Friday, June 30, 2017

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கு.குமாரா


இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  குஜராத் குமாரா..

swatch-bharat.jpg (758×290)

இதற்குத்தானே... ஆஹா..
தூய்மை இந்தியா திட்டத்தின் அடையாளமாக இந்திய தேசப்பிதா
 மகாத்மா காந்தியை பிஜேபி அரசு தூசி தட்டி கழுவி ஏற்றிய போதே
 தெரியும்.. இப்படி எல்லாம்  காந்தியை அவர்கள் கொண்டுவந்து நிறுத்துவார்கள் என்பது!
கேட்டால் காந்தி தானே சொன்னார்..
 "இறைத்தன்மைக்கு அடுத்தது தூய்மைநிலை " 'cleanliness is next to godliness'
விளைவு... ..???
குப்பைத் தொட்டி, குப்பை லாரி, கழிவறை,
அரசின் கட்டணக் கழிவறை...
இத்தியாதி இடங்களில் எல்லாம் மகாத்மா காந்தியின்
கண்ணாடியும் மொட்டைத்தலையும்
கைத்தடியும்.. ராட்டையும்..
(சினிமா தியேட்டரில் ஆண்- பெண் கழிவறை அடையாளத்திற்கு கவுண்டமணி, மற்றும் அவர் மனைவியின் போட்டோவைப் போட்டு அடிவாங்கும் செந்தில் நகைச்சுவை காட்சியை கொஞ்சம்  ப்ஃளாஸ்பேக் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்)
இதைக் கண்டு அரசியல் கட்சிகளோ காங்கிரசோ கண்டணம் தெரிவிக்கவில்லை.
The judgment comes following a public interest litigation field by Badruddin Qureshi at Chhattisgarh High Court.
பொதுஜன நலம்விரும்பி தொடுத்த வழக்கில் சத்தீஸ்கர் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
 இம்மாதிரியான இடங்களில் காந்தியின் அடையாளங்கள்
  தவிர்க்கப்பட வேண்டும் என்று.
தீர்ப்பு இன்னும் நடைமுறைக்கு வந்துவிட்டதா தெரியவில்லை. மாநகராட்சியும் மாநில அரசும் எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குஜராத் குமாரா..

GST ஜீ பூம்பா


GST    ஜீ பூம்பா..ஒரு தேசம் ஒற்றை வரி
காஷ்மீரும் கன்யாகுமரியும் ஒன்றாகிவிட்டது.. ஆஹா..
தமிழ்நாடும் பீஹாருன் ஒன்றாகிவிட்டது..
GST .. ஜீ பூம்பா.. GST .. ஒரு மந்திரச்சொல்.. ஜீ பூம்பா.
GST .. GST .. GST ..

இதுதான் தற்போது நம் நாடாளுமன்றத்திலும் மேல்சபையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
GST ..
நாளை முதல் /ஜூலை 1 முதல் அமுலுக்கு வரப்போகும் GST ..
பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிடும் என்றும் இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள்
என்றும் ஆகையினால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அன்றாட பொருட்கள்
கிடைக்கும் என்றும் மோதி அரசு அலங்காரமான அறிவிப்புகளுடன் தேசம் முழுமைக்குமான
ஒற்றை வரி முறையை உரக்கப் பேசுகிறது.
ஆனால் இந்தியச் சட்டப்படி இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களும் ஒரே வரி விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
அத்துடன் அரசு வசூலிக்கும் வரிகள் மூன்று வகையாக இருக்கின்றன
நடுவன் அரசு வரி
மாநில அரசு வரி
நடுவண் அரசும் மாநில அரசும் சேர்ந்து வசூலிக்கும் வரி.

இந்த மூன்று முறைகளை எப்படி ஒற்றை வரி முறையில் கொண்டுவர இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இதுவரை எந்த ஒரு செயல்திட்டமும் அரசு வெளியிடவில்லை.
பொருட்களின் கொள்முதல் விலையை
வியாபாரிகள் அவர்கள் இலாபத்திற்கு ஏற்ப தீர்மானிக்கும் வசதியை வழங்கி இருப்பதால்
பொருட்களுக்கான வரி விகிதம் மட்டுமே பொருட்களின் விலையை மலிவாக்கும் என்பதும் பொதுமக்கள் பலனடைவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான கருத்து... பரந்த இந்திய தேசத்தின்
பூகோள ரீதியான நிலப்பரப்பை நடுவண் அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டிருப்பது தெரிகிறது. அதுவும் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதி. குஜராத்தின் வரி விதிப்பு ஏன் மற்ற மாநிலங்களின் வரி விதிப்பிலிருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்.
அதற்கான அனைத்து காரணங்களும் நிர்வாக ரீதியாகவும் அறிந்தவர் தான். இப்போது அவரே சொல்கிறார்... குஜராத்தும் அசாமும் ஒன்றுதான்.
மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் ஒன்றுதான் என்று!
அவர் டில்லியிலிருந்து எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும். அதை நாம் நம்பியே ஆகவேண்டும்.
(The GST is bound to lead to serious difficulties, and could possibly fail, because it seeks to treat unequal states equally)

இப்படியான ஒற்றை வரிவிதிப்பின் மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு/ வருவாய் இழப்பை மாநில அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது? மாநில அரசுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குமா என்ன? அதை யார் தீர்மானிப்பார்கள்? வறட்சி நிவாரணத்திற்கே
ஆயிரம் ரூபாய்க் கேட்டால் வெறும் ஐம்பது ரூபாயை எடுத்து வீசுகிற மத்திய அரசு
மாநில அரசின் வருவாய் இழப்பை எம்மாதிரி அணுகும்?!!


Wednesday, June 28, 2017

காதலுக்கு மூட்டுவலி

4.jpg (244×183)
யாருக்குத்தான் வயதாகவில்லை.
எல்லோருக்கும்தான்.
வளர்ச்சி, இயக்கம் இருந்தால் வயதும் சேர்ந்தே இருக்கும் என்பதுதானே விதி.
நிலவுக்கு வயது உண்டோ ?
அட நிலவுக்கு என்ன.. ?
 நிலவு நேசிக்கும் சூரியனுக்கும் நிலவு மணந்த பூமிக்கும் கூட
வயது உண்டுதான்.
வயதிருந்தால் முதுமையும் இருக்குமா ?
இருக்கும்.
முதுமை இருந்தால் முடிவும் இருக்குமா ?
இருக்கும்.
முடிவெல்லாம் முடிவுதானா ? இல்லை புதிதாக ஒன்றின் ஆரம்பமா ?
இருக்கலாம். வாழ்க்கை ஒரு வட்டம்தானே.
ஒன்றின் முடிவில் மற்றொன்றின் ஆரம்பம்.
ஒன்றே மற்றொன்றாய் புதிதாகப் பிறப்பதும் இறப்பதும் சங்கிலியாக இயக்கம்
 என்ற புள்ளியைச் சுற்றிச்சுற்றி.. இயங்கிக்கொண்டிருக்கிறது.
காதலுக்கு மட்டும் வயதில்லையா ?
என்றும் இளமையானது காதல்.
காதலுக்கு மூப்பில்லை.
காதலுக்கு மரணமில்லை.
காதலுக்கு முடிவில்லை.
காதல்தான் இயக்கத்தின் அச்சு.
இப்படி எல்லாம் காதலித்தவர்களும் சொல்கிறார்கள்,
கவிஞர்களும் சொல்கிறார்கள்.
காதலுக்கு முடிவுண்டு காதலுக்கும் மரணமுண்டு என்றால் பலகோடி உயிர்கள் வருத்தப்படக்கூடும்.
வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்வோமா..
காதலுக்கு வயதுண்டு. ஆனால் முடிவில்லாத எண்போல வளர்ந்துகொண்டே இருக்கும்.
எதுதான் பெரிய எண்.. யாருக்குத் தெரியும். அவ்வளவு பெரிய எண்ணை
 எழுதிப்பார்க்க முடியுமா ?
கற்பனை செய்து கொள்ளலாம்.
என்ன இது ? அதிகாலையில் இப்படி ஒரு தத்துவ வேதாந்தம்.
என்ன செய்யட்டும். இன்று தான் பழைய டிரங்க் பெட்டியை எடுத்து சுத்தம் செய்தேன்.
பழுபேறிய சில கடிதங்கள். சில நினவுகள்.
அவன்களின் கடிதங்கள் பல.
அவன்களில் சிலர்களின் பெயர்கள் கூட இன்று மறந்துவிட்டது.
முகத்தை நினைவில் கொண்டுவர முயற்சி செய்துபார்க்கிறேன்.
ம்கூம்.ஒருத்தனின் முகமும் நினைவில் வரவில்லை.
ஏன் இத்தனை வருடங்களும் இந்தக் கடிதங்களை எல்லாம் பூட்டி வைத்துப்
பாதுகாத்தேன் ? தெரியவில்லை.
யாராவது எடுத்துப் படித்திருந்தால் என்னவாகியிருக்கும் ?
அவ்வளவுதான் என்னைப் பற்றி என்னவெல்லாம் பேசி யிருப்பார்கள் ?
அதைக் கற்பனை செய்யும்போது இன்றும் சிரிப்புதான் வந்தது!
சின்னதாக நோட்புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து எழுதப் பட்டிருந்தக் கடிதம்.
 குண்டு குண்டான எழுத்துகள். இங்க் பேனாவால் எழுதப்பட்டிருந்தக் கடிதம்.
எழுதியவனின் முகமும் என் நினைவுகளில் கிழிந்துவிட்டதாலோ என்னவோ
 கடித்தத்தை மடித்து வைத்திருந்த மடிப்புகள் கிழிய ஆரம்பித்துவிட்டன.
‘இந்தக் கடிதம் கண்டவுடன் என் காதலை ஏற்றுக்கொண்டால் இக்கடிதத்தை
 உன்னிடமே வைத்துக்கொள்.. ப்டிக்கவில்லை என்றால் இக்கடிதத்தைத் திருப்பிக்கொடுத்துவிடு.. ‘
இன்றுவரை இந்தக் கடிதம் திருப்பிக்கொடுக்கப்படாமல் என்னிடம். என்னிடமே.
அடப்பாவமே.. அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டோமா ?
அப்படித்தானே அவன் நினைத்திருக்க வேண்டும் ?!!
ஏன் கடிதத்தைத் திருப்பிக்கொடுக்காமல் என்னிடமே வைத்துக்கொண்டேன் ?
அதிலும் அப்போது ஒரு சந்தோஷம் இருந்திருக்குமோ ?
தேதியில்லை. எழுதியவன் பெயரில்லை.
யாருக்கு எழுதியது என்று எதுவும் இல்லை.
மொட்டையாக எழுதப்பட்ட மொட்டைக் காதல் கடிதாசா ?
ஆங்..இப்போ நினைவுக்கு வருது.. அந்த மொட்டை சீனு எழுதிய கடிதம் இது.
குண்டா இருப்பான். அவன் சிரிக்கும்போது அமுல்பேபி மாதிரி இருக்கும்.
அவன் குண்டா இருக்கானு மற்ற பசங்கள் அவனை விளையாட்டிற்கு
 சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!
நான் மட்டும்தான் பாவப்பட்டு அவனிடம் பேசிக்கொள்வேன்.
அந்தப் பாவப்பட்டு பேசியதில் வந்தக் காதல் கடிதம்..
இன்னொரு கடிதம்..
சுற்றிலும் கலர் பென்சிலால் பார்டர். அந்தப் பார்டரில் செடியும் பூக்களும்.
நடுவில் சிவப்புக் கலர் ப்பால்பென் எழுத்துகள்.
‘காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல் ‘
என்று கடிதம் முடிவில் ..
நிலவு, பூ, நதி, மீன் என்று என்னவெல்லாமோ வர்ணிப்பு மயம்.
சாண்டில்யனின் கதையிலிருந்து அப்படியே காப்பி அடிச்சமாதிரி.
நீண்டக் கடிதம். இப்போது இதை ஒரு பக்கத்திற்கு மேல் வாசிக்கும்
சுவராஸ்யமில்லை.எழுதியது யார் என்பதையும் கடைசிப்பக்கத்தைப்
புரட்டிப்பார்த்து தெரிந்து கொள்ள ஆர்வமில்லை.
ஹைஸ்கூலில் மாணவிகள் எல்லோரும் ‘A ‘ பிரிவில்.
சிறப்பு பாடம் நடக்கும்போது மட்டும் எல்லா ப்ரிவுகளும் ஒன்று சேரும்.
அல்ஜீப்ரா & ஜியாமெண்ரி எடுத்திருந்தேன்.
A, B. C, D நாலு பிரிவுகள் உண்டு. அப்போது +2 கிடையாது.
SSLC – 11 ஆம் வகுப்பு. அதன் பின் PUC . அப்புறம்தான் பட்டப்படிப்பு.
நான்குப் பிரிவுகளிலும் அல்ஜீப்ரா& ஜியாமெண்ரி எடுத்தவர்கள்
 ஒருவகுப்பில்.அதுபோல சயன்ஸ் எடுத்தவர்கள் ஒரு வகுப்பில். அதுபோல வரலாரு எடுத்தவர்கள் ஒரு வகுப்பில்…
இதில் இவன் ‘C ‘ வகுப்பில் இருந்த சாதிக்பாட்சா.
விளையாட்டில் இவந்தான் முதல்,
நிறைய போட்டிகளில் கலந்துகொள்பவன்.
ஸ்டேட் லெவலில் பங்கெடுத்துக்கொண்டவன். இவனால் பள்ளிகூடத்திற்கு
 நல்ல பெயரும் மதிப்பும். அதனால் எப்போதும் இவனைச் சுற்றி ஒரு கூட்டம்.
 எங்கள் குரூப்பில் எல்லோருக்கும் இவன் மீது ஒரு கண் உண்டு
. இவனுடைய கடிதம் வந்தவுடன் அன்று முழுவதும் என்னவோ
எனக்கே ஸ்டேட் லெவலில் வெள்ளிக்கோப்பைக் கிடைத்த மாதிரி சந்தோஷம். இரட்டைப்பின்னலைப் முன்னால் போடுவதும் முன்னால் போட்டதை எடுத்துப்
பின்னால் போடுவதுமாக…அவன் பார்க்கும்போதெல்லாம் மனசில் குறுகுறுப்பு. அவன் பார்க்காதிருக்கும்போது அவனைப் பார்க்க வைப்பதற்காக எதையாவது
அசட்டுத்தனமாக செய்துவைப்பதும் அவன் வாய்க்குள்ளேயே சிரிப்பதும்
‘ஏய்.. சாதிக் உன்னைத்தாண்டி பார்க்கிறான்.. ‘ என்று தோழிகள் சொல்லும்போது பெருமையாக ‘ ம்ம் தெரியும் ‘ என்று தலையசைத்ததும்..
அப்புறம்.. நான் கல்லூரிப் படிக்கும்போதே அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.
அவுங்க வாப்பா செய்த பாய் வியாபாரத்தையே இவனும் செய்வதாக
பக்கத்து வீட்டு பாட்டி சொன்னதாக ஞாபகம்.
அதன்பின் ஒரு நாள் கல்லூரி முடிந்து டவுண் பஸ்ஸில் ஊருக்கு வரும்போது
 இவன் இரண்டு குழந்தைகள், மூன்றாவது அவளில் வயிற்றில்
உதைத்துக்கொண்டிருக்க கூட்டத்துடன் முண்டி அடித்துக்கொண்டு
 ஏறியபோது அவளையும் அவள் வயித்தையும் பார்த்து உட்கார்ந்திருந்த
பஸ் சீட்டிலிருந்து எழுந்து இடம் கொடுத்தது ரொம்பவும் தற்செயலாக நடந்தது.
அப்போதுதான் நான் அவனையும் அவன் என்னையும் பார்த்துக்கொண்டோம்.
முட்டுக்கு மேல் உயர்த்திக்கட்டியிருந்த வேட்டியை
என்னைக் கண்டவுடன் சட்டென அவன் கைகள் இறக்கிவிட்டுக்கொண்டன.
அவனையும் அறியாமல் அவன் கைகள் அவன் தலைமயிரைச் சரிசெய்தது.
என்னைச் சந்தித்ததில் அவன் இனம் புரியாதச் சங்கடத்தில் நெளிவதை
 என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பாவமாக இருந்தது.
அவன் கண்களைச் சந்திக்காமல் வேறுபக்கமாக
என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.
கல்லூரி வாழ்க்கை பெண்கள் கல்லூரியாகப் போனதால்
 ஒன்னும் சுவராஸ்யம் இல்லை.
இந்த ஸிஸ்டர்களின் கெடுபிடியில் காதல் கடிதங்கள் குறைந்துபோனது.
ஹாஸ்டல் ஒரு சிறைச்சாலை மாதிரிதான். எங்கேயும் வெளியே போகக்கூடாது.
வருடத்தில் ஒரு முறை சினிமா பார்க்க போகலாம்.
 அதுவும் எல்லோருக்கும் ஒரே வரிசையில் டிக்கெட் ரிசர்வ் செய்யப்படும்.
காலேஜ் பஸ்ஸில் எல்லோரும் ஏறனும்.முன்னாலே பின்னாலே வாட்ச்மேன்.
 கூடவே இரண்டு மூன்று ஸிஸ்டர்கள்.
கொடுமைடா சாமி..
ஆனா சும்மா சொல்லப்படாது .. இதிலும் எப்படித்தான் செய்தி பரவிவிடுமோ
சேவியர் கல்லூரிக்கும் ஜாண்ஸ் கல்லூரிக்கும். டிக்கெட் ஹவுஸ் புல்லாயிடும்.
அப்படியே சினிமா முடிந்து வெளியில் வருவதற்குள் நிறைய பார்வைகள்,
 கடிதங்கள்.. பரிமாற்றங்கள்.
இப்படித்தான் அபூர்வராகங்கள் படம் பார்க்கப்போனோம்.
 படம் பார்த்தவுடன் ஹாஸ்டலுக்கு வந்து வார்டனிடம் வாங்கிக்கட்டிக்கொண்டோம்.
‘எவடி.. இந்தப் படத்தை நல்லப் படமுனு சொன்னது..நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ‘
வழக்கம்போல நான் முந்திக்கொண்டேன்.
‘பாலசந்தர் படம் மேடம். எல்லா பத்திரிகையிலும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். .அதுதான்.. ‘
பத்திரிகைகள் பேசினா.உடனே நல்லதுனு அர்த்தமா…
அன்றைக்கு எங்கள் எல்லோரையும் ஒரு மணிநேரம் முட்டிப்போட வைத்து
‘ஏசுவே.. என் பிள்ளைகளை மன்னியும் . தொலை தூரத்திலிருக்கும்
 இவர்களின் பெற்றோர்கள் எங்களை நம்பி இவர்களை விட்டிருக்கிறார்கள்..
பிதாவே. இந்த இளம் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியை நீரே தாரும்..
 எப்போதும் தவறானப் பாதைகளில் செல்லாமல் இவர்களை நீரே
 உம்முடைய கரங்களால் இரட்சித்தருளும். இவர்கள் இன்று அறியாமல் தவறு செய்துவிட்டார்கள் தேவனே.. இந்த உம்முடைய பிள்ளைகளை
 நீரே மன்னியும் பிதாவே.. ‘
ஸிஸ்டர் அழுது அழுது பிரேயர் .. கால் முட்டு வலித்தது.
கண்ணைத் திறந்துப் பார்க்க பயமாக இருந்தது.
எப்படியோ ஒரு வழியாக ‘ஆமென் ‘ சொல்லிவிட்டு வேகமாக ரூமுக்கு
 வந்து மெதுவாக என் பர்சைத் திறந்து அந்தக் கடிதத்தை வாசித்தது .
.கடிதம் எழுதியிருந்தது மூன்றாமண்டு படிக்கும் மாணவன். நான் இரண்டாமாண்டு.
எப்படியோ என் பெயரும் என்னைப் பற்றிய தகவல்களும் தெரிந்துகொண்டவன்.
இந்தக் கடிதம் மட்டும் என்னைச் சந்தோசப்படுத்தவில்லை,
ரொம்பக்கோபப்படுத்தியது.
இங்கிலீஷில் எழுதப்பட்டிருந்தக் கடிதம் .
ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
க்கிராமர்.. கிடையாது. நோ வெர்ப். நோ பாஸ்ட் ப்ரசெண்ட் டென்ஸ் ..
அடப்பாவி.. நீ மூணாவது வருடம் இளங்கலை இறுதியாண்டு.
எந்தக் கல்லூரி இது.. அட.. கர்மமே சேவியர் கல்லூரி..
ரொம்ப பெருமை கர்வம் பிடிச்ச கல்லூரி ஆச்சே..
அங்கே இப்படியும் இருக்கிறார்களா..
என்ன செய்யலாம்.. கடைசியா துணிந்து ஒரு காரியம் செய்தேன்.
 கூட இருந்த ரூம்மேட்ஸ் எல்லாம் ‘அய்யோ அப்படிச் செய்யாதே ‘னு
சொல்லச் சொல்ல கேட்காமல் செய்தேன்.
‘கடிதத்தை அப்படியே வைத்து அந்தக் கல்லூரி பிரின்ஸ்பாலுக்கு ஒரு கடிதம்.
முதலில் உங்கள் மாணவர்களுக்கு உருப்படியாக ஆங்கிலம்
 எழுதக் கற்றுக்கொடுங்கள்.
அதன் பிறகு காதல் கடிதம் எழுதச் சொல்லுங்கள்! ‘ என்று.
எல்லாம் இன்றைக்கும் இருக்கிற அதே அசட்டுத்துணிச்சல்தான்.
சேவியர் பிரின்ஸ்பால் ஃபாதர் ரொம்ப நல்லவராக இருக்க வேண்டும்.
அப்படியே அந்தக் கடிதம் திருத்தி எழுதப்பட்டு எனக்கு வந்தது..
 எங்கள் கல்லூரி வார்டன் முகவரியுடன்!
அவ்வளவுதான்.. கல்லூரி பிரின்ஸிபால் வரைக்கும் கடித மேட்டர் போய்விட்டது.
கல்லூரி புரபோசர்களின் ஸ்டாஃப் ரூமில் ஒரு பட்டிமன்றம்.
 நான் செய்தது சரியா தவறா ? என்று
ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி எங்க வார்டனோ பிரின்ஸியோ என்னைச் சீட்டுக்கிழிக்கவில்லை.
அவர்களுக்கும் என் துணிச்சல்மீது ஒரு சின்ன சந்தோசமிருந்தது
 என்பதை அவர்கள் வெளிக்காட்டாவிட்டாலும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது..
அந்தத் தப்பும் தவறுமான கடிதத்துடன் சேர்த்து எழுதப்பட்டிருக்கும் தவறுகள் இல்லாதக் கடிதம். அதே கவருடம் இன்றும் என் அசட்டுத்துணிச்சலுக்கு அத்தாட்சியாய்.
எப்போதாவது தோன்றும்..இதை எழுதியவனின் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்கும் என்னுடைய அதிகப்பிரசங்கித்தனத்தால் என்று.
அப்போதெல்லாம் அவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ?
அவன் பட்டம் வாங்கி இருப்பானா ?
அவனுடைய கல்லூரி பிரின்சிபால் அவனைத் திட்டினாரா ?
அவனிடம் ஒரு சின்னதா ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டால்
நல்லா இருக்கும்னு அடிக்கடித் நினைப்பு வரும்..முகம் தெரியாத
அவனை பல விதங்களில் மனசு கற்பனைச் செய்துகொண்ட காலங்கள் உண்டு.
அப்புறன் சினிமா ஸ்டைலில் அவனே என்னைப் பெண் பார்க்க வருவதாகவும்
 திருமணம் செய்துகொள்வதாகவும் சண்டை போடுவதாகவும்…
 கண்டபடி கனவுகள் வந்து தூக்கம் கெட்ட இரவுகள் பல உண்டு.
….
இந்தக் கடிதங்களை எல்லாம் ஒரு கவரில் மொத்தமாகப் போட்டுவைத்தேன்.
ஆமாம்.. கிழித்து எறியாமல் எதற்காக இன்னும் குப்பையா சேர்த்து வைக்கனும் ?
சரி இருந்துட்டுப் போகட்டுமே.. இப்போ என்ன ?
என் கணவர் எழுதிய கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
திருமணம் நிச்சயமானவுடன் எழுதி இருந்த முதல் கடிதம்.
அதே எல்லோரும் சொல்ற டயலாக்.
‘உன்னைப் பாத்தவுடனேயே நீதான் எனக்கானவள் ‘ என்பதை என் மனசு சொன்னது! ‘
நிறைய உளறல்கள்.. இப்படியே..
அப்போதெல்லாம் இந்த உளறல்களைத்தான் எத்தனைத் தடவைகள்
 திருப்பி திருப்பி வாசித்திருக்கிறேன்.
அப்படி என்ன புதுசா எழுதியிருந்தார் ?
அப்புறம் திருமணமாகி சில மாதங்களில் அவருக்கு ஆபிஸ் டிரெயினிங்க்
.. ஒரு இரண்டு மாதப்பிரிவு.
அப்போது எழுதியிருந்தக் கடிதங்களைப் பிரித்தால் ‘ஒரே முத்த ம்மழை ‘
சரியான முத்தப் பைத்தியம்.. முத்தப்பிசாசு.. ‘
செல்லமாகத் திட்டிக்கொண்டே அந்தக் கடிதங்களை பத்திரமாக மடித்தேன்.
சின்னவன் பிறந்திருக்கும்போது அம்மா வீட்டில் இருக்கும்போது அவர் எழுதியது..
அவருக்குத்தான் என் மீதும் குழந்தைகள் மீதும் எத்தனை அன்பு, கரிசனம்..
திரைச்சீலைகள் விழுந்து லைட்டுகள் போடப்பட்டு மணி அடித்த மாதிரி..
வாசல் மணி ஒலித்தது. அந்தக் கடிதங்களை எல்லாம் அப்படியே பெட்டியில்
 போட்டுவிட்டு கதவைத் திறந்தேன்.
போஸ்ட்மேன் கடிதங்களைக் கொடுத்துவிட்டுப் போனான்.
அவர் கடிதத்தைப் பிரித்தேன்.
‘நான் அனுப்பிய டிராப்ட் கிடைத்ததா ? இன்சுரன்ஸ் பிரிமியம் கட்டிவிட்டாயா ?
பிள்ளைகளுக்கு அடுத்த மாதம் பீஸ் கட்ட பணம் தேவைப்படும்
 என்பதால் அதிகமாக பணம் அனுப்பி இருக்கிறேன்.
எனக்கு இந்த வருடம் லீவுக்கிடைக்காது என்று நினைக்கிறேன்.எல்லோரும்
லீவில் போவதால் ஓவர் டைம் கிடைக்கும். எப்படியும் ஊரில் ஒரு
வீடு கட்டிவிட்டால்,நாளைக்கு நமக்குத்தானே நல்லது.
உனக்கு மூட்டுவலி எப்படி இருக்கிறது ?
அம்மாவுக்கு பி.பி கண்ட் ரோலில் இருக்கிறதா ?
எனக்கு சுகர் கண்ட் ரோலில் இருக்கிறது. ‘
திறந்து கிடந்த டிரங்க் பெட்டி..
அதில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் பழையக்கடிதங்கள்..
இரண்டையும் மாறி மாறி பார்த்தேன்.
அமைதியாகப் போய் எல்லா கடிதங்களையும் கிழித்தேன்.
மூட்டுவலி, சுகர், பிரஷர்.. நடுவில்..
அன்புடன் எழுதப்பட்ட அன்புடன் கடிதத்தை
 அன்புடன் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன்…
(மீள்வாசிப்புக்காக. கணையாழி இதழில் அக்காலத்தில் வெளிவந்தக் கதை. 2005ல் வெளிவந்திருக்கும் என் மின்சாரவண்டிகள் சிறுகதை தொகுப்பிலிருந்து)