காமட்டிபுரத்தின் கதவுகள் திறந்துவிட்டன.
நவகன்னியர்கள் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்
தேவியின் சிலைகள் கொட்டும் மழையில்
ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படுகின்றன
ஆடை அலங்காரங்களுடன் பவனிவரும் அவள்
கருப்பை மண்ணில் காமட்டிபுரத்தின்
இரவுகள் விழித்திருக்கின்றன.
நிர்வாணமாய் விரியும் அவள் படுக்கை அறையிலிருந்து
எட்டிப் பார்க்கிறது தேவியின் சூலம்.
காமாட்டிபுர அழகிகளின் கைப்பிடி மண்ணுக்காக
விரதங்களுடன் கழிகிறது உங்கள் நாட்கள்.
தேவி அங்கிருந்துதான் புறப்படுகிறாள்.
தேவி , அங்கிருந்துதான் புறப்படுகிறாள்.
-----
நவராத்திரி தேவியின் சிலைகள் செய்வதற்கு பிடிமண்
காமாட்டிபுரத்தைப் போல சிவப்புவிளக்கு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களிடமிருந்து
பெறப்படுகிறது என்ற செய்தியை முதன் முதலில்
இந்தி திரைப்படங்கள் மூலமாக அறிந்து
அதன் பின் அது குறித்த தேடலில் பல்வேறு சுவையான
தகவல்களை நம் அன்னையர் சமூகத்தின்
வாழ்வியல் எச்சங்களைக் கண்டடைந்தேன்.
நம் சமூகத்தில் அன்னை மட்டுமே தலைமைப் பொறுப்பில்
இருந்தக் காலத்தில், வேட்டைச் சமூகத்தில் ஏற்பட்ட உயிரழப்புகளை ஈடு செய்யும் சக்தியாக பெண் மட்டுமே பார்க்கப்பட்ட காலத்தில்
அவள் வழிபாட்டுகுரியவள். சக்தி பீடம் அவள்.
குழந்தைப் பேறுக்கு அவள் மட்டும் பொறுப்பல்ல
என்ற ஏதோ ஒரு புரிதலில் ஆண் வேட்டைச்சமூகத்தின்
தலைவனாகிறான். அந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத
பெண்கள் விலகி நின்றதும் விலக்கப்பட்டதும் நடந்தது. அப்படி விலக்கப்பட்டவர்களில் ஆடல் பாடல் கலைகளில் வல்லவர்களான பெண்கள் தனித்து நின்றார்கள். இப்படித்தான் தேவதாசிகள்
உருவானர்கள். அதன் பின் அதுவே பிறப்பின் வழி அடையாளமாகி மணிமேகலைகள் உருவான கதை நிகழ்ந்தது. அந்தப் பெண்களின் தலைமைத்துவ கலாச்சாரத்தின் எச்சமாகத்தான்
அவள் கைப்பிடி மண்ணில் தேவி வலம் வருகிறாள்.
இதைத்தான் வங்க மொழியில்
"ஒதுக்கி வைக்கப்பட்ட பிரதேசத்தின் புண்ணிய மண்" என்று சொல்லுகிறார்கள்.
(The soil is known as ‘punya mati’ and the place where a prostitute resides is known as ‘nishiddho pallis’ in Bengali meaning forbidden territories.)
இன்னொரு சாரார், பாலியல் தொழில் செய்யும் பெண் வீட்டுக் கதவைத் தட்டும் போது அந்த ஆண்களின் புண்ணியங்கள் எல்லாம் அவள் வீட்டு வாசலில் விடைபெறுகின்றன.!
அதனால் தான் அவளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில்
அவளிடம் கைநீட்டி கைப்பிடி மண்ணை பிச்சையாகக்
கேட்கிறார்களாம் ஆண்கள்! இந்த ஆண்களின்
புண்ணியக்கதையில் ஆணாதிக்கத்தின் இன்னொரு முகம்தான்
புனைவாக மாறி இருக்கிறது.
நவராத்திரியில் ஒன்பது வகையான கன்னிப்பெண்களை வழிபடுவது என்பதற்கும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நடனமங்கை, மண்டை ஓட்டை வழிபடும் தாந்திரிகி, பாலியல்தொழிலாளி, துணி வெளுப்பவள், சிகை அலங்காரம் செய்பவள், பிராமணப்பெண், சூத்திரப்பெண், யாதவகுலப் பெண், தோட்டவேலை செய்பவள்... இந்த நவகன்னியர்களை வழிபாடு செய்தால் தான்
துர்க்காபூஜை நிறைவுப் பெறும். இந்த வழக்கமே இன்று 9 கன்னிப்பெண்களை
வழிபடுவதாக மாறி இருக்கிறது.
națī kapālikā veśyā rajakī nāpitāńganā | brāhmaņī śudrakańyā ca tathā gopālakańyakā || mālākārasya kańyā ca nava kańyā prakīrtitā ||"(Guptasadhana Tantra 1:12)
வடநாட்டில் கொண்டாடப்படும் துர்க்காவும்
தமிழ்நாட்டின் கொற்றவையும்
வேறு வேறு பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு
"சக்திவழிபாடு" என்ற ஒற்றைப் புள்ளியில் கலந்தவை
என்பது இன்னொரு தனி வரலாறு. (இது குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரை
சில ஆண்டுகளுக்கு முன் புதுவிசை இதழில் வெளிவந்ததிருந்தது. )
தமிழ் நாட்டில் 99% அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி
அமர்ந்த்திருக்கிறது என்றும் அதன் காரணத்தையும் விளக்குகிறார் தொ.பரமசிவம் அவர்கள். பழைய தமிழகம் எனபது கேரளத்தையும்
சேர்த்து அமைந்தது. நம் மண்ணைச் சுற்றி மூன்று பக்கமும் கடலால் சூழ்ப்பட்டது. ஆபத்து என்று ஒன்று வந்தால் அது வடக்கு இருந்துதான் வரவேண்டும். தெய்வம் வடக்கு திசை நோக்கி தன் மக்களை காக்க
ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பது தொல்வரலாற்று உண்மை என்கிறார்.
பொதுவாக அம்மன் போன்ற தாய்தெய்வ வழிப்பாடுகளில் பிராமணர்கள் அல்லாத பிற சாதியினரே பூசாரியாக உள்ளனர்.
உலகம்மன், முத்தாரம்மன், மாசானி அம்மன், லோக நாயகி
என வட்டாத்திற்கு வட்டாரம் தெய்வங்கள் மாறுபடும்.
இருந்தாலும் தாய்த்தெய்வத்திற்கு தனித்தன்மைகள் உண்டு.
வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல்,
பெரிய பொட்டு, மிரட்டும் விழி. வழிப்பாட்டு முறையில் பொங்கலும், முளைப்பாரியும், சாமியாடலும், இரத்தப்பலியும்
இவற்றின் தனிக்கூறுகளாகும்.
காவல் தெய்வமாக இருந்த தாய்வழிபாடு
போர்த்தெய்வ வழிபாடாக மாற்றம் பெறுவதை
கலிங்கத்துப் பரணியில் காணலாம். ..
தேவியர் இங்கிருந்து தான் புறப்படுகிறார்கள்.
பெண்ணியத்தின் உடல்மொழி நவராத்திரியின் சடங்குகளுக்குள் புதைக்கபப்ட்டுவிட்டது.
மிகவும் பொருட்செறிவு மிகுந்த கட்டுரை! ஆனால், சுருக்கமாக முடித்து விட்டீர்களே? அதுதான் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது. இன்னும் விரிவாக அடுத்த முறை எழுத வேண்டுகிறேன். மிக்க நன்றி!
ReplyDeleteவிரிவாக எழுதும்போது வாசிக்காமல் போய்விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்த அச்சத்தின் காரணமாகவே இதெல்லாம் குறுகிய வடிவத்தில். மிக்க நன்றி
Delete#ஒதுக்கி வைக்கப்பட்ட பிரதேசத்தின் புண்ணிய மண்#
ReplyDeleteஒதுக்கி வைப்பார்களாம் ,மண் மட்டும் புண்ணிய மண்ணாம் ,நல்லாத்தான் கதை பண்ணியிருக்கிறார்கள் :)
த ம 1
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
Delete