Tuesday, October 29, 2019

சிதம்பர வெளிImage result for sithampara ragasiyam"

யெளவனம் அழித்து இமயம் வந்தவள்
அம்மையாக நின்று அருள்பாலிக்கட்டும்.
சிவ சிவ..
அந்தக் கதைகளைச் சொல்லி
விலக்கி வைக்காதே.
வெட்கமறியாத காமத்தீயில்
கங்கையைத் தெளித்து
புனிதங்களைப் போர்த்தாதே.
உமையை கங்கையை
மறந்துவிடச் சொல்லி
கட்டாயப்படுத்த மாட்டேன்.
கழுத்தை இறுக்கும் பாம்புகளை
கழட்டி விடு.
துணையைத் தேடி புதருக்குள் மறையட்டும்.
பாம்பு புற்றுக்கு பாலூற்ற
காத்திருக்கும் கூட்ட த்தை
நாகதோஷத்துடன் அலையவிடாதே.
சிவ சிவ..
காட்சி திரைகள் காலத்தைப் புரட்டுகின்றன.
வசனங்களை எழுதிவிட்டார்கள்.
பாடல் வரிகள் இசையுடன் காத்திருக்கின்றன.
ஒப்பனைகள் செய்தாகிவிட்ட து.
முன்பதிவு செய்தப் பார்வையாளர்கள்
ஆயிரம்கால் மண்டபத்தில் அமர்ந்துவிட்டார்கள்.
நீல நிற திரைச்சீலை விலகும் காட்சி
கனகசபை வில்வ மாலையுடன்
ஆனந்த தாண்டவம் ஆடுகிறான்.
கைதட்டல்கள் விசில் சத்தங்கள்
இருளைக் கிழிக்கும் மின்னலென
அருவியை முத்தமிடுகிறாய்
நாடகத்தில் தான்.

உன் முத்த த்தின் ஈரத்தில்
காயாமலிருந்த விஷம்
கருவறையின் பனிக்குடம் நிறைத்து
பள்ளத்தாக்குகளில் படிகிறது.
பாறைகளைப் பிளந்து
சமவெளியாய் விரிகிறது.
பனியாய் உறைந்து கிடந்த
காமத்தின் இதழ்கள்
பற்றி எரிகின்றன.
குங்குமப் பூக்களைச் சாம்பலாக்கிய
பனித் தீ ..
சிற்சபை தாண்டி எரிகிறது.
தீயை அணைக்க வருகிறார்கள் காவலர்கள்.
ஆபத்து ஆபத்து அலறுகிறார்கள் ..அவர்கள்.
உடமைகளை உறவுகளைக் காக்க ஓடுகிறார்கள்.
தீயாக உன்னைத் தீண்டும் இன்பம்..
சிவ சிவா.. யாரறிவார்?
சிதம்பர வெளியில்
சூரியக் கங்குகள்
தொட்டிலில் ஆடுகின்றன.
(நன்றி -ஓம் சக்தி தீபாவளி மலர்2019)

Sunday, October 27, 2019

நீர் இன்றி அமையாது ..

Image result for pigeon sitting in window paintingsஎனக்கும் அவர்களுக்குமான உறவு 
எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாயகன்ற டப்பாவில் தண்ணீரை
நிரப்பினேன்.. நாளடைவில் அது ஓர் அனிச்சை செயல் போல ஆகிப்போனது.
கொட்டும் மழையிலும் அவர்கள் 
என் சன்னல் கம்பிகளுக்கு நடுவில் உட்கார்ந்து
 தண்ணீர் பருகுவதையே தெரிவு செய்ததை
நானும் கவனிக்க வில்லை. வழக்கம் போல 
அவர்களும் அதைப் பிரகடப்படுத்தவில்லை.
அவர்களாகவே தங்கள் எல்லைகளை வரைந்து கொண்டார்கள். 
அடுக்களை சன்னலில் காகங்களும் சிட்டுக்குருவிகளும். 
ஹால் சன்னலில் புறாக்களும் சிட்டுக்குருவிகளும். சிட்டுக்குருவிகளுக்கு
மட்டும் எல்லா இட த்திலும் போய்வர உரிம ம் யார் கொடுத் தார்களோ 
அதுவே எடுத்துக் கொண்ட தோ..

எப்போதாவது வெளியூர் போய்விட்டால்
 இப்போதெல்லாம் இவர்கள் நினைப்பு தான் வந்துவிடுகிறது. 
என் மொழியை அவர்களும்
அவர்கள் மொழியை நானும் 
ஒலிகளின் சப்தங்களின்றி 
எப்போது உரையாட ஆரம்பித்தோமோ நினைவில்லை.
மதுரை சென்று திரும்பிவந்து எதொ நினைவுகளில்
 சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். 
வினோதமான ஒலி எழுப்பி என்னை அழைத்த து அந்தப் புறா. 
என் நினைவுகளை புத்தக அடுக்குகளில் புதைத்துவிட்டு
திரும்பிப்பார்த்தேன்.
அப்படி ஒரு கோபம் அதன் கண்களில்.
சிறகுகள் படபட த்தன.
இரும்புக் கம்பிகளை உடைத்துவிட முடியாமல்
அது தவிக்கும் தவிப்பும் ஆத்திரமும்..
மெல்ல மெல்ல அருகில் வந்தேன்.
தண்ணீர் டப்பாவில் தண்ணீரே இல்லை.
சன்னலைத் திறக்க வேண்டும்.
“சாரிடா.. பார்க்கலை.. “ என்று நான்..
மீண்டும் அதே கோபம்.
இப்போது அந்த மொழியில் இன்னொரு ரகசியமும்.
வைகைக் கரையில் சொல்லாத ரகசியமோ..
ப்ளீஸ் டா.. கொஞ்சம் பொறுத்துக் கொள்..
கெஞ்சினேன்.
ம்கூம் கோபம் தணியவில்லை.
கண்ணீர் நிரம்பி வழியும் விழிகளை
உயர்த்தியது என் மொழி.
எங்கள் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று
சந்தித்துக் கொண்டன.
அவன் பார்வையை நானோ
என் பார்வையோ அவனோ
எதிர்கொள்ள முடியாமல்
திரும்பிக்கொண்டோம்.
தண்ணீரை நிரப்பும் வரை
என் சன்னலைவிட்டு சற்று தள்ளி
உட்கார்ந்து கொண்டு தன் முகத்தை
வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு..
தண்ணீர் நிரம்பி நிரம்பி
எங்களுக்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக
ஈரம்..
கோபமாம்.. திரும்பமாட்டானாம்.
சரி..
நீரின்றி அமையாது உலகு!
நீ யின்றி அமையுமோ உலகு?

புத்தகம் தன் பக்கங்களைப் புரட்டி
வாசிக்கும் போது
சிறகுகளின் படபடப்பு.
நான் திரும்பவில்லை.
தாகம் தீர்க்கட்டும்.
இது யுகம் யுகமாக தீராத தாகம்.
ஒற்றைத்துளியில் தீருமொ தாகம்.
தாகம் தீர்க்கட்டும்.
நான் திரும்பிப்பார்க்க வேண்டும்
என்று காத்திருக்கிறது இப்போதும்.
திரும்பவா..
பார்க்கவா..
வைகையில் மீண்டும் வெள்ளம் வருமோ
நதிகளற்ற கொடுமணலில்
தாகம் தீர்க்கும் தண்ணீரை
ஆவியாக்காமல் விட்டுவைக்குமா
சூரிய பந்தம்.

நீரின்றி அமையாது உலகு..
நீ இன்றி அமையுமோ உலகு

Wednesday, October 23, 2019

சிவசேனாவின் அரசியல் முகம் மாறுகிறதா

Image result for shiv sena saamna
மா நில அரசியலில் சிவசேனா
சிவசேனாவின் முகம் மாறுகிறது..
இப்பதிவை தேர்தல் நேரத்தில் எழுத விரும்பவில்லை.
இன்று தேர்தல் முடிவுகள் வரும். அதன் பின் எழுதுவதும் 
சரியல்ல. இதோ இதுதான் தருணம்.
சிவசேனாவின் முகம் மாறுகிறது.
தன்னை வலுவான மா நில கட்சியாக மட்டுமல்ல
மா நில உரிமைகளை எதற்காகவும் விட்டுக்கொடுக்க
மாட்டோம் என்ற அரசியலை தன் செயல்பாடுகளில்
வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
மா நில சுயாட்சி என்று பேசியவர்கள் நாம்.
நம்மவர்கள் இன்று சிவசேனா காய் நகர்த்தும்
வித்தையைக் கவனிக்க வேண்டியவர்களாக
இருப்பதும் மொழியுணர்வை அவர்கள் கையாளும்
அரசியலும் கவனிக்கத்தக்கவை.

அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிஜேபி
சொன்னது.. “மராட்டிய மா நிலத்தில் எங்களுடன்
போட்டியிட யாருமில்லை ! “ 
பிஜேபியுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவுக்கு 
இது எரிச்சலை ஏற்படுத்தியது. 
பிஜேபி இப்படி சொல்வதன் பின்னால் இருக்கும் 
அரசியலை மிகவும் சரியாக அடையாளம்
 கண்டு கொண்ட து சிவசேனா. அதனால் தான் மறு நாளே
 தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே....
சிவசேனாவின் சாம்னா பத்திரிகை எழுதுகிறது.
“ மராட்டிய மா நிலத்தில் பிஜேபிக்கு எதிர்க்கட்சியே
 இல்லை என்றால் எதற்காக பிரதமர் மோதியும்
 அமித்ஷாவும் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்?”
அத்துடன் தங்கள் மா நிலத்தில் அரசியல் நட த்திய
 சரத்பவார் நடுவண் அரசியலுக்குப் போனது தவறு, 
என்பதையும் இப்போதும் சொல்கிறது சாம்னா.
இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளே இல்லாமல்
பிஜேபி ஆட்சியை அமைக்கும் திட்ட த்தில்
பிஜேபி கூட்டணியில் இருந்து கொண்டே
அடிக்கடி தன் பிடரியை சிலிர்த்துக் கொண்டு
உறுமிப் பார்க்கிறது சிவசேனா.
நேற்றுவரை சிவசேனாவின் பால்தாக்கரே குடும்பம்
தேர்தலில் நிற்கவில்லை. ரிமோட்கண்ரோல் ஆட்சி
என்று சொன்னார் பால்தாக்கரே. ஆனால் இன்று
அவருடைய பேரன் ஆதித் திய தாக்கரே அரசியல்
தேர்தல் களத்தில் நேரடியாக வந்துவிட்டார்.
கட்டாயமாக வெற்றியும் பெறுவார்.
அதன் பின் நடக்கும் அதிகாரப்பகிர்வு போட்டியில்
சிவசேனாவின் உறுமல் தொடருமா
அல்லது சர்க்கஸ் கூடாரத்திற்குள் அடைப்பட்டுவிட்ட
நிலை ஏற்படுமா? 
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கூட்டணிக்குள் இப்படியும் இருக்க முடியும் என்பதற்கு
சிவசேனாவும் சிவசேனாவின் சாம்னாவும்
 ஒரு வித்தியாசமான தேவையான அரசியலை
 மிகவும் நுணுக்கமாக கையாளுகின்றன.

எனக்கு சிவசேனாவுடன் பல கருத்து வேற்பாடுகள்
உண்டுதான். ஆனால்
 இந்த ஆட்டம்.. தொடர வேண்டும் 
என்று நானும் விரும்புகிறேன்.

Saturday, October 19, 2019

உப்பு காதல்

உப்புக் காதல்
அவன் குறிஞ்சி நிலத்தவன்
அவள் நெய்தல் நிலக்காரி.
உப்பு விற்க வருகிறாள்.
“நெல்லும் உப்பும் நேரே “
அவள் குரல் வீதிகளில் ஒலிக்கிறது.
அவன் முன்பின் அறிமுகமில்லாத அவளிடம்
அவளருகில் வந்து உப்பு விலை கேட்கிறான்.
சரி.. இதுவரைக்கும் சரிய்ய்யா..
எந்த உப்பு விலை?!!
“உன் மெய்வாழ் உப்பின் விலை என்னவோ?”
என்று.அவன் கேட்டானாம். (அடப்பாவி..!)
அவள் என்ன செய்திருப்பாள்.
பளார்னு கன்னத்தில் ரெண்டு கொடுத்திட்டு
இடுப்பில சொருகி வச்சிக்கிற கூர்கத்தியை
எடுத்துக் காட்டிட்டு “ட்டேய்.. “ னு
விழியாலேயே மிரட்டிட்டு தான் போயிருப்பா..
ஆனா பாருங்க..
காதல் காட்சியில அப்படி காட்டல.
ஏன் ? என்றெல்லாம் என்னிடம் கேட்கப்பிடாது.
அவ அவனைப் பார்த்து சிரிச்சிட்டு
“யார் நீ, என் வழியை மறிக்கிறாய்? “ னு
கேட்டுட்டு போயிட்டாளாம்.
அவ பின்னால அவன் மனசு போக
அவன் புலம்பறது தான் சீன்.
அம்மூவனார் தான் பாடலாசிரியர்.

காட்சியை ஒரு கடற்கரையில் ஆரம்பித்து
அப்படியே கடைவீதிக்கு கொண்டு வந்து
இடை இடையே பெரிய கப்பலில் அவர்களைக்
காட்டி ஒரு குரூப் டான்ஸ்
குத்துப்பாட்டு
சும்மாவா..
காதல் காட்சிகள் அன்றும் இன்றும் மாறவே இல்லை.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ?” எனச் சேரிதோறும் நுவலும்
அவ்வாங்கு உந்தி அமை தோளாய்! நின்
மெய்வாழ் உப்பின் விலை எய்யாய்.
_ அக நானூறு 390
அம்மூவனார் பாடியது..

Monday, October 7, 2019

தேவியும் கங்குபாயும்

Related image
என்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம்?
தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம்
ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம்.
தேவி… .. ஏனடி சிரிக்கிறாய்..?
பத்து நாட்கள் பதினொரு அடிமைகள்
ஆஹா .. போதுமா உன் பசி தீர்க்க?
கங்குபாய் காலடிப்பட்ட மண்
உனக்கு மட்டும் புண்ணிய பூமியா!
புரியவில்லை தாயே..
கோலாட்டம் .. பூமியைச் சுற்றி சுற்றி கோலாட்டம்.
ஆடுகிறாள் ஆடுகிறான்
கழுத்தில் நெளியும் பாம்புகளும் ஆடுகின்றன.
அமுதம்.. விஷம்.. காதல் கனவு நிஜம் பொய்
சுற்றி சுற்றி வலம் வருகின்றன.
ஆடி ஆடி களைத்துப்போகிறது இரவு.
மேகங்கள் கூந்தலை வருடிக்கொடுக்கின்றன.
தேவி..
விடியும் போது மயக்கம் தெளியலாம்.
சிவப்பு விளக்கின் பச்சை ஒளியில்
கங்குபாய் சிரிக்கிறாள்.
கனவுகள் வராமலிருக்க கதவுகளை
இழுத்துப் பூட்டுகிறேன்.


பிகு:
தேவியின் சிலைகள் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து
 அப்பெண்கள் காலடிப் பட்ட மண்ணால் மட்டுமே 
பூரணத்துவம் பெறுகின்றன!
கங்குபாய் இம்மாதிரியான சிவப்பு விளக்குப்
பகுதியில் – மும்பையின் காமட்டிப்புரத்தில்
வாழ்ந்தப் பெண்.

Sunday, October 6, 2019

பாலுறவு வறட்சி


பாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம்
என்ற  நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா?

நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இருக்கலாம் அந்தப்
பெண்ணுக்கு. அவளை கூட்டுப்பாலியல் வன்முறை செய்து
அதைக் கைபேசியில் விடியோ எடுத்து … இதைச் செய்யும்
ஆண்பிள்ளைகள் அனைவரும் விடலைப் பருவத்தினர்.
அன்த விடீயோவைப் பார்த்தால் ஓரளவு விலை உயர்ந்த
கைபேசியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவர் மாற்றி
ஒருவர்… அந்தப் பெண் “பையா  என்னை விட்டுவிடுவீர்களா ..”
என்று கெஞ்சுகிறாள்.. இது இந்தியாவில் தான் நடக்கிறது.
ஆள் நடமாட்டமில்லாத பாறைகளிருக்கும் ஒதுக்குப்புறத்தில்
நடந்திருப்பதாக தெரிகிறது. அப்பெண் என்னவானாள்?
பத்துபேருக்கும் மேலாக ஒருபெண்ணை வல்லாங்கு செய்தால்
அவள் பிழைத்திருப்பாளா..? 
அந்த விடீயோவை என்னால் முழுவதும்
பார்க்க முடியவில்லை! 1 நிமிடம் கூட என்னால் பார்க்க முடியாமல்
உடம்பெல்லாம் வேர்த்து கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்ட து!
அதன் பின்  ஏற்பட்ட தலைவலி.. இரவு 11 மணிக்குப் பின் தனியாக
கீழே போய் நடந்து பார்த்தேன்.
 கொஞ்ச நேரம் வாட்டர் டேங்க் மீது
உட்கார்ந்து கொண்டு ஓவென அழுதுவிடலாமா 
என்று கூட யோசனை வந்த து! 
வாட்ச் மேன் என்ன நினைக்க கூடும் என்று 
நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.. 
குளிர்ந்தக் காற்று .. மெல்ல.. முகத்தில் படர்ந்து
என்னைத் தழுவிக்கொண்ட து கொஞ்சம் ஆறுதலாக இருந்த து.

கதறி அடங்கிப்போன அந்தப் பெண்ணுக்காக அழுதேனா..
அல்லது..
அவளைச் சுற்றி நின்று அவள் உடலை மேய்ந்த
 அந்த விடலைகளின்
அம்மாக்களுக்காக அழுதேனா.. ?
யாருக்காக நான் அழுதேன்,,?
அவன் களின் முகம்.. 
என்னைச் சுற்றி வல்லூறு போல
வட்டமிடுகிறது…
தாய்க்கோழியாய் சிறகுகள் விரித்து
அணைப்பாளோ பராசக்தி..
Friday, October 4, 2019

சிவதாண்டவம்


Image result for shiva modern artஊர்த்துவத் தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ..
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.

உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட
உ ன் உமையல்ல நான்.
அண்ட சாரசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீட த்தில்
உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்
எரிந்து சாம்பாலாகிப் போனது.
அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்ட த்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
கண்டுபிடித்திருக்கிறாய்.
அவளோடு நீயாடும்
சிருங்காரதாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
கனவுகளில் நீ
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.!
பித்தனே.. மறந்துவிடாதே.
பாற்கடலில் நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின் கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன் என்பதை.

மகாப்பிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்த நாரீஸ்வர கோலம்
உனக்கு நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்..
சிவதாண்டவ வேடங்களைக் களைந்து
வெளியில் வா..
காத்திருக்கிறேன் காதலியாக.
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.

(மெளனத்தின் பிளிறல்- கவிதை தொகுப்பிலிருந்து)

Wednesday, October 2, 2019

THE UNSUNG HERO of Indian Politics
Image result for SHASTRI THE UNSUNG HERO
மறக்கப்பட்ட மாமனிதர் .. லால் பகதூர் சாஸ்திரி..
இப்படியும் ஒரு மனிதர் ஆட்சி அதிகாரத்தில் இந்தியாவில் இருந்திருக்கிறார். காங்கிரசுக்கார ர்கள் இவரை மறக்கலாம்.
ஆனால் நாம்..? !
• நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த நேரம். ரயில் விபத்து ஏற்பட்ட து. அதற்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக
முன்வந்தவர். (இப்போ இதைச் சொன்ன பொழைக்கத் தெரியாதவர்னு சொல்லிடுவாங்க.)
அவர் பிரதமராக இருந்தப் போது கடுமையான பஞ்சம். அவர் அவர் தன் வீட்டு பின்புறத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய காய்கறிகளைப் பயிரிட்டார். ஒரு வேளை உணவை சேமிக்கும் வகையில் தானும் தன் குடும்பத்தாரும் ஒரு வேளை உணவைஉண்பதில்லை என்ற தங்கள் முடிவை வானொலியில் அற்வித்து அதைக் கடைப்பிடித்தார்.
அவர் பிரதமராக இருக்கும் போது அவருடைய மகன் அவரின் அலுவலக வண்டியை (கார்) தன் சொந்தப் பயன்பாட்டுக்கு அவரை அறியாமல் பயன்படுத்திவிட்ட தை அறிந்த சாஸ்திரி தன் மகன் எத்தனை கிலோ மீட்டருக்கு அந்த வண்டியைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கணக்குப் பார்த்து அத்தொகையை அரசு கணக்கில் செலுத்தினார்.
17 மாதங்கள் பிரதமராக இருந்திருக்கிறார். அதற்கு முன் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்த சாஸ்திரி இறக்கும் போது அவருக்குச் சொந்த வீடு இல்லை.சொந்தமாக ரியல் எஸ்டேட் இல்லை. நிலமில்லை. பினாமி பெயரில் சொத்துகள் இல்லை. வங்கிக் கணக்கில் பணமில்லை. அவர் விட்டு சென்றது ஒரு பழைய FIAT கார் தான்! அதுவும் வங்கியில் கடன் வாங்கி வாங்கிய கார். அந்தக் கடனை அவர் மனைவி அவர் இறந்தப் பின்
அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்திலிருந்து தவணைகள் செலுத்தினார்!
இன்று அவர் பிறந்த நாள் (02 அக்டோபர்)
இப்படியும் ஒரு பிரதமர் இந்தியாவில் இருந்திருக்கிறார்.
Shastri, the unsung hero of Indian history.