ஒரு நாவலும் கதை மாந்தர்களும் ஒன்றுடன் ஒன்றாகக் கலந்திருப்பார்கள்.
அந்த குறிப்பிட்ட நாவலில் அக்கதை மாந்தர் இல்லை என்றால் அந்த நாவல் இல்லை., கதையின் ஜீவனாக அக்கதை மாந்தர்களே இருப்பார்கள். ஒருவகையில் அக்கதை மாந்தர்களைச் சுற்றியே கதைக்களமும் கதையும் நிகழ்வுகளும் பின்னிப் பிணைந்திருக்கும்.
காலமும் களமும் அக்கதை மாந்தரின் ஜீவனுக்கு உயிரூட்டும் ரத்தமும் சதையுமாக கதையுடன் கலந்திருக்கும். இப்படியான கதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.
ஆனால் இப்புரிதல்களைத் தாண்டி அண்மையில்
இன்னொரு தளத்திற்கு என்னை அழைத்துச் சென்றதில்
அஸ்தினாபுரத்தின் ஜோ டி குருஸ் மிக முக்கியமானவர்.
குருஸ் அவர்களின் மூன்றாவது நாவல்.
இத்தலைப்புக்கும் நாவலுக்கும் எதாவது
நேரடி தொடர்பு இருக்கிறதா என்று கவனித்தால்
அப்படி வெளிப்படையாக எதுவும் தென்படவில்லை,
ஆனால் ஒட்டுமொத்த வாசிப்புக்குப் பிறகும் கடலோடி சமூகமும்
அவர்களின் வாழ்வும் அஸ்தினாபுரமாக விரிகிறது.
அவர்கள் தன் கவசக்குண்டலத்தையும்
தானமாகக் கொடுக்கும் கர்ணனின் எச்சமாக வாழ்க்கையை தானமாகக் கொடுத்துவிட்டு கடலலையில் மிதந்து தவிக்கிறார்கள்.
எந்த ஒரு கதைப்பாத்திரத்தின் கம்பீரமோ நெகிழ்வோ
கட்டமைப்போ இல்லை.
கடல் சார் வாழ்க்கையின் அடுத்த நகர்வாக இருக்கும்
"கார்கோ" ஏற்றுமதி இறக்குமதி
துறைமுக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும்
கதைப்பாத்திரமாக கம்பீரமாக கதையில் நடமாடும்
மனிதர்களையும் கடந்த ஜீவனாக கடலலையில் மிதக்கிறது.
லோட் ஏற்றும் கனரக லாரிகளும் லாரி ஓட்டுநர்களும்
பாலங்களும் அவை சார்ந்த அறிவும் தெளிவும் ..
என்று வாசகன் அறியாத சில பக்கங்களில்
வெளிச்சத்தைப் பீச்சுகிறது அஸ்தினாபுரத்தின் கண்டெய்னர்கள்.
கிரனெட் ஏற்றுமதி இறக்குமதியிலும் சரி, ராட்சத
காற்றாடிகளின் கப்பலில் ஏற்றுவதிலும் சரி ஏற்படும்
உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகள் வரை கதை அலசுகிறது.
Non-fiction தரவுகளை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நாவல்
ஆங்காங்கே எழுத்தாளரின் சுய அனுபவங்கள் துணுக்குகளாக
ஒட்டியும் ஒட்டாமலும் கலந்திருக்கின்றன. எடுத்தவுடன் வாசித்துவிட்டுத்தான் புத்தகத்தைக் கீழே வைக்க
வேண்டும் என்ற பதட்டத்தை அஸ்தினாபுரம் தரவில்லை.
சில பக்கங்களைப் புரட்டி விட்டு போகலாம்.
சில பக்கங்களை விட்டு விடலாம்.
எப்படி விருப்பமோ அப்படி வாசிக்கலாம்!
கார்கோவில் கருவாடு தான் மணக்க வேண்டும் என்பதில்லையே.
கிரனெட் கற்களும் ஏறத்தான் செய்கின்றன யோ யோ கிரேன்களின்
இணைப்பு உதவியுடன்.
No comments:
Post a Comment