Wednesday, July 22, 2020

தமிழ் அறமும் மரபு செல்வங்களும்


 118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடி ...
தோழி..
என்னிடம் முக்கியமான சில 
ஓலைச் சுவடிகள் இருக்கின்றன. 
மருத்துவம், வானசாஸ்திரம்,மாந்தரீகம்,ஜோதிடம் , 
நெசவு,விவசாயம்., வர்மக்கலை...
இத்தியாதி..
வள்ளுவர் வம்சாவளி என்று தங்களைச் 
சொல்லிக் கொள்ளும் என் கணவர் 
அவர் குடும்பம் அவர் ஊர் மற்றும் 
அவர் சொந்தங்கள் வாழும் அந்த எட்டு கிராமங்கள்.. 
ஏற்கனவே நான் உன்னிடம் பேசி இருக்கிறேன். 
நினைவிருக்கிறதா தோழி..?
அழிந்தது போக எஞ்சியிருக்கும்
அந்த பொக்கிஷங்களை எல்லாம் 
பாதுகாத்து வைத்திருப்பது பற்றி
 கவலையுடன் யோசிக்கிறேன்....
நம் செல்வங்களையெல்லாம் 
கொள்ளையடித்துக் கொண்டு போய் 
வைத்திருக்கும் அதே இடத்தில்
லாக்கரில் வைக்கச் சொல்கிறாய்!
தஞ்சைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்
 இருப்பதை நீயும் மறந்துவிட்டாய்... !
நெசவு சிறுதொழில் வளர்ச்சிக்கு 
தனி இலாகா வும் அமைச்சரும் 
நமக்கு உண்டு என்ற அரசியலையும்
பேச மறுக்கிறாய்!
மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு..
 என்று சொல்லும் நீ 
அதனால் 
இழந்துக் கொண்டிருப்பதைப் பற்றி 
அறிந்தும் அறியாதது போல
 நடந்து கொள்கிறாய்!
இப்போதெல்லாம் 
என்னை மௌனிக்க வைப்பதில்
 நீ அதிக கவனம் செலுத்துகிறாய்... !
என் அறிவு பொக்கிஷங்களைப்
பாதுகாப்பது பற்றி 
 எனக்குப் பாடம் எடுக்காதே
தலைமுறை தலைமுறையாக 
படிஎடுத்து  ரகசியங்களை 
கடத்தி வந்திருக்கும் சூட்சமங்கள் 
உன் கணினி அறியாதவை.
எங்கள் ஊரில் 
மூன்று யுகம் கொண்டாள் சாட்சியாக
அவள் கருவறையில் 
ரகசியங்களைப் பாதுகாக்கப் போகிறேன். 
மனிதர்கள் மீது 
நம்பிக்கை இழக்கும் போது... 
தெய்வங்கள் சாட்சி சொல்ல வருகின்றன....
மூன்று யுகம் கொண்ட அவள்
நெற்றிக்கண் தூங்கவில்லை..
அறம் நின்று கொல்லும்.
தமிழ் அறம் என்றும் வெல்லும்.

Thursday, July 16, 2020

உம்மாவோட முகம் -

உம்மாவோட முகம்” - இன்குலாப்


”இப்போது எழுதும் போது திருத்தமாக எழுத முயற்சி செய்கிறேன். 
ஆனால் இது ரொம்பவும் செயற்கை என்று தெரிகிறது. 
அம்மாவை நான் ஒரு போதும் அம்மா என்று கூப்பிட்டதில்லை. 
உம்மாதான் எனக்குப் பழக்கப்பட்ட சொல்.
இப்பொழுது அம்மா என்று எழுதுகிறேன்.
எங்கோ இருக்கும் என் வயசான உம்மாவைப்பற்றி 
எழுதும் போதுதான் நான் எவ்வளவோ செயற்கையாக 
மாறிப் போய் விட்டேன் என்பது தெரிகிறது.
இந்த எழுத்துகள் என் தாய்மொழியில்லை. 
என் தாய்மொழி ரொம்ப ரொம்ப இயற்கையானது. 
அதை நான் மறந்து விட்டேன்…. 
பள்ளியில் படிக்கும்போது கொஞ்சம் மறந்தேன். 
கல்லூரியில் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் மறந்தேன்.
இப்பொழுது தமிழ் கற்பித்துப் பெரும்பாலும் மறந்துபோய் விட்டேன். –
என் உம்மாவைப் பத்தி எழுதும்போது 
உம்மா எனக்குச் சொல்லித்தந்த சொல்லுலேதான் சொல்லணும். 
அதுதான் நான் அவுங்களுக்குச் செய்யும் மரியாதை. 
வேறெ எந்த மரியாதையையும் நான் இது வரைக்கும் 
செய்யலை. அவுங்களும் இதுவரைக்கும் எதையும் எதிர்பார்க்கலே.
. இந்த எழுத்துதான் நான் சாம்பாதிச்சுக் கொடுக்கறது. 
அதைத்தான் அவுங்களும் விரும்புனாங்க. 
அதத்தான் சொல்லத் தொடங்குறேன். 
இனி அவுங்க சொல்லித்தந்த சொல்லுலேயே சொல்லுறேன்.
"30 ஆண்டுகாலம் ‘நல்ல’ தமிழில் கவிதைகள் எழுதிய
இன்குலாப் அவிழ்த்துவிடப் பட்ட கன்றுக்குட்டி தாய்மடியை நோக்கிக் கதறிக்கொண்டு ஓடுவதைப்போலச் சிறுகதைகளில்
தன் ‘தாய்மொழி’க்குத் தாவி ஓடியிருக்கிறார் எனலாமா? "
என்ற கேள்வியை முன்வைக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.
*
இங்கு இவர்கள் பேசும் தாய்மொழி 
யாருக்கெல்லாம் இருக்கிறது? இதன் காரணிகள் என்ன?
எனக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான்
சொல்லவேண்டி இருக்கிறது.
என் வழக்காட்டில் இருக்கும் மொழியை எழுதும் போது
"அச்சா"
"சுக்ரியா"
நமஸ்தேஜி
க்யா..
ஸாலா..
அன்ணா..
மோரி
நல்லி
சால்
செண்டாஷ்
டப்பா
மெளசி
என்று கலப்பாகிவிடுகிறது.
அச்சுத்தமிழ் பாதிக்காத தாய்மொழியை ஊடகத்தமிழ்
பாதித்திருக்கிறது..
எனக்கு தாமிரபரணி தாய்மொழி இல்லை.
மும்பை மா நகரம் என் தாய்மொழியை என்னிடமிருந்து 
துண்டித்துவிட்டது.
"ஏல, த்தாயி, அங்கன வச்சி,
இங்கன வச்சி,
இப்படியாக அவ்வப்போது தாய்மடியின் சில
ஒளிக்கீற்றுகள் எட்டிப்பார்க்கின்றன.
அவ்வளவுதான்.

Wednesday, July 15, 2020

ஜெயமோகனும் வைரமுத்துவும்..(1)
"கவிதையும் கலையும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைக் 
கொடுத்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். தனி மனித 
ஒழுக்கம் என்பதிலிருந்து அவர்கள் விதிவிலக்கானவர்கள் என்று தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்து இருக்கிறது. 
அதனால்தான் எழுதுகிறவன் எழுத்தை மட்டும் பார்க்கச் 
சொல்கிறார்கள். அவன் செய்வதை சுலபமாக மறந்து 
விடுகிறார்கள். ஆனால் எழுத்தும் எழுதுபவனும் சேர்த்து 
வாசிக்கப்பட வேண்டியவர்கள். என்ன சொன்னார் 
என்பதோடு சேர்த்து அதை சொன்னது யார் என்ற 
அரசியல் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. 
வைரமுத்துவிற்கு ஆறுதல் சொன்னவர்கள் 
ஏன் மவுனம் காக்கிறார்கள்? இதை எழுதும் போது 
எனக்குள் இன்னொரு கேள்வியும் எழுகிறது... 
வாச்சாத்தி பெண்களுக்காக கலை இலக்கிய உலகப் 
பெண்கள் ஏன் பேசவில்லை? 
இப்படி கேட்பது கூட பலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது 
ஆனால் கேட்காமல் கடந்துசெல்ல இந்த தருணத்திலும் முடியவில்லை. இக்கேள்வியை முன்வைப்பது வைரமுத்து 
எதிரலையைப் பலவீனப்படுத்த அல்ல." - புதியமாதவி
இரு தினங்களுக்கு முன் தோழி மீராமீனாட்சி 
Meera Meenakshi அவர்கள் கவிஞர் வைரமுத்து குறித்து முக நூலில்
பதிவு போட்டிருந்தார். அவர்மீதுவைக்கப்பட்டிருந்த 
பாலியல் குற்றச்சாட்டு குறித்த கண்டனமாகவும்
அத்தருணத்தில் அவர் எழுதிய் டுவிட்டர் பதிவுகளை 
இணைத்தும் வெளியிட்டிருந்தார். 
அதற்குப் பின்னூட்டமாக நான் எழுதியதுதான் மேற்கண்ட வரிகள்.
(2)
இப்போது பிரச்சனைக்கு இன்னொரு தன்னிலை விளக்கம் 
கொடுத்திருக்கிறார்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்.
அதிலிருந்து சில் வரிகள்..:
’வைரமுத்து மீதான இக்குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றால்
வன்மையாக கண்டிக்கத்தக்கவை’ என்ற வெளிப்படையான கண்டனத்துடன் மேற்கொண்டு அவருடைய படைப்புலகைப் பற்றிப் பேசுவதே
நாம் செய்யக்கூடுவது. ‘வைரமுத்து தன் குற்றமின்மையை
பொதுவெளியில் அறிவிக்கவேண்டும்’ என்றுமட்டுமே நாம் அதிகபட்சம் கோரமுடியும். அதுகூட நடக்கவில்லை என்பதே சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வகையிலேயே பெருந்தேவியின் கண்டனம் மதிப்பு கொண்டது.
என்னைப் பொறுத்தவரை வைரமுத்து மீதான அக்கண்டனத்துடன் 
மேலே செல்கிறேன். ஆனால் வைரமுத்து பற்றிய என் மதிப்பீடு அதன் அடிப்படையிலானது அல்ல. அதைவைத்து அவரை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதும் என் நோக்கம் அல்ல. வைரமுத்துவின் படைப்புக்கள் 
ஆளுமை குறித்த என் மதிப்பீட்டை முன்னரே விரிவாக
முன்வைத்துவிட்டேன்.
அவருடைய அப்பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படும் 
என்றால் மிக வன்மையாக அதைக் கண்டிப்பேன். 
ஆனால் அப்போதுகூட அக்கண்டனத்துடன் 
அவருடைய படைப்புக்களை இணைத்துக்கொள்ள மாட்டேன். 
அவற்றை தனியாகவே அணுகுவேன்.

(அதாவது பாலியல் குற்றச்சாட்டை வைரமுத்துவின் எழுத்துக்கு
எதிரான கண்டனமாகவோ அல்லது எதிரான குற்றச்சாட்டாகவோ
ஜெ.மோ வைக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாமா பெருந்தேவி?!)

(3)
இப்போதும் சில கேள்விகள் கேள்விகளாகவே தொங்கிக்கொண்டிருக்கின்றன.
இச்சமூகம் கேள்விகளைத் தின்று செரித்து ஏப்பம் விட்டுவிடும்.
அல்லது கேள்விகள் கேள்விக்கேட்டவரையோ தற்கொலைக்குத்
தள்ளிவிடும் கொடூரம் நடக்கிறது..
எது நடந்தாலும் சரி..
அமைதியாக இருப்பதும் ஒரு வரம் தான்.
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அந்தக் கொடுப்பினை!

Tuesday, July 14, 2020

காமராசரின் தேசிய அரசியலும் மாநில அரசியலும்

 
தேசிய அரசியலில் தன்னைக் கரைத்துக்
கொண்டவர்பெருந்தலைவர் காமராசர். 
அந்தக் கரைசலில் தமிழகம் இழந்ததும் அடைந்ததும்.. மீள்வாசிப்புக்குரியவை.
இன்றைய தமிழ் நாட்டின் தலை நகராக 
இருக்கும் சென்னையை தமிழ் நாடு 
மா நில எல்லைக்குள் நிறுத்தியதில் 
காமராசரின் பங்கு மகத்தானது.
 
சென்னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும்
. என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் 
தீவிரமாகஇருந்தக் காலக்கட்டம். 1948-ம் ஆண்டு 
சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. 
அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே
 சொந்தம் என்பதை நிலை நாட்ட, 
ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் 
தேர்தலில் போட்டியிட்டனர். இதை அறிந்த
 காமராசர் தமிழக காங்கிரசு தேர்தலில்
 போட்டியிடாது என்று அறிவித்தார். 
நேரு அதிர்ச்சிஅடைந்தார்.
தமிழ்நாடு எல்லைக் கமிட்டி என்ற 
ஒர் அமைப்பை உருவாக்கினார். 
அந்த அமைப்பு சார்பில் 
"தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்'' 
என்ற பிரச்சாரத்தைமுன்னெடுத்தார். 
தேர்தலில் தமிழ் நாடு எல்லைக்கமிட்டி 
சார்பில் காமராஜர் வேட்பாளர்களை நிறுத்தி 
அவர்களை அமோக வெற்றி பெற செய்தார்..
 
காமராசரின் எளிமை மற்றும் கல்விக்காக 
அவர் ஆற்றிய பெருந்தொண்டு...
இவை எல்லாம் பேசப்பட்ட அளவுக்கு 
அவர் அரசியல் இன்னும் பேசப்படவில்லை.
 தமிழகத்தின் தொழில்துறைக்கும் 
விவசாயத்திற்கும் ஒரு முதல்வராக 
அவர் செய்தவை பட்டியலிடப்படவில்லை.
இதைச் செய்ய வேண்டிய காங்கிரசு
 கட்சிக்காரர்கள் கூட இந்த வரலாற்று 
பக்கங்களைப் பேசுவதில்லை.
(பாவம்.. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ..!)
 
காமராசர் என்ற தமிழக அரசியல்வாதியின்
தேசிய அரசியலையும் மாநில அரசியலையும் 
பேச வேண்டும். அதுவே இந்திய – தமிழக 
அரசியலில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடும்.
 
பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளில்
இப்படியும் ஓர் அரசியல் தலைவர் 
வாழ்ந்திருக்கிறார் என்பதை எடுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது.

மல்லிகா அமர்ஷேக்

மராத்தி கவிஞர் மல்லிகா அமர்ஷேக் அவர்கள்
மராத்தி இலக்கிய உலகில் முக்கியமானவர்.
மணலால் ஆன காதலன், மா நகரம்,
உடலின் பருவகாலங்கள் என்ற
கவிதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
"நான் கெட்டுப்போக விரும்புகிறேன்" என்ற
 இவர் சுயசரிதை இலக்கிய வெளியிலும் பெண்ணியப்பெருவெளியிலும்
 பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியவை.
இவர் தலித் பைந்தர் அமைப்பின் முக்கியமான
கவிஞர் நாம்தேவ் தாசலின் காதல் மனைவி .
(கவிதை மொழியாக்கம் & குரல்
- புதிய மாதவி)

Sunday, July 12, 2020

Saturday, July 11, 2020

அந்த விழிகள் துரத்துகின்றன14 ஆண்டுகள் முடிந்துவிட்டன...
இப்போதும் அந்த சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை.
2006 ஜூலை 11
மாலை 6.24 முதல் 6.35க்குள் 11 நிமிடங்களில்
மாதுங்கா, மாகிம், பாந்திரா, க்கார், ஜோகேஸ்வரி, பயந்தர், போரிவிலி ..
7 இடங்களில்
ஓடிக்கொண்டிருந்த டிரெயினில் குண்டுகள் வெடித்தன.
209 பேர் உயிரிழந்தார்கள்..
714 பேர் படுகாயமடைந்தார்கள்.
அவர்களிலும் பலர் இன்று உயிருடன் இல்லை.
பயணித்தவர்களுக்கு இன்றும் அந்த நினைவுகள் 
துரத்திக்கொண்டு இருக்கின்றன..
அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்.
உயிரிழப்பு.... என் உறவினர் குடும்பத்திலும்.
கண்வர் சங்கரின் அண்ணன் மகள் சுசிலா-இராமச்சந்திரன் 
இணையரின் ஒரே மகன் பிரபு (வயது 22) இழந்தோம். 
அன்று எனக்கு ஏற்பட்ட இன்னொரு அனுபவம்..
இரண்டும் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன.
அந்த விழிகள் துரத்திக்கொண்டிருப்பதை 
என் சிறுகதையில் எழுதி இருந்தேன். 
எழுதியப்பின் கல்கியில் வெளியானது அச்சிறுகதை...
அக்கதையை அதே கதையின் நிஜக்கதாபாத்திரமான
பிரபுவின் அப்பா .. மருமகன் இராமசந்திரன் அவர்கள்
வாசித்துவிட்டார்..... அவர் தமிழ் இதழ்கள் வாங்கி
வாசிப்பவரல்லர். தொழிலதிபரான அவருக்கு அதற்க்கெல்லாம் நேரமிருப்பதில்லை. ஆனால்... தன் வேலை விசயமாக
மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது 
கல்கியை வாங்கி இருக்கிறார். 
பக்கத்தைப் புரட்டும்போது என் படத்தைப் பார்த்துவிட்டு ...
வாசித்தும் இருக்கிறார்.
அவர் அன்று ஏன் கல்கியை வாங்க வேண்டும்?
அவர் வாங்கிய கல்கி இதழில் அந்தக் கதை ஏன்
இடம்பெற்றிருக்க வேண்டும்?
அதை அவர் ஏன் வாசிக்க வேண்டும்..?
வாழ்க்கையில் இம்மாதிரி சில நிகழ்வுகள்
ஏன் நடக்கின்றன..?
கதையும் கதைக்கான கருவும் பின்புலமும் அவர்
வாழ்க்கையின் நிஜங்கள்...
அதுவும் அவரைப் புரட்டிப்போட்டு சிதைத்த குண்டுவெடிப்பு.
வாசித்தவர் ஏர்போர்ர்டிலிருந்தே போன் செய்தார்.. 
அவர் பேசப் பேச எனக்குத்தான் அழுகை வந்தது. 
கதையின் ஊடாக என்னைத் துரத்தி இருக்கும் 
அந்த விழிகளையும் என் உணர்வுகளையும் 
அவர் பாராட்டியபோது ....
நான் மவுனமானேன்......
வெளியில்.. வானம் கிழிந்து மழைப்பொழியும் 
இந்த இரவிலும்..
அந்த கொடூர குண்டுவெடிப்பின் மரணங்கள்
அந்தக் காட்சிகள்.. தொண்டையை இறுக்குகின்றன.
வறண்டு போகிறது ... சொற்களும் கண்ணீரும்....
இதோ....
அந்த விழிகளும் 
என்னைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன.


Wednesday, July 1, 2020

நவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி

நவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் 
>> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன்
   
                                       
                                                                                                      


          புதிய மாதவியின் நான்கு கட்டுரைத் தொகுப்புகளில்
 மிக முக்கியமானது ஊடக அரசியல் பற்றிப் பேசும்  
" செய்திகளின் அதிர்வலைகள் " என்ற தொகுப்பாகும். 
எந்த மாதிரி  சமூகத்தில் நாம வாழ இருக்கிறோம், 
எந்த மாதிரி அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம்  
என்பதை பல் விதங்களில் ஊடகங்கள் தீர்மானிப்பதை அவர் 
துல்லியமாகக் கணித்திருக்கிறார். ஊடக வலைப்பின்னல்கள்
 இருண்ட ஆண் பெண் மன்தை எப்படி ஊடுருவி  அடிப்படை 
ஊடக தர்மங்களை அவையே கட்டமைத்துக் கொள்கின்றன
 என்பதும் முக்கியமானது. 
மும்பை போன்ற பெரு நகர வாசிகளின் தினசரி நடவடிக்கைகள்
 கூட் உள்ளூர் தொலைக்காட்சி வரிசைகள், எப்பெம் வானொலிகள்,
 குறுஞ்செய்திகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது 
என்று சொல்லலாம். 
அவர்களின் சிந்தனையை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் 
தரும் பெய்டு நியூஸ், கிரியேட்ட நியூஸ்கள் கடடமைக்கின்றன.
 உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா கேலிக்குறியாகி 
உள்ள அவலம் இதில் தெரிகிறது. 

    மும்பை நக்ரம் ஒரு பெரிய ராட்சத மிருகம் போல் 
என்னை எப்போதும் பயமுறுத்தியிருக்கிறது. 
அந்த நக்ரத்தின் மூலைமுடுக்குகள், ஒவ்வொரு திசை
 நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்கும் புதிய மாதவியின்
 வாசகங்கள் அவரின் தினசரி வாழ்க்கை தரும் 
நெருக்கடியில் இருந்து நிச்சயம் பெறப்பட்டவையாக இருக்கும். 
அரசியல் தாதாக்கள், மும்பைத் தமிழர்கள், மத வாத , 
இன வாத நடவடிக்கைகள் பற்றிய அடையாளம் காட்டும் 
கருத்துக்கள் இடதுசாரி சிந்தனைகள் சார்ந்த 
ஒருவரின் எண்ணங்களாக வெளிப்படிருக்கின்றன.
சமீப்த்தில் அருந்ததி ராய் எழுதிய அன்டில்லா
 என்ற கட்டுரையில் 27 தளங்களைக் கொண்ட அந்த மாளிகை 
 பிரகாச விளக்குகளுடன் பிற  பகுதி மக்களின் வெளிச்சைத் திருடி
 அவர்களை இருட்டில் தள்ளி மிளிர்வதை சுட்டிக்காடியிருந்தார்.
 " அது ஒரு வீடா அல்லது இருப்பிடமா. 
இந்தியாவிற்கு ஒரு புதிய கோவிலா.  பேய்களின் உறைவிடமா " 
என்று கேட்கிறார். அது முகேஷ் அம்பானி வசிக்கும்
 மாளிகை பற்றியதாகும். அன்டில்லா மும்பையின் 
குறியீடாக விளங்குகுறது.முமபையின் 27 தொலைக்காட்சி
 வரிசைகளின் கூட்டமைப்பான இன்போடைலின் 
90 சதவீதம் பங்குகள் முகேஷ் அம்பானியுடையது. 
இன்போடைல் கட்டமைக்கும் ஊடகச் செய்திகளின் தரம்,
 நோக்கம் என்பதை சுலபமாக   விளங்கிக் கொள்ளலாம்.  

பெரும்பாலும் புதிய மாதவியின் படைப்புகளின் மூலம் 
அவரை ஒரு படைப்பிலக்கிய எழுத்தாளராகவே அறிந்திருக்கிறேன்.
ஆனால் அவரின் விரிந்த கட்டுரைகள் மூலம் அவரை 
ஒரு பத்திரிக்கையாளராக தெரிந்து கொள்ள முடிகிறது.  
காப்ரியேல் கார்சியா மார்க்குவெஸ்சிற்கு பத்த்ரிரிக்கையாளர்
 பணி என்பது இலக்கிய ஆர்வத்தையும் எழுத்துக்கான 
தொழில் நுட்பத்தையும்  தருகிறது.  விசயங்களை அணுகும் விதம்,
 பார்வை புதிதாய் கிடைக்கிறது. பத்திரிக்கைச் செய்திகளுக்கு 
உணர்ச்சி இல்லையென்றாலும், அதன் பின்னணியில்
 இருக்கும் அரசியல் நுடப்மானது.  இதை உள்வாங்கிக்
 கொண்ட மார்க்குவெஸ் தன் பல படைப்புகளை  பத்திரிக்கைச் 
செய்திகளின் அடிப்படையில் வடிவமைத்திருக்கிறார். 
அவர் நடத்திய காம்பொ பத்திரிக்கை  ஸ்கூப் அடிக்கும் 
பழக்கத்தில் இருந்துவிலகி பத்திரிக்கை எழுத்தை ஒரு 
இலக்கிய வகையாகப் பாவிக்க வைத்திருக்கிறது. 
 புதிய மாதவிக்கு பத்திரிக்கை செய்தி அனுபவம்  
பல படைப்புகளுக்கு அடித்தளம் இட்டிருப்பதை அவரின் 
பல சிறுகதைகளில் கண்டு கொள்ள முடியும்.
படைப்பிலக்கியவாதி இன்று வலைத்தள எழுத்தாளனாக, 
 பத்தி எழுதுகிறவனாக மாறி வாழநிர்பந்திக்கப்படுகிற 
சூழலில் இக்கட்டுரைகள் முற்போக்கான ஒருவரின் பார்வையாக 
இக்கட்டுரைகளில் வெளிப்படுகிறது. 
அரசியல், மத முகமூடிகளை விலக்கிக் காட்டுகிறது. 
 இது அவரின் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற 
சுதந்திர உணர்வு தந்தக் கொடையாகும். 


புதிய மாதவியின் படைப்புகளில் கட்டுரைப்பிரிவில் 
இடம் பெற்ற மற்றவை : 
சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள், ஊமைத் தசும்புகள், 
 மழைக்கால மின்னலாய்  ஆகியவை. 
இவற்றில் சக் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் 
கட்டுரைகளை வெகுவான பரந்த நோக்கில் எவ்வித 
பொறாமை உணர்வும் இன்றி ஜனநாயக்த் தன்மையுடன் 
பல் நூல்களை அணுகியிருக்கிறார். பல் மொழிபெயர்ப்பு நூல்கள்,
 பிற நாட்டில் வசிக்கும்  தமிழ்  எழுத்தாளர்கள் நூல்கள் 
என்று வித்யாசம் காட்டுகிறார். பல்வேறு விசயங்களில் 
விமர்சன நோக்கில் படைப்பாளிகளை இனம் கண்டு 
சொல்பவர் அரசியல் நிலைப்படுகளைப் புறந்தள்ளி விட்டு 
ஜெயமோகனின் நாவலை சிலாகிப்பதில் இருக்கும் 
இலக்கிய நேர்மையை பல கட்டுரைக்ளில் காண முடிகிறது..  

பெண்கள் மீதான் வன்முறை  மற்றும் உலகமயமாக்கலில்
 பெண்களின்   நிலை பற்றியும் உள்ள கட்டுரைகள் 
நுட்பமானவை. நுகர்வு தன்மையின் கோட்பாடுகளை 
பெரிதும் கேள்விக்குறியாக்குபவை. தமிழ் தேசியம், 
சாதி மறுப்பும் சாதியொழிப்பும் குறிதத பார்வையும்
 முக்கிய்மானவை.அவற்றை நிறுவதற்கான  கட்டுடைக்கிற 
பாணியை  முக்கியமானதாகக் கொண்டிருக்கிறார். 
அந்த வகையில் தலித் விடுதலை பற்றிய 
கோட்பாட்டுருவாக்கங்களை இவரின் அவ்வகைக் 
 கட்டுரைகளில் கண்டு கொள்ள முடிகிறது. 
தலித்தியத்தின் நவீன கோட்பாடுகளை  இவரின் கட்டுரை 
அம்சங்களிலிருந்து உருவாக்கிக் கொள்ள முடியும். 

  எல்லா பண்பாட்டு அம்சங்களும் மனிதர்களால் 
உற்பத்திச் செய்யப்பட்டவை . உற்பத்தி செய்த மனிதனால்
 இவற்றை மாற்றவும் முடியும். அதற்கான இயங்கியல் 
தன்மையிலான அவசியமும் கட்டாயமும் இருக்கிறது என்கிறார்.
 எதிர்ப்பின் வரலாறு கட்டமைக்கும் கேள்விகள், 
நுகர்வு கலாச்சார எதிர்ப்பு அம்சங்களை  கோடிட்டுக் காட்டுகிறார்.  
அவை மாற்றுப் பண்பாட்டு அம்சங்களை உருவாக்குவதை 
இவரின் கட்டுரைக்ள் காட்டுகின்றன. இன்றைய் கலாச்சார 
அபாயச் சூழலில் புதிய மாதவியின் மாற்றுப் பண்பாடு 
குறித்த அக்கறை வெகுவாக கவன்த்தில் 
கொள்ளப்பட வேண்டியதாகும் 

( கோவை இலக்கியச் சந்திப்பு நடத்திய 
" புதிய மாதவியின் படைப்புகள் " பற்றிய கருத்தங்கில் 
சுப்ரபாரதிமணியனின் வாசித்தக் கட்டுரை)