Monday, October 26, 2020

மநு விரோதி ?!!

 இந்துவாக இருக்கும் நான்

மநு விரோதியாகவும் இருக்க முடியுமா ?!!
“நான் மநு விரோதி”
போராட்டங்கள் பதிவுகள் ம நு பெண்களுக்கு எதிரி
இவை அனைத்தும் வைரலாக ஓடி முடிந்திருக்கிறது.
ஓடிய பிறகு இதை எழுதலாம் என்று காத்திருந்தேன்.
இதற்கு நடுவில் மனு எப்போதோ எழுதியது..
இதை இப்போது பேசுவது என்ன அரசியல் என்றும்
இந்துக்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்
என்றும் இன்னொரு தரப்பும் எழுத ஆரம்பித்திருந்த து
இன்னும் ரசனைக்குரியதாக மாறியது..
இதெல்லாம் இருக்கட்டும்…
இந்துவாக இருந்து கொண்டு
எப்படி மநு விரோதியாகவும் இருப்பது?
இந்தியச் சட்டம் யார் இந்து என்று சொல்கிறது?
யாரெல்லாம் கிறித்தவர் அல்லவோ
யாரெல்லாம் இசுலாமியர்கள் அல்லவோ
அவர்கள் எல்லாம் இந்துக்கள் “ என்று சொல்கிறது.
அப்படியானால் நான் இந்து அல்ல என்று
ஒரு கிறித்தவரோ அல்லது இசுலாமியரோ மட்டுமே
சட்டப்படி சொல்லமுடியும். அவர்களுக்கு மட்டுமே
அந்த அடையாளம் ( NON –HINDU) உண்டு.
அப்படியானால் நான் இந்துதான்.
நான் ஏற்றுக்கொண்டாலும்
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ..
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி
இந்து சட்டங்கள் என்னைக் கட்டுப்படுத்தும்.
அப்படியானால் ம நு ?
ஆம்.. ம நுவும் என்னைக் கட்டுப்படுத்தும்.
நம் சட்டத்தில் மநு எங்கே இருக்கிறார்?
எப்படி வந்தார்?
மநு நம் சட்ட த்தில் இப்போதும் வேறொரு
முகத்தில் இருக்கிறார்.
அந்த முகத்திற்கு “ CUSTOM OR USAGES “ என்று
சர்வ சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.

என்ன நடந்திருக்கிறது இந்தியாவில்…
எல்லா நாடுகளிலும் சட்டம் அமுலுக்கு வரும்போது
அதற்கு முன்பிருந்த சட்டங்கள் காலாவதியாக்கப்பட்டு
புதிய அரசியலமைப்பு சட்ட த்தை அந்த தேசம்
முழுமையாக தனதாக்கி கொள்ளும்.
இந்தியா என்ன செய்த து?
பாபாசாகிப் அம்பேத்கர் கொண்டு வர விரும்பிய
அந்த திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறதா?
அதாவது இந்தியச் சட்டம் அமுலுக்கு வரும்போது
இதுவரை இந்த நாட்டிலிருந்த பிற சட்டங்கள்
அனைத்தும் நீக்கப்படும்
That all the laws which were in force
till date of adoption of the Indian constitution..
Will stand ABOLISHED
அது நடக்கவில்லையே!
1967 ல் தமிழக அரசு கொண்டுவந்த
சுயமரியாதை திருமணச் சட்டம்,
இந்து திருமணச் சட்ட த்தின் 7 வது பிரிவின்
உட்பிரிவாக 7 (அ) சேர்க்கப்பட்டிருப்பது ஏன்?
என்று இன்றுவரை நாம் பேசவில்லை.
அதாவது 1956 ல் பார்ப்பன புரோகிதம் விலக்கிய
இந்து திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியதே, அதில் செய்யப்பட்ட திருத்தம் தான்
பார்ப்பன புரோகிதம் விலக்கிய திருமணமும்
இந்து திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படும்
என்று சேர்த்திருப்பது.
இன்னும் உடைத்து சொல்லவேண்டும் என்றால்
திராவிட இயக்கத்தின் வெற்றியாக கொண்டாடப்படும்
சுயமரியாதை திருமணமும் இந்து திருமணச் சட்ட த்தின்
இன்னொரு வகையாக வகைப்படுத்தப்
பட்டிருக்கிறது.. (சத்தமில்லாமல் )
any text, rule or interpretation of Hindu Law or any custom or usage
as part of that law.
அதாவது CUSTOM OR USAGE as part of the law.
இப்படித்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்
அமுலுக்கு வந்தப் பிறகும் அதற்கு முன்பே இருந்த
சட்டங்களும் நீதிமன்றங்களில் உயிருடன்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
Custom is regarded as the third source of Hindu law. ...
As defined by the Judicial Committee custom signifies a rule
which in a particular family or in a particular class or district has
from long usage obtained the force of law.
நான் அறிந்தவரை இந்த பிரச்சனை குறித்து
சிந்தனையாளன் பத்திரிகை ஆசிரியர்
அய்யா. வே. ஆனைமுத்து அவர்கள் பல்வேறு கட்டுரைகள்
எழுதி இருக்கிறார். தமிழுலகில் வேறு யாரும்
இச்சட்டப்பிரச்சனையை முன்வைத்து பேசுவதில்லை.
இந்திய அரசியலமைப்பு படி
இந்துவாக இருக்கும் நான் ,
மநு விரோதியாகவும் இருக்க முடியுமா?
இப்போராட்டத்தை முன்னெடுத்த மதிப்பிற்குரிய வி.சி
மற்றும் தோழர்கள் இந்த CUSTOM or USAGE குறித்து
இன்னும் ஆழமாகவும் ஆக்கப்பூர்வமாகவும்
அடுத்தக் கட்ட நகர்வை நோக்கிச் செல்வார்களா ?
(மேற்கண்ட விவரங்கள் குறித்து
சட்ட வல்லுனர்கள் திருத்தம் இருந்தால்
ஆதாரத்துடன் முன்வைக்கலாம்.)

Friday, October 23, 2020

இலையுதிர்காலம்

 இலையுதிர்காலத்தில் என்னிடம் வந்திருக்கும்

இந்தப் பறவைக்கு எதைக் கொடுப்பேன்?

பூக்களின் வாசத்தை வேர்களிலிருந்து

தோண்டி எடுத்து

இந்தப் பறவையின் சிறகுகளில்

தெளிக்கட்டுமா..?

காற்றின் வேகத்தில் இலை உதிர்கிறது.

காத்திருந்தப் பறவை

காற்றைக்கிழித்துக் கொண்டு

தரையில் விழுந்துவிடாமல்

இலையைப் பிடித்துக் கொள்கிறது.

இலையின் நரம்புகள் படபடக்கின்றன.

இருளும் வெளிச்சமும் கடந்துப் போகீறது.

பால்வீதியில் பறவையின் கூட்டில்

சிறகுகளின் கதகதப்பில்

இலையின் இன்னொரு வாசம்..

வானத்திலிருந்து தொங்குகின்றன

இப்போது இந்த வேர்கள்..

Tuesday, October 20, 2020

மன விகாரத்தின் மூத்திர நெடி

ஆணின் அது என்ன அதிகாரத்தின் குறியீடா..
இச்சமூகத்தின் இந்த மன நிலை..
கேவலமாக இருக்கிறது..
அருவெறுப்பா இருக்குடா…
விஜய் சேதுபதி மகளிடம் எதைக்
கண்டாயோ அது உன் மகளிடமும்
இருக்கிறது தானே.
எப்படிடா… நீ எல்லாம் தலை நிமிர்ந்து
உன் மகளை உன் மனைவியை
உன்னைப் பெற்றவளை
உன் அக்கா தங்கையைப் பார்ப்பாய்…?
அவர்கள் இனி தெருவில் இறங்கிப் போனால்
பார்க்கும் கண்கள் ..
“ஓ..இப்படி சொன்னானே அவனோட
அம்மா, அவனோட பொண்டாட்டி,
அவனோட பொண்ணுனு இந்த ஊரும்
உலகமும் பார்க்குமேடா..
அதில ரெண்டு மூணு பேரும் உன்னை மாதிரியும்
இருப்பாங்கடா.. பாவி..
நீ எல்லாம் இச்சமூகத்தின் பால்வினை வியாதி.
மனவிகாரத்தின் மூத்திர நெடி..
கப்புனு அடிக்குடா..
பாவி ..
உன்னைப் பெத்தவளை நினைச்சு
உன்னோட படுத்தவளை நினைச்சி
மனசு பதறுதுடா…
போங்கடா.. நீங்களும் உஙக .....ம்ம்
Parimelazhag

Saturday, October 17, 2020

தமிழில் முனைவர் பட்ட ஆய்வுகள்

 நேற்று( 17/10/2020)கல்லூரி ஒன்றில் முனைவர் பட்ட ஆய்வுகள்

மீள்வாசிப்பும் அதைப்பற்றிய மதிப்புரை நிகழ்வும்
..
5வது நாளில் மதிப்புரை வழங்க என்னை அழைத்திருந்தார்கள்.
மீள்வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரு ஆய்வுகளையும்
முழுமையாக வாசிக்கும் அனுபவமும் கிடைத்த து.
பொத்தம் பொதுவாக இன்றைய ஆய்வுகள் மீது
எனக்கிருந்த அபிப்பிராயம் மேலும் உறுதியானதில்
எனக்கு வருத்தம் தான்,
படைப்பிலக்கியத்தில் செய்யப்படும் ஆய்வுகளுடன்
நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்.
அது கருத்தியல் ரீதியானது.
படைப்பிலக்கிய வனத்தில் பல்லாயிரம் மரம் செடி
கொடிகள் முளைக்கும் வளரும் கிளைப்பரப்பும்
பறவைகள் கூடுகட்டும் குஞ்சுகள் பொறிக்கும்.
அக்னிக்குஞ்சு அவதரிக்கும்..
மழையும் வெயிலும் வனத்தை வளப்படுத்தும்.
ஆய்வுகளுக்கு நிதி உதவிகள்..
ஒரு பேராசிரியர் எத்தனை ஆய்வு மாணவர்களைக்
கொண்டு வந்திருக்கிறார் என்பது அவருடைய பதவி உயர்வுக்கான தகுதியாகிவிடுகிறது..
ஆய்வுகள் தரமாக வெளிவர பல்வேறு விதிகளும்
பேராசிரியர்களின் பார்வைகளைக் கடந்து
பயணிக்க வேண்டி இருப்பதும்….
இப்படியாக எத்தனையோ இருந்தும்
எப்படி இந்த ஆய்வேடுகள் வெளிவருகின்றன!
எதைப்பற்றி ஆய்வு செய்தாலும்
அதில் தொல்காப்பியம் + சங்க இலக்கியம் மேற்கோள்
இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமா என்ன?
சரி… அது கூட பரவாயில்லை.
ஆனால் கொடுக்கின்ற மேற்கோள்கள்
பொருத்தமாக இருக்கிறதா?
இந்த மேற்கோளை இந்த இட த்தில்
எடுத்தாளுவது சரிதானா என்ற அடிப்படை
புரிதல் கூட இல்லாமல் எப்படி
ஆய்வு செய்ய வருகின்றார்கள்?!
கோட்பாடுகளைப் பற்றிய மேற்கோள்கள் கூட
ரொம்பவும் மேம்போக்காகவே இருக்கின்றன.
தரவுகளின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படவே
இல்லையே!
சில ஆய்வுகள் ஆய்வுக்கான கருப்பொருளை விட
முன்னுரைகள் அதிகமாக வந்திருக்கிறதே!
இதன் தேவை என்ன?


ஆய்வுகள் எல்லாமே தொகுப்புரைகளாக ,
கதைச் சுருக்கங்களாகவே இருக்கின்றன.
ஒரு சிறிய மதிப்பீட்டைக் கூட கொடுக்காமல்
நழுவிச் செல்வது ஏன்?
இதுவரை எத்தனை ஒப்பீட்டு ஆய்வுகள்
வெளிவந்திருக்கின்றன?
ஆய்வு முறைகளும் ஆய்வேடுகளின் முறையும் (pattern)
கடைசியாக எப்போது திருத்தப்பட்டிருக்கிறது?
இன்றைக்கும் மிகச்சிறந்த இலக்கிய ஆய்வுகள்
என்று குறிப்பிடும் போது இம்மாதிரியான
முனைவர் பட்ட ஆய்வேடுகளைக் குறிப்பிடாமல்
அல்லது குறிப்பிட முடியாமல் கல்வித்துறைக்கு
வெளியிலிருந்து எழுதி இருப்பவர்களின்
ஆய்வுகளை மட்டுமே எடுத்தாளுகின்றோம்.
இதைப் பற்றிய ஓர்மை கல்வித்துறைக்கு ஏன் இல்லை?
ஆய்வுகள் எப்படி இருக்கின்றன என்பதற்கு
ஒரு உதாரணத்திற்கு :
எல்லோருக்கும் தெரிந்த வரிகள்..
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில்முழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
……….
புரட்சிக்கவி காப்பியத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால்
இந்த வரிகளை வைத்துக்கொண்டு..
பாரதிதாசனும் இயற்கையும்
பாரதிதாசன் கண்ட நிலவு
வான், நிலா, பூ, பாற்குடம், அமுதம் இத்தியாதி
சொற்களை வைத்துக்கொண்டு
சங்க இலக்கியத்தில் வான், நிலா பூ என்ற சொற்கள்
வருகின்ற மேற்கோள்களை அப்படியே எடுத்துப்போட்டு துணைத்தலைப்புகளில் புரட்சிக்கவிதையை ஆய்வு
செய்திருப்பார்கள். அதைவிட கொடுமை…
பாரதிதாசன் புரட்சிக்கவி
பாரதிதாசனின் சமுதாயப்பார்வை
அப்படின்னு ஒரு தலைப்பு கொடுத்து அந்த தலைப்பில்
“தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”
என்று சொல்லி விடுவார்கள்.
நிலவின் அழகை பசித்தவனின் பசியறும் உணர்வு நிலையுடன்
ஒன்றாக்கிய இப்பார்வை
அழகியலின் தனித்துவமான பார்வை.
இதை ஆய்வு செய்பவர் இம்மாதிரியான பார்வை
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கிறதா
என்று தேடக்கூட மாட்டார்.
இக்காவியம் வடமொழி பில் ஹணியத்தின்
மொழியாக்கம் என்பதால் மூல நூலில் இக்கதை
நிகழ்வு எவ்வாறு வருகிறது என்பதை தேடிக்
கண்டடைவதும் இல்லை.
ஒரு வாசகனோ ஏன் ஒரு விமர்சனமோ
கண்டடைய முடியாத புள்ளியை கண்டடைவதும்
அதை அடையாளம் காட்டுவதும் ஆய்வாளின் பணி அல்லவா ?
அதை ஆய்வாளர்களிடம் எதிர்ப்பார்ப்பது
ஒரு வாசகனின் நியாயமான கோரிக்கை.
இதைக் கவனிக்க வேண்டியது
முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மட்டுமல்ல,
அவர்களுக்கு வழிகாட்டும் நெறியாளர்களும் தான்…

Sarawanan Komathi Nadarasa

Thursday, October 15, 2020

சாஹித்திய அகாதமி SAKITYA AKADEMY

 சாகித்திய அகாதமி.. எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் படைப்பிலக்கியம் மற்ற

மொழியாக்கத்திற்கு விருதுகள் அறிவிக்கப்ப

பின் முன்பெல்லாம் ஒரு சலசலப்பு ஏற்படும்.

விருது யாருக்கு கொடுக்கப்பட்ட தோ அவரைப்பற்றி அவர் பிறப்புச் சான்றிதழ் பற்றி இந்த விருது இந்த ஆண்டு கொடுக்கப்பட்ட தற்கு

“இட ஒதுக்கீடு” காரணமா என்ற அளவுக்கு

மயிர்ப்பிளக்கும் விவாதங்கள் நடந்திருக்கின்றன.

மேலும் இதில் காரசாரமாக விவாதம் செய்தவர்களின் வாயை அடைக்க அவருக்கே

விருது கொடுத்து.. அவரும் இப்போதெல்லாம் அதைப் பற்றி பேசுவதில்லை.

இதைவிட இன்னொரு கொடுமை.. சில படைப்பிலக்கியவாதிகளுக்கு அவர்கள் செய்த மொழிபெயர்ப்புக்காக விருது கொடுப்பார்கள்.. அப்போது அவரும் வேறு வழியில்லாமல் அதை ஏற்கும் பரிதாபக்காட்சிகளும் உண்டு. 

இன்னும் சில காமெடிகள் அரங்கேறுகின்றன.பாரதிதாசனுக்கு பிசிராந்தையார் எழுதியதற்கு கொடுத்த விருது மாதிரி..!

 

தமிழ் இலக்கிய சூழலில் ஒரு எழுத்தாளர் சாகித்திய அகாதமி விருது பெற்றுவிட்டால் அதன் பின் அவரைப் பற்றி எழுதும் போதும் அச்சிடும் போதும்அழைப்பிதழ் முதல் மேடைகள் வரை “சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் “ என்று அழைப்பது கட்டாயமான மரபாகிவிடுகிறது. நான் அறிந்த வரை வேறு எந்த மொழி இலக்கிய வட்ட த்திலும் இம்மாதிரியான ஓர் அடையாளத்தை மரபாக்கியதாக தெரியவில்லை. சாகித்திய அகாதமி

விருது என்பது அந்த எழுத்தாளரின் சுய அறிமுகத்தில் கடைசிவரியாக இருக்கும். அவ்வளவுதான்.இதை எல்லாம் கவனிக்கும் போதுதமிழ் இலக்கியப் பரப்பில் இதற்கான மவுசு ரொம்பவே அதிகம்தான்.

இனி, மக்கள் வரிப்பணத்தால் இயங்கும் தன்னாட்சிபெற்ற சாகித்திய அகாதமி எப்படி செயல்படுகிறது?

ஒவ்வொருஆண்டும் விருதுக்கு பரிந்துரை செய்பவர்கள் யார்?

புத்தகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற என்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது? 

ஒரு புத்தகம்/ படைப்பாளர் விருதுக்குரியவராகதேர்வு செய்யப்பட்ட பின் அதற்கான காரணத்தையும்பிற படைப்புகளை விட அக்குறிப்பிட்ட புத்தகம்/படைப்பாளர் தேர்வு செய்யப்பட்ட தற்கான

காரணத்தையும் ஒரு வெள்ளை அறிக்கையாகஒளிவு மறைவின்றி சாகித்திய அகாதெமி வெளீயிடுமா?அப்படி வெளியிட்டால் தானே போட்டிக்கு இருந்தவ வரிசையில் குறிப்பிட்ட ஒரு படைப்பு தேர்வு செய்யப்பட்ட தற்கான நியாயங்கள் வெளிப்படும்!


விருதுகள் முக்கியமா என்று கேட்டால்

முக்கியமில்லை தான். ஆனால் அந்த விருது

யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவரை வைத்துக்கொண்டு அவருடைய படைப்புகளைவைத்துக்கொண்டு தான் 2000 ஆண்டுகால செம்மொழியாம் தமிழ்மொழியின் இன்றைய இலக்கியமுகம் வெளியுலகத்திற்கு அறிமுகமாகிறது.

இந்த விருது தேர்வு மட்டுமல்ல,சாகித்திய டன் அகாதமி குழுவில்  நியமிக்கப்பட்டிருக்கும்

சிறப்பானவர்களை நியமிப்பது யார்?

எந்த அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?

இதுவும் தெரிந்து கொண்டால் இந்தக் குழுவில்இடம் பிடித்து எதோ என்னால் முடிந்ததை

செய்துவிட … .

Tuesday, October 13, 2020

திராவிடம் என்பது அரசியல் சொல்லாடலா ?

  திராவிட "என்பது அரசியல் சொல்லாடல் மட்டும் தானா?

" சாதிகள் இல்லையடி பாப்பா" பாடபேதமா?!!
ஒரு புத்தகத்தை வாசித்தவுடன் அதை எழுதிய எழுத்தாளரைத் தொடர்பு கொண்டு நான் பேசுவது என்பதெல்லாம் அரிதுதான். ஆனாலும் நேற்று
அந்த அரிதினும் அரிதான செயலைச் செய்ய வைத்துவிட்ட து தோழர் பாட்டாளி அவர்களின் புத்தகம் “ திராவிட நாடும் தேசிய இன விடுதலையும்”
ஒரு பரந்துபட்ட வாசிப்பும் அரசியல் விமர்சனமும் கொண்ட பாட்டாளி போன்ற தோழர்களால் தான் இம்மாதிரியான கருத்தாக்கங்களை
முன்வைக்க முடியும்.
திராவிடம் இருக்கிறதா .. இல்லையா..?
இருந்தப் போதும் அதில் திராவிடம் இருந்த தா இல்லையா?
என்ற விசாரணையில் ஆரம்பித்து .. தமிழகச் சூழலில் நிகழ்ந்த பல்வேறு செயல்களையும் ரகசியக் கூட்டங்களையும் வெளிச்சப் படுத்தி இருக்கிறது இப்புத்தகம்.
அரசியல் அன்றும் இன்றும் சதுரங்க ஆட்டம் தான்.
காய்களை நகர்த்தி வீர்ர்களை வீழ்த்தி அதிகாரம் என்ற ராணியைக் கைப்பற்றுவதில் எத்தனை விதம் விதமான போராட்ட உத்திகள்!
திரைமறைவில் கதாநாயகர்கள் கூட வில்லங்களாக தான் விளையாண்டிருக்கிறார்கள்.
காய் நகர்த்தி ஆடிய ஆட்ட த்தில் திராவிடம் என்பது ஒரு அரசியல் குறியீடாகி.. அதுவும் பிற்காலத்தில் தேசிய முற்போக்கு திராவிடமாகும் போது ..
எந்த தேசியத்தில் எந்த திராவிடம்?
என்ற முரணை மிகத் தெளிவாக
முன்வைக்கிறது.
திராவிடம் என்ற சொல் அதன் அர்த்தப்பாடுகளை இழந்துவிட்ட பிறகும் அதை உதிர்த்து விடாமல் தொடர்ந்து வைத்திருப்பதன் காரணத்தையும்
திராவிடம் உதிர்ந்தப் பின் எஞ்சி நிற்பது தமிழர் தமிழ் நாடு மட்டும் தான் என்பதையும் பாட்டாளி பல்வேறு விமர்சனங்களுடன் அலசி ஆராய்ந்து
பார்க்கிறார்.
திராவிடம் என்பதுடன் ஓரளவு தொடர்புடைய நேரு
கொண்டுவர நினைத்த “தட்சணப்பிரதேசம் “ கொள்கையை பெரியார் ஏன் முழுமூச்சுடன் எதிர்த்தார் என்பதை பாட்டாளி அவர்கள் ஒரு செய்தியாக சொல்லிச் சென்றாலும் இன்றையஅரசியலுடன் பொருத்திப்பார்க்கும் போது பெரியார் தமிழர்களுக்கு
செய்த மிகப்பெரிய உதவி , இதுதான்.. தட்சிணப்பிரதேசம் செயல்பாட்டில் வந்திருந்தால்..! அப்படி ஒன்று நடந்திருக்குமென்றால் ..?
தமிழன் இன்று என்னவாக இருந்திருப்பான்?
இந்த மிக முக்கியமான புள்ளியை திராவிட மேடைகளோ அல்லது திராவிட சிந்தனையாளர்களோ ஏன் பேசுவதில்லை?
(பாவம்.. அவர்களுக்கு துதிப்பாடவே மேடைகள் கொடுக்கப்படுகின்றன என்பதால்.. மன்னித்துவிடலாம்!)
நம் அரசியலமைப்பு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) என்று தான் சொல்லுகிறது. மைய அரசு, மத்திய அரசு,
நடுவண் அரசு..என்று நாம் தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்
சொல்லாத ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறோம். !
மா நிலங்கள் என்ற சொல்லாடல் கூட எவ்வளவு கேலிக்குரியது!
தமிழக அரசு, கேரள அரசு என்று தான் சொல்ல வேண்டும். அவை மா நில அரசுகள் அல்ல அவை தனியான அரசுகள் என்றஅரசியலைப்பு சொன்னதை வேண்டுமென்றே திசைத்திருப்பி இல்லாத
சொல்லாடலை உருவாக்கி இந்தியா ஒற்றை தேசக் கருத்தாடலைகொண்டு வந்திருக்கிறோம் என்பதை புரிய வைக்கிறார் பாட்டாளி.
பாரதியாரின் புகழ்ப்பெற்ற பாடல் வரிகளான
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்பதையும் பாடபேதம் என்று போட்டு உடைக்கிறார் பாட்டாளி. ஒரு சாதிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டு
சாதியக் கொடுமைகளைக் கண்முன்னே கண்டு கொதித்து எழுந்து, எதிர்த்து எழுதிய பாரதி, இப்படி முழுப்பொய்யை சொல்லி இருப்பாரா?!
என்று கேட்கிறார். பாரதி எழுதியது..
“சாதிப் பெருமையில்லை பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”
என்று நமக்கு ஏற்றுக்கொள்கிற மாதிரி ஒரு கருத்தை பாட்டாளி பதிவு செய்திருக்கிறார் . (ஆதாரம் என்ன என்பதை பாட்டாளி தெளிவுப்படுத்தவில்லை !)
ஆரியர் என்று சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் அதே ஆரியர்கள் தானா இன்று நாம் பேசும் திராவிட எதிர் நிலையில் வைக்கும் ஆரியர்கள்?
குறுந்தொகையில் ஆரியர் என்றால் கழைக்கூத்தாடிகள் என்ற குறிப்பு இருக்கிறது (பக் 59)
அக நானூறு பாடலோ ஆரியர் என்றால் பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பழக்குபவர்கள் என்று சொல்கிறது?
நாம் புரோகிதப்பிரிவு ஆரியர்களை மட்டுமே ஆரியர்களாகஇன்று முன்வைக்கிறோம் என்பதையும் திராவிட என்ற சொல்லாடல் ஏன் சங்க இலக்கியத்தில் இல்லை என்பதையும் பல்வேறு சான்றுகளுடன் முன்வைக்கிறார் பாட்டாளி.
பாட்டாளி அவர்கள் வைத்திருக்கும் ஒரு சில தரவுகளுடன்...
எனக்கு சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக 1963 ல்
நேரு கொண்டுவந்த அரசியல் திருத்த சட்டம் 16.
பாட்டாளி அவர்கள் சொல்வது போல பிரிவினைக் கோரும் அமைப்புகளுக்கு தான் தடை, இயக்கத்திற்கு அல்ல என்று குறிப்பிடுவது
மீள்வாசிப்புகுரியது. பார்க்க :
மேலும் பக். 132ல் நீதிக்கட்சியின் முக்கியமான பங்களிப்பை குறிப்பிடும் போது அதன் பஞ்சமர் , பறையர் என்ற இழிசொல் மாற்றப்பட்டு ஆதிதிராவிட என்ற ஆணைப்பிறப்பிக்கப்பட்ட
தகவலில் சி நடேசனார் மற்றும் பனகல் அரசரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன. மிக முக்கியமான செயல்பாட்டாளாரான
காரணமாக இருந்த எம். சி ராஜாவின் பெயர் விடுபட்டிருக்கிறது.
1918ல் ஆதிதிராவிட மகாஜன சபா அரசாங்கத்திற்கு ஒரு மனு கொடுத்தது.
பறையர் என்கிற பெயருக்குப் பதிலாக தொன்றுதொட்டு நிலவி வருவதும்
தங்களுக்கு உரிய பெயருமாகிய 'திராவிடர் ' என்கிற பெயரால் தாங்கள் அழைக்கப்பட வேண்டும் என்றும் அப்பெயரை அரசும் அங்கீகரிக்க வேண்டும்"
என்றும் கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையின் நீதிக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட ஒடுக்கப்பட்ட
மக்கள் அமைப்பின் பிரதிநிதியான எம்.சி. ராஜ் அவர்கள் சென்னை மாகாண
சட்ட சபையில் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். நீதிக்கட்சியும் அத்தீர்மானத்தை நிறைவேற்றியது.
மேற்கண்ட இரு கருத்துகளையும் குறிப்பிடாமல் நானும் விலகிச்செல்வது வரலாற்று பிழைகளை மவுனமாக ஏற்றுக்கொள்வதாகவே
இருக்கும் என்பதை பாட்டாளி அவர்களும் அறிவார்.
பாட்டாளியின் கட்டுரை வரிகளுக்கு நடுவில் வெளிப்படையாக சொல்லாமல் பொதிந்திருக்கும் செய்திகள் சுவையானவை. அரசியல்
விமர்சகர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தேவையானவை. அதையும் சேர்த்து வாசிக்க வேண்டியது ஒரு தேர்ந்த வாசகனின்
திறமை.. !
சமகால திராவிட என்ற அரசியல் சொல்லாடலை
மேற்கத்திய நாடுகளின் ஆய்வார்கள் முதல் சங்க இலக்கியம் தமிழக அரசியல் காட்சிகளின் ஊடாக பயணித்து தேசிய இன அடையாளத்தை விளக்கி பல்வேறு சான்றுகளுடன் பதிவு செய்திருக்கும் பாட்டாளி.. சமகால அரசியலை அறிவாயுதம்
ஏந்தி அணுகும் முறை பாராட்டுதலுக்குரியது.
தோழர் பாட்டாளி அவர்களுக்கு வாழ்த்துகளுடன்…
Image may contain: 4 people, text that says "திராவிட நாடும் தேசிய இன விடுதலையும் பாட்டாளி"
2
and 1 othe

Puthiyamaadhavi Sankaran
 updated her profile picture.

S11 issOncttoStoeudbeptnr atcu lfo1hn2gssor:oe