Tuesday, March 26, 2013

திருமண அழைப்பிதழ்மேற்கண்ட திருமண  அழைப்பிதழை இன்றைய தினகரன்\மும்பை பதிப்பு
நாளிதழின் கடைசிப் பக்கத்தில் பார்த்தேன். நானும் ஒரு மும்பை வாசியாக
இருப்பதால் உங்கள்அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள
\விரும்பி அழைப்பது என் கடமையாகிவிட்டது.

வருக வருக அனைவரும் வருக.

இத்திருமண அழைப்பிதழில் குடும்பத்தில் மூத்தவன் என்கிற
முறையில் மூத்த சகோதரனின் பெயரை தங்கள் நல்வரவை
விரும்பும் என்றாவது அச்சிட்டிருக்கலாமே என்று
உங்களில் பலர் யோசிப்பது எனக்குப் புரிகிறது.
எனக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

தலைவரிடம் கேட்டால் தனக்கு எதுவுமே தெரியாது என்பார்.

எல்லாம் பக்தரடித் தொண்டர்களின் வேலை என்று அறிக்கைவிடுவார்.
.
யார் பெயரைப் போடலாம், போடக்கூடாது என்பதை
பொதுக்குழு தீர்மானிக்கும் என்பார்.

பாவம் மூத்தவன்! என்ன செய்வாரோ தெரியவில்லை,
தலவலி, வயத்தவலி என்று ஏதாவது காரணம் சொல்லி
நிகழ்வுக்கு வராமல் இருப்பதைவிட வேறு ஏதாவது
வழி இருக்கிறதா என்ன?

இச்செய்தியை சமகால அரசியல் நிகழ்வுகளுடன்
தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.Wednesday, March 20, 2013

இலண்டன் சர்ச்சில் இசுலாமியர் தொழுகை

ஸ்காட்லாந்தில் அபிர்டீன் பகுதியில் இருக்கும் செயின்ட் ஜாண்
ஆலயமும் சையத் ஷா முஸ்தபா ஜெம் மஜித் பள்ளிவாசலும்
அருகருகே இருந்தன. பள்ளிவாசல் சிறிதாக இருந்ததால்
தொழுகை நடத்தும் இசுலாமியர்கள் திறந்தவெளியில்
உட்கார்ந்து  தொழுகை நடத்தினார்கள்.
பனிப்பொழியும் நேரம், உறைகள் அணியாத கைகள்,
குளிரில் நடுங்கும் கால்களுடன் அந்த இசுலாமிய சகோதரர்கள்
திறந்த வெளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை
நடத்துவதை எல்லோரையும் போல வேடிக்கைப் பார்க்கவில்லை
ஐசக் பூபாலன்.ஐசக் பூபாலன்  செவிலியர் வேலைக்குப் படித்தவர். இலண்டனில்\
கிறித்தவ ஆலயத்தில் போதகராக இருக்கிறார். சம்பந்தப்பட்ட
ஆலய  நிர்வாகத்தினரிடம் முறையாகப் பேசி வெள்ளிக்கிழமைகளில்
சர்ச்சில் எதுவும் நடப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி  அனுமதி வாங்கினார்
வெள்ளிக்கிழமைகளில் இசுலாமியர்கள் சர்ச்சுக்குள் வந்து ஐந்து முறை
தங்கள் தொழுகையை நடத்தலாம் என்றார்.. ஆரம்பத்தில் இசுலாமியர்களிடம்
தயக்கம் இருந்ததாம். ஒன்றிரண்டு பேராக வர ஆரம்பித்திருக்கிறார்கள்,
இப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இசுலாமியர்களின்
தொழுகை இடமாக சர்ச் .

ஐசக் பூபாலன் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது
நமக்குப் பெருமை தரும் செய்தி.


(நன்றி: டைம்ஸ் ஆஃப்  இந்தியா 21/3/13 )

காட்சி மாற்றங்கள்
இடையில் நடந்தது என்ன?

காட்சிகளில் மாற்றம்.
Thursday, March 7, 2013

யாருக்குப் பெண்கள் தினம்?

மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி..
பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில்
ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை
என்கிற வரலாற்றை பெண்கள் தினம் கொண்டாடும் பலர்
மறந்து போயிருக்கலாம்.
ஆனால் எங்களால் மறக்க முடியவில்லை.
ஏன் தெரியுமா...?
நியூயார்க்கின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்த
உரிமையைக் கூட ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கறுப்புபெண்கள்
பெற்றிருக்கவில்லை.

அன்றைக்கு பெண்கள் உரிமைகாக நடந்த அந்தப் பேரணியாகட்டும்,
அங்கே ஒலித்த பெண்களின் குரலிலாகட்டும் ,
தன்னை ஒத்த சக மனுஷியான ஆப்பிரிக்க பெண்ணுக்காக
எந்தக் குரலும் இல்லை.

இந்தக் கதை ஏதொ ஆப்பிரிக்க அமெரிக்க இன வரலாற்றின் பக்கம் மட்டுமல்ல.,
இதோ இந்தியாவின் ..சாதியக் கொடூரத்தில் எவராலும் எப்போதுமே
எழுதப்படாத இந்தியப் பெண்களின் கதையும் தான்.

இந்திய இராணுவமே எங்கள் பெண்களை வல்லாங்கு செய்கிறது.
காஷ்மீரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள்
இந்திய எல்லைக் காவல் படையால் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாலியல் வன்புணர்வு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எங்கள் அரசியல்
கட்சிகள் வேட்பாளர்களாக்கி நாடாளுமன்றம் அனுப்புகின்றன.
எங்கள் தலைநகர் டில்லியில்  ஒரு நாளுக்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.
பெற்ற மகளைத் தாயாக்கும் ஆண்மிருகஙக்ள் எங்களுடன் வாழ்கின்றன.
ஒருதலைக் காதல் கொண்டு ஏற்க மறுக்கும் பெண்களை ஆசிட் ஊற்றி
தன் காதல் பழியைத் தீர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எங்கள்
சமூகத்தில் நடமாடுகிறார்கள்.
காதலும் வீரமும் எங்கள் பண்பாடு என்று கொண்டாடிய எங்கள் சமூகத்தில்
சாதிமறுப்பு திருமணம் செய்ய, அதிலும் தலித் ஆண்களைக் காதலிப்பதும்  திருமணம் செய்து கொள்வதும் தங்கள் சுயசாதிப் பெருமைக்கு இழுக்கு
என்று கொக்கரிக்கும் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எங்கள்
மேடைகளில் உலா வருகிறார்கள்.
ஊமைகாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள்.
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம் 


எங்கள் சாலைகளில் பெருக்கி சுத்தம் செய்யும் அவள்
ஓடும் புகைவண்டியில் நெருக்கியடித்து நுழைந்து
காதணியும் நைட்டியும் விற்றுப்பிழைக்கும் அவள்
சிவப்பு விளக்குப் பகுதியில் பகல் நேரத்தில்
பள்ளிக்கூடம் போய் இரவு நேரத்தில்
கட்டிலுக்கடியில் ஓசையின்றி தூங்கும் மகள்
இந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம். 

பின் யாருக்குத்தான் இந்தப் பெண்கள் தினம்?பெப்சி கம்பேனியில் இந்திரா நொயி
ஐ சி ஐ சி ஐ வங்கியில் CEO சந்தன் கோச்சர்
அப்பலோ மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் பிரீத்தா ரெட்டி
ஜே பி முர்கன் இந்தியாவின் CEO கல்பனா மூர்பாரியா
இந்திய பேரரசின் எல்லையில்லா அதிகாரம் கொண்ட சோனியா காந்தி
தமிழகத்தின் ஜெயலலிதா
மம்தா ...

இவர்களுக்கும் இவர்களை ஒத்த கார்ப்பரேட் மற்றும் அரசியல் தலைவர்களின்
பெரிய வீடு சின்னவீடுகளுக்கும் அவர்களின் மகள், மருமகள்கள் மற்றும் பேத்திமார்களுக்கும் வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்களுக்கும்
மார்ச் 8, பெண்கள் தின கொண்டாட்டம் உண்டு, உண்டு, உண்டு.Tuesday, March 5, 2013

அந்தக் கதை

மராத்தி கவிஞர் கவிதா மகாஜன் எழுதிய  the story
கவிதையின் தமிழாக்கம்.


அவள்
சூரிய வெளிச்சத்தை
உணர்ந்த தருணங்களின் கதையிது.

மண்ணில் அந்த வீடு
விரைவாகவும் உறுதியாகவும்
எழுந்து நின்றது.
கதவுகளும் சன்னல்களும
நம்பமுடியாமல்
வாய்ப்பிளந்து நின்றன.
சுவர்கள் பெருமூச்சுவிட்டபடியே
அவசரமாகக் கண்களை மூடும்போது
அவள்
பிரகாசமான 
சூரிய வெளிச்சத்துண்டுகளை
தன் நாக்கில் வைத்துக் கொண்டாள்.

தலைவன் அவளிடம் கேட்டான்:
உன் வசீகரமான மேனி
சிவந்த உதடுகள்
குளிர்ந்த விழிகள்
எல்லாம் என்னவாகும்?

கண்களில் மின்னும் ஆசைகளுடன்
கைகளைப் பொன்னூஞ்சலாக்கி
அவன் நிழல்
அவளை நெருங்கும் ஆசையில்..
ஆனால் அவளோ
சிரித்துக் கொண்டே இருந்தாள்
பொன்னிறமாக ஒளிவீசும்
சூரிய வெளிச்சத்தை
விடாமல் பிடித்துக் கொண்டே.


Friday, March 1, 2013

நேற்று அவர்கள் அறிவித்தார்கள்..நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
--------------------------------------------------------------அர்ஜூன் காம்ப்ளே

சொர்க்கத்து மலர்களை முகர்ந்து பார்ப்பதில்
மும்முரமாக இருந்தோம் நாங்கள்
அவர்கள் வந்து எங்கள் பாதங்களை
பூமிக்கடியில் புதைத்தார்கள்
மலரின் மணங்களைக் களவாடிச் சென்றார்கள்
மாளிகை எழுப்பினார்கள்:

மழைப் பொழிந்த போது
தூய்மையான தண்ணீரைப் பருகினார்கள்
புதையுண்ட எங்கள் பாதங்களிலிருந்து
பூதியபூமி மேலெழுந்தது.
அதேபூமியில்
பல்வேறு வண்ணங்களில்
பலதரப்பட்ட மலர்களைப் பயிரிட்டார்கள்
பல்வேறு பரிசோதனைகளைச் செய்தார்கள்
மலர்களைப் பறிக்கும்போது
எங்கள் கால்களை அழுத்தி மிதித்தார்கள்
தெரிந்தோ தெரியாமலோ

அதன்பின் அவர்கள் ஒரேவண்ணத்தை
மலர்களில் ஒட்டினார்கள்
அதே மலர்களால் தங்கள் தேர்களை அலங்கரித்தார்கள்
அதே மலர்களால் தங்கள் போர்களைக் கொண்டாடினார்கள்

சிலகாலம் மழைவரவில்லை
தேர்கூட சிறைக்கூடத்தில்'
சவச்சீலைகள் கூட தென்படவில்லை
அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்
அவர்களின் தலைவர்
எங்கள் கல்லறையைத் தோண்டினார்
அதன்பின் அவர்கள் முடிவுசெய்தார்கள்
கள்ளிச்செடிகளை பயிரிடுவதென்று.
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
கள்ளிச்செடிகளைப் பிடுங்கி எறிவதாக
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
எங்கள் பாதங்களை விடுவிப்பதாக'
நேற்று அவர்கள் அறிவித்தார்கள்
நாங்கள் பருகுவதற்கு சிறுதுளி தண்ணீர் தருவதென.


(மராத்தி கவிதையின் தமிழ் மொழியாக்கம்: புதியமாதவி
உதவி: அர்ஜூன் டாங்க்ளே)