Sunday, February 16, 2020

குந்தியின் குருஷேத்திரம்

Image result for sunrise kisses

பாணனின் பாடலைப் பாடினான்..
இசையின் ஒவ்வொரு துளியிலும்
உடல் நனைந்தது..பற்றி எரிந்தது..
விறலியைப் போல ஆடினேன்.
இரவின் கூத்துக்கலைஞர்கள்
ஒப்பனையை களைந்துவிட்டார்கள்.
நட்சத்திரங்கள் உறங்கப் போய்விட்டன.
அவன் முத்தமிட்ட நெற்றியில்
இன்னும் சூடு ஆறவில்லை.
படுக்கை எங்கும் முத்தங்களின் பன்னீர்த்துளிகள்.
விடிவதற்குள் எல்லாம் மாறிவிடுமோ..
ஹே .. சூரிய வம்சமே..
இன்றுமட்டும் தூங்கிவிடு..
என்னையும் தூங்கவிடு.
பூஜை அறையில்
கருவறைத் திறந்திருந்தப் போது
உன் மந்திரங்களைச் சொல்லாமல்
சென்றுவிட்டாய்..
உன் கர்ணபுத்திரனைக்
கொடுக்கத்தவறிவிட்டாய்.
குருஷேத்திரம்…
என்னை அல்லவா பலி கேட்கிறது.!
எதிரணியில் உன்னை நிறுத்துகிறது.
அம்புகளின் படுக்கையை
அவர்கள் தருவார்களோ?
உன் அம்பறாத்துணியிலிருந்து
பறந்துவரும் அம்புகளின் அமுத விஷம்
என்னை எடுக்குமோ.. வாழ்வை முடிக்குமோ
எதுவானாலும் சம்மதமே..வா..
ஓம் நமசிவாயா
காத்திருக்கிறேன்..
நீ தரப்போகும் கடைசி முத்தத்திற்காக.

Saturday, February 15, 2020

அவளும் நானும்

அவள் இளமையின் உச்சத்தில்
எப்போதும் கல்யாணக்கனவுகளில்
மிதக்கிறாள்.
அவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும்
எப்படி அவளைக் கொஞ்ச வேண்டும்
அவளை எங்கெல்லாம் கூட்டிச்செல்ல வேண்டுமென
அவள் சதா கற்பனையில் ..
கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடுகிறாள்.
முற்றுப்பெறாத விடிகாலை கனவைப் போல
அவள் என்னைத் துரத்திக் கொண்டே
இருக்கிறாள்.
அவள் எப்போதும் சொல்கிறாள்
நான் உனக்குத்தான் மகளாக பிறக்க வேண்டும்
அடுத்தப் பிறவியிலாவது
உன்னைப் ப்டிச்சிருக்கு.மம்மி...
மழலை மாறாத மொழியில்
அவள் சொற்களின் வீரியம்
எனக்குள் மின்னலாய் இறங்கி
அடிவயிற்றைப் பிசைகிறது.
அவளை இறுக அணைத்துக் கொள்கிறேன்.
இப்போதும் நீ என் மகள் தானே செல்லம்..
சுருட்டை முடி தவழும் முன் நெற்றியில்
முத்தமிடுகிறேன்
அவளைப் போலவே நானும் ..
வளர்ச்சி அடையாமல் அதே நினைவுகளில்.
தேங்கிக் கிடக்கிறேன்.
அவள் குளத்தில் கல்லை எடுத்து வீசுகிறாள்
அலை அலையாய் நீரில் அவன் நினைவுகள்
மிதக்கின்றன.
தண்ணீருக்குள் நானும் அவனுமாய்
அவள் கைப்பிடித்து நடக்கிறோம்.
அவள் கைகொட்டி சிரிக்கிறாள்.
மகேந்திர மலையடிவாரத்தில்
மழை கொட்டுகிறது.
கருவறையில் உறங்கிக்கொண்டிருந்த தேவி
கனவுகளிலிருந்து விழித்துக் கொள்கிறாள்.
அவளுக்கு வளர்ச்சி இல்லையாம்
அப்படித்தான் அவர்கள் சொல்கிறார்கள்.
அவள்.. ஒரு பிரமாண்ட வெளியாய்
என் கைப்பிடிக்குள் அடங்க மறுக்கும்
பேருலகமாய் ஆட்சி செய்வதை
எப்படிச் சொல்லட்டும்?

No photo description available.


A lot of us may recall the character played by the late Sridevi in the Tamil film Moondraam Pirai remade in Hindi as Sadma where she regressed into a childlike state after severe trauma and regains normality in the course of the film. That's of course fiction with the possibility of being translated into celluloid imagery. Life is far from fiction and poses unimaginable twists and turns that cannot be straightened. It's like what has been cast into a mold cannot be reshaped by hammering in a smithy.
The differently-abled are complete beings in creation and not at all handicapped. It is only us with parochial views and inability to think beyond ourselves who are handicapped. They do not seek our pity or sympathy but merit compassion and empathy.
Here is a very poignant poem in Tamil by Puthiyamaadhavi Sankaran reproduced with her prior permission together with an English translation by moi:

She floats
in wedding dreams
at the peak of youth
always.
Imaging all the time how
should he be,
which way
should he pamper her
and where all
should he take her to,
she hugs the neck
and waltzes.
Like an unfinished early morning reverie
she keeps chasing after me.
She says
always:
In the next birth at least
I should be
born as your daughter.
I like you Mummy.
The power of her words
in a baby's prattle like voice
strikes like lightning
and rolls around low
in my tummy.
I hug her tightly.
"Even now you are my daughter only
darling".
I kiss on the forehead where her curly bangs hang.
I also stagnate
in those same memories
with stunted growth
like her.
She picks up a stone
and flings into the tank.
His memories
float on the water
in wave after wave.
Holding her hands,
he and I
walk in water.
She claps her hands and laughs.
It rains at the foot
of Mahendra Hills.
The goddess
sleeping in the womb
wakes up from dreams.
She has no growth.
That is what they say.
How do I say
that she rules
like a huge world
in a universal space
refusing to be
restrained by handhold?
~Sri 1205 :: 15022020 :: Noida
thanks to Sri N Srivastava

Thursday, February 13, 2020

காதலர்கள் மாறிவிட்டார்கள்

காதலர்கள் மாறிவிட்டார்கள்!
காதல் மட்டும் மாறவில்லை???!
காதல் திருமணத்திற்கானது
 காதலித்தவர்களின் விருப்பமும் நோக்கமும்
 இல்லற வாழ்வில் இணைவது என்பது... 
எம் தலைமுறையின் நம்பிக்கை.
 காதல் ஒருமுறை தான் வரும், காதல் போயின்
 சாதல் சாதல் , காதல் புனிதமானது.. இத்தியாதி 
நம்பிக்கைகளை அன்றைய சினிமாக்களும்
 இலக்கிய உலகமும் உருவாக்கி வைத்திருந்தன.

களவொழுக்கத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ச்சமூகம் 
பொய்யும் வழுவும் வந்தப் பின்னர் ஐயர் யாத்தனர்
 கரணம் என்ப என்று திருமண உறவுக்கான காரணத்தை
 வெளிப்படையாக சொன்ன தமிழ்ச்சமூகம் 
ஒன்றைமட்டும் சொல்வதற்கு இடம் கொடுக்கவில்லை
. களவொழுக்கத்தில் பொய் சொல்லி ஏமாற்றியவர்கள்
 இருந்திருக்கிறார்கள் என்று சொல்லும் தமிழ்
 இலக்கியப் பரப்பில் அந்த ஏமாற்றத்தில்
 பாதிக்கப்பட்ட தலைவன் தலைவி வாழ் நிலை
 கவிதையாக்கப்படவில்லை.சங்க இலக்கியம் பேசிய
 பிரிவு என்பது நிரந்தரமாகப் பிரிந்த காதலர்கள் பற்றியதல்ல.


இதை எல்லாம் எழுதக் கூடாது..
 எழுதினாலும் அதைப் பற்றி பேசக்கூடாது. என்று 
அன்றும் கட்டுப்பாடுகள் இருந்திருக்கலாம்.
இன்றைய காதலர்கள் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்கள். 
அவர்கள் காதலை மட்டும் காதலிக்கிறார்கள்.
 காதலனை அல்லது காதலியை மாற்றிக் கொள்வதிலோ அல்லது ஒத்துக்கொள்ளவில்லை என்று விலகிக் கொள்வதிலோ 
அவர்களுக்கு பிரச்சனை இல்லை. 
வாழ்வின் இந்த யதார்த்த நிலையை இன்றைய தலைமுறை 
ரொம்பவும் எளிதாகக் கையாளுகிறது.

இன்று வணிக வளாகத்திற்குப் போனால்..
இளம் ஜோடிகளைப் பார்த்து ரசிப்பதுண்டு.
இவர்களில் 0.00000000003 பேர் கூட காதலிப்பது
இல்லறத்தில் இணைவதற்கு என்ற கருத்து 
கொண்டவர்கள் இல்லை!
பிறகு ஏன் காதலிக்கிறார்கள் என்றால் 
காதலிப்பதும் காதலிக்கப்படுவதுமாக
 காதலை மட்டும் கொண்டாடுகிறார்கள்...
இன்னும் ஒரு படி மேலே போய் ..
 இல்லற வாழ்க்கையை எம் தலைமுறை 
கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஒரு 
ப்ராஜெக்ட் லெவலில் ஒப்பந்தங்களுடன் தொடர்கிறார்கள்.
காதலர்கள் மாறிவிட்டார்கள்.
காதல் மட்டும் மாறவில்லை.

Tuesday, February 11, 2020

காங்கிரசுக்கு .. bye bye..

Image result for congress defeated badly

டில்லி தேர்தல் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்விகளை 
மயிர்க்கூச்செறியும் அளவுக்கு டிவிக்காரர்கள் விவாதம்
 நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 ஓர் ஆம் ஆத்மியாக இதைப் பார்த்தால்.. 
இதற்கு எந்தப் புள்ளிவிவரமும் தேவையில்லைனு தோணுது.
மக்களுக்கு அவர்களுடைய அன்றாட தேவைகளைப் 
பூர்த்தி செய்கிற மக்கள் நல அரசு தேவை.

இவை அனைத்தையும் விட இன்னொரு மிக முக்கியமான
 மன நிலை... மக்கள் தகுதியற்ற வாரிசு தலைமைகளை ..
. (அடிக்கோடிட்டு வாசிக்கவும்.. தகுதியற்ற வாரிசு தலைமைகளை )
இனியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த மன நிலை டில்லியின் குளிருக்கு மட்டுமே
ஒத்துவரக்கூடியதாக நம்ம ஊரு அரசியல்வாதிகள்
நினைச்சிக்கிட்டு போஸ்டர் அடிக்கறதும்
மகன் பேரன் பேத்தி ஒன்னுவிட்ட அக்கா மகன்
தங்கச்சி மவன், மகள் மருமகன் ... அப்படின்னு
படை எடுக்கிறதையும் ஒரே குடும்பத்திலேயே
எம் எல் ஏ, எம்பி, அமைச்சர்னு உட்கார்ந்து அளவுக்கு
அதிகமாக பொது மக்களுக்கு சேவை செய்ய வருவதையும் ......
கணம் பொதுஜனங்களும் ஏற்றுக்கொள்ள
ரெடியா இல்லை..

சரவணா...சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு..

கேட்க மாட்டேன்னு சண்டிக்குதிரையை ஓட்டி
சறுக்கி விழுந்திடாதீங்க..
ஆம் ஆத்மிக்கு ஒரு "ஓ" போடலாம்.
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்..
BYE bye congress.

Monday, February 10, 2020

நாம்தேவ் தாசல்


Image result for namdeo dhasal
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞர்களின் வரிசையில் 
இடம் பெற்றிருப்பவர் நாம்தேவ் லக்‌ஷ்மண் தாசல்
மராத்திய கவிதையை நோக்கி உலகக்கவிஞர்களைத் திரும்பிப்
 பார்க்க வைத்த அதிசயம் அவரும் அவர் கவிதைகளும்
அவர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று
 திலீப் சித்ரேயால் வாசிக்கப்பட்ட போது அயல்தேச இலக்கிய வட்டத்தில்
 ஏற்பட்ட அதிர்வுகளின் அலைகள் இன்னும் அடங்கவில்லை.
 மராத்திய கவிதை மொழியை மாற்றி
அமைத்தது மட்டுமல்ல, அவர்  கவிதையின் பாடுபொருள்கள் 
ஏற்படுத்திய அதிர்வுகளிலிருந்து இலக்கிய பிதாமகன்கள்
 இன்னும் வெளிவரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்ந்தக் காலத்திலும் மறைந்தப் பிறகும் நாம்தேவ்
 ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் பார்வையில்  
தன் விசவரூபத்தைக் காட்டுகிறார். நான் நாம்தேவ் தாசலை
 அறிந்தப் போது அவர் நான் விரும்பாத ஒரு கூடாரத்தில் இருந்தார்
அதனாலோ என்னவோ அவரை எளிதில் பார்க்கவும் பழகவும்
 கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்த தவறிவிட்டேன்
(காலம் கடந்து அதற்காக வருத்தப்படுகிறேன்.)

இலக்கிய விமர்சனங்கள் ஆகட்டும் 
அரசியல் விமர்சனங்கள் ஆகட்டும் அவற்றை வாசித்துவிட்டு 
ரசித்துவிட்டு தன் போக்கில் தனக்கு சரி என்று படுவதை 
தொடர்ந்து எழுதியும் செயலாற்றியும் வந்தார்
தலித்துகளைப் பற்றிய எழுதிய, தலித்துகளுக்காக 
எழுதிய தலித் கவிஞர் என்று கவிதை விமர்சகர்கள் 
அவரை ஒரு வட்டத்திற்குள் அடக்கிவிட
முயற்சி செய்தார்கள்
எப்போதும் ஜொலிக்கும் மும்பையின் கண்கூசும் வெளிச்சம்
பலதரப்பட்ட இன மொழி மக்களின் வாழ்விடம் மும்பை.
வானுயர்ந்தக் கட்டடங்களுடன் கம்பீரமாக நிற்கும் 
மும்பையின் அடிவயிற்றிலிருந்து அலங்காரங்கள்
 எதுவுமின்றி மும்பையின் ரவுடிகளை,
தாதாக்களை கஞ்சா அபின் கடத்தல்களை, குவிந்து கிடக்கும் 
குப்பைகளைகுப்பைகளின் ஓரமாக களவில் ஈடுபடும் காதலை
 எப்போதும் அணையாத சிவப்பு விளக்கின் காமட்டிபுரத்தை என்று... 
நாம்தேவ் தன் படைப்புலத்தின் காட்டிய மும்பை 
கற்பனை அல்ல. அது நிஜம்
அந்த நிஜங்களைக் கண்டும் காணாது நடந்து சென்ற
 படைப்புலகம் நாம்தேவின் கவிதைகளை அணுக
இப்போதும் அச்சம் கொள்கிறது என்பது தான் உண்மை
நாம்தேவுடன் அரசியல் பேசுபவர்களும் தலித் இயக்கம் குறித்து 
பேசுபவர்களும் கூட அவர் கவிதைகள் குறித்து பேச முன்வரவில்லை 
என்பதற்கு அவர் கவிதைகளின் பயங்கரமான
நிஜம் மட்டுமே காரணம்.

மராத்தி இலக்கிய உலகம் தாண்டி நாம்தேவின் படைப்புகள் குறித்து 
எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் 
கணக்கில் கொண்டால் அது ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை
அதற்குநாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் 
செய்த திலீப் சித்ரே
சொல்லும் காரணத்தையும் புறம்தள்ளிவிட முடியாது.
"நாம்தேவின் கவிதைகள் மொழியாக்கம் செய்பவரை மருட்டும்
அந்த தலித் மொழி, குறிப்பாக மொழியாளுமை அப்படி" என்கிறார்.

நாம்தேவின் சமகாலத்தில் வாழ்ந்தவர்களான 
அருண் கொலட்கர், கிரண்நகர்கர், விலாஸ் மற்றும் திலீப் சித்ரே 
போன்றவர்கள் மராத்தி மொழியில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் சர்ரியலிஸமும் எக்ஸிஸ்டென்டலிஸமும் 
நாம்தேவின் கவிதைகளில் தான் மிக இயல்பாகவும் சுயமாகவும்
 இடம் பெறுகின்றன. . நாம்தேவுக்கு மராத்தி மொழி தவிர 
பிற மொழிகள் எதுவும் தெரியாது என்ற உண்மையை அறிய வரும் போது
அவர் கவிதைகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன
பிறமொழி கவிஞர்களின்  மராத்தி மொழியாக்க கவிதைகளை
 அவர் தொடர்ந்து வாசிக்கும் வாசகனாக இருந்தார் 
என்பதையும் பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

"
எனக்கென்று எந்தச் சொத்துகளும் இல்லை, என் கவிதைகளைத் தவிர.
என் கவிதைகளை கற்களைப் போல வீசி இருக்கிறேன், குவித்து வைத்திருக்கிறேன் உங்களுக்காக, தெருச்சண்டைகளுக்கு ஆயுதங்களாக"
என்று தன்னைப் பற்றியும் தன் கவிதைகள் குறித்தும்
 அறிமுகப்படுத்திக் கொண்டார்
கவிதை என்பது அழகியல் சார்ந்தது, அழகியல் சார்ந்தது தான்
கலை, கலை கலைக்காக மட்டும் தான்... என்றெல்லாம்
 தலையில் ஒளிவட்டத்துடன் திரியும் அறிவுஜீவிகள் 
இன்றும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள்
இலக்கியம் அவர்களுக்கும் அவர்களின் அடிவருடி  
வாரிசுகளுக்கும் பட்டா போட்டு எழுதிவைத்த சொத்து போல
ஒரு பாவனை! தலித் கவிதைகளின் உரத்தக் குரல்கள் அவர்களை
முகம் சுளிக்க வைக்கிறது. அரசியல் பேசிவிட்டால் 
கவிதை தற்கொலை செய்து கொள்ளும் என்று
 அந்தப் பிதாமகன்கள் பயம் காட்டுகிறார்கள்.
நாம்தேவ் தாசல் தான் 
" என் கவிதை என் அரசியல், என் அரசியல் என் கவிதை"
என்று கடைசிவரை உரக்கச் சொல்லி உண்மையாகவே
வாழ்ந்து காட்டி மறைந்திருக்கிறார்.

நாம்தேவ் தாசலின் கவிதை 


கொடூரம்
------------------

மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்.
துன்பம் மிகுந்த கருணைத்ததும்பும்
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விழிகளில்
வாழ்வின் ஜீவன் எட்டிப்பார்க்கிறது.
அந்தப் பார்வை என்னை அதிரவைக்கிறது.
எனக்குள் இருக்கும் கலகக்காரன்
எனக்குள் வெடிக்கிறான்.
என்னைச் சிதைக்கிறான்.
எங்கும் இல்லை  நிலவின் வெளிச்சம்.
எங்கும் இல்லை தண்ணீர்.
வெறிப்பிடித்தக் குள்ளநரி தன் பற்களால்'
என் சதைகளைக் கிழிக்கிறது.
என் குரங்கு எலும்பிலிருந்து பரவுகிறது
பயங்கரமான விஷம் போன்ற கொடூரம்.

வெறுக்கத்தக்க என் அடையாளங்களிலிருந்து
என்னை விடுதலை செய்யுங்கள்.
நட்சத்திரங்களைக் காதலிக்க விடுங்கள்.
மலரும் ஊதா ஒன்று தொடுவானம் நோக்கி நகர்கிறது.
வறண்ட வெடிப்புகள் நிறைந்த முகத்திலிருந்து
ஒரு பாலைவனச்சோலை  எழுகிறது.
சூறாவளி ஒன்று தணியாத யோனியுடன்
முதலிரவு நடத்துகிறது.
பூனை ஒன்று தாங்கொணா வேதனையின் கூந்தலை
வருடத்துவங்குகிறது.
இரவு என் குமுறல்களுக்கு இடமளிக்கிறது.
சன்னல்களின் கண்களில் தெருநாயின் ஆட்டம் ஆரம்பமாகிறது.
நெருப்புக்கோழி தன் அலகுகளால் குப்பையைக் கிளறுகிறது.
எகிப்திய கேரட் தேகத்தின் உண்மையான நறுமணமாகிறது.
கவிதை ஒன்று பிணத்தைக் கல்லறையிலிருந்து எழுப்புகிறது.
சுயத்தின் கதவுகள் மோதி திறக்கின்றன.
எல்லா பெயர்களின்  ஊடாகவும் பரவுகிறது ரத்த ஓட்டம்.
இலக்கண மதில்களைத் தாண்டி மேல் எழுகிறது
எனக்கான நாள்.
படைப்புகளின் படுக்கையில் கடவுளின் மலம்
ஒரே அடுப்பில் சுடப்படுகிறது
வேதனையும் ரொட்டியும்.
ஆடைகளற்ற அக்னி புராணங்களிலும்
நாட்டுப்புறக்கதைகளிலும் வாழ்கிறது
பின்பற்றி சோரம்போன பாறைகள் வாழ்வின் வேர்களைச் சந்திக்கின்றன.
நொண்டிக்கால்களின் மீது நின்று கொண்டிருக்கிறது பெருமூச்சு.
சாத்தான் நீண்ட வெறுமையின் பறையை அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
ஆசைகளின் கதவில் ஊசலாடுகிறது அந்தப் பச்சை இளந்தளிர்.
நிராசைகளின் பிணம் சேகரிக்கப்படுகிறது.
அழிவற்ற நித்தியத்தின் சிலையை ஒரு சைக்கோ மனநிலை
நெருக்கித்தள்ளுகிறது.
தூசி கவசத்தை தோலுரிக்கிறது.
இருட்டு தலைப்பாகை வருகிறது.
நீ... உன் கண்களைத் திற.
இவை எல்லாம் பழைய வார்த்தைகள்.
இந்த ஏரி ஆர்ப்பரிக்கும் அலைகளால் நிரம்பிக்க்கொண்டிருக்கிறது.
கரையோரங்களைத் தொடுகிறது அலைமுறி
இருந்தாலும்,
என் குரங்கு எலும்பிலிருந்து
பரவுகிறது நச்சுப்போன்ற கொடூரம்
நர்மதா நதியின் நிர்மலமான நீரைப்போல தெளிவாக.

Friday, February 7, 2020

இருட்டுக்கடை அல்வா

Image result for இருட்டுக்கடை அல்வா
இருட்டுக்கடை அல்வா..
திருநெல்வேலியின் அடையாளமாகிப்போனது..
புதுமைப்பித்தன், புதியமாதவி , பொதிகைமலை,
சிந்துப்பூந்துறை, தாமிரபரணி, தென்னிந்தியாவின்
ஆக்ஸ்போர்ட் என்பதைச் சொல்லும் கல்லூரிகள்,
சுலோச்சனா முதலியா பாலம்.. நெல்லை டவுண்,
நெல்லையப்பர் கோவில், ஜானகிராமன் ஹோட்டல்,
திரு நெல்வேலி ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன்
இப்படியாக பல அடையாளங்கள் எங்க ஊருக்கு
இருக்கிறது என்றாலும் இந்த அடையாளங்கள்
பிற ஊர்களுக்கு இருக்கும், இருக்கிறது! ஆனா
இந்த இருட்டுக்கடை அல்வா இருக்கே..
இதுமட்டும்.. எங்க ஊரின் ஸ்பெஷல்.. காரணம்
தாமிரபரணி தண்ணியும் காற்றும் இல்லாத
இட த்தில இருட்டுக்கடை அல்வா இருக்காதாமே!
அடேங்கப்பா..
இருட்டுக்கடை அல்வாவை சூடா வாங்கி அப்படியே
அதில ஒரு துண்டை எடுத்து வாய்க்குள்ள போட்டு
அது நெய்யில வழுகிட்டு தொண்டைக்குழிக்குள்ள
போற சுகமும் ருசியும் இருக்கே.. அதெல்லாம்
அனுபவிச்சாதான் தெரியும்.
 திரு நெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை
பிரபலமாக்கியதில் சினிமாக்களுக்கும் பங்குண்டு.
அப்புறம்.. இதை வச்சிக்கிட்டு திரு நெல்வேலிக்காரங்க
அல்வா கொடுக்கிறதில கில்லாடிகள் என்று
இன்னொரு தலபுராணமும் உண்டு.
இருட்டுக்கடை அல்வா சரித்திரம் தெரியுமா
ரொம்பவும் விசித்திரமா இருக்கு.
சொக்கம்பட்டி ஜாமினில் மிக அதிகமாக
குதிரைகள் இருந்தன. அவற்றைப் பராமரிக்க
வட நாட்டிலிருந்து லாலா என்ற இனத்தவர்களை
அழைத்து வந்தார்கள். லாலாக்களும் குதிரைகளுக்கு
விதம் விதமாக உணவு சமைத்துப் போட்டார்கள்.
குதிரைகளுக்கு வைத்த உணவை குதிரைப்படை
வீர ர்களும் சாப்பிட்டு அதன் ருசியைப் போற்றினார்கள்.
எப்படியோ இச்செய்தி ஜாமீனுக்கு எட்டியது.
ஜாமீன் குடும்பமும் லாலாக்களை தங்கள்
சமையலறையில் பயன்படுத்திக் கொண்டனர்.
இப்படியாக சமையலில் கொடிகட்டிப் பறந்த
லாலாக்கள் சொக்கம்பட்டி ஜாமீன் ஆட்சி முடிவுக்கு
வந்தப் பின் பல தலைமுறைகள் வாழ்ந்த நெல்லை
மண்ணை விட்டு சொந்த ஊருக்குத் திரும்பவில்லை.
அவர்கள் ஆரம்பித்த தொழில் தான் “அல்வா”
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின்
மகன் பிஜிலி சிங் என்பவர் தான் அல்வாவைத்
திருநெல்வேலிக்குக் கொண்டு வந்தார்
என்று பதிவு செய்கிறார் முத்தாலங்குறிச்சி
காமராசு. ( தென்னாட்டு ஜாமீன்கள்)
எங்க தாமிரபரணி தண்ணி இப்படியாக
குதிரைக்கு வச்ச கோதுமையை அல்வா ஆக்கி
இருட்டுக்கடை அல்வா ஆக்கி..
திரு நெல்வேலி சீமைக்கு அடையாளமாக்கி..
அட டா..