Saturday, March 18, 2017

மொழிக்கொள்கை




கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடகவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றிருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே ஒவ்வொரு மாநில மொழிக்கும் சம அந்தஸ்த்து என்றே சொல்லப்பட்டது.
நடைமுறை வேறாக இருந்தாலும்.

இந்த அறிவிப்புக்குப் பின் ஊடகங்களில் திடீரென இக்கருத்து
 பேசு பொருளாகி இருப்பது வரவேற்புக்குரியதுதான்.
ஆனால் இதைப் பற்றி பேசுபவர்களும் கருத்துரைப்பவர்களும்
 நடைமுறை சிக்கல் என்ன என்பதை ஏன் பேச மறுக்கிறார்கள்
 என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
 தேசத்துரோகி மாதிரி இனத்துரோகி என்ற பட்டம்
 கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் கூட காரணமாக
 இருக்கலாம். இதை எழுதுவதற்கு முன் நானும்
முன்னெச்சரிக்கையாக இரண்டு வரிகள்
 எழுத வேண்டும்.நான் தாய்மொழிக் கல்விக்கு
 எதிரானவள் அல்ல . எங்கள் வீட்டில் என் தந்தையார்
 எங்கள் அனைவரையும் தமிழ்வழிக் கல்வி கற்கவே
 ஏற்பாடு செய்தார்
 (அவர் தொண்டர் என்பதுகூட காரணமாக இருக்கலாம்!)

நடைமுறை சிக்கல்கள் :
The allocation of cadre officers to the various cadres shall be made by the Central
 Government in consultation with the State Government of the State Government concerned.
 The Central Government may, with the concurrence of the State Government
 concerned, transfer a cadre officer from one cadre to another cadre".
இதுதான் இந்த அரசு அலுவலர்கள் குறித்த இந்தியச் சட்டம்.
 All India Service Officers(IAS/IPS/IFoS) and other Central Government Group A Officers(IFS, IRS, IAAS, IRTS etc) பதவிகள் இந்திய நடுவண் அரசு நியமிக்கும் பதவிகள். இது வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோது பரந்துபட்ட இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிகள். காலனி ஆத்கத்தின் நிர்வாக முறை வசதிக்கான பதவிகள்.
இப்பதவிகள் குறித்த சட்டதிட்டங்கள் எதுவும் இந்தியக்குடியரசான பிறகும்
மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் அடையவில்லை என்பதையும்
எண்ணிப்பார்க்க வேண்டும்..

எனவே இந்தியக் குடியரசு  அயல்மாநிலத்தவர் பணி புரிய வரும்போது சில விதிமுறைகளை அமுல்படுத்தி இருக்கிறது. அதாவது அயல்மாநிலத்தவர் தான் பணி செய்யும் மாநிலத்தின் மொழியை 6 மாதத்திற்குள் கற்றுக்கொள்ள வேண்டும்.
 அதற்கான பயிற்சி, உதவித்தொகை, நேரம் இத்தியாதி
எல்லாம் கூட ஒதுக்கப்படுகின்றன. ஆனால் நடைமுறையில்
 பிற மாநிலத்தவர் இன்னொரு மாநில மொழியை ஒரு கோப்புகளை வாசிக்கும் அளவுக்கு கற்றுக்கொள்கிறார்களா? அது எந்தளவுக்கு சாத்தியப்படும் ? என்பதையே நாம் சிந்திக்க வேண்டும்.
உதாரணத்திற்கு,
.  ஒரு தமிழர் மராட்டிய மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிகிறார்.மாநில மொழிக்கொள்கை படி அவர் மராட்டி மொழியைக் கற்க வேண்டும். சரி.. ஐஏஎஸ் படிச்சவருக்கு இன்னொரு மொழி கற்பது ஒன்றும் கடினமில்லை என்று வைத்துக்கொள்வோம். அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றலாகிப் போகிறார்.பஞ்சாபி கற்கவேண்டும்.!!
இப்படிப் பேச ஆரம்பித்தால் உடனே நடுவண் அரசு சொல்லுவார்கள்.. அதனால் தான் சொல்லுகிறோம் இந்தியாவின் தேசியமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று.
இதுவும் இந்தி மொழி திணிப்பு என்ற  கட்டாய மொழித்திணிப்பின் இன்னொரு
வடிவமாகவே இருக்கும்.
அதுவும் சரியல்ல. அப்படியானல் என்ன செய்ய வேண்டும்?
கட்டாய மொழித்திணிப்பு, இந்தியாவின் இறையாண்மை, இந்திய தேசத்தில் வாழும் பல்வேறு (தேச )இன மக்களின் இறையாண்மை அனைத்தையும் கணக்கில் கொண்டு தீர்வு காண வேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால் தான் இதை அரசியலாக்கி ஓட்டுக்கான விலையாக்கிவிடக்கூடாது என்று கருதுகிறேன்
இப்பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்வதை முதலில் விட வேண்டும். இது குறிதது இந்திய மொழி அறிஞ்ர்களும் கல்வியாளர்களும் இணைந்துதீர்வு காணவேண்டும்

1.

Thursday, March 16, 2017

ஆதாமின் எச்சில்




வெயில்நதி ஓடிய பெருவெளியாய்
நீண்டு கிடக்கிறது  பகல்வெளி.
ராஜநாகங்கள் பிணைந்து எழுந்து
புணர்ந்து மடிமீது தலைசாய்த்து
இளைப்பாறுகின்றன.
ஆலிலை சருகுகளின் ஓசையில்
சாரைப்பாம்புகளின் மொழி
வனத்தின் மவுனத்தைக் களைக்கிறது. 
துவைத்த துணிகளை உலர்த்திக் கொண்டிருக்கிறேன்.
காற்றில அசையும் கொடியில்
ஊஞ்சலாடுகிறது இரவில் தீண்டிய நாகம்.
விஷங்களை விழுங்கிய நட்சத்திரங்கள்
வானத்தில் துப்புகின்றன  
ஆகாயமெங்கும் நீலநிற எச்சில்படுக்கை.
ஆதாமின் ஆப்பிள் கசக்கிறது.குமட்டுகிறது.
.வாந்தி எடுக்கிறேன்.
கூநதலில் சூடிய முல்லைப்பூக்கள் கருகி விழுகின்றன.
மலைகளைக் குடைந்து நீளும் பாதையில்
பாறைகள் உருண்டு மோதுகின்றன.
காயங்களுடன் .. எட்டிப்பார்க்கிறாள் நாககன்னி.
ஆதரவாக என்னை அணைத்துக் கொள்கிறாய் நீ..
கைகளில்  நெல்லிக்கனியுடன். 







Tuesday, March 14, 2017

பிஜேபி கணக்கு



GOA     INC17 BJP13 OTH10 AAP0
MANIPUR INC28 BJP21 OTH11 PRJA0
13 > 17
21 > 28
இது பிஜேபி கணக்கு.
காங்கிரசுக்கு கோவாவில் தேவை 4. மணிப்பூரில் தேவை 3
பிஜேபிக்கு கோவாவில் தேவை 8, மணிப்பூரில் தேவை  10
மொத்தமா திருடி இருக்கிறது பிஜேபி.
திருடறது என்று முடிவு பண்ணிட்டா அதில் மொத்தமா திருடறது
கொள்ளை இலாபம் என்பது கார்ப்பரேட் அரசியல் உத்தி.
 எங்கள் வெற்றியை பிஜேபி திருடி ஆட்சி யமைக்கிறது என்று
ராகுல்காந்தி சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால்
 அரசியல் நியாயம் தர்மங்களுக்கு அப்பாற்பட்டது.
கணக்கு என்பது வெறும் கூட்டல் கழித்தல்
பெருக்கல் வகுத்தல் மட்டுமல்ல. அரசியல்கணக்கு என்பது
புள்ளிகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
புள்ளிகளை எந்த இடத்தில் எப்போது வைக்கிறோம் என்பதைப்
பொறுத்தே கணக்குகளின் விடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
புள்ளிகள் அரசியலில் பூஜ்யங்களுக்கு மதிப்பைக் கூட்டுவதிலும்
குறைப்பதிலும் பெரும்பாங்காற்றுகின்றன. .
இதெல்லாம் புரியாட்டா கூட பரவாயில்லை.
4 சட்டசபை உறுப்பினர்களை வாங்குவதை விட
8 சட்டசபை உறுப்பினர்களை வாங்க அதிக பணம்
 தேவைப்பட்டிருக்குமே. ஊழலுக்கு எதிரான ஆட்சியாக
தங்களைச் சொல்லிக்கொள்ளும் மோடிஜி பிஜேபி 
வகையறாவுக்குத் தான் இந்த ஊழல் கணக்கு வெளிச்சம். 

. இது பிஜேபி " நடுவண் அரசு  அதிகாரம்" என்ற
அனாதிஷியாவைக் கொடுத்து ஜனநாயக ஆபரேஷனை
 வெற்றிகரமாக செய்துவிட்டது. ஆனால் ஜனநாயகம்
என்ற நோயாளி தான் அநியாயமாக செத்துப்போய்விட்டார்.

OPERATION SUCESS. PATIENT DIED.




.




Saturday, March 11, 2017

மோதிஜியின் வெற்றியும் ராகுல்காந்தியின் தோல்வியும்

பிஜேபி வெற்றி பெற்றால் அது மோடிஜியின் வெற்றியாகவும் 
காங்கிரசு வெற்றி பெற்றால்
அது ராகுல்காந்தியின் வெற்றியாக மாற்றம்
பெறாமல் இருப்பதும்.. கவனிக்க வேன்டியவை.
உ.பி யின் வெற்றி முழுக்கவும் மோடியின் வெற்றியாகக் 
கொண்டாடப்படுவது.. பிஜேபியின் அரசியல் எதிர்காலத்தை
 கேள்விக்கு உரியதாக்குகிறது.
காங்கிரசின் வெற்றி ராகுல்காந்தியின் வெற்றியாக அல்லாமல் 
அந்தந்த மாநில காங்கிரசு தலைவரின் வெற்றியாக 
பார்க்கப்படுவது இரண்டாம் கட்ட தலைமைகளின்
 வளர்ச்சிக்கு இடமளிக்கிறது.
ஓட்டுவிகிதங்களைப் பார்க்கும் போது
மற்ற கட்சிகள் ஒன்றும் காணாமல் போய்விடவில்லை
என்பதும் நம்பிக்கை தருகிறது.
காங்கிரசின் தோல்வி ராகுல்காந்தியின் தோல்வியாக
 சித்தரிக்கப்படுவதும் அவருக்கு முன்பிருந்த 
காங்கிரசு கட்சி தலைவர்களுடன் ஒப்பிடுவது
(வேறு யாரு...அவரோட பாட்டி, அப்பா, பூட்டன், சித்தப்பா.. இவர்கள் தான்) 
இன்னும் சோகம்.. அவர்களுக்கெல்லாம் இல்லாத
அவர்கள் சந்திக்காத ஒரு களத்தை ராகுல்காந்தி சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
 அதுதான் மோடியும் மோடியை முன்னிறுத்தும் இந்துத்துவ அரசியலும்..

. காங்கிரசுக் காரர்கள் கணக்கில் கொஞ்சம் வீக்காக இருக்கிறார்கள்.
அவ்வளவுதான்.

சூப்பர் ஸ்டார் ... சூப்பர் பரதநாட்டியம்..

.
Image result for aishwarya rajinikanth bharatanatyam


இந்தப் பாருங்கோ சூப்பர் ஸ்டார்.. உங்க ஸ்டைலே உலகமகா நடிப்பாக்கி நீங்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராகி உங்களுக்கு பாலாபிஷேகமெல்லாம்
நடத்தி நீங்க ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி நி னைச்சி...
இன்னிக்கு வரைக்கும் ... உங்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம் என்பதாலேயே நீங்க ரொம்பவும் எல்லைத்தாண்டி ..
அய்யோ அய்யோ... ...
உங்கள் மகள் என்பதற்காக திருமதி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களை ஐ.நாவின் இந்திய கலாச்சாரா தூதுவராக நியமதித்ததைக் கூட நாங்கள் ஏற்றுக்கொண்டு
விட்டோம் என்பதற்காக
(Aishwarya R Dhanush, UN ambassador for gender equality in India)
அவரை இந்தியாவின் பரதநாட்டிய கலைமாமணியாக
நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது டூ மச் ... சா ..
உங்களுக்கே தோணல..
மார்ச் 8 மகளிர்தினக் கொண்டாட்டத்தில்
அவர் ஆடியதை சூப்பர் டான்ஸ் என்று வேணும்னா
சொல்லிக்கொள்ளுங்கள். "சூப்பர் " உங்களின்
குடும்பப்பெயராகிவிட்டதாக சொல்லிக்கொள்கிறோம்.
ஆனால் ப்ளிஸ் பரதநாட்டியம்னு மட்டும் சொல்லிடாதீங்க..
இது பரதநாட்டியம்னா அப்புறம் நீங்களெல்லாம்
சினிமாவுக்கு வருவதற்கு முன் பத்மினி அம்மானு
ஒரு நடிகை அதுதான் நம்ம தில்லானா மோகனாம்பாள்
ஆடியதை என்ன நாட்டியம்னு சொல்றது?

நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்.
இப்படியே ஆட ஆரம்பித்தா அப்புறம் நான் அழ ஆரம்பிச்சிடுவேன்...
ஹேங்ங்

Friday, March 10, 2017

நீல. பத்மநாபன் - மீள்வாசிப்பு



எழுபதுகளில் வெளிவந்த மகத்தான படைப்புகளில்
ஒன்றாக பலராலும் பேசப்பட்ட நாவல் நீல. பத்மநாபனின்
"தலைமுறைகள்" . 80 களில் கல்லூரிகளில் பல கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட்ட நாவலும் இதுதான்.
மதுரை பல்கலை கழகத்தில் நீல. பத்மநாபனின் படைப்புகள்
குறித்து ஒரு நாள்  சிறப்பு கருத்தரங்க நடந்தப்போது
 நான் முதுகலை முதலாமாண்டு மாணவி.
 நீல. பத்மநாபன் வந்திருந்தார். அன்று அவர் படைப்புகள் குறித்து
 என்ன பேசினார்கள் என்ன விவாதித்தார்கள்
என்பதை எல்லாம் விட இன்றுவரை என் நினைவில்
 மறக்காமல் இருப்பது அன்று அவர் அணிந்திருந்த
 நீலநிறக் கலர் சட்டையும் அதற்கு மேட்சான பேண்ட்டும்
 குறுந்தாடியும்  ஒல்லியான தீர்க்கமான பார்வையுடன் கூடிய முகமும்...ம்ம்.ம்ம். .. இதெல்லாம் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அப்படியே நினைவில் இருப்பதற்கு காரணம்...
 சரி அதெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்.
தலைமுறைகளின் உண்ணாமலை ஆச்சி மாதிரி நானும்
எதையோ சொல்ல வந்து வேறு எதையோ
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அப்போது எங்கள் பேராசிரியராக இருந்த  தி.சு. நடராசன் சார் அவர்கள் தலைமுறைகள் நாவலை கார்க்கியின் நாவலுடன் ஒப்பிட்டெல்லாம் விதந்தோதி ஆகச்சிறந்த ஒப்பியல் ஆய்வெல்லாம் செய்திருந்தார்.
 எனவே எவ்வித மறுப்புமின்றி தலைமுறைகள் நாவலைக்
 கொண்டாடுவது எங்களின் கடமைகளில் ஒன்றாக மாறிப்போனது.
மீண்டும் தலைமுறைகள் வாசித்தேன். பள்ளிகொண்டபுரம் நாவலில் அன்ந்தநாயரின் கதைப்பாத்திரம் அளவுக்கு
திரவியம் வளரவில்லை.
உண்ணாமலை ஆச்சி மட்டுமே தலைமுறைகளின்
பக்கங்களில் நம்முடன் பயணிக்கும் கதைப்பாத்திரமாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் நிழல் கதைப் பாத்திரங்கள் மட்டும் தான்.
அதிலும் தலைமுறைகள் நாவலில் நாகு என்ற பெண்ணைச் சுற்றி
அவளுக்கு அவள் கணவனால் இழைக்கப்பட்ட கொடுமை
தலைமுறைகளின் மாறிவரும் மதிப்பீடுகளைப் பற்றியதாக
இருந்தாலும் கூட முக்கியமான கதைப் பாத்திரமான நாகு
எந்த இடத்திலும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை!
அவளைப் பற்றிய பிரச்சனைகள் குறித்து கதையோட்டத்தில்
அவள் தம்பியாக வரும் திரவியம் தான் பேசிக்கொண்டே இருக்கிறான். உண்ணாமலை ஆச்சி தலைமுறைகள் கடந்த
சம்பிரதாய மீறல்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் .
பள்ளிக்கொண்ட புரத்தில் கதை உத்தியும்
அனந்தநாயரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போன அவர் மனைவி கார்த்தியாயினியும் பிற  கதைப் பாத்திரங்களும் தலைமுறைகளைத் தாண்டி நம் வாசிப்பு அனுபவத்தில் நிரந்தரமாக நம்முடன் பயணிக்கிறார்கள்...
தலைமுறைகள் நாவலில் கதை சொல்லியாக நீல. பத்மநாபன்,  பள்ளிகொண்டபுரத்தில்  படைப்பாளராகி
கதைப் பாத்திரங்களில் உயிர்ப்புடன் ...
.
எனவே அப்போதும் சரி..இத்தனை ஆண்டுகள் கடந்து
 இரு நாவல்களையும் மீள்வாசிப்பு செய்தபோதும் சரி..
பள்ளிகொண்டபுரம் நீல.பத்மநாபன் ... பசுமையாக.


Monday, March 6, 2017

அரைநூற்றாண்டு திராவிட ஆட்சி


திராவிட இயக்கம் வேறு திராவிட அரசியல் கட்சிகள் வேறு.
திராவிட இயக்கத்தின் பலனை அனுபவித்தவர்கள்
 திராவிட அரசியலை விமர்சிப்பது செய்நன்றி கொன்ற குற்றமாக
 கருதுவது எவ்வகையான பகுத்தறிவு ?!!
*
'
1967ல் திராவிட அரசியல், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத்
 தொடர்ந்து இந்த அரைநூற்றாண்டு திராவிட அரசியலின்
 விளைவுகளை அனைவரும் பேசுகிறார்கள். இந்த விளைவுகளுக்குப்
பொறுப்பு திமுகவும் அதிமுகவும் என்றாலும் அதிகமாக
 விமர்சனத்திற்கு உள்ளாவது திமுக மட்டுமே! 
இதுவே திமுகவுக்கு இன்று எஞ்சியிருக்கும் ஆகச்சிறந்த பெருமை,
 மதிப்பு, மரியாதை, வெகுமதி..எல்லாமே..
அதிமுகவில் பெயரளவில் மட்டுமே அண்ணாவும் 
திராவிடக்கட்சியின் அடையாளமும் இருக்கிறது என்பதால் தான்
 விமர்சனங்கள் அனைத்தும் திமுக வை நோக்கியே பாய்கிறது 
என்பது திமுக வுக்கான + பாயிண்ட் தானே!

திமுகவினர் விமர்சனங்களை ஆதாரத்துடன் எதிர்கொள்வதற்கு
 மாறாக மீண்டும் மீண்டும் உணர்ச்சி அரசியல் மட்டுமே
 நடத்திக் கொண்டிருப்பது ஏன்?

திராவிட கட்சிகளின் விளைவுகளை விமர்சனம் 
செய்யும் போதெல்லாம் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்று
 சிறப்புமிக்க சமூக மாற்றங்கள் -
சமஸ்கிருதம் கட்டாயப்பாடமாக இருந்தது நீக்கப்பட்டது முதல் 
பேருந்தில் ஒடுக்கப்பட்டவர்கள் பயணிக்கலாம் என்ற அரசாணை வரை
அனைத்தையும் சட்டமாக்கி முன் உதாரணமாக இருந்தது நீதிக்கட்சி.

நீதிக்கட்சியின் செயல்பாடுகளை இன்று இவர்கள் பேசும் போது
மகாத்மா காந்தியின் விடுதலைப் போராட்டதை காங்கிரசு கட்சி பேசுவது போலவே இருக்கிறது ...
 நீதிக்கட்சி செய்தவற்றை ..அதே உதாரணங்களை மட்டுமே 
உரத்தக் குரலில் ஒலிப்பதை நிறுத்திவிட்டு 
அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுகவும் அண்ணாவின் பெயரைச் சொல்லிஆட்சிக்கு வந்த அதிமுகவும் 2017 வரை தமிழக அரசியலில் கொண்டுவந்த சிறந்த
திட்டங்களை .. வெளிப்படையாகப் பேசுங்கள். 
நீங்கள் இலவசமாக கொடுத்தப் பட்டியலை நினைவூட்டி 
பிச்சைக்காரப்புத்தியை வளர்த்ததை தயவுசெய்து
உங்கள் சாதனைகளாக சொல்லாதீர்கள். ப்ளீஸ்.

திராவிட இயக்கம் தமிழ்ச்சமூகத்திற்கு எவ்வளவோ
 நன்மைகளை செய்திருக்கிறது.
திராவிட இயக்கத் தொண்டர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் 
இன்றும் கோடை மழையாய் இருக்கின்றன.
 அதனாலேயே திராவிட அரசியலை விமர்சிக்கவே கூடாது என்பதும் 
அப்படி விமர்சிப்பது "செய்நன்றி கொன்ற குற்றமாக" சித்தரிக்கப்படுவதும் 
பகுத்தறிவுக்கு ஏற்றதா? 
திராவிட இயக்கம் வேறு. திராவிட அரசியல் கட்சிகள் வேறு.
 திராவிட இயக்கத்தின் கொள்கைகளை எல்லாம் நீர்த்து போக வைத்ததற்கு திராவிட அரசியல் கட்சிகளே காரணம்.
ஓர் அரசியல் கட்சி 50 ஆண்டுகளுக்கு முன் சொன்னதை மட்டுமே
 வைத்துக்கொண்டு மாறி வரும் அரசியல் சூழலில் தேர்தலை
 எதிர்கொள்ள முடியாது என்பதை என்னைப் போன்றவர்கள்
 ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது
 இவர்கள் ஊறுகாய் மாதிரி மாநில சுயாட்சியைத் தொட்டுக் கொள்வதும்
ஆரிய திராவிட சிக்கன் 60 சாப்பிடுவதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
இனியாவது மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் வாருங்கள். அத்துடன், திமுக, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆட்சிக்கு வந்தப் பின்
திராவிட அரசியல் கட்சி தலைவர்கள் மாவட்ட வட்டங்கள்
 சட்டசபை நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் சொத்துக்கணக்கை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மன்றத்தில் வையுங்கள்.
இவர்களைத் தவிர திராவிட என்ற அடையாளத்துடன்
கட்சி ஆரம்பித்து கடையில் இன்றுவரை ஜோராக வியாபாரம்
 செய்துக்கொண்டிருக்கும் மதிமுக, தேதிமுக காரர்களும்
 கட்சி ஆரம்பிப்பதற்கு முன், கட்சி ஆரம்பித்தப் பின்
உங்கள் சொத்துக்கணக்கை வெளியிடுங்கள். 
அப்போதுதான் கூட்டணிகளின் சாயம் வெளுக்கும்!
மக்கள் தீர்மானிக்கட்டும்.
நீங்கள் தானே அடிக்கடி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..

Sunday, March 5, 2017

நானும் எழுதுகிறேன்


நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்
ஏன் எழுதுகிறேன் என்பது தெரியவில்லை.
நேற்று சொன்ன காரணங்கள் இன்று என்னைப் பார்த்து சிரிக்கின்றன.
நான் எழுதிதான் புரட்சி ஏற்பட்டுவிடப் போகிறது என்பதலோ
சமூகத்தில் மாற்றம் நிகழ்ந்துவிடும் என்பதலோ எழதவில்லை.
நான் எழுதுவதை நிறுத்திவிட்டால் தமிழ்த்தாய் ஒன்றும் தற்கொலை
செய்து கொள்ளப்போவதில்லை ! என்பதை நன்கு அறிவேன்.
ஆகச்சிறந்த எழுத்தாளராக பிரபலமாகி கொண்டாடப்படுவதற்காக
எழுதும் எந்த லட்சணங்களும் எனக்கோ என் எழுத்துக்கோ
கொஞ்சமும் இல்லை. அந்த வரிசையில் நானும் என் எழுத்துகளும்
இல்லை இல்லை என்பதால் வருத்தப்படுவதற்கு மாறாக
அதுவே எனக்குத் தலைக்கனமாகி இருப்பதாக என்னையும் என்
எழுத்துகளையும் அறிந்த தோழி சொல்கிறாள். அவள் அப்படி
சொன்னவுடன் என் தலையைத் தூக்கி சுமப்பது எனக்கே பெரும்
சுமையாகி அதைக் கழட்டி வைக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுகிறேன்.
ஆனாலும் எழுதுகிறேன் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
எழுத்து என் இருத்தலுக்கான மூச்சாகிவிட்டதால் எழுதிக்கொண்டு
 இருக்கிறேனா? அல்லது  எழுத்து மவுனமொழிக்குள் வசப்படும்
 யோக நிலையை எட்டமுடியவில்லை என்பதால்
 எழுதிக்கொண்டு இருக்கிறேனா..?
நானும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.

Saturday, March 4, 2017

யுகங்களை கடந்துவரும் கைரேகைகள்




தினையரிசியும் பாலும் கலந்து பால்சோறு, அவரைப்பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச் சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்து ஊன்துவை அடிசில், புளியும் மோரும் மூங்கிலரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட புளியங்கூழ் ஆகியன சங்ககால உணவு வகைகைகள் . அதாவது சற்றொப்ப 2500 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட உணவு தயாரிப்புகளை நாம்  அறிந்திருக்கிறோம்.
இந்த அடிப்படையிலிருந்து தான் இன்றைய பால்சோறு, பாயாசம், பால் கலந்த பிற இனிப்புகள், காய்கறிச்சோறு
(வெஜிடபுள் பிரியாணி/புலாவ்) மட்டன் சிக்கன் பிரியாணி,
புளிச்சோறு, தயிர்ச்சாதம் வகையறாவெல்லாம் கிட்சன்
கில்லாடிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
உணவு என்பதும் உணவு முறை என்பதும் திணை
சார்ந்து பிரிக்கப்பட்டிருப்பது இடம் காலம் சார்ந்த சுற்றுப்புறச்சூழலைக் கணக்கில் கொள்ளும் உணவுமுறை.
உணவு உண்ணும் முறைகளைத் தமிழர் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர்.

• அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
• உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
• உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
• குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
• தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
• துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
• நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
• நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
• பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
• மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
• மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
• விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.
உணவும் உணவு சார்ந்த அறிவும் துய்ப்புணர்வும்
தமிழரின் வாழ்வியலின் ஓர் அங்கமாகவே தொடர்ந்து
வந்திருக்கிறது. பாலைக் காய்ச்சி உறை மோர் விட்டு
புளிக்க வைத்து தயிராக்கும் முறையையும் அந்த தயிரை
மோராகக் கடைந்து விற்கும் ஆயர்குலப் பெண்களைப்
பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அழகிய காட்சி.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”    கு.தொ. 167
குறுந்தொகை விவரிக்கும் இக்காட்சி ஒரு பெண் தன் மணவாளனுக்கு முளிதயிர்ப்பிசைந்த தீம்புளிப் பாகரை
எத்துணை ஈடுபாட்டுடன் சமைத்தாள் என்பதையும்
சொல்கிறது. சமையலும் சமைத்தலும் பெண்ணுடன்
சேர்ந்தே  சமூகத்தில் தொடர்கின்றன. அத்தொடர்ச்சியை
வளமைமிக்க தமிழ் உணவு மரபை தன் கவிதைக்குள்
எடுத்துவரும் மு. ஆனந்தனின் தலைப்புக் கவிதை
"யுகங்களின் புளிப்பு நாவுகள்".
அம்மாவின் ரேகையில் முளிதயிர்ப் பிசைந்த குறுந்தொகை
தலைவியின் கைரேகை இருக்கிறது. ஆனால் அம்மாவிடம்
அவள் அணிந்திருந்த கழுவுறு கலிங்கமில்லை. அம்மாவின் விரலும் காந்தள் மென்விரல்களாயில்லை.
ஓரிரவில் மோர் ஊற்றிய பால் தயிராகிறது
"ஓர் யாமத்தில்
கலவியாடி கருத்தரித்து
புலரியில் பெற்றெடுக்கிறது காலம்
புதுத்தயிரை" என்று கவிதையாகும் போது கவிதை வரிகளின் ஊடாக  வாசிக்க முடிகிறது ,
காதலும் காமமும் ஓர் யாமத்தில் கலவியில் கருத்தரிக்கின்றன என்பதையும் . விடியலாக தொடக்கமாக புதுதயிர் உருவாகிவிட்டது என்பதையும்..
அது என்ன புதுதயிர்?
தயிர் என்று சொன்னாலே போதுமே? ஏன் புதுத்தயிர்?
இது வெறும் தயிரல்ல. காலம் காலமாய் தொடர்ந்து
வரும் மோருடன் தசாப்த பாலின் சூலகத்தில் கருத்தரித்து
பிறந்திருப்பதால் இது "புதுதயிர்"
பசுமாடு வளர்ப்பும் பால் விற்பனையும் மோர்க்கடைந்து விற்ற முல்லை நிலப்பெண்ணும் அறியாத புதுத்தயிர்.
என்றைக்கு நம் மண்ணில்  ஆவின்பால் நிறுவனமயமாகி தொழில்மயமாகி பசுமாடுகள் எல்லாம் கறவைமாடுகளாக பால்மாடுகளாக மாறியதோ அன்று முதல், 
"அந்த தசாப்த பாலில் சூலகத்தில்
சதாப்த மோர் கருத்தரித்து" கிடைக்கும் புதுத்தயிர்.
(தசாப்தம் - பத்து ஆண்டுகள், சதாப்தம் - நூறு ஆண்டுகள்,
சஹஸ்ரம் - ஆயிரம் ஆண்டுகள்)
இந்த தயிரைக் கடையும் போது தயிர் மத்தின் சலசலப்பில்
கடந்த கால முல்லை நிலமும் ஆயர் குலப் பெண்ணும்
அவள் முளிதயிரும் ஏன் அணிந்திருந்த ஆடையும்
 பின்னோக்கி இழுத்துச் செல்லும் நினைவுக் கடைசலில்
வெண்ணெய்யாக திரளுகின்றன..
அதனால் தான் மோர்க்கடையும் கலயச்சுவர்களை
முகம் சுழிக்கின்றனவாம்!
"பின்னோக்கி  கடையும்
தயிர் மத்தின் சலசலப்பில்
காலாதி காலங்கள் பிரசவித்த
மோர்த்துளி சந்ததிகளின் விந்தணுக்கள்
கலையச்சுவர்களை  முண்டிச் சுழிக்கிறது"
என்று பூடகமாக சொல்கிறார் கவிஞர்.
இந்த மோரில் இருக்கும் புளிப்பு சுவைக்கும் யுகங்கள்
பலவுண்டு. மோரைக் கலையத்தில் கடையும் அவளும்
யுகங்களைக் கடந்து இன்றும் தயிரை மோராகக் கடைந்து
கொண்டிருக்கிறாள். அந்த மோரை ருசிக்கும் நாவுகளும்
யுகங்கள் கடந்து  புளிப்பு ருசியை உறை மோராக
தயிரில் கலந்து வருகின்றன. விளைவு... புதுப்புது
தயிரும் புதுப்புது மோரும்... மாறியும் மாறாமலும்
தொடர்கிறது யுகங்களின் புளிப்பு ருசி என்று ஒரு
முரணையும் விவரிக்கிறார் கவிஞர்.
ஆவின் பால் அமுல்  பாலாகி அமுல் தயிராக மாறிய இன்றைய சமூக அரசியல் சூழலில்  கவிதையின் இறுதி
வரிகள் சமூக அரசியலைப் பேசுகின்றன.
"உறை மோரின் நீர்மையில்
ஊடுபாவிக்கிடக்கிறது
யுகங்களின் புளிப்பு நாவுகள் "
என்கிறார் கவிஞர் மு. ஆனந்தன் அவர்கள்.
----

யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பில்
நான் மிகவும் விரும்பி வாசித்தக் கவிதைகள் இன்னும் சில உண்டு. குறிப்பாக தீக்கூடு, என் மகள் பெரியவளாகி,
கொழுவு எருத்து, திருமஞ்சன நீராட, அப்பாக்களின் முலைகள், நான் சொல்வதெல்லாம் பொய்  என்ற தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளைக்
குறிப்பிட்டு சொல்லலாம். இக்கவிதைகள் குறித்து கவிதை நூலிலேயே பேசப்பட்டிருப்பதால் என் விமர்சனத்தை
தலைப்புக் கவிதைக்கு திருப்பினேன்.
ஒரு கவிதை தொகுப்புக்கு தலைப்புக் கவிதையாகும் கவிதை
அக்கவிதை தொகுப்பின் ஒட்டுமொத்த கவிதைகளின் ஊடாக கலந்திருக்கும் மொழி என்பது என் எண்ணம்.
மோரின் புளிப்பு சுவை நாவுகளுடன்  இக்கவிதை வாசிப்பில் என்னருகில் அரூபமாக பயணித்த
யுகங்களைக் கடந்த அந்தக் கலித்தொகை, குறுந்தொகை
ஆதித்தாய்களுடன் சேர்ந்து  வாழ்த்துகிறேன் நானும்...
---

விமர்சனத்திற்கு அப்பால் இன்னும் சில..
அண்மைக் காலமாக எனக்கு வரும் கவிதை தொகுப்புகளை வாசித்து வாசித்து..
இப்போது இதைப் பேசியே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். அண்மைக்காலமாக இப்போக்கு அதிகரித்து வருகிறது.என்பதால். இதற்கு இக்கவிதைதொகுப்பு மட்டுமே கார ணமல்ல. ஆனால் செறிவான ஒரு கவிதைகளுக்கு இதெல்லாம் ஏன் என்ற அக்கறையுடன்.
.கவிதை நூலுக்கு ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் அணிந்துரை கொடுக்கும் போது அதுவே வாசகர்களுக்கு இடையூறாக இருப்பதுடன் அக்கவிதை நூலை விமர்சனத்திற்கு வரும் போது விமர்சனம் செய்பவருக்கு பெரிதும் இடையூறாகவே இருக்கிறது.
ஒரு புத்தகத்தை முதல் அட்டை முதல் கடைசி அட்டைப்படம் வரை வாசிக்கும் என் போன்ற 
வாசகர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்!





Tuesday, February 28, 2017

ஜெ வழக்கும் மகாத்மாவின் தண்டனையும்




பொதுஜன உளவியல் பூதம்
"ஜெ" வின் வழக்கின் போது அண்மையில் கணம் நீதிபதியே கேட்கிறார்.
.. "ம்காத்மா காந்தியடிகளும் தண்டனை பெற்றவர்தானே என்று"??!!
முகநூல் / வலைப்பூ பதிவுகளை மட்டுமே கணக்கில் கொண்டு
 தமிழ்ச் சமூகத்தின் உளவியலை வாசித்துவிட முடியுமா?
என்ற கேள்வி எப்போதும் எனக்குண்டு.
அதிலும் குறிப்பாக அக்மார்க் அரசியல் பற்றிய பதிவுகளைச்சொல்லியாக
 வேண்டும். அரசியல் பதிவுகளை எழுதி பலரின் நட்பை இழந்திருக்கும்
 நானும் இதில் அடக்கம்.
அண்மையில் பிரேக் பிரேக் போட்ட தமிழக அரசியல் செய்திகளும்
 களங்களும் முகநூலில் நக்கலாக நையாண்டியாக
 அறச்சீற்றமாக ஏன் நாடக இயக்கத்தின் காட்சிகளாக
 இப்படி சகலமாகவும் அனைவரையும் எழுத வைத்துவிட்டது. 

ஜெ சட்டப்படி குற்றவாளி என்ற தீர்ப்பு வந்தப்பிறகும்
மக்கள் மன்றத்தில் ஜெ ஒரு குற்றவாளி என்ற பிம்பம்
 இன்னும் பதியவே இல்லை. அப்படியானால் அரசியல்
என்றாலே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்
என்பதை மக்கள் எளிதாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்
என்றே எண்ண தோன்றுகிறது.
லஞ்சம், ஊழல், அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது
இன்று ஒவ்வொரு தமிழனின் - இந்தியனின் - 
ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறையாக இருக்கிறது.
தன் மகனுக்கோ மகளுக்கோ டாக்டர் /எஞ்சினியர் சீட்டோ
அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையோ 
இத்தியாதி எதையாவது பெறுவதற்கு மேற்சொன்ன லஞ்சமோ அதிகாரத்தைப் பயன்படுத்தலோ இல்லாத எந்த ஒரு குடும்பமாவது இருக்கிறதா என்று கேட்டால் ஏழரை கோடி தமிழர்கள் வாழும் மண்ணில் 
அப்படி வாழும் குடும்பங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
 இன்னாரின் சிபாரிசு இருந்ததால் இந்த வேலை சுலபமானது
 என்பதைக் கொஞ்சமும் வெட்கமின்றி வெளிப்படையாக 
சொல்லிக்கொள்கிறோம். அப்படி எல்லாம் எவராவது 
ன் வாழ்க்கையில் ஆதாயம் தேடவில்லை என்றால் அவரை
"சரியான பேக்கு... பிழைக்கத்தெரியாதவன்.உதவாக்கரை
useless... " இப்படி பல அடைமொழிகள் கொடுத்து ஒதுக்கி
வைத்துவிடுகிறோம்.
எனவே இயல்பாகவே லஞ்சமும்
அதிகாரத்தை தன் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதும்
வாழ்க்கையின் சாதாரண அம்சமாக மாறிவிட்டது 
என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உளவியல் மாற்றங்களை மிகவும் குறுகிய காலத்தில்
 கொண்டுவந்ததில் நம் கல்விமுறைக்கு பெரும்பங்குண்டு.
முன்னேறு.. என்று மட்டுமே சொல்லிக்கொடுக்கும் நம்
கல்விமுறையில் அடுத்தவனை மிதித்துக் கொண்டு
அடுத்தவனை அழித்துக்கொண்டு அடுத்தவன் தலையில்
ஏறி அடுத்தவன் அழிவில் தன்னை நிலைநிறுத்திகொள்ளும்
 உத்திகளை மட்டுமே கற்பிக்கிறது.
 இருத்தலியலை மட்டுமே வாழ்க்கையின் வெற்றியாகமாற்றிவிட்டது .
 எனவே கடந்துவந்தப் பாதையை விட நிற்கும் இடமே 
பிரதானமாகிவிடுகிறது.
கலை இலக்கியம் சினிமா என்று சமூக மாற்றத்திற்கான
தளங்களும் இதில் அடக்கம்.
 எனவே அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்பதை
 பொதுஜனம் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறார்.
இவை அனைத்தையும் விட முக்கியமானது...
 அரசியல் தளத்தில் கட்சி கொள்கை கோட்பாடு பேசுவதற்கோ
 லஞ்சம் ஊழல் சொத்துக்குவிப்பு பற்றி அறச்சீற்றம் கொள்வதற்கோ 
தகுதி உடைய தலைவரோ கட்சியோ 
மக்கள் மத்தியில் இல்லை
அதனால் தான் "ஜெ" குற்றவாளி என்று தீர்ப்பு வந்தப் பிறகும்
 அவரைக் குற்றவாளி என்று சொல்கிற தகுதி
இங்கே எவருக்கு இருக்கிறது? என்ற கேள்வியை 
போகிற போக்கில் கேட்கிறார் பொதுஜனம்.
குற்றம் சொல்ற இவன் பெரிய யோக்கியனா..?
சொல்ல வந்துட்டான் ! இம்மாதிரி வசனங்களை
உரையாடல்களை நாம் எல்லா தரப்பு மக்களிடமும்
கேட்கலாம். 
("நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர் தானா ..? சொல்லுங்கள்..." பாட்டு )

1000 குற்றவாளிகள் இருக்கிறார்கள்
. அதில் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்து
 தண்டனைக் கொடுக்கும் போது மீதி 999 குற்றவாளிக்கும்
 தண்டனைக் கொடுத்து விட்டு இந்த ஆயிரமாவது
 குற்றவாளிக்குத் தண்டனைக் கொடுங்கள் என்பது லாஜிக்காக
 ரொம்பவும் சரியானது போல தோன்றும்.
 ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட
விரும்பும் போது யதார்த்த நிலையில்
 நிருபணமாகிவிட்ட குற்றவாளியைத் தண்டிக்காமல்
 இருப்பதற்கு எந்தக் காரணமும் காரணங்களில்லை
. எழுதப்பட்ட சட்டப்படியும் சரி, 
எழுதப்படாத தர்ம நியாயங்களின் படியும். சரி. 
ஆனால் இந்த சரியான லாஜிக் எல்லாம் 
நம்ம கணம் பொதுஜனத்தாரிடம் எடுபட மாட்டேங்குதே!!
இப்படி ஒரு பொதுஜன உளவியல் பூதகாரமாக..
எல்லாத்தையும் "ஜீ பூம்பா" மந்திரம் சொல்லி
நம்மை இந்த நிலைக்குக் கொண்டு தள்ளி இருக்கிறது.
அதனால் தான் நீதிமன்றத்தில் மகாத்மா காந்தியடிகளின் 
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான சிறைவாசத்தையும்
 "ஜெ" வின் சிறைத்தண்டனையையும் ஒப்பிட்டு 
அண்மையில் தலைமை நீதிபதி வழக்குரைஞர்களின் 
வாதங்களின் போது கேட்கிறார்..
"மகாத்மா காந்தியடிகள் கூட தண்டனை பெற்றவர் தானே?" என்று.

கணம் நீதிபதியே இப்படி கேட்டால் அப்புறம் 
பொதுஜனங்கள் என்ன செய்வார்கள்!

Saturday, February 25, 2017

சிவலிங்க நாயகனே!



ஒளிப் பிழம்பாய்
மழைத் துளியாய்
ஆகாயத்தை எரிக்கிறது
உன் நெற்றிக்கண்ணின்
ஒற்றைத்துளி.

கருகி சாம்பலாகி
காற்றில் கலக்கிறது
நினைவுச் சுருள்
மீன் கொத்திப் பறவையின்
றக்கையிலிருந்து உதிர்கின்றன
காதல் கடிதங்கள்.

சாட்சியங்கள் ஒவ்வொன்றாக
ஆணுறைகள் நிரம்பி வழியும்
குப்பைத்தொட்டிக்குள் விழுகின்றன.

இருளைத் தின்று செரித்த
பெருநகரப் பிசாசுகள்
வெளிச்சத்தை வன்புணர்வு செய்கின்றன.

நதி ஒன்று
சாக்கடைக்குள் விழுந்து
மரணித்துவிடுகிறது.

ஹே சென்னி மல்லிகார்ஜுனா
சிவலிங்க நாயகா
திருவண்ணாமலையில்
சித்தர்கள் கிரிவலம் வரும் இரவில்
உன்  புதல்வி 
பூப்பெய்துவிட்டதற்காக
காமாட்டிப்புரத்தில்
விழா எடுக்கிறார்கள்.

Sunday, February 19, 2017

மும்பை மாநகர தேர்தல் களம்



மும்பையில் தேர்தல் களம் மாறிவிட்டது.
உள்ளாட்சி தேர்தல் வருவதும் போவதும் தெரியாதிருந்த
காலம் இருந்தது,  உள்ளாட்சி தேர்தல் என்பதும் அரசியல்
கட்சிகளின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதற்கிணங்க
அக்காலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில்
அரசியல் தலைவர்களோ அமைச்சர்களோ கலந்து
கொள்வதில்லை. இன்று அதே தேர்தல்  களம் மாறிவிட்டது.
மராட்டிய மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
கூட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வெள்ளித்திரை சின்னத்திரை நடிகைகள் பிரச்சாரத்தில் முகம் காட்டுவது
ஒரு பக்கம் என்றால் தமிழ்நாட்டிலிருந்து குஷ்பு இங்கு
வந்து தான் சார்ந்த காங்கிரசு கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல,
 மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ ரிக்‌ஷாக்கள்)
 அரசியல் கட்சிகளின் கொடிகளுடன் சாலையில்
  சர்சர் என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
 ஆகாயவிமானமும் மும்பையின் புகழ்மிக்க மின்சார ரயில்களும் தவிர அனைத்து வாகனங்களும் பிரச்சாரத்தை துப்பிக் கொண்டிருக்கின்றன.

கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம் செல்லவும் வீடு வீடாக
சென்று ஓட்டு கேட்கவும் கூட்டம் கூட்டவும் ஏஜண்டுகள்..
அவர்களுக்கு நல்ல சம்பாத்தியம். ஒரு நாள் ஊர்வலத்தில்
கலந்து கொண்டால் ரூ 500/ ரொக்கப்பணம் + சாய்+ வடாபாவ் + பிஸ்லரி வாட்டர் இத்தியாதி வழங்கப்படுகிறது கட்சிக் கொடியுடன் ஓடும் வாகனங்களுக்கும் ஒரு நாளைக்கு
ரூ 500 முதல் 1000 வரை..
(இம்மாதிரியான தேர்தல் உத்திகளை இவர்கள்
 பிற மாநிலங்களிலிருந்து குறிப்பாக நம் தமிழகத்திலிருந்துதான்
அறிந்திருக்க வேண்டும்... )
 இப்படியாக தேர்தல் பிரச்சாரம்
சூடு பிடித்து இதோ இன்றுடன் முடிகிறது.
21/02/17 நாளை மறுநாள் தேர்தல்.

மற்ற மாநகராட்சி தேர்தலை விட மும்பை மாநகராட்சி
 தேர்தல் களம் வாழ்வா சாவா என்ற நிலையில் ஒவ்வொரு
முறையும் .. மராட்டிய மாநில சட்டசபை தேர்தலை விட
மும்பை மாநகராட்சி தேர்தல் அதி முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும்
முக்கியமான காரணம் மும்பை பெருநகரின்
வருவாய் மட்டுமே. 2014 - 15 மும்பை மாநகரின் பட்ஜெட்
(estimate budget)  Rs, 31, 178  கோடி. இது கடந்த ஆண்டு
பட்ஜெட் தொகையை விட 27.72% அதிகம். கடந்த ஆண்டு
பட்ஜெட் தொகை ரூ 27,578/ கோடி. இந்த பெருநகரின் பட்ஜெட்
 இந்தியாவின் சில மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட அதிகமானது என்பதையும் சேர்த்து வாசிக்கவும்.  இந்திய அரசின் வருமானத்தில் 40% மராட்டிய மாநிலத்திலிருந்துதான் வருகிறது என்றால் அதற்கு காரணமாக இருப்பது மும்பை தான். 
எனவே தான் மராட்டிய மாநிலத்தின் சட்டசபையை விட
மும்பை மாநகரின் மாநகராட்சி அரசியல் களத்தில் அதி
முக்கியத்துவம் உடையதாக மாறி இருக்கிறது.
மாநகராட்சியின் நெளிவு சுழிவுகளை இன்றைய அரசியல் வாதிகள்  தெளிவாக அறிந்து கொண்டதால் மும்பையின்
உள்ளாட்சி தேர்தல் களத்தின் முகம் மாறிவிட்டது.
இந்த மாற்றத்தை என்னைப் போல ஒவ்வொரு மும்பைவாசியும்
 பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சிவசேனா களத்தில் ஏன் உறுமுகிறது என்பதையும்
புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது.
மாநகராட்சி சிவசேனா கைகளில் இருப்பதே
 மும்பைவாசிகளுக்கு நல்லது என்று மும்பைவாசிகள்
நினைப்பதற்கு எடக்கு மடக்கான காரணங்களும் உண்டு.
(வெளிப்படையாக எழுத முடியாது தானே)..
 
இந்த ஆண்டு மாநகராட்சி தேர்தலில் பல்வேறு வார்டுகளில்
தமிழர்கள் களத்தில் நிற்கிறார்கள். பிஜேபி, காங்கிரசு, அதிமுக
என்று அரசியல் கட்சி சார்ந்து நிற்பவர்களும்
சுயேட்சையாக நிற்பவர்களும் உண்டு.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து
அயல்மாநிலத்தில் வாழும் தமிழர்கள்  களத்தில் நிற்கும்
தமிழர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று விரும்புகிறேன்.
  15 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
வாழும் இம்மண்ணில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறுவது சாத்தியமில்லை என்றாலும் மாநகராட்சியில்
தமிழர்கள் வந்தால் அவர்களை அணுகுவதும்
 அடிப்படை வசதிகளைக் கேட்டு பெறுவதும் எளிதாகும்
என்ற நம்பிக்கை இருக்கிறது. செய்வார்களா...






Tuesday, February 14, 2017

மாற்று அரசியலுக்கான தருணம்



ஆபரேஷன் சக்சஸ் நோயாளி மரணம்.
இதுதான் நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கும்
சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாற்று புகழ்மிக்க ( அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்)  தீர்ப்பின் முடிவு.

ஊழலுக்கு எதிரான அரசியல்வாதிகள் இனி அச்சப்படுவார்கள் என்பதும் அரசியலில் இனி ஊழலே இருக்காது என்பதும் என்னளவில் இந்திய
அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும்போது
ஒரு மாயக்கனவுலக எண்ணமாகவே  - (UTOPIAN THOUGHT) இருக்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல்
குற்றவாளி மறைந்த "ஜெ" அவர்களின் மறைவும்
மக்கள் மனநிலையும் தலைவர்களின் அஞ்சலி செய்திகளுக்கு அப்பால் சொல்லப்பட்ட வார்த்தைகளும் ஒரு ஃப்ளாஷ்பேக் போல ஓடிக்கொண்டிருக்கின்றன. சசிகலா & அவர் உறவினர்கள் தண்டனைக்குரியவர்கள் தாம் என்பதை
ஏற்றுக்கொள்ளும் தருணத்தில் இதையும் சேர்த்தே வாசிக்க
வேண்டி இருக்கிறது.
அதிமுக கட்சியை உடைத்ததும் குழப்பம் ஏற்படுத்தியதும்
பிஜேபிதான் என்று சொல்லும் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடில்லை.
ஏனேனில் பதவி ஆசைக் காரணமாக முதல்வர் பதவியை
சசிகலா கேட்டிருக்காவிட்டால் இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்? சசிகலாவின் முதல்வர் நாற்காலி ஆசை இன்னும் கொஞ்சகாலம் கடந்து வந்திருந்தால் கூட அதிமுகவின்  நிலை வேறுமாதிரி இருந்திருக்கும்.
சசிகலாவிடன் இப்படி ஒரு தேவையற்ற விருப்பத்தை
விபரீத ஆசையை அவருடைய பலநாள் கனவை
மிகவும்  தவறான நேரத்தில் வெளிப்படுத்த சொன்னது யார்?
பிஜேபியா? திமுக வா? யார்?

இங்குதான் அதிமுக தன்னைத்தானே படுகுழியில்
 தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்தச் சரிவில் வந்து
பந்து விளையாடுவது இந்திய அரசியல் போக்கில்
 எப்போதும் நடுவண் அரசில் இருப்பவர்கள் நடத்தும்
 விளையாட்டு.  காங்கிரசு இருந்தாலும் இதைத்தான் செய்திருக்கும் தோழர்களே.
பிஜேபி வந்துவிடும் வந்துவிடும் என்று இன்றைக்கு
 முகநூலில் பலர் அச்சத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
பிஜேபி என்ற ஒரு அரசியல் கட்சி வரவேண்டும் என்றால்
அந்தக் கட்சியின் சில கொள்கைகள் தமிழ்நாட்டில் பெரியார் வாழ்ந்த மண்ணில் வாழும் மக்களிடம் இருக்க வெண்டும்.
பிஜேபியும் இந்துத்துவாவும் பிரிக்க முடியாதவை.
பிஜேபியும்  அதை விரும்புவதில்லை. ஆனால் தமிழகத்தில் 
மண்சோறு தின்பதும் அலகு குத்துவதும் மொட்டை அடிப்பதுமாக தன் விசுவாசத்தைக் காட்டும் தொண்டர்களை
உருவாக்கி வைத்திருப்பதற்கு பிஜேபி காரணமா அல்லது
இங்கிருக்கும்  அரசியல்வாதிகள் காரணமா ? ஊடகங்கள் காரணமா?
சமூகப்புரட்சி செய்த மகான்கள் பலர் இருக்க மதத்தில்
புரட்சி செய்த மகானைத் தேடிக் கண்டுப்பிடித்து அதை
காட்சி வடிவத்தில் காட்டி சொர்க்கவாசல்
கதவைத் தட்டிவிடலாம் என்று நினைக்கும்/ நினைத்தவர்கள்
காரணமா?
1999ல் திமுக பிஜேபியின் அரசியல் கூட்டணியை
ஏப்ரல் 26, 1999 அவுட்லுக் தன் கவர்ஸ்டோரியில்
"ஒரு சகாப்தம் முடிந்தது" this is the end of an era  அப்போது அந்த கூட்டணியை அரசியல் சாணக்கியம் என்று சொன்னவர்களும் உண்டுதானே!

சொத்துக்குவிப்பு வழக்கின் நோக்கம் ஊழலுக்கு எதிரானது என்று மட்டுமே புரிந்து கொள்வது ஆபத்தானது. இப்படி சொல்வதால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவகள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பதல்ல. அதிகாரம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனையும் போது நீதிமன்ற வாசல்களில் நீதிதேவனின்
தரிசனம் கொடுக்கப்பட்டு புனித நீர் தெளிக்கப்படுகிறது.
அதே அதிகாரம் தனக்குத் தேவை என்றால்
ஊழலின் ராஜாங்கத்திற்கு பத்மவிபுஷன் விருது கொடுத்து
 தன்னைக் கவுரவித்தும் கொள்கிறது
. இரண்டு மாறுபட்ட காட்சிகளும் அரசியல் நோக்கம் கொண்டவை.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கிற்கு அரசியல் நோக்கமில்லை என்று சொல்லிவிட முடியாது. வழக்குத் தொடுத்தவர்களுக்கு வெற்றி என்றாலும் கூட இந்த வெற்றியை அவர்களால் கொண்டாட முடியவில்லை.
ஏனேனில் 'ஜெ"யின் மரணம் முந்திக்கொண்டது.
 ஜெ தன்னுடைய மரணத்தின் மூலம் இந்த வழக்கில்
 அவர்களை வெற்றி கொண்டுவிட்டார்.
இதுவே ஜெ வின் விசுவாசிகளுக்கு
பெரும் ஆறுதலாக இருக்கிறது.

மாநில அரசுகளை மாநில அரசியல்வாதிகளை அடக்குவதற்கும் மாநிலக்கட்சிகளை  உடைத்து சிதைப்பதற்கும்
 இந்த வழக்கின் தீர்ப்பை நடுவண் அரசினர்
எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும்
 ஆபத்தும் இருக்கிறது.
1000 கட்சிகள் .. அவற்றின் தலைவர்கள்.
ஊழலில் ஊறிப்போயிருக்கும் சமூகம்.
இங்கே எந்த ஒரு அரசியல்கட்சியும் சரி,
அரசியல்வாதியும் சரி, ஊழலற்றவர் என்று
சொல்லிவிட முடியாத நிலையில்
மாநிலக்கட்சிகளின் நிலைப்பாட்டை
இந்திய இறையாண்மையை கவலையுடன்
அணுக வேண்டி இருக்கிறது.

இம்மாதிரியான குழப்பமான சூழலில் தான்
சமூகம் தனக்கான தலைவரை அடையாளம் காணும்
என்பதும் சமூக அரசியல் இயக்கம் உருவாகும் என்பதும்
சமூகவியலாரின் கருத்து.
காளைமாட்டுக்காக காளைமாட்டில் தமிழர் கலாச்சாரம்
 காப்பாற்ற எழுந்த இளைஞர்கள் இனி தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளியாக எழுவார்களா?
மாற்று அரசியலை உருவாக்குவார்களா?
களம் காண்பார்களா?
இல்லை வழக்கம்போல...
மாறி மாறி ஓட்டுப்போட்டு
மாறி மாறி ஓட்டுப்போட்டு
தங்கள் ஜனநாயகக்கடமையை
நிறைவேற்றியதாக நினைத்து
எப்போதாவது மெரீனாவில் கூடி தங்கள்
இருத்தலைக் காட்டிக்கொள்வதுடன் நிறுத்திக் கொள்வார்களா..?
இனி,,,

அரசியல் இளைஞர்கள் வசப்படட்டும்.

ஒளி படைத்த கண்ணினாய் வா வாவா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா...
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா...
சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா...
#மாற்று அரசியலுக்கான தருணம் இது#




Saturday, February 11, 2017

எம்ஜிஆரின் கனவு நனவாக...

எம்ஜிஆரின் கனவை நனவாக்க... இரு முதல்வர்கள் தேவை
அதிமுக வின் நிறுவனர் எம்ஜிஆர் என்பதில்
இன்றைய அதிமுக ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவருக்கும்
 இருவரின் அணியினருக்கும் கருத்து வேறுபாடு 
இருக்க முடியாது என்ற நம்பிக்கையில் இந்த ஆலோசனையை
 முன்வைக்கிறேன். மேலும் இம்மாதிரியான தீர்வை,
அதாகப்பட்டது இன்று கொதிநிலைக்கு தமிழகத்தை
கொண்டுவந்துவிட வேண்டும் என்று கையில் தீப்பெட்டி
மண்ணென்ணெய்யுடன் காத்திருப்பவர்களை முறியடிக்க
வேண்டும் என்றும் அசாதரணமான தமிழக அரசியலை
சாதாரணமான நிலைக்கு கொண்டுவரும் முயற்சியாகவும்
 இக்கருத்தை முன் வைக்கிறேன்.
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் திருச்சி மாநகரை
 தமிழகத்தின் தலைநகராக, அல்லது இணை தலைநகராக்க
 ஆசைப்பட்டார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.
 அவருடைய ஆசையை மறைந்த " அம்மா" அவர்கள் கூட
 மறந்து விட்ட ஆசையை நிறைவேற்றியதுடன் இன்றைய 
அரசியல் சிக்கலைத் தீர்த்ததாகவும் இருக்கும்
  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று இதைத்தான் சொல்வார்கள்.
ஆளுநர் சென்னை மாநகருக்கு இணையாக திருச்சியையும்
 தமிழகத்தின் இணை தலைநகராக்க வேண்டும்.
சென்னையை தலைநகராக கொண்டு ஒருவரும் 
திருச்சியை தலைநகராகக் கொண்டு இன்னொருவரும் 
ஆக தமிழ்நாட்டில் இரு முதல்வர்கள். அவர்கள் விரும்பினால்
 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறுமாதத்திற்கு
 ஒரு முறையோ தலைநகரை சுழற்சி முறையில் மாற்றிக்கொள்ளலாம்.
 இதில் சென்னையில் யார் முதல்வர், 
திருச்சியில் யார் முதல்வர் என்பதை மெரினா கடற்கரையில்
அம்மாவின் கல்லறையில் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துக்
 கொள்ளலாம். 
அம்மாவின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு என்பதை 
கட்டுக்கோப்பான அம்மாவின் ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்கள்
 ஒற்றுமையாக ஏற்றுக்கொள்வார்கள்.
இம்மாதிரியான ஒரு தீர்வை எதிர்கட்சியாக இருக்கும் திமுகவினரும் ஏற்றுக்கொள்வார்கள். நாளைக்கு அவர்களும் ஆட்சிக்கு வந்தால்..
அவர்கள் வீட்டுப் பிரச்சனையில் .(!!)..
முதல்வர் யார் என்ற பிரச்சனைக்கு இதுவே அருமையான தீர்வு.

எனவே நிகழ்கால , வருங்கால தமிழகத்தின் அசாதாரணமான
 அரசியல் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு..
.தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக ஆளுநர் அவர்கள் 
இம்மாதிரி ஒரு தீர்வை முன்மொழியும் படி.. 
இதுக்கு இந்திய சட்டத்தில் இடமிருக்கிறதா என்று
டிவிக்காரர்கள் அக்னிப்பரீட்சை, நேர்படப்பேசு என்று
பேசி நம்மைக் குழப்பலாம். குழம்பிய குட்டயில் மீன் பிடிக்கலாம். கவனம்.
விடாதீர்கள்... புறப்படுங்கள்..
எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றியே தீருவோம்
.
(எப்பாடா இப்படியாக  ஒரு தீர்வைக் கண்டுபிடித்தப் பின் கொஞ்சம் தலைவலி குறைந்த மாதிரி இருக்கு. வாசித்த உங்களுக்கும் தலைவலி குறையவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்... )

Thursday, February 9, 2017

இந்துத்துவ பூச்சாண்டி

பன்னீருக்குப் பின்னால் முன்னால் பாரதிய ஜனதா. ஒகே.
சசிக்கு இடப்பக்கம் பிஜேபி
திமுக வுக்கு வலப்பக்கம் பிஜேபி.
இவுங்க எல்லோரையும் சுற்றி காவி ஒளிவட்டம்
சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
இதிலே பன்னீருக்கு மட்டும் ஏன் வறுத்தெடுப்பு?
இதுதான் எனக்குப் புரியலை.
அப்புறம் அது என்ன இந்துத்துவ பூச்சாண்டி..?
எங்கே எப்போ இல்லை இந்துத்துவ..!
நடுவண் அரசில்
காங்கிரசு ஆண்டபோது இந்துத்துவ இல்லையா
இல்லை இருந்ததை மறந்துவிட்டீர்களா.
இன்றைக்கு பிஜேபி வந்துடும் இந்துத்துவ வந்துடும்னு
பூச்சாண்டி காட்டுகிறவர்கள் ..
தமிழகத்தின் சர்வ அரசியல்வாதிகளுக்கும்
பின்னாலும் முன்னாலும் பிஜேபியும் இந்துத்துவமும்
இல்லை என்று சொல்ல வருகிறார்களா?
இல்லை என்று ஆணித்தரமாக 
எந்த ஒரு அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ
 சொல்லிவிடமுடியுமா?

பின்குறிப்பு: இப்பதிவை வாசித்துவிட்டு சட்டுனு
நான் இந்துதுவவாதி, பிஜேபி சப்போர்ட்னு
முத்திரை குத்திடாதீங்கப்பா.

Wednesday, February 8, 2017

அதீத உணர்வுகளின் மந்தைவெளி (உணர்ச்சி வழிபாடு அரசியல்)


#உணர்ச்சி வழிபாடு அரசியல்#

துள்ளு தமிழ் நடை தமிழ் மேடையை கைப்பற்றி
 தமிழ் மக்களை க்கர கர குரலுக்கு மயக்கி
அரசியல் தளத்தில் தனியிடம் பெற்று
 பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்களையும்
வெற்றி கொண்ட போது
அந்த மாற்றத்தை தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட
மிகப்பெரிய மாற்றமாக கருதினோம். கொண்டாடினோம்.
அப்படிக்கொண்டாடியவர்களில் நானும் ஒருத்தி.

தமிழ் மொழி, தமிழினம், தமிழ்க் கலாச்சாரம் என்ற
தனித்துவ அடையாளங்களும் திராவிட நாடு, திராவிடதேசம்
என்பெதெல்லாம் சுருங்கி மாநில சுயாட்சியாக மாறியபோதும்
 அதையும் தமிழ்த் தேசிய அடையாளமாகவும்
இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவும் கொண்டாடினோம்.
தந்தை பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியமாகவே
என்னைப் போன்றவர்கள்  எண்ணி எண்ணி அதுகுறித்த
வாசிப்புகளிலும் தேடல்களிலும் இருந்ததும் உண்டு.
திராவிட அரசியல் களத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்தும்
எதற்காகப் பயன்படுத்தப்பட்டது, ஏன் பயன்படுத்தினார்கள்,
அப்படி பயன்படுத்தியதால் யாருக்கு லாபம்?
இதைப் பேசியவர்களும் பேசியவர்களின் வாரிசுகளும்
தலைவர்களானதும் இக்கருத்தியலை நம்பியவர்கள்
கொண்டாடியவர்கள் ஏமாற்றப்பட்டதும் கடந்த கால
அரசியல் வரலாறு.
இன்று திராவிட அரசியலை பிற அரசியல்
கட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்
 எந்த ஒரு தனித்துவமும் 
தனித்துவமான தத்துவக் கூறுகளும் இல்லை.
இல்லை. இல்லவே இல்லை.
இதையும் தாண்டிய அவலம் என்னவென்றால்
மேலே குறிப்பிட்ட சொற்களை
வெறும் சொற்களாக மட்டுமே அறிந்திருக்கும்
 பெரும் கூட்டத்தை இன்றைய தலைமைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அரசியல் களத்தில் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள
என்ன தேவை, எது தேவையில்லை என்பது மட்டுமே
முன்னிலை வகிக்கிறது.
ஆனால் எந்த விதை விதைக்கப்பட்டதோ அந்த விதையின்
அறுவடை காட்சிகள் தான் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
உணர்ச்சிகள் உணர்ச்சிகள் உணர்ச்சிகள்
அதீத உணர்வுகளை ஊட்டுவதில் தேர்ந்தவர் எவரோ
அவரே மக்கள் மன்றத்தில் வலம் வருகிறார்.
சொற்கள் வெறும் ஒலிக்குப்பைகளாகி அரசியல்
களத்தில் குப்பைத்தொட்டிகளில் நாற்றம்..
நாற்றமெடுக்கிறது என்று சொன்னவர்களின்
நாசிகளை வெட்டி எரிந்தார்கள்.
அடையாளங்களுக்காக அலைந்த உடல்களில்
பால்வினை வியாதிகள் பரவியது.

புத்தனின் சிதைக்கப்பட்ட சிற்பங்களைப் போல
முடிந்துப்போனது அதிகாரவெளியை எதிர்த்தவர்களில்
வாழ்க்கை.
கவிதைகள் வாழ்த்துப்பாக்களாக மாறின.
விவாதங்கள் பட்டிமன்ற மேடைகளாகி இரண்டு
பக்கமும் கை தட்டும் அரங்கத்தை உருவாக்கினார்கள்.
மேடைகளில் முழக்கமிட்ட தமிழில் பாலாறும் தேனாறும்
ஓடின.
 எவ்வளவுதான் யதார்த்தநிலை அவர்கள் சொல்வதிலிருந்து
முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும்
அது பொதுப்புத்தியில் உறைப்பதில்லை.
இதை வளர்தெடுப்பதில் காட்சி
ஊடகங்கள் பெரும்பங்காற்றின.
பருவம் தவறி பெய்யும் மழையில்
துளிர்க்கும் பச்சை இலைகளையும்
 பெயர்த்தெரியாத காட்டுப்பூக்களையும்
ஏன் பட்டுப்போன மரத்தில் துளிர்த்த இலைகளையும்
ஆட்டுமந்தைகளுக்குத் தீனியாக்குவதில்
மந்தையை மேய்ப்பவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

கலை இலக்கிய தளமும் இந்த அரசியல் வேட்டையில்
தன்னை இழந்ததும் அரசியல் வேட்டைக்கு உதவும் 
நாய்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு 
நாய்கள் குரைப்பதும் வாலை ஆட்டுவதும் மட்டுமே
ஆகச்சிறந்த கலை இலக்கியமாக மாறிப்போன அவலமும்
தமிழ்நாட்டில் மட்டுமே கடந்து அரைநூற்றாண்டுகளாக
நடந்திருக்கிறது...
 இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
இம்மாதிரியான அதீத உணர்வுகளின் மந்தைவெளிகள்
உருவாக்கப்பட வில்லை
. மண்ணின் மைந்தர்கள் கொள்கையை வளர்த்தெடுத்ததன் மூலம்
 அரசியல் களத்தில் இடம்பெற்ற சிவசேனா கூட
 அதீத உணர்வுகளின் மந்தைவெளியை உருவாக்கவில்லை.

இந்த அதீத உணர்வுகளின் மந்தைவெளியில் ஆடுகளை
மேய்ப்பவனுக்கு அதீத உணர்வுகளுக்கு தீனிப்போட
தெரிந்திருக்க வேண்டும்.  இல்லை என்றால் அவன் அவுட்.
அதனால் தான் எளிமையானவர்கள், திறமையானவர்கள்,
சிந்தனையாளர்கள் ஒதுக்கப்ட்டுவிட்டார்கள்,
தீண்டத்தாகதவர்களாக ஒடுக்கப்பட்டுவிட்டார்கள்.
அவர்களில் சிலரின் சிந்தனைகளும் எண்ணங்களும்
காயடிக்கப்பட்டுவிட்டன.
இனி... அதீத உணர்வுகளின் மந்தைவெளி...
மெரீனாவில் கூடி தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்றுங்கள்.
மெரீனாவில் தியானம் செய்து விழித்துக்கொள்ளுங்கள்.
நாற்காலி ஆசையில் உப்பிட்டவனைக் கொலை செய்யுங்கள்.
அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை,
தலைவி தோழி , அப்பா மகன் பேரன் மனைவி துணைவி,
தலைவர் தொண்டர்...
எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு
கைகளில் மறைத்து வைத்திருக்கும் புலிநகத்தால்
ஒருவர் வயிற்றை ஒருவர் கிழித்து ரத்தம் குடியுங்கள்.
எல்லாம் முடிந்ததா...
இறுதியாக...
உங்கள் நீதிமன்றங்களில் இளைப்பாறிக்கொண்டிருக்கும்
ஆயுள்தண்டனைப் பெற்ற கைதிக்கு
முடிசூட்டுங்கள்.




...





அம்மா வேஷம் சகிக்கலை


கானமயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
சின்னம்மாவின் அம்மா வேஷம்.
சின்னம்மா... உங்க அரசியல் நெருக்கடியான தருணத்தில்
இதை எழுத வைத்ததற்கும் நீங்க தான் காரணம்...
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... உங்கள் கருத்து என்ன?
என்ன என்று அறிவதற்காக தொலைக்காட்சியில்
 உங்களைப்பார்க்கும் போதெல்லாம்
 நீங்கள் நீங்களாக தெரிவதில்லை.

அது என்னவோ அம்மாவை நீங்கள் அப்பல்லோவுக்கு
அனுப்பிய பிறகு 
அம்மாவின் புடவை, அம்மாவின் கொண்டை,
 அம்மாவின் ரவிக்கை , அம்மாவின் கை அசைப்பு, 
அம்மாவின் நடை... 
அண்மையில் பார்த்தப்போது அம்மாவை போலவே
 நெற்றியில் பொட்டும் அந்தப் பொட்டுக்கு மேலே நாமமும்..
. (யாருக்கு நாமம் போடவோ!)
நீங்கள் இந்துப்பெண்ணின் வடிவம் என்று உங்கள் மீது
சொத்துக்குவிப்பு வழக்குப் போட்ட
 தற்போது உங்கள் குருவாக இருக்கும் சு.சுவாமி கூட 
உங்களுக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டார். 
அப்புறம் என்ன? எதற்காக இந்த மேக்கப்? நீங்கள் நீங்களாக இருங்கள்.
இந்த மேக்கப் உங்களுக்கும் உங்க கேரக்டருக்கும்
 கொஞ்சமும் பொருந்தவில்லை.
#சின்னம்மாவின் அம்மா வேஷம்#

Monday, February 6, 2017

I TOLD JAYALALITHAA WHO TO APPOINT

Image result for சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு


சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் நாள் ... நெருங்க நெருங்க..
சில நேரங்களில் சில மனிதர்கள் பேசியதை வழக்கம் போல மறந்துவிடும்
தமிழினத்திற்கு ஒரு நினைவூட்டல்... நடராஜன்... (சசிகாலாவின் கணவர்)
நேர்காணலிருந்து சில வரிகள்

"I told Jayalalithaa who to appoint.. She had no other option"
" நான் யாரை அடையாளம் காட்டினேனோ அவர்களைத்தான் அமைச்சர்களாக்கவும்
உள்துறை செயலாலர்களாகவும் அரசு அதிகாரிகளாகவும்  1991 ல் முதல்வரான
ஜெ  அவர்கள் நியமித்தார். ஆட்சியும் அதிகாரமும் அவருக்குப் புதிது என்பதால்
அனுபவமிக்க (?!!) என் சொற்களுக்கு செவிமடுத்தார்."
*
சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள் பெயரில்  ஆரம்பிக்கப்பட்ட 23 கம்பேனிகளுக்கு
பணம் எங்கிருந்து வந்தது?
அரசு அதிகாரத்தில் இருந்தால் பணம் தானே வந்துவிடும்.
"When you are behind a political force, money will come"
**
அப்படியானால் இக்கம்பேனிகள் அனைத்தும் சசிகலாவுக்கு சொந்தமானதா?
> ஆமாம் .. நிச்சயமாக . இக்கம்பேனிகள் முழுக்க முழுக்க சசிகலா மற்றும்
அவர் உறவினர்களுக்குச் சொந்தமானது. இதில் ஜெ வுக்கு எந்தப் பங்கும் இல்லை.
ஜெ வின் பதவியையும் அதிகாரத்தையும் நான் பயன்படுத்தி இருக்கலாம்.
NDTV: So you are saying that could be the properties and assets belonging to you and other members of the Sasikala family
Natarajan: Yes, yes. Family only. It's not Jayalalithaa's.
I am not occupying any government position. I might have misused her position, misused her office also. 

முழு நேர்காணலும் வாசிக்க : http://www.ndtv.com/elections-news/i-broke-contact-with-jayalalithaa-554634?site=full

**

Thursday, February 2, 2017

பச்சைக்கிளி


எப்படி இருக்கும் என் பச்சைக்கிளி..
என்ன பேசுவேன் என் பச்சைக்கிளியிடம்
கடந்துபோன 38 ஆண்டுகளையும் விட
காத்திருந்த அந்த சில நிமிடங்கள்
நீண்டுக்கொண்டே இருந்தது.
பச்சைக்கிளி ... என் பச்சைக்கிளி...
பேசும் மொழி மறந்த பச்சைக்கிளி
காற்றில் கரைந்துப்போனது பெருமூச்சு.
எலிபெண்டா குகை சிற்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
அவளையே நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அழகான சிற்பங்கள் ...
சிற்பத்தை சிதைத்தவர்கள் யார்?
கைகாலை உடைத்தவர்கள் யார்?
அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள்..
கடல் காற்று வீசியது..
குகையில் பார்த்த அதே சிற்பம்
என் பச்சைக்கிளியாக மாறியது அறியாமல்
படகு கடலலையில் தள்ளாடி தள்ளாடி
மதுரை மீனாட்சியின்
நினைவுகளைச் சுமந்துக்கொண்ட