Saturday, June 30, 2018

அந்த நான்




அந்த நான் 
இப்படித்தான் இருக்க வேண்டும் 
இதைத் தான் செய்ய வேண்டும்
இதைத்தான் பேச வேண்டும்
இப்படித்தான் உடுத்த வேண்டும்
இன்னாரிடம் தான் பழக வேண்டும்
இப்படியாக அவரவர்க்கான நான்
அவர்களை மகிழ்விக்கும் நான்
அவர்களின் பார்வையில் நான்
அந்த நான் எப்போதும் நானாகவே
இருப்பதில்லை என்பதால் தான்
அந்த நானிலிருந்து இன்னொரு நான்
எப்பொதாவது விழித்துக்கொள்கிறது.
அந்த நானை அவர்கள் 
கருக்கலைப்பு செய்ய முயற்சித்து தோற்றுப்போகிறர்கள்.
அந்த நான் அவர்களை எப்போதும்
அச்சுறுத்திக் கொண்டே இருப்பதாக
அவர்கள் நினைப்பதை
இந்த நான்இல்லைஎன்று சொல்வதில்லை.
அதனால் கடுப்பாகி அந்த நான்
காட்டேரி, பேய், பிசாசு, மோகினி
என்று அழைக்கிறார்கள்.
அடிக்கடி அவர்களே பேயோட்டும் மந்திரங்களுடன்
அந்த நானை விரட்டிவிடும் வேகத்தில்
புளியம் கம்பால் அடிக்கிறார்கள்.
அந்த நானின் கதறல் 
அவர்களின் ஆத்திரத்தை தணிக்கிறது.
கைகள் சோர்ந்து அவர்களே 
நிறுத்திக் கொள்கிறார்கள்.
நானின் காயங்கள் ஆறாமல்
சீழ்ப்பிடித்து அவர்களைச் சுற்றி
நானின் நாற்றமெடுக்கிறது.
இப்போது அவர்கள் நானை
விரட்டிவிடலாம் என்று ஒருமனதாக
தீர்மானிக்கிறார்கள்.
அந்த நான் விரட்டப்படும் போது
அவர்களும் அகதிகள் ஆகிவிடும்
அபாயம் இருப்பதை
அவர்களின் சட்டங்கள் சொல்கின்றன.
அவர்கள் இப்போது அவர்களுக்குள்
சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள்.
அந்த நானை யார் வெறுத்தது?
அந்த நானை யார் அடித்தது?
அந்த நான் செய்ததை எல்லாம்
யார் யார் மறந்தது?
அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்
சொல்லிக்கொண்டு 
அவர்களுக்குள் யுத்தம் நடத்துகிறார்கள்.
அந்த நான்.. நினைவுகள் தப்பிய 
அந்த நான்.. கோமாவில்
அமைதியாக படுத்திருக்கிறது.
அந்த நானின் இந்த நான்
இன்னும் உயிர்ப்புடன்
மோகினியாக காட்டேரியாக
காடுகளிலும் வீடுகளிலும்.

Wednesday, June 27, 2018

நிசப்தம்.. என்ன குற்றமா?!!


“Nishabd “.. திரைப்படம். தமிழில் சொல்வதானால்நிசப்தம்
இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை.
ஆனால் சமூகத்தில் தொடரும் கதை.
குடும்பம், கலாச்சாரம், பண்பாடு இத்தியாதி அனைத்திற்கும்
இந்த நிசப்தம் ஒரு இடி போல .. 
இந்த  நிசப்தம் .. யாருக்கும் விருப்பமில்லை.
இந்த நிசப்தம்.. ஓவ்வொருவரையும் சுற்றி 
வெவ்வேறு காலக்கட்டங்களில்
எதோ ஒரு வகையில்.. 
நிசப்தம்.. 
நிசப்தம் ஏன் வாழ்க்கையில் நுழைகிறது?
நிசப்தத்தில் ஏன் குடும்பங்கள் சிதைகின்றன.?
நிசப்தத்தில் வாழ்ந்துவிட முடியுமா?
நிசப்தம் இருப்பதை ஏன் மொழிகளின் ஓசைகள்
பேசுவதே இல்லை!
நிசப்தத்திற்கு பலியானவர்கள் பெரும்பாலும்
யாராக இருக்கிறார்கள்?
சமூகம் நிசப்தத்தைக் கண்டு ஏன் இவ்வளவு தூரம்
அச்சப்பட்டு ஓடுகிறது?
நிசப்தம்.. என்ன அவ்வளவு கொடூரமானதா?
***
நிசப்தம் அழகானது தான்.
நிசப்தம் ஒரு மவுனத்தின் கவிதை.
நிசப்தம் .. தந்தையின் அரவணைப்பை
மீட்டுத்தரும் இன்னொரு பிறவி.
நிசப்தம் .. அறிவுக்களஞ்சியத்தின் தோழமை உறவு.
நிசப்தம் .. ஓர் இனிய காதல்.
நிசப்தம் ..

***

அமிதாபச்சனின் நடிப்பும் அமித் ராயின் காமிராவும் நிசப்தத்தை
தனித்துவமாக்கி இருக்கின்றன. ராம் கோபால் வர்மா டைரக்ஷனில்
குஷியின் கதை. 
நிசப்தம் குற்றமா? 
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களா?
தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?
நிசப்தம்.. தற்கொலை செய்து கொள்ளாமல்
நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. கதையின் முடிவு..
நிசப்தத்தின் வெற்றி. 

(2007 ல் வெளியான படம். நான் இப்போ தானே பார்த்தேன்.!)

Monday, June 25, 2018

எமர்ஜென்சி.. 43 ஆண்டுகளுக்கு முன்


எமர்ஜென்சி.. 43 ஆண்டுகள்

25 ஜூன் 1975 அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி 
எமெர்ஜென்சி - அறிவித்த நாள்.
அகில இந்திய வானொலியில் இந்திராகாந்திஇந்தியக்குடியரசு 
தலைவர் எமர்ஜென்சியை அறிவிக்கிறார். பொதுமக்கள் பதட்டமடைய தேவையில்லை" என்றார்.
"The President has declared a state of Emergency. 
There is no need to panic)
ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், வாஜ்பாயி
எல் கே அத்வானி, அசோக் மேத்தாஇன்னும் பலர் 
சிறையில் அடைக்கப்பட்டார்கள். 
ஆனாலும் எமெர்ஜென்சியில் இச்செய்தியை
இந்தியாவில் வாசிக்க முடியவில்லை.
. வழக்கம்போல பிபிசி தான் இச்செய்தியை முதன் முதலில்
ஜூன் 26, காலை 7.30 மணிக்கு அறிவித்தது.

எமெர்ஜென்சி ஏன் அறிவித்தார் என்பதைக் குறித்து
இன்று பலர் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
குஜராத்தில் எழுந்த மாணவர்களின் எழுச்சியும் போராட்டமும்,
பீகாரில் ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம்,
14 இலட்சம் இரயிலே தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள்
வைத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் நடத்திக் காட்டிய புகழ்பெற்ற
இரயில்வே நிறுத்தம், ராவ் பெரேலி தேர்தலில் இந்திராகாந்தியின்
வெற்றியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு..இறுதியாக
இந்திராகாந்திக்கு கோபமூட்டிய அன்றைய இரவு ராம்லீலா மைதானத்தில் நடந்தக் கூட்டம்..
 மொரார்ஜிதேசாயும் ஜெயபிரகாஷ் நாராயணனும் பேசிய
பேச்சு..

At this rally, JP gave a call to army 
and police not to follow the orders of 
Indira Gandhi government…..The police, army 
and the people were asked to follow the 
Constitution than Indira Gandhi.

மேற்கு வங்க முதல்வர் சித்தார்த் ஷங்கர் ராயிடம் தான்
முதன் முதலாக இது குறித்து பேசினார் இந்திரா.
 அவருடைய அமைச்சர்கள் யாரிடமும் இது பற்றி ஆலோசிக்கவில்லை!
அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்க நேரமில்லை என்று
குடியரசு தலைவரிடம் சொல்லிவிடலாம் என்று
 இருவரும் சேர்ந்து முடிவு செய்கிறார்கள்
இந்திராவின் வானொலி உரையை எழுதி முடித்து 
இந்திராவின் வீட்டை விட்டு வெளியில்
வரும்போது அதிகாலை 4 மணியைக் கடந்துவிட்டது.
ராய் அவர்களை இந்திரா காந்தி வீட்டு வாசலில் 
சந்திக்கும் ஓம் மேத்தா அவர்கள்
.. “..பத்திரிகைகளுக்கு மின்சாரம்
வழங்குவதை தடை செய்தல், நீதிமன்றங்களை மூடுதல்..
என்ன இது?”
இதெல்லாம் எங்கள் திட்டத்தில் இல்லை என்று 
ராய் பதில் சொல்கிறார்.. மீண்டும் இந்திராவை சந்திக்க காத்திருக்கிறார் ராய்.
 ஓம் மேத்தா தான் அறிந்த தகவலை அவரிடம் சொல்கிறார்.
பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்’.  என்று போட்டு உடைக்கிறார்.
மறு நாள் காலை 6 மணிக்கு அமைச்சரவையைக் கூட்டுகிறார் இந்திரா.
அவர்களுக்கு கூட்டத்தை அறிவித்தது காலை 5 மணிக்கு !
9 அமைச்சர்கள் டில்லியில் இல்லை. 8 அமைச்சர்களும் 5 இணை
அமைச்சர்களும் கலந்து கொண்ட கூட்டம். இந்திராகாந்தியின் அமைச்சரவைக்கு
எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டதை இந்திராகாந்தி சொல்கிறார்.
எந்த அமைச்சரும் வாயைத் திறக்கவே இல்லை.!!
ஒரே ஒரு அமைச்சர் மட்டும் மெல்லிய குரலில் கேட்ட கேள்வி
அந்த அறையின் மயான அமைதியைக் குலைத்தது.
பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்டார் 
'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?' 
 என்று.
வேறு எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல் இந்தியாவில்
இந்திராகாந்தியின் அமைச்சரவைக் கூட்டம் எமர்ஜென்சியை
ஏற்றுக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பின்.. இந்திராவையும் நெருக்கடி நிலை பிரகடனத்தையும்
பற்றிய விமர்சனங்கள் அவர் வாழும் காலத்திலேயே வந்தன.
அவருடைய மறுமொழி .. அவருடைய மொழியில்..
When I implied the Emergency Not Even a Dog breached

எமெர்ஜென்சி பத்திரிகைகளை ஊமையாக்கியது.
ஊடகங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உள்ளாகின.
எனக்குத் தெரிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தன் ஆசிரியர் 
பக்கத்தை எதுவும் அச்சிடமால் வெள்ளைத்தாளாக
வெளியிட்டது. இன்னொரு பத்திரிகை தாகூரின்
கவிதை வரிகளை
 "Where the mind is without fear, 
and the head is held high”
அச்சிட்டு வெளியிட்டது. 
பின்னணிப்பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களை
வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலி ஒளி பரப்ப
தடை செய்யப்பட்டிருந்தது !
Kissa Kursi Ka  - 1977

இந்தி திரைப்படம்.. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை பற்றியது.


தமிழ் நாட்டில் அன்று நடந்தது என்ன?
திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
திமுக தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ்க்கு அடைக்கலம் கொடுத்து
சென்னையில் தலைமறைவாக வைத்திருந்ததாக சொல்கிறார்கள்

கலை இலக்கிய துறையில் நெருக்கடி நிலை
குறித்து எவ்வித சலனமும்
தமிழகத்தில் இருந்ததாக தெரியவில்லை. 
(அப்படி எதாவது குறிப்பிட்டு சொல்லும் படியாக 
இருந்தால் சொல்லுங்கள் )

இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் ஏற்கனவே தமிழ் நாட்டில் 
செயல்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதாக
கலைஞர் கடிதம் எழுதினார். ஆனாலும் லும்1976 ஜனவரி 31 திமுக வின் பதவிக்காலம் முடிவதற்கு 6 வாரங்களுக்கு முன்பே திமுக அரசு கலைக்கப்பட்டது.
அதன் பின் நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள் 
முரசொலி செய்திகள்
மிகவும் முக்கியமானவை. அதிலும் குறிப்பாக 
குடும்பவிழாக்கள் புதிது புதிதாக
வரிசையாக உருவாக்கப்பட்டன
ஆம் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர்கள் 
மீண்டும் திருமணம் செய்வதும் 
ஏற்கனவே கட்டிய பழைய வீட்டுக்கு
வெள்ளை அடித்து புதுமனை புகுவிழா நடத்துவதும்
அந்த விழாக்களில் கலைஞர் கலந்து கொள்வதுமாக
 திமுக வின் செயல்பாடுகள் இருந்ததை
நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 
ஆனால் அதே கலைஞர் 1980 ல்  
சென்னை கடற்கரையில் அன்னை இந்திரா காந்தியை  மேடையில் வைத்துக் கொண்டு,.
 நேருவின் மகளே  வருகே... நிலையான ஆட்சி தருகஎன்றும் சொன்னது
மறந்துவிடவில்லை.
மிக முக்கியமான இன்னொரு செய்தி
எமர்ஜென்சிக்கு பெருமை சேர்த்த செய்தி
இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் இரயில்கள் பேருந்துகள்
எல்லாம் தாமதமின்றி சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருந்தனவாம்!

Saturday, June 23, 2018

ஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா?!!



தளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக 
இருந்து தொலைப்பதால் தான் அவருக்கு 
கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் 
அல்லாடும் நிலை ஏற்பட்டுவிட்டதாக
 கேரளா ஜோதிட சாம்பிராணிகள் சொன்னதை
அப்படியே நம்பி.. நம்பி.. 
இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று
சொல்கிறார்கள்.. 

தளபதி.. கோவிலுக்குள் நுழையவில்லை!
ஒரு மரியாதை நிமித்தமாக வழியில் போன காரை
கோவில் யானையுடன் அவர்கள் வழிமறித்ததால்
காரை நிறுத்தி பிரசாதத்தை மட்டும் வாங்கிக்கொண்டு
சர் ரென எங்கள் தளபதியின் கார் சென்றது 
என்று  சொல்லிப் பார்த்தாகிவிட்டது!!
..
ஶ்ரீரங்கத்திற்கு ஸ்டாலின் செல்வது 
இது ஒன்றும் முதல்முறை அல்ல!
அங்கேயே தங்கி அவர் தேர்தல் 
பிரச்சாரம் செய்திருக்கிறார்.
அப்போதெல்லாம் அந்தக் கோவில் 
வாசல் பக்கம் போவதைக் கூட தவிர்த்தவர் அவர்.
தற்போது
நான்கு நாட்களாக கோயிலுக்குள் 
சுக்கிர ப்ரீத்தி யாகம் 
நடைபெற்றது. யாகம் முடியும் நாள் சுக்கிரனுக்கு 
உகந்த வெள்ளிக்கிழமையாக இருக்கவே, 
இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடந்த 
திருமணத்துக்கு வந்தவர்
 கோயிலுக்குள் வராமல் ரங்கா ரங்கா 
கோபுரம் வரைக்கும் 
வர்ற மாதிரி வந்திட்டுப் போனதாகவும்
ஸ்ரீரங்கநாதருக்கு வெண்மை நிற வஸ்திரம் அளித்து 
இருபத்து ஐந்து பேருக்குத் தானம் கொடுத்ததாகவும்
அவா ஆத்து மாமிகளே சொல்லறா..

இந்தப் பாருங்கோ .. தளபதி..
நீங்களோ நானோ பெரியாரில்லை.
அப்படி இருக்கனும்னு யாரும் கட்டாயப்படுத்தவும்
முடியாது!
ஆனா..
உங்களுடைய  சுக்ர தோஷ பரிகாரத்திற்கு
அவாளுக்கு நீங்க தானம் செய்ததுதான் 
நேக்குப் பிடிக்கலை..!
இந்த மாதிரி செய்தி எதுவும் என் காதிலே விழுந்து
படுத்தற இம்சையிலிருந்து தப்பிக்கவே
இவ்வளவு தொலைவில் வந்து இருந்தா..
இங்கே வரை உங்க சுக்ர ப்ரீத்தி யாகத்தின்
புகை வர்றது.. 
இந்தப் பாருங்கோ..அடுத்த தேர்தலில் நீங்க ஜெயிச்சு
அமோகமா வெற்றி பெற்று முதல்வராகனும்னு தான்
நேக்கும் ஆசை. ஆனா பாருங்கோ..
இப்போ இந்த சுக்ர ப்ரீத்தியாகம் செய்ததால் தான்
நீங்க முதல்வராகிட்டேள்னு 
நானும் நம்ப வேண்டியது
வந்திடுடு டு டு டும்!!  அந்தப் பயம் தான் இப்போ..

சுக்ர மூல மந்திரம்..
ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம்  குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்ம்யஹ்ம்.

#திமுக_ஸ்டாலின்


Friday, June 22, 2018

MY BOOKS IN Amazon & Kindle




அச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில .
தற்போது மின்னூல்களாக ..
My books in amazon and kindle.
நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவிதை தொகுப்புகள்.
தனியறை, பெண்வழிபாடு.. இரு சிறுகதை தொகுப்புகள்
ஊமைத் தசும்புகள், செய்திகளின் அதிர்வலைகள்.. இரு கட்டுரை தொகுப்புகள்.. 
அமேசான் மற்றும் கிந்டில் வாசிப்பில்
என் அனுமதியுடன் தான்.



https://www.amazon.co.uk/Seithigalin-Athirvalaikal-Tamil-Puthiyamaadhavi-ebook/dp/B0711GPJK6


 மற்றபடி என் மொழியாக்க கவிதைகள் தொகுப்பு நூல்
கதவுகள் திறக்கும் வானம் ... என் அனுமதி இன்றி
கீழ்கண்ட தளத்தில் மின்னூலாக இருப்பது தெரியவந்துள்ளது.
m.dailyhunt.in/Ebooks/.../kathavukal-tirakkum-vanam-book-8326...
Translate this page
 Rating: 5 - ‎1 vote




Sunday, June 17, 2018

காலாவில் பயணித்த அப்பாக்கள்...

காலாவில் பயணித்த எம் அப்பாக்கள்
"நான் படிப்பின் மோஸ்தரில் என் அப்பாக்களை விட்டு
விலகினேன்.. காலம் செல்ல செல்ல இச்சமூகம் என்
அப்பாக்களின் உசரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறது!
காலாவை திரையில் பார்த்தேன். (Norwalk AMC IMAX )
நேற்றிரவு தூக்கம் வரவில்லை. காலாவின் வசனங்களில் மட்டுமல்ல
போராட்டங்களிலும் ரத்தங்களிலும் என் அப்பாக்கள் …
அவர்களின் முகம் என்னருகில் வந்தது. அவர்களின் சில பக்கங்களை
நானே புரட்டாமல் இருக்கவே நினைக்கிறேன். அந்தப் பக்கங்களை
காலா என்னைப் புரட்ட வைத்தது. திரையரங்கிலிருந்து வெளியில்
வரும்போது தலை வலிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கண்பதி உற்சவம்
கடைசி நாள் .. கையில் ஈரக்குலையை ஏந்திக்கொண்டு
 (ஈரக்குலை என் அம்மாவின் மொழி) இருக்கும் பெண்கள். 
யார் யாரை வெட்டிச் சாய்ப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது!
பெண்கள் அச்சத்துடன் விழித்திருப்பார்கள்.
விடிவதற்குள் அந்தச் செய்தியும் வந்து தொலைக்கும்.
இன்னார் கொலை செய்யப்பட்டார் என்று.
கலவரங்கள் கலவரங்கள் கலவரங்கள்..
எங்கள் வீட்டில் பெரிய சிலம்பு கம்பம் 
நாங்கள் பெரியவர்களாக வளரும் வரை கபோடின் 
மூலையில் சாய்ந்திருக்கும்.. அது எதற்காக என்று
பல  நாட்கள் நான் அறிந்ததில்லை.
ஒரு நாள் அந்தக் கம்பை எடுத்துக் கொண்டு
கை பனியனுடன் ஓடிய என் அப்பா .. 
அதுவரை நான் பார்த்திராத அப்பா. 
அப்பாவுக்கு சிலம்பம் தெரியும் என்பதும்
வர்ண அடிகள் தெரியும் என்பதும் 
அவருக்கு சண்டியர் என்று ஒரு பெயருண்டு என்பதும் 
அதன் பின் அறிந்தக் கதை.
பிரிட்டிஷ்காரன் வங்கியில் வேலை. 
அதற்குரிய மிடுக்கான உடை. 7 மொழிகளைச் சரளமாகப் பேசும் அப்பா... 
இப்படியாகவே இருந்த அப்பாவை அவர்கள் தெருவில் இறங்கிச்
சண்டைப் போட அனுமதித்ததில்லை. 
நீங்க எதுக்கு அண்ணே.. இங்கேல்லாம்? நாங்க பார்த்துப்போம்..
என்பார்கள். கருக்கலில் அப்பாவை வந்து சந்திப்பார்கள்.
இதெல்லாம் அப்பாவின் அரசியலுக்கும் அப்பாற்பட்ட செயல்பாடுகள்.
அப்பாவின் தம்பி பி.எஸ்.கோவிந்தசாமி சேட் .. 
என் சித்தப்பா தான் அன்றைய கள நாயகன்.
நூறு பேரு கையில் கம்பு அரிவாளுடன் வந்தாலும் 
அதே புன்னகையில் .. 
ஒரு கையில் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு 
“ஏலே.. எங்கல வந்து காட்டறீங்க!”
என்று நிற்பார் பாருங்கள்.. அவர் தான் அன்றைக்கு குட்டிவாடி
 பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதவன்.. 
எங்களுக்கு சொந்த ஊர் பத்தமடை.
அப்பா சிவப்பு சித்தாந்தம் படித்தவர் . கறுப்புச்சட்டைப் போடாத பெரியாரிஷ்ட்.
கறுப்பு சிவப்புக் கொடியை (திமுக )மும்பையில் ஏற்றியவர்.
சித்தப்பா முழுக்க முழுக்க நீல வண்ணத்தில் .. குடியரசுக் கட்சி தலைவர்.
தாராவி கணேசர்கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். ..
எஸ்.கே.இராமசாமி.. (பத்தமடை இவர் தாய்மாமா ஊர். இவர் தம்பிகள் தங்கை
படித்ததெல்லாம் பத்தமடை ஸ்கூலில் தான்)ர்இவரும் என் உறவினர். இன்னொரு சித்தப்பா முறை.
இவர் தாதா தான். இவருடைய முதல் மனைவி இறந்தவுடன் அன்றைக்கு இவர்
குரூப்பில் இருந்த 500 பேருக்கும் மேலான அடியாட்கள் மொட்டைப் போட்டுக்கொண்டார்கள்.
என் சித்தியின் கணவரும் அதில் ஒருவர். “எங்களுக்கெல்லாம் அன்னமிட்ட அன்னலட்சுமி
போயிட்டாளே “ என்று அவர் தண்ணி அடிச்சிட்டு வந்து எங்க அம்மாவிடம் அழுதது
கதைகள்.. .. அப்படியே பால்தாக்கரேயின் முகம் .. நிழலாக கூடவே பயணிக்கிறது.
உற்பத்தி சார்ந்த சமூகம் உருவாகி வந்தக் காலக்கட்டத்தில் சொத்துக்களையும்
அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் ஏன் தான் சம்பாதித்த எதையுமே
தன் வாரிசுகளுக்கு என்று ஒதுக்கத்தெரியாத என் அப்பாக்கள்
எல்லாவற்றையும் தன்னுடனும் தன்னுடன் வாழ்ந்த சமூகத்திற்கும் என்று
வாழ்ந்த என் அப்பாக்கள்..
என் அப்பாக்கள் நல்லவர்கள்.வல்லவர்கள். 
அவர்கள் போராட்டங்களை கலவரங்களை
அடிதடிகளை நான் என் படிப்பின் மோஸ்தரில் 
புரிந்து கொள்ள மறுத்தேன்.
அவர்களை விட்டு நான் விலகி விலகிப் போனேன்.
காலம் செல்ல செல்ல சமூகம் எனக்கு அவர்களின் உசரங்களை
உணர்த்திக் கொண்டே இருக்கிறது..

இன்று நான் தற்போது இருக்கும் அமெரிக்க மண்ணில் “அப்பாக்களின் நாள்”
(17th June third Sunday).. 
தலையைத் தூக்கி அப்பாக்களைப் பார்க்கிறேன்.
How to be Black .. book ..
Baratunde Thurston of Jack & Jill Politics and the Onion 
என் மடியில் தன் கனமான பக்கங்களுடன்.
கண்களில் கண்ணீருடன்.. மெல்ல அந்தப் புத்தகத்தை எடுத்து
என் மார்புடன் அணைத்துக் கொள்கிறேன்.
காலா … பா. இரஞ்சித் தின் படம்.
இரஞ்சித்திற்கும் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும்
என் அன்பு தம்பி மகிழ் நன், தோழமை ஆதவன் தீட்சண்யா..
மற்றும் திரைக்களத்தில் களமாடிய என் பிள்ளைகள்..
அனைவருக்கும் என் வாழ்த்துகள்.