்படுத்திவிட்ட தா?

உடல் .. பெண்ணுடல்..

ஆணின் அதிகாரத்தைக் காட்ட அவன் ஏறி அமரும்

பெண் உடல்..

உடலை ஆயுதமாக தற்கொலை ஆயுதமாக பயன்படுத்த

துணிந்திருக்கும் ராணி..

செத்துப்போனால் கருகி சாம்பாலாகும் உடல்

புதைத்துவிட்டால் மக்கி மண்ணோடு மண்ணாகும் உடல்..

இந்த உடலில் என்னடா இருக்கு..??!!

போடா .. நீயும் உன் புனிதங்களும்..

எந்த உடலை வைத்து பெண்ணைக் கீழ்மைப்படுத்த முடியுமோ

அதே பெண்ணுடல் போராயுதமாகவும் மாறும்..!

எந்த உரையாடலுமின்றி காட்சிகள் விரியும்போது

உரையாடல்கள் பல அவர்கள் காட்டாத காட்சிகளுடன்


 நமக்குள் விரிகின்றன.


 

 

 

Thursday, June 3, 2021

கனவு இல்லத்தின் கனவுகள்

 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)

அரசனைப் புகழ்ந்துப் பாடி பரிசில் பெற்ற
புலவர்களின் வரிசையில் புதிய ஜன நாயகத்தின்
எச்சங்கள் தொடர்கின்றன.
எழுத்தாளனை சமூகம் ஏன் மதிக்க வேண்டும் என்று
எதிர்ப்பார்க்கிறோம்? அவனும் அவன் எழுத்துகளும்
சமூகத்தின் மனசாட்சியை அசைத்துப் பார்க்கும்
வல்லமை கொண்டது என்று இன்றும் நம்புவதால் மட்டுமே!

ஆனால்
ஜன நாயகம் அதிகாரம் என்ற பெயரால்
அதை விலைப்பேசி விட முடியும்.
ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக தேவைப்படும்போது
எழுத முடியாத எழுத்து செத்தப் பிணம் தான்.

அதிகாரம் எப்போதும் தனக்கு எதிரான குரல்களை
கிள்ளி எறிவதில் பல்வேறு திட்டங்களைக் கொண்டிருக்கிறது.
எந்த ஒர் எழுத்தாளனும் பட்டினியால் செத்துப்போனான்
என்பது எவ்வளவு இழுக்கோ அதை விடக் கேவலமானது
அவனும் அவன் எழுத்துகளும் முடங்கிப்போகும்
அவலம்!
அரசு அதிகாரத்தின் தலையீடு இல்லாமல்
அடிவருடல் இல்லாமல் ஜால்ரா போடாமல்
விருதுகளும் கனவு இல்லங்களும் வசப்படுமா?
இம்மாதிரியான அறிவிப்புகள் வரும்போது
அத்திட்டத்தின் நல்லெண்ணம் நிறைவேற
வேண்டும் என்று விரும்பினாலும்...
அந்த விருப்பம் கனவாக மட்டுமே இருக்கிறது.
அரசு விருதுக்காக விண்ணப்பித்துவிட்டு
அரசு விருது பெற்று
அரசின் கனவு இல்லத்தில் வாழ்ந்து கொண்டு
அரசு அதிகாரத்தின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து
எழுத முடியுமா?
இட ஒதுக்கீடுஎன்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு சமூகம் கொடுக்க வேண்டிய உரிமை
என்பதைக் கூட மறுக்கும் நம் அறிவுசார் சமூகமிது.
தந்தை பெரியாரைக் கொண்டாடுபவள் தான் நானும்.
ஆனால் அதற்கு அர்த்தம் பெரியார் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்டவர் என்பதல்ல.
பெரியாரை விமர்சனப்படுத்தியதற்கு கருத்தியல்
ரீதியாக பதில் சொல்லாமல் அவரில்லை என்றால்
நீ என்னவாகி இருப்பாய்?
நன்றி கெட்டவன் நீ \
என்ற விமர்சனங்களை வைத்த /வைத்துக்கொண்டிருக்கின்ற
சமூகம் நம் சமூகம்.
திட்ட வரைவுகள் இன்னும் செழுமைப்படுத்தப்பட
வேண்டும். அது ஜால்ரா கம்பேனிக்கு குத்தகைக்கு
விட்டதாக இருக்கக் கூடாது என்பதில்
தமிழக அரசு கவனம் செலுத்துமா?
செலுத்த வேண்டும் என்பதே
என் கனவு.
Rajini Mahi, Ravichandran Kumaraswamy and 1 other
2 commentsLike
Comment
Share

2 comments