Thursday, December 29, 2016

அம்மா - சின்னம்மா அரசியல்சசிகலா  நடராஜன் நல்லவரா கெட்டவரா
எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..!)
ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர்
தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்புகள்  அரசியலில் இல்லை.
எதிரணிக்கு ஈடு கொடுக்கும் சர்வ வல்லமைப் படைத்தவர்
என்பதை மட்டும் சொல்லமுடியும். (அப்படிப் போடு  )

இன்றைய அரசியல் களத்தில் மகாத்மா காந்தி  மற்றும் பெருந்தலைவர்
காமராஜ் போன்றவர்கள் தலைவர்களாக வந்தால்
அரைநாள் கூட தாக்குப்பிடித்து நிற்க முடியுமா என்ன?

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆயுதங்களை மட்டுமல்ல
தலைமையைக் கூட எதிரணியின் தகுதிகள் தான் தீர்மானிக்கின்றன.
அப்படிப் பார்த்தால் சபாஷ்..
அதிமுக வினர்  இம்முறை ஜெயித்துவிட்டார்கள்.

இதில் தேவையில்லாமல் அடிவாங்கி இரத்தம் சொட்ட சொட்ட
போஸ் கொடுத்து சிலர் ஹீரோவாகிவிடலாம் என்று படம் பிடித்தது
ஏதோ காமெடி மாதிரி தான் இருந்தது.

எம் ஜி ஆர் மறைவுக்குப் பின் இதே அதிமுக வில் அதிகார மாற்றம்
எப்படி நடந்தது என்பதைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்
இன்று நடந்திருக்கும் அதிகார மாற்றமும் அமைதியாக அதைச்
செய்து காட்டி இருக்கும் விதமும் கவனிப்புக்குரியது.
வட்ட மாவட்ட பொறுப்புகளுக்கே அடி தடியில் இறங்கும் திராவிட அரசியலின் இதுவும் ஒரு திருப்புமுனைதான்..

புத்திசாலிகள் தான் காரண காரியங்களை வைத்துக்கொண்டு விவாதங்கள்
நடத்தி நடத்தி நடத்தி அதையே இன்னொரு விவாதமாக்கி..
விவாதங்களுக்குள் விவாதமாகி... எதை விவாதிக்க வந்தோம் என்பதையும்
மறந்து ... இப்படியாக தொடரும் விவாதக்களத்தைப் பற்றி எவ்வித கவலையும்
இன்றி... இப்படித்தான்யா நாங்க.. இது எங்க வீட்டு காரியம்.. எங்களுக்குத் தெரியும்னு
சின்னம்மா... நீங்க தான் எங்களை வழிநடத்த வேண்டும் என்று அழைத்து வந்து அமர வைத்துவிட்டார்கள்.
காங்கிரசு கட்சியில் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு சோனியா காந்தியை அழைத்து அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எவ்விதமான உறுத்தலுமின்றி ஏற்றுக்கொண்டவர்கள் நாம்.
தமிழகத்தில் திமுக அரசியலில் நாலே நாலு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
இருந்தால் கூட  தன் மகள் மகன் பேரன் உறவுக்களுக்கு சீட் போட்டு வைக்கும்
அரசியலையும் அமைதியாக ஏற்றுக்கொண்டவர்கள் நாம்.
அதை எல்லாம் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட  அரசியல்
 இதையும் ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 எதை விதைத்தோமோ அதைத்தானே
அறுவடை செய்ய முடியும்?

Thursday, December 22, 2016

மோடி மாயாஜால வித்தைகள்..


ஆடுபாம்பே... விளையாடு பாம்பே..
ஆடுபாம்பே... ஆடு டு டு  பாம் ப்ப்பே...


நல்லதே நடக்கிறது.. ஆனால் நல்லதற்கல்ல..

தமிழகத்தின் தலைமைச் செயலர் அலுவலகத்தில் பலகோடி ரூபாய், ஆவணங்கள்..எவருக்கும் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தமிழருக்கே பெரும் தலைகுனிவு என்று எதிர்க்கட்சி தலைவர் திரு. க. ஸ்டாலின் அவர்கள்  அதிகமாகவே வருத்தப்பட்டிருப்பது
அறிந்து தனிப்பட்ட முறையில் வருத்தம் ஏற்பட்டது.
 உண்மையில் அவர் வருத்தப்பட்டிருக்க கூடாது.
 சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்...
 நல்லவேளை இத்தருணத்தில் திமுக  ஆட்சியில்
இல்லை என்பதற்காக. ஆனால் வழக்கம்போல அவர் அவசரப்பட்டுவிடுகிறார். என்ன செய்வது?

தமிழகத்தின் ஊழலை ஒழித்துக்கட்ட பாரதப்பிரதமர் மோதியின் நடவடிக்கை என்று ஊடகங்கள் வேண்டுமானால் இக்காட்சிகளைக் காட்டி தங்கள் ரேட்டிங்கை அதிகப்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் மோதியின் நோக்கம் அதுவல்ல. எங்கெல்லாம் பிஜேபி வீக்காக இருக்கிறதோ அங்கெல்லாம் மோதி மஸ்தானின் இந்திர ஜால வித்தைகளாக இவை
அரங்கேறுகின்றன. இப்படி சொல்லவதற்காக தமிழகத்தில் ஊழல் நடக்கவில்லை என்றோ அல்லது தமிழக அரசியல் வாதிகள் கறைப் படியாதவர்கள் என்றோ பொருளல்ல.
இம்மாதிரி காட்சிகள் அரங்கேறும் போதெல்லாம் சில ப்ளாஷ்பேக் காட்சிகளும் சேர்ந்தே ஓடுகின்றன.
இரண்டு காட்சிகளையும் பார்க்கும் போது மட்டுமே
மோடி மஸ்தான் காட்டும் வித்தையின் அபாயம் புரிகிறது
.
காட்சி 1)
மோடி அவர்கள் குஜராத்தில் முதல்வராக இருந்தப் போது
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுயைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், இதன் வர்த்தக மதிப்பு 40 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமானதென்றும், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் எரிசக்தி தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருப்பதாகவும், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அப்படுகையில் 2007-இல்எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடுமென்றும்” அதிரடியாக அறிவித்தார்.
இன்றுவரை ஒரு கன அடி எரிவாயு கூட எடுக்கவில்லை .. ஆனால் 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடியவுள்ள ஏழே ஆண்டுகளில், 19,720 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக உருவிக் கொண்டுவிட்டது.

காட்சி 2)
2014- 15 நிதியாண்டில் பிஜேபி வளர்ச்சி நிதி அல்லது டொனேஷன் என்ற பெயரில்  வாங்கி இருக்கும் தொகை : 437. 35 கோடி. மற்ற கட்சிகளின் வசூல் தொகையுடன் ஒப்பிடும் போது பலமடங்கு அதிகம். அதிலும் இவர்களுக்கு இத்தொகையைக் கொடுத்த மிக முக்கியமான நிறுவனம் சத்தியா எலெக்டோரல் டிரஸ்ட்.
(Satya Electoral Trust) 25 Oct 2013 ல் டில்லிடில் திடீரென முளைத்த அரசு
சார்பில்லாத நிறுவனம் இது.
 இவர்களின் வேலை என்ன என்று ஆராய்ந்துப் பார்த்தால்
அரசியல் கட்சிகளுக்கு டொனெஷன் கொடுப்பதுதான் மிக முக்கியமான வேலையாக தெரிகிறது. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் வருகிறது?
இது என்ன வித்தை ? என்று ,மோடி மஸ்தான் தான் சொல்ல வேண்டும்.

அனைத்து மாநிலக் கட்சிகளையும் கறுப்பு பண ஒழிப்பு என்று சொல்லிக்கொண்டு கழுத்துக்கு மேல் அதிகாரத்தின் கத்திகளைத் தொங்கவிட்டிருக்கிறார்.
இதிலிருந்து எவரும் தப்ப முடியாது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது
ஆகப்பெரும் செயலாக தெரிகிறது. ஆனால் வலை விரித்திருப்பது ஊழல்
ஒழிப்புக்கு மட்டுமல்ல.. ஊழலை செய்கின்ற ஒட்டு மொத்த அதிகாரத்தையும் கூட தனக்கானதாகவே வைத்துக்கொண்டுவிட்டால் ஆபத்தில்லை என்று
நினைக்கும் அதிகாரத்தின் வேட்கை இது.

அரசியலில் மோடி மஸ்தான்  வித்தைகள் காட்ட நினைக்கும்
அதி புத்திசாலித்தனம் ரொம்பவும் ஆபத்தானது.


Monday, December 19, 2016

பெண்ணுடல் பேராயுதம்

வி கேன் புக்ஸ் தொலைப்பேசி / வாட்ஸ்-அப் - +91 9940448599 தொடர்பு கொண்டு புத்தகங்களை வி.பிபியில் பெறலாம் அல்லது இணையத்தில் வாங்க....http://www.wecanshopping.com/.../%E0%AE%AA%E0%AF%86%E0%AE...


Wednesday, December 14, 2016

வர்தா புயலின் பின் விளைவுகள்
6000 மரங்கள் சரிந்திருக்கின்றன.
இதன் இழப்பு ரொம்பவும் அபாயகரமானது.
கடந்த மாதம் இந்தியத் தலைநகர் டில்லியில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கும் அளவுக்கு தலைநகரில் மாசும் தூசியும் . கிட்டத்தட்ட ஒர் அவசரநிலை கால நடவடிக்கைக்கு ஒத்ததாக இருந்தது அப்போதைய நிலை. பல ஆண்டுகளாகவே டில்லியின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு தான்
டில்லி வாழ் மக்களின் மருத்துவச்செலவு ஓராண்டில் 2450 கோடி அதிகரித்திருக்கிறது!
சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் ஆகப்பெரும் சக்தி மரம் மட்டுமே. காற்றில் கலக்கும் மாசைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுத்து நிறுத்தி ஒரு சமநிலையை எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மரம் ஓராண்டிற்கு சற்றொப்ப 100 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு மனிதனுக்கு சற்றொப்ப 740 கிலோ ஆக்ஸிஜன் ஓராண்டுக்கு
தேவைப்படுகிறது.
அதாவது ஒரு மனிதனுக்குத் தேவை குறைந்தது 6 மரங்கள் !
 இந்த விவரங்களை அறியும்போது விழுந்துவிட்ட
 6000 மரங்களும் அதன் விளைவுகளும் நாம் நினைப்பது போல
 அவ்வளவு சாதாரணமானதல்ல.
ஒவ்வொருவரும் மரம் நடுவோம்.
நம் எதிர்கால சந்ததியினருக்கு இந்த மண்ணை
அவர்கள் உயிர்வாழ தகுதியுள்ளதாக காப்பாற்ற வேண்டியது
 அரசின் கடமை மட்டுமல்ல,
ஒவ்வொரு தனிமனிதனின் கடமையும் கூட.Sunday, December 11, 2016

மரணமும் அதிகார மாற்றங்களும்


பிஜேபியுடன் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் அவர்களின் வெளிப்படைத்தன்மையான அதிகார மாற்றமும்
அது செயல்படும் விதமும் அதற்கான கட்டுக்கோப்பும் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தப்போது அவர் நல்லவர்,,
அணுகுண்டு வெடித்து இந்தியாவை வல்லரசாக்கிய வல்லவர், கவிஞர்,கூட்டணிக்கட்சிகளை மதிப்பவர்... 
இத்தியாதி அவர் மீது விழுந்த புகழாரங்கள் பல உண்டு. 
இவற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.
 ஆனால் அவருடைய உடல்நிலை குறித்து அவர்கள்
 வெளிப்படையாக பேசினார்கள். அவருக்குப் பின்
இப்போதைய பிரதமர் நரேந்திரமோதியை கட்சி முன்னிறுத்தியது
. இப்படியாக
அதிகார மாற்றம் என்பது ஒரு கட்டுக்கோப்பாக
 பிம்ப வழிபாடுகளைக் கடந்ததாக தொடர்கிறது. 
வாஜ்பாய் அவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் இருந்து
 விலக்கப்பட்டதற்கும் சங்க்பரிவார் அதிகார மையத்திற்குமான 
உட்பூசல் காரணங்கள் இருந்தாலும்
இந்த அதிகார மாற்றத்தை இவ்வளவு வெளிப்படையாக 
இந்தியாவில் இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரசோ 
அல்லது பிற மாநில கட்சிகளோ செய்வதில்லை என்ற யதார்த்த நிலையுடன் ஒப்பிடும்போது ..
 மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கிறது.
காங்கிரசிலும் சரி, பிற மாநிலக் கட்சிகளிலும் சரி
அதிகார மாற்றம் என்பதை மரணம் மட்டுமே தீர்மானிக்கும்.. அரண்மனை வாரிசுகளுக்கு மட்டுமே அரியணை உரிமை என்ற புரிதலுடன்.
(கம்யூனிஸ்ட் கட்சியினர் கோபித்துக் கொள்:ளக்கூடாது. அவர்கள் இப்போது ஆட்டத்தில்
இல்லை. ரெஸ்ட் ரூமில் இருக்கும் என் தோழர்களை தொந்தரவு செய்யாதீர்கள்!)

Thursday, December 8, 2016

பகுத்தறிவின் பிம்ப வழிபாடுகள்

Image result for காந்தி சமாதி
இந்தியாவின் தலைநகரம் டில்லி கல்லறைகளின் நகரம்.
மன்னராட்சி காலத்தின் அடையாளமாய் முகலாய சாம்ராஜ்யத்தின் அரசர்களின் கல்லறைகள் டில்லியைச் சுற்றி இருக்கின்றன. .
அக்கல்லறைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத அளவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டின் மக்களாட்சி தந்த
தலைவர்களின் சமாதிகள்.. டில்லி" ராஜ் கட் " சுற்றி. நம் தலைநகரின் 245 ஏக்கர் நம் தலைவர்களின் சமாதிகள் தான் ஆக்கிரமித்திருக்கின்றன.
இப்படியே போனால் பாராளுமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் எங்கே வைத்திருப்பது என்ற அச்சத்தில் நம் அரசு விழித்துக்கொண்டது. அதனால்
தற்போது எந்த ஒரு தேசியத் தலைவரின் மறைவுக்கும் தனி இடம் ஒதுக்கப்போவதில்லை என்றும் தேசியத் தலைவர்களின் இறுதிச்சடங்கை மறைந்த ஜனாதிபதி ஜெயில்சிங் கல்லறைத் தோட்டத்தில் நடத்துவது என்பதை அமுலுக்கு கொண்டுவந்திருப்பதாக
அறிவித்திருக்கிறார்கள்.
*
"நான் இறந்தப் பிறகு எனக்காக சிலை எழுப்பப்போகும் அன்பர்களே..
உங்களை ஒன்று கேட்கிறேன். யாருக்கு வேண்டும் சிலை?
உங்களை வேண்டுவதெல்லாம் இதுதான். தெய்வம் இல்லை என்று கூறிவந்த என்னைத் தெய்வமாக்கி இழிவுப் படுத்தாதீர்கள்"
-சிலிக் கவிஞன் பாப்லோ நெருடா.
**
மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர்.
அவரது மறைவுக்கு பின்னர் அங்குள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களுக்கு அவரது பெயர் சூட்டும் முயற்சியில் மக்கள் ஈடுபடக்கூடும் என்பதால்
‘‘எனது சகோதரர், தான் இறந்த பிறகு தனது பெயர் எந்தவொரு நிறுவனத்துக்கும், தெருவுக்கும், பூங்காவுக்கும் அல்லது இன்னபிற இடங்களுக்கும் சூட்டப்படுவதை விரும்பவில்லை. எனவே அவருடைய பெயரை சூட்டுவதற்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும்’’ என்று இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ சொன்னதாக
அண்மையில் வாசித்த செய்தி நினைவுக்கு வருகிறது.
***
உலகிலேயே மிக அழகான கடற்கரைகளில் நம் சென்னையின் மரீனா கடற்கரையும் ஒன்று.
இந்தியாவின் மிக நீளமான கடற்கரையும் கூட. அதுவும் பாறைகள் நிறைந்த எம் மும்பை கடற்கரை போன்றதல்ல மரீனா கடற்கரை. அழகான மணற்பாங்கான
இயற்கையின் கொடை மரீனா பீச். .
***
தமிழ்ச் சமூகத்தில் தெய்வ வழிபாடு... தனிமனித வழிபாட்டின் வரலாறுதான்.
அதைப் பகுத்தறிவுடன் அணுகி சமூக உளவியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய திராவிட இயக்கம்... தமிழ்ச் சமூகத்தில் தலைவர்களின் துதிபாடல்களையும்
தனி மனித வழிபாடுகளையும் தலைமையின் பிம்ப வழிபாடுகளையும் வளர்த்தெடுத்ததில் முன்னணியில் இருந்தது.
பொதுவுடமை பேசியவர்களும் சரி, காந்தியம் பேசியவர்களும் சரி.. இந்த தனிமனித வழிபாட்டுகளின் கோஷத்தில் மயங்கி அவர்களே கவியரங்க துதுபாடிகளாக மாறிப்போன அவலம் நடந்தது. எல்லாம் விருதுகளுக்காகவும் அங்கீகாரங்களுக்காகவும் என்பதையும் தாண்டி இருத்தலின் அடையாளமாகவும் ஆகிப்போன அவலம் நடந்தது. நடக்கிறது.. !
**
#"பகுத்தறிவு பேசிய பராசகதி
அண்ணாமலையாகி ஆருடம் சொன்னது
நடந்துவிட்டது... சுபம் . "#

Sunday, December 4, 2016

பெண்வழிபாடு சிறுகதை தொகுப்பு விமர்சனம்.


தலைப்பு-புதியமாதவியின் பெண்வழிபாடு, வளவ.துரையன் ; thalaippu_penvazhibaadu_puthiyamathavi_valavan_thuraiyan

புதிய மாதவியின் பெண்வழிபாடு:

சிந்தனையைததோற்றுவிக்கும் சிறுகதைத்தொகுப்பு

  சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
 மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி புதிய இலக்கியத்தில் முதன்மையான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை,  திறனாய்வு எனப் பல வகையான தளங்களில் இயங்கி வருபவர்.  ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
  பெண் தலைமை தாங்கும் மன்பதை மறைந்து ஆணை முதலாகக் கொண்ட மன்பதை என்று உருவாகத் தொடங்கியதோ அன்றே பெண்ணடிமையாகும் சூழல் தோன்றத் தொடங்கிவிட்டது எனலாம். என்னதான் பெண் கல்வியில் முன்னேறி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தன் காலில் நிற்கும் அளவிற்குப் பொருளாதாரத்தில் உயர்ந்து நின்றாலும் அவள் வீட்டிலும் வெளியிலும் ஒரு போகப் பொருளாக, ஆணாதிக்கத்திற்கு அடிமைப்பட வேண்டியவளாகவே இருக்கிறாள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
‘பெண்வழிபாடு’ எனும் முதல் கதையின் தலைப்பே நூலின் தலைப்பாகவும் வைக்கப் பட்டிருக்கிறது. இக்கதை கூறப்பட்டிருக்கும் வகை ஒரு புதுமையாக இருக்கிறது. மரபிலக்கியங்களில் பெண்ணை அவளின் அகவையை வைத்துப்  பேதை, பெதும்பை, மங்கை மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனச் சில பருவங்களாகப் பிரித்துள்ளனர். இப்பருவங்கள் ஒவ்வொன்றையும் கூறி அவற்றில் அவள் அடையும் பாலியல் தொந்தரவுகளை இச் சிறுகதை காட்டுகிறது.  ஆகப் பெண்ணுக்கு எல்லாக் காலங்களிலும் ஆண் வழி வரும் ஆதிக்கத்தை நாம் உணர முடிகிறது. பத்து அகவையில் தனிப்பயிற்சி அளிக்கும் ஆசிரியர், பதினைந்து அகவையில் தனிப்பயிற்சி அளித்த பெண் ஆசிரியை, மடந்தைப் பருவமான இருபத்து நாலு அகவையில் அக்காள் கணவன், என அவளுக்குப்  பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. மணமான பின்போ கணவன் இவள் விருப்பம் அறியாமல் களிக்கக் கூடியவனாக இருக்கிறான். “அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கேச் சிதறிக் கிடக்கும் படுக்கையில். சுருக்குப் பையைக் கிழித்து நுழையும் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது.” என்ற வரிகள் அவளின் மன ஆழத்திலுள்ள அவலத்தைப் படம் பிடிக்கின்றன.
  ஆனால் இதற்கெல்லாம் பழி வாங்குவது போலப் பழகுகின்ற ஒரு நண்பரிடமே அவள் தன் உடலைக் கொடுக்க ஆயத்தமாகிறாள். நண்பரோடு தனியாய் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. “அன்று வீட்டில் யாரும் இல்லை. அவருடன் தனியாகக் கழிக்கப் போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றிக் காத்திருந்தது உண்மை.” என்ற வரிகள் அவளுக்கு நாம் கொடுத்த ஆதரவை மீட்டெடுக்கலாமா என எண்ண வைக்கின்றன. இவ்வளவு துன்பப் பட்டவள் வரம்பு மீறுவதும் தவறில்லைதான் என நினைக்கும் நாம்  கதை இப்படிக் கூட முடியலாம் என்றெண்ணுகிறோம். ஆனால் மரபில் கூறும் பருவங்களை வைத்து எழுதும் ஆசிரியரால் அதை மீற முடியவில்லை போலும். கதை இந்த இடத்தில் திடீரெனத் தடம் மாறுவது ஆசிரியரை மீறியே நடந்து விட்டது என நினைக்கிறேன்.
  அடுத்த வரியைப் பாருங்கள். “அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. உடலைக் கழற்றித் தூர எறிந்துவிட முடியாத அல்லல்பாட்டில் அவள் கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.”அவர் அவளைத் தொட அவள் பிடி இறுக இருவரும் பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறக்கிறார்கள். தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல, கவனக் குறைவால் ஏற்பட்ட நேர்ச்சி(விபத்து) என ஊடகங்கள் பேசுகின்றன. படிக்கும் வாசகன் அவள்தான் அவரையும் தள்ளிக் கொண்டு விழுந்தாள் என்பதையும் உணர்கிறான். கவனக் குறைவு எனும் சொல் இங்கு விழுந்திருக்கிறது.
  மரபை மீற வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் அதில் கட்டுண்டு கிடக்கும் சூழல் ஒரு புறம் என இக்காலப் பெண் இருபொறிகளில் சிக்கித் தவிப்பதைக் கதை நன்கு காட்டுகிறது. ஒருவர் எதை நினத்துக் கொண்டிருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார் என்பது உள நூல் வல்லுநர்களின் கருத்தாகும். அதுபோல எசுதரின் மனம் முழுதுமே கருப்பாய் மாறிவிடுகிறது. “கருப்புதான் எனக்குப் பிடிச்ச வண்ணம் (கலரு)” என்று பாடவில்லையே தவிர காரணம் தெரியாமலே அவளுக்குக் கருப்பு பிடித்துவிடுகிறது.“கருப்பண்ண சாமி கோயில் பக்கம் போகாதே” என்று அம்மா சொன்னாலும் அவள் அந்தப் பக்கமாகப் போகும் போதெல்லாம் கருப்பண்ணசாமியைத் திருட்டுத்தனமாகப் பார்த்து மகிழ்ந்து வருகிறாள். பள்ளி ஆண்டு விழாவின் மாறுவேடப் போட்டியில் கருப்பண்ண சாமி வேடம் போட்ட மாசானத்தை ஆட்சியர்(கலெக்டர்) பாராட்ட அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்த்து. அதற்கு ஆட்சியர்(கலெக்டர்) கருப்பாக இருந்ததும் ஒரு காரணம். கருப்பு நிறத்தைப் பூசிக் கொண்டுவரும் இரவு அவளுக்குக் கிளர்ச்சி ஊட்டுகிறது.
  அவளின் மன உணர்வு தெரியாமல் அவள் குணமடைய அவள் அம்மா வாரம் தவறாமல் தேவாலயத்திற்கு நடக்கிறாள். இக்கதை மகளின் மனம் அறியாமல் இருக்கும் தாயைக் காட்டுகிறது என மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணின் சிறு அகவையில் ஆழப் பதியும் உணர்வு எவ்வளவு அவளைப் பாதிக்கிறது என்று அறிய முடிகிறது. ஒரே ஒரு பாத்திரத்தை வைத்துக் கொண்டு அவளின் மன எண்ணங்களைப் படம் பிடித்து அழகாக ஆசிரியர் கதையை நடத்திச் செல்கிறார்.
  திரைத்துறைபற்றி ஒரு கதை. அதில் விழுந்தவர்கள் மீளமுடியாது என்பதைக் காட்டுகிறது. அகவையான பின்னும் ஆண் நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் உலகம் அது. ஆனால் சற்று அகவையானாலே பெண் நடிகர்களுக்கு,  சித்தி, பாட்டி அம்மா பாத்திரங்கள்தாம் கிடைக்கின்றன. ஆனால் அதை அவர்களால் தாங்க முடியவில்லை. அறுபது வயது நடிகரை இளம் பெண் விரட்டி விரட்டிக் காதலிக்கும் கதைகள்தாம் ஆணாதிக்கமுள்ள சூழலில் மாட்டித்தவிக்கும் அந்த உலகில் இருப்பதையும் இச்சிறுகதை காட்டுகிறது.
  முதியோர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களைச் சிறுமைப்படுத்தும் கதைதான் ‘பாட்டி என்ன சொல்லி விட்டாள்?’
  தொன்மத்தில் புகுந்து அதே நேரத்தில் இயல்பாக எழுதப்பட்ட கதை என ‘அம்மாவின் காதலன்[ர்]’ கதையைச் சொல்லலாம். இருந்தாலும் ஆனைமுகனை வள்ளி காதலித்தாள் என்பதெல்லாம் கொஞ்சம் மிகுதி. ஆனால் கற்பனைக்கு விலங்கிட முடியாதுதான். அதே நேரத்தில் குறிஞ்சி அழகனாக வந்தது ஆனைமுகன்தான்  என்று அவள் நினைப்பதை ஏற்க முடியாது ஏனெனில் அவள் ஒரு மானிடப் பெண். இந்தத் தொன்மம் எப்படி அம்மாவின் காதலரைத் தேடிப்போகும் கதை சொல்லிக்குச் சரியாகிறது என்பது புரியவில்லை.
   ‘பரிசித்’ கதை எங்கோ தொடங்கி எங்கோ முடிகிறது. இக்கதையை எந்த நோக்கதோடு புதிய மாதவி எழுத வந்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரண்டு மையங்களை வைத்துக் குழப்பப் பட்டுள்ளது. குருசேத்திரப் போரில் பல ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்காளாயினர் என்பது ஒரு கரு. பாஞ்சாலி எப்போதும் மனத்தில் அர்ச்சுனனை மனத்தில் வைத்திருந்து மற்ற கணவர்களுக்குத் துரோகம் செய்தாள் என்பது மற்றொன்று. இரண்டையும் தனித்தனியாகவே எழுதி இருக்கலாம்.  ஆனால் அக்காலப் போர்முறைகளை இக்காலத்துப் போர்முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். போரே அன்று நகரத்துக்குப் புறம்பான வெட்ட வெளியில்தான் நடந்தது. தோற்றவர்களின் பெண்டிரைச் சிறை எடுக்கும் வழக்கம் புராண காலத்திற்குப் பின்னர்தான் வந்தது. இன்னும் நன்கு கனிந்த பழமாக வந்திருக்க வேண்டிய கதை இது.
 ‘தசரதபுரம்’ எனும் கதையும் இதேபோலத்தான் அமைந்து விட்டது. இன்னும் சற்று அழுத்தமாகப் பதிய வேண்டிய கதைதான் அது. வெளி நாட்டுக்குப் போன பாட்டி அங்குள்ள சூழலுக்கு ஒத்துப் போக முடியாமல் தவிக்கும் கதைதான் மரகதம் பாட்டி பற்றியது. ஆனால் மேல் நாட்டு வெப்பம், மற்றும் குளிரால் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும் அவர்களது நாகரிகத்தையும் நாம் கிண்டல் செய்யக் கூடாது என்பது எண்ணம்.
”நாட்டுக்கு நாடு எல்லாமே மாறுகிறதே. ஆனால் இளந்தலைமுறை எழுத்தாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு என்று இதைத் துணிந்து சொல்லலாம். ஏனெனில் புதிய மாதவியின் நடை சற்று மாறுபாடானது. இத் தொகுப்பின் தளங்களும் வெவ்வேறானவை. புதிய சிந்தனையைத் தோற்றுவிப்பவை.

– வளவ. துரையன் 

புதியமாதவியும் வளவ.துரையனும் ; puthiyamadavi_valavaithuraiyan


சங்கு சிற்றிதழ் ஆசிரியர் வளவ துரையனுக்கும் தமிழ் உலகம் மின்குழுமத்தில் மீள்பதிவு செய்த அய்யா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கும் மிக்க நன்றி. 

Thursday, December 1, 2016

ஜன கண மன --- திரைப்பட விமர்சனம்

திரைப்படம்... ஜன கண மன

திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன் கட்டாயம்
தேசியகீதம் திரையில் ஓடும். அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும்
தம்தம் தேசாபிமானத்தைக் காட்டும் வகையில் கட்டாயம் எழுந்து
நின்றாக வேண்டும் . நம் தேசத்தின் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. ஜெய்ஹிந்த்.
1960களில் இந்திய சீன எல்லையில் போர் நடந்தக் காலக்கட்டம்.
அப்போதுதான் திரையரங்குகளில் திரைப்படம் முடிந்தப்பிறகு
தேசியகீதம் ஒலிக்கும். எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் அப்படி
தேசியகீதம் ஒலிக்க அப்படியே அட்டென்ஸன் பொசிசனின் நின்று
என் தேசப்பக்தியைக் காட்டியதற்காக... கூட வந்தவர்களிடம்
வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன். பெரிசா வந்துட்டா...
இவளாலே நமக்குத்தான் லேட்டாகும் என்று அலுத்துக் கொள்வார்கள்.
ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் 52 வினாடிகள் அப்படியே நிற்கும்போது டூரிங் தியேட்டரே என்னை மாதிரி
பள்ளிக்கூடப் பிள்ளைகளை ஏதோ அதிசயப்பிராணியைப் பார்க்கிறமாதிர் பார்ப்பார்கள்! அது ஒரு காலம்.
அதன் பின் தேசியகீதம் முடிவதற்குள் தியேட்டரே காலியாகிவிடும்
நிலையைக் கண்டு சினிமா தியேட்டர்களில் தேசியகீதத்தை எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நிறுத்திவிட்டார்கள்.

... 52 வினாடிகள் எழுந்து நிற்பதோ தேசியகீதத்தை
மதிக்க வேண்டும் என்பதோ பிரச்சனை இல்லை. ஆனால் அதைக் கட்டாயமாக்குவதை எந்த வகையில் நியாயப்படுத்தமுடியும்?
பன்னாட்டு விளையாட்டு அரங்கத்திலோ கருத்தரங்கத்திலோ
அரசு விழாக்களிலோ பிரதமர், கவர்னர் , ஜனாதிபதி கலந்து கொள்ளும் அரசு நிகழ்வுகளிலோ தேசியகீதத்தை கட்டாயமாக்குவதில் அர்த்தமிருக்கிறது.  எதற்காக சினிமா பார்ப்பதற்கு முன்?!!
அதற்கு சொல்லப்படும் காரணமும் கத்தரிக்காயும்.!!

மும்பையில் - மராத்திய மாநிலத்தில்  2003 ஜனவரி 26 முதல் திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிக்கும் மும் தேசியகீதம் ஒலிப்பதை சட்டமாக்கினார்கள்.. இன்றுவரை அது தொடர்கிறது
இப்போதெல்லாம் மும்பையில் தேசியகீதம் முடிந்தப்பிறகு தான் நிறையபேர் இருட்டில் டார்ச் அடித்துக்கொண்டு
தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்து கொள்கிறார்கள். அவர்கள்
அனைவரும் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கிறார்கள்!
மற்றபடி பல ஆண்டுகளாக மும்பையில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன் தேசியகீதம் ஒலிக்கிறது. நாங்கள் எல்லோரும் எழுந்து நிற்கிறோம்... அதனால் அறியவேண்டியது என்னவென்றால்
இந்தியாவில் மற்றவர்களை விட மும்பைவாசிகளுக்கு
முக்கால் (3/4) கிலோ தேசப்பக்தி அதிகம் தான்.