புதியமாதவி
புதியமாதவி பக்கங்கள்
Tuesday, May 10, 2022
யாரும் ஆணியைப் பிடுங்க முடியாது.
Sunday, May 8, 2022
ஒரே செய்தி.. இரண்டு முகம்
சரவணா..இதெல்லாம் செய்தியாவதே பெரிய்ய புரட்சி தான்!
ஒரே செய்தி.. அதில் ஒவ்வொருவரும் சொல்லியிருப்பதும் உண்மைதான். கற்பனை அல்ல.ஆனால் ஒரே செய்தியை அவரவர் எப்படி பார்க்கிறார்கள்? எவ்வாறு அணுகி இருக்கிறார்கள்?
அந்த நிகழ்வை சமூகத்திற்கு எந்த வகையில் பதிவு செய்ய விரும்புகிறார்கள்? இதெல்லாம் வெவ்வேறு வகையான உண்மைகளை செய்திகளுக்கு நடுவில் புதைத்திருக்கிறது. தினமும் இம்மாதிரி பல செய்திகளை நம் ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நாமும் அதை எல்லாம் வாசித்துவிட்டு பொங்கி அல்லது பொங்காமல் உண்டு உறங்கி முக நூலில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய 09/5/2022 டைம்ஸ் ஆஃப் இந்தியா (மும்பை பதிப்பு) பக் 8 செய்தி :
UP : Dalit woman dies after being 'assulted ' by cops.
அதே குழுமத்திலிருந்து வெளிவரும் எகானிமிக்ஸ் டைம்ஸ் பக் 3 செய்தி:
Old woman in UP Dies After Alleged Assault by Police.
அதாவது டைம்ஸ் 'தலித் பெண் போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள் 'என்று சொன்ன அதே செய்தியை
அதே நாளில் வெளிவரும் எகனாமிக்ஸ் டைம்ஸ்
'வயதான பெண்மணி போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள்' என்று எழுதுகிறது.
.( பெயரில் சராதாதேவி , ராதாதேவி ஆகிறாள். கணவர் பெயர் மாறவில்லை. போலீஸ் பெயர் மாறவில்லை!)
ஒரே செய்திதான்.. இருவரும் முன்வைக்கும் பார்வையும் கடத்தும் உண்மையும் அதற்குள் புதைந்திருக்கும் செய்தியும் வேறுவேறு.
அதன் பின் எகனாமிக்ஸ் சொல்வதையே பிற பத்திரிகைகளும் வழிமொழிகின்றன.
தெலுங்கானா டைம்ஸ், வொயர்ஸ், அவுட்லுக், டெக்கான், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்.. இப்படியாக. .. செய்திகளில் அவள் வயதான 60 வயதுப்பெண் என்பதுடன் மட்டும் முடிந்துவிடுகிறது.
இது பாதுகாப்பான செய்தியாகவும் இருப்பது இன்னொரு காரணம்!
சரவணா..
இரண்டு செய்தியிலும் செத்துப்போனவள்
வயதானப் பெண் ( 60 வயசெல்லாம் முதுமைன்னா அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது!)
இரண்டாவது அவள் அன்றாடங்காய்ச்சி. ஏழைப்பெண்.
மூன்றாவது அவள் இருந்தாலென்ன, செத்து தொலைத்தால்தான் என்ன? என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது!
அவள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து தொலைத்தவள்.
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
இந்த நாட்டில் வாழ்ந்தாலென்ன!
செத்துப்போனால் தான் என்ன?
அவை செய்தியாவதே பெரிய விஷயமல்லவா!
இதை நீ புரட்சி என்று சொன்னால் ஒத்துக்கொள்கிறேன். வேற என்ன பெரிசா கிழிச்சிட முடியும்??? என்ற ஓர்மையுடன். 🙏🙏
Thursday, May 5, 2022
காமத்துப்பாலின் உச்சம்
Wednesday, May 4, 2022
மாதவி SPA
Tuesday, April 19, 2022
சோட்டா மோதி..
சின்னக்கவுண்டர் வந்தாரா வரலையா தெரியாது.
ஆனால்
சின்ன மோதி – சோட்டா மோதி வந்துவிட்டார் , வந்துவிட்டார்.
மனோஜ் சோனி – UPSC New Chairperson. ஆக நியமனம்.
மோதிஜி குஜராத்தின் முதல்வராக இருந்தப்போது
அவருடைய உரைகளை தயாரித்துக்கொண்டுத்தவர்.
அதாவது மோதிஜி பேசியதெல்லாம்
சோட்டா மோதி எழுதிக்கொடுத்தது என்ற வகையில்
அப்போதே செல்வாக்கு மிக்கவர்.
2002 குஜராத் கலவரத்தை “In search of a third space’ என்ற புத்தகம்
எழுதி இந்துத்துவ பார்வையை முன்வைத்தவர்.
பொதுவாக அதிகாரமிக்க IAS , IPS பதவிகள் ..
அதைத் தீர்மானிக்கும் அதிகாரமிக்க பதவி UPSC Chariperson.
இப்பதவியில் அரசியல் கட்சி சார்பில்லாதவர்களை
நியமிப்பது வழக்கம். அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு
சோட்டா மோதி வருகிறார். வருகிறார்.
இந்தியாவின் IAS IPS அனைவருமே இவர் வசமானால்
என்று கல்வியாளர்கள் மட்டுமல்ல
அரசியல்வாதிகளும் அச்சம் கலந்த கவலையுடன்
இந்த நியமனத்தைப் பார்க்கிறார்கள்.
தமிழ் நாட்டில் ..?
நமக்கென்ன சரவணா..
இப்போதைக்கு இளையராஜா பஞ்சாயத்தே முடியவில்லை.
பிறகுதானே மற்றதை எல்லாம் பார்க்க முடியும். ..!
Monday, April 18, 2022
மகாகவி பாரதியின் திலகர் யார்?
Friday, April 15, 2022
தப்பு தாளங்கள் இளையராஜா
மோதி, அம்பேத்கரைப்பற்றி பேசிய பிறகுதான் இளையராஜாவுக்கு அம்பேத்கர் பேசியிருப்பதே தெரிய வந்திருக்கிறது!!!
/நீர் மற்றும் பாசனம் தொடர்பான சில முக்கிய நிறுவனங்களை உருவாக்குவதில் அம்பேத்கர் பங்கு வகித்துள்ளார் என்பதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2016இல் முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் இருந்தே இதைப் பற்றி தெரிந்துகொண்டது சிறப்பானது./ ( இ. ரா எழுதியிருப்பது)
இளையராஜா அம்பேத்கரை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
அடுத்து... இந்த நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து இளையராஜாவுக்கு எதுவும் தெரியவில்லை அதனால்தான் இ.ரா
/" தொழில்மயமாக்கலைப் பொறுத்தவரை, பிரதமரின் 'மேக் இன் இந்தியா' கொள்கை பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக மொபைல் தயாரிப்பில். சாலைகள், இரயில்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் போன்ற உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்காக இந்தியாவும் நன்கு அறியப்படுகிறது' /( இ. ரா. எழுதியிருப்பது)
என்று எழுதுகிறார்.
அதாவது அம்பேத்கரையும் அறிந்திருக்கவில்லை. மோதி பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இதெல்லாம் ஒரு இந்தியக் குடிமகனுக்கு பெரிய குற்றமல்ல ஆனால் எதுவும் தெரியாமல் எதற்காக இளையராஜா இந்தப் புத்தகத்திற்கு அறிமுகம்/ அணிந்துரை எழுதியிருக்கிறார்???
ஏ. ஆர் . ரஹ்மானை எதிர்ப்பதற்கு இளையராஜாவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வலையில் தேவையில்லாமல் இளையராஜா மாட்டிக் கொண்டிருக்கிறார்.
இசை கச்சேரிகள் மேடைகளில் பாடகர் ராகம் தவறிவிட்டால் அது யாராக இருந்தாலும் இளையராஜா அவர்களைத் திருத்துவார். சரியாகபாடவும் வைப்பார். இப்போது???!!!
தனக்கு தெரியாதவர்களைப் பற்றி தான் அறியாதவைகளைப்பற்றி ... எப்படி எழுத துணிந்தீர்கள்!
தப்பு தாளங்கள்..
Wednesday, April 13, 2022
அறிவாயுதமே போராயுதமாய்.. அண்ணல் அம்பேத்கர்
“கலையின் பெயரால் எம் பெண்களை இழிவுப்படுத்துவதை இனியும்
பொறுப்பதற்கில்லை, அப்படி இழிவுப்படுத்தி கிடைக்கும் பணம் எமக்குத்
தேவையுமில்லை” – பாபாசாகிப் அம்பேத்கர்.
10 செப், 1927 .. ல் அவர் கண்முன்னாலேயே அதை அவர்கள் செய்தார்கள்.
அதுவும் அவரை அழைத்து அவருக்கு நிதி திரட்டி தருவதாக கூறி
(மகட் சத்தியாகிரகத்திற்கு நிதி திரட்டியபோது) அழைத்திருந்தார்கள்.
அழைத்தவர் ஜல்ஷா நாட்டிய நாடக கலைஞர் பட்டே பாபுராவ்.
அவர் ஆடிக்கொண்டே வருகிறார். அவரின் இரண்டு பக்கமும் மகர்
இன தமாஷா (கூத்து நடனம்) பெண்கள் ஆடிக்கொண்டு வருகிறார்கள்.
அத்தருணம் அம்பேத்கருக்கு எப்படி இருதிருக்கும்?
காரணம்… தமாஷா ஆடியவர்கள் அன்றைய ஒடுக்கப்பட்ட மக்கள்.
நிலவுடமை சமூகத்தை , ஆதிக்க சாதியை மகிழ்விக்க மாலையில்
தமாஷா.. இரவில் அப்பெண்கள் நிலவுடமையின் காமப்பசிக்கு
இரையாகிப்போகும் அவலம்..
அக்கர்மஷி நாவலில் சரண்குமார் லிம்பாளே தன் தாய் மகமாயி கதையை
தன் பிறப்பை விவரித்திருப்பார். இவை எதுவும் புனைவல்ல.
இந்தப் பின்புலத்தில் தான் அம்பேத்கருக்கு நிகழ்ந்த இந்த
அவமானத்தை அவருக்கு ஏற்பட்ட காயத்தை அந்த வலியை
புரிந்து கொள்கிறேன்.
நிதி தருவதாக சொல்லி தன்னை அழைத்து அவன் நடத்திக் காட்டும்
கூத்து ,
கலை என்ற பெயரில் ரசனைக்குரியதல்ல.. !
அவர் கொதித்தெழுகிறார்.
நீயாவது .. உன் நிதியாவது…
எம் பெண்களை இழிவுப்படுத்தி எனக்கு நீ கொடுக்கும் இந்தப் பணம்
தேவையில்லை என்று அந்த இடத்திலேயே அதை தூக்கி எறிந்துவிட்டு
வெளியேறுகிறார்.
இச்சம்பவத்தை எதுவுமே நடக்காதது போல மவுனமாக கடந்து செல்லவே வரலாறு விரும்புகிறது. அந்தப் பின்னணியில் எத்தனையோ கட்டுக்கதைகளை எழுதி, பரப்பி , சினிமாவாக்கி .. இருக்கிறது.
இப்படித்தான் வரலாறு எப்போதுமே விளிம்பு நிலைக்கு எதிராக
தன்னைப் புனைந்து கொள்கிறது.
மூக் நாயக் பத்திரிகை துவங்கியபோது இப்படி ஒரு மராத்தி இதழ்
வெளிவர இருக்கிறது என்பதை (செய்தியாக அல்ல,) "விளம்பரம்"
வெளியிட கூட "கேசரி" பத்திரிகை தயாராக இல்லை.
கேசரி பத்திரிகை திலகர் நடத்திய பத்திரிகை.
திலகரும் கேசரி பத்திரிகையும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில்
முக்கியமான பக்கங்கள். அப்படித்தானே வரலாறை படித்திருக்கிறோம்!
இங்கிருந்து விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு வரலாற்று
பக்கத்தையும் வாசித்தாக வேண்டி இருக்கிறது.
அவமானப்படும்போது
காயப்படும்போது
நிராகரிக்கப்படும்போது
வேண்டுமென்றே கள்ளமவுனத்தில்
இச்சமூகம் கடந்து செல்லும்போது..
அம்பேத்கரின் அறிவாயுதமே
போராயுதமாய்..
ஜெய்பீம்.
(14 ஏப்ரல் 2022)
Tuesday, April 5, 2022
யார் இந்த பிரவின் தாம்பே..? kaun Pravin Tambe?
Sunday, March 27, 2022
வணக்கம், தலைவா .. ஹாஜிமஸ்தான் வரதாபாய் முதல் சந்திப்பு
