Saturday, December 31, 2011

2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்ஓரளவு அறிமுகமான
எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு
தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில்
அனுபவமிக்க
ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர்
தேவை.

பிரபலமான அரசியல்வாதிகளின்
அரசியல் அறிவை அவர்களின்
அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம்
அறிந்துக் கொண்டதால்
தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட
எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார்.

மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை
வாசித்த அனுபவங்கள் மூலம்
அவர்கள் பிரபலமான சூத்திரத்தை
அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு ,
அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால சரித்திரங்கள்
என்ற பின்புலத்தின் அடிப்படையில்
அவருடைய 2012க்கான திட்டங்கள்:

2012க்கான திட்ட அறிக்கை
----------------------------

* 2012ல் ஓர் இலக்கிய- அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பது.

* விருதுகள் அறிவிப்பது. (இது ஒருவகையான கொடுக்கல்/வாங்கல்)

*யாராவது எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தால் அவருக்கே
விருது கொடுப்பதில்/புத்தகம் வெளியீட்டு விழாவில் தலைமை இத்தியாதி
முன்னுரிமைகள் கொடுப்பது.

* இறுதியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்
என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர்களுக்கு கட்சியில்
பொறுப்புகளும் பதவிகளும் கொடுப்பது.

இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்த அவசரத் தேவை
ஒரு ஃகாட் ஃபாதர்/ ஃகாட் மதர்.

கள ஆய்வறிக்கை
--------------------


*யாராவது பிரபலத்தை நோக்கிச் செருப்பு வீசினால் பிரபலமாகிவிடலாம்
என்றார் என் நண்பர் ஒருவர். திகார் ஜெயில் வாசலில் போய் நில்லுங்கள்,
நிறைய பிரபலங்கள் உள்ளேயும் வெளியேயும் ... உங்களுக்கு வசதியாக
இருக்கும் என்றார். இந்த ஐடியா சொன்னவர் ஒரு டி.வி,க்காரர் என்பதால்
அவருக்குப் புத்தாண்டில் சுடச்சுட பிரேக் நியுஸ் கிடைக்கும் என்று
நம்மை வைத்து காமெடி கிமெடி பண்ணுகிறாரோ என்ற சந்தேகம்
வந்துவிட்டதால் அந்த ஐடியாவைக் கைவிட்டு விட்டோம்.

*சில இடங்களில் சிலர் வெளியேற்றப்பட்டதால் அந்த வேகன்சியில்
முயற்சிக்கலாம் என்றால் நம்மால் இன் -ஹுவுஸ் , 24x7 வேலை
எல்லாம் செய்ய முடியாது என்பதால் அதுவும் டிராப்.

*பிரபலங்களின் செல்ல நாய்/ நண்டுகளை சின்னவீடு/பெரியவீடு வேறுபாடின்றி
புகழ்ந்து கவிதைப்பாட வேண்டும் என்றார் ஓர் அனுபவஸ்தர். பிரபலங்களைப்
பற்றியே கவிதை எழுத எம் கவிதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டதால்
அதுவும் ஒத்துவரவில்லை.

*நவீன கவிதைகளைப் படைக்கும் அண்ணன் தம்பி, சித்தப்பா/மாமன்/மச்சான்
அவர்களின் பிள்ளைகள் என்று யாருமில்லை. அப்படி இருந்திருந்தாலும் கூட
அவர்கள் எழுதியதை நம் பெயரில் போட்டு அவர்கள் உதவியுடன்
உலக மொழிகளுக்கு நம் எழுத்துகளை எடுத்துச் செல்லும் கொடுப்பினையும்
இந்தப் பிறவியில் இல்லாமல் போய்விட்டது.

*அன்னா ஹசாரேவின் மும்பை உண்ணாவிரதத்தில் கலந்துக் கொள்வதற்கு
முன்னரே அவரும் உண்ணாவிரதத்தையே முடித்துக் கொண்டதால்
கிடைக்க இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவிப் போய்விட்டது!
(உண்ணாவிரதம் இருப்பது எப்படி ? என்பதை அவர் நம்ம தமிழ்நாட்டுக்குப்
போய் பயிற்சி எடுத்திருக்க வேண்டாமா... ??!!)


பின்குறிப்பு:
-------------

பிரபலமாவது எப்படி ? என்பது குறித்த ஓர் ஆய்வின்
அடிப்படையில் மேற்கண்ட 2012க்கான திட்ட அறிக்கைத்
தயார் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


திட்டங்கள் குறித்து கருத்தரங்குகள்/பயிற்சிப் பட்டறைகள் நடத்த
மாநில ரீதியாகவும்/மாவட்ட ரீதியாகவும் ஐ.ஐ.எம் பட்டதாரிகள் தேவை.

ஏற்கனவே எம்முடன் தொடர்பில் இருக்கும் பெரிசுகள் இதற்கு
விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(அதாகப்பட்டது அவர்கள் எல்லாம் ஒரு வேஸ்ட் ஃபீஸ்கள்/கையாலாகத
பிழைக்கத் தெரியாத பெரிசுகள்) எனினும் பொதுக்குழுவுக்கு அவர்கள்
அனைவரும் ஆயுட்கால கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள்
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் திட்டங்களை விளம்பரங்களாகவும் தலைப்புச் செய்திகளாகவும்
ப்ரேக் ந்யுஸ்களாகவும் வெளியிடும் ஊடகங்களை , ஊடகவியலாரைக்
கனமான கவர்கள் கொடுத்து கவனித்துக் கொள்ள தனியாக
ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

திட்டங்கள் மாற்றத்திற்குட்பட்டவை.
புதிய கருத்துகளுக்கு என்றும் வரவேற்புண்டு.

(இத்திட்டக்குறிப்பு தனிச்சுற்றுக்கு மட்டும்)

Friday, December 30, 2011

சந்திப்பின் வலிசந்திப்பின் வலி
---------------------

உன்னைச் சந்திக்கத் துடித்த
கனவு வசப்பட்ட தருணம்.
மவுனம் கனமானது.
என்னை நேசித்த நீயும்
நீயே பிரபஞ்சமாக இருந்த நானும்
நாம் தொலைந்துபோனதை
உணர்ந்து கொண்ட அந்த தருணம்
நம் பிரிவின் வலியைவிட
கொடுமையானது.
நரை விழுந்து
முகம் கருத்து
இளமை விடைபெற்றுக்கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
சிட்டுக்குருவிகளாய்த் திரிந்த நாட்கள்
நேற்றைய கனவுகளாய்
நம் முன்.
நம் இமைகளை அழுத்தும் பாரமாய்
----


Thursday, December 29, 2011

திராவிடம் அருங்காட்சியகத்தில்

தமிழ் தேசியமும் திராவிட அரசியலும் என்ற தலைப்பில் எழுதியதை வாசித்த
எனதருமை தோழி சொல்கிறார்:
என்னப்பா இது... திராவிடம் அது இது என்று பேசிக்கொண்டு...
திராவிடம் என்ற சொல்லே இப்போது அருங்காட்சியகத்தில்
வைக்கப்படும் பொருளாகிவிட்டது என்றார்.
அவர் நிறைய படித்தவர். திராவிட அரசியல் தெரிந்தவர்.
ஊடகவியலார்.

அவர் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக
நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் வைத்தேன்.

இருக்கட்டும் நீங்கள் சொல்கிற படியே இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் எதுக்காக எங்க தமிழ்நாட்டில் அரசியல் கடை திறக்கறவன்
எல்லாம் திராவிடன்ங்கற சொல்லை வால் மாதிரி ஒட்ட வச்சிக்கிட்டு
கடை விரிக்கிறான்... இந்தக் கடையை ஆந்திராவில், கர்நாடகத்தில்,
ஏன் கேரளாவில் போய் விரிச்சி பார்க்கச் சொல்லுங்க.. அங்கே வாலை
ஒட்ட நறுக்கிடுவான்கிற பயமா? தமிழன்னா என்ன கேணப்பசங்கனு
நினைச்சுங்கீளா?னு ..................(எடிட் எடிட் எடிட் திருநெல்வேலி கெட்ட
வார்த்தைகள்.......!!!!)

அட இதுக்குப் போயி இவ்வளவு ஆத்திரப் படுவீங்கனு நினைக்கலியேனு
சொன்னார்கள்...
ஆமாம்... இதற்கெல்லாம் ஆத்திரப் படாமல் வேறு எதற்கு ஆத்திரப்படுவதாம்?
........................ரவுத்திரம் பழகு...


Tuesday, December 27, 2011

தமிழ்த்தேசியமும் திராவிட அரசியலும்
இந்தியக்குடியரசின் ஓர் அங்கமாக ஒரு மாநிலமாக ஓரினமாக ஒரு மொழியாக
இருக்கும் தமிழன் இந்தியக் குடியரசின் ஒற்றைப் பண்பாடு, ஒரு மொழி,
ஓர் இனம், ஒரு மதம் என்ற ஒருமைத்தன்மையில் ஆதிகாலம் தொட்டு
கலந்து விடாமல் தனித்தே நிற்கிறான்.

சிலம்புக் காவியம் படைத்த இளங்கோவடிகளின் தமிழ் மண்ணில்
இன்று தமிழனுக்கு அவன் தமிழன் என்ற அடையாளம் இருப்பதாலேயே
இடமில்லை, அடித்து விரட்டப்படுகிறான், சொந்த மண்ணிலேயே
அகதிகளாகிவிடும் அவலம் இன்று உச்சநிலையை எட்டியுள்ளது.

அதாவது திராவிட இன மக்கள் அதாவது திராவிட மண்ணின் பங்காளிகள்
இன்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு எதிரெதிர் அணியில்
நிற்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாவதில் மூன்றாவது
அணிக்குப் பெரும் வெற்றியும் கொள்ளை இலாபமும் இருக்கிறது என்பதையும்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

திராவிட மொழிக்குடும்பம், திராவிட இனம் ஆகிய கருத்துகள்
திராவிட மொழிகளின் தாயாக இருக்கும் தமிழ்மொழி பேசிய மக்களிடம்
மட்டும் தான் இருந்ததா? என்ற கேள்வியை முன்வைத்து கடந்தக் காலத்தை
அறிவுப்பூர்வமாக நாம் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய மதராஸ் ஸ்டேட்டில் தமிழர்களை விடவும் அதிகமாக தெலுங்கு
கன்னடம் பேசியவர்கள் வாழ்ந்தார்கள் என்பதுடன் அவர்கள் செல்வாக்கு
மிக்கவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும் நினைவு கூர வேண்டியிருக்கிறது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம்
என்ற பெயர்கள் எல்லாம் இந்த உண்மையை இலைமறைக் காயாக
உணர்த்தும் சான்றுகள். அந்தச் சூழலும் கால்டுவெல் எழுதிய திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் மூலம் கிடைத்த திராவிட மொழி
இன எழுச்சியும் அரசியல் களத்தில் மிகக் கூர்மையான ஆயுதங்களாக
திராவிட இயக்கத்தாரால் முன் எடுத்துச் செல்லப்பட்டன.

அக்காலக் கட்டத்தில் தமிழன் தொடுத்த முதல் போர் என்றழைக்கப்படும்
இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் இந்த ஆயுதங்கள் மிகவும்
சக்தி வாய்ந்தவைகளாக இந்திய அரசுக்கு ஒரு நம்ப முடியாத
கலகக்குரலாக இருந்தது. மொழி என்ற கருத்துருவாக்கத்தில்
தமிழன் இந்தளவுக்கு களத்தில் இறங்கிப் போரிடுவான் என்பது
நடுவண் அரசு அறிந்துக் கொண்ட முதல் பாடமாக இருந்தது.

இந்தி எதிர்ப்பு போரில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் தலைமையில் தமிழர் படை
திருச்சி தாண்டி, செங்கல்பட்டு தாண்டி 42 நாட்கள், 577 மைல்கள் நடந்து
சென்னை வந்தடைந்தது. காந்தியடிகளின் தண்டியாத்திரையை விடவும்,
ராஜாஜியின் வேதாரண்ய உப்பளப்படையை விடவும் 4 மடங்குப் பெரிய
படையை தன் மொழிப் போர் வரலாற்றில் நடத்திச் சென்றவன் தமிழன்.

அன்றைக்கும் தமிழன் தொடுத்த முதல் போரை அடக்கவந்த
இந்திய இராணுவம் தன் மொழிக்காக துப்பாக்கி குண்டுகளை
எதிர்நோக்கிய ஒரு சமூகத்தைக் கண்டு அஞ்சி ஓடியது.
அப்போதெல்லாம் தமிழ்நாடு, தமிழ் மொழி தமிழ் மண் என்ற
உணர்ச்சிப் பொங்கி இருந்தக் காலம். அந்த உணர்ச்சியை அப்படியே
திராவிட அரசியல் தனக்கானதாக கபளீகரம் செய்துவிட்டதோ
என்ற கேள்வி நம் முன் எழுகிறது.

.

இன்று ஆட்சியில் இருக்கும் அதிமுக, நேற்றுவரை ஆட்சியில்
இருந்த திமுக, நாளைய ஆட்சிக்கனவில் இருக்கும் மதிமுக,
இந்த திராவிடச் சாரலில் அதன் ஈரமே அறியாமல் தன்னைத் தேசிய திமுக
என்றழைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தின் திமுக...
இன்னும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம்,
ஆனைமுத்து, சுப.வீ, கொளத்தூர் மணி என்று ஆள் ஆளுக்கு
தனித்தனியாக நடத்திக் கொண்டிருக்கும் திராவிட பட்டறைகள்..
அலுவலகங்கள்... இத்தியாதி சகலமானவர்களிடமும்
காலம் வைக்கும் ஒரே ஒரு கேள்வி இதுதான்.
இன்றைய சூழலில்,
உங்கள் அடையாளங்களில் இருக்கும் "திராவிடம்" என்பது என்ன?

வரலாற்று ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும்
நில ரீதியாகவும் எதெல்லாம் திராவிடம் என்று அழைக்கப்பட்டதோ
அதற்கும் நீங்கள் காட்டும் திராவிடத்திற்குமான வேறுபாடுகள் என்ன?

திராவிடம் என்ற சொல் அதற்கான பொருள் வீச்சு, வரலாற்றுப் பின்னணி
எல்லாம் உச்சக்கட்டத்தில் பேசப்பட்ட காலத்திலும் சரி, திராவிடம் என்ற
சொல் பொதுமக்களிடமும் அரசியல் சமூக தளத்திலும் அறிமுகமான
காலக்கட்டத்திலும் கூட இந்தச் சொல் மீதான புரிதல்கள் குறித்த
ஐயப்பாடுகள் எழுந்தன. ஆனால் பெரும்பான்மையானோர் கருத்து
என்ற பெயரிலும் இயக்கத்தில் இருந்துக்கொண்டே இயக்கத்தை விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை முற்றிலும் புறக்கணிப்பதுடன் கள்ளமவுனம் சாதித்து
அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்வதும் நிகழ்ந்துதானிருக்கின்றன.

சேலம் நீதிக்கட்சி மாநாடு. தலைவர் தந்தை பெரியார். மாநாட்டைத் திறந்து வைத்து பேசியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். அந்த மாநாட்டில் தான் பெரும்பான்மையோர் கருத்துக்கிணங்க நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது.
ஆனால் மாநாட்டைத் திறந்து வைத்துப் பேசிய கி.ஆ.பெ. தன் பேச்சில் தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தை தமிழ்நாட்டு நீதிக்கட்சி என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டும் என்ற தன் கருத்தைத் தெரிவிக்கிறார். கி.ஆ.பெ. வரலாறு குறித்த நூலில் மா.சு. சம்பந்தன் அவர்கள் இன்னொரு கருத்தையும் பதிவு செய்துள்ளார். (திருச்சி விசுவநாதம் - வரலாறு, பாரி நிலையம் வெளியீடு)
அதில் " கி.ஆ.பெ . திராவிட இனம் என்பதிலோ திராவிட நாடு என்பதிலோ
கருத்து வேற்றுமை கொண்டவர் அல்லர். திட்டமிட்டு மலையாளம், கன்னடம்,
தெலுங்கு முதலிய இடங்களில் பிரசாரம் செய்து திராவிட நாடுகளின் கூட்டாச்சிக்கு ஆதரவு தேடுவது தான் முறை, தமிழ்நாட்டில் மட்டும் திராவிடநாடு பேசுவது சரியல்ல"
என்ற கருத்தைக் கொண்டிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கருத்து முன்வைக்கப்படும் போதெல்லாம் திராவிடம் என்பது
இன அடையாளம், அந்த அடையாளத்தை விடுத்து தமிழன் என்று
மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டால் தமிழ்மொழி பேசுபவர்கள்
என்ற காரணத்தாலேயே அவாள்கள் இவாள்கள் எல்லாம் வந்துவிடுவார்கள்!
என்ற காரணங்களை எல்லாம் அதிமுக, அதிமுக அரசு, அதிமுக தலைமை
என்ற நிகழ்கால நிஜங்களின் ஊடாக பேசுவது எத்துணைப் போலித்தனமாக
இருக்கிறது !

திராவிடன் என்ற அடையாளமும் ராகுல் திராவிட் என்ற கிரிக்கெட் வீரரின் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் திராவிட் என்பதும் திராவிட இன அடையாளத்தின் இன்னொரு பக்கத்தை ஒரு சில ஆய்வாளர்கள் நடுவில் எழுப்பியிருந்தாலும் ஊடகமும் தமிழக அரசியலும் இம்மாதிரியான கருத்துகளை இருட்டடிப்பு செய்கின்றன,


தமிழன் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த
என்ன தயக்கம்? தமிழன் என்ற அடையாளம் யாருக்கு, ஏன்
ஒவ்வாமையாக இருக்கிறது? எவருக்கெல்லாம் இன்றைக்கு திராவிட
அடையாளம் பாதுகாப்பாய் தமிழ் மண்ணில் வெற்றிகரமான அரசியல்
கதாகாலட்சேபம் நடத்த உதவியாக இருக்கிறது?
காவிரி நதிநீர் பங்கீட்டில் கன்னடம் பேசும் திராவிடன் தமிழனின் எதிரியாக இருக்கிறான்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மலையாளம் பேசும் திராவிடன்
தமிழனின் எதிரியாக இருக்கிறான். கன்னடத்திலோ மலையாளத்திலோ
திராவிடன் இல்லவே இல்லை. கன்னட கேரள ஏன் ஆந்திராவிலும் கூட
திராவிட அரசியல் இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் திராவிட
அரசியல்.. திராவிட அரசியல் தொடர்கிறது. திராவிடம், திராவிடன் என்ற
அடையாளங்கள் தமிழ்த்தேசியம் என்ற மையப்புள்ளியை விட்டு தமிழனைத்
திசைமாற்றி இருக்கிறதா? தடம் புரள வைத்திருக்கிறதா?

முல்லைப் பெரியாறு மவுனமாக இந்தக் கேள்விகளையும் சேர்த்தே நம் முன்
வைத்திருக்கிறது. வழக்கம் போல நாம் கள்ளமவுனம் சாதித்து அல்லது
இருட்டடிப்பு செய்து அரசியல் தலைவர்களின் சுய லாபங்களுக்காக தேர்தல் வெற்றிக்காக
இலவசங்களுக்காக நம் வாழ்வாதரங்களை இழந்துவிட்டு ...
வரப்போகிற கூடன் குளம் அபாயங்களுக்கு நடுவில் நம் அடுத்த
தலைமுறைக்கு, நம் குழந்தைகளுக்கு எந்த தமிழ் நிலத்தைக்
கொடுக்கப் போகிறோம்?Thursday, December 22, 2011

இந்திய அரசின் இன்றைய போர்க்களம்

"மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு
வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க
அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும்
கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு
எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக்
கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்....."
இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல.
இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது.
பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி புரியும் காவல்துறைக்கு
வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு...
அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.

கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் இது. இங்கே அந்நிய சக்திகளின்
ஊடுருவல் இல்லை. எல்லைக்கோடுகளின் பிரச்சனைகள் இல்லை.
எந்த ஒப்பந்தங்களும் மீறப்பட்டு விட்டதாய் அடிக்கடி சொல்லப்படும்
அபத்தமான காரணங்கள் கூட இல்லை. ஆனால் இந்திய அரசு
தன் சர்வ வல்லமைப் படைத்த இராணுவ, போலீஸ், எல்லைப் பாதுகாப்பு
படைகளை ஏவி இந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறது.

யார் இவர்கள்?
இவர்களை இப்படி வேட்டை நாயாக இந்திய அரசு துரத்தி துரத்தி விரட்டுகிறதே?
ஏன்? எவருக்காக நடக்கிறது இந்தப் போர்?
இவர்கள் செய்தப்பாவம் எல்லாம் உங்களையும் என்னையும் போல ஒரு
நகரத்திலோ நகரமயமாகும் கிராமத்திலோ பிறக்காமல் வனங்களில்
பிறந்தது மட்டும் தான். அதுவும் அந்த வனப்பிரதேசம் இந்திய மண்ணின்
இயற்கை வளங்களை, தாதுப்பொருட்களை அதுவும் வல்லரசுகளுக்கு
வல்லரசுகளாகவே தொடர தேவையான தாதுப்பொருட்களை தன்
வேர்களின் அடியில் கொண்டு இருப்பதுதான் காரணம்.

கிராமம் கிராமமாக இந்த மலைப்பிரதேச மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்,
பிச்சைப்போடுவது போல எப்போதாவது அவர்களுக்கு இழப்பீடு தொகை
என்ற பெயரில் எலும்புத்துண்டுகள் வீசப்படுகின்றன. குடும்பம் குடும்பமாக
மக்கள் அதிகாரவர்க்கத்தின் ஆணையை மீறமுடியாமல் வெளியேறுகிறார்கள்.
பெரும்பாலோர் பெருநகரங்களில் கூலிகளாக, அவர்கள் பெண்டிர் பலாத்காரமாக
பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரமான நிலம்
அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது. அவர்கள் வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய
அரசாங்கமே பெருமுதலாளிகளுக்காக இந்தக் கங்கானி வேலையைச் செய்கிறது.
அவர்களுக்கு அவர்கள் பாதுகாப்புக்கு என்று எந்த இந்தியச் சட்டமும் இல்லை.
அவர்களைத்தான் இந்திய அரசு மாவோயிஸ்டுகள் என்று சொல்கிறது.


நேற்றைய (15/9/11) டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட நம் உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் அலறுகிறார்.. "தீவிரவாதிகளை விட மாவோயிஸ்டுகளால்
இந்தியாவுக்கு இருக்கும் ஆபத்து மோசமானது" என்று.அஹிம்சை வழியில் சுதந்திரம் வாங்கியதாய் அறுபது வருடங்களாய் சரித்திரப்பாடம்
நடத்தி வெற்றி கண்ட இந்திய அரசு இவர்களைக் கண்டு பயப்படுகிறதாம்!
இந்தியக்குடியரசுக்கு இவர்களால் பேராபத்தாம்! ஜன்னி கண்டவன் பிதற்றுவது
போல தங்கள் வாழ்வாதரங்களுக்காய் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைமைக்குத்
தள்ளப்பட்டவர்களைக் கண்டு வல்லரசு ஆகப்போகும் இந்தியக்குடியரசு
"ஆபத்து ஆபத்து " என்று அலறுகிறது.


வில்லும் அம்பும் ஆயுதமாக ஏந்திய தோள்களில் கலவரத்தின் போது கையகப்படுத்தப்பட்ட
துப்பாக்கிகளுடன் அந்தக் காட்டுமனிதர்கள் திரிகிறார்கள். அவர்களை அடக்க இந்திய அரசின்
செண்ட்ரல் ரிசர்வ் போலீஸ் படை, எல்லைப் பாதுகாப்பு படை, இந்திய திபேத்திய எல்லைப்
பாதுகாவல் போலீஸ் படை என்று தன் இராணுவப்படைகளைக் குவித்திருப்பது போதாது என்று
இந்திய வான்படை தற்காப்புக்காக அவர்களை எப்போது வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளும்
அதிகாரத்துடன் வலம் வருகிறது. இந்திய அரசு இந்தியக் குடிமக்களை தன் சொந்த
இராணுவப்பலம் கொண்டு அடக்குவதுடன் அவர்களை அவர்கள் மண்ணிலிருந்து விரட்டி
பாக்சைடு சுரங்க முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கிறது.

தண்டகாரண்ய காடுகளில் 19 மாவோயிஸ்டுகளைச் சுட்டுக்கொன்றுவிட்டதாக சொன்ன
போலீஸ் அதிகாரியிடம் "இவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதற்கான அடையாளம் என்ன?"
என்ற கேள்விக்கு அந்த அதிகாரி சொன்ன பதில்:
"அவர்களிடம் மலேரியா வியாதிக்கு மருந்துகளும் டெட்டால் பாட்டில்களும் இருந்தன"
என்பதுதான். இந்தச் செய்தியை எந்த 24 மணிநேர தொலைக்காட்சியும் காட்டுவதில்லை.
எந்தப் பத்திரிகையும் இச்செய்திகளை செய்திகளாக்குவதில்லை. செய்தி ஊடகங்கள் அனைத்தும்
அதிகார வர்க்கத்தின் நலன் பேணுவதில் கூட்டுக்களவாணிகளாக இருக்கின்றன.

ஊடகங்கள் தனியார் நிறுவனங்களின் கைப்பாவைகளாக இருக்கின்றன. செய்திகளை அவர்கள்
உடனுக்குடன் வெளிக்கொண்டுவருகிறார்கள் என்பதுடன் செய்திகளையும் அவர்களே
தீர்மானிக்கிறார்கள் என்பது தான் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான
செய்தி .
மே, 2010ல் மேற்கு வங்கம் ஜார்க்கிராம் பகுதியில் நடந்த ரயில் விபத்தும் அதில் 150 பேர்
பலியானதும் உண்மையானச் செய்தி. ஆனால் அதற்கு காரணமானவர்கள் மாவோயிஸ்டுகள்
என்பது ஊடகங்கள் உருவாக்கிய செய்தி. அந்தச் செய்திக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

ஆதாரமற்ற அந்தச் செய்தியினைக் கொண்டு கற்பனையில் உருவாக்கப்பட்ட செய்தி:
"மாவோயிஸ்டுகள் தாங்கள் கொலை செய்த போலீஸ்காரரின் உடலைச் சிதைத்து... "
என்று கொடூரக்கற்பனைகளைத் தன் முதல் பக்கத்தில் கொட்டு எழுத்துகளில்
அச்சிட்டு பரபரப்பான விற்பனைக்கு வழி வகுத்துக் கொள்கிறது.
ஆனால் 'இது உண்மையல்ல" என்று போலீஸ்
நிர்வாகமே மறுப்பு கொடுத்தச் செய்தியை மட்டும் தபால்தலை அளவுக்கு சின்னதாக
தன் பக்கங்களுக்கு நடுவில் எங்காவது புதைத்து வெளியிடுகிறது.

ஒரிசா மாநிலத்தில் ராயக்கடா மாவட்டத்தில் , டிசம்பர் 2000ல்
ஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco - Birla grp)
எதிர்த்து (Prakrat Sampad Suraksha Parisad - PSSP) இயற்கை வளங்களைப்
பாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில்
அதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால்,
எஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ
முதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல
பெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து
லாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக
குரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி
அடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,.
3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.
அவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில்
கறுப்புக்கொடி ஏற்றுகிறார்கள். அதுவும் இந்திய பேரரசின்
சுதந்திரதினமான ஆகஸ்டு 15லும் , குடியரசு தினமான ஜனவரி 26 லும்
கறுப்புக்கொடி ஏற்றப்படுகிறது.


தண்டகாரண்ய காடுகளில் மருத்துவமனைகள் கிடையாது. இந்தியாவிலேயே ஊட்டச்சத்து
குறைவான குழந்தைகள் இங்கே தான் பிறந்து வளர்ந்துக்கொண்டிருக்கிறார்கள். கல்விக்கான
பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. ஆனால் மாணவர்களோ ஆசிரியர்களோ கிடையாது.
ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காமலேயே மாதச் சம்பளம் கிடைக்கிறது.
பள்ளி கூடங்களில் இந்திய அரசின் சீருடை அணிந்த போலீஸ் பாதுகாப்புபடை
பத்திரமாகத் தங்கி இருக்கும் கூடாரங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை எல்லாம்
அந்தந்த கிராமத்து மக்களை அவர்கள் இருப்பிடத்திலிருந்து விரட்டுவது தான்.

இந்திய அரசு அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்கிறது. எதற்காக தெரியுமா?
அவர்கள் எத்தனைப் பேரைச் (மாவோயிஸ்டுகளை) சுட்டுக்கொல்கிறார்களோ
அதற்கேற்ப அவர்கள் ஊக்கத்தொகையும். அதனாலேயே கிணற்றிலும் குளத்திலும்
காட்டிலும் மேட்டிலும் தெரு முனையிலும் திரிந்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை
விரட்டி விரட்டிக் கொலை செய்கிறது. அப்படிக் கொலைச் செய்யப்பட்டவர்கள்
மாவோயிஸ்டுகள் தான் என்று நிருபீக்க போலீசே மாவோயிஸ்டுகள் சீருடையை
அவர்களுக்கு அணிவித்து காவல் நிலையத்தில் காட்டி சன்மானம் பெற்ற பின்
அவர்கள் உடலை வீசி எறிகிறது...!
அப்படிக்கொலை செய்யப்பட்டவர்களின் இறந்த உடலை வாங்க அவர்கள் வாகனத்தின்
பின்னாலேயே ஓடும் தாயின்/ சகோதரியின்/மனைவியின் அவலம்..
வார்த்தைகளுக்குள் அடங்காது.

இதை எல்லாம் இந்திய அரசு யாருக்காக செய்கிறது? ஏன்?
இந்தக் காடுகளில் மலைகளில் மண்ணடியில் புதைந்துக்கிடக்கும்
இயற்கை தாதுப்பொருட்களுக்காக. அதிலும் குறிப்பாக பாக்சைடு.
பாக்சைடிலிருந்து அலுமினியம் தயாரிக்கப்படுகிறது. ஒரு டன் அலுமினியம்
தயாரிக்க ஆறு டன் பாக்சைடு தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல,
ஆயிரம் டன்களுக்கு அதிகமான தண்ணீரும் அதிகமான மின்சாரமும்
தேவைப்படுகிறது. இதனால் தான் இக்காடுகளில் பெரிய அணைக்கட்டுகள்
கட்டப்பட்டு நீர்த்தேக்கி வைக்கப்படுகிறது.
யாருக்காக எதற்காக இவ்வளவு அலுமினியம் தயாரிக்க வேண்டும்?
இந்த அலுமினியம் தான் ஆயுதம் தயாரிக்கும் தொழிலில் மிக முக்கியமான
ஒரு கலவைப் பொருளாக இருக்கிறது.
இந்த அலுமினியம் தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் மேற்கத்திய நாடுகள்
இந்த தயாரிப்பு வேலைகளைச் செய்ய இந்திய போன்ற நாடுகளைக் குத்தகைக்கு
எடுத்திருக்கின்றன.


இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் சோனியகாந்தியின் கைப்பாவை..! என்று
தலையங்கம் எழுதி சில பத்திரிகைகள் புரட்சியாளர்களாய் தங்களை
அடையாளப்படுத்திக்கொள்கின்றன. ஆனால் அந்தப் புரட்சியாளர்களும்
வெளிப்படையாக தெரியும் இச்செய்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
வேறு சில நிஜங்கள்.
மேற்கு வங்க நிதி அமைச்சராக இருந்த அசோக் மித்ரா தன் வாழ்க்கை வரலாற்றை
எழுதும் போது ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.
கைதவறிப் போட்டதா? இல்லைக் காட்டுக்கொடுத்தக் காரியமா? தெரியவில்லை!

1991ல், இந்திய அரசு தன் பொருளாதர சரிவை சமாளிக்க உலக பன்னாட்டு
நிதி நிறுவனத்திடம் (International monetary fund) கடன் கேட்கிறது.
அந்நிறுவனம் இரண்டு நிபந்தனைகளை வைக்கிறது.
ஒன்று பொருளாதர சீர்திருத்தம் (அதாவது தாராளமயம், தனியார்மயம்)
இரண்டாவது மன்மோகன்சிங்கை இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக்க
வேண்டும்! சாட்சாத் அதே மன்மோகன்சிங் அவர்கள் தான் இப்போது
இந்தியாவின் பிரதமராகவே இருக்கிறார்.
வெள்ளை வேட்டி பளபளக்க டில்லியில் வலம் வரும் உள்ளாட்சி அமைச்சர்
ப.சிதம்பரம் அவர்கள் நாளை ஒருவேளை பி.ஜே.பி யோ அல்லது மூன்றாவது
கூட்டணியோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அப்போதும் அமைச்சராக வலம்
வரக்கூடும். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.


கர்நாடக அரசின் லோகாயுத அறிக்கைப்படி, சுரங்கத்தில் எடுக்கப்படும்
ஒரு டன் இரும்புக்கு அரசுக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 27/
சுரங்க முதலாளிக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 5,000/.
பாக்சைடு சுரங்கங்களில் சுரங்க பெரு முதலாளிகளுக்கு
கிடைக்கும் தொகை இதைவிட பலமடங்கு!
இந்தப் பணம் தான் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை
உருவாக்கி ஆட்சி செய்கிறது.

இந்தியாவில் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாராளுமன்றத்தைவிட
வலிமையானது கார்ப்பரேட் ராஜ்யம். பணமுதலைகளின்
பன்னாட்டு கருப்புப்பணப் பேரரசு. இந்தக் கார்ப்பரேட் ராஜ்யம்
பண்டித ஜவஹர்லால் நேருவின் காலத்திலேயே இலைவிட்டது
என்று சொல்லலாம். உண்மையில் இதன் வளர்ச்சி
இன்னொரு ராஜியமாகி இந்திய அரசுக்கே ஆப்பு வைக்கும்
என்கிற கலக்கம் நேருவுக்கு இருந்ததோ என்னவோ.....
நேரு இங்கிலாந்தின் பொருளாதர நிபுணர்
நிக்கலோஸ் கால்டரின் தலைமையில் ஓர் ஆய்வுக்குழுவை
ஏற்படுத்தினார். பெரும்பணக்காரர்களின் ஆண்டு உயர் வருமானத்தில்
75 விழுக்காடு நேரடியாக வருமானவரியாக வசூலிக்க வேண்டும்
என்ற பரிந்துரையை அரசு ஏற்றது. 1956 ஆம் ஆண்டில்
செல்வவரி, நன்கொடை வரி, இறப்பு வரி, செலவு வரி, மூலதன
இலாப வரி (Wealth tax, gift tax, expenditure tax, capital gains tax)
என்ற துணைவரிகளை விதித்து வரி ஏய்ப்பைத் தடுக்கலாம்
என்று கால்டர் குழு வலியுறுத்தியது.
ஆனால் காலப்போக்கில் இந்த வரிகளில் பல்வேறு சலுகைகள்
வழங்கப்பட்டன. உலக மயமாதல், தாராள மயமாதல், தனியார்
மயமாதல் என்று இந்தியாவின் பாதை திரும்பிய காலக்கட்டத்தில்
நடுவண் அரசு (கவனிக்க IMF ன் நிபந்தனைகளை) பல்வேறு வரிச்சலுகைகளை
அள்ளி அள்ளி வழங்கி இருக்கிறது.

மத்திய அரசின் தணிக்கை அறிக்கையின்படி,
2010ஆன் ஆண்டில் மட்டும் நிறுவன வரிக்கு வழங்கபட்ட
சலுகையால் அரசிற்கு ஏற்பட்ட நிதியிழப்பு ரூபாய். 35000 கோடி.
1990 முதல் 2010 வரை மத்திய அரசு வழங்கியுள்ள வரிச்சலுகை
100 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

மேற்கண்ட அபரிதமான வரிச்சலுகைகளைப் பெற்றவர்களுக்கும்
அதாவது தனியார்மய ஜாம்பவான்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும்
இடையே எந்தச்சக்திகளாலும் உடைக்க முடியாத பிரிக்க முடியாத
ஓர் உறவு இருக்கிறது. அதாவது கள்ளத்தனமான உறவு வலுவாக
இருக்கிறது. இந்த secretive society தான் இந்தியாவை எந்தக் கட்சி
ஆட்சிக்கு வந்தாலும் ஆண்டுக்கொண்டிருக்கிறது. அரசின் கோட்பாடுகளை,
விதிகளைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்தது இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.


திரைப்படம், ஊடகம், மத நிறுவனங்கள், இங்கெல்லாம் இவர்களின்
பெரும்பணம் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறது.
இந்த அபரிதமான பெரும் பணப்பெருக்கத்தைக் கொண்டுதான் இந்தியாவின்
தேர்தல் ஓட்டுகளை, அரசாங்கத்தை, நீதித்துறையை, தொலைக்காட்சிகளை,
பத்திரிகைகளை, தொண்டு நிறுவனங்களை, கல்லூரிகளை, பல்கலை கழகங்களை,
விளையாட்டுகளை (குறிப்பாக கிரிக்கெட்) மருத்துவமனைகளை.... என்று அனைத்தையும்
தன் கையகப்படுத்தி இருக்கிறது கார்ப்பரேட் சாம்ராஜ்யம்.

இவைகளை எல்லாம் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஆற்றலும்
கொண்ட அறிவுசார்ந்த /படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கார்ப்பரேட்
ராஜ்யங்களின் சமஸ்தானங்களை கட்டி மேய்க்கின்ற
வேலையை திறன்பட செய்கிறார்கள்.
படித்த நடுத்தர வர்க்கம் இன்றைக்கு பல ஆயிரங்களில்
மாத ஊதியம் பெறுகின்ற பெரும் பேற்றை அடைந்திருப்பதற்கு
இந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யங்கள் காரணமாக இருக்கின்றன.
இந்த நடுத்தர வர்க்கம் தான் அந்தக் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின்
தாராளமய தனியார்மய சந்தையின் நுகர்வோராகவும் இருக்கிறார்கள்.
கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் பணம் இப்படி சுழற்சி முறையில்
அவர்கள் கஜானாவுக்கு மீண்டும் வந்தடைகிறது
.
எனவே தான், இந்தப் போராட்டக்களத்தில் நிற்பவ்ர்கள் ஆதிவாசிகளாகவும்
சட்டத்திற்கு எதிராக செயல்படும் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள்
ஆபத்தான மாவோயிஸ்டுகள் என்றும் , தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும்
நிலைமை ஏற்பட்டிருக்கிறது.


ஆய்தப்போராட்டம் எதற்கும் தீர்வாகிவிட முடியாது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு
வர வேண்டும் என்று சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் மாவோயிஸ்டுகள் சொல்லும் பதில் ஒன்றுதான்.
முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்.
உங்கள் சிதம்பரத்திடம் சொல்லுங்கள் பசுமைவேட்டையை
நிறுத்து என்று!

அந்த வனப்பகுதியிலிருந்து ஒலிக்கிறது அவர்களின் குரல்:

நம்மை இன்று அதிகாரம் செய்பவர்கள்
ஒரு காலத்தில்
நமக்குப் பக்கத்தில் வசிப்பதற்காக வந்தார்கள்.

நாம் அவர்களுக்குப் பழங்களையும்
கிழங்குகளையும் கொடுத்தோம்.

நமது தாய்கள்
அவர்களுக்குப் பால் கொடுத்தனர்.
நமது தந்தையர்
அவர்களுக்கு உணவு கொடுத்தனர்.

வந்தவர்கள்
வெறும் கையொடு வந்தார்கள்
இன்றைக்கு அவர்கள்
பன்னாட்டுக் கம்பேனிகளின் பங்குதாரர்கள்

அவர்களது
அரண்மனை போன்ற வீடுகளை
அலங்கரிக்க
நமது தலைகளைக் கேட்கிறார்கள்.

அவர்கள் அதைக் கேட்பது
வெறும் வாழ்தலுக்காகத்தான் என்றிருந்தால்
அதையும் கொடுத்திருப்போம்
பலியிடுதலின் மரியாதை தெரிந்தவர்கள்
நாங்கள் என்ற வகையில்.
அவர்களது உல்லாசத்துக்கு
நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க மாட்டோம்

அநீதிக்கு எதிராக
எங்கள் கருத்தை உயர்த்த உயர்த்த
போலீஸ் பூட்ஸ் கால்களின் சத்தமும்
ஆபாசமான குற்றச்சாட்டுகளும்
பல்கிப் பெருகி பயமுறுத்துகின்றன.

ஆமாம் நாம்
அங்கிருக்கும் வரையிலும்
நமது கடைசி மூச்சுவரை
இசைக்கருவியின்
அலுத்துப்போன தந்திக்கம்பிகளை
ஒழுங்கமைப்போம்.

அப்போதுதான்
ந்மது வாழ்வையும்
இருத்தலையும்

உயர்த்திப் பிடிக்க முடியும்

--------------

கட்டுரைக்குத் துணைநின்ற நூல்கள்:

அருந்ததிராய் - Broken republic

சிந்தனையாளன் -ஜூலை 2011

பாடல் : அஞ்சையா, கோயா மலைப்பகுதி: இந்திரனின்
கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் ஆதிவாசிக்கவிதைகள் தொகுப்பிலிருந்து.

----

நன்றி : பதிவுகள் டாட் காம்


Wednesday, December 21, 2011

போரிலக்கிய வரலாற்றில்..... பெயரிடாத நட்சத்திரங்கள்போரிலக்கியம் என்ற சொல் தமிழனுக்கு ஒன்றும் புதியதல்ல. காதலும் வீரமும்
நாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்ந்த நம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில்
வீரம் மிக்க கதைகள் பல உண்டு.

"பகைவர் முன் நின்று போரில் யானையைத் தடுத்துக் கொன்று வீர மரணம்
அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர
எமக்கு வேறு வழிபாடு இல்லை" என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்டது
வெறும் கவிதை மட்டுமல்ல, அதுவே நம் வாழ்க்கை. அதுவே நம் வழிபாடு.
அதுவே நம் நம்பிக்கை. தமிழன் வாழ்க்கையில் சிரார்த்தம் செய்வதெல்லாம்
கிடையாது. அதெல்லாம் ரொம்பவும் பிற்காலத்தில் வந்ததுதான்.
நடுகல் வழிபாடாக இருந்த தமிழன் வழிபாட்டின் தொடர்ச்சியாகவே
திருவள்ளுவர் நம்பிய "நீத்தார் பெருமை"யும். இன்றும் கூட எம் கிராமப்புறங்களில்
தைப் பொங்கலுக்கு அடுத்த நாளில் அக்குடும்பத்தில் நீத்தார்பெருமையை
நினைவுகூர்ந்து அவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துப் படையலிட்டு
புதுத்துணி வாங்கி வைத்து அக்குடும்பத்தார் கூடி வழிபாடு செய்யும் நாளாகவே
இருப்பது அதன் எச்சம் தான்..

போரிலக்கிய வரலாற்றில் கலிங்கத்துப் பரணிக்கு தனி இடம் உண்டு, எனினும்
பரணியில் பெண்ணுக்கான இடம் போர்க்களத்தில் போரிட்டு இல்லம் திரும்பும்
ஆடவனை மகிழ்விப்பது மட்டுமே. அதாவது வீரனின் காதல் வடிகாலாகவும்
பசித்திருக்கும் அவன் காமத்தைத் தீர்த்து வைக்கும் நுகர்ப்பொருளாகவும்
மட்டுமே சித்தரிக்கப்படுகிறாள். போர்த்தெய்வமாக பெண் தெய்வம் வளர்த்தெடுக்கப்பட்ட
இக்காலக்கட்டத்திலும் கூட பெண்ணின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.
இதை தொல்காப்பியர் கால தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே காணலாம்.
தமிழனின் பண்பாடு என்று பேச வரும் போது அதன் முதல் அத்தியாயத்தில்
இடம் ப்டிக்கும் தொல்காப்பியமும் "போர்க்களத்தில் பெண்ணை விலக்கியே
வைத்திருக்கிறது "

"எண்ணரும் பாசறைப் பெண்ணோடு புணரார்"

"புறத்தோர் ஆங்கண் புரைவதென்ப "
(தொல். பொருளதிகாராம் கற். நூற்பா 34 &35)


இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்றதுடன் இந்திய இனக்குழு மக்களின் வாய்மொழிப் பாடல் கதைகளில் இடம் பெற்று ஏதொ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டும் கூட என்னிடம் கேட்டால் 'போரிலக்கியம்' என்று தான் சொல்வேன். அவ்விரு காப்பியங்களிலும் 'அரக்கியர்' என்றழைக்கப்படும் பெண்கள் தான் ஆணுடன் சமமாக எதிர்நின்று சமராடிய பெண்களாக என் கண்முன் வருகிறார்கள். இந்தக் காப்பியங்கள் எல்லாம் கற்பனையே
என்று சொல்லுபவர் குறித்து நமக்குப் பிரச்சனையே இல்லை! ஆனால் காப்பிய
நிகழ்வுகள் எல்லாம் வரலாறாக நிறுவப்படும் போது இந்த அரக்கியர் யார்? என்பதும் அந்த வீரப்பெண்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான அடையாளம் குறித்தும் தொடர்புகள் குறித்துமான இந்திய இனக்குழு வரலாற்றை நாமும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இராமயணக் காப்பியத்தில் அயோத்தி இராமனின் தந்தை தசரதனின் காதல் மனைவி கைகேயிதான் மன்னனுடம் போர்க்களத்தில் அருகிலிருந்தப் பெண்ணாக காட்டப்படுகிறாள்.
தசரதன் போரிடும் போது தேர்ச்சக்கரத்தின் அச்சாணி முறிந்துவிட அவள் தன்
கட்டைவிரலை அச்சாணியாக்கி அவன் வெற்றிக்கு காரணமாகிறாள். அதனால்தான் தசரதன் அவளுக்கு இரு வரம் கொடுத்ததாகவும் அவள் அந்த வரங்களை தனக்குத் தேவைப்படும் காலத்தில் கேட்டுக்கொள்வேன் என்று சொன்னதும் அதன் பின் இராமனின் பட்டாபிஷேகத்திற்கு முந்தினம் அவள் வரம் கேட்டதும் அவன் கொடுத்ததும் இன்றும் நம் அயோத்தியா அரசியல் வரை விரிகின்ற இராமாயணக்கதையாக இருக்கிறது .

மகாபாரதக் கதையில் மானபங்கப்படுத்த தேவி பாஞ்சாலி கூட

ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்
பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவி குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியேன் "
என்று சபதம்தான் செய்தாளே தவிர அவள் சபதத்தை நிறைவேற்றியதும் அந்தப்
பொறுப்பும் அவள் கணவன்மாரின் செய்லபாடாகவே இருப்பதையும் பார்க்கிறோம்.

முதலாம் உலகப்போரின் மிகச்சிறந்த போர் இலக்கியமாக போற்றப்படும்
விரா மேரி பிரிட்டனைனின் தன் வரலாறு கூட ( Vera Mary Brittain's Her
Testament of youth is one of the outstanding biographies of the first world war)
நேரடியாக போர்க்களத்தில் போரிட்ட பெண்ணின் வரலாற்று இலக்கியம் அல்ல.
முதலாம் உலகப்போரில் போரில் காயம்பட்ட ஜெர்மானிய வீரர்களைக் கவனிக்கும் செவிலிப்பெண்ணாக வேலைப்பார்த்த அனுபவமும் அப்போரில் தன் காதலனையும் சகோதரனையும் இழந்த வலியும் அவள் தன் வரலாற்றையும் போரின் கொடுமைகளையும் எழுத வைத்தன எனலாம்.

இந்த வரலாற்றின் பின்னணியில் அண்மையில் ஊடறு + விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ஈழப்பெண் போராளிகளின் கவிதை தொகுப்பு நூல்
"பெயரிடாத நட்சத்திரங்கள்' மிகுந்தக் கவனத்தைப் பெறுகிறது.

வீர உணர்வை தலைமுறை தலைமுறையாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கடப்பாடு மட்டுமே கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்கான அந்த வீர உணர்வையும் கண்ணகியின் அறச்சீற்றத்தையும் தொன்மங்களிலிருந்து எடுத்துக்கொண்டு நம் ஈழப் பெண் போராளிகள் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.

கவிதைக்கான தகுதிகளாக படிமம் , குறியீடு என்ற அறிவுஜீவித்தனமான அளவுகோல்களை எல்லாம் வைத்துக்கொண்டு இக்கவிதையை அணுகுபவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடையக் கூடும்.
க்ருத்துருவாக்கங்களின் எதிரொலியாக உருவாகும் கவிதைகள் பிரச்சாரமாக குன்றிவிடும் என்று நவீன கவிதையின் பிதாமகன்கள் எல்லால் சொல்லியிருப்பதைப் புரட்டிப் போட்டிருக்கும் நெம்புகோல் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள். வாழ்க்கை அனுபவத்திலிருந்து
நிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமாகாது என்பதற்கு ஈழப் பெண் போராளிகளின் இக்கவிதைகளே மிகச்சிறந்த சான்றுகளாக இருக்கின்றன.

19 வருடங்களாக நீதிமன்ற கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த எம் வாச்சாத்தி பெண்களின் சோகத்தின் ஒரு துளி கூட எம் தாய்த்தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களின் பெண்மொழியைப் பாதித்ததில்லை. வரலாற்றுப் பார்வையோ சமகால அரசியல் பார்வையோ அது குறித்த தெளிவோ தேடலோ நம் தமிழ்நாட்டில் பெண் கவிஞர்களிடம் இல்லையே என்று ஆதங்கப்படும்
சூழ்நிலையில் தான் ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கின்றன.
அரசியல், வரலாற்று நிகழ்வுகளின் ஊடாகப் பயணித்து பெண்ணுடலை, பெண்ணியத்தைப் பேசி இருக்கிறார்கள்.

இவர்கள் ஆயுதம் தாங்கியது காலத்தின் கட்டாயம் என்பதை அடுத்த நூற்றாண்டின் வாசகனுக்கும்
எளிதில் உணர்த்தும் வகையில் பின் இணைப்பாக யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் 1996ல்
கவிதை வடிவில் வெளியிட்ட துண்டு பிரசுரத்தை இணைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

தான் கவிஞராக அறியப்பட வேண்டும் என்றோ பெண்ணியம் பேச வேண்டும் என்றோ தேச இன விடுதலையை ஆவணமாக்க வேண்டும் என்றோ எழுதப்பட்டவை அல்ல இக்கவிதைகள். ஆனால் இவை எல்லாமாக இருக்கின்றன இக்கவிதைகள். சிட்டுக்குருவிகளின்
சிறகசைப்பு போல மழைத்துளிப் பட்ட மண்வாசனைப் போல பனிக்குடம் உடைத்து மலர்ந்த குழந்தையின் அழுகுரல் போல இயல்பாக, உண்மையாக இருக்கின்றன இக்கவிதைகள்.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக புகலிடத்து வாழும் மேற்கத்திய
பெண்நிலைவாத நோக்கில் மட்டுமே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பெண் என்றால் உயிர்தரும் தாயமை
பெண் போராளி என்றால் உயிர் அழிக்கும் வன்முறை
பெண் இயல்புக்கு மாறான பெண்ணின் இயற்கை உணர்வுகளை அழித்த குரூரம் என்று குரல் கொடுத்தனர்.
இன்னொரு பக்கம் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பெண்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக மற்ற பெண்களிடமிருந்து மாறுபட்டவர்களாக சித்தரித்தனர்.
அடேல் பாலசிங்கம் அவர்கள் " women is combat belong to a totally new world, a world outside a normal woman's life. And that is what makes these women fighters so interesting and admirable.
They have taken up a life that bears little resemblance at all to ordinary existence of women'
என்றார்கள். பெண் போராளிகளுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி இருந்து கொண்டே இருந்தது என்று சொல்வதை விட அப்படி ஒரு இடைவெளியை உருவாக்கி அதைப் பத்திரமாகக் கட்டிக் காப்பதில் இயக்கமும் சமூகமும் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
விளைவு?
இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்ற கேள்விதான்.

போர்க்காலத்தை விடக் கொடியது போருக்குப் பிந்தையக் காலக்கட்டம். துப்பாக்கிகள் மவுனமான இக்காலக்கட்டத்தில் அவர்கள் போற்றப்படவில்லை. கொண்டாடப்படவில்லை. உயிருடன் வாழும்
பெண் போராளிகளின் இன்றைய நிலைமை தமிழ்ச் சமூகத்தின் நன்றி கெட்ட குணத்தை மட்டுமல்ல,
தமிழ்ச் சமூகத்தில் முகமூடியைக் கிழித்திருக்கிறது.

அவர்கள் ஆயுதம் தாங்கியதும் போராடியதும் யாருக்காக?
அவர்கள் உடல் ஊனமுற்றது யாருக்காக?
போரில் வீரமரணம் அடைந்தால் மட்டும்தான் போராளியா?
போரில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக தோற்றுப்போனவர்களாக களைத்துப் போயிருக்கும்
அவர்கள் இன்று நிராயுதபானியாக தங்களுடைய சொந்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக
- அதன் உடலிருந்து வடியும் சாதியம், சடங்கு சம்பிரதாயம், ஆணாதிக்கம் ஆகிய
அனைத்துக்கும் எதிராக களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை.

(04/12/2011 ஞாயிறு மாலை, மும்பை தமிழ்ச் சங்கத்தில் , தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின்
13 ஆம் அமர்வில் பெயரிடாத நட்சத்திரங்கள் - ஈழப்பெண் போராளிகள் கவிதைத் தொகுப்பு
குறித்த அறிமுக உரை. )

மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள்பெயரிடாத நட்சத்திரங்கள் - ஓர் அறிமுகம்
----------------------------------------------

மும்பை , சயான் தமிழ்ச்சங்கத்தில் கடந்த ஞாயிறு 04/12/2011 மாலை
6.30 மணிக்கு தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமத்தின் 13ஆம் அமர்வு
நடைபெற்றது. வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்
இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்
தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.
போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன்
அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை
தனியாக...)
ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன்
அதன் பின் பேசினார்: அவர் பேச்சில் சில கருத்துகள்...
தோழி புதியமாதவி, உயிருடன் வாழும் இன்றைய போராளிகளின் நிலை
என்ன வாக இருக்கிறது என்கிற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். அவர்களை
இன்றைய தமிழ்ச்சமூகம் குறித்து அவர் அறியாதவர் அல்ல.
ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் தங்கள்
வருங்கால துணைவர் என்னவாக இருக்க வேண்டும் என்று
படித்த இளம்தலைமுறையைச் சார்ந்த இன்றைய பெண்கள் பேசினார்கள்.
அனைவருமே தங்களுக்கு ஏ.டி.எம் மிஷின் போல ஒரு கணவன் வேண்டும்
என்று தான் விருப்பப்பட்டார்கள். ஒரு mediocrity சமூகத்தில் ,அறிவியல் ரீதியான பார்வைகளை தொலைத்து விட்ட சமூகத்தில் ,விளம்பரங்களை அலசல்கள் இல்லாமல் ஏற்றுகொண்ட சமூகத்தில் இம்மாதிரியான ஒரு படித்த இளம்
தலைமுறையை உருவாக்கி இருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில்
போராளிகளைப் பற்றியோ நம் விழுமியங்கள் குறித்தோ
எம்மாதிரியான அக்கறைக் கொண்டிருபார்கள் ! அவர்களிடம்
நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இதற்கெல்லாம் யார் காரணம்?
என்ற தொடர் கேள்விகளை நான் வைக்கிறேன்.
பெண்கள் இன்று நேற்றல்ல,யுகங்களாக போர்க்களத்தில் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆயுதம் தாங்கியும் ஆயுதம் தாங்காமலும்.
போர் என்று சொல்வது தேசியம் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரால்
உருவாக்கப்பட்டது. அதனால் தான் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் மகள்
தன் பிறவியை வெறுக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு
"தம் நண்பருக்கு எழுதிய கடிதமாக" மன அழுத்தத்துடன் வாழ்ந்த நெருக்கடிகளை
வெளியிட்டிருக்கிறார். சாதியமும் மதச் சடங்கு சம்பிரதாயங்களும் எப்போதும்
எல்லா நாடுகளிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதில்
மிகவும் கவனமாக இருந்தன, இருக்கின்றன. ஆவணப்படங்களை
எடுப்பது என் தொழிலாகவும் நான் விரும்பும் செயலாகவும் இருப்பதால்
இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களை நானறிவேன்.
ஒருமுறை தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில், அங்கு ஒதுக்கப்பட கிராமப்புறங்கள் இருந்தன, நான் காலில் செருப்பணிந்து
அவர்கள் தெருவழியே நடந்து சென்றுவிட்டதால் (நான் அப்போது அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்பது வேறுவிஷயம். இப்போது போனாலும் அப்படித்தான் நடந்துக்கொள்வேன்
என்பதும் உறுதி) ஒரு நாள் முழுவதும் நான் அங்கிருக்கும் உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து பலவிதமான தொல்லைக்கும் ஆளானேன் .. இம்மாதிரியான பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு.
அம்மாதிரியான சூழலில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் அதை மவுனத்தில்
ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து குரல் கொடுக்கும் கலகக்குரலிலும் நாம் இன்னும்
அறியாத பெண் போராளிகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தேசவிடுதலையின் ஊடாக பெண்விடுதலையைக் கனவுக் கண்ட போராளிகள்
இந்தப் பெண்கள் என்பதை அவர்களின் கவிதைகளைப் புரட்டிப் பார்த்த
இந்த சில நிமிடங்களில் என்னால் அவதானிக்க முடிந்தது.
பெண்களுக்கு என்று தேசமில்லை, நாடில்லை, மொழியில்லை,
எங்கெல்லாம் மனிதம் கொலைசெய்யப்படுகிறதோ அங்கெல்லாம்
முதலில் ஒலிக்கும் கலகக்குரலாய் இருப்பதும் பெண்ணின் குரல்தான்
என்பதையும் இக்கவிதைகள் உணர்த்த தவறவில்லை. பெண் எப்போதும்
இரண்டால் பால்நிலையில் வைத்து தான் பார்க்கப்படுகிறாள் (second sex).
ஈழத்திலோ இரண்டாம் குடிமகனாக்கப்பட்ட தமிழ் ஆண்களின் சமூகச்சூழலில்
இவளின் பால்நிலை எம்மாதிரி இருந்திருக்கும் என்பதையும்
கணக்கில் எடுத்துக்கொண்டு இக்கவிதைகளை வாசிக்கும் போது
இப்பெண்கள் ஆயுதம் ஏந்தியதும் களத்தில் ஆணுக்கு நிகராக
நின்று சமர் புரிந்து வெற்றிகள் பல கண்டதும் இந்தப் பயணங்களின்
ஊடாக பெண்விடுதலையைப் பேசியதும் கனவு கண்டதும்
இக்கவிதைகளை வாசிக்கும் போது நான் கண்ட பல்வேறு
தளங்களாக விரிகின்றன.

போரிலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
war literature, warring literature, literature under war.
பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பு literature under war எனப்படும்
போர் நெருக்கடியில் எழுதப்பட்ட இலக்கியவகையைச் சார்ந்ததாகவே
நான் கருதுகிறேன்.

அடுத்துப் பேசிய திரு ராஜாவாய்ஸ் அவர்கள் இக்கவிதைகளுக்கு
முன்பாக படைக்கப்பட்ட ஷோபாசக்தி கொரில்லா, இம் ஆகிய
படைப்புகளிலிருந்து ஈழப் போரிலக்கியங்களைப் பேச ஆரம்பித்தார்.
இப்பெண் போராளிகளின் கவிதைகள், இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல
சமூகத் தளத்திலும் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டியதுடன்,
ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் இப்பெண் போராளிகளால் பெருமை
அடைகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் தான்
இப்பெண்கள் வீடுகளைத் துறந்து சமூகவெளிக்குள் வர
மிகப்பெரிய காரணிகளாக இருந்திருப்பதை அறிய முடிகிறது.
பகைவன் இப்படித்தான் இருப்பான் என்பதை ஏற்றுக்கொண்ட
நம் பெண்களால் அவர்கள் நம்பிய பெரிய அண்ணனின்
துரோகம் அந்தத் தூரிகைகளைத் துப்பாக்கி ஏந்த வைத்தது.
இந்தப் போராளிகள் பிறந்த தமிழ்ச் சமூகத்தில் தான்
நாம் பிறந்திருக்கிறோம் என்பதற்காகவும் அவர்கள்
வாழ்ந்தக் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்காகவும்
இப்போதைக்கு நாம் பெருமைப் பட்டுக்கொள்வோம்.
கையறுநிலையில் வாழும் நமக்கு சின்ன ஆறுதலாக இருக்கிறது
என்ற ஆதாங்கத்துடன் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

கவிஞர் தமிழ்நேசன் பெயரிடாத நட்சத்திரங்கள் குறித்த தன் பார்வையைக்
கீழக்கண்டவாறு பதிவு செய்தார்.

போரிலக்கிய வரலாற்றில்... என்று அறிக்கை அழைப்பு வந்தது. புத்தகம் கைக்கு வந்தவுடன்
இது போரிலக்கியமாக மட்டுமல்ல, பேரிலக்கியமாகவும் திகழ்கிறது என்பதை இத்தொகுப்பில்
உள்ள ஒவ்வொரு கவிதையின் கனமும் உணர்த்துகிறது.

எழுத்து என்பது போராட்டத்தின் ஒரு வடிவம் , ஒரு முகம் என்பதை மறந்துப் போன
மறத்தமிழனுக்கு நினைவூட்ட வந்த நட்சத்திரங்கள் இவை.
இத்தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இதயத்தை இனம்புரியாத கனம்
ஆட்கொண்டுவிட்டது. முதல் கவிதையைப் படிக்க ஆரம்பித்த வுடன் என்ன பேச
வேண்டும் என்பது மனசிற்குள் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல ஓட் ஆரம்பித்தது.
இரவும் பகலும் மனசை நிலை கொள்ள இயலாத தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன
இக்கவிதைகள். ஒவ்வொரு கவிதையையும் வாசித்து முடிக்க வெகுநேரம் தேவைப் படுகிறது.
ஒவ்வொரு வரியும் அது ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீண்டு, அடுத்த வரி அடுத்த கவிதை
செல்வதற்கு நம்மை ஆசுவாசபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு கவிஞைகளின்
படைப்புகள் கால வரிசையில் முன்னும் பின்னுமாக இருந்தாலும் கூட ஒரு கவிதையின்
தொடர்ச்சியாக அடுத்த கவிதையையும் நாம் காணமுடிகிறது.

அம்புலியின் "நாளையும் நான் வாழ வேண்டும்" என்ற கவிதை சம்மட்டி எடுத்து நம்
நம் நெற்றியில் ஓங்கி அடித்ததைப் போல உணர்கிறேன். கவிதையின் அத்தலைப்பிலிருந்து
மீளவே வெகுநேரம் ஆனது.

நான் எப்போதும் மரணிக்கவில்லை என்பதிலும் யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை என்ற
வரிகளிலும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வுகளின் பிரதிபலிப்பே. யுத்தம் எமக்குப்
பிடிக்கவில்லை எம்மீது திணிக்கப்பட்டது என்பதையும் சேர்த்தே ஆவணப்படுத்தி
இருக்கின்றன இக்கவிதைகள்.


இந்தப் பெண்ணின் மனசைத்தான் கடும்போக்கு உடையவர்கள் என்று விமர்சிக்கப்பட்டதையும்
நாம் அறிவோம். உங்களைப் போலவே எனக்கும் வாழ்க்கையின் சுகமான நிமிடங்களை
அனுபவித்து வாழ ஆசை உண்டு. நான் வெறும் ஆயுதம் தாங்கியவள் மட்டுமல்ல,
ஆயுதம் தாங்கியதாலேயே நான் முரடும் அல்ல, எனக்குள் ஈரம் உண்டு, அந்த ஈரம்தான்
என் மக்களின் வாழ்க்கைக்காக என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. ஆயுதம் ஏந்தியதால்
எனக்குள் ஆசை, காதல், அன்பு, கருணை, பாசம் எல்லாம் மரணித்துவிட்டதாக
எண்ண வேண்டாம், நான் அதே உயிர்த்துடிப்புடன் தான் வாழ்கிறேன், இன்றுமட்டுமல்ல,
என்றும் எப்போதும் என்னை நான் , என்னுள் இருக்கும் என்னை நான் இழந்துவிட மாட்டேன்'
என்று அடித்து சொல்வது போல சொல்கிறார், 'நான் இன்னும் மரணிக்கவில்லை' என்று.

எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்ற காப்டன் வானதியின் தொடர்ச்சியாக
தொடங்கும் நாதினியின் 'உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.. உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது,
எங்கள் கைகளுக்கு வந்த உந்தன் பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை" என்ற வரிகள்
ஆய்தங்கள் மவுனமான இக்காலத்தில் மிகவும் பொருள் பொதிந்தவை.

இப்படி எழுதப்பட்ட கவிதை இன்று காலச்சூழலில் சிக்கி சிதைக்கப்பட்டுள்ளது, வரலாறு
நெடுக யுத்தமும் சிதைவுகளும் நீண்டு கிடக்கின்றதெனினும் நம் கண்முன்னே ஒரு
கனவு தேசம் களவாடப்பட்டு விட்டதை நினைக்கும் போது இக்கவிதை வரிகள்
எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பதை உணர முடிகிறது.

கிழிந்த காற்சட்டை ஒன்றை தைத்தவாறிருந்தாள் ஒருத்தி, ஊசியால்
நூல் கோத்தவாறு அவள் மெல்ல சொன்னாள், 'வானமும் பீத்தலாய்
போய்ச்சுது, இது முடிய அதையும் நான் பொத்தி தைக்க வேண்டும்
என்ற கவிதையில் காற்சட்டை பூமி மிகச்சிறந்த குறியீடாகி
கவிதையைக் கனமுள்ளதாக்குகிறது.


நிகழ்ச்சியின் இடையில் பெயரிடாத நட்சத்திரங்கள் புத்தகத்திலிருந்து
கவிதைகளை அ.ரவிச்சந்திரன், கவிஞர் ஜெயகாண்டீபன் ஆகியோர்
வாசித்தார்கள். தமிழ்ச் சங்கத்தின் சிற்றரங்கம் தமிழ் ஆர்வலர்களால்
நிரம்பி இருந்தது. நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தார்கள் ராஜாவாய்ஸும், கராத்தே முருகனும்.


நட்சத்திரங்கள் தெரியாத மும்பை இரவு
வழக்கமான இலக்கிய கூட்டம் அல்ல இது என்பதற்கு சாட்சியாக
அன்று தூங்காமல் விழித்திருந்தது.


Monday, December 19, 2011

கனிமொழியும் எம் தமிழ் மொழியும் !என் அன்புத் தங்கையே,

நலந்தானா?

நான் உங்கள் கவிதைகளின் ரொம்ப பெரிய ரசிகையோ வாசகியோ அல்ல.
ஆனால் நீங்கள் எழுத வந்ததில் அளவில்லா ஆனந்தம் கொண்டவர்களில்
நானும் ஒருத்தி.

கலைஞரின் படைப்புகளில் சிறந்தது ?
என்ற கேள்விக்கு ஒரு முறை மாலன் அவர்கள் சொன்னார்
கனிமொழி என்று. அந்தப் பதிலை ரொம்பவும் ரசித்ததும் உண்டு.

சாகித்திய அகதெமி தன் பொன்விழாவை கவிபாரதிகள் நிகழ்வாக
மும்பை, ரவீந்திர நாட்டிய மந்திரில் கொண்டாடிய போது
நீங்கள் வாசித்தக் கவிதை நினைவில் இல்லை.
கவிதை அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரியும் இல்லை என்பது தான்
அப்போதே மும்பை இலக்கியவாதிகளின் அபிப்பிராயமாக இருந்தது.
சரி அதெல்லாம் இருக்கட்டும். இன்றைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும்
ஊடக வெளிச்சத்தில் எங்களைப் போன்ற அன்னக்காவடிகளின் விமர்சனங்கள்
எடுபடாது. இருக்கட்டும். ஆனால் அன்று உங்களைப் பற்றிய அறிமுகம் தான்
நான் ரசித்த க்ளைமாக்ஸ்.

கனிமொழி தன்னைக் கலைஞரின் மகள் என்று சொல்லிக்கொள்ளக் கூட
விரும்பமாட்டார்கள். கனிமொழி கருணாநிதி என்று தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ள அவர் விரும்புவதில்லை என்று குமுதம் பாணியில் சொல்லி உங்களை
அறிமுகப்படுத்தினார் அகதெமியில் செயலாளராக இருந்த சச்சிதானந்தன்.
அதை ஒரு நல்ல நகைச்சுவையாக ரசித்துக் கொண்டிருந்தவர்களில்
நானும் ஒருத்தி.

உங்கள் கவிதைகள் சில எனக்கும் பிடிக்கும். எங்கள் தென்னாடுடைய சிவனுக்கு அந்த
நாட்களில் மட்டும் பெண்கள் என்றால் ஆவதே இல்லை என்ற வரிகளை பல
கட்டுரைகள், பேச்சுகளில் நானும் எடுத்தாண்டிருக்கிறேன், பெருமையுடன்.


சிறைவாசம் சிலருக்குத் தான் சாதகமாக இருந்தது, இருக்கிறது.
அந்த ஒரு சிலரில் நீங்கள் தான் முதல் வரிசையில் முதலாவதாக இருக்கிறீர்கள்.
ஆமாம் நீங்கள் சிறை சென்றது எதற்காக?
முள்ளி வாய்க்கால், முல்லைப் பெரியாறு, கூடங்குளம்... இப்படியாக
தமிழ்ச் சமூகத்தில் என்னவெல்லாமோ நடந்துக் கொண்டிருப்பதால்,
தங்கையே, மறந்துப் போய்விட்டது, ஆமாம், நீங்கள் சிறை சென்றது எதற்காக?யாருக்காக?
எனக்கு மறந்து விட்டதைப் போலவே உங்களுக்கும் மறந்துப் போயிருக்கும்,
சென்னை மாநகரில் உங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து!

ஆமாம், அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு
சிறையில் அடிபட்டதும் மிதிபட்டதும்... எனக்கு இன்னும் மறக்கவில்லை!

ஆனால் பாருங்கள், இந்தக் கட்சிக்காரர்களும் ஊடகங்களும்.
உங்களுக்கு கொடுத்த வரவேற்பில் 0.00005 விழுக்காடு வரவேற்பு கூட
அவருக்கு கொடுக்கவில்லையே. எனவே உங்களின் சிறைவாசம்
உண்மையிலேயே... ரொம்பவும் ஸ்பெஷலானதாகத் தான் இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

இதை வாசிப்பவர்கள் சிலர், அடடா, அண்ணன் தங்கைக்கு நடுவில் சிண்டு
முடித்துவிடுவதாக நினைப்பார்கள். அல்லது
என்னை ஸ்டாலின் ஆள் என்றொ எதாவது சொல்லக்கூடும்.
உங்களுக்கே தெரியும், இடியாப்பம் சிக்கல் அளவுக்கு இருக்கும் உங்கள் பங்காளிச் சண்டைகள்.
எனக்கென்ன, கலைஞர் டி.வி.யிலோ உங்கள் சொத்துப்பத்திலோ ... எதாவது உரிமை இருக்கிறதா
என்ன? இல்லை அப்படித்தான் ஏதாவது கேட்கப் போகிறோமா என்ன?

திராவிட அரசியலில் ஒரு தலைமுறை தன் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டது.
அந்த தலைமுறையில் எச்சமாய் நான் உங்கள் முன் நிற்கிறேன்.
உங்கள் வார்த்தைகள், கவிதை மொழிகள், உங்கள் வசனங்களை எல்லாம்
நம்பி எங்கள் தந்தையர் தலைமுறை தங்கள் இளமைக்காலத்தைத்
தொலைத்துவிட்டார்கள். அதன் சாட்சியாக நான் மட்டுமல்ல,
என்னைப் போல கோடானக்கோடிபேர் இன்னும் உயிருடன் வாழ்ந்துக்
கொண்டுதானிருக்கிறோம்.

சிறைவாசம் கண்டு நீங்கள் திரும்பி வந்தப் போது சென்னை வீதியில்
வரவேற்பு பதாகைகளில் தமிழும் தமிழ்ச் சொற்களும் வல்லாங்குச் செய்யப்பட்டதைப் பார்த்துக் கொண்டு
உங்கள் அரசியலுக்கு சாட்சியாக இருக்க எங்கள் தலைமுறையும் தயாராக இல்லை.
இப்போதெல்லாம் கார்ட்டூன் காட்சிகளாக நீங்களும் உங்களுக்கு உங்கள் தொண்டரடிகள்
கொடுத்த வரவேற்புகளும் தான் காமெடி கலாட்டாவாக ஒலி-ஒளி காட்சியில்
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.!

தங்கை கனிமொழியே,
உன் அரசியல் பிரவேசம்
உன் கவிதைகளை எரித்த
சாம்பலில் பிறந்தப் போது
நான் மவுனமாகவே இருந்தேன்.
எனக்குத் தெரியும்
நீங்களும் நானும்
கவிதை எழுதாவிட்டால்
தமிழ்த்தாய் ஒன்றும்
அனாதையாகிவிட மாட்டாள் என்று.

ஆனால்... தங்கையே!
நம் பாட்டன் மூப்பாட்டன்
காலவெள்ளத்தில்
செதுக்கி செதுக்கி
நம் கைகளில் கொடுத்திருக்கும்
தமிழை -
தமிழ் அர்த்தங்களை
யாருக்காகவும் எரிக்கவோ
பிரிக்கவோ
அரசியல் ஆதாயக் கணக்கில்
சேர்க்கவோ
அவ்வளவு எளிதில் விட்டுவிட
இனியும்
நாங்கள் தயாராக இல்லை.
ஏமாந்துப்போன
எங்கள் தந்தையர் தலைமுறையிலிருந்து
நாங்கள் பாடங்கள் கற்றுக்கொண்டோம்
ஏமாந்தவன் ஏமாந்துக்கொண்டே இருப்பதும்
ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பதும்
இனி தொடர்கதை அல்ல.

அன்புடன்

புதியமாதவி.


Sunday, December 11, 2011

பால்தாக்கரே பேத்திக்கு நிக்காஹ் வாழ்த்துகள்


திருமணங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியவை.
கொண்டாடப்பட வேண்டியவை. சுற்றமும் நட்பும் சூழ
இனிய நினைவுகளை என்றும் சுமந்து நிற்பவை.
அந்தக் காலத்தில் அரசர்கள் திருமணங்களுக்குப் பின்னால்
போரும் சமாதானமும் எழுதப்பட்டன.
உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டரிலிருந்து
மராத்திய மண்ணின் சிவாஜி மகாராஜா வரை
இதற்கு விதிவிலக்கல்ல.
இன்றைக்கும் நம் அரசியல் வாரிசுகளின் திருமணங்களில்
இதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ திருமணத்தில்
நேரில் வந்துக் கலந்து கொள்ளும் தலைவர்களின்
வருகையை ஒட்டி அந்தந்த அரசியல் தலைவர்களின்
கட்சி சார்ந்த கூட்டணி அரசியலின் உறவுகள் கூட
தீர்மானிக்கப்படுகின்றன!

இதெல்லாம் இருக்கட்டும். அண்மையில் மும்பையில் நடந்த ஒரு
திருமணம் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு அதிகமாக வராத
ஒரு திருமணம்! அதுதான் எங்கள் மும்பை மாநகரின்
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் பேத்தி நேகாவின் திருமணம்!
மன்னிக்கவும் நிக்காஹ் என்ற திருமணம்.

பேத்தி நேகா தாக்கரேவின் மூத்தமகன், மறைந்த பிந்துமகாதேவின் மகள்.
பிந்து மகாதேவ், ராஜ்தாக்கரேவின் நண்பரின் மகன் , குஜராத்தைச் சார்ந்த
இசுலாமியக்குடும்பத்தைச் சார்ந்தவர் தான் மணமகன் மநன்.
டிசம்பர் 04, 2011 ல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த திருமணத்தில்
தாக்கரேக்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு கலக்கி இருக்கிறார்கள்.
சிவசேனாவும் மராத்திய நவநிர்மான் சேனாவும் அருகருகே கூடிக்கலந்து
நிற்கும் காட்சி ஒருபக்கம் இந்த நிக்காஹின் இன்னொரு ஹைலைட்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களை தாக்கரேவின் மூத்தமருமகள் மாதவி தாக்கரே வரவேற்பதில் கவனம் செலுத்தினார். வந்தவர்களின் பட்டியலில் மனோகர் ஜோஷி, ராம்கதம், கோபால் ஷெட்டி, நிதின் சர்தேசி, அவர் மனைவி சுவாதி, மங்கேஷ் சாங்க்ளே,ஷிரிச் பார்க்கர், சிசிர் ஷிண்டே இப்படியான பிரபலங்கள்.

தாக்கரேவின் பேத்தியைத் திருமணம் செய்திருக்கும் மணமகன் திருமணத்திற்கு
முன் இந்துவாக மதமாறிவிட்டார் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் குடும்பத்தினர் அச்செய்தியை மறுத்திருக்கிறார்கள்.
எப்படியோ.... மணமகனை குஜாராத்திலிருந்து தேர்ந்தெடுத்து
நிக்காஹ் செய்திருக்கும் பேத்தி நேகாவுக்கு நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துகள்!

இந்த நிக்காஹ் திருமணத்தில் க்ளீன் போல்டாகி
இருப்பது யார் என்று போகப்போகத்தான் தெரியும்.

கோழி முட்டை இடுவதையும் மழைப் பொழிந்தால்
குளம் நிரம்புவதையும் கூட சுடச்சுட செய்தியாக்கும்
ஊடகங்கள்... இந்தச் செய்தியை இதுவரை பெரிய
செய்தியாக்கவில்லை! இந்த நிக்காஹை செய்தியாக்கிவிடக்கூடாது
என்பது கூட காரணமாக இருக்கலாம்!

எப்படியோ தலைவர்கள் ஆட்டுக்கறிக்கு அடிச்சிக்கிற மாதிரி அடித்துக்கொண்டு
கோழிக்கறிக்கு கூடிக் குலாவிக் கொஞ்சிக் கொள்கிறார்கள்! பாவம்...
மகாஜனங்கள்! இவர்கள் தலைவர்களாக எப்போதும் நிலைப்பதற்காக
எதாவது காரணங்களை ஏற்படுத்திக்கொண்டு கொலை வெறிப்பிடித்து
அலைவதை நிறுத்தினால் புண்ணியமாக இருக்கும்.


(ஆதாரம் :Dailybhaskar.com )

Thursday, December 1, 2011

பெயரிடாத நட்சத்திரங்கள் - அறிமுகம் --------------------------------------------- போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்

தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வு
மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறு மாலை(04/12/2011) 6.30 மணியளவில்
நடைபெறும். 13வது அமர்வின் சிறப்பு நிகழ்ச்சியாக உலக மொழிகளின்
போரிலக்கிய வரலாற்றில் தமிழ் இலக்கியம் தன் சுவடுகளைப் பதித்திருப்பதின்
அடையாளமாய் அண்மையில் ஊடறு+விடியல் வெளியீடாக வந்திருக்கும்
பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்
நடைபெறும்.
தமிழர்கள் வாழும் உலக நாடுகள் எங்கும் இக்கவிதைகள்
மிகுந்தக் கவனத்தைப் பெற்றிருக்கும் சூழலில் பெண் போராளிகளின்
இக்கவிதைகள் குறித்தும் களம் குறித்தும் இன்றைய நிலமை குறித்தும் கருத்துகளை மும்பை வாழ் தமிழர்களின் பதிவுகளாக்க அழைக்கின்றோம்.
தமிழ் இன உணர்வாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள்,
பத்திரிகையாளர்கள் , சமூக அக்கறைக்கொண்ட அனைவரும் கலந்துக் கொண்டு
உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.

தோழமை

புதியமாதவி